Thursday, November 10, 2011

ஒரு பயணத்தின் நம்பிக்கை


 Copyright  Bob Jones @ ImagineWales.com


ரயில் கிளம்ப இன்னும் பதினைந்து நிமிடங்களே இருந்தது.ஜெயராமன் மணிக்கட்டைத் திருப்பி கடிகாரத்தைப் பார்த்தார்.சாமான்களை அடுக்கி வைத்தாகி விட்டது.எதற்கும் இன்னொரு தண்ணீர் பாட்டில் வாங்கி வைத்துக் கொள்ளலாமா என்று யோசித்தார்.

"திலகம்! தண்ணி போதுமா?இல்ல ஒரு பாட்டில் வேணா வாங்கிண்டு வரட்டுமா?"

"இதுவே போதுங்க.நம்ம ரெண்டு பேருக்குமே மிடில் பர்த் போட்டிருக்கே
லோயர் கிடைச்சா வசதியாருக்குமேன்னு பாத்தேன்"

"பாக்கலாம்.எதிர்ல இன்னும் யாரையும் காணோமே.வந்தா மாத்திக்கறாங்களான்னு கேட்டுப் பாக்கலாமே"

"சார்!கொஞ்சம் காலை நகத்திக்கறீங்களா?"  என்று கேட்டுக் கொண்டே இருபதுகளின் தொடக்கத்தில் இருந்த ஒரு பெண் உள்ளே நுழைந்து சாமான்களை அடுக்கினாள்.திலகம் கழிப்பறை பக்கம் சென்றிருக்க அந்த பெண்ணுக்கு தொந்தரவாக இருக்க வேண்டாமென நினைத்து வாசல் பக்கம் வந்து காற்று வாங்கினார். திரும்பவும் வந்த போது  ஒரு இளளைஞனுடன்அமர்ந்திருந்தாள்.

அவர்கள் வந்து அமர்ந்த சில நொடிகளில்  சார்மினார் தன் குரலெழுப்பி
தன் புறப்பாட்டைத் தெரியப் படுத்தி மெதுவாக நகர ஆரம்பித்தது.

சாமான்களை சரி செய்வது போன்ற எல்லா ஏற்பாடுகளையும் அந்த பெண்ணே
செய்ய அந்த இளைஞன் தனக்கும் அதற்கும் எந்த சம்பந்தமும் இல்லாதது போல் ஒரு புத்தகத்தை பிரித்து வைத்துக் கொண்டான்.

அவள் அவனைப் பார்த்து தெலுங்கில் ஏதோ மாட்லாட அவன் தலையை வேண்டாமென்பது போல் இருபுறமும் அசைத்தான்.

அவள் , தூய்மைக்கும் தனக்கும் சற்றும்  சம்பந்தமில்லாத ரயிலின் கழைவறைப் பகுதியை நோக்கி நகர்ந்தாள்.

"சார்!"  என்ற ஜெயராமனின் அழைப்பிற்கு அவன் நிமிர்ந்தான்.

"எங்களுக்கு ரெண்டு பேருக்குமே மிடில்தான் கிடைச்சிருக்கு.உங்களுக்கு லோயர்தான.கொஞ்சம் மாத்திக்க முடியுமா?என் மனைவி கொஞ்சம் உடம்பு முடியாதவ.ப்ளீஸ்.."

அவன் பதிலற்ற பார்வை ஒன்றைத் தந்து விட்டு புத்தகத்துள் தலையை
கவிழ்ந்து கொண்டான்.

"ஒருவேளை தமிழ் தெரியாதோ என்னவோங்க.தெலுங்கா இருக்கும்.அந்த பொண்ணு நம்ம கிட்ட தமிழ் பேசிச்சே தவிர அவர் கிட்ட தெலுங்கிலதான என்னமோ கேட்டுச்சு.நீங்க வேணா இங்க்லீஷ்ல கேட்டுப் பாருங்களேன்.படிச்சவர் மாதிரிதான் தெரியறாரு"

திலகத்தின் பேச்சு சரியாகப் பட அவர் மீண்டும் அவனிடம் இங்லீஷில் கேட்டார்.அவன் நிமிர்ந்து பார்த்து தெளிவான தமிழ் உச்சரிப்பில்,  "என் வொய்ஃப் வரட்டும்.கேட்டுச் சொல்றேன்" என்றான்.

