Thursday, March 1, 2012

களஞ்சியம்

வங்கிகளும் ஓய்வூதியமும் :

இன்டெர்நெட் கனெக்ஷன் ப்ராப்ளம் இருந்ததால் சென்ற முறை டெலிஃபோன் பில்லை பேங்கில் சென்று கட்டிவிடலாம் என்று இந்தியன் வங்கிக்கு சென்றிருந்தேன்.அன்று மூத்த குடிமக்களுக்கு பென்ஷன் வழங்கும் தினம் என்பதால் வங்கியில் கூட்டம் அதிகமாக இருந்தது.டோக்கன் பெற்று கொண்டு என் முறைக்காக காத்திருந்தேன்.அருகில் ஒரு வயதான தம்பதிகள் அமர்ந்திருந்தனர்.அவர்களும் டோக்கனுடன் அவர்கள் முறைக்கு காத்திருந்தார்கள்.
கால் மணி நேர அவகாசத்திற்குப் பின் அந்த தம்பதிகளுள் அந்த வயதான பெண்மணி ஒரு கவுண்டரில் சென்று தன் கணவர் இயற்கை உபாதையால் அவஸ்தப் படுவதால் கழிப்பறையை உபயோக்கிக்க அனுமதி வேண்டினார்.
அங்கு இருந்தவரோ வேறு ஒரு நபரை கை காண்பித்து அவரிடம் கேட்கச் சொன்னார்.அவரிடம் சென்று கேட்ட போது "அதெல்லாம் இங்க முடியாதுங்க.இங்க தண்ணிப் பிரச்சனை.நீங்க வேணா வெளியில எங்கயாச்சும் கூட்டிக்கிட்டு போயிட்டு வந்துடுங்களேன்" என்று யோசனை கூறினார்.அந்த பெண்மணி அந்த வங்கி ஊழியர்களை ஒவ்வொருவராக கெஞ்ச
ஆரம்பித்தார்.பார்க்க மனதுக்கு வேதனையாக இருந்தது.
நான் எழுந்து, முதலில் யோசனை கூறிய ஊழியரிடம், "அவங்களுக்கு நீங்களே உதவறீங்களா? அல்லது மேனேஜரிடம் சென்று அவர் கழிப்பறையை உபயோகிக்க அவர் அனுமதிக்கறாரான்னு நான் வேணா கேக்கட்டுமா?" என்று கேட்டதும் அவர் முகம் மாறியது.உடனே கடுப்பாகி "ஓஹோ!கேப்பீங்களோ?
முடிஞ்சா செஞ்சுக்கோங்க" என்று சொல்ல நான் மேனேஜர் அறையை பார்த்து நான்கடி நடந்ததும் அலறாத குறையாய் அந்த அம்மாளிடம் " என்னம்மா! இது தொல்லையா போச்சு. சரி சரி அந்த மூலைல பாத்ரூம் இருக்கு பாருங்க அங்க கூட்டிக்கிட்டு போங்க என்று அலுப்பாய் கூறினார்.
நான் பில் கட்டி வெளியில் வந்து கொண்டிருந்த போது அந்த பெண்மணி வேகவேகமாய் வந்து, "ரொம்ப நன்றிம்மா!அவர் சுகர் பேஷன்ட்.தவிச்சுப் போயிட்டார்.சமயத்துல வந்து பேசினீங்க" என்றார்.இதைச் சொல்வதற்காக நான் போய்விடப் போகிறேனே என்று ஓடி வந்தார்.நன்றியை தெரிவிக்க மூத்தோரிடம் இருக்கும் பதைப்பு, உதவுவதற்காக இளையோரிடம் இல்லாமல் போகிறதா?
வங்கிகள் முதியோர்களுக்காக பென்ஷன் வழங்கும் தினத்தன்று பிற சேவைகளை அன்று ஒரு நாள் நிறுத்தி வைக்கலாம்.அவர்களைக் காக்க வைப்பது தவிர்க்கப் படலாம்.

