Tuesday, November 29, 2011

கற்றலும் கேட்டலும் - ஓர் சுய நோக்கு





வாழ்வில் நம்மைப் பற்றிய சுய அலசல் நம் நிறைகளையும் குறைகளையும் நமக்கு எடுத்துக் காட்டும்.அதுவும் நம்மைப் பற்றி நம்மைச் சேர்ந்தவர்களுடன் அந்த அலசல் இருந்தால் அது இன்னும் சிறப்பு.ஏனெனில் நம் குறைகள் என்றும்
நம் கண்களுக்குப் படுவதில்லை. நாம் தனியே செய்யும் சுய அலசல் நாம் எதையோ சாதித்து விட்டது போல நம்மை உணர வைக்கலாம் சில நேரங்களில்.

இன்று இந்த பதிவை நான் இதனைச் சேர்ந்த அனைவருடனும் ஓர் சுயப் பார்வையுடனும் இதன் சறுக்கல்களையும், முன்னேற்றங்களையும் பற்றிக் காண விரும்புகிறேன்.இப்போது இந்த அலசல்களுக்கு என்ன அவசரம் அவசியம் என்று கூட தோணலாம்.இது "கற்றலும் கேட்டலும்" என்ற தலைப்பின் 100 ஆவது பதிவு.நூறு என்ற வார்த்தை எந்த களத்திலும் சற்றே பெருமை தருவது போல் தோன்றினாலும் நாம் என்ன கிழித்திருக்கிறோம் என்ற பார்வையும் இருந்தால் தேவலை போல் தோன்றுகிறது.

அதே போல் இந்த வலைத்தளம் போன வருடம் இதே நாளில்தான் ஆரம்பிக்கப் பட்டது.
இந்த ஒரு வருடத்தில் இந்த தளத்தில் எது சரியில்லை? எது பரவாயில்லை?
என்றும் பார்க்க விரும்புகிறேன்

டி டி ரங்கராஜன் அவர்களின் வாக்கியம் ஒன்று உண்டு.எனக்கு மிகவும் பிடித்தவாக்கியம்.

ஒரு நாளின் ஆரம்பத்தில் நாம் நினைக்க வேண்டிய வாக்கியம் :

                                                     "Where can i improve today?"

ஒரு நாளின் முடிவில் நாம் உணர வேண்டிய வாக்கியம் :

                                                     "Where did i improve today?"

இந்த வாக்கியம் எல்லா களத்திற்குமே பொருந்தும்.எனவே இதனை அடிப்படையாகக் கொண்டு இந்த பதிவின் தரத்தைக் காண விரும்புகிறேன்.

எழுத்தைப் பொறுத்த வரையில் அது சிறப்பாக அமைவது மட்டும் படைப்பாளியின் வெற்றி அன்று.அது படிப்பவர்களை போய்ச் சேருகிறதா?அவர்களை ஏதோ ஒரு வகையில் பாதிக்கின்றதா?அவர்களின் உணர்வுகளோடு ஒன்றுகின்றதா?அந்த எழுத்திலிருந்து படிப்பவர்கள் ஏதேனும் அறிந்து கொள்ள ஏதுவாக உள்ளதா?அதிலிருந்து அவர்கள்,புதுக் கருத்து பெறவோ அல்லது அதற்கு மாறுபட்ட கருத்து பெறவோ அந்த எழுத்து காரணமாகிறதா? என்று பல காரணிகள்தான் எழுத்தின் வெற்றியை தீர்மானிக்கின்றது.அப்படிப் பட்ட எழுத்தின் வெற்றியே படைப்பாளியின் வெற்றி ஆகும்.

முதலில் என் பார்வையில் எனது பதிவின் குறைகள் என்பது பற்றி முதலில் பார்க்கலாம்.

நான் நினைத்ததை கூற வந்ததை சரியாகச் செய்த திருப்தி எல்லா பதிவுகளிலும் கிடைத்து விடுவதில்லை.அவ்வாறு நினைத்த அளவு செய்யவில்லையோ என்று நான் எண்ணும் பதிவுகள் பற்றி இங்கே காணலாம்.

http://suharaji.blogspot.com/2010/12/blog-post_27.html

இந்த கவிதையில் (அப்படி என்று நான் எண்ணிக் கொண்டிருக்கிறேன்.தயவு செய்து கவிஞர்கள் மன்னிக்கவும்) நான் எதிர்பார்த்த ஒரு முழுமை இல்லை போல, சொல்ல வந்ததை சரியாகச் சொல்லாத ஒரு அவஸ்தை எனக்கு இருக்கின்றது.ஒரு வித பக்குவமற்ற தன்மை இதில் எனக்கு தெரிகின்றது.

மேற்கூறிய அதே காரணத்திற்காக கீழே குறிப்பிட்டுள்ள கதையும் அவ்வாறே தோன்றுகின்றது.சொல்ல வந்ததில் தெளிவில்லையோ என தோன்றும்

http://suharaji.blogspot.com/2011/02/blog-post.html

அடுத்து,

http://suharaji.blogspot.com/2011/08/blog-post_26.html

இந்த பதிவிற்கு சக பதிவர் திரு எல் கே அவர்கள் அளித்த பின்னூட்டத்தை நான் விருப்பத்துடன் வரவேற்கிறேன்.

நான் சவால் சிறுகதைப் போட்டிக்கென எழுதிய கதையைப் படித்த எனது தோழியின் கமென்ட் இது :  வளவளன்னு நிறைய தேவை இல்லாத சேர்க்கைகள் கதையில் இருக்கு.அதை கொஞ்சம் தவிர்த்திருக்கலாம்.

அதே கதைக்கான எனது சகோதரனின் கமென்ட் :  ஒரு டிடெக்டிவ் ஸ்டோரிக்குத் தேவையான விறுவிறுப்பு கதையில் கொஞ்சம் குறைவுதான்.
அந்த தொய்வு தெரியுது.

பதிவுலகிற்கு நான் வரக் காரணமாக இருந்த எழுத்தாளர் வித்யா சுப்ரமணியம் அவர்களின் வழிகாட்டுதல்கள் பொதுவான முறையில் எனக்கு உண்டு.அவை என் முன்னேற்றத்திற்கு உதவுகின்றன.

சக பெண் பதிவர் ஒருவர் எனது சவால் சிறுகதையைப் படித்து விட்டு "உங்க கதை எனககு ஒரு தடவை படிச்சா புரியலை.இன்னொருக்கா படிச்சுட்டுத்தான் கமென்ட் போடுவேன்" என்றார். இதில் தவறேதும் இல்லை.

அதே பதிவர் "உங்க கதையில் பிராம்மண வகுப்பைச் சேர்ந்த மொழி வழக்கு அதிகம் தெரியுது.கதைக்கு தேவைப்படலைன்னா உபயோகிக்க வேண்டாமே"
என்று தோழமையுடன் எடுத்துச் சொன்னார்.இதே கருத்தை என் நெருங்கிய தோழியும்,எனது சகோதரியும் கூட கூறினார்கள்.அதன் பின் அதில் சற்று கவனம் எடுத்துக் கொள்கிறேன்.

அதேபோல் "அக்கறை" என்ற படைப்பை கூட இன்னும் நன்றாகத் தந்திருக்கலாமே என்று தோன்றுகின்றது

என் பதிவில் நிறை என்று எதுவும் அடைந்து விட்டதாக நான் நினைக்கவில்லை.அதற்கு நான் இன்னும் வெகு தூரம் பயணிக்க வேண்டுமென்றே எனக்குத் தோணுகிறது.ஆனால் மனதிற்கு நிறைவைத் தந்த படைப்புகள் என்று சில உண்டு.அவை,

http://suharaji.blogspot.com/2010/12/blog-post.html

http://suharaji.blogspot.com/2010/12/blog-post_09.html

http://suharaji.blogspot.com/2011/01/blog-post_19.html

http://suharaji.blogspot.com/2011/04/blog-post_27.html

http://suharaji.blogspot.com/2011/09/blog-post_14.html

http://suharaji.blogspot.com/2011/11/blog-post.html

சில சக பதிவர்களின் படைப்புகளை படிக்கையில் நமக்கு இப்படி எழுத தோன்றவேயில்லையே!என்னமா எழுதறாங்கன்னு தோணும்.சமயத்தில்
அம்மாதிரி படைப்புகளைப் படிக்கும் பொழுது பேசாம நாம எழுதறதை நிறுத்திட லாமா? அப்படிங்கற ஒரு சொல்லத் தெரியாத உணர்வு வந்து ஆட்கொள்ளும்.
ஆனா எழுதிப் பழகிட்ட கை சும்மா இருக்காம மறுபடி எதையாவது கிறுக்க ஆரம்பிச்சுடும்.ஆனாலும் எழுதுவதை விட வாசிப்பதே சுகம் என்பேன் நான்.

அதே போல பின்னூட்டங்களைப் பொறுத்த வரை அந்த பதிவைப் பத்தி நமக்கு தோணறதை நம்ம கருத்துக்களை சொல்வதில் தப்பில்லை என்றே எனக்குத் தோன்றுகின்றது.ரொம்ப நேரிடையா சொல்லத் தயக்கம் இருப்பின் ஒரு யோசனையாக் கூட சொல்லலாம்.ஏனெனில் விமர்சனங்களால் காயப் படாதவனே உண்மையான கலைஞன்.அப்படிக் காயப் பட்டா அவன் அவனது படைப்பை பற்றிக் கவலைப்படலை,அவனது ஈகோ பற்றித்தான் கவலைப் படுகிறான்னு அர்த்தம்.படைப்பைப் பற்றிக் கவலைப் படாம தன்னுணர்வைப் பற்றிக் கவலைப் படுபவன் (எந்த துறையிலும்)  முன்னேற்றம் காண இயலாது.
இந்த எண்ணம் எனக்குள் எப்போதும் உண்டு.

இந்த என் எண்ணத்தை இன்னும்  பலப்படுத்தும் வகையில் சக பதிவர் திருமதி
தேனம்மை லெக்ஷ்மணன் அவர்களின் கவிதை ஒன்றைப் படிக்க நேர்ந்தது.
அதை இங்கு தருகிறேன்.

முகஸ்துதி..
*********************
"வரிசையில் வரலாம்..
கருத்து அல்லது
விமர்சனம் சொல்ல..
அது முகஸ்துதியை 
ஒட்டி இருத்தல் நலம்..
என் சபைக்கு வந்து
பல்லாண்டு பாடிச்
சென்றால் உங்கள்
சபைக்கும் வருவேன்"


முழுதும் படிக்க இங்கே செல்லவும்.


அதே போல் நம் பதிவிற்கு வருகை தரும் பதிவர்களின் பதிவை மட்டுமே நாம் படிப்பது என்றால் இன்னும் மற்ற பிற பதிவர்களின் நல்ல படைப்புகளை இழக்கப் போவது நாம்தான்.

எனவே ஒரு பதிவின் தரம் கூடுவது என்பது படைப்பாளியின் படைப்பையும் உழைப்பையும் மட்டுமே சார்ந்ததல்ல.வாசகர்களின் கருத்து என்ற ஊக்கம் தரும் சக்தியும்தான் என்பதால் எனது அனைத்து பதிவுகளிலும் எதில் என்ன குறை அல்லது பிழை உள்ளது,என்ன முன்னேற்றம் தேவை, எது சுத்தமாகத் தேறாது எனபதனை இந்த பதிவின் பின்னூட்டத்தில் இதனைப் படிக்கும் சந்தர்ப்பம் கிடைக்கும் அனைவரும் கூறுமாறு கேட்டுக் கொள்கிறேன்.ஒரு வருடமாக இந்த தளத்திற்கு வருகை தந்து பின் தொடரும் அனைவருக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.மேலும் ஊக்கம் தர வேண்டுகிறேன்.நன்றி



Sunday, November 27, 2011

களஞ்சியம்

இன்றைய களஞ்சியம்:


 1.  ஆக்கூர் அனந்தாச்சாரி என்ற அறிஞர் அவர் நண்பர்கள் சிலருடன் ஒரு பொதுக்காரியத்திற்காக ஒரு செல்வந்தரைக் கண்டு ஒரு நல்ல காரியத்திற்காக நன்கொடை பெற முடிவு செய்திருந்தார்.அதன்படி மற்ற நண்பர்கள் அந்த குறிப்பிட்ட நாளில் ஆக்கூரார் வீட்டுக்கு போக புறப்பட்டனர்.ஆனால் அவரோ தெருமுனையிலேயே அவர்களைச் சந்தித்து அவர்களுடன் கிளம்பி விட்டார். நன்கொடை பெற்ற பின் வண்டியில் கிளம்பி முதலில் ஆக்கூரார் வீட்டிற்கு ஓட்டச் சொன்ன்போது அவர் மறுத்தார்.ஆனாலும் நண்பர்கள் விடாப்பிடியாக அவரை வீட்டில் இறக்கச் சென்ற போதுதான் விஷயம் தெரிய வந்தது.ஆக்கூராரின் தாய் இறந்து விட்ட நிலையிலும் நல்ல காரியத்திற்கான பொதுப் பணி நிற்கக் கூடாதென எண்ணி வந்திருக்கிறார் என்றும் அது தெரிந்தால் தடைப்பட்டு விடலாம் என்றும் நினைத்திருக்கிறார் என்று அறிந்தனர்.


தன்னலமற்ற மனிதர்கள் பெரியோர்களே


2. சுவாமி சின்மயானந்தாவின் உரைகளில் ஒன்று :

என்னுடையது என்று எதையெல்லாம் நீங்கள் எண்ணிக் கொண்டிருக்கிறீகளோ அவற்றையெல்லாம் வரிசையாக எழுதுங்கள்.பட்டியல் எவ்வளவு நீள்கிறதோ அந்த தூரம்தான் கடவுளுக்கும் உங்களுக்கும் இடையேயுள்ள தூரம்

நம் அளவை நாம் கணக்கிட்டுக் கொள்ளலாம்.அதற்கு ஒரு எளிய வழி.

