Saturday, June 23, 2012

கதை சொல்லி!

"அம்மா! நேத்து ஒரு கதை சொன்னயே! நான் பாதிலயே தூங்கிட்டேன்.இன்னொரு நாள் மறுபடி சொல்றயா?" என்ற என் பெண்ணின் கேள்விக்கு, "என்ன இன்னும் உன் பொண்ணுக்கு கதைலாம் சொல்றயா? என்று
ஆச்சர்யம் காண்பித்தாள் என் சினேகிதி.

"ஏன்?அதனால என்ன?" என்றேன்

"இல்ல.பதினாறு வயசுப்பொண்ணுக்கு கதை சொல்றது கொஞ்சம் வித்தியாசமா இருக்கே" என்றாள்.

"கதை சொல்றதுக்கும் கேக்கறதுக்கும் கூட வயசெல்லாம் உண்டா என்ன?"

"சின்ன குழந்தைகளுக்குதான் அதுவும் ஒரு பத்து வயசுக்குள்ளதான்
கதை சொல்லி நான் பாத்துருக்கேன்"

"அப்ப அதுக்கு மேல இருக்கறவங்கலாம் கதைகளை விரும்பறதில்லைன்னா
நினைக்கற?"

"அப்படி இல்ல.அதுக்கு மேல அவங்களாவே புத்தகங்கள் படிச்சு தெரிஞ்சுக்க
ஆரம்பிச்சுடுவாங்க"

"எல்லாருக்கும் புத்தகங்கள் படிக்கற வழக்கம் இருக்கறதில்லை.அப்படியே
இருந்தாலும் கூட இப்ப இருக்கற இந்த தலைமுறைகள்ல முக்கால்
சதவிகிதம் பேர் ஆங்கில புத்தகங்கள் மட்டுமே படிக்கறாங்க.ஹாரிபாட்டரையும் எனிட் ப்ளைட்டன் ஸ்டோரிசும் படிக்கற
அளவு இளந்தலைமுறைகள் எத்தனை பேர் பொன்னியின் செல்வனையோ
வியாசர் விருந்தையோ படிப்பாங்கனு நினைக்கற? மேலும் இப்ப இருக்கற
இளந்தலைமுறை ரன்னிங் ரேசுல ஓடறாப்புல எதைத் தேடி ஓடறோம்னு கூட தெரியாம போய்க்கிட்டு இருக்காங்க.அப்படி இருக்கற பல பேருக்கு
புத்தகங்களை தொட நேரமிருக்கறதில்லை.அந்த சமயங்கள்ல ஒருத்தர் மூலமா காதால கதைகள் கேட்டு தெரிஞ்சுக்கறதுல தப்பே இல்ல"


"அது சரி! ஆனா அது என்ன தூங்கற நேரத்துல?"

"ஆங்கிலத்துல இன்டராக்ஷன்னு சொல்ற மாதிரி தூங்கப் போற நேரத்துல
கதை கேக்கறது பல விஷயங்களை கலந்துரையாட வைக்கும்.தூங்கறதுக்கு முன்னாடி கண்ட விஷயத்தையும் நினைச்சு குழம்பி மன அமைதி கெடறதுக்கு பதிலா சிந்தனைக்குரிய விஷயங்களை தூண்டும்.இதைதான நம்ப பாட்டிகளும் அம்மாக்களும் செஞ்சுண்டிருந்தாங்க.நிறைய திண்ணைக் கச்சேரிகள்ல கூட இம்மாதிரி கதைகளும், கதை சொல்வதும் கேட்பதும் இடம்
பெறுவதுண்டு.இதனால இந்த தலைமுறைகளுக்கு காரைக்கால் அம்மையாரையும் ,கூர நாராயண ஜீயரையும், கணபுரத்தாளையும் தெரிய வைக்க முடியும்.மேலும் எல்லாராலயும் எல்லா புத்தகங்களையும் படிச்சு எல்லாத்தையும் தெரிஞ்சுக்க முடியும்னு சொல்லமுடியாது.ஒருத்தருக்கு தெரிஞ்ச கதை இன்னொருத்தருக்கு தெரிஞ்சுருக்க வாய்ப்பில்லாம இருக்கலாம்.அப்ப ராத்திரி நேரத்துல தூங்கறதுக்கு முன்னாடி இதுக்கு கொஞ்சம் நேரம் ஒதுக்கி எல்லாருமே கதை சொல்லிகளா மாறலாம்"