கூகுள் சேவை நாட்டுக்குத் தேவை :

தூத்துக்குடி எக்ஸ்ப்ரஸ் தன் குரலெழுப்பி ஓடிக் கொண்டிருந்தது.ஒரு பெர்த்தில், படிக்கும் மாணவி தன் நோட்டுப் புத்தகத்தைக் கையில் வைத்துக் கொண்டு படித்துக் கொண்டு வர அருகில் அவளது தாயார் அமர்ந்திருந்தார்.எதிரே நாற்பத்தைந்து வயதுக்கார ஆண் உட்கார்ந்திருந்தார்.அவர்களுக்குள் ஏற்பட்ட சம்பாஷணையில் அந்தப் பெண் ஈரோட்டில் நடக்க இருக்கும் ஒரு செஸ் பந்தயத்தில் கலந்து கொள்ள வந்திருப்பதாகவும் அவர்கள் கர்நாடகாவில் இருக்கிறார்கள் என்பதும் தெரிய வந்தது.இரவு அனைவரும் தூங்கி விட அந்தப் பெண்ணும் தாயாரும் மூன்றேகால் மணிக்கு ஈரோட்டில் இறங்கி விட்டனர்.
காலை ஆறு மணிக்கு திண்டுக்கல்லில் அதே பெர்த்தில் ஏறிய பெண்மணி அங்கு ஒரு நோட்டுப் புத்தகம் இருப்பதை கண்டு அந்த எதிரில் இருந்த ஆணிடம் கேட்டதும் அவர் அதை வாங்கிப் பார்த்தார்.அது ஒரு அறிவியல் நோட்டுப் புத்தகம்.அதில் "நிஷா ஷர்மா"  9 'C'  என்பதைத் தவிர வேறு எந்த தகவலும் இருக்கவில்லை.அதை தன்னுடன் கொண்டு வந்த அந்த மனிதர்
அதன் ப்ரவுன் கவரைப் பிரித்துப் பார்த்ததில் அதன் அட்டையில் பள்ளியின் அச்சு பதிக்கப் பட்ட படம் பள்ளியின் பெயருடன் இருப்பதைக் கண்டார்.உடனே நம் கூகிளாண்டவர் உதவி நாடி பள்ளியின் பெயரை டைப் செய்ததில் தொடர்பு எண் கிடைத்தது.அது கர்நாடகாவில் உள்ள ஒரு பள்ளி.அங்கு தொடர்பு கொண்டு விஷயத்தைக் கூறி அந்த மாணவியின் தொடர்பு எண் அல்லது விலாசம் கேட்டதில் அவர்கள் மிரண்டு போய் "அப்படி எல்லாம் கொடுக்க இயலாது.வேண்டுமெனில் உங்களது தொடர்பு எண் தாருங்கள் .உண்மையெனில் அவர்கள் தொடர்பு கொள்ளட்டும்" என உஷாராகக் கூறினார்கள்.அதன் பின் அந்த மனிதர் தந்த எண்ணுக்கு அந்த மாணவியின் தாய் தொடர்பு கொண்டு தன் முகவரி தந்து இன்னும் நான்கு நாட்களில் அறிவியல் பரீட்சை இருப்பதால் உடனடியாகக் கொரியரில் அனுப்புமாறு கோரி நன்றியும் கூறினார்.வாழ்க கூகுளின் சேவை!

டிஸ்கி : இதில் குறிப்பிட்டிருக்கும் அந்த நாற்பத்தைந்து வயது மனிதர் என் உடன் பிறந்த சகோதரன் என்பதில் மிகவும் பெருமை கொள்கிறேன்.


19 comments:

RAMA RAVI (RAMVI) said...

//வங்கிகள் முதியோர்களுக்காக பென்ஷன் வழங்கும் தினத்தன்று பிற சேவைகளை அன்று ஒரு நாள் நிறுத்தி வைக்கலாம்.அவர்களைக் காக்க வைப்பது தவிர்க்கப் படலாம்.//

அருமையான யோசனை ராஜி.வங்கிகளில் கமெண்ட் புத்தகம் பராமரிக்கப்பட்டால் இந்தக் கருத்தை எழுதுவிடுங்க.