3 ஒரு தம்பதியர் அவர்களது பத்து வயது மகனுடன் ஆனந்த விகடன் அலுவலகத்தை அணுகி "இந்த ஒரு லட்சம் ரூபாயை அரசுக்கு நாங்கள் திருப்பித் தர ஏதேனும் வழி செய்யுங்கள் " என்று உதவி கோரியுள்ளனர்.விவரம் கேட்ட பொழுது அவர்கள் கூறியது, "சுனாமியில் அவர்கள் மகன் இறந்து விட்டதாகக் கருதி அரசு அவர்களுக்கு கொடுத்த தொகை அது.ஆனால் பல நாட்களுக்குப் பின் அவர்களது மகன் அவர்களுக்கு திரும்ப கிடைத்து விட்டான்.எனவே அரசாங்கத்தின் தொகையை அதனிடமே ஒப்படைக்க எண்ணி பல அரசு அதிகாரிகளை அணுகியுள்ளனர்.ஆனால் அந்த அதிகாரிகள்
அவ்வாறு செய்ய இயலாது என்று கூறி விட்டனர்". தற்பொழுது ஆனந்த விகடனும் அந்த குடும்பத்துடன் இணைந்து அந்த தொகையை அரசிடம் திருப்ப வழி உள்ளதா என்று பார்க்கும் முயற்சியில் உள்ளது.

நல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு எல்லாருக்கும் பெய்யும் மழை



Saturday, November 26, 2011

வங்கம் தந்த தங்கம் - 150

இந்த கட்டுரை மே மாதம் நான் எழுத நினைத்தது.ஆனால் சம்மர் ஹாலிடே
என்ற பெயரில் ஊர் சுற்றலும்,விருந்தினர்கள் வருகையும் என்று ஆகி விட்டதாலும் பின் ஏற்பட்ட கணிணி பழுதினாலும் அப்பொழுது விடுபட்டு அதன் பின் இதைப் பற்றிய நினைப்பில்லாமல் போனது.இருப்பினும் பதியாமலே விடுவதை விட தாமதமான பதிவு மேல் என்று இப்பொழுது பதிந்திருக்கிறேன்.


                              
                                                                                                                     


2011 - கவிஞர் தாகூரின் 150 ஆவது பிறந்த ஆண்டு.உலகில் எவர் எவருக்கோ
நூறும் நூற்றைம்பதும் கொண்டாடப் படுகிறது. நம் நாட்டில் இலக்கிய மறு மலர்ச்சி ஏற்படுத்திய இந்த தங்கக் கவிஞரை நாம் கொண்டாட வேண்டாமா?
அவரையும் அவரது படைப்புகளையும் பற்றி நாம் சிறிதாவது அறிய வேண்டாமா?

1861 ஆம் ஆண்டு மே மாதம் 7ம் தேதி வங்கத்தில் உதித்த இந்த தங்கம் தன் எட்டு வயதில் கவிதை எழுத ஆரம்பித்தார்.1878 ஆம் ஆண்டு அஹமதாபாதில் உள்ள
ஷாஜஹான் கட்டிய மோத்தி சாஹி மஹாலில் தனது தமையன் சத்யேந்திரனாத் தாகூருடன் ( ஐ சி எஸ் பரிட்சையில் தேறிய முதல் இந்தியர் இவர்தான்) தங்கி இருந்த போது "பசிக்கும் கற்கள்' என்ற சிறுகதை எழுதினார்.

1911 ஆம் ஆண்டு பாரத தேசிய கீதமாக விளங்கும் "ஜன் கண மண" எழுதி
இந்திய தேசிய காங்கிரஸ்ஸின் 26 ஆவது மாநாட்டில் பாடினார்.அடுத்த ஆண்டில் "கீதாஞ்சலி" என்ற பாடல் திரட்டை வெளியிட்டார்.1913 ஆம் ஆண்டு அதற்கு நோபல் பரிசு கிட்டியது.1915 ஆம் ஆண்டில் ஆங்கில அரசு அவருக்கு 'சர்' பட்டம் வழங்கியது

இவர் தனது கோட்பாடுகளின் படி தனது பாடல்களில் இறைவனுக்கு பெயர் கொடுக்கவில்லை.அதற்கு காரணமாக இவர் கூறிய கருத்து, "நாம் காணும் உணரும் உலகின் வழியாக இறையை வழிபடுவதே சிறந்ததாகும்.பிரபஞ்சத்தின் வெளித் தோற்றங்களில் காணும் இன்பமே இறை வழிபாடு. "ஈசாவாஸ்யம் இதம் சர்வம்" (கேனோபனிஷத்) இவையனைத்தும் இறைவன்"  என்பதாகும்.

"மனிதனே உயர்ந்த சத்தியம்" என்பதையே தனது மதமாகக் கொண்டார்.
"கோயிலின் இருண்ட மூலையில் கதவுகளைச் சாத்திக் கொண்டு யாரை வழிபடுகிறீர்கள்?கண் மூடி ஜப மாலை உருட்டுவதை விடுத்து கண்களைத் திறந்து பாருங்கள்.கடவுள் அங்கே பாதை போடுபவனிடத்திலும்,வயலில் உழுபவனிடமும் இருக்கிறான்.மழையிலும் வெயிலிலும் அவர்களோடு இருக்கிறான்.அவர்களது உழைப்பிலும் வியர்வையிலும் கடவுளைக் காணுங்கள்" என்றார்.

கீதாஞ்சலியின் இறுதிப் பாடலில்,

"ஓடுகின்ற ஓர் கணத்தில்
ஓங்குகின்ற ஊழியில்
ஆடுகின்ற பகலில்
அந்தகாரம் சூழும் இரவில்
வருகிறான் வருகிறான் வருகிறான்"  என்று பாடியுள்ளார்.

"வீடு திரும்பும் ஆர்வத்தோடு இரவு பகலாக தங்கள் மலைக்கூடுகளுக்கு
பறக்கும் நாரைகள் போல் என் முழு வாழ்வும் உனக்கொரு வணக்கமாக என் நித்யமான வீட்டுக்கு பயணமாகட்டும்" என்று குறிப்பிட்டுள்ளார்.

அருமையான கவிதைகள் தந்த இந்த தங்கம் கவிதையோடு நிற்காமல் நாடகங்கள்,சிறுகதைகள், இலக்கிய விமர்சனங்கள் என்று எந்த இலக்கிய வடிவையும் விட்டு வைக்காமல் எழுதியுள்ளார்.

"கதா ஓ கஹினி,கொல்ப குச்சா,கதா சதுஷ்டை,கொல்ப தாஸ்தக் என்ற தொகுப்புகள் வெளியிட்டார்.ஆங்கிலத்தில் "The postmaster,The child's return,The
kabuliwala போன்றவையும் தந்தார்.
வீடும் வெளியும்,இரு சகோதரிகள், நாலு அத்தியாயங்கள் என்ற நவீன சமூக நாவல்களை அளித்தார்.இவரது சமூக நாவலகள் பல திரைப்படங்களாகவும் வந்துள்ளன.தம் இறுதி நாட்களில் ஓவியம் தீட்டக் கற்றுக் கொண்டு பல சித்திரங்கள் வரைந்துள்ளார்.கல்கத்தாவில் ரவீந்திர சதன் நிலத்தடி ரயில் நிலையத்தில் அவரது பல ஓவியங்கள் பார்வைக்கு வைக்கப் பட்டுள்ளது.

இவரது படைப்புகளில் சிறு பகுதிதான் தமிழில் வெளி வந்துள்ளது.தமிழாக்கம் செய்யப் படவேண்டியவை ஏராளமாக உள்ளது.வரகவி பாரதி இவரது கவிதைகள்,கதைகள்,கட்டுரைகளை மொழி பெயர்த்துள்ளார்.ஆனால் அவர் செய்த தமிழாக்கம் வங்க மூலத்திலிருந்து அல்ல.ஆங்கிலத்திலிருந்துதான்.
பத்திரிக்கையில் வெளியான தாகூரது ஆங்கில கட்டுரைகள் ஐந்தை 'பஞ்ச வியாசங்கள்' என்ற தலைப்பில் தனி நூலாக பாரதியார் வெளியிட்டார்.'அடங்கி நட, ஜாதி, கல்வி கற்பிக்கும் பாஷை, சிறிதும் பெரிதும்"  என்பன போன்ற எட்டு
சிறுகதைகளை தமிழ்க் கவி மொழி பெயர்த்தார். பாரதியாரின் நண்பர் ஸ்ரீனிவாசாச்சாரியாரால் இவை ஒரே தொகுப்பு நூலாக வெளியிடப்பட்டது.

வங்க மூலத்திலிருந்து நேரடியாக தமிழாக்கம் செய்தவர்களுள் முதன்மையானவர் த.நா.குமாரஸ்வாமி அவர்கள்.சுமார் 50 ஆண்டுகள் இவரது
மொழிபெயர்ப்பு பணி தொடர்ந்தது.இவர் மொழி பெயர்த்த பல வங்க மூலங்களில் 26 தாகூரின் படைப்பாகும்.இவற்றை வெளியிட்ட பெருமை
அல்லயன்ஸ் கம்பெனிக்கும்,கலைமகள் காரியாலத்திற்கும், சாகித்ய அகாடமிக்கும் சேரும்.
தாகூரின் நூற்றாண்டு விழாவையொட்டி இரண்டு சிறுகதைத் தொகுதிகள்,101 கவிதைத் தொகுதிகள் மற்றும் கட்டுரைத் தொகுதிகள் வெளியிடப் பட்டன.
த நா குமாரஸ்வாமி அவர்களின் சகோதரர் த நா சேனாபதியும் சில தமிழாக்கம் செய்துள்ளார்.

'கவியரசர் கண்ட கவிதை' என்று தாகூரின் 120 வங்கப் பாடல்கள் பேராசியர்
ஆ.ஸ்ரீனிவாச ராகவன் அவர்களால் மொழியாக்கம் செய்யப் பட்டுள்ளது.

இந்திய இலக்கிய மறுமலர்ச்சியின் பங்கிற்கு ஒரு வித்தாக இருந்த தங்கக் கவிஞரை நாம் அடைந்ததற்காக பெருமை கொள்வோம்.




Friday, November 25, 2011

நல் நட்பு






வேனில் காலத்தில் நல் நட்பு
வீசும் காற்றாகி நிற்கின்றது.

இலையுதிர் காலத்திலோ
இதம் தந்து நிற்கின்றது

மாரிக் காலத்தில்
மடக்கி விரிக்கும் குடையாய்.

வசந்தத்தின் பகுதியிலோ
வாசம் வீசும் மலரென.......

எக்காலத்திலும் இதோ
என்று தோள் தந்து

மனதின் துன்பமான
முட்களை முறித்தெறிந்து

நம்பிக்கை பாதைக்கு
நல் விதைகள் தூவும்

நட்பிருக்கையில் வாழ்வில்
நமக்கு எதுவும் சாத்தியமே



Thursday, November 24, 2011

நான் என்ன சாதுவா?! சாதா தான?!

சின்ன வயசுல என் அக்கா எனக்கு ஒரு கதை சொல்லி இருக்கா.முதல்ல அது
என்ன கதைன்னு பாக்கலாம்

ஒரு சாது குளத்துல குளிக்க போனாராம்.அப்ப அந்த குளத்துல ஒரு தேள் 
தண்ணில இருக்க முடியாம தத்தளிச்சுக்கிட்டு இருந்துச்சாம்.இவர் அதைப் 
பாத்து பரிதாபப் பட்டு அதை வெளிய விட நினைச்சு கையில எடுத்தாராம்.
அந்த தேளோ அவர் தன்னை காப்பாத்தப் போறார்னு தெரியாம அவர் கையில
பளிச்சுனு ஒரு கொட்டு கொட்டிடுச்சாம்.வலி தாங்காம அதை தவற விட்டுட்டாராம் அந்த சாது.மறுபடி தண்ணில அந்த தேள் தவிக்க சாது அதைக் கையில எடுக்க அது கொட்ட இப்படி பல முறை நடந்ததாம்.இதைப் பார்த்த ஒரு வழிப்போக்கர்,  "சாமி!அந்த தேள்தான் கொட்டுதே.அப்பறம் ஏன் அதை காப்பாத்த நினைக்கறீங்க"னு கேட்டாராம்.

அதுக்கு அந்த சாது, " கொட்டறது தேளோட சுபாவம்.காப்பாத்தறது என்னோட சுபாவம்" னு சொன்னாராம்.

இந்த கதையை சொல்லி முடிச்சப்பறம் எங்கக்கா எங்களைப் பாத்து "இதுலேருந்து என்ன புரிஞ்சது" னு கேப்பா.அதுவரை கதையை ஆர்வமா கேட்டுக்கிட்டிருந்த நான் திருதிருன்னு முழிப்பேன்.அதுக்கு அவ, ஒருத்தர் நமக்கு கஷ்டம் கொடுக்கறாங்கங்கறதுக்காக அவங்களுக்கு உதவக் கூடாதுன்னு இல்ல.கஷ்டப் படுத்தறது அவங்க சுபாவம்.உதவறது நம்ம சுபாவமா இருக்கணும்.இதான் இந்தக் கதையோட நீதி"  அப்படின்னு சொல்லுவா.