"கரெக்ட்!மானிட்டர் மட்டும் உலகமாகிட்டு இருக்கற நேரத்துல இந்த மாதிரி ரிலாக்ஸேஷன் அவசியம்தான் இப்பலாம்.என்னதான் ஈ ரீடிங்க் எல்லாம் வந்தாலும் இந்த மாதிரி கதைகள் எல்லாம் டவுன்லோட் பண்ணி படிக்கறது சாத்தியமில்லை"

"அம்மா நேத்து எனக்கு கணபுரத்தாள் கதை சொல்லும்போதுதான் தூங்கிட்டேன் ஆன்ட்டி!அதை இன்னிக்கு கேட்டு தெரிஞ்சுப்பேன்"

"நீ மட்டும் இல்ல. நானும் அதை கேட்டு தெரிஞ்சுப்பேன்"


(இது ஒரு உண்மையான உரையாடல்.சற்றும் மாற்றமற்று கொடுக்கப் பட்டுள்ளது)

டிஸ்கி : இதில் குறிப்பிடப் பட்டுள்ள கணபுரத்தாள் கதை எனக்கு மற்றொன்றை நினைவுபடுத்துகிறது.எழுத்தாளர் வித்யா சுப்ரமணியம் அவர்கள் எழுதிய
"அக்னி புத்திரி" (பிரமிக்கவைக்கும்பெண்மணிகள்) என்ற புத்தகம்தான் அது.இந்த புத்தகத்தைப் பற்றி ஒரு பதிவு எழுத வேண்டும் என்று ஒரு
ஆவல் நீண்ட நாட்களாக உண்டு.ஆனால் விமர்சனமாக அல்ல.ஒருபார்வையாகத்தான்.சந்தர்ப்பம் ஏற்படும் பொழுது எனது கருத்தைப் பதிகிறேன்



27 comments:

வை.கோபாலகிருஷ்ணன் said...

//எல்லா புத்தகங்களையும் படிச்சு எல்லாத்தையும் தெரிஞ்சுக்க முடியும்னு சொல்லமுடியாது.ஒருத்தருக்கு தெரிஞ்ச கதை இன்னொருத்தருக்கு தெரிஞ்சுருக்க வாய்ப்பில்லாம இருக்கலாம்.//

ஆமாம். படித்தலை விட்ட காதால் கேட்டலால் அது இன்னும் மனதில் நன்கு பதியக்கூடும்.

சொல்பவராலும் கேட்பவருக்குப் புரியுமாறும் சுவாரஸ்யம் ஏற்படுமாறும் சுவைபடக்கூற முடியும்.

கேட்பவர் தனக்கான சந்தேகங்களையும் அவ்வப்போது கேட்டு தெளிவடைய முடியும்.

//அப்ப ராத்திரி நேரத்துல தூங்கறதுக்கு முன்னாடி இதுக்கு கொஞ்சம் நேரம் ஒதுக்கி எல்லாருமே கதை சொல்லிகளா மாறலாம்//

நிச்சயமாக மாற வேண்டும். இது குடும்ப உறவுகளை நன்கு பலப்படுத்த உதவும்.

வை.கோபாலகிருஷ்ணன் said...

"ஆங்கிலத்துல இன்டராக்‌ஷன்னு சொல்ற மாதிரி தூங்கப் போற நேரத்துல கதை கேக்கறது பல விஷயங்களை கலந்துரையாட வைக்கும்.தூங்கறதுக்கு முன்னாடி கண்ட விஷயத்தையும் நினைச்சு குழம்பி மன அமைதி கெடறதுக்கு பதிலா சிந்தனைக்குரிய விஷயங்களை தூண்டும்.இதைதான நம்ப பாட்டிகளும் அம்மாக்களும் செஞ்சுண்டிருந்தாங்க. நிறைய திண்ணைக் கச்சேரிகள்ல கூட இம்மாதிரி கதைகளும், கதை சொல்வதும் கேட்பதும் இடம் பெறுவதுண்டு.//

ஆமாம். நான் என் சிறிய வயதில், மெய் மறந்து பல கதைகள் கேட்டதுண்டு. அதுபோல பலருக்கும் நான் சுவைபட கதைகள் கூறியதும் உண்டு.

