Tuesday, March 27, 2012

உயிர்ச்சங்கிலி





கோமதி தோட்டக் கதவைத் திறந்து துளசிச் செடிக்கு தண்ணீர் விடச்
சென்ற போது பக்கத்து காலி மனையில் ஐந்தாறு பேர் நீள அகலத்தை அளந்து
கொண்டிருந்தனர்.

துண்டை உலர்த்த வந்த கணவரிடம்,  “ கட்டட வேலை ஆரம்பிக்க போறாங்களா?” என்றாள்

“ஆமாம்.ஆறு ஃப்ளாட் வருதாம். நானும்தான் சொல்றேன், நமக்கெதுக்கு இத்தனை பெரிய வீடு? வித்துட்டு ஃப்ளாட் ஆக்கிடலாம்னு. நீ கேட்டாதான?”
என்றார் சாரதி.

“ஆரம்பிச்சுட்டீங்களா? உஙகிட்ட வந்து கேட்டேனே, என்னைச் சொல்லணும்”
என்ற படி உள்ளே சென்றாள்.

மறு நாள் மிளகாய் காயவைக்க மொட்டை மாடிக்குச் சென்ற போது பக்கத்து மனையில் கட்டட வேலைக்கு வந்திறங்கி இருந்த ஆட்கள் அவர்கள் தேவைக்கு குடிசை தயார் செய்து கொண்டிருந்தார்கள்.கீழே இறங்கி வருகையில் ஒரு பெண்ணின் இடுப்பில் இருந்த குழந்தை வாயில் விரல் போட்டுக் கொண்டு இவளையே பார்த்துக் கொண்டிருந்தது.
குண்டுக் கன்னமும் கரு விழிகளும் சுருள் கேசமுமாய் துறுதுறு பார்வையுடன்
இருந்த குழந்தையை தூக்கிக் கொஞ்ச வேண்டும் போல் இருந்தது.மிகவும்
பரிச்சயமான முகம் போல வெகு நாள் பழகியது போல் இருந்தது.

லேசாக சிரித்ததும் அவசரமாய் முகம் திருப்பிக் கொண்டது.கோமதிக்கு
மனசு காற்று இறங்கிய பலூன் போல் ஆனது.உள்ளே சென்றதும், “என்ன?
மூஞ்சி டல்லடிக்குது? மாடிக்குதான போயிட்டு வந்த?அதுக்குள்ள என்ன? “
என்றபடி சாரதி எதிர்ப்பட்டார்.

“என்னமோ மனசு சரியில்லை” என்றபடி செல்பவளை கவலையாய்
பார்த்தார்.

இப்படித்தான் அடிக்கடி ஆகி விடுகிறாள் இந்த இரண்டு வருடமாய்.
என்ன செய்ய என்று நினைத்த படி பெருமூச்சு விட்டார்.

அவர்களது ஒரே சந்ததியான தாமு விபத்தில் மறைந்ததிலிருந்து கோமதி
அடிக்கடி இப்படி ஆகி விடுவது உண்டு.அவளை இன்னும் மோசமாக்கி விடுமோ என்று தாமுவின் நினைவாக இருந்த எல்லாவற்றையுமே அகற்றி விட்டார் அவனது ஃபோட்டோ உட்பட.

ஆனால் அவன் இருந்த போது அவனது விருப்பத்துகெதிராக கொடி பிடித்தவளும் இவள்தான்.ஆந்திராவிற்கு வேலையின் காரணமாக மாற்றலாகி சென்றவனை பிரிய முடியாமல் அழுதவள், அங்கு அவன் ஒரு பெண்ணை
விரும்புகிறான் என்றும் அவள் வசதியற்றவள் என்றும் தெரிந்ததும் ருத்ர
தாண்டவம் ஆடாத குறைதான்.அவன் ஒவ்வொரு முறை வரும்போதும்
எப்படியும் அம்மாவை சமாதானம் செய்து விடலாம் என்ற எண்ணத்துடன் வந்து ஏமாற்றத்துடன்தான் திரும்புவான்.

இப்படியே ஆறுமாத காலம் ஓடியது.ஒரு முறை அவன் வருவதற்கு பதிலாக
சடலமாக கொண்டு வரப் பட்டான்.வேலைக்குச் செல்லும் வழியில் ஒரு விபத்தில் சிக்கிக் கொண்டு உயிரிழந்தவனை உடன் வேலை செய்தவர்கள்
உதவியுடன் சாரதியும் மனதைக் கல்லாக்கிக் கொண்டு வீட்டிற்கு கொண்டு வந்தார்.அந்த இழப்பிற்குப் பின் அவ்வப்பொழுது கோமதி இப்பிடித்தான்.

“குடிக்க கொஞ்சம் தண்ணி தரீங்களா?குழந்தைக்கு வேணும்” என்ற குரல் கேட்டு வாசல் பக்கம் பார்த்தார்.

