
சில நாட்களாகவே என் வாழ்க்கையில் நடந்த ஒரு சம்பவம் ஒன்றைப் பகிர்ந்து கொள்ள நான் நினைத்திருந்த சமயத்தில், சக பதிவர் சாகம்பரி அவர்கள் "இனிய இன்னல்கள் வேண்டும்"என்று ஒரு பதிவு வெளியிட்டிருந்தார்.அவரது அந்த பதிவு என் வாழ்க்கை சம்பவத்தை
பதிவாக்க மேலும் என்னைத் தூண்டியது.எனவேதான் இந்த சுய புராணம்.
ஒருமுறை எனது கணவர் வேலை நிமித்தமாக வெளியூர் செல்ல வேண்டி இருந்தது.அதே சமயத்தில் எனது மாமனாரும் குடும்ப விஷயமாக
வெளியூர் பயணிக்க வேண்டிய நிர்ப்பந்தமாகி விட்டது.எனவே வீட்டில்
நான், எனது மாமியார் மற்றும் பெண் மட்டும் இருந்தோம்.பல முறை இம்மாதிரி தனித்திருந்திருக்கிறோம் என்றாலும் அந்த முறை மிகவும்
சிக்கலான ஒரு சூழல் உருவாக்கி விட்டது.
கணவரும் மாமனாரும் கிளம்பி சென்ற அன்று எனக்கு லேசாக
காய்ச்சல் அடிக்க ஆரம்பித்தது.வெறும் காய்ச்சல்தானே, ரெஸ்ட்
எடுத்தால் சரியாகி விடும் என நினைத்து இருந்து விட்டேன்.
ஆனால் அன்று மாலை காய்ச்சல் அதிகமாகி விடவே வழக்கமாக
செல்லும் மருத்துவமனை வரை செல்ல இயலாமல் பக்கத்தில் ஒரு
டாக்டரிடம் சென்றேன்.அவர் கொடுத்த மருந்துகளையும்(அது ஓவர் டோசேஜ் என்று பின்னர்தான் தெரிந்தது) வாங்கி
வந்து வேறு ஆகாரம் எதுவும் சாப்பிட இயலாமல் வெறும் பிரட்
சாப்பிட்டு விட்டு மருந்தும் சாப்பிட்டு விட்டு படுத்துக் கொண்டேன்.
நடு இரவு இரண்டு மணி அளவில் பசிக்க ஆரம்பிக்கவே ஏதாவது சாப்பிடலாம் என எழுந்தேன்.படுக்கை அறையிலிருந்து சமையல்
அறை வரை வந்தது மட்டுமே எனக்கு நினைவுள்ளது.அவ்வளவுதான்.
அதன் பின் எதுவும் நினைவில்லை.பின் எனக்காகவே எப்பொழுது
சுய நினைவு வந்ததோ அப்பொழுது கண் விழித்துப் பார்த்தால் நான் கிச்சனில் கீழே விழுந்து கிடந்தேன்.சரி நாம் மயக்கமாகி விட்டோம் போல.
எழுந்து ஏதாவது சாப்பிட்டு படுத்துக் கொண்டால் சரியாகி விடுமென
நினைத்து எழ முயற்சித்தால் என்னால் அசையவே இயலவில்லை.
ஒரு வழியாக கொஞ்சம் கொஞ்சமாக உருண்டு நகர்ந்து வந்து படுக்கை
அறையில் தூங்கிக் கொண்டிருந்த பெண்ணை எழுப்பி விஷயம் சொல்லி
ஹார்லிக்ஸ் கொடுக்கச் சொன்னேன்.அவள் என் மாமியாரை
சக்கர நாற்காலியில்(நடக்க இயலாதவர்கள்) அமர்த்தி அழைத்து வந்து
என்னருகில் துணைக்கு வைத்து விட்டு ஹார்லிக்ஸ் கரைத்து
எடுத்து வந்தாள். அதை குடிக்க எழுந்த போதுதான் கீழே விழுந்ததில் எனக்கு தலையில் பலமாக அடிபட்டு ரத்தம் வழிந்து கொண்டிருப்பது தெரிய வந்தது.(பின் தலை சிலிண்டரில் அடி வாங்கி வெட்டு விழுந்து விட்டது)
பின்னர் என் மகள் அவசர அவசரமாக ஈரத்துணி எடுத்து வந்து தலையில்
வைக்க என் மாமியார் தன்னால் எதுவும் செய்ய இயலவில்லையே
என்று பரிதவிக்க, உடனடியாக என் அக்காவிற்கு போன் செய்து வருமாறு கூறினார்கள்.அக்காவும் அத்திம்பேரும் காரில் அவசர அவசரமாக
வந்தனர்.அதற்குள் ரத்தம் வெளியேறிக் கொண்டிருந்த காரணத்தால் மேல் வீட்டில் இருக்கும் பெண்மணியை வரவழைத்து என் பெண்ணை
மாமியாருக்கு துணையாக வைத்து விட்டு ஆட்டோ பிடித்து 24 மணி நேர
ஹாஸ்பிடல் சென்றோம்.என் அக்கா அத்திம்பேரும் அங்கு வந்து விட
தலையில் தையல் போடப்பட்டது.ரத்தம் வெளியேறிய காரணத்தால் ட்ரிப்ஸ் இறக்கி காய்ச்சலை குறைத்து வீட்டிற்கு அனுப்பினர்.
