Wednesday, August 1, 2012

தவளையின் வருத்தம்

அப்படி என்ன ஆகி விட்டது இப்போது? நினைத்து நினைத்து ஆறவில்லை மாதவிக்கு. காலையில் எப்பொழுதும் போல் எல்லா விஷயங்களும் சரியாகத்தான் நடந்தது. விவேக்கிற்குப் பிடித்த ஆனியன் ரோஸ்ட்டும் கொத்தமல்லிச் சட்னியும்தான் காலை உணவிற்கு பார்த்து பார்த்து செய்திருந்தாள்.இருந்தும் கடைசியில் அதைக் கூட சாப்பிடாமல் செல்லும் அளவு கண்ணை மறைக்கும் கோவம்.மனதிற்குள் பொருமினாள்.

சாதாரணமாக எந்த விஷயத்தையும் பெரிது படுத்தாத சுபாவம்தான் விவேக்கிற்கு.இன்று என்னதான் ஆகி விட்டதோ, அதுவும் உப்பு பெறாத விஷயத்திற்கு. காலை நேர அவசரத்தில் குழந்தை அழுகிறாளே என்று அவசரமாக கரைத்த போர்ன்விட்டாவை ஆற்றி  எடுத்துக் கொண்டு வரவும் எதிரில் விவேக் வருவதைப் பார்க்காமல் மோதி விட்டாள்.மொத்த போர்ன்விட்டாவும் அவன் மேல் தெறித்து சட்டை எல்லாம் கறையாகி
விடவும் " கண் தெரியல. இப்படித்தானா வந்து மோதறது. போச்சு,இன்னிக்கு முக்கியமான மீட்டிங்காக இந்த சட்டையைப் போட்டேன். சே! மனுஷன் கஷ்டம் கொஞ்சமும் தெரியறதில்லை"  என்று  எரிந்து விழுந்தான

" எதுக்கு இப்பிடி கத்தறீங்க? வேற சட்டை மாத்திண்டா போச்சு"   என்று இவள்
சொல்லவும் "உன் யோசனையை நிறுத்தறயா? "  என்று கையை ஓங்கி விட்டான். மாதவிக்கு இது புதிது.விதிர் விதிர்த்து நின்று விட்டாள்.

கையை ஓங்கிய அவனுக்கே  தன் செயல் புரிந்து  சட்டென  அறைக்குள்  சென்று விட்டாலும் கோவம் குறையாமலே வேறு சட்டை அணிந்து விருட்டென்று  சாப்பிடாமல் கொள்ளாமல் சென்று விடவும் மாதவிக்கு துக்கம் பொத்துக்கொண்டு வந்தது.

ஏனோ தானோவென்று வேலை பார்த்தாள். மனம் நிலை கொள்ளாமல் தவித்தது. இதுவரை விவேக்கிடம் இப்படி ஒரு கோவத்தை  சந்தித்திருக்கவில்லை. சாப்பிட உட்கார்ந்தாலும் இறங்காமல் மனம் சண்டி செய்தது. மதிய உணவு கூட எடுத்துச் செல்லாமல் போய் விட்டானே என்றுதான் தோன்றியது.

"அழறியாம்மா?"   மூன்று வயது  மானஸா கன்னம் தொட்டதும் சமாளித்துக் கொண்டாள்

இரவு  வீடு திரும்பியவன் குளித்து  உடை மாற்றி சாப்பிட உட்கார்ந்தான்.ஆனாலும் ஒரு வார்த்தை " நீ சாப்பிட்டயா? குழந்தை என்ன சாப்பிட்டா?"  என்ற வழக்கமான விசாரிப்புகளற்று அரையும் குறையுமாய் விழுங்கி விட்டு எழுந்து சென்றான்

"அம்மா! கதை சொல்லும்மா"  காலை மேலே போட்டுக் கொண்டு படுத்திருக்கும் குழந்தைக்கு " நாளைக்கு சொல்றேண்டா " என்று பதிலளிக்க குழ்ந்தை சிணுங்க ஆரம்பித்தாள்.

"ம்....ஹூஹூம் .....இப்ப  சொல்லு"

"சரி சொல்றேன்.தூங்கு"

விவேக்கிடம் லேசான அசைவு தெரிந்தது. திரும்பிப் பார்த்து விட்டு மௌனமாய்  இருந்தான்.

"அப்பா!"

"ம்..."