இதுக்கு எதுக்கு அவள் வந்த பிறகு சொல்ல வேண்டும்.ஒருவேளை சரியான
பெண்டாட்டி தாசனோ.அவள் சொல்லாமல் இவன் எதுவும் செய்ய மாட்டான் போல என ஜெயராமன் தன்னுள் நினைத்துக் கொண்டார்.

அவள் வந்த பிறகு அவன் அவளிடம் இவர்களை காட்டி சுந்தரத் தெலுங்கில்
சம்பாஷிக்க அவள் இவர்களைப் பார்த்து சற்று மெலிதான புன்னகையுடன்
"நீங்க ரெண்டு பேருமே லோயர் பர்த்ல படுத்துக்கோங்க சார்.நாங்க ரெண்டு பேரும் மிடில் பர்த்ல படுத்துக்கறோம்" என்றாள்.

"இல்லைம்மா.என் வொய்ஃப்க்கு மட்டும் லோயர் இருந்தா போதும்.நான் மிடில் பர்த்ல படுத்துப்பேன்மா.நீயும் ஏன் சிரமப்படணும் பாவம்.நீ லோயர்லயே படுத்துக்கலாம்மா"

"இல்லை சார்.அவர் மிடில் பர்த்ல படுத்துக்கறதா இருந்தா எனக்கும் மிடில்தான் வசதிப்படும்.நீங்க லோயர் யூஸ் பண்ணிக்கங்க.எனக்கு ஓக்கேதான்"

"சரிம்மா.ரொம்ப தேங்க்ஸ்மா"


சற்று நேரம் கழித்து ஜெயராமனும் திலகமும் இரவுச்சாப்பாடை முடித்துக் கொண்டனர்.எதிரில் அந்த இளைஞன் புத்தகத்துள் மூழ்கி இருக்க அவள் அவனுக்கு ஊட்டி விட ஆரம்பித்தாள்.அப்படி என்ன புத்தக மோகமோ? இதெல்லாம் வீட்டோடு வைத்துக் கொள்ளக் கூடாதா? என்று நினைப்பை ஜெயராமனால் தடுக்க இயலவில்லை.

இரவு படுக்கும் முன் திலகம் மீண்டும் கழிப்பறை உபயோகிக்க சென்று விட பால் ... பால்... என்ற விறபனைக் குரல் கேட்டு ஜெயராமன் "இரண்டு பால்" என
அழைத்தார்.அவர் அழைப்பை காதில் வாங்காமல் சென்ற பால் விற்பனையாளர் பின்னால் சென்று இரண்டு பால் வாங்கி வந்தார்.

இருவரும் வந்த போது அந்த இளைஞன் மிடில் பர்த்தில் படுத்திருந்தான்.
பால் அருந்திய சற்று நேரத்துக்கெல்லாம் திலகம் ஷுகர் மாத்திரை சாப்பிடுவதைப் பார்த்து அவன் "எதுக்கு மாத்திரை சாப்பிடறீங்க?" என்று கேட்டான்.

'எனக்கு ஷுகர் இருக்குப்பா அதான்.ஏன் கேக்கறீங்க தம்பி?"

"ஒண்ணுமில்ல.உடம்பை ஜாக்கிரதையா பாத்துக்கோங்க" என்றான் சம்பந்தமில்லாமல்.

தூக்கம் கண்ணைச் சுழற்ற மூத்த தம்பதியர் கீழ் பர்த்தில் எதிரெதிரே படுத்தனர்.