அதன் பின் அக்கா, நாத்தனார், என் மன்னி என்று ஒருவர் மாற்றி ஒருவர்
வீட்டையும் என்னையும் கவனித்து நிலைமை சீரானது.நடு இரவில்
கார் வைத்துக் கொண்டு வந்த அக்கா அத்திம்பேர் , ஆட்டோ பிடித்து அழைத்து சென்ற
மேல் வீட்டு பெண்மணி இருவருமே இரவென்றும் பாராமல் நாட்டு நடப்பை பற்றிய பயத்தை ஒதுக்கி வைத்து அன்று என் உயிர் காத்தனர்.
இவர்களை எல்லாம் வரவழைத்த மாமியார், வரும் வரை திருதிரு என்று விழிக்காமல் நிலைமையை சீராக கையாண்ட எனது மகள் மற்றும்
அந்த இரவையும் அன்று உதவியவர்களையும் நான் என்றும் மறக்க மாட்டேன்.
அந்த இரவையும் அன்று உதவியவர்களையும் நான் என்றும் மறக்க மாட்டேன்.
சாகம்பரி அவர்கள் கூறியது போல, பாரதிக்கு எப்படி எல்லா உறவுகளும்
கண்ணன்களோ அப்படி நமக்கும் எல்லா உறவுகளும் கண்ணன்களே.
"இன்னும் இனிய இன்னல்கள் வேண்டும் என் இனிய உறவுகளைக் கண்டு கொள்ள" என்ற சாகம்பரி அவர்களின் வாக்கியத்தை நான் பரிபூரணமாக
உணருகிறேன்.
பல நாட்களாக பகிர எண்ணி இருந்த இந்த பதிவை சரியானபடி
வெளிக் கொணர்ந்தததற்கு சாகம்பரி அவர்களுக்கு நன்றி கூறிக் கொள்கிறேன்.நன்றி சாகம்பரி.
"காணும் உறவெல்லாம் கண்ணனே".
30 comments:
முதல் மழை?
சரியான நேரத்தில் சாதூர்யமாக நடந்து கொண்ட உங்கள் மகளை பாராட்டாமல் இருக்க முடியவில்லை. அழகான கருத்துடன், அருமையான பதிவு தந்ததற்கு வாழ்த்துக்கள்!
>>>>"இன்னும் இனிய இன்னல்கள் வேண்டும் என் இனிய உறவுகளைக் கண்டு கொள்ள"
மனிதன் ஹாஸ்பிடலில் படுத்திருக்கும்போதும், தன்னால் முடியாமல் படுத்திருக்கும்போதும்தான் தன்னை யாரெல்லாம் உண்மையாக நேசிக்கிறார்கள் என்பதை உணர ஆரம்பிக்கிறான்..
நமக்கு ராஜியின் அனுபவத்திலிருந்து கிடைக்கும் படிப்பினை - மாத்திரை சாப்பிடும்போது வெறும் வயிற்றிலோ,கொஞ்சம் மட்டும் சாப்பிட்ட நிலையிலோ இருக்கக்கூடாது.. நல்லா சாப்பிடனும்...
படித்து வரும்போதே ஏதோ இன்று இப்போது என் கண்முன் நிகழ்வதுபோல என் மனசு பதறியது.
கடைசியில் ”பல நாட்களாக பகிர எண்ணி இருந்த இந்த பதிவை” என்பதைப்படித்ததும் தான் சற்றே சமாதானம் அடைந்தது.