இதில் சொல்பவருக்கும், சுவைபடச் சுவாரஸ்யமாகவும், நகைச்சுவை மேலிடவும் சொல்ல நல்ல திறமைகள் வேண்டும்.

அதுபோல கேட்பவர்களுக்கும், நல்ல ஒரு ஈடுபாடும், ஆர்வமும் அவசியமாக இருக்க வேண்டும்.

இதனால் பரஸ்பர உறவுகள் மேம்படவும், நல்ல சிந்தனைகள் ஏற்படவும், தர்ம நியாயப்படி நடக்கவும், பழிபாவத்திற்கெல்லாம் அஞ்சவும், கடவுள் நம்பிக்கை ஏற்படவும், இவை முன்பெல்லாம் மிகவும் உதவி வந்தன.

இப்போது யாருக்கும் எதற்கும் நேரமில்லாமல், ஏதேதோ நவீன தொழில்நுட்ப சாதனங்கள் (டி.வி., செல்போன், கம்ப்யூட்டர் இண்டெர்நெட், மின்னஞ்சல், சுட்டிகள், ஃபேஸ்புக், டிவிட்டெர், அது இது என ஏதேதோ வந்து) வீட்டிலுள்ள ஒருவருடன் மற்றொருவர் பேசவே நேரமில்லாமல், எல்லாவற்றையுமே மாற்றி விட்டது, என்பதே உண்மை.

வை.கோபாலகிருஷ்ணன் said...

இப்போது ஒரு 4 ஆண்டுகளுக்கு முன்பு கூட நாகர்கோயிலிலிருந்து “மனம் மலர்ந்திட” “மனம் ஒளிர்ந்திட” என்ற பெயர்களில் ஒரு மாத இதழ் [சிற்றிதழ்]வெளியாகி வந்தது.

அதில் ஒவ்வொரு ஆங்கில மாதத்திற்கும் எவ்வளவு தேதிகள் உண்டோ அவ்வளவு நீதிக்கதைகள் அதில் இருக்கும்.

அதில் திரு. ரிஷபன் சார், திரு. கே.பி.ஜனா போன்ற பிரபலமான எழுத்தாளர்களின் பல படைப்புகளுடன், என்னுடைய ஒரு சில கதைகளும் கூட ஒவ்வொரு மாதமும் இடம் பெற்றிருக்கும்.

முழுக்க முழுக்க நீதிக் கதைகள் மட்டுமே. அதுவும் சிறிய கதைகள் ஓரிரு பக்கக் கதைகள் மட்டுமே.

அதன் நோக்கம் என்னவென்றால், குடும்பத்தில் உள்ள அனைவரும் இரவு சாப்பாடு சாப்பிட்டு முடிந்ததும், அதில் உள்ள ஒரே ஒரு கதையை ஒருவர் படிக்க, மற்றவர்கள் அதைக்கேட்டு, அதைப்பற்றி தங்கள் கருத்துக்களை விவாதித்து விட்டு, அதில் கூறப்பட்டுள்ள நீதியைப் புரிந்து கொண்டு, அதன் பிறகு படுக்கச்செல்ல வேண்டும் .... என்பதே.

மிக உயரிய நோக்கம் அதில் உள்ளடக்கமாக இருந்தது.

தொடர்ந்து நாங்கள் பலரும் அந்தச் சிற்றிதழில் சுமார் 4 ஆண்டுகாலம் எங்கள் படைப்புகளை இலவசமாக எழுதிக்கொடுத்து வந்தோம்.