விடியலில் விழித்து வழக்கமாகி விட்ட ஜெயராமனும் திலகமும் சீக்கிரம் எழுந்து தங்கள் வேலைகளை முடித்து காலைக் காப்பிக்காக எதிர்பார்த்து அமர்ந்திருக்க ,  அந்த இளைஞன் விழித்த பிறகும் எழாமல் படுத்தே இருந்தான்.

சற்று நேரத்துக்கெல்லாம் எழுந்து விட்ட அந்தப் பெண், "எழுந்துட்டீங்களா?என்னை எழுப்பக் கூடாதா?"  என்று கேட்ட வண்ணம் அவன்
அருகே சென்று அவன் இறங்க உதவினாள்.கஷ்டப் பட்டு கீழே இறங்கிய அவன் அவளது உதவியுடன் சாய்த்து  சாய்த்து கழிவறைப் பக்கம் நடந்தான்.

அதிர்ச்சியில் உறைந்த ஜெயராமன், திலகத்திடம் ஒரு சின்ன சிரிப்பை உதிர்த்து "குட்மார்னிங்" என்று கூறியபடியே அவனுடன் சென்றாள் அந்தப் பெண்.

திரும்பி வந்து அமர்ந்த அவர்களிடம் திலகம் மனசு தாங்காது பேச்சை ஆரம்பித்தாள்." ஏம்மா! இப்பிடி இருக்கு இவருக்குன்னு ஒரு வார்த்தை சொல்லிருந்தீங்கன்னா நாங்க உங்களை கஷ்டப் படுத்திருக்க மாட்டோமேம்மா?"

"அப்படி அவர் மேலே அனுதாபம் காட்டறது அவருக்குப் பிடிக்காது.ஆனா மேலே ஏற என் உதவி வேணுங்கறதால என் கிட்ட கேட்டு சொல்றேன்னு சொன்னார்.நீங்க மனசு வருத்தப் பட வேண்டாம்மா"

"கடவுளே!அதனாலதான் நீங்க ராத்திரி ஊட்டி விட்டீங்களா?எப்படி இந்த மாதிரி ஆச்சு?கேக்கறது உங்களுக்கு வருத்தமாருந்தா சொல்ல வேண்டாம்மா"

"நாங்க வருத்தப் பட்ட காலமெல்லாம் முடிஞ்சு போச்சும்மா.இப்ப எவ்வளவோ தேவல" என்று அவன் ஆரம்பித்தான்.

"வேலைக்குப் போயிட்டு வரும்போது நடந்த ஒரு விபத்துல இவருக்கு வலது கை கால்ல உணர்வே இல்லாம போயிடிச்சி.இரண்டு வருஷமாப் படாத கஷ்டங்கள் இல்லை.இப்பத்தான் கொஞ்சம் கொஞ்சமா முன்னேற்றமாகியிருக்கு.இப்ப கொஞ்சம் நடக்கறார்.ஆனா கை இன்னும் நல்லா உபயோகிக்க முடியலை.மெதுவாதான் சரியாகும்னு டாக்டர் சொல்லி இருக்கார்.அவர் இந்த அளவு ஆனதே எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு.சரியாகிடும்னு நம்பறோம்"

சிரிப்புடன் கலந்த நம்பிக்கை ஜெயராமனுக்கு பிரமிப்பைத் தந்தது.இதுதான் பெட்டர் ஹாஃப் என்பதா? இல்லை.இது பெஸ்ட் ஹாஃப் அல்லவா? இன்னும் கேட்டால் ஹாஃப் என்று சொல்வதைவிட முழுமை என்றே கூறலாம்.இந்த அளவு அவன் நடப்பதற்கு அந்தப் பெண் இந்த இரண்டு வருடங்களில் எத்தனை உழைத்திருக்க வேண்டும்?அவன் எந்த அளவு ஒத்துழைப்பு தந்திருக்க வேண்டும்?