// இதில் குறிப்பிட்டிருக்கும் அந்த நாற்பத்தைந்து வயது மனிதர் என் உடன் பிறந்த சகோதரன் என்பதில் மிகவும் பெருமை கொள்கிறேன்.//

வாழ்த்துக்கள்.

middleclassmadhavi said...

பகிர்ந்த விஷயங்கள் இரண்டும் பயனுள்ளவை.

தொடருங்கள் உங்கள் சேவையை!

RVS said...

முதல் பத்தி நீங்க ஹெல்ப் பண்ணினது பத்தி. ரெண்டாவது பத்தி உங்க ப்ரதர் ஹெல்ப் பண்ணினது பத்தி.

ரெண்டு பத்தியுமே நல்லா இருந்தது. :-)

வை.கோபாலகிருஷ்ணன் said...

முதலில் குறிப்பிட்டுள்ள விஷயம் வயதானவர்களுக்கு மட்டுமல்ல, அனைவருக்குமே அவ்வப்போது பல இடங்களில் ஏற்படும் சங்கடங்களே.

அதுவும் சர்க்கரை நோயாளிகள், வயதானவர்கள், பெண்மணிகள் என்றால் அந்த சங்கடங்களைச் சொல்லி மாளாது தான்.

தாங்கள் நல்ல நேரத்தில், நமக்கேன் பாடு என்று இல்லாமல் துணிந்து, அவர்களுக்கு உதவி செய்தது மிகவும் பாராட்டத்தக்கதே.

இந்த சுத்தம்+சுகாதாரத்துடன் கூடிய கழிவறைகளை பொது மக்கள் கூடும் அனைத்து இடங்களிலும், நன்கு பராமரித்து உதவிட, வங்கிகள் போன்ற எல்லா அலுவலகங்களும் நிச்சயமாக உதவிட முன்வர வேண்டும்.

சேவை செய்யும் ஊழியர்களுக்கு மனிதாபிமானம் நிச்சயம் இருக்க வேண்டும்.

அவரவர்கள் அனுபவித்தாலே அந்தக்கஷ்டம் அவர்களுக்குப் புரியவரும்.

வை.கோபாலகிருஷ்ணன் said...

இரண்டாவது நிகழ்வில் தங்கள் அண்ணன் அவர்கள் செய்த உதவி, காலத்தினால் செய்த மிகப்பெரிய உதவியாகும்.

அந்த அறிவியல் பாடப்புத்தகத்தை, தேர்வு நெருங்கும் சமயத்தில் தொலைத்த அந்த நபர் என்னபாடு பட்டிருப்பார்!

கூகுள் மூலம் தொடர்பு கொண்டு மிகவும் சிரத்தையாக செய்துள்ள அவருக்கு என் பாராட்டுக்களைத் தெரிவித்து விடுங்கோ.

பதிவிட்ட உங்களுக்கு என் நன்றிகள்.

ரிஷபன் said...

பகிர்ந்த விஷயங்கள் இரண்டும் பயனுள்ளவை.

ADHI VENKAT said...

முதல் விஷயத்தில் உங்களை பாராட்ட வேண்டும். அந்த வயதானவருக்காக நீங்க பேசியது. பாவம் எவ்வளவு கஷ்டப்பட்டிருப்பார்....

உங்க சகோதரர் செய்த விஷயம் நிச்சயம் பாராட்டப்பட வேண்டியது. பரீட்சை நேரத்தில்....

வெங்கட் நாகராஜ் said...

பகிர்ந்து கொண்ட இரண்டு விஷயங்களும் நல்லவை...

நிறைய இடங்களில் இப்படித்தான் சேவை மனப்பான்மை இல்லாது இருக்கிறார்கள்...