"அம்மா கதை சொல்லப் போறாங்க.தினம் நீயும் என்னோட கேப்பயே.கண்ணை முழிச்சுக்கோ "

"சரி"

"சொல்லும்மா"  குழந்தை திரும்பி படுத்து கதை கேட்க தயாரானாள்

" ராமர் காட்டுல இருந்தப்ப ஒரு நாள் குளத்துல குளிக்கறதுக்காகப் போனாராம்"

"ம்.."

"அப்ப அவரோட வில்,  அம்பறாத்தூணி, அம்புகள் எல்லாத்தையும் கரையில் ஒரு இடத்துல வச்சுட்டு குளிக்கப் போயிட்டார்"

"ம்.."

"அவர் குளிச்சு முடிச்சு திரும்ப கரைக்கு வந்து அவர் வச்சுட்டுப் போனதெல்லாம்  எடுக்கறதுக்காக குனிஞ்சப்ப   அந்த இடத்துல ஈனஸ்வரத்துல ஒரு குரல் கேட்டுச்சாம்"

"ம்....  ஈனஸ்வரம்னா?"

"மெல்லிசா ஒரு குரல்ல யாரோ முனகறாப்புல ஒரு சத்தம் கேட்டுச்சாம்"

"அது யாரு?"

"என்ன சத்தம்?எங்கிருந்து வருதுன்னு ராமர் குனிஞ்சு பாத்தப்ப அங்க ஒரு தவளை இருந்துச்சாம். அதன் உடல்ல ரத்த கறை இருந்ததை பாத்து ராமர் அதை எடுத்து ஆதரவா தடவினாராம்.பக்கத்துல இருக்கற தன்னோட அம்புகள்லயும்  ரத்தக் கறை இருக்கறதைப் பாத்த ராமர் அந்த தவளையைப் பாத்து " நான் அம்புகளை வைக்கும் போதே உனக்கு வலிச்சுருக்குமே அப்பவே கத்தி இருந்துருக்கலாமே"ன்னு கேட்டாராம்

"பாவம் இல்ல"   குழந்தை முகத்தை வருத்தமாக வைத்துக் கொண்டது.

"அதுக்கு அந்த தவளை ராமரைப் பாத்து ,  "வேற யார் மூலமா எப்ப துன்பம் வந்தாலும் நான் ராமா அப்படின்னு கத்துவேன்.ஆனா ராமனோட பாணமே காரணமா இருக்கும் போது என்னன்னு சொல்லி கத்துவேன்"னு வருத்தமா கேட்டதாம்.

........................

"இதை கேட்ட ராமர் அந்த தவளையை தன் நெஞ்சோட சேர்த்து அணைச்சுக்கிட்டாராம்"

விவேக் சடக்கென்று  எழுந்து சென்று கையில் பால் தம்ளருடன் வந்தான்.மாதவியை எழுப்பி கையில் தந்து அருகில் அமர்ந்து அணைத்துக் கொண்டான்.

கண்ணீருடன் அவன் தோளில் சாய்ந்த மாதவியின் மடியிலேறி அமர்ந்து விவேக்கின் மேல் கால் போட்டுக் கொண்ட மானஸா  " அந்த தவளைக்கு வருத்தம் சரியா போச்சான்னு சொல்லவே இல்லையேம்மா ? " என்று கொட்டாவியுடன் கேட்டது.

" ராமர் அணைச்சுண்டப்பறம் தவளைக்கு ஏது வருத்தம்? "  என்று சிரித்த அன்னையுடன் சேர்ந்து அப்பாவைப் பார்த்து தானும் சிரித்தது குழந்தை



33 comments:

வை.கோபாலகிருஷ்ணன் said...

// "வேற யார் மூலமா எப்ப துன்பம் வந்தாலும் நான் ராமா அப்படின்னு கத்துவேன்.ஆனா ராமனோட பாணமே காரணமா இருக்கும் போது என்னன்னு சொல்லி கத்துவேன்"னு வருத்தமா கேட்டதாம்.//

மிகவும் அழகான இந்தப் புராணக்கதையின், அற்புதமான இந்த ஓர் கட்டத்தை வைத்து ஓர் யதார்த்தமான வாழ்வியல் கதையைப் புணைந்துள்ளது மிகவும் அருமை.

சபாஷ்! மனமார்ந்த பாராட்டுக்கள்.

தொடரும்....

வை.கோபாலகிருஷ்ணன் said...