துவண்டு விடாமல் துடிப்பாய் நிமிர வைத்த நம்பிக்கை அவர்கள் இருவர் கண்ணிலும் ஒளிர்ந்து தனக்குள்ளும் பாய்வது போல் உணர்ந்தனர் மூத்தவர்கள்.



33 comments:

வை.கோபாலகிருஷ்ணன் said...

//இதுதான் பெட்டர் ஹாஃப் என்பதா? இல்லை.இது பெஸ்ட் ஹாஃப் அல்லவா? இன்னும் கேட்டால் ஹாஃப் என்று சொல்வதைவிட முழுமை என்றே கூறலாம்.இந்த அளவு அவன் நடப்பதற்கு அந்தப் பெண் இந்த இரண்டு வருடங்களில் எத்தனை உழைத்திருக்க வேண்டும்?அவன் எந்த அளவு ஒத்துழைப்பு தந்திருக்க வேண்டும்?//

நல்லதை முழுமையாகச் சொல்லும் நல்ல அருமையானதொரு பதிவு.

இராஜராஜேஸ்வரி said...

ஹாஃப் என்று சொல்வதைவிட முழுமை என்றே கூறலாம்.இந்த அளவு அவன் நடப்பதற்கு அந்தப் பெண் இந்த இரண்டு வருடங்களில் எத்தனை உழைத்திருக்க வேண்டும்?அவன் எந்த அளவு ஒத்துழைப்பு தந்திருக்க வேண்டும்?

துவண்டு விடாமல் துடிப்பாய் நிமிர வைத்த நம்பிக்கை அவர்கள் இருவர் கண்ணிலும் ஒளிர்ந்து தனக்குள்ளும் பாய்வது போல் உணர்ந்தனர் மூத்தவர்கள்./

முழுமையான நிறைவான பகிர்வுக்குப் பாராட்டுக்கள்..

Mahi said...

மனதைத் தொட்ட கதை!அருமை!

Rathnavel Natarajan said...

அருமையான கதை.
வாழ்த்துக்கள் அம்மா.

K.s.s.Rajh said...

மனதை வருடும் கதை வாழ்த்துக்கள் மேடம்

ரிஷபன் said...

இப்படி ஏதாச்சும் இருக்கும்னு மனசு சொல்லிச்சு. ஆனா கதையோட ஓட்டத்துல அப்படியே லயிச்சு போயிட்டேன்.
பிரியம் இருந்தா வாழ்க்கை எத்தனை அர்த்தம் உள்ளதாகி விடுகிறது.
சபாஷ். நல்ல தீம்.

சாகம்பரி said...

இது போன்ற புரிந்து கொள்ளல்கள் ஒரு சிக்கலான நேரத்தில்தான் வெளிவரும். நல்ல நடை. அருமையான கதை

வெங்கட் நாகராஜ் said...

மிக அருமையான கதை... புரிந்து கொள்வதில் தானே வாழ்க்கையின் சந்தோஷமே இருக்கிறது....

நல்ல கதை பகிர்வுக்கு மிக்க நன்றி.

சாந்தி மாரியப்பன் said...

//இதுதான் பெட்டர் ஹாஃப் என்பதா? இல்லை.இது பெஸ்ட் ஹாஃப் அல்லவா? இன்னும் கேட்டால் ஹாஃப் என்று சொல்வதைவிட முழுமை என்றே கூறலாம்.இந்த அளவு அவன் நடப்பதற்கு அந்தப் பெண் இந்த இரண்டு வருடங்களில் எத்தனை உழைத்திருக்க வேண்டும்?அவன் எந்த அளவு ஒத்துழைப்பு தந்திருக்க வேண்டும்?//

ரொம்பச்சரியா சொன்னீங்க..தன் மேல் பிரியம் காட்டப்படுவதைப் புரிஞ்சுக்கவும் ஒரு தனி மனசும் புரிதலும் வேணும். அப்படி இருந்தாத்தான் அது முழுமை.

கதை ரொம்ப அருமையா இருக்கு.

