மணியாகிவிட்டது.ஆரம்பித்திருப்பார்கள்.இன்னும் சற்று முன்னதாகவே கிளம்பி இருந்திருக்கலாம்.எங்கே வேலை முடிந்தால்தானே.
நடையின் வேகத்தை அதிகரித்தாள் ரமா.இன்னும் பத்தடிதான்.இதோ கோவிலின் அருகில் வந்தாகிவிட்டது.அவசரமாக நடந்து கோவிலின் உள்ளே சென்றாள். இன்றிலிருந்து சௌம்ய நாராயணப் பெருமாள் கோவிலில் அத்யயன உத்சவம் ஆரம்பம்.முதல் நாளே தாமதம்.என்ன செய்வது?இப்போதாவது வர முடிந்ததே.
உள்ளே சென்று பெருமாளை சேவித்தாள்.வேணுகோபாலன் சாத்துபடி(அலங்காரம்) பிரமாதமாக இருந்தது.கண்ணன் குழலூதி நின்ற கோலத்தில் மெய் மறந்து நின்றாள்.ஆழ்வார்களின் பாசுரங்கள் கவனத்தை ஈர்க்க அங்கு சென்று அமர்ந்தாள்.
பக்கத்தில் இருந்த கமலம் மாமி, "என்னடி! ஏன் லேட்?" என்றாள்.
"வேலை முடிஞ்சு வர நாழியாய்டுத்து மாமி"
"சரி சரி பாசுரம் சேவிக்கறத கேக்கலாம்"
ஆழ்வாரின் அமுத மொழிகள் குழந்தை கண்ணனை கண் முன் கொண்டு வந்து நிறுத்தியது.கேட்க கேட்க மனம் பரவசமடைந்தது.கோகுலத்திற்கே சென்ற பிரமை ஏற்பட்டது.பாசுரங்கள் சேவித்தானதும் ரமா பிரதட்சிணம் செய்ய எழுந்து சென்றாள்.பிரதட்சிண முடிவில்
ஒரே கூட்டமாக இருப்பதைக் கண்டு அருகில் சென்றாள்.
"அதுக்குள்ளே எங்கடி போய்ட்ட?"
" பிரதட்சிணம் பண்ணலாமேனு போனேன்.ஆமா!இங்க என்ன கூட்டம் மாமி?"
" அத்யயன உத்சவத்துக்கு இந்த வருஷ வெளியீடா 'ஸ்ரீ ஸ்துதி' ,"கோதா ஸ்துதி', 'வாழித் திருநாமம்' லாம் இருக்கறாப்ல பெருமாள் படங்கள் எல்லாம் போட்டு புத்தகம் தராளாம் இலவசமா.வா! வந்து நீயும் ஒண்ணு வாங்கிக்கோடி"
ரமாவும் மாமியும் புத்தகம் வாங்கிக்கொள்ளும்போது ,
"மாமா!எனக்கும் ஒண்ணு" என்று அருகில் ஒரு பெண்மணி கேட்க புத்தகம் கொடுப்பவரோ கவனிப்பதாக தெரியவில்லை.அந்த பெண் மீண்டும், "மாமா!எனக்கும் ஒண்ணு" என்றாள்
"உனக்கு கொடுக்க முடியாதும்மா" என்று சொல்லி அவர் உள்ளே சென்றார்.அந்தப் பெண்ணின் முகம் சுருங்கியது.ரமாவுக்கு திகைப்பாக இருந்தது.
"ஏன் மாமி அந்த பொண்ணுக்கு குடுக்க மாட்டேனுட்டா?"
" என்னடி புரியாம கேக்கற?இங்கலாம் பிராமணாளுக்குத்தான் தருவா".சரி சரி நீ இங்க கொஞ்சம் உக்காண்டிரு.நான் பிரதட்சிணம் பண்ணிட்டு வரேன்".
ரமா மிகுந்த வருத்தத்துடன் ஒரு தூணருகில் அமர்ந்து புத்தகத்தை பிரித்துப் பார்த்தாள்.ஒவ்வொரு பக்கத்திலும் பெருமாளின் மிக அழகிய வண்ணப்படங்களுடன் சுலோகங்களும் விளக்கங்களுமாய் அற்புதமாக இருந்தது.மூடி வைத்து நிமிர்ந்தவளுக்கு எதிர் தூணருகே அமர்ந்திருந்த அந்த பெண் கண்ணில் பட சட்டென்று எழுந்து அவளருகில் சென்றாள்.
"இந்தாங்கோ, நீங்க கேட்ட புத்தகம்".
அந்த பெண் திடுக்கிட்டு ஏறிட்டாள்.
"இந்தாங்கோ, உங்களுக்குத்தான் வாங்கிக்கோங்கோ"
"எனக்கா?எனக்கெதுக்கு?பரவால்ல.நீங்க வச்சுக்கோங்க"
"எனக்கு வேற கிடைக்கும்.இத நீங்க வாங்கிக்கோங்க"
"நிஜம்மாவா?இது எனக்கா?" ஆர்வமாய் கை நீட்டி வாங்கியவள் அதைத் திறந்து பெருமாளின் அழகிய கோலங்களை கண்கள் விரிய ரசித்துப் பார்த்தாள்.