இந்தக் கதையை அவ எனக்கு ஏன் சொன்னானு எனக்கு அப்ப புரியலை.ஆனா
நான் வளர்ந்து பல வருஷங்கள் கழிச்சு எனக்கு தேள் கொட்டுச்சே அப்பத்தான் புரிஞ்சது சகிப்புத்தன்மைன்னா என்னனு?

யக்கோவ்!நீ ஒரு தீர்க்கதரிசிக்கா!!!!!!!!!!!!!!

எனக்கு முதல் தடவை தேள் கொட்டினப்ப (என்னது முதல் தடவையா? அப்ப இன்னும் எத்தனை முறை கொட்டுச்சுன்னு நீங்க ஜெர்க் ஆகறது எனக்குத் தெரியுது.பொறுங்க.வாழ்க்கைல பொறுமை ரொம்ப அவசியம்.கதை நீளும் போது எத்தனை தடவை கொட்டுச்சுன்னு தெரியத்தான போகுது) அது எப்படி நடந்ததுன்னு பாக்கலாம்.

ஒரு நாள் பாத்ரூம்ல குழாயைத் திறந்து விட்டுட்டு பக்கெட்ல தண்ணி ரொம்பறதுக்குள்ள அடுப்பை அணைச்சுட்டு வரலாம்னு போனேன்.அடுப்புல
இருக்கற காயை ஒரு கிளறு கிளறிட்டு அப்படியே வாசல் படிக்கட்டுல நின்னு பாத்ரூமை எட்டிப் பாக்கலாம்னு நிலை வாசல்ல கை வச்சு எட்டிப் பாத்தேன்.
நான் கை வச்சதுதான் தெரியும்.அப்படியே உள்ளங்கைல ஆயிரம் வோல்ட் எலக்ட்ரிக் ஷாக் அடிச்ச ஒரு ஃபீலிங் (அது எப்பிடி ஆயிரம் வோல்ட்னு கரெக்டா சொன்னீங்கனுலாம் கேள்வி கேக்கப்படாது.ஒரு பேச்சுக்கு சொல்றதுதான்)
அப்படியே துடிச்சுட்டென்.அப்பவும் தேள்தான் என்னைக் கொட்டிச்சுனுலாம் எனக்குப் புரியலை (முன்ன பின்ன கொட்டி இருந்தாதானங்க தெரியும்)

அது கொட்டின வேகத்துல நான் கையை உதறி எடுக்க அது பொத்துனு விழுந்து பக்கத்துல ஒளிஞ்சுக்கிச்சு. (கொட்டினதும் அதோட சக்தி எல்லாம் போயிடுமாம்.அதால உடனே நகரவே முடியாதாம் .பக்கத்துல எங்கயாவது ஒளிஞ்சுக்குமாம்.இதெல்லாம் அப்பறம் நான் பி ஹெச் டி பண்ணி தெரிஞ்சுக்கிட்டதாக்கும்)

நான் போட்ட சப்தத்துல எல்லாரும் ஓடி வந்தாங்க.என்ன என்னனு கேக்க நான் "என்னவோ கடிச்சுருச்சு,அங்க இருக்கு" ன்னு கை காமிக்க அதைப் பாத்து வீராவேசத்துடன் துடைப்பத்தால என் கணவர் அதை அடிச்சார்(தேளை உடனே அடிக்கலைன்னா அதுக்கு சக்தி வந்ததும் எப்படிலாம் வேகமா அலையுதோ அப்படிலாம் நமக்கு வலிக்குமாம்.இதுவும் பி ஹெச் டி ல தான் தெரிஞ்சுக்கிட்டேன்)

அப்பறம் எனக்கு கைல கட்டு போட்டு (விஷம் ஏறக் கூடாதுன்னு) டாக்டர் கிட்ட
போனோம்.போனதும் டாக்டர் கேட்ட முதல் கேள்வி "தேள் கொட்டுச்சா? கடிச்சிச்சா?" (ஐயோ!இதை நான் பி ஹெச் டி ல படிக்கலையே)
அப்பத்தான் கொட்டறது வேற கடிக்கறது வேறன்னு எனக்குத் தெரியும்.அப்பறம் டாக்டரே கையை பாத்துட்டு,  "ஹ்ம்... கொட்டியிருக்கு.ஓக்கே.பெயின் கில்லர் இஞ்செக்ஷன் போட்டுரலாம்.ஒண்ணும் ப்ராப்லம் இல்லை" என்றதும் அப்பாடி!  இஞ்செக்ஷன் போட்டதும் வலி நின்னுரும் போலனு நான் நிம்மதிப் பெருமூச்சை இழுத்து விடறதுக்குள்ளயே
"கையை நல்லா பிரிங்க.ஊசி போடணும்" என்றார்."உள்ளங்கையிலயா?"
என்றேன்.

"ஆமாம்.பின்ன?இது மரத்துப் போற ஊசி.கடிச்ச இடத்துலதான் போடணும்"னாங்க.

சரி,ஏதோ நமக்கு வலி நின்னா போதும்னு நானும் கையைப் பிரிச்சேன்.தேளே
பரவாயில்லைன்னு நினைக்கறாப்ல ஒரு ஊசி.உடனே கை மரத்ததும் அப்பாடி!சமாளிச்சிடலாம்.வலி தெரியலைன்னு நினைக்கும் போதே டாக்டர் என் கணவரைப் பார்த்து, அரை மணி நேரத்துக்கு வலி தெரியாது சார்! நீங்க கூட்டிட்டுப் போகலாம்.அப்பறம் ஒரு முக்கியமான விஷயம் ஒரு ஒன் அவர்க்கு அவங்க தூங்கிடாம பாத்துக்கங்க.விஷம் முறியாது" (ஐயோ!சாமி!இது வேறயா?)

"டாக்டர் அரை மணி நேரத்துக்கு வலி தெரியாதுனீங்களே?அப்டின்னா....?"

"ஆமாம்மா.அவ்ளோதான் அந்த ஊசிக்கு எஃபெக்ட்.அப்பறம் வலிக்கும்"   னாங்களே பாக்கலாம்.

வீட்டுக்கு வந்தப்பறம்தான் தெரியும் தேள் கொட்டினா 24 மணி நேரத்துக்கு வலிக்கும்னு.அவ்ளோதான்.அடுத்த 24 மணி நேரத்துக்கு வலி வலி வலி தவிர எதுவும் தெரியாது.பிரசவ வலி தேவலை.தேள் கொட்டும் போது முதல் நாள் காலை மணி எட்டு.அடுத்த நாள் காலை எட்டு மணிக்கு வலி டாண்ணு சுவிட்ச் போட்டாப்ல நின்னுடுச்சு.என்னமாவது சாப்பிடட்டும் எல்லாரும்னு தூங்கினேன் தூங்கினேன் அப்பிடி தூங்கினேன்.

இரண்டாவது தடவை எப்பிடின்னா, பாத்திரம் தேச்சதும் ஸிங்கை தேச்சு அலம்பி விடும் போது குப்பைன்னு நான் கையில் எடுத்தது தேள்.அப்பறம் அது என்னை சும்மா விடுமா? போடு ஒரே போடு.போன தடவை வலது கையா?இந்த தடவை இடது.இந்த தடவை மரத்துப் போக ஊசி கிடையாது.ஏன்னா நான் நாலு மாச கர்ப்பிணியா இருந்தேன்.மறுபடி வலி வலி வலி.(இந்த தடவை நானே தேளை அடிச்சுட்டேன்ல)

இப்ப மூணாவது தடவை எப்படின்னு பாக்கலாம்.இரண்டு கையும் கொட்டி முடிச்சு அதுக்கு அலுத்துப் போச்சு.காலுக்கு வருவோம்னு நான் நடக்கற இடத்துல வந்து நின்னுக்கிச்சு.அது மேலே காலை வைக்க நச்சுனு கட்டை விரல்ல ஒரே போடு.இந்த தடவை மரத்துப் போக ஊசி உண்டு.

"என்னம்மா? இன்னும் இடது கால் பாக்கி இருக்கா"ன்னு டாக்டர் என்னை காமெடி பீசா ஆக்கிட்டாங்க.நல்ல வேளை நாங்க அதுக்கப்பறம் அந்த வீட்டை காலி பண்ணிட்டோம்.தப்பிச்சேன்டா சாமி!

சத்தியமா எனக்கு விருச்சிக ராசி இல்லை.நம்புங்க!

ஓக்கே!இப்ப மறுபடி அக்கா கிட்ட வரேன்.அக்கா! பின்னாளில் தேள் கொட்டும்னு சகிப்புத் தன்மை வளத்துக்க கதை சொன்ன தீர்க்கதரிசியே!
நான் ஒரு நல்ல எழுத்தாளரா ஆவேனா?எங்க கொஞ்சம் ரேகை பாத்து சொல்லு!

அக்கா: அதுக்கு ஏன்டி ரேகை பாக்கணும்.அதான் நீ ப்லாக் எழுதற லட்சணம் பாத்தாலே தெரியுதே.நீ தேற மாட்டேனு.மூணு தடவை தேள் கொட்டினதுக்கே இந்த அலப்பறை விடறியே.பாவம் மக்கள்.நீ எழுதற லட்சணத்தை எத்தனை தடவை படிச்சு துடிச்சி போறாங்க.அவங்க கதியெல்லாம் நினைச்சுப் பாத்தயாடி நீ? எழுதறது உன் சுபாவம்.அதை பொறுத்துக்கறது அவங்க சுபாவம்
உண்மையிலேயே அந்த கதையில வர சாது அவங்கதான்டி.நீ வெறும் சாதா!
.
நான் : அது என்னவோங்க! நான் என் அனுபவத்தை எழுதினாலே அது பல்புலதான் போய் முடியுது!  :(



Wednesday, November 23, 2011

தெ(அ)ன்னை மரம்





ட்யூபில் மெதுவாக திரவ உணவு சென்று கொண்டிருந்தது.இன்றோடு ஒரு வாரம் ஆகிவிட்டது.

அசைவற்று படுத்திருக்கும் தந்தையை அசையும் மன அலைகளுடன் பெருமூச்சொன்றை விடுத்து பார்த்துக் கொண்டிருந்தான் கணேஷ்.

வாழ்வின் நிகழ்வுகளில் சில விஷயங்கள் உணர்வு சம்பந்தப் பட்டதாகி விடுகிறது.சிலவற்றை ஜீரணிக்க முடிகிறது.சில அப்பாற் பட்டதாகி விடுகிறது.அதுவும் ஜீரணிப்பது எல்லாருக்கும் சாத்தியப் படுவதில்லை.சிலருக்கு ஒதுக்கித் தள்ளும் மன நிலை வாய்த்து விடுகிறது.சிலர் ஆழ்மனதில் புதைத்துக் கொண்டு அல்லலை சுமக்கின்றனர்.தந்தை இரண்டாம் ரகம்.

நன்றாகத்தான் இருந்தார் சென்ற மாதம் வரையிலும்.தினமும் காலையில் எழுந்து தன் துணிகளை தானே துவைத்து சுப்ரபாதம் கூறி வருணை ஸ்கூல்
கொண்டு விட்டு புத்தகங்கள், பேப்பர் படித்துக் கொண்டு சந்திராவுக்கு
அனுசரணையாக சிறு வேலைகள் செய்து கொண்டு சரியாகத்தான் இருந்தது எல்லாம்.

"என்னங்க! பக்கத்துல கன்ஸ்ட்ரக்ட் பண்ற பில்டிங் இஞ்சினியர் இன்னிக்கு வந்திருந்தார்.நம்ம வீட்டு தென்னை மரம் மூணாவது ஃப்ளோர்ல இடிக்கறாப்ல இருக்கறதால அதை வெட்டும்படியா இருக்கும்கறாப்பல சொல்றார்.அதைக் கேட்டதுலேருந்து மாமா மூட் அவுட்ல இருக்கார்"

இப்படித்தான் ஆரம்பித்தது.அதன் பின் அப்பாவிடம் தெரிந்த மாற்றங்கள் மனக்கவலையை தந்தது.

ஒரு நாள் ஆஃபிசிலிருந்து திரும்பியதும், " என்னங்க!இப்படியே போனா அவருக்கு உடம்புக்கு வந்துடப் போறது.சரியா சாப்பிடறதில்லை.வருணோட விளையாடறதில்லை.புத்தகமும் கிடையாது.எதாவது பேசுங்க அவர்கிட்ட"

கணேஷ் தந்தையிடம் சென்று அமர்ந்தான்

"அப்பா! இந்த வீட்டை இடிச்சிட்டு ஃப்ளாட் கட்டாம இருக்கறதுக்கு காரணம் நீங்க வருத்தப் படக் கூடாதேன்னுதான்.ஆனா பக்கத்துல கட்டற ஃப்ளாட்டுக்கு நம்ம மரம் இடைஞ்சல்னா என்ன செய்ய முடியும்பா? ஏன் இப்டி ஃபீல் பண்றீங்க?அதுக்காக உடம்பை ஏன் வருத்திக்கறீங்க?"

பால்கனி சேரில் அமர்ந்திருந்தவர் நிமிர்ந்து அமைதியாய் பார்த்தார்.பின் திரும்பி தென்னையைப் பார்த்தவர், "இது எங்கம்மாடா.அம்மாவோட அன்பு எப்படி எதிர்பார்ப்பில்லாம எல்லையற்றதா குழந்தைக்கு கிடைக்குதோ அப்படித்தான் இதுவும் எனக்கு.நீ பிறந்த வருஷம் வச்சது.இப்பவும் பலன் எதிர்பார்க்காத எல்லாத்தையும் கொடுத்துண்டிருக்கு.ஒரு மனுஷனோட உயிர் பிரியறது எப்படி வருத்தமோ, எப்படி மனசை பாதிக்குமோ அப்படி மரத்தோட
அழிவு பாதிக்காதா? அது உயிர் இல்லையா?அது என் அம்மாவா,பிள்ளையா இத்தனை நாள் இங்க இல்லையா? அது போறது எப்டி பாதிப்பில்லாம போகும்டா?"