உங்களுக்கும் உங்கள் சகோதரருக்கும் வாழ்த்துகள்...

வித்யா சுப்ரமணியம் (Vidya Subramaniam) said...

அருமையான சேவைகள் ராஜி.

Yaathoramani.blogspot.com said...

தாங்களும் தங்கள் சகோதரரும் செய்த உதவி
மனம் நிறைவைத் தந்தது
அதைப் பகிர்ந்தமைக்கு வாழ்த்துக்கள்
இது பிறருக்கும் ஒரு சிறு உதவிதானே இதனால்
என்ன ஆகிவிடப் போகிறது என்கிற
அலட்சிய மனோபாவத்தை நிச்சய்ம நீக்கும்
பகிர்வுக்கு நன்றி

சுந்தர்ஜி ப்ரகாஷ் said...

நீங்கள் செய்த உதவி நிழல் போல உங்களைக் காக்கட்டும். மனம் நெகிழ்ந்தேன் ராஜி.பிறரின் அவஸ்தைகளை யூகித்துப் புரிந்து கொள்ளும் பக்குவம் குறைந்துதான் போய்விட்டது.

எல் கே said...

ஒரே நேரத்தில் இரண்டு மாறுபட்ட செய்திகள் ....

மனோ சாமிநாதன் said...

மனித நேயம் நம்மிடமிருந்தே தான் முதலில் வெளிப்பட வேன்டும். முதலாவதில் உங்களின் மனித நேயத்தால் ஒரு வயதான பெண்மணியின் இன்னல் தீர்ந்தது. இரண்டாவதில் உங்கள் சகோதரரால் ஒரு பெண்ணின் எதிர்காலத்திற்கு இடையூறு நேராமல் காக்க முடிந்தது. இரண்டிலுமே சம்பந்தப்பட்டவர்களுக்கு பொறுப்பின்மை இருந்தாலும் உங்கள் இருவருடைய பொறுப்புணர்ச்சியால் தனித்து நிற்கிறீர்கள். இனிய‌ பாராட்டுக்கள்!!

என்ன ஆச்சு ராஜி? பதிவுகள் போடுவதில் ஏனிந்த பெரிய இடைவெளி?

மாதேவி said...

இருவருக்கும் வாழ்த்துக்கள்.

இராஜராஜேஸ்வரி said...

நன்றியை தெரிவிக்க மூத்தோரிடம் இருக்கும் பதைப்பு, உதவுவதற்காக இளையோரிடம் இல்லாமல் போகிறதா?

சிந்திக்கவைத்த சம்பவம்..

இராஜராஜேஸ்வரி said...

தங்கள் சகோதரருக்கு பாராட்டுக்கள்..

raji said...

பின்னூட்டம் அளித்த அனைவருக்கும் எனது நன்றிகள்

@மனோ சாமிநாதன்

அக்கறையுடன் கூடிய விசாரிப்பிற்கு நன்றி மேடம்.இனி பதிவுகள் அடிக்கடி தொடரும் :)

அப்பாதுரை said...

ரொம்ப நாளாச்சு இங்க வந்து.. மறுபடியும் எழுத ஆரம்பிச்சதுக்கு சந்தோஷம்.
அடுத்தவங்களுக்கு உதவி செய்யணும் என்று நினைப்பதே பெரிது - அதிலும் செயலில் இறங்கிய துணிச்சல் பாராட்டப்பட வேண்டியது. இன்னொருத்தர் பிரச்சினை தானே என்று சும்மா இராமல் உதவி செய்யத் துணிந்த உங்கள் இருவருக்கும் பாராட்டுக்கள்.

வல்லிசிம்ஹன் said...

வேகமாகச் செயல்பட்ட உங்கள் சகோதரரின் உதவும் குணத்தைக் கண்டு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.
அதுவும் ரயில் பயணத்தில் திகில்கள் நிறைந்த காலத்தில் உங்கள் பதிவு நல்ல நேர்மறையான எண்ணங்களைப் பதிகிறது.

Post a Comment