இருபது வயதொத்த ஒல்லியான பெண் ஒருத்தி பாட்டிலோடு நின்றிருந்தாள். தோற்றத்தில் வறுமை குடி கொண்டிருந்தது.பக்கத்து கட்டட வேலையாட்களில் பார்த்த நினைவு. தண்ணீர் கொடுத்து அனுப்பினார்.

நாலு நாட்களுக்குப் பிறகு வெளியில் சென்று விட்டு வந்த போது, வாசலில் ஒரு குழந்தை சிறு சிறு கற்களைப் பரப்பி விளையாடியபடி இன்னொரு கையில் லாலி பாப் சுவையில் மூழ்கியிருந்தது.மனம் நெகிழ்ந்து அப்படியே தூக்கிக் கொண்டு உள்ளே வந்தார்.குழந்தை மிரள மிரள விழித்து அழத் தயாராக உதட்டைப் பிதுக்கியிருந்தது.குழந்தையைப் பார்த்ததும் கோமதி, “பக்கத்து கட்டட வேலைக்காரங்க குழந்தையாச்சே இது. நீங்க கொண்டு வந்திருக்கீங்க?”
என்றாள்

“வாசல்ல உக்காந்திருந்தது.சும்மாதான் தூக்கிட்டு வந்தேன்” என்று முடிப்பதற்குள் குழந்தை அழ ஆரம்பிக்கவும் அதன் அம்மா தேடிக் கொண்டு வரவும் சரியாக இருந்தது.

“குழந்தையைப் பாத்துக்க யாரும் இல்லையாம்மா?இதை வச்சுக்கிட்டு எப்பிடி வேலை பாப்ப?”

“இல்லங்க.அப்பாரு மட்டும்தான் எனக்குன்னு சொல்லிக்க இருந்தாரு.அவரும்
மார்வலி வந்து போன வருசம் தவறிட்டாரு.அவர் பாத்துட்டிருந்த கட்டட
வேலை மேஸ்திரிதான் மெட்ராஸ் கூட்டிட்டு வந்து இங்க சேத்து விட்டாரு”

“புருஷன் இல்லையாம்மா?”

சட்டென்று கண்கள் குளமாக அந்தப் பெண் தன் குழந்தையைப் பார்த்தாள்.

“ஐயோ!அழாதம்மா!தெரியாம கேட்டோம்.மன்னிச்சுடு”

“இல்லைங்க. நீங்க கேக்காட்டியும் இந்தக் குழந்தை எனக்கு அவரை ஞாபகப் படுத்திக்கிட்டுதான் இருக்கும். என்னை அவர் உயிருக்கு உயிரா விரும்பினாரு..அவங்க நல்ல வசதியானவங்க.பெரிய வேலைல இருந்தாரு.பெத்தவங்க சம்மதத்தோட கட்டிக்கணும்னு பாத்தாரு.ஆனா அதுக்குள்ள விபத்துல போயிட்டாரு.ஆனா அதுக்கு முன்னாடி சந்தர்ப்ப வசமா நான் கர்ப்பமாயிட்டேன்.என்னைப் பத்தின கவலைல எங்கப்பாரும் போய் சேந்துட்டாரு.அந்த ஊர்லயே இந்த நெனப்போட இருக்க முடில.அதான் இங்க
வந்து சேர்ந்தேன்” என்று விசும்பியவளை அதிர்ச்சியாக பார்த்தனர் இருவரும்.

“எந்த ஊரும்மா உனக்கு?” சுதாரித்த சாரதி கேட்டார்.

“ நெல்லூருங்க” விசும்பலடங்காமல் சொல்ல திகைத்துப் போனார்.

“ குழந்தையோட அப்பா பேரு? ”

நடுங்கும் குரலின் வித்தியாசம் உணர்ந்தும் அர்த்தம் புரியாதவளாய்
“தாமோதரன்” என்று சொல்ல, நிற்க இயலாது தடுமாறிய கோமதியைத்
தாங்கிப் பிடித்தவாறு சாரதி குழந்தையைப் பார்த்தார். அது, தான் வந்து சேர்ந்த இடம் புரியாமல் அங்கிருந்த தாம்புக் கயிற்றை இடுப்பில் சுற்றி விளையாடிக் கொண்டு தாமோதரனாகவே இருந்தது



28 comments:

வை.கோபாலகிருஷ்ணன் said...

மிகவும் அருமையான கதை.
பாராட்டுக்கள். வாழ்த்துகள்.

வை.கோபாலகிருஷ்ணன் said...