நாம் ஒவ்வொருவரும், அநேகமாக ஒருவரை ஒருவர் நேரில் சந்திக்காமலேயே, எங்கெங்கோ இருப்பினும், படித்ததும் ஒரு வருத்தம் ஏற்படுகிறது என்றால் ....
’காலத்தினால் செய்த உதவிகளால்’ அன்று உங்களை
மகிழ்வித்த அவர்கள் அனைவருமே உங்களுக்கு "காணும் உறவெல்லாம் கண்ணனே" என்று தோன்றுவதில் வியப்பேதும் இல்லை தான்.
தங்களின் சின்னக்குழந்தை, அவள் ஹார்லிக்ஸ் கரைத்துக்கொடுத்தது தான் எனக்கு பெரிய விஷயமாகத் தோன்றுகிறது.
குட்டிராஜிக்கு(பெயர்?)என் அன்பான வாழ்த்துக்கள்.
உண்மைதான் ராஜி. எல்லா உறவுகளும் கண்ணனே. சமயத்தில் உதவும் நட்புக்களும் அப்படித்தான்
உண்மைதான் ராஜி. எல்லா உறவுகளும் கண்ணனே. சமயத்தில் உதவும் நட்புக்களும் அப்படித்தான்
ஆபத்து சமயத்தில் உடனே கிடைக்கும் உதவி 'அவன்' அனுப்புவதுதான் ராஜி. பக்காவா ப்ளான் போட்டு வைப்பதில் கில்லாடியாச்சே!
உறவை விட்டு வெகுதூரத்தில் இருக்கும் என்னைப்போன்றவர்களுக்கு நட்புதான் உறவுப்பா.
உங்க பொண் நல்லா இருக்கணும். என்னமாதிரி சமயோஜிதமா செயல்பட்டு இருப்பதை மனமாரப் பாராட்டுகிறேன்.
ஓவர்டோஸ் கொடுத்த வைத்தியரிடம் நடந்ததைச் சொன்னீர்களா ராஜி. மருந்து உங்களை மயக்கம் போட வைத்திருக்கிறதே.
இருந்தும் நீங்கள் வளம் பெற்று மீண்டது நிம்மதியாக இருக்கிறது.
அந்த நெருக்கடி சம்யத்தில் அனைவரும் நிதானமாக நடந்து கொண்டதே நீங்கள் மீண்டதற்குக் காரணம்.
நலமாக இருங்கள் மா.
துன்பங்கள், சோதனைகள், பிரச்சினைகள்தான் நல்ல, அன்பான மனிதர்களை உலகத்தில் இனம் காண வைக்கிறது. அம்மாவை அழகாக பார்த்துக்கொண்ட உங்கள் மகளுக்கு என் இனிய வாழ்த்துக்கள். ஆனாலும் இது ரத்த பந்தம். எந்த பந்தமுமில்லாது, மனம் பதற உதவுவதற்கு மனம் நிறைய கருணை வேண்டும். அதுவும் உங்களுக்குக் கிடைத்திருக்கிறது! அவர்களுக்குத்தான் முதலில் நன்றி சொல்ல வேண்டும்.
பாரதியின்
“ துன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்
அன்பில் அழியுமடி! கிளியே! அன்பிற்கழிவில்லை காண்!!”
என்ற வரிகள்தான் நினைவில் எழுகின்றன!!
தக்க சமயத்தில் உதவியுள்ளார்கள்.இது போன்ற சூழலில் உ்தவுபவர்கள் கடவுள் ரூபமாகக் கருதலாம்.சரியா?.
கால் முடியாதவர்கள் திறமையாகவும் தைரியமாகவும் இந்தச் சூழலை சந்தித்ததர்க்கு மிகப் பெரியதாய் பாராட்டவேண்டும்.
உங்கள் பெண்ணிற்கும் ஒரு சபாஷ்.
"நமக்கு கஷ்டம் வரும் போது தான் நம்ம மேல யாருக்கு அக்கறை இருக்குனே தெரிஞ்சிக்க முடியுது இல்ல?!" - உன்னாலே உன்னாலே படத்துல வர சிறந்த வசனங்களில் இதுவும் ஒன்று.