//மொத்த போர்ன்விட்டாவும் அவன் மேல் தெறித்து சட்டை எல்லாம் கறையாகி விடவும்
" கண் தெரியல. இப்படித்தானா வந்து மோதறது. போச்சு,இன்னிக்கு முக்கியமான மீட்டிங்காக இந்த சட்டையைப் போட்டேன். சே! மனுஷன் கஷ்டம் கொஞ்சமும் தெரியறதில்லை" என்று எரிந்து விழுந்தான்//

மிகவும் யதார்த்தமாக சில வீடுகளில் காலை நேரப் பரபரப்பில் நடக்கும் எதிர்பாராத சம்பவத்தை கதையில் மிகவும் அழகாகக் கையாண்டுள்ளீர்கள்.
அருமை. ;)

வை.கோபாலகிருஷ்ணன் said...

//" எதுக்கு இப்பிடி கத்தறீங்க? வேற சட்டை மாத்திண்டா போச்சு" என்று இவள்
சொல்லவும் "உன் யோசனையை நிறுத்தறயா? " என்று கையை ஓங்கி விட்டான். மாதவிக்கு இது புதிது. விதிர் விதிர்த்து நின்று விட்டாள்.//

எவ்வளவு நல்ல குணங்கள் இருப்பினும், சில ஆண்கள் சில சமயங்களில் இதுபோல அவசரப்பட்டு, ஆத்திரப்பட்டு நடந்து கொண்டு விடுவதும், மிகவும் யதார்த்தமான சம்பவமே.

இது போன்ற சமயங்களில் பாவம் .... சில மென்மையான சுபாபமுள்ள பெண்கள் மனதளவில் மிகவும் நொறுங்கித் தான் போய் விடுவார்கள்.

அதை எடுத்துச் சொல்லியுள்ளதும் அருமையே!

வை.கோபாலகிருஷ்ணன் said...

//விருட்டென்று சாப்பிடாமல் கொள்ளாமல் சென்று விடவும் மாதவிக்கு துக்கம் பொத்துக்கொண்டு வந்தது.//

//இதுவரை விவேக்கிடம் இப்படி ஒரு கோவத்தை சந்தித்திருக்கவில்லை.//

//மதிய உணவு கூட எடுத்துச் செல்லாமல் போய் விட்டானே என்றுதான் தோன்றியது//

இருக்காதா பின்னே! விவேக்கிற்குப் பிடித்த ஆனியன் ரோஸ்ட்டும் கொத்தமல்லிச் சட்னியும்தான் காலை உணவிற்கு பார்த்து பார்த்து செய்திருந்தவள் ஆயிற்றே ... அந்தப்பெண்ணின் மனம், மிகவும் வருந்தத்தானே செய்யும்.

இந்த இடங்களில் கதையின் போக்கில் நல்ல அழுத்தம் கொடுத்துள்ளீர்கள்.

ஸ்பெஷல் பாராட்டுக்கள்.

வை.கோபாலகிருஷ்ணன் said...

//"ம்.... ஈனஸ்வரம்னா?"

"மெல்லிசா ஒரு குரல்ல யாரோ முனகறாப்புல ஒரு சத்தம் கேட்டுச்சாம்" //

இந்த இடத்தில் கொடுத்துள்ள இந்த அருமையான வார்த்தைப் பிரயோகங்கள், கதையில் அந்த மனைவியின் உணர்வுகளைப் பிரதிபலிப்பதாக உள்ளது.

சபாஷ். உங்களுக்கு நீங்களே ஒரு ஷொட்டுக் கொடுத்துக் கொள்ளலாம்.

மனித உணர்வுகளை எடுத்துச் சொல்லும், சிறுகதை எழுத்துலகில் கொடிகட்டிப்பறக்க ஆரம்பித்துள்ளீர்கள் என்பதற்கு இந்த வரிகளே சாக்ஷி என்பேன்.

வை.கோபாலகிருஷ்ணன் said...

//" அந்த தவளைக்கு வருத்தம் சரியா போச்சான்னு சொல்லவே இல்லையேம்மா ? " என்று கொட்டாவியுடன் கேட்டது.//

”கொட்டாவியுடன்” என்ற வார்த்தை இந்த இடத்திற்கு மிகவும் பொருத்தமான எடுப்பான சொல்லாடல். அதற்கு ஓர் மிகப்பெரிய சபாஷ்!

வை.கோபாலகிருஷ்ணன் said...

//" ராமர் அணைச்சுண்டப்பறம் தவளைக்கு ஏது வருத்தம்? " என்று சிரித்த அன்னையுடன் சேர்ந்து அப்பாவைப் பார்த்து தானும் சிரித்தது குழந்தை//

இந்த இடத்தில் மட்டும் எனக்கென்னவோ தங்களுக்கு மிகவும் பிடித்த ஸ்ரீ ராகமும் ‘அந்திமாலை கோவில் வந்தேன்’ பாடலும், அந்தத் தங்களின் கைப்பூக்கள் சிதறியதும், அதை ஓடிவந்து தடுத்தாட்கொண்ட மாப்பிள்ளை அவர்களும் தான் ஞாபகம் வந்தன.