//“இல்லைங்க. நீங்க கேக்காட்டியும் இந்தக் குழந்தை எனக்கு அவரை ஞாபகப் படுத்திக்கிட்டுதான் இருக்கும். என்னை அவர் உயிருக்கு உயிரா விரும்பினாரு..அவங்க நல்ல வசதியானவங்க.பெரிய வேலைல இருந்தாரு.பெத்தவங்க சம்மதத்தோட கட்டிக்கணும்னு பாத்தாரு.ஆனா அதுக்குள்ள விபத்துல போயிட்டாரு.ஆனா அதுக்கு முன்னாடி சந்தர்ப்ப வசமா நான் கர்ப்பமாயிட்டேன்//

மிகவும் உருக்கமான வரிகள் !
பெண்களுக்கே நேரும் இதுபோன்ற சோதனைகள் !!

வை.கோபாலகிருஷ்ணன் said...

//அது, தான் வந்து சேர்ந்த இடம் புரியாமல் அங்கிருந்த தாம்புக் கயிற்றை இடுப்பில் சுற்றி விளையாடிக் கொண்டு தாமோதரனாகவே இருந்தது//

தாமோதரன் தான் வந்து சேர வேண்டிய இடத்திற்கே வந்து சேர்ந்துள்ள முடிவு நிறைவாக இருக்குது. ;)

வை.கோபாலகிருஷ்ணன் said...

”உயிர்ச்சங்கிலி” தலைப்புத் தேர்வு அருமை.

சங்கிலி நடுவே அறுந்து போய்விட்டாலும், தங்கமான துண்டுகள் இரண்டும் தொலையாமல் கைக்குக்கிடைத்து விட்டனவே!

அவைகளை இணைத்துக்கொண்டால் போதுமே!

கோமதி அம்மாவுக்கு மனசாந்தி கிட்டிடுமே!!

கதையை அழகாக ஆரம்பித்து அருமையாகக் கொண்டு சென்று இனிமையாக முடித்துள்ளீர்கள்.

[நடுவிலேயே என்னால் இதை யூகிக்க முடிந்தது]

பாராட்டுக்கள். வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றிகள்.

இராஜராஜேஸ்வரி said...

தாம்புக் கயிற்றை இடுப்பில் சுற்றி விளையாடிக் கொண்டு தாமோதரனாகவே இருந்தது


அந்தக்கயிற்றோடு எங்கள் மனதையும் சேர்த்துக்கட்டிவிட்டது அந்தக்க்குழந்தை !

இராஜராஜேஸ்வரி said...

சிறப்பாய் நிறைவாய் உயிர்ச்சங்கிலி அறுபடாமல் இணைத்த அருமையான கதைக்குப் பாராட்டுக்கள்..

பால கணேஷ் said...

விதியின் விளையாட்டில்... பாட்டியிடமே வந்து சேர்கிறது பேரக் குழந்தை! ரசித்துப் படித்தேன் சிறுகதையை... அதைவிட ரசித்தேன் இதற்கு நீங்கள் தந்திருக்கும் தலைப்பை! அருமை!

வெங்கட் நாகராஜ் said...

உயிர்ச்சங்கிலி.... சங்கிலி அறுந்து விட்டதே என எண்ணிக்கொண்டு இருக்க, மீண்டும் வந்து ஒட்டிக்கொண்டது போல குழந்தையும் அதன் தாயும் பாட்டியுடன் சேர்ந்தது நன்று.

நல்லதோர் புனைவு. வாழ்த்துகள் ராஜி.

Yaathoramani.blogspot.com said...

கதையின் தலைப்பும் முடிவும்
மனம் தொட்டுப் போனது
மனம் கவர்ந்த பதிவு
தொடர வாழ்த்துக்கள்

குறையொன்றுமில்லை. said...

மனதை தொட்டகதை வாழ்த்துகள்

middleclassmadhavi said...

//குண்டுக் கன்னமும் கரு விழிகளும் சுருள் கேசமுமாய் துறுதுறு பார்வையுடன்
இருந்த குழந்தையை தூக்கிக் கொஞ்ச வேண்டும் போல் இருந்தது.மிகவும்
பரிச்சயமான முகம் போல வெகு நாள் பழகியது போல் இருந்தது.// உயிர்ச்சங்கிலி!!

கௌதமன் said...

சூப்பர் கதை; அதற்கேற்ற சூப்பர் தலைப்பு. வாழ்த்துகள்.

கீதமஞ்சரி said...

பாட்டியைத் தேடிவந்தப் பேரக்குழந்தையின் மூலம் உயிர்ச்சங்கிலியின் பிணைப்பு இறுகிவிட்டது. ஆரம்பம் முதல் முடிவு வரை அழகாகக் கொண்டுசென்ற நடை மனம் கவர்ந்தது. பாராட்டுகள் ராஜி.

ரிஷபன் said...

உங்களின் அழகான கதை சொல்லும் திறமைக்கு ஒரு சபாஷ்.

Matangi Mawley said...

Title and narration-- superb!