உண்மை தான். எல்லா தத்துவங்களும், தர்கங்களும் நம் வாழ்விலேயே நடந்து விடுவதில்லை. அதனால் தான் என்னவோ சக அனுபவ பகிர்வு ஆர்வமாய், படிப்பினையாய் இருக்கிறது.
நட்புக்கும் உண்டோ அடைக்கும் தாழ்....
நன்றி ராஜி. என்னுடைய கருத்தை இன்னும் வலுமிக்கதாய் ஆக்கியதற்கு. இது போன்ற சம்பவங்கள் நடக்கும் போது சிரமப்பட்டாலும், நம்மை முழுமையாக மீட்டெடுத்து அன்பின் மொழியை புரிய வைக்கும். என் கணிப்பின்படி நீங்களும் ஒரு கண்ணனாக மாறி இருப்பீர்கள். அதுதான் இனிய இல்லறத்தின் பெருமை
ஓ :( நல்ல வேளை எல்லாரும் சமயத்திற்கேற்றவாரு எல்லாமே செய்து இன்னலைத் தாண்டிவர உதவினார்கள்.
நானுமொருமுறை இப்படி விழுந்து வைத்து எழுந்தபின் நான் விழுந்த சத்தத்தைத்தான் கனவில் கேட்டமாதிரி உணர்ந்தேனென்று கண்டுகொண்டேன். ஒன்னுமில்லை கண்ணாடி மட்டும் கொஞ்சம் வளைந்து விட்டது:)
எல்லா உறவுகளும் கண்ணனே
தக்க சமயத்தில் உதவுபவர்கள் அனைவரும் கடவுளுக்கு சமமானவர்கள்
மிகவும் நெகிழ்ச்சியானபதிவு ராஜி,அந்தசமயத்தில் உதவி செய்தவர் எல்லார் மனதிலுமே ஆண்டவன் புகுந்து ஆட்டிவைத்திருக்கிரான்.ஆட்டுவித்தால் யாரொருவர் ஆடாதாரே கண்ணா?
arputhamaana pathivu raaji.
பெண்ணே தாயாகி உதவிய பாங்கு .
அவருக்குப் பாராட்டுக்கள்.
பல மாதங்களுக்கு முன் ஒரு முறை இப்படித்தான் டாக்டர் கொடுத்த ஹெவி டோஸில் வாந்தி.. தலை சுற்றல்.. நல்ல வேளையாக முதல் தடவை எடுத்ததோடு நிறுத்தி விட்டு மறு நாள் போனால் அப்படியே அந்த மருந்துகளை நிராகரித்து புது மருந்து எழுதிக் கொடுத்தார்! ம்ம் என்ன சொல்ல!
உடன் நின்று உதவிய நல்ல உள்ளத்திற்கு நமஸ்காரம்.
பாரதிக்கு எப்படி எல்லா உறவுகளும்
கண்ணன்களோ அப்படி நமக்கும் எல்லா உறவுகளும் கண்ணன்களே.
"இன்னும் இனிய இன்னல்கள் வேண்டும் என் இனிய உறவுகளைக் கண்டு கொள்ள"
@சி பி செந்தில்குமார்
ஆமாம்.துன்பம் வரும்பொழுதுதான் உறவு,நட்பின்
உன்னதம் அறிய முடியும்
@வை கோபாலகிருஷ்ணன் சார்
தங்களின் அக்கறைக்கும் வாழ்த்திற்கும் நன்றி சார்
@எல் கே
ஆமாம் சார்
@துளசி கோபால்
எல்லாம் 'அவன்' கருணைதான்.
தாங்கள் கூறுவது போல் நட்பும் உறவுதான்.
பெண்ணை வாழ்த்தியதற்கும் பாராட்டியதற்கும்
நன்றி
@வல்லிசிம்ஹன்
தங்களின் அக்கறைக்கு மிக்க நன்றி
@மனோ மேடம்
பந்தமற்ற மனிதர்கள் உதவுவது அவர்களது
உயர்ந்த உள்ளத்தை தெரிவிக்கின்றது.
அதை அடைய நாமும் புண்ணியம் செய்திருக்க வேண்டும்.