"என்ன சபேசா!என்னமோ அம்மா பிள்ளைனு பேச்சு நடக்கறது?என்னடா? உங்கப்பன் என்ன சொல்றான்?"  என்றவாறு வந்தார் அப்பாவின் ஆத்ம நண்பர்
சங்கரன்.

"வாங்க மாமா!பக்கத்துல கன்ஸ்ட்ரக்ஷன்.நம்ம தென்னை மரத்தை
வெட்டும்படியா இருக்கு.அதப் பத்திதான் பேசிண்டிருக்கோம்.அப்பா ரொம்ப
பெரிசா எடுத்துண்டு வருத்தமாருக்கார்.நீங்க கொஞ்சம் சொல்லுங்க"

"என்ன சபேசா!குழந்த மாதிரி?இந்த வயசில இந்த மாதிரி விஷயங்களை எல்லாம் மனசுக்குள்ள கொண்டு போயிண்டு இருக்க கூடாதுடா.நீ இப்டி பண்ணினா சின்னவங்க ரெண்டு பேரும் என்ன பண்ணுவாங்க?
'
மாமாவிற்கு பதில் சொல்லாமல் அப்போதைக்கு பேசாதிருந்தாலும் அப்பா
அதிலிருந்து வெளியே வரவே இல்லை.மரம் வெட்டும் அன்று ரூமை விட்டு வெளியே வரவில்லை.குளிக்கவில்லை.சாப்பிடவில்லை.சஹ்ஸ்ரநாமம்  மட்டும் டேப்பில் ஓடிக் கொண்டிருந்தது.மாலை நாலு மணியளவில் தென்னை
சப்தத்துடன் சரிந்தது.

"மாமா!காலைலேருந்து எதுவுமே சாப்பிடலை.இந்த காபியாவது குடிங்க.
எழுந்துக்கோங்க"

................

பதில் வராமல் இருக்க தொட்டுப் பார்த்து அசைவுமில்லாமல் இருக்க கலவரமானாள் சந்திரா .அன்றிலிருந்து ஒரு வாரமாக இப்படித்தான்.

கையில் சாப்பாட்டுக் கேரியருடன் வந்தாள் சந்திரா.

"நீங்க கிளம்புங்க.போய் குளிச்சுட்டு வருணை ஸ்கூல்ல ட்ராப் பண்ணிட்டு ஆஃபிஸ் போங்க.இன்னிக்கு அவனுக்கு வேன் வராதாம்.டேபிள்ல எல்லாம் எடுத்து வச்சுருக்கேன்.சாப்பிட்டுடுங்க.லன்ச் எடுத்துக்க மறக்காதீங்க.அதையும் டேபிள்லதான் வச்சுருக்கேன்.வருண் பக்கத்து வீட்ல இருக்கான்.கூப்பிட்டுக்கோங்க"

"உனக்கு மத்யானத்துக்கு சாப்பாடு கொண்டு வந்துட்டயா?"

"அதெல்லாம் இருக்கு.இன்னும் ஒன் வீக் லீவ் எக்ஸ்டென்ட் பண்ண முடியுமான்னு பாருங்களேன்"

"இந்த மூணு நாளைக்கு அந்த பேச்சே கிடையாது.ஆடிட் வருது.எல்லாம் ரெடி பண்ணனும்.நாலைஞ்சு நாளைக்கு மேனேஜ் பண்ணிக்கோ.அதுக்கப்பறம் லீவ்
எடுக்கறேன்.அதுக்குள்ள ஏதாவது இம்ப்ரூவ்மென்ட் தெரியுதான்னு பாப்போம்.கெளம்பறேன்"

நாலு நாட்களுக்குப் பின் ஒரு நாள் மாலை ஆஃபிசிலிருந்து திரும்புகையில்
வருண் தோட்டக்காரன் முனியனுடன் தோட்டத்தில் நின்று அவன் குழி வெட்டுவதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான்

"இங்க என்னடா பண்ற?"

"இன்னிக்கு எங்க ஸ்கூல்ல 'வன மஹோத்சவம்' கொண்டாடினங்க.எனக்கு
இந்த தென்னம்பிள்ளை தந்தாங்க.அதான் தோட்டத்துல வைக்கறோம்"

"என்னைத் தேடி தம்பி அரை மணி நேரமா காத்திருந்து விடாம கூட்டிட்டு வந்து
வைக்கச் சொல்லி ஒரே சந்தோஷமாயிடுச்சுப்பா.ஆமா!அப்பாரு இப்ப எப்பிடி இருக்காரு?"

"அங்கிள்!இனிமே எங்க தாத்தாக்கு சரியாயிடும் பாருங்க.நான் இன்னிக்கு போயி அவர் காதில நான் தென்னம்பிள்ளை வச்சதை சொல்வேனாக்கும்"

தென்னம்பிள்ளை நேர்மறையாய் அசைந்தது.





Monday, November 21, 2011

மழலைகள் உலகம் மகத்தானது (?)

இந்த தலைப்பில் தொடர்பதிவு எழுத என்னை அழைத்த பதிவர்கள் திருமதி மனோ மேடம் அவர்களுக்கும்,திருமதி பி எஸ் ஸ்ரீதர் அவர்களுக்கும் எனது நன்றிகள்.

நான் இந்த தலைப்பை ஒரே பதிவிலேயே இரு பிரிவுகளாகப் பதிய விரும்புகிறேன்.எந்த ஒரு விஷயத்திற்கும் இரு பக்கங்கள் உண்டு என்பதால் நான் அதன் இரு பக்கத்தையும் காணவும் பகிர்ந்து கொள்ளவும் விரும்புகிறேன்.
இனி அவற்றைப் பார்க்கலாம்.


துருவன் : புராணக்கதைகள் அறிந்த எவருக்கும் இந்த பெயர் புதிதல்ல.
தந்தை உத்தானபாதரின் மடியில் இடம் கிடைக்காமல் ஏங்கிய குழந்தை
மகரிஷி நாரதரின் வழிகாட்டலில் மிகவும் உயரிய இடத்திற்கு சென்ற சின்னஞ்சிறு பாலகன்.

                                             

துருவ சரிதத்தில் நாம் அறிவது என்னவென்றால் தோல்வியை ஏற்கும் மனப்பான்மையை குழந்தை அறிய வேண்டும்.அவ்வாறு ஏற்ற தோல்வியை வெற்றியின் படிகளாக மாற்றும் மனப்பான்மையும் குழந்தைக்கு போதிக்கப் படவேண்டும்.

இப்படி தோல்வியை ஏற்கும் மனப்பான்மை அற்ற இன்றைய குழந்தைகள்தான்
மன வலிமை இழந்து தற்கொலை போன்ற அபாயகரமான முடிவுகளுக்குத் தள்ளப் படுகிறார்கள்.கேட்டது எல்லாமே கிடைக்கப் பெறும் குழந்தைகள் இம்மாதிரி தோல்விகளை சந்திக்க இயலாதவர்களாகி விடுகின்றனர்.ஒளி வீசும் நட்சத்திரமாக துருவன் வாழ்ந்த பரதக் கண்டத்தில் அவன் வாரிசுகள்
ஒளியிழக்கலாமா? எனவே குழந்தைகளுக்கு எவற்றையும் ஏற்கும் மனோ வலிமையை போதிப்போம்.

ப்ரஹ்லாதன் :  தவறு செய்பவன் தந்தை எனினும் துணை செல்லாதவன்.
எந்த தவற்றுக்கும் துணை போகாத குணமுள்ள குழந்தைகளாக வளர்த்தால்
வீடு மட்டுமன்றி நாடும் நலம் பெறும்.அத்தைகைய சூழலுக்கு முதலில் நாம் தவறுகள் செய்வதை நிறுத்தல் வேண்டும்.நாம் முதலில் தவற்றுக்கு துணை
போகக் கூடாது.

இதற்கு ஒரு நகைச்சுவையையும் உதாரணம் சொல்லலாம்.கேட்பதற்கு நகைச்சுவை போல் தோன்றினாலும் கருத்து அடங்கியது.

தந்தை: ஏன்டா அழற?

மகன்: பக்கத்துப் பையன் பென்சில் திருடினதால டீச்சர் அடிச்சிட்டங்கப்பா.

தந்தை: பென்சில் இல்லைன்னா ஏன்டா திருடற? என் கிட்ட சொல்லி இருந்தா
நான் ஆஃபீஸ்லேருந்து எடுத்துக்கிட்டு வந்திருப்பேன் இல்ல?

தந்தை செய்வதுதான் மகனிடம் இறங்குகிறது.

மார்க்கண்டேயன்: 





குறைவான ஆயுள் என்பதை அறிந்தும் இறையின் மேல் நம்பிக்கை வைத்து கலங்காமல் மனோதிடம் கொண்டு வாழ்ந்த பாலகன்

நம்பிக்கை குழந்தைகளுக்கு போதிக்கப் படவேண்டிய வாழ்வின் முக்கிய அம்சம்.எதையும் கலங்காமல் நம்பிக்கையுடன் எதிர் நோக்க குழந்தைகளுக்கு
சொல்லித் தரப் பட வேண்டும்.

இப்படி வாழ்வு என்பது எப்படி இருக்க வேண்டும் , ஒரு குழந்தை எப்படி வளர்க்கப் பட வேண்டும் என்பதெல்லாம் நம் புராணத்தில் இருந்து நாம் நிறைய அறிதல் வேண்டும்.அறிந்தால் மட்டும் போதாது.அதைச் செயல் பாட்டில் கொண்டு வந்தால்தான் அது முழுமையடையும்.

அடுத்த பகுதியாக இன்றைய நிலைக்கு வரலாம்.

கரடி மாமா கரடி மாமா எங்கே போறீங்க?
காட்டுப் பக்கம் வீடிருக்கு அங்கே போறேங்க.
கம்பளிச் சட்டை ஜோரா இருக்கு யாரு தந்தாங்க?
கடவுள் தந்த பரிசுதாங்க, வேறு யாருங்க?   


ஒரு சாதாரண குழந்தைப் பாடல்.அதில் ஒரு குழந்தைக்கு கரடி என்ற விலங்கைப் பற்றியும் காடு என்பதான அதன் வீடு பற்றியும் அதன் உடல் முழுதும் முடி படர்ந்திருக்கும் என்றும் அது கம்பளிபோல் இருக்கும் என்று கம்பளி பற்றியும் கடவுள் தந்த பரிசு என்று இறை உணர்வையும் கலந்து தரும் பாடல்.


இப்படி ஒவ்வொரு விஷயத்திலும் குழந்தையின் அறிவும் சிந்திக்கும் திறனும் வளர்க்கப் பட வேண்டும்.
குழந்தையின் சந்தோஷங்கள் சுருங்காமல் மகிழ்வான சூழல்கள் உருவாக்கித் தருதலும் நம் கடமை.




ஒன்று பட்டால் உண்டு வாழ்வே நம்மில் ஒற்றுமை நீங்கிடில் அனைவருக்கும் தாழ்வே.உடனொத்த குழந்தையுடன் ஒற்றுமை வாழ்வு புகட்டப் படல் அவசியம்.ஒருவருகொருவர் உதவி செய்து கொள்ளல் போன்ற நல்லுணர்வுகள் கற்றுத் தரப் பட வேண்டும்.இதற்கெல்லாம் முதலில் நாம் முன்னோடியாக இருத்தல் அவசியம்



குழந்தைகளின் குறும்புகள் ரசிக்கப் படவேண்டும்.ஆபத்தற்ற எந்த குறும்புகளையும் கட்டுப் படுத்தல் அவசியமில்லை.அவ்வாறு கட்டுப்படுத்துவது அவர்களது தன்னம்பிக்கையை குறைக்கும்.அதே சமயம் அவர்களது குறும்புகள் எல்லையற்றதாக ஆகி விடாமலும் பிறரை பாதிக்கா வண்ணம் இருக்கவும் கற்றுத் தரப் பட வேண்டும்.

கட்டுரையின் கடைசிப் பகுதியை நாம் நெருங்கிக் கொண்டிருக்கிறோம்.ஆனால் இதுவே இதன் முக்கிய பகுதி
மழலையின் இன்பம் பெரிதுதான்.ஆனால் அது எம்மாதிரி சந்தர்ப்பங்களில்?
எப்பேர்ப்பட்ட துன்பமும் ஒரு குழந்தையின் சிறு புன்னகையில் பறந்து விடும்தான்.அதில் மறுப்பில்லை.ஆனால் அந்த மழலைகளின் துன்பம்
எல்லா விதங்களிலும் தீர்க்கப் படுகிறதா?

என் வீட்டுக் குழந்தையின் குறும்பிலே நான் மகிழ்கிறேன்.உங்கள் வீட்டு மழலையின் குறும்பும் அவ்விதமே.ஆனால் நம்மில் எத்தனை பேருக்கு ஒரு மன நலம் குன்றிய மழலையை முகச் சுளிப்பற்று ரசிக்கத் தோன்றி இருக்கிறது.
அம்மாதிரிக் குழந்தைகளின் உலகம் மகத்தானதாக மாற நாம் எத்தனை பேர்
என்ன முயற்சி செய்திருக்கிறோம்?