ADHI VENKAT said...

அருமையான கதை. மனதை நெகிழ வைத்து விட்டது.தலைப்பும் அருமை.

கே. பி. ஜனா... said...

தேர்ந்த எழுத்து. //மிகவும் பரிச்சயமான முகம் போல வெகு நாள் பழகியது போல் இருந்தது.//...
//தாமுவின் நினைவாக இருந்த எல்லாவற்றையுமே அகற்றி விட்டார் அவனது ஃபோட்டோ உட்பட.//...//ஆந்திராவிற்கு வேலையின் காரணமாக மாற்றலாகி சென்றவனை பிரிய முடியாமல் அழுதவள்//
என்று பொருத்தமாக க்ளூ கொடுத்து நகர்த்தி...அழகாய்க் கதை சொல்லியிருக்கிறீர்கள்.
உணர்வுகளை சுருக்கமாக, இயல்பாகக் கொடுத்துள்ளீர்கள். சஸ்பென்ஸ் கதைகளில் படிப்பவரை உணர்வு பூர்வமாக ஒன்ற வைப்பது ஒரு சேலஞ்ச்! அதில் அபார வெற்றி. பாராட்டுகளும் வாழ்த்துகளும்!

raji said...

எனது வலைப்பக்கம் கடந்த நான்கு பதிவுகளாக சக பதிவர் அமைதிச்சாரல் சாந்தி அவர்களால் பின்னூட்டம் இட இயலவில்லை.இதற்கான காரணம் எங்கள் இருவருக்குமே தெரியவில்லை.என்ன பிரச்சனை எவ்வாறு சரி செய்வது என்பதை எவரேனும் கூறி விளக்கி உதவி செய்ய முடியும் என்றால் செய்யுமாறு கோருகிறேன்.

raji said...

அமைதிச் சாரல் சாந்தி அவர்கள் எனக்கு மின்னஞல் மூலம் அனுப்பி இருக்கும் இந்த பதிவிற்கான கருத்து:


//கதை ரொம்ப அருமையாயிருக்கு ராஜி. 'எல்லாத்துக்கும்' துணிச்சலிருந்த பையனுக்கு அம்மாவைச் சமாளிக்கற துணிச்சலும் இருந்துருக்கணும்.//

Anonymous said...

ஓ! மிக உருக்கமான கதை.அருமை. வாழ்த்துகள்.
வேதா. இலங்காதிலகம்.

எல் கே said...

good one raji

விச்சு said...

உயிர்சங்கிலி பொருத்தமான தலைப்பு. இந்த சங்கிலி எப்போதும் அறுந்துபோவதேஇல்லை போலும். உருக்கமாக இருந்தது. நல்ல முடிவும்கூட.

வல்லிசிம்ஹன் said...

அருமை. ராஜி.
தாமோதரன் தானே வந்து சேர்ந்தானே. அருமை.

மாலதி said...

மிக உருக்கமான கதை. பாராட்டுகளும் வாழ்த்துகளும்!

R. Gopi said...

நல்லா இருக்கு. ஆனா முடிவை நடுவிலேயே ஊகிக்க முடிகிறது.

raji said...

@வை கோபாலகிருஷ்ணன் சார்

விளக்கமான கருத்துரைக்கும் பாராட்டுக்களுக்கும் நன்றி சார்!

@இராஜராஜேஸ்வரி

நன்றி மேடம்

@கணேஷ்

நன்றி

@வெங்கட் நாகராஜ்

வாழ்த்திற்கு நன்றி

@ரமணி சார்

நன்றி

@லக்ஷ்மிமா

நன்றி

@மாதவி

ரசித்தமைக்கு நன்றி

@kg gouthaman

நன்றி

@கீதமஞ்சரி

பாராட்டிற்கு நன்றி

@ரிஷபன்

ஊக்கத்திற்கு நன்றி

@Matangi Mawley

thank u

@கோவை2தில்லி

நன்றி ஆதி!

@கே பி ஜனா

பாராட்டுக்களுக்கும் வாழ்த்திற்கும் நன்றி

@அமைதிச்சாரல்

இருக்கணும்தான்.சமாளிக்கறதுக்குள்ள போயே சேர்ந்துட்டான்.அதுக்குள்ள அவசரமும் பட்டுட்டான்.

@Kovaikkavi

நன்றி

@எல் கே

நன்றி

@விச்சு

கருத்திற்கு நன்றி

@வல்லிசிம்ஹன்

நன்றி

@மாலதி

பாராட்டிற்கும் வாழ்த்திற்கும் நன்றி

@Gopi Ramamoorthy


கருத்திற்கு நன்றி

வித்யா சுப்ரமணியம் (Vidya Subramaniam) said...

good story raji.

raji said...

@ வித்யா சுப்ரமணியம் மேடம்

நன்றி மேடம்

Post a Comment