JesusJoseph said...

நல்ல இருக்கு

நன்றி,
ஜோசப்
http://www.tamilcomedyworld.com

குறையொன்றுமில்லை. said...

மிக அருமையான கதை... புரிந்து கொள்வதில் தானே வாழ்க்கையின் சந்தோஷமே இருக்கிறது....


ரொம்ப நல்லா சொல்லி இருக்கீங்க. வாழ்த்துக்கள்.

sathishsangkavi.blogspot.com said...

அருமை... ரசித்தேன் உங்கள் வரிகளை....

Anonymous said...

மனதைத் தொட்ட கதை.

-சே.குமார்
Http://vayalaan.blogspot.com

SURYAJEEVA said...

கதையாங்க இது?

kaialavuman said...

வாவ்! அருமையான கதை.

ஜீவி said...

கதையைப் படித்து முடித்ததும் ஒரு முழுமை கிடைத்தது. ஆற்றோட்டமாக கதைப் போக்கு நழுவிச் செல்ல பார்த்துப் பார்த்து சீராக எழுதியிருப்பதைப் பாராட்டத் தோன்றியது.

//இரவு படுக்கும் முன் திலகம் மீண்டும் கழிப்பறை உபயோகிக்க சென்று விட பால் ... பால்... என்ற விறபனைக் குரல் கேட்டு ஜெயராமன் "இரண்டு பால்" என
அழைத்தார்.அவர் அழைப்பை காதில் வாங்காமல் சென்ற பால் விற்பனையாளர் பின்னால் சென்று இரண்டு பால் வாங்கி வந்தார்.

இருவரும் வந்த போது அந்த இளைஞன் மிடில் பர்த்தில் படுத்திருந்தான்.//

கதையின் போக்கில் இயல்பாக வரும் இந்த இடம்,
'சஸ்பென்ஸை' சிறப்பாக மறைத்து லாகவமாக எழுதப்பட்டமைக்குச் சான்று.

வாழ்த்துக்கள்.

சுந்தர்ஜி ப்ரகாஷ் said...

சபாஷ் ராஜி.

பாம்பின் கால் பாம்பறியும் என்பதுபோல அந்த இரு இளையவர்களின் பாத்திரத்திலும் ஏதோ ஒரு விஷயம் இருக்கிறது என்பதை யூகிக்க வாய்ப்பிருந்தாலும் சரளமாகச் சொன்ன மொழிக்கு மீண்டும் ஒரு சபாஷ்.

MANO நாஞ்சில் மனோ said...

அட கதை செமையா வந்துருக்கே வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்...!!!

Yaathoramani.blogspot.com said...

அருமையான கதை
சொல்லிச் செல்லும் விதமும்
முடிவும் மிக மிக அருமை
தொடர வாழ்த்துக்கள்
த.ம 9

Priya said...

அருமையான கதை....ரசித்து படித்தேன்!வாழ்த்துக்கள் மேம்!!!

Unknown said...

சூப்பர் கதை...அதிலும்

(அவள் , தூய்மைக்கும் தனக்கும் சற்றும் சம்பந்தமில்லாத ரயிலின் கழைவறைப் பகுதியை நோக்கி நகர்ந்தாள்)

இது ரொம்ப உண்மைங்க:)

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

Great couple... great story... great write up Raji'kka..:)

வித்யா சுப்ரமணியம் (Vidya Subramaniam) said...

என் சொந்த சோகம் கொஞ்சம் நினைவுக்கு வந்தது.

middleclassmadhavi said...

En peRROr ninaivukku varukinRanar. Negizhvu nambikkai kathai! Naduvil kathai ippadi mudiyum enRu yuukikkka mudinthaalum, interesting reading! VaazhthukkaL.

raji said...