அதன் பிறகு ஒருசில நிர்வாகப்பிரச்சனைகளால் அந்த சிற்றிதழ் தொடர்ந்து வெளிவராமலேயே போய் விட்டது.

அந்த இதழில் நாங்கள் பலரும் எழுதி வெளியிடப்பட்ட சிறுகதைகளைக்கூட என் வலைப்பதிவினில் தொடர்ச்சியாக வெளியிடலாம் என்று எண்ணியிருந்தேன்.

குழந்தைகளோ பெரியவர்களோ அவற்றைப் படித்தால் நிச்சயமாக் அவர்கள் மனம் மலர்ந்திடும்/ஒளிர்ந்திடும் என்பதில் ஐயம் இல்லை.

வை.கோபாலகிருஷ்ணன் said...

நீண்ட நாட்களுக்குப்பிறகு தங்களின் வலைப்பதிவினில் ஓர் படைப்பினை பார்க்க எனக்கு மிகவும் சந்தோஷமாக உள்ளது.

சிந்தித்துப் பார்த்தால் “கதை சொல்லி” என்ற தங்களின் இந்தக்கட்டுரை மிகவும் பயனளிக்கக்கூடியது, தான்.

என் மனதில் தற்போது பூட்டி வைத்துள்ள, என் அடுத்தடுத்த, பல பயனுள்ள வருங்காலப் பதிவுகள் பற்றிய திட்டங்களில், இதுபோன்ற சிறுசிறு நீதிக்கதைகளுக்கும் இடம் தரலாம் என்ற ஓர் எண்ணத்தை எனக்கு ஏற்படுத்தியுள்ளது, தங்களின் இந்தப்பதிவு.

பாராட்டுக்கள். வாழ்த்துகள். நன்றிகள்.

பிரியமுள்ள
vgk

Yaathoramani.blogspot.com said...

"ஆங்கிலத்துல இன்டராக்ஷன்னு சொல்ற மாதிரி தூங்கப் போற நேரத்துல
கதை கேக்கறது பல விஷயங்களை கலந்துரையாட வைக்கும்.தூங்கறதுக்கு முன்னாடி கண்ட விஷயத்தையும் நினைச்சு குழம்பி மன அமைதி கெடறதுக்கு பதிலா சிந்தனைக்குரிய விஷயங்களை தூண்டும்.இதைதான நம்ப பாட்டிகளும் அம்மாக்களும் செஞ்சுண்டிருந்தாங்க.நிறைய திண்ணைக் கச்சேரிகள்ல கூட இம்மாதிரி கதைகளும், கதை சொல்வதும் கேட்பதும் இடம்
பெறுவதுண்டு.//


அருமையான ஆழமான அனைவரும் அவசியம்
ம்னதில் கொள்ளவேண்டிய் கருத்து
பகிர்வுக்கு வாழ்த்துக்கள்

இராஜராஜேஸ்வரி said...

எல்லாராலயும் எல்லா புத்தகங்களையும் படிச்சு எல்லாத்தையும் தெரிஞ்சுக்க முடியும்னு சொல்லமுடியாது.ஒருத்தருக்கு தெரிஞ்ச கதை இன்னொருத்தருக்கு தெரிஞ்சுருக்க வாய்ப்பில்லாம இருக்கலாம்.அப்ப ராத்திரி நேரத்துல தூங்கறதுக்கு முன்னாடி இதுக்கு கொஞ்சம் நேரம் ஒதுக்கி எல்லாருமே கதை சொல்லிகளா மாறலாம்"

அருமையான ரசனை நிரம்பிய பகிர்வுகள்..
என் பிள்ளைகளுக்கு வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் நானும் கதைகள் சொல்வதுண்டு..

வித்யா சுப்ரமணியம் (Vidya Subramaniam) said...