தங்களை நான் ஓட்ட ஆரம்பித்து விட்டதாக தயவுசெய்து நினைக்க வேண்டாம்.

கதைக்குக் கொடுத்துள்ள வெகு அழகான சுபமான முடிவைக்கண்ட சந்தோஷத்தில் மனம் ஒட்டித்தான் எழுதியுள்ளேன் ..... ஓட்டி அல்ல.

அன்பு மகளின் எழுத்துக்களில் நாளுக்கு நாள் ஏற்பட்டு வரும் புதுப் பொலிவினைக்கண்டு மனம் மிகவும் சந்தோஷப்படுகிறது. அன்பான வாழ்த்துகள்.

பிரியமுள்ள vgk

Yaathoramani.blogspot.com said...

" ராமர் அணைச்சுண்டப்பறம் தவளைக்கு ஏது வருத்தம்? " என்று சிரித்த அன்னையுடன் சேர்ந்து அப்பாவைப் பார்த்து தானும் சிரித்தது குழந்தை//

எப்படிப்பாராடுவது எனத் தெரியவில்லை
முதிர்ச்சியான மனதில் விளைந்த முத்தான கதை
அன்றாட நிகழ்வுடன்
புராணக் கதையை இணைத்த விதமும்
சொல்லிச் சென்ற விதமும் மனம் கவர்நதது
வாழ்த்துக்கள்

திண்டுக்கல் தனபாலன் said...

புராணக்கதையின் ஒரு பகுதியை சொல்லி, அருமையாக முடித்துள்ளது சிறப்பு...
நன்றி சகோதரி...


உன்னை அறிந்தால்... (பகுதி 2)

KParthasarathi said...

எங்கேயோ ஆரம்பித்து தவளை கதை சொல்லி ரொம்பவும் அழகாகவும் மனதை தொடும் வகையிலும் கதையை முடித்து எங்களை ஆழ்த்திவிட்டீர்கள்.மிக்க நன்றி

குறையொன்றுமில்லை. said...

நல்ல உதாரணக்கதை சொல்லிட்டிங்க ரொம்ப நல்லா இருக்கு

இராஜராஜேஸ்வரி said...

" ராமர் அணைச்சுண்டப்பறம் தவளைக்கு ஏது வருத்தம்? !!!!!!!!!!!!!!

கீதமஞ்சரி said...

ஈகோ பார்க்காத மனங்களில் ஊடலின் வாழ்நாள் அரைநாள் நீடித்தாலே அதிசயம்தான். குழந்தைக்கும் கணவனுக்குமாய் கதைசொல்லி மனம் புரியவைத்தக் கதைக்குப் பாராட்டுகள் ராஜி.

பால கணேஷ் said...

புராணக் கதையை அழகாய் சிறுகதைல இணைச்சு மனசைத் தொடும்படி சொல்லிட்டீங்க. அருமையோ அருமை.

middleclassmadhavi said...

good story! enjoyed reading it - vaazhththukkal.

வெங்கட் நாகராஜ் said...

ராமர் காதையிலிருந்து ஒரு பகுதியை எடுத்து அதன் மூலம் ஒரு சிறுகதை சொன்னது மிக மிக அருமை. பாராட்டுகள் சகோ.

சாந்தி மாரியப்பன் said...

ஆஹா!!.. ஆஹா!!.. அருமைங்க. பின்னிட்டீங்க :-)

'பரிவை' சே.குமார் said...

அருமையான சிறுகதை...
ரொம்ப நல்லாயிருக்கு.

அப்பாதுரை said...

பிரமாதம்.

raji said...

பின்னூட்டமளித்து ஊக்குவித்த அனைவருக்கும் எனது நன்றிகள்

ஆச்சி ஸ்ரீதர் said...

நாயகனின் கோபத்தின் வெளிப்பாட்டை படிக்கும்போது நாயகியின் மன பதட்டம் அப்படியே மனதில் தோன்றியது.கதைக்கு கதைப் பொருத்தமும் மிக நன்றாக உள்ளது.

எல் கே said...

அட்டகாசம்

இராஜராஜேஸ்வரி said...

வை.கோபாலகிருஷ்ணன் ஐயா அவர்களிடம் விருது பெற்றதற்கு மனம் நிறைந்த வாழ்த்துகள்.. பாராட்டுக்கள்..

raji said...