2009 ல் நடந்த ஒரு நிகழ்வு ஒன்றை இங்கே பகிர விரும்புகிறேன்.கர்நாடகாவின் ஒரு கிராமத்தில் ஒரு சூரிய கிரஹணத்தன்று அந்த கிரஹணம் முடியும் வரை மன நலம் குன்றிய குழந்தைகளை கழுத்து வரை குழியில் புதைத்தால் குணம் காணலாம் என்று செய்தி பரப்பி அம்மாதிரி 108 குழந்தைகளைப் புதைத்தனர்.அக்குழந்தைகள் பயத்திலும் பீதியிலும் துடித்து குரல் எழுப்ப கூட வலுவற்று பரிதாபமான நிலைக்கு தள்ளப் பட்டனர்.குழந்தைகள் தினம் கொண்டாடும் நம் நாட்டில் இந்த கொடுமைகளை அகற்ற என்ன முயற்சி எடுக்கப் படுகிறது?

இன்றைய செய்தி ஒன்று.சீர் திருத்தப் பள்ளியிலிருந்து 16 குழந்தைகள் தப்பி ஓட்டம்.
இதில் எத்தனை குழந்தைகள் எந்த தீவிரவாதியின் பிடியில் சிக்கி பிஞ்சுக் கரத்தில் ஆயுதம் ஏந்த பழக்கப் படுத்தப் படுகிறதோ?அவர்கள் உலகம் மகத்தானதா?

நம் வீட்டுக் குழந்தைகளின் பிறந்த நாளை இனிப்புடன் கொண்டாடச் செய்யும் நாம், நம் குழந்தைகளுக்கு அவர்கள் பிறந்த நாளை கஷ்டத்தில் இருக்கும் குழந்தைக்கு உதவும் நாளாக சொல்லித் தருகிறோமா? பூகம்பத்திலும் சுனாமியிலும் வீடிழந்து உறவிழந்த குழந்தைகள் பற்றி விழிப்புணர்வைத் தந்திருக்கிறோமா? அவ்வாறு இழப்பில் இருக்கும் குழந்தைகள் உலகம்
மகத்தானதாக ஏதேனும் செய்திருக்கிறோமா?



நம் குழந்தைகளை நாம் பெருமைப் படுத்திக் கொண்டிருக்கும் சமயத்தில்
உலகில் ஏதேனும் ஒரு குழந்தை ஒருவேளை உணவிற்காக கையேந்திக் கொண்டிருக்கலாம்.நல்ல வாழ்வு வாழ்ந்து கொண்டிருந்த ஒரு குழந்தை கடத்தப் பட்டு கை கால் முடக்கப் பட்டு பிச்சைப் பாத்திரம் ஏந்தலாம்.பணத்திற்காக கொலை செய்யப் படலாம்.இந்த அவலத்தை தடுக்க
நம்மால் எவ்விதத்திலேனும் இயலுமா?

இந்த கட்டுரையை நான் எழுதிக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில், இதை நீங்கள் படித்துக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில் உலகின் ஏதோ ஒரு மூலையில் ஏதேனும் ஒரு ஆறு அல்லது ஏழு வயது குழந்தை யாரோ ஒரு கயவனின் பாலியல் இச்சைக்கு இரையாகிக் கொண்டிருக்கலாம்.அந்த குழந்தைகளின் உலகம் இனி மகத்தானதாக அமையுமா?

இந்த சமூக அவலங்கள் ஒழிய நாம் எவ்விதமேனும் சிறிதளவாவது முயன்றால்தான் "மழலைகள் உலகம் மகத்தானது" என்று மார் தட்டிக் கொள்ளலாம்.அதுவரை நம் வீட்டு மழலைகள் உலகம் மட்டுமே மகத்தானது என்று நாம் பொய்யான பெருமைதான் பட்டுக் கொள்ள முடியும்

மழலைகள் மீண்டும் துருவ நட்சத்திரங்களாக மாறும் நாள் வேண்டும்.அதுவரை மழலைகள் உலகம் மகத்தானது என்பதன் அருகில் நாம் கேள்விக் குறி போட்டுக் கொள்வோமா?

எந்த விழிப்புணர்வும் இல்லாத வாழ்வை நாமும் வாழ்ந்து அதையே குழந்தைகளுக்கும் அளித்தால் ஒரு உணர்வற்ற வாழ்வு மிஞ்சி இந்த நிலை வரலாம்.




பாரத நாடு பழம்பெரும் நாடு நீரதன் புதல்வர் இந்நினைவகற்றாதீர் !!

இதனைத் தொடர சக பதிவர்களில் எழுத்தாளர் வித்யா சுப்ரமணியம் மேடத்தை இரு வாண்டுகளை ஒரே நேரத்தில் சமாளிக்கும் பாட்டி என்ற முறையிலும், குட்டிப் பெண்ணுக்கு அம்மாவாக சுழலும் திருமதி ஆதியையும், இரு சுட்டிப் பெண்களின் தந்தை என்ற முறையில் திரு ஆர் வி எஸ் அவர்களையும் குட்டிப் பையனின் தந்தையான திரு கோபி ராமமூர்த்தி அவர்களையும் அழைக்கிறேன்.


Sunday, November 20, 2011

ப்ரசன்னோத்தர ரத்ன மாலிகா




லோக குரு மகான் ஸ்ரீ ஆதி சங்கரர் இந்த உலகின் மானுட வாழ்விற்காக பல
ஸ்லோகங்களையும்,வேதத்திற்கு உரைகளையும் வழங்கியிருக்கிறார்.
அவரது ஆன்மீக உரைகள் பல இருந்தாலும் ஒரு சாதாரண வாழ்வு வாழும் மானுடன் எளிதில் புரிந்து கொள்ளும் வண்ணமாக இரண்டு தொகுப்புகளை நமக்கு வழங்கியுள்ளார்.அதில் ஒன்று ப்ரசன்னோத்தர ரத்ன மாலிகா.மற்றொன்று
விவேக சூடாமணி.

இதில் ப்ரசன்னோத்தர ரத்ன மாலிகா என்பது சாதாரணர் கூட எளிதில் புரிந்து கொள்ளக் கூடிய வகையில் கேள்வியும் பதிலுமாக அமைந்துள்ளது.
(ப்ரஸ்ன- கேள்வி, உத்தர-பதில்)

சம்சார கடலைக் கடக்கும் சாதாரணர், அதாவது ஆன்மீகத்தின் முதல் படியில் இருப்பவர்களுக்கு உதவும் வகையில் இந்த ப்ரசன்னோத்தர ரத்ன மாலிகாவில் ஒருவன் வாழ்வில் எதைச் செய்ய வேண்டும் எவற்றைச் செய்யலாகாது என்று குறிப்பிட்டு நல்வழிப் படுத்தும் விதமாக அமைந்துள்ளது.

அவற்றிலிருந்து சில கேள்வி பதில்களை இங்கு நாம் பார்க்கலாம்.என் அறிவுக்கெட்டிய வரை மொழி பெயர்த்திருக்கிறேன்.

1.எது பலன் கொடுப்பதாக இருக்கிறது?

தர்மம் மட்டுமே

2. யார் உண்மையான ஆசான்?

உண்மையை அறிந்தவரும், சீடனின் நலம் கருதுபவருமே.

3.எவற்றை விட்டொழிக்க வேண்டும்?

வாழ்விற்கு தேவையற்ற பழக்கங்களை.

4.எது நஞ்சைப் போன்றது?

பெரியோர்களையும் சான்றோர்களையும் மதியாதிருத்தல்.

5. எது இறுதி வரை உறுத்தும்?

ரகசியமாக எவருமறியாமல் செய்த பாவம்.

6. எதை ஒதுக்க வேண்டும்?

தீயவர்கள் சகவாசத்தையும்,பிறன்மனையையும், பிறர் சொத்தையும்.

7.எது தூக்கம்?

மனிதர்களின் அறியாமை.

8. எது தாமரை இலை தண்ணீர் போன்றது?

இளமை, செல்வம்,ஆயுள்

9. எவருடைய ஆளுமையில் மக்கள் இருப்பர்?

எவன் பணிவானவனோ எவன் உண்மை பேசுபவனோ அவன் ஆளுமையில் மக்கள் இருப்பர்.

10. எவன் விவேகி?

எவன் நல்லனவற்றையும் அல்லாதனவற்றையும் பிரித்தறிகிறானோ அவனே விவேகி.

11.எவர் சந்திர ஒளிக்கு ஒப்பானவர்?

நல்ல மனம் கொண்டவர்களே.

12.எது அறிவற்ற செயல்?

தற்பெருமை கொள்ளல்

13. எவன் குருடன்?

தேவையற்ற தகாத செயல் செய்பவன்

14. எவன் செவிடன்?

நல் வார்த்தைகளைக் கேளாதவன்.

15. எவன் ஊமை?

தகுந்த நேரத்தில் இனிய நல் வார்த்தைகள் பேசாதவன்

67 பகுதிகளைக் கொண்டதில் இருந்து சிலவற்றை இங்கு பகிர்ந்துள்ளேன்


பின் குறிப்பு:  கற்றதிலிருந்து...



Friday, November 18, 2011

அக்கறை

Click to show "The Crows" result 13                     



அடுத்த வீட்டின் அறிமுகமன்று
அடிக்கடி குசலம் அவசியமன்று
அதிகப்படி வார்த்தைகள் எதெற்கென்று,

அருகே அமர்வோர் காதில்
அடைப்பான் பொருத்தி 
அழகிய கைபேசியோடு பயணத்தில்,

அவரவர் வேலைகள்
அவரவர் நேரங்கள் என்று
அடைத்துப் போன உணர்வுகளாய்,

அவசர வாழ்வில் இங்கே
அர்த்தமற்ற வார்த்தையாய்
அகன்று போனதென்ன

அக்கறை என்ற மனிதம்!!

அங்கே ஒரு காகம் இறக்க
அக்கறையாய் பல காகங்கள் கரைகிறது.
அதனிடம் கற்போமா?

கரையும் அவற்றின் முன்
கறையாய் நாம் அக்'கறை' மறந்து....

Thursday, November 17, 2011

ஆயிரம் நிலவே வா....

போன பதிவுல நான் பல்பு வாங்கின விஷயத்தைப் பத்தி பாத்தோம்.இந்த பதிவுல நான் பல்பை உடைச்ச விஷயம் பத்தி பாக்கலாமா?

எங்கள் வீட்டில் எப்பொழுதும் அப்பா அம்மாவின் தோய்த்த துணிகளை மட்டும் தனியாக வீட்டிற்குள்ளேயே உயரே இருக்கும் கொடியில் உலர்த்துவது வழக்கம்.அவர்கள் இருவரும் பூஜை செய்வார்கள் என்பதால் இந்த ஏற்பாடு.அதற்கு மடிக் கொடி என்று பெயர்.எப்பொழுதும் அம்மாதான் உலர்த்துவார்.அம்மாவால் உலர்த்த இயலாத சந்தர்ப்பங்களில் மன்னி
உலர்த்துவார்கள்.

நான் காலேஜ் படித்துக் கொண்டிருந்த சமயம்.ஒருமுறை அம்மா, மன்னி இருவருமே உடல் நலம் சரியில்லாமல் ஆகிவிட்டார்கள்.அண்ணாக்களும் நானும் ஆளுக்கொரு வேலைகள் செய்து கொண்டிருந்தோம்.இரவு உணவுக்கு 
பூரி உருளைக்கிழங்கு மும்முரமாக செய்ய ஆரம்பித்தோம்.(பூரிக்கு உப்பு போடணுமா இல்லையான்னு எங்களுக்குள்ள பட்டிமன்றம் வேற) அப்போது
அண்ணா என்னைப் பார்த்து "நீ போய் அப்பாவிற்கு வேஷ்டி உலர்த்திவிட்டு வா"
என்று கூற நான் போய் உலர்த்தச் சென்றேன்.அப்பொழுது டிவி யில் எஸ் பி பியின் குழைவான குரலில் 'ஆயிரம் நிலவே வா' பாடல் ஓடிக் கொண்டிருந்தது.

"தர்மாவதி ராகத்தில் அமைந்த பாடல் அது"

அதைக் கேட்டு விட்டு நானும் அந்த பாடலை பார்த்துக் கொண்டும் பாடிக் கொண்டும் வேஷ்டி எடுத்து உதறி நுனியை சுருட்டி கம்பின் நுனியில் வைத்து மேலே உலர்த்த கம்பைத் தூக்க வேஷ்டி தனியே கீழே விழுந்து அந்த வேகத்தில் கம்பு பக்கத்திலிருந்த ட்யூப் லைட் மேல் பட்டுவிட அவ்வளவுதான்.டணார் என்ற சப்தத்தோடு ட்யூப் உடைந்து சிதறி இருட்டில் புகை மண்டலமாகக் காட்சியளித்தது.

சப்தம் கேட்டு பதறிப் போய் அனைவரும் ஓடி வர நான் இருட்டில் தலை முழுக்க ட்யூப் லைட்டின் சிதறிய வெள்ளைத் துண்டுகளோடு பேயறைந்தாற்
போல (அப்ப என்னைப் பாத்தா அப்படியே பேய் மாதிரிதான் இருந்ததுன்னு எங்கண்ணா சொன்னான்.) நின்று கொண்டிருந்தேன்.

உடனே அடுத்த அறைக்கு கூட்டிக் கொண்டு போய் தலை எல்லாம் க்ளீன் செய்ய, தலையில் ட்யூப் சிதறல் குத்தியிருந்ததில் ரத்தம் வந்து கொண்டிருந்தது.உடனே டாக்டரிடம் சென்று மருந்து போட்டு வீட்டுக்கு வந்ததும் வெளியே சென்றிருந்த அப்பா வந்து,  "என்னாச்சு?"  என்று கேட்டார்.