நல்ல பதிவு ராஜி. கதை சொல்லும் பழக்கம் வெகுவாகக் குறைந்துதான் போய் விட்டது. என் சின்ன பெண் இப்போதுதான் கொஞ்சம் படிக்க ஆரம்பித்திருக்கிறாள். அவளுக்கு நானும் நான் படித்த நல்ல கதைகளை இப்போதும் சொல்வதுண்டு. நம்முடைய பாடத் திட்டங்களும், வேகமான போக்கும், குழந்தைகளை விரைவில் சோர்வடைய வைத்து விடுவதால் தூங்குவதற்கு கதைகளின் தேவையின்றியே அவர்கள் தூங்கி விடுகிறார்கள். பத்திரிகைகள் கூட நல்ல சிறுகதைகள் போடுவதை நிறுத்திக் கொண்டு விட்டன. அக்னி புத்ரி பற்றி நினைவு கூர்ந்திருப்பதற்கு நன்றி. வைகோ சார் நல்ல விஷயம். விரையில் செய்ய ஆரம்பியுங்கள்.

ஸ்ரீராம். said...

நல்ல கருத்தைச் சொல்கிறீர்கள். பொறுமை இருந்து எல்லோராலும் பின்பற்ற முடிந்தால் நல்ல விஷயம் இது.

வெங்கட் நாகராஜ் said...

//கரெக்ட்!மானிட்டர் மட்டும் உலகமாகிட்டு இருக்கற நேரத்துல இந்த மாதிரி ரிலாக்ஸேஷன் அவசியம்தான் இப்பலாம்.என்னதான் ஈ ரீடிங்க் எல்லாம் வந்தாலும் இந்த மாதிரி கதைகள் எல்லாம் டவுன்லோட் பண்ணி படிக்கறது சாத்தியமில்லை"//

சொல்லிச் சென்ற கருத்துகள் அனைத்துமே அருமை... கதை கேட்க வயது தடையேயில்லை....

நெடு நாட்களுக்குப் பிறகு உங்கள் பக்கத்தில் ஒரு பகிர்வு.... அசத்தலான பதிவுடன் திரும்பி வந்ததற்கு வாழ்த்துகள்.....

குறையொன்றுமில்லை. said...

எங்க பேரக்குழந்தைகள்கூட (18- 9 வயசு) என்கிட்ட இரவு தூங்கப்போகும்போது கதை சொல்லசொல்லி கேப்பாங்க. அவங்க ரசனைக்கு தகுந்தாப்ல நானும் தெரிஞ்சதைச்சொல்லின்ண்டு இருக்கேன். நல்ல விஷயம்தானே.

சுந்தர்ஜி ப்ரகாஷ் said...

சபாஷ் ராஜி.

தஞ்சாவூரில் கதைசொல்லி என்ற ஒரு அமைப்பே தஞ்சை ப்ரகாஷை மையமாக வைத்து 80களில் இயங்கியது. நான், தஞ்சாவூர்க்கவிராயர், சி.எம்.முத்து, நா.விச்வநாதன், கவிஜீவன் ஆகியோர் உள்ளிட்ட பலரும் அதில் அங்கம். அப்போதுதான் எரிக் மில்லர் அமெரிக்காவிலிருந்து வந்திருந்தார். ஸ்டோரி டெல்லர் என்றோர் அமைப்பை நிறுவி இப்போதும் அதற்கான தலைவராக சென்னையில் இருக்கிறார்.

கதைகள் நிகழ்த்தும் மாயங்கள் இந்தத் தலைமுறைக்குத் தெரியாது போய்விட்டது. நமது இதிகாசங்களும் வேதங்களுமே வாய்வழியாய்ச் சொல்லப்ப்ட்டதுதானே? நல்ல காரியம்.எத்தனை வயதானாலும் விடாது கதை சொல்லுங்கள் ராஜி.பாராட்டுக்கள்.

வை.கோபாலகிருஷ்ணன் said...

வித்யா சுப்ரமணியம் (Vidya Subramaniam) said...

//வைகோ சார் நல்ல விஷயம். விரையில் செய்ய ஆரம்பியுங்கள்.//

தங்களின் அன்புக்கட்டளையை நிறைவேற்ற நிச்சயம் முயற்சிக்கிறேன், மேடம்.

உற்சாகப் படுத்தியுள்ளதற்கு உளமாற நன்றி கூறிக் கொள்கிறேன்.