@thirumathi bs sridhar

வரவிற்கும் கருத்திற்கும் நன்றிகள் ஆச்சி

@எல் கே

பாராட்டிற்கு நன்றி சார்

@வை கோபாலகிருஷ்ணன் சார்

தங்களிடமிருந்து விருது பெறுவதில் மகிழ்கிறேன்.மிக்க நன்றி.

@இராஜராஜேஸ்வரி மேடம்

வாழ்த்துக்களுக்கும் பாராட்டிற்கும் நன்றி மேடம்.தங்கள் போன்ற பெரியவர்களின் ஆசிர்வாதமும் அன்பும் எனக்கு என்றும் இருக்க வேண்டுமென ப்ரார்த்திக்கிறேன்.தாங்கள் விருது பெற்றதற்கும் எனது மகிழ்வைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

ரிஷபன் said...

தவளை என்று சொன்னதில் ஏதேனும் பூடகமாய் அர்த்தம் உண்டா..

raji said...

கதையில் இருக்கற ஒரு நூழிலையை கரெக்டா பிடிச்சதுக்கு முதல்ல உங்களுக்கு நன்றி சொல்லிக்கறேன் சார்! உங்களை நிறைய பேர் எழுத்து குருநாதர்னு சொல்லிக்கறதோட அர்த்தமும் இப்பதான் புரியுது.

தவளை குளம் குட்டையில் வாழற ஜீவன்.அது நிலத்திக்கு வந்தாலும் அதன் மனசுல குளம் குட்டை பற்றிய எண்ணம் இருந்துக்கிட்டேதான் இருக்கும்.அது போல பெண்களௌக்கு எந்த இடத்துக்கு போனாலும் என்ன வேலை செஞ்சாலும் கணவனுடனான உரையாடல்களு8ம் நிகழ்வுகளும் மனதில் சுற்றிக் கொண்டே இருக்கும்.அது போல இந்த கதையின் நாயகி அன்றைய நிகழ்வை சுற்றிப் பின்னப் பட்டிருப்பதால் தவளையின் பூடகமான அர்த்தம் இடம் பெற்றிருக்கிறது.பாயிண்டைப் பிடிச்சதுக்கு ரொம்ப நன்றி சார்!

raji said...

நூலிழை என்கிற வார்த்தை தவறாக டைப் ஆகி விட்டது.மன்னிக்கவும்

வை.கோபாலகிருஷ்ணன் said...

//raji said... to ரிஷபன் Sir ....
கதையில் இருக்கற ஒரு [நூழிலையை] நூலிழையை கரெக்டா பிடிச்சதுக்கு முதல்ல உங்களுக்கு நன்றி சொல்லிக்கறேன் சார்! உங்களை நிறைய பேர் எழுத்து குருநாதர்னு சொல்லிக்கறதோட அர்த்தமும் இப்பதான் புரியுது.//

நூல் இழை போன்ற மிகச்சிறிய மெல்லிய எழுத்துப்பிழை தான். அதனால் பரவாயில்லை.

தவளையைப் பற்றித் தாங்கள் சொல்லியுள்ள விளக்கம் என்னைப்போன்ற கிணற்றுத் தவளைகளுக்கும் கூட சுலபமாகப் புரிந்து கொள்வதாகவே உள்ளது.

என் எழுத்துலக மானஸீக குருநாதரும் இதைப் படித்ததும் நிச்சயமாக மகிழ்ந்திருப்பார்.

அவருக்குத் தேரியாதது ஒன்றும் இருக்க நியாயமில்லை.

தங்கள் கைப்படவே விளக்கம் தரட்டுமே எனக் கேட்டிருப்பார் என்று நினைக்கிறேன்.

கேட்கத்தயங்கிய வேறு சிலருக்கும் இப்போது புரிந்திருக்கும். எல்லாம் நன்மைக்கே.

அன்புடன் vgk

இராஜராஜேஸ்வரி said...

Congratulations for getting Fabulous Blog Ribbon AWARD From VAI.GOPALAKRISHNAN SIR..

காரஞ்சன் சிந்தனைகள் said...

விருது பெற்ற தங்களுக்கு என் உளமார்ந்த வாழ்த்துக்கள்!
-காரஞ்சன்(சேஷ்)

மோகன்ஜி said...

தவளை அழகான குறியீடு. நல்ல பதிவு.. நல்ல காலம், தவற விட்டிருப்பேன்..

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

ஆஹா...இவ்ளவ் அருமையான கதை..எப்டி தவற விட்டேன் இதை?

திண்டுக்கல் தனபாலன் said...

உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2012/10/blog-post_13.html) சென்று பார்க்கவும்...

Post a Comment