"உங்க பொண்ணு ஆயிரம் நிலவே வா பாட்டைப் பாடிண்டு, இருந்த வெளிச்சத்தை இருட்டாக்கிட்டா" என்று இரண்டாவது அண்ணா பதில் கூறினான்.

கடைசி அண்ணாவோ அவ பாடினது கேட்டு ட்யூப் லைட் "நீ பாடறது எனக்கே பொறுக்க முடியலை.அப்பறம் அந்த நிலவு, அதுவும் ஒரு நிலவில்லை ரெண்டு நிலவில்லை ஆயிரம் நிலவும் எப்படி பொறுத்துக்கும்னு சொல்றாப்புல
நெஞ்சு பொறுக்குதில்லையேன்னு டமார்னு வெடிச்சிடுத்து"ன்னான் 

                                                                                          
"என்னிக்காவது ஒரு நாள் வேலை செஞ்சா இப்பிடித்தான் இருக்கும்" னு மூணாவது அண்ணா தன் பங்குக்கு வார ஆரம்பித்தான்.அதுக்கப்பறம் எப்ப ரேடியோலயோ டிவிலயோ ஆயிரம் நிலவே வா பாட்டு போட்டாலும் வீட்ல எல்லாரும் உஷாராய்டுவாங்க.

நான் வேணும்னா உங்களுக்கெல்லாம் இப்ப அந்த பாட்டைப் பாடிக் காமிக்கட்டுமா? உங்க கம்ப்யூட்டர் மானிட்டர்லாம் ஒண்ணும் ஆகாதுங்க.
ஏன் பயப்படறீங்க?   :-))))))))))))



Wednesday, November 16, 2011

ஓடு... ஓடு....

வாழ்க்கையில் அறிவுபூர்வமாக புரிந்து நடத்தல் என்பது மிக அவசியமான விஷயமாகும்.
அது இல்லாமல் போகும் பொழுது நிகழ்வுகள் நமக்கு சாதகமற்றோ விளைவுகள் பலனற்றதாகவோ போய் விடும்.

என் வாழ்வில் நான் இது போன்று சமயம் புரிந்து நடக்க தவறிய விஷயத்தை இங்கு பகிர விரும்புகிறேன். இந்த சம்பவத்தினால் மோசமான விளைவுகளோ,
மன வருத்தங்களோ ,மனக்கசப்போ ஏற்படாவிடினும் இந்த சம்பவத்தை நான்
மறக்க மாட்டேன்.இன்றளவும் இது என் வீட்டில் ஒரு நகைச்சுவையாகக் கருதப்பட்டு வந்தாலும் என் பார்வையில் இதில் நான் செய்த தவற்றை மட்டும்தான் பாடமாக எடுத்துக் கொண்டேன்.

இப்போ கொசுவர்த்திக்குப் போகலாமா? சினிமால வர மாதிரி வளையம் வளையமா எல்லாரும் கற்பனை பண்ணிக்கோங்க பாக்கலாம்.  :)

அப்பொழுது எனக்கு பத்தொன்பது வயதிருக்கும்.நானும் எனது இரண்டு மன்னிகளும் ஷாப்பிங் போய்விட்டு திரும்பி வந்து கொண்டிருந்தோம்.கூடவே கொசுறாக பெரிய அண்ணாவின் இரண்டு வயது குழந்தை.

வீட்டிற்கு திரும்பி வர ஆட்டோ எதுவும் கிடைக்காததால் ஒரு மாலை நேர
நடையாக இருக்கட்டுமே என முடிவு செய்து மூவரும் பேசிக் கொண்டே நடந்து
வந்து கொண்டிருந்தோம்.குழந்தையை கொஞ்சம் நடக்க விட்டு கொஞ்சம் மூவரும் மாற்றி மாற்றி தூக்கிக் கொண்டு வந்தோம்.

சிறிது தூரம் வந்த பிறகு நானும் இரண்டாவது மன்னியும் சற்று முன்னால் நடக்க குழந்தையைத் தூக்கிக் கொண்டிருந்த காரணத்தால் பெரிய மன்னி சற்று
மெதுவாக பின்னால் வந்து கொண்டிருந்தார்கள்.அந்த இடத்தில் வழியில் ஒரு கிணறு இருக்கும். அதற்கு சில நாட்கள் முன்புதான் அதில் ஒரு உயிரற்ற உடல் கண்டெடுக்கப் பட்டு அது கொலையாக இருக்கலாம் என வதந்தி இருந்து கொண்டிருந்தது.



நானும் இரண்டாவது மன்னியும் அது பற்றி பேசிக் கொண்டே நடந்து கொண்டிருக்கையில் திடீரென்று கரண்ட் வேறு போய்விட்டது. பின்னால் வந்த பெரிய மன்னி, சிணுங்க ஆரம்பித்த குழந்தையை சமாதானம் செய்வதற்காக,  "அத்தையும் சித்தியும் முன்னாடி போறாங்களே.நாம அவங்களைப் பிடிக்கலாமா?"  என்று கேட்டு "ஓடு.. ஓடு..." என்றபடி இரண்டடி ஓடி வர,  ஓடு ஓடு என்ற குரல் கேட்டு திரும்பிப் பார்த்த நான் மன்னி ஓடி வருவது கண்டு ஏதோ ஆபத்து போலிருக்கிறது.அதான் நம்மையும் ஓடச்சொல்லி தானும் ஓடி வருகிறார்கள் என்று புரிந்து கொண்டு என்ன ஏதென்றெல்லாம் யோசிக்காமல் ஏற்கனவே கிணற்றைப் பற்றிய பயம் பற்றிக் கொள்ள ஓட ஆரம்பித்தேன்.

நான் ஓடுவது பார்த்து பயந்து போய் இரண்டாவது மன்னியும் என்னுடன் ஓடிவர ஆரம்பித்தார்கள்.பின்னால் வந்த பெரிய மன்னி நாங்கள் ஓடுவது பார்த்து பயந்து போய்,  "ஏய்!எதுக்குடி ஓடறீங்க? என்னடி ஆச்சு?" என்று கேட்டுக் கொண்டே பயத்தில் ஓடி வர,  நான் ' இவங்கதான நம்மை ஓடச் சொன்னாங்க?இப்ப எதுக்குடி ஓடறீங்கன்னு கேக்கறாங்களேன்னு' நின்று திரும்பிப் பார்த்தேன்.





பாவம்.குழந்தையை தூக்கிக் கொண்டு மூச்சிறைக்க ஓடி வந்து கொண்டிருந்தார்கள்.அருகில் வந்து, "எதுக்குடி ஓடினீங்க?" என்றார்கள்.
"நீங்கதான மன்னி ஓடச் சொன்னீங்க.அதான் என்னவோ ஆபத்து போலருக்குன்னு பயந்து போய் ஓடினேன்" என்றேன்.

"அடக்கடவுளே!நான் அழற குழந்தையை சமாதானம் பண்ண வேண்டி உங்க ரெண்டு பேரையும் பிடிக்கலாமான்னு கேட்டு ஓடு ஓடுன்னேன்.அதுக்குன்னு இப்பிடி இருட்டுல என்னைத் தனியா விட்டு ஓட ஆரம்பிச்சுட்டீங்களேடி!"
என்று புலம்பி விட்டார்கள்.

நான் என் இரண்டாவது மன்னியைப் பார்த்து, " நான்தான் சரியா புரிஞ்சுக்கலைன்னா நீங்க ஏன் மன்னி ஓடினீங்க?" என்றேன்.அதற்கு அவர்கள்
"நீ ஓடினதைப் பாத்ததும் பயமாயிடுத்து.அதான் நானும் ஓடிட்டேன்" என்றார்கள்.

வீட்டிற்கு வந்ததும் இதைக் கூறிய போது அனைவரும் விழுந்து விழுந்து சிரித்தார்கள்.இன்றும் கூட நாங்கள் மூவரில் யாரேனும் இருவர் சேர்ந்து அந்த இடத்தை கடந்து வர நேரிட்டால் "என்னடி!ஓடலாமா?" என்று கேட்டு கிண்டல் செய்து கொள்வதுண்டு.

ஆனாலும் என்ன ஏதென்று யோசிக்காமல், பின்னாடி வருபவர்கள் பற்றி சிந்திக்காமல் ஓடினோமே என்று எனக்குள் இப்பொழுதும் தோன்றுவதுண்டு.


Tuesday, November 15, 2011

களஞ்சியம்

நீண்ட நாட்கள் முன்பு இந்த தளத்தில் "துக்கடா" என்ற பெயரில் வந்து கொண்டிருந்த பகுதி,  மூத்த பதிவர் திருமதி மனோ சாமிநாதன் அவர்களின் யோசனையின் படி இனி "களஞ்சியம்" என்ற தலைப்பில் வெளிவரும்.

இன்றைய களஞ்சியம் :


1 .  ஒரு மகானும் மந்திரவாதியும் சந்தித்துக் கொண்ட ஒரு தருணத்தில் அந்த
மந்திரவாதி மகானைப் பார்த்து என்னால் இறந்தவர்களை உயிர் கொடுத்து வாழ
வைக்க இயலும்.உங்களிடம் என் போன்ற சக்தி உள்ளதா? என்று கேட்க அந்த மகானோ,  இறந்தவர்களுக்கு உயிர் கொடுக்கும் சக்தியை விட உயிருடன் இருப்பவர்களை நம்பிக்கையுடன் நல் வழியில் வாழ வைக்கும் சக்தியே சிறந்தது.நான் அந்த சக்தியைத்தான் பயன்படுத்த விரும்புகிறேன் என்றார்.

மனிதனை நல்வழிப் படுத்தி நம்பிக்கையுடன் வாழ வைப்பவர்களே உண்மையில் மிகச் சிறந்த மகான்களாவார்.


2 . ஒருமுறை சீன தத்துவ மேதை கன்ஃபூஷியஸ்ஸிடம் ஒருவர் வாழ்க்கையில் நாம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பதை ஒரு வார்த்தையில் கூற தங்களால் இயலுமா? என்றார்.இயலும் என்ற கன்ஃபூஷியஸ்ஸிடம் அது என்ன வார்த்தை என்று கேட்ட போது அவர், " பரஸ்பரம் "  என்பதே அந்த வார்த்தை. பிறர் உனக்கு எதை செய்யக் கூடாது என்று நினைக்கிறாயோ நீயும் பிறருக்கு அம்மாதிரி செயல்களை செய்யக் கூடாது என்பதுதான் இதன் பொருள் என்றார்.

சான்றோர்கள் ஒரு வார்த்தை சொன்னாலும் உகந்த வார்த்தைகளைத்தான் அவை இருக்கும்.


3 .  சீடன் ஒருவன் தன் குருவிடம் கடவுள் இந்த உலகை சரியாகவே படைக்கவில்லை.நானாக இருந்திருந்தால் இன்னும் நன்றாக படைத்திருப்பேன் என்றான். அதற்கு அந்த குரு இப்பொழுதாவது நீ உலகுக்கு வந்த அர்த்தம் உனக்கு விளங்கியதே. நீ நன்றாக படைப்பாய் என்று எண்ணிதான் கடவுள் இந்த உலகில் உன்னைப் படைத்திருக்கிறான் என்றார். 


குறைகள் கண்டுபிடிப்பது நின்றாலே நாம் நிறைகளைச் செய்ய ஆரம்பித்து விடுவோம்.


4 .  கி மு நான்காம் நூற்றாண்டில் அலெக்சாண்டரின் இந்தியப் படையெடுப்பின் போது போருக்கு முகாமிட்டிருந்த இந்தியப் படை வீரர்கள் வயிற்றுப் போக்கால் அவதியுற்றனர்.இதற்கு காரணம் குடிநீரே எனக் கண்டறியப்பட்ட போது, முகாமில் உள்ள தளபதிகளை பாதிக்காத குடிநீர் படை வீரர்களை மட்டும் பாதித்தது எவ்வாறு என்று ஆராயப் பட்டது. தளபதிகளுக்கு வெள்ளிக் குவளையிலும் படை வீரர்களுக்கு தகரக் குவளையிலும் வழங்கப் பட்டதே
காரணம் என அறியப் பட்டு படை வீரர்களுக்கும் வெள்ளிக் குவளையில் குடிநீர்
வழங்கப்பட்ட போது வயிற்றுப் போக்கு நின்றது.

வெள்ளிக்கு கிருமிகளை அழிக்கும் மருத்துவ குணம் உண்டு என்பதும் வெள்ளியின் மதிப்பு உலக அளவில் உயரவும் இந்த இந்தியப் பின்னணியே
காரணமாக அமைந்தது.

வடமொழியில் "வெண்மை ஒளி" என்று பொருள் படும் "அர்ஜென்டா"  என்ற சொல்லே இன்றளவும் வேதியியலில் வெள்ளிக்கு "அர்ஜெண்டம்" என்ற பெயர் அமையக் காராணமாயிற்று.

இது இந்தியப் பெருமை :-))


இதன் மூலம்:

கற்றவற்றிலிருந்தும் கேட்டவற்றிலிருந்தும்

Monday, November 14, 2011

பச்சை மண்




குழந்தைகள் மென்மையானவர்கள். அவர்களைக் கையாளும் விதமும் அவ்விதமே இருத்தல் நலம். அவ்விதம் கையாளப்படும் குழந்தைகளே பின்னாளில் உயர் குணங்களோடும் வாழ்க்கையில் வெற்றி பெறுபவர்களாகவும் உருப் பெறுகிறார்கள். இதனை நாம் குழந்தைகளுக்கான சிறுகதைகள் பலவற்றின் மூலம் காண இயலும். அவ்வகைக் கதைகள் இரண்டை இங்கே காணலாம்.