அன்புடன்
vgk

எல் கே said...

நல்ல பழக்கம் டீச்சர்

ரிஷபன் said...

வெகு நாட்களுக்குப் பின் உங்கள் பதிவு பார்க்க மிகவும் மகிழ்ச்சி. கதை சொல்லும் போது கிடைக்கிற நெருக்கம் ஒரு சுவாரசியம் ..

middleclassmadhavi said...

Very nice - thought provoking!

'பரிவை' சே.குமார் said...

ராஜி அக்கா...
நீண்ட நாட்களுக்குப் பிறகு மிக நல்ல பதிவுடன் உங்கள் பகிர்வு கண்டு மிகுந்த மகிழ்ச்சி...
தொடர்ந்து எழுதுங்கள்.

MANO நாஞ்சில் மனோ said...

"கதை சொல்றதுக்கும் கேக்கறதுக்கும் கூட வயசெல்லாம் உண்டா என்ன?"//

இதுக்கும் வயசுக்கும் சம்பந்தமே இல்லை, ஏன் எனக்கு கூடத்தான் கதை கேட்க ரொம்ப பிடிக்கும்...!!!

ஜீவி said...

ஒரு காலத்தில் நியூ செஞ்ச்சுரி புக் ஹவுஸ் மூலம் கிடைத்த குழந்தைகள், சிறார்களுக்கான சோவியத் யூனியனின் குழந்தைப் புத்தகங்கள் அவர்கள் நேசிக்கத் தக்க அறிவுச் செல்வமாகவும் மட்டுமில்லை, மிகக் குறைந்த விலையில் குழந்தைகளைக் கவரக்கூடிய அழகழகான படங்களுடன் கிடைத்தன. 'கல்கி' பத்திரிகை கூட விஜயாவின் சித்திரங்களுடன் நிறைய மனம் கவரும் சோவியத் கதைகளை நம் சிறார்களின்
மொழியில் வெளியிட்டது. வாண்டுமாமாவின் எழுத்து லாவண்யமும் அழ.வள்ளியப்பாவின் கவிதை நேர்த்தியும் குழந்தைகளைக் கதைகளின் கவிதைகளின் பால் கவர்ந்திழுத்தன. இன்று கூட சி.டி.களில் தெனாலிராமன் கதைகளிலிருந்து விக்கிரமாதித்தன் கதைவரை தமிழில் அத்தனையும் கிடைக்கின்றன. எழுத்தாளர் சிவசங்கரி கூட சி.டி.யில் குழந்தைகளுக்குக் கதை சொல்லியிருக்கிறார்.

இங்கு அமெரிக்காவில் இருக்கும் என் பேரக் குழந்தைகள் சி.டி.க்கள் மூலம் தமிழ்க் கதைகளைக் கேட்பதுடன், தமிழைப் பேசவும் சின்னச் சின்ன வார்த்தைகள் எழுதவும் கூட கற்றுக் கொண்டிருக்கிறார்கள். குழந்தைகளிடம் வீட்டில் தமிழில் பேசி அவர்களும் திரும்ப மழலையில் தமிழ் பேசுவதைக் கேட்க ஆனந்தமான ஆனந்தமாக இருக்கும். இங்கெல்லாம் குழந்தைகளுக்கான ஆங்கிலப் புத்தகங்களில் அதிக கவனம் செலுத்தி அற்புதமாகத்தயாரித்திருக்கிறார்கள். நூலகங்களில் அவற்றை தாராளமாகக் கிடைக்க ஏற்பாடுகள் செய்திருக்கிறார்கள். சிறுவர் இலக்கியத்தில் நாமும் நிறைய செய்ய வேண்டி இருக்கிறது.. எதிர்கால நம்பிக்கை நட்சத்திரங்களை அறிவும் அன்பும் பெற்றச் செல்வங்களாக வளர்க்கக் கூடிய கடமை நமக்குண்டு.

Indian said...

yarukku solrayoyillaiyo enakku thookam varalai oru kadai sollu pls

கீதமஞ்சரி said...