@வை கோபாலகிருஷ்ணன்

பாராட்டிற்கும் கருத்திற்கும் மிக்க நன்றி சார்

@இராஜராஜேஸ்வரி மேடம்

வருகைக்கும் கருத்திற்கும் நன்றி மேடம்

@Mahi

நன்றி

@Rathnavel sir

பாராட்டிற்கும் வாழ்த்திற்கும் நன்றி சார்

@K.s.s.Rajh

நன்றி

@ரிஷபன்

தங்களது 'சபாஷ்' இன்னும் எனக்கு ஊக்கம் தருகிறது.நன்றி

@சாகம்பரி மேடம்

உண்மைதான் மேடம்.கருத்திற்கும் பாராட்டிற்கும் நன்றி

@வெங்கட் நாகராஜ்

ஆமாம் சார்.பாராட்டிற்கு நன்றி


@அமைதிச்சாரல்

ஆமாம் சாந்தி.பிரியம் காட்டப்படுவதை புரிந்து கொள்ளும் மனமும் இருந்தால்தான் அது முழுமையடையும்.பாராட்டிற்கு நன்றி

@jesus joseph

நன்றி

@லக்ஷ்மிமா

கருத்திற்கும் வாழ்த்திற்கும் நன்றிம்மா

@சங்கவி

நன்றி

@சே குமார்

நன்றி

@suryajeeva

கருத்திற்கு நன்றி.தங்களுடைய கருத்தை இன்னும் தெளிவுபட கூறி இருக்கலாமே.

@வேங்கட ஸ்ரீனிவாசன்

நன்றி சார்

@கோபி ராமமூர்த்தி

நன்றி சார்

@ஜீவி

விரிவான பின்னூட்டத்திற்கும் வாழ்த்துக்களுக்கும் கதையை ரசித்தமைக்கும் நன்றிகள்.

@சுந்தர்ஜி

தங்களிடமிருந்து சபாஷ் வாங்கியது மகிழ்ச்சியாக இருக்கிறது ஜி.நன்றி

@Mano நாஞ்சில் மனோ

வாழ்த்துக்களுக்கு நன்றி

@ரமணி சார்

பாராட்டிற்கும் தமிழ்மண ஓட்டிற்கும் நன்றி சார்

@Priya

கதையை ரசித்தமைக்கு நன்றி.தங்கள் பின்னூட்டம் பார்த்த பிறகு தங்கள் வலைப் பக்கம் வந்து பார்த்தேன்.அந்த ஓவியம் பார்த்து அசந்து விட்டேன்.அங்கும் பின்னூட்டமிட்டுள்ளேன்.

@மழை

பாராட்டிற்கு நன்றி.


@அப்பாவி தங்கமணி

Thank you ATM

@வித்யா சுப்ரமணியம் மேடம்

இதன் மூலம் தங்களுக்கு மன வருத்தம் ஏற்பட்டதற்கு மன்னிப்பு வேண்டுகிறேன் மேடம்.சில நிகழ்வுகள் நம் வாழ்வின் துன்ப நினைவுகளை தூண்டி விடும்படி அமைந்து விடுகிறது.என்னால் அந்த நிலை தங்களுக்கு ஏற்பட்டமைக்கு மன்னித்து விடுங்கள் மேடம்

@மாதவி

இந்த கதையினால் தங்களுக்கும் ஏதோ ஞாபகப் படுத்திவிட்டேன் போலிருக்கிறது.

வாழ்த்துக்களுக்கு நன்றி மாதவி

Raja K said...

படித்து முடித்துவிட்டேன் என்ற உணர்வே இல்லை. ரயில் இன்னும் நிற்காமல் உங்கள் கதையில் செல்வது போல், என் மனமும் நிற்காமல் சென்றுக் கொண்டிருக்கிறது. ஆனால் அந்த கதைமாந்தர்களை மனதில் ஏற்றிக் கொண்டு, அருமை சகோதரி.

r.v.saravanan said...

அருமை கதை வாழ்த்துக்கள்

SURYAJEEVA said...