1.ஒரு காட்டில் விலங்குகளுக்கான பள்ளி ஒன்று அமைந்திருந்தது. அதில் ஒரு முயல், ஒரு மீன்,ஒரு பூனை மற்றும் ஒரு சீகல் இவை மாணவர்களாக இருந்தன. பள்ளியின் பாடத்திட்டத்தில் மரமேறுதல், நீந்துதல், குழி தோண்டுதல் ஆகியவை இருந்தன. இதில் முயலானது குழி தோண்டுவதில் எப்போதும் முதல் மாணவனாகவும்,மீன் நீந்துதலில் முதல் மாணவனாகவும், பூனை மரமேறுதலில் முதல் மாணவனாகவும் திகழ்ந்தன.ஆனால் இவை எல்லாமே மற்ற இரண்டு பாடங்களில் தோல்வியையே சந்தித்தன.சீகலோ கொஞ்சம் மரமேறுதல்,கொஞ்சம் நீந்துதல்,கொஞ்சம் குழி தோண்டுதல் என எல்லாவற்றையும் கொஞ்சம் கொஞ்சம் செய்து தேர்ச்சி பெற்றிருந்தது.


இதில் நாம் அறிவது என்னவென்றால், ஒன்றில் பிரமாதப் படுத்தும் குழந்தைக்கு மற்றொன்று வராமல் போகலாம். ஒரு சில குழந்தைகள் எல்லாவற்றிலும் ஓரளவு செய்து முடிக்கும் நிலையில் இருப்பார்கள்.ஆங்கிலத்தையோ கணக்கையோ வெறுக்கும் குழந்தைக்கு வேறொன்றில் நாட்டம் இருக்கலாம்.ஆங்கிலம் பிடிக்காத குழந்தையை தமிழ்ப் பண்டிதனாகவோ அல்லது சிறந்த ஃப்ரெஞ்சு மொழி பெயர்ப்பாளனாகவோ வளர அனுமதியுங்கள். கணக்கை விரும்பாத குழந்தையின் வாழ்வில், தயவு கூர்ந்து கணக்கைத் திணித்து அக்குழந்தையை மழுங்கச் செய்யாதீர்கள். அந்த குழந்தையின் விருப்பமறிந்து அதனைச் சிறந்த ஓவியனாகாவோ, பாடகனாகவோ புகைப்பட கலைஞனாகவோ வளர அனுமதியுங்கள்.



இனி அடுத்த கதைக்குச் செல்வோம்.







2.ஒரு குயவனிடம் இரண்டு மண்பானைகள் இருந்தன. அவன் தினமும் ஆற்றுக்குச் சென்று அவற்றில் தண்ணீர் நிரப்பி எடுத்து வருவான். திடீரென ஒரு நாள் ஒரு பானையில் சிறிய ஓட்டை விழுந்து விட்டது. அப்படியும் அவன் அதே இரண்டு பானைகளிலேயே தண்ணீர் எடுத்து வந்தான். நன்றாக இருந்த பானையோ ஓட்டைப் பானையைப் பார்த்து சிரித்து, “உன்னால் தண்ணீரை தக்க வைத்துக் கொள்ள முடியவில்லை. இன்னும் நீ எதற்கு?” என்று ஏளனம் செய்தது. இதைத் தாங்க இயலாத ஓட்டைப் பானை குயவனிடம், “நான்தான் ஓட்டையாகி விட்டேனே. இன்னும் என்னைத் தூக்கி எறியாமல் என்னுள் நீர் எடுத்து வந்து ஏன் என்னைப் பிறர் பார்த்துச் சிரிக்கும் நிலைக்கு ஆளாக்குகிறாய்?” என்று கேட்டது.


குயவன் அந்தப் பானையிடம் “நாளை தண்ணீர் எடுத்து வரும் பொழுது உன்னில் ஓட்டை இருக்கும் பக்கமாக தெருவைத் திரும்பிப் பார்” என்று கூறினான். மறுநாள் அவ்வண்ணமே அந்த பானையும் செய்தது. ஓட்டை வழியே தண்ணீர் வழிந்த பக்கமெல்லாம் பூச்செடியும் காய் கனி செடிகளும் செழிப்பாக வளர்ந்து நிமிர்ந்து நின்றன. நல்ல பானையின் பக்கம் வறட்சியாக இருந்தது.


இதில் நாம் அறிவது என்னவென்றால் எந்த ஓட்டையையும் அதாவது குறைகளையும், நிறைகளாக்குவது பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் கையில் உள்ளது.


பெற்றோரும் ஆசிரியரும் வெறும் மண்பானை செய்யத் தெரிந்த குயவர்களாக மட்டும் அமைவது போதாது. ஓட்டைப் பானையாக இருந்தாலும் உபயோகமான பானையாக மாற்றத் தெரிந்து கொள்ள வேண்டும். அப்படிச் செய்தால் குழந்தைகள் இந்த பூமியை பூத்துக் குலுங்கச் செய்திட மாட்டார்களா என்ன?


குழந்தைகள் தினத்தன்று அவர்களை நல்ல முறையில் கையாள நாம் உறுதி கொள்வோம்.சரிதானே?!


இந்த கட்டுரை இன்றைய 'வல்லமை-குழந்தைகள் தின சிறப்பிதழில்' வெளிவந்துள்ளது.


Sunday, November 13, 2011

தாயகத் தவிப்பு

தாயகத் தவிப்பு


தாயக நினைவில்
தவிக்கும் நெஞ்சங்கள்

தவமாய் உழைத்து
தவற விட்ட நொடிகள் எதுவோ?

அன்னை கைசோறும்
அவளது ஆதரவுமோ?

அப்பாவின் அறிவுரையும்
அவரது கருத்துக்களுமோ?

மனையாளின் மகிழ்வும்
மனம் பெருகும் அரவணைப்புமோ?

உடன்பிறந்தோனின்
உடன்பிறந்த சீண்டல்களோ?

தங்கையவளின் தர்க்கமும்
தடையற்ற பாசமுமோ?

மழலையின் மொழிகளும்
மயக்கும் சிரிப்புமோ?

என்னென்ன விலைகள்
எல்லாம் நீ தந்தாய்?

இவையெல்லாம் இழந்து
இன்னொரு நாட்டில்
இயந்திர வாழ்விலே நீ !


டிஸ்கி:  இந்த கவிதை செப்டம்பர் 6 ஆம் தேதி  "வல்லமை" யில் வெளி வந்துள்ளது

Thursday, November 10, 2011

ஒரு பயணத்தின் நம்பிக்கை


 Copyright  Bob Jones @ ImagineWales.com


ரயில் கிளம்ப இன்னும் பதினைந்து நிமிடங்களே இருந்தது.ஜெயராமன் மணிக்கட்டைத் திருப்பி கடிகாரத்தைப் பார்த்தார்.சாமான்களை அடுக்கி வைத்தாகி விட்டது.எதற்கும் இன்னொரு தண்ணீர் பாட்டில் வாங்கி வைத்துக் கொள்ளலாமா என்று யோசித்தார்.

"திலகம்! தண்ணி போதுமா?இல்ல ஒரு பாட்டில் வேணா வாங்கிண்டு வரட்டுமா?"

"இதுவே போதுங்க.நம்ம ரெண்டு பேருக்குமே மிடில் பர்த் போட்டிருக்கே
லோயர் கிடைச்சா வசதியாருக்குமேன்னு பாத்தேன்"

"பாக்கலாம்.எதிர்ல இன்னும் யாரையும் காணோமே.வந்தா மாத்திக்கறாங்களான்னு கேட்டுப் பாக்கலாமே"

"சார்!கொஞ்சம் காலை நகத்திக்கறீங்களா?"  என்று கேட்டுக் கொண்டே இருபதுகளின் தொடக்கத்தில் இருந்த ஒரு பெண் உள்ளே நுழைந்து சாமான்களை அடுக்கினாள்.திலகம் கழிப்பறை பக்கம் சென்றிருக்க அந்த பெண்ணுக்கு தொந்தரவாக இருக்க வேண்டாமென நினைத்து வாசல் பக்கம் வந்து காற்று வாங்கினார். திரும்பவும் வந்த போது  ஒரு இளளைஞனுடன்அமர்ந்திருந்தாள்.

அவர்கள் வந்து அமர்ந்த சில நொடிகளில்  சார்மினார் தன் குரலெழுப்பி
தன் புறப்பாட்டைத் தெரியப் படுத்தி மெதுவாக நகர ஆரம்பித்தது.

சாமான்களை சரி செய்வது போன்ற எல்லா ஏற்பாடுகளையும் அந்த பெண்ணே
செய்ய அந்த இளைஞன் தனக்கும் அதற்கும் எந்த சம்பந்தமும் இல்லாதது போல் ஒரு புத்தகத்தை பிரித்து வைத்துக் கொண்டான்.

அவள் அவனைப் பார்த்து தெலுங்கில் ஏதோ மாட்லாட அவன் தலையை வேண்டாமென்பது போல் இருபுறமும் அசைத்தான்.

அவள் , தூய்மைக்கும் தனக்கும் சற்றும்  சம்பந்தமில்லாத ரயிலின் கழைவறைப் பகுதியை நோக்கி நகர்ந்தாள்.

"சார்!"  என்ற ஜெயராமனின் அழைப்பிற்கு அவன் நிமிர்ந்தான்.

"எங்களுக்கு ரெண்டு பேருக்குமே மிடில்தான் கிடைச்சிருக்கு.உங்களுக்கு லோயர்தான.கொஞ்சம் மாத்திக்க முடியுமா?என் மனைவி கொஞ்சம் உடம்பு முடியாதவ.ப்ளீஸ்.."

அவன் பதிலற்ற பார்வை ஒன்றைத் தந்து விட்டு புத்தகத்துள் தலையை
கவிழ்ந்து கொண்டான்.

"ஒருவேளை தமிழ் தெரியாதோ என்னவோங்க.தெலுங்கா இருக்கும்.அந்த பொண்ணு நம்ம கிட்ட தமிழ் பேசிச்சே தவிர அவர் கிட்ட தெலுங்கிலதான என்னமோ கேட்டுச்சு.நீங்க வேணா இங்க்லீஷ்ல கேட்டுப் பாருங்களேன்.படிச்சவர் மாதிரிதான் தெரியறாரு"

திலகத்தின் பேச்சு சரியாகப் பட அவர் மீண்டும் அவனிடம் இங்லீஷில் கேட்டார்.அவன் நிமிர்ந்து பார்த்து தெளிவான தமிழ் உச்சரிப்பில்,  "என் வொய்ஃப் வரட்டும்.கேட்டுச் சொல்றேன்" என்றான்.

இதுக்கு எதுக்கு அவள் வந்த பிறகு சொல்ல வேண்டும்.ஒருவேளை சரியான
பெண்டாட்டி தாசனோ.அவள் சொல்லாமல் இவன் எதுவும் செய்ய மாட்டான் போல என ஜெயராமன் தன்னுள் நினைத்துக் கொண்டார்.

அவள் வந்த பிறகு அவன் அவளிடம் இவர்களை காட்டி சுந்தரத் தெலுங்கில்
சம்பாஷிக்க அவள் இவர்களைப் பார்த்து சற்று மெலிதான புன்னகையுடன்
"நீங்க ரெண்டு பேருமே லோயர் பர்த்ல படுத்துக்கோங்க சார்.நாங்க ரெண்டு பேரும் மிடில் பர்த்ல படுத்துக்கறோம்" என்றாள்.

"இல்லைம்மா.என் வொய்ஃப்க்கு மட்டும் லோயர் இருந்தா போதும்.நான் மிடில் பர்த்ல படுத்துப்பேன்மா.நீயும் ஏன் சிரமப்படணும் பாவம்.நீ லோயர்லயே படுத்துக்கலாம்மா"

"இல்லை சார்.அவர் மிடில் பர்த்ல படுத்துக்கறதா இருந்தா எனக்கும் மிடில்தான் வசதிப்படும்.நீங்க லோயர் யூஸ் பண்ணிக்கங்க.எனக்கு ஓக்கேதான்"

"சரிம்மா.ரொம்ப தேங்க்ஸ்மா"


சற்று நேரம் கழித்து ஜெயராமனும் திலகமும் இரவுச்சாப்பாடை முடித்துக் கொண்டனர்.எதிரில் அந்த இளைஞன் புத்தகத்துள் மூழ்கி இருக்க அவள் அவனுக்கு ஊட்டி விட ஆரம்பித்தாள்.அப்படி என்ன புத்தக மோகமோ? இதெல்லாம் வீட்டோடு வைத்துக் கொள்ளக் கூடாதா? என்று நினைப்பை ஜெயராமனால் தடுக்க இயலவில்லை.

இரவு படுக்கும் முன் திலகம் மீண்டும் கழிப்பறை உபயோகிக்க சென்று விட பால் ... பால்... என்ற விறபனைக் குரல் கேட்டு ஜெயராமன் "இரண்டு பால்" என
அழைத்தார்.அவர் அழைப்பை காதில் வாங்காமல் சென்ற பால் விற்பனையாளர் பின்னால் சென்று இரண்டு பால் வாங்கி வந்தார்.

இருவரும் வந்த போது அந்த இளைஞன் மிடில் பர்த்தில் படுத்திருந்தான்.
பால் அருந்திய சற்று நேரத்துக்கெல்லாம் திலகம் ஷுகர் மாத்திரை சாப்பிடுவதைப் பார்த்து அவன் "எதுக்கு மாத்திரை சாப்பிடறீங்க?" என்று கேட்டான்.

'எனக்கு ஷுகர் இருக்குப்பா அதான்.ஏன் கேக்கறீங்க தம்பி?"

"ஒண்ணுமில்ல.உடம்பை ஜாக்கிரதையா பாத்துக்கோங்க" என்றான் சம்பந்தமில்லாமல்.