"ரொம்ப நன்றிங்க" என்று கை கூப்பி விட்டு நகர்ந்தாள்.
அங்கு வந்த மாமி, "அடி!உனக்கென்ன பைத்தியமா?உனக்கு குடுத்த புத்தகத்த அவளுக்கு போயி குடுத்துருக்க?அவளுக்கு எல்லாம் அதுல இருக்கற ச்லோகங்களோ வாழித்திருநாமமோ என்ன தெரியும்?
"அதனாலதான் மாமி குடுத்தேன்"
" என்னடி உளர்ற?"
"உளறல மாமி.உண்மையைத்தான் சொன்னேன்.ஏற்கனவே அந்த ஸ்லோகங்கள எல்லாம் படிச்சுத் தெரிஞ்சுண்டு இருக்கறவா கிட்ட இருக்கறத விட இனிமே தெரிஞ்சுக்க நினைக்கறவா கிட்ட அந்த புத்தகம் இருக்கறதுதான் சரி மாமி.அப்படியே இனி எனக்கு அதுல ஏதும் தெரிஞ்சுக்கனும்னாலும் எனக்கு இன்னொன்னு கிடைக்க வாய்ப்பிருக்கு.அதான் குடுத்தேன்".
" ஆமா!நீ குடுத்ததும் அவ அப்படியே படிச்சு எல்லாம் தெரிசுண்டுடப் போறாளாக்கும்?.இதெல்லாம் பிராமண குலம் இல்லாத ஒருத்திக்கு எதுக்கு?"
"பிராமணாளா இருந்தாதான் இதெல்லாம் தெரிஞ்சுக்கணும்னு எதுலயும் சொல்லல மாமி.மத்தவாளுக்கும் நல்லத சொல்லித்தரவந்தான் மாமி உண்மையான பிராமணன்.இதெல்லாம் பிராமணாதான் படிக்கணும்னா இந்த பிரபந்தங்கள் எழுதின எல்லா ஆழ்வாரும் பிராமணா இல்லையே மாமி? அத்யயனம்னா என்ன மாமி?நல்ல விஷயங்கள படிச்சு தெரிஞ்சுக்கறதுதான?ஆழ்வார்கள் அனுபவிச்ச பெருமாளோட குணாதிசயங்களை எல்லாருமே தெரிஞ்சுக்கலாம்.அந்த பொண்ணுக்கு அதுல இருக்கற ஸ்லோகங்கள் வேணா தெரியாததா இருக்கலாம்.ஆனா அதுல இருக்கற பெருமாளோட அழகான படங்களை எல்லாம் அவ எப்டி ரசிச்சு பாத்தா தெரியுமா?அந்த சுலோகங்களால ஈர்க்கப்பட்டு அவ அத கத்துக்க கூட செய்யலாம்.அதுக்கு பெருமாள் என்னை ஒரு கருவியா ஏற்படுத்தினதாதான் எனக்குத் தோணறது மாமி"
கமலம் மாமி வெடுக்கென்று முகத்தை தோள் பட்டையில் இடித்து விட்டு விறு விறுவென்று சென்று விட்டாள்.
ரமா மீண்டும் சன்னிதிக்கு வந்து சௌம்ய நாராயணனை தரிசித்தாள்.
அந்த வேணுகோபாலக் கோலத்தில், "நீ செய்தது மிகவும் சரிதான்" என்று குதூகலமாக புன்முறுவலிப்பது
போல் தோற்றமளித்தான் அவன்
17 comments:
Fantastic
பன்னிரு ஆழ்வார்களில் பத்துப் பேர் பிராமணர் அல்லாதவர். தேசமெங்கும் ஓடோடிச் சென்று நிறைய பாசுரங்கள் பாடியவர் திருமங்கைமன்னன்.
பிராமணன் யார் என்பதற்கு ஜாபாலி கதையும் நல்ல உதாரணம்.
பிராமணீயம் என்பது ஒரு ஒழுக்கம். அதைக் கடை பிடிப்பவர்கள் எல்லாம் பிராமணர்கள். பிறப்பால் மட்டும் ஒருவன் பிராமனாகி விட முடியாது. நல்ல கதை.
நன்றி கோபி சார்,நன்றி வித்யா மேடம்
"நச்” என அடித்தாற்போல் சொல்லி இருக்கீங்க சகோ. நிறைய பேருக்கு இது புரிவதே இல்லை. நல்ல கதை.
நன்றி மிஸ்டர் வெங்கட் நாகராஜ்
nice, thanks
1st I thought its about vedha adhyyanam (paadasalai).
யதார்த்தமா இருந்தது. நல்ல கருத்துகள்.
நன்றி மிஸ்டர் ராம்ஜி, நன்றி மிஸ்டர் கோவை 2 தில்லி
நல்லா எழுதியிருக்கீங்க..
நன்றி மிஸ்டர் உழவன்
யதார்த்த நடையில் நல்ல கதை............
நன்றி வழிப்போக்கன்
நல்லா எழுதியிருக்கீங்க.
நல்ல கதை.கொஞ்சம் பழைய ஜெயகாந்தனை நினைவு படுத்தியது.
பிறப்பால் மட்டும் பிராமணன் ஆகி விட முடியாது. நல்ல நடை...
கருத்துக்கு நன்றி மிஸ்டர் எல் கே
Post a Comment