சத்தியமா படிக்கும் பொழுது எனக்கு கதை போல் படவில்லை... எதோ அருகில் உட்கார்ந்து நடந்ததை பார்த்தது போல் இருந்தது... உண்மை அனுபவம் என்று வேண்டுமானால் சொல்லலாமே தவிர கதை என்று சொல்ல முடியாது என்பதை தான் அப்படி கேட்டேன்... உடல் நிலை சரி இல்லாமல் இருந்ததால் பெரிய பெரிய கமன்ட் எழுத முடியவில்லை.. மன்னித்து கொள்ளுங்கள்

raji said...

@Tamilrajia K

கதை மாந்தர்களை மனதில் ஏற்றிக் கொள்ளும் வண்ணம் கதையில் ஒன்றியமைக்கு நன்றி

@r.v.saravanan

நன்றி

@suryajeeva

தங்கள் கருத்தைப் புரிந்து கொள்வதில் எனக்கு சிரமம் இருந்தது என்றுதான் கூறினேன் சார்.அதற்கு எதற்கு மன்னிப்பு போன்ற பெரிய வார்த்தைகள் எல்லாம்?உடல் நலம் சரியில்லாத போதும் எனது பதிவிற்கு வருகை தந்தமைக்கு நான்தான் நன்றி கூற வேண்டும்.

நம்மைச் சுற்றி நடக்கும் நிகழ்வுகளை நாம் நம்மை அறியாமல் உள்வாங்கிக் கொள்கிறோம்.எத்தனையோ கணவர்கள் அவர்களது மனைவியின் உடல் நலம் சரியில்லாத போதும், எத்தனையோ மனைவிகள் அவர்களது கணவன் உடல் நிலை பாதிப்படைந்த சமயத்திலும் தங்களை முழுமையாக அவர்களுக்கு அர்ப்ப்பணித்து விடுகிறார்கள்.இது நம்மைச் சுற்றி நடக்கும் விஷயம்தான்.அப்படி ஒரு தம்பதியரை கற்பனைக் கருவாக வைத்து எழுதப் பட்ட கதைதான் இது.
ஒருவேளை அவ்வாறு இல்லாத தம்பதியர் இம்மாதிரி ஒரு சம்பவத்தை அடிப்படையாகக் கொண்ட எழுத்தை படிப்பதால் அவர்களுக்குள் ஒற்றுமையை வளர்த்துக் கொள்ள இயலும் அல்லவா? தங்கள் பகிர்விற்கு நன்றி.சக பதிவர்களிடையே மன்னிப்பு போன்றவை வேண்டியதில்லை.எல்லோருக்கும் கருத்து சுதந்திரம் உண்டல்லவா?

Unknown said...

இன்றதான் முதல் முறையாக தங்கள் வலைவழி
வந்தேன்
கதையை தொடங்கிய முதல் இறுதிவரை இடைவிடாது
படித்தேன்
நானே நேரில் பார்த்தது போன்ற உணர்வு
ஏற்பட்டது அவ்வளவு நேர்த்தியாக கதையைக்
கொண்டு சென்றீர்கள்
வாழ்த்தும் பாராட்டும் உரியன!

நேரமிருப்பின் என் வலை வருக!

புலவர் சா இராமாநுசம்

ஹ ர ணி said...

அன்பே சிவம் என்றார் திருமூலர். அன்பின் வழியது உயர்நிலை என்பது குறள். அன்புதான் உலகின் மையம். கரு. வாழ்வின் வேர். அற்புதங்கள் அன்பால்தான் சாத்தியம். நம்பிக்கையும் வாழ்தலும்தான் முக்கியம். வெகு சரளமான நடையில் எளிமையான சொற்களில் வாழ்வியலைக் காட்சிப்படுததும் நல்ல கதை.

ஆச்சி ஸ்ரீதர் said...

நேரில் பார்த்தது போலவே இருக்கிறது கதையமைப்பு.
வாழ்த்துகள்.

அப்பாதுரை said...

poignant!

Post a Comment