ஆஹா!பாரதியின் அருமை வரிகள்
@திருமதி பி எஸ் ஸ்ரீதர்
மிக சரியாக சொன்னீர்கள் ஆச்சி
@ஆர் வி எஸ்
அவர்களிடம் உங்கள் பாராட்டுக்களை
சேர்ப்பித்து விட்டேன் சார்
@நாகசுப்ரமணியன்
ஆமாம்.பிறரது அனுபவம் கூட நமக்கும் படிப்பினையே
@ மனோ நாஞ்சில் மனோ
கருத்துக்கு நன்றி
@சாகம்பரி
தங்கள் கருத்து ஏற்கன்வே வலு மிக்கதாகவே
உள்ளது.நல்ல கருத்துக்கள் அதற்கென உள்ள
வலுவுடன் கூடியவைகளாகவே உள்ளன.
அனைவரும் கண்ணனே.நான் கண்ணனாக இருப்பது
பற்றி அதை உணர்ந்தவர்கள் கூறுவதுதான் சரியாக இருக்கும் சாகம்பரி
@முத்துலெட்சுமி
ஆமாம்.அவர்களை (முக்கியமாக மாடி வீட்டு பெண்மணி)
என்றும் நான் மறக்க மாட்டேன்
@ஆர் வி சரவணன்
ஆமாம்
@லக்ஷ்மிமா
உண்மைதான் லக்ஷ்மிமா
@வித்யா சுப்ரமணியம் மேடம்
நன்றி மேடம்
@இராஜராஜேஸ்வரி
தாயுமானவள்.பாராட்டுக்களை கூறி விட்டேன்.நன்றி
@ரிஷபன்
சமயத்தில் இது போல எல்லாம்
நடந்து விடுகிறது.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
@ரத்னவேல்
அர்த்தமுள்ள வாக்கியம்
மிக நல்ல பதிவு. நீரோடை போன்ற நடை, எளிய தமிழ், மனதை தாக்கிய பதிவு.
நம்மை பலவீனன்... எனும் உணரும் தருணமே நமது மிகப் பெரிய பலம்.
ஆம், ஒரு வீரன்,உலகில் யாராலும் வெல்ல முடியாதவன், பலசாலி, என்றாலும் கல் தடுக்கி கீழே விழுந்தால் கூட போதுமானது, அவனை பலவீனன் என உணர. ஒரு துளி ரத்தம், ஒரு நொடி சுவாசமில்லாமை இதெல்லாம் கூட நம்மை சாய்த்து விடும் வல்லமை பெற்றது.
நம் பலம் என்றெதுவுமில்லை, எனும் போது தான் வாழ்வின் அர்த்தம் புரிகிறது. உறவின் அவசியம் உணர்கிறது....
கூடி வாழும் இயல்பினன் மட்டுமல்ல.... மனிதன், அவன் கூடியே வாழ இயன்றவன்.
ஓவர்டோஸாலதான் மயக்கம் போடற அளவுக்கு அதிகப்படி பிரச்சினையாயிருக்கும் போலிருக்கு.. சமயோஜிதமா நடந்துக்கிட்ட உங்க மாமியாரையும், பொண்ணையும் கண்டிப்பா பாராட்டணும்..
சமயோஜிதமாக நடந்து கொண்ட மகளுக்கும், மாமியாருக்கும் பாராட்டுகள்.
ஓவர் டோஸ் தான் காரணமாக இருக்கலாம்.
எனக்கும் உடல்நிலை சரியில்லாத போது ( கைக்குழந்தை வைத்திருந்த போது) எப்படியாவது யாராவது உதவுவார்கள்.
தக்க சமயத்தில் உதவும் நட்புக்களும் இறைவனின் அம்சங்களே! தெய்வம் மனுஷ்ய ரூபேண...
நல்ல பதிவுங்க.உங்க மகளுக்கும் மாமியாருக்கும் பாராட்டுக்கள். //"இன்னும் இனிய இன்னல்கள் வேண்டும் என் இனிய உறவுகளைக் கண்டு கொள்ள"// நூற்றில் ஒரு வார்த்தை!
:( தக்க சமயத்தில் சமயோசிதமாய் நடந்துகொண்ட உங்கள் மகளும் மாமியாரும் பாராட்டப்பட வேண்டியவர்கள். மாத்திரைகள் எடுத்துக்கொள்ளும் போது பிடிக்கிறதோ இல்லையோ, நல்ல உணவு எடுத்துக் கொள்ள வேண்டியது மிகவும் அவசியம் என்பது மீண்டும் மீண்டும் சொல்லப்படும் ஒரு விஷயம் - நம்மில் பலர் கடைப்பிடிக்காததும் கூட!
eppa akka idhu nadanthathu?
Post a Comment