தூக்கம் கண்ணைச் சுழற்ற மூத்த தம்பதியர் கீழ் பர்த்தில் எதிரெதிரே படுத்தனர்.

விடியலில் விழித்து வழக்கமாகி விட்ட ஜெயராமனும் திலகமும் சீக்கிரம் எழுந்து தங்கள் வேலைகளை முடித்து காலைக் காப்பிக்காக எதிர்பார்த்து அமர்ந்திருக்க ,  அந்த இளைஞன் விழித்த பிறகும் எழாமல் படுத்தே இருந்தான்.

சற்று நேரத்துக்கெல்லாம் எழுந்து விட்ட அந்தப் பெண், "எழுந்துட்டீங்களா?என்னை எழுப்பக் கூடாதா?"  என்று கேட்ட வண்ணம் அவன்
அருகே சென்று அவன் இறங்க உதவினாள்.கஷ்டப் பட்டு கீழே இறங்கிய அவன் அவளது உதவியுடன் சாய்த்து  சாய்த்து கழிவறைப் பக்கம் நடந்தான்.

அதிர்ச்சியில் உறைந்த ஜெயராமன், திலகத்திடம் ஒரு சின்ன சிரிப்பை உதிர்த்து "குட்மார்னிங்" என்று கூறியபடியே அவனுடன் சென்றாள் அந்தப் பெண்.

திரும்பி வந்து அமர்ந்த அவர்களிடம் திலகம் மனசு தாங்காது பேச்சை ஆரம்பித்தாள்." ஏம்மா! இப்பிடி இருக்கு இவருக்குன்னு ஒரு வார்த்தை சொல்லிருந்தீங்கன்னா நாங்க உங்களை கஷ்டப் படுத்திருக்க மாட்டோமேம்மா?"

"அப்படி அவர் மேலே அனுதாபம் காட்டறது அவருக்குப் பிடிக்காது.ஆனா மேலே ஏற என் உதவி வேணுங்கறதால என் கிட்ட கேட்டு சொல்றேன்னு சொன்னார்.நீங்க மனசு வருத்தப் பட வேண்டாம்மா"

"கடவுளே!அதனாலதான் நீங்க ராத்திரி ஊட்டி விட்டீங்களா?எப்படி இந்த மாதிரி ஆச்சு?கேக்கறது உங்களுக்கு வருத்தமாருந்தா சொல்ல வேண்டாம்மா"

"நாங்க வருத்தப் பட்ட காலமெல்லாம் முடிஞ்சு போச்சும்மா.இப்ப எவ்வளவோ தேவல" என்று அவன் ஆரம்பித்தான்.

"வேலைக்குப் போயிட்டு வரும்போது நடந்த ஒரு விபத்துல இவருக்கு வலது கை கால்ல உணர்வே இல்லாம போயிடிச்சி.இரண்டு வருஷமாப் படாத கஷ்டங்கள் இல்லை.இப்பத்தான் கொஞ்சம் கொஞ்சமா முன்னேற்றமாகியிருக்கு.இப்ப கொஞ்சம் நடக்கறார்.ஆனா கை இன்னும் நல்லா உபயோகிக்க முடியலை.மெதுவாதான் சரியாகும்னு டாக்டர் சொல்லி இருக்கார்.அவர் இந்த அளவு ஆனதே எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு.சரியாகிடும்னு நம்பறோம்"

சிரிப்புடன் கலந்த நம்பிக்கை ஜெயராமனுக்கு பிரமிப்பைத் தந்தது.இதுதான் பெட்டர் ஹாஃப் என்பதா? இல்லை.இது பெஸ்ட் ஹாஃப் அல்லவா? இன்னும் கேட்டால் ஹாஃப் என்று சொல்வதைவிட முழுமை என்றே கூறலாம்.இந்த அளவு அவன் நடப்பதற்கு அந்தப் பெண் இந்த இரண்டு வருடங்களில் எத்தனை உழைத்திருக்க வேண்டும்?அவன் எந்த அளவு ஒத்துழைப்பு தந்திருக்க வேண்டும்?

துவண்டு விடாமல் துடிப்பாய் நிமிர வைத்த நம்பிக்கை அவர்கள் இருவர் கண்ணிலும் ஒளிர்ந்து தனக்குள்ளும் பாய்வது போல் உணர்ந்தனர் மூத்தவர்கள்.



Tuesday, November 8, 2011

டோல்கேட்

' என்னம்மா சுந்தரி! பை எடுத்துண்டு எங்க போற ? காய்கறி கடைக்கா?'

சுந்தரியின் முகம் கடுகடுத்தது.' இல்லை மளிகைக் கடைக்கு'

'நேத்துத்தான காலைல மளிகைக்கடை போன.திருப்பி இன்னிக்கு என்ன?'

'மாமா! எனக்கு டைம் ஆயிடுத்து.நான் வந்து சொல்றேனே' அவசரமாக 
சொல்லிவிட்டு தப்பித்தோம் பிழைத்தோம் என்று நகர்ந்தாள்

 தினமும் இது  ஒரு தொல்லை.இந்த குடியிருப்புக்கு வந்து ஒரு வருடமாகிறது.
ஒரு நாளைப் போல இந்த தொந்தரவுதான்.சுந்தரிக்கு மட்டுமில்லை.அவள்
புருஷன் ரகு,பெண் திவ்யா,சுந்தரியின் மாமனார் ரங்கநாதன் எல்லாரும் 
வீட்டை விட்டு வெளியில் வரும்பொழுதே இதை எதிர்கொண்டுதான் 
தீர வேண்டும்.

எதிர் வீட்டில் குடி இருக்கிறாரே என்று வந்த புதிதில் சுந்தரிதான் சற்று சிநேகமாக சிரித்து வைத்தாள்.பிடித்தது தொல்லை.வெளியில் போகும்பொழுதும் திருப்பி வரும்பொழுதும் சிபிஐ என்கொயரி தோற்காத குறைதான்.

ரகு காலையில் ஆபீஸ் செல்ல வண்டியை உதைககும்போதே எதிர் மாடி பால்கனியில் உதயமாகி விடுவார்.'என்னப்பா!ரகு! ஆபீசுக்கா? இன்னிக்கு 
அஞ்சு நிமிஷம்லேட் போலருக்கே?"

'அதான் ஏற்கனவே லேட் ஆயிடுத்துன்னு தெரியறதே.இன்னும் நிறுத்தி வச்சு என்னத்துக்கு கேக்கணுமாம்' சுந்தரி ரகுவிற்கு மட்டும் கேட்கும்படி சிடுசிடுப்பாள்.

'ஆமாம்.மாமா!கொஞ்சம் லேட்தான்' வண்டியை உறும விட்டுக்கொண்டே ரகு
சிரித்து கொண்டே பதில் சொல்வான்.

'அவர் கேக்கறதுக்கு உங்களுக்கு எப்படித்தான் சிரிப்பு வருதோ? வீட்டுக்குள்ள ஒரு எழவு சிரிப்பையும் காணோம்.அங்க என்ன சிரிப்பு வேண்டிக் கிடக்கோ?'

'விடேன் சுந்தரி!பாவம் வயசு காலத்துல தனியா இருக்கார்.ஒரு துணையுமில்லை.. என்னமோ கேட்டுட்டுப் போறார்.சரி நான் கிளம்பறேன் மணி ஆயிடுத்து'

'அவருக்கு பதில் சொல்றச்சே ஆகாத மணி என் கிட்டத்தான் ஆயிடுத்தாக்கும்.
நாளைலேருந்து டிபன் பாக்ஸ் கட்டறச்சே டைம் ஆயிடுத்துன்னு  சொல்லிப் பாருங்கோ  சொல்றேன்'

'என்ன ரகு!என்ன சொல்றா சுந்தரி?'

ம்க்கும்....இதையும் ஒப்பிக்கனுமாக்கும் நீங்க கிளம்புங்கோ'

இப்படித்தான் ரகு ஆபீஸ் கிளம்புவான்.திவ்யாவின் கதையோ கேக்கவே வேண்டாம்.சும்மாவே அவளுக்கு சற்று கோப சுபாவம்தான்.எதிர் வீட்டு பால்கனி என்றால் கேட்கவே வேண்டாம்.

'என்ன திவ்யா! அரைப் பரீட்சை நடக்கறதா?இன்னிக்கு என்ன இங்கிலீஷா?
அந்தக் காலத்து இங்கிலீஷ் மாதிரி எல்லாம் வராது'  என்று அவள் சைக்கிளை 
வெளியில் எடுக்கும்போதே ஆரம்பிப்பார்.

'மாமா! எனக்கு பரிட்சைக்கு டைம் ஆயிடுத்து.உங்க குறுக்கு விசாரணை எல்லாம் அம்மாவோட வச்சுக்கோங்கோ' சொல்லிவிட்டு சைக்கிளில் சிட்டாய்
பறந்து விடுவாள்.

காலை பால் வாங்க செல்லும் பொழுதும், மாலை கோயில் செல்லும் பொழுதும்
ரங்கநாதனின் முறை வந்து விடும்.'என்ன சார்!பாலுக்கா? அதுவும் சரிதான்.அப்படியே ஒரு வாக்கிங் ஆச்சு. ஆமா!நேத்து சாயங்காலம் கோயில்
போகலை போலருக்கே?உடம்பு சரி இல்லையா?'

ரங்கநாதன் வழிசலாய் ஒரு சிரிப்பை உதிர்த்து விட்டு போய் விடுவார்.அவருக்கு எதற்கு வம்பு.ஒரு முறை பதில் சொல்லப் போய் மாட்டிக்  கொண்டார்.அவர் சொன்ன பதிலை வைத்து,  மறுநாள் எதிர்வீட்டு பால்கனி 
சுந்தரியிடம் கேள்வி கேட்க அவள் அதற்கு வேறு பதில் சொல்ல, குடும்பத்தில் குழப்பமாகாத குறைதான்.அன்றிலிருந்து ஒரே நழுவல்தான்.

இப்படியாக யார் வெளியில் சென்றாலும் சரி திருப்பி வந்தாலும் சரி எங்கு போகிறார்கள் என்ன வாங்கினார்கள்? பைக்குள் என்ன?ஊருக்கு என்றால் திரும்பி வர எத்தனை நாளாகும்? வீட்டில் யாருக்கு உடம்பு சரியில்லை?என்ன
சமையல்? ஆத்துல இன்னிக்கு என்ன சப்தம்?சண்டையா?  என்றெல்லாம் ஒரே 
கேள்விக்கணைகள்தான்.போகும்பொழுதும் வரும்பொழுதும் நிறுத்தி வைத்து
கேள்விகள் கேட்பதால் வீட்டில், எதிர் பால்கனிக்கு "டோல்கேட்" என்ற நாமகரணம் சூட்டப்பட்டது.

'பாவம்.இவரைப் பிடிக்கலைன்னு பொண்டாட்டி வேற ஒருத்தனோட போயிட்டாளாம்.பிள்ளை அமெரிக்கால வேலை பாக்கறான்.இவர் பாட்டுக்கு இங்க தனியா 'பரணி பவன்' ல சாப்டுண்டு காலத்தைக் கழிச்சுண்டிருக்கார்.
நாலு வருஷம் முன்னாடி வரை இந்த மொத்தக் குடியிருப்பும் இவரோடதாத்தான் இருந்தது.அத்தனையும் வித்துட்டார்.இப்ப இந்த ஒன்பது குடித்தனம் இருக்கற பிளாட் மட்டும் வச்சுண்டு தான் ஒண்ணுத்துல இருக்கார்.
என்ன பணம் காசு இருந்து என்ன சொல்லிக்க ஒரு நாதியுமில்லை பாவம்'
இதெல்லாம் நாலு வீடு தள்ளி இருக்கற புவனாவின் தகவல்கள்.

ஆறு மாதம் கழித்து ஒரு சம்மர் லீவிற்காக சுந்தரியின் குடும்பம் டெல்லி மதுரா
என்று வடக்குப் பக்கம் டூர் அடித்து விட்டு வர, எதிர் பால்கனி உதயமற்று இருந்தது.முதல்நாள் எங்காவது போயிருப்பார் என்று நினைத்தாள் சுந்தரி.

மூன்று நாளாகியும் காணாமல் புவனாவை  விசாரிக்க, " ஓ! உனக்கு விஷயம் தெரியாதில்லையா?ஒருநாள் கார்த்தால வழக்கம் போல வேலைக்காரி வந்து கதவைத் தட்டி இருக்கா,.ரொம்ப நேரமா தட்டியும் திறக்கலைன்னதும் கீழ் வீட்டுல சொல்லி அவங்களும் தட்டிப் பாத்துருக்காங்க.இரண்டு மணி நேரமா எதுவுமே தெரியலைன்னதும் கதவை உடைச்சு பாத்தா அவர் தாறுமாறா கிடந்துருக்கார்.ஹார்ட் அட்டாக்காம்.ராத்திரி தூக்கத்துலயே போயிட்டாராம்.நல்ல ஆத்மா.கஷ்டப்படாம போயி சேர்ந்துட்டார். என்ன, போறச்சே பக்கத்துல ஒருத்தரும் இல்லாம நாதியத்து போயிட்டார் பாவம்"


மறுநாள் ரகு ஆபீஸ் கிளம்பும்பொழுது தன்னையறியாமல் எதிர் பால்கனியை
பார்த்தாள் சுந்தரி.வெறிச்சென்றிருந்தது.கண்களில் நீர் சுரந்தது.


இப்பொழுதெல்லாம் வெளியில் போகும் பொழுதும் வரும்பொழுதும் எதிர்
பால்கனி மனதிற்கு பாரத்தையே கொடுத்தது.