கதை சொல்வதன் மூலம் தாய்க்கும் பிள்ளைகளுக்குமான உறவு வலுப்படுகிறது. கண்களும் மற்றப் புலன்களும் ஓய்ந்திருக்கும் நிலையில் செவிக்கும் கருத்துக்கும் மட்டுமே செய்தி பரிமாறப்படுகிறது. எத்தனை சுவாரசியமான தருணங்கள் அவை!இந்த நல்ல செயலைத் தொடருங்கள் ராஜி.

அப்பாதுரை said...

பிரமிக்க வைத்த ஐடியா. பனிரெண்டு வயதுக்கு மேல் கதை கேட்கும் ஆர்வம் பிள்ளைகளுக்கு குறைந்தாலும் அதை வளர்க்க (interaction) என்ன செய்யலாம் என்று பெற்றோர்கள் யோசிப்பது சரியே. இந்த நாளின் அவசரங்களில் இது போன்ற bonding moments தேவை. நல்ல பதிவுங்க.

அப்படியே இந்த கணபுரத்தாள் கதை என்னனு கொஞ்சம் சொல்லியிருக்கக் கூடாதோ?

R.Punitha said...

Hi Raji ,

I'm Punitha of www.southindiafoodrecipes.blogspot.in

Your blog Looks very nice in Tamil:)))

Want to follow,

At your free time do visit

my cookery blog Raji...

Keep on :)

raji said...

@வைகோபாலகிருஷ்ணன் சார்

தங்களது விரிவான கருத்து அனைவரது சிந்தனையையும் தூண்டும் விதமாக அமைந்துள்ளது.விளக்கமான கருத்துரைக்கு நன்றி.தாங்கள் சிற்றிதழில் எழுதிய கதைகளை பதிவுலகிலும் பகிர்ந்து கொள்ளுமாறு வேண்டுகிறேன்

@ரமணி சார்

கருத்திற்கும் வாழ்த்திற்கும் நன்றி

@இராஜராஜேஸ்வரி மேடம்

பிள்ளைகளுக்கு சொல்லும் கதைகளை சற்று எங்களுக்கும் பதிவில் கூறலாமே

@வித்யா சுப்ரமணியம் மேடம்

விரிவான கருத்திற்கும் ஊக்கத்திற்கும் நன்றி

@ஸ்ரீராம்

கருத்திற்கு நன்றி

@வெங்கட் நாகராஜ்

வாழ்த்திற்கும் கருத்திற்கும் நன்றி

@லக்ஷ்மிமா

உங்களை மாதிரி சில பேர் குழந்தைகளை கதைகள் மூலம் நெறிப்படுத்தறது அதுலயும்18 வயது குழந்தைகளுக்கு மிகவும் நல்ல விஷயம்.தொடருங்கள்.அதை அப்படியே எங்களுக்கும் பதிவில் பகிருங்களேன்.

@சுந்தர்ஜி

வாழ்த்திற்கும் கருத்திற்கும் நன்றி ஜி.பொதுவாக ஆங்கிலத்தில் இருக்கும் ஸ்டோரி டெல்லிங் தமிழில் மட்டும் ஏனோ மறைந்து வருவது ஆதங்கத்திற்கான விஷயமே.

@எல் கே

இதுதான் நல்ல ஸ்டூடண்டுக்கான அம்சம்

@ரிஷபன்

கதையின் சுவாரசியம் அதை படிப்பதை விட கேட்பதில் அதிகம்தான்

@மாதவி

நன்றி

@சே குமார்

ஊக்குவிப்பிற்கு நன்றி

@Mano நாஞ்சில் மனோ

கட்டாயம் இதற்கு வயது இல்லைதான்

@ஜீவி

விரிவான கருத்திற்கு நன்றி.கதை என்பது குழந்தைகளுக்கு மட்டும் உரியதன்று.எந்த வயதினரும் நீதிக்கதைகளோ மற்ற சுவாரசியமான கதைகளோ கேட்பதில் தவறே இல்லை என்பதை எல்லா வயதினர்களும் உணர்தல் அவசியம்

@anusha vasudevan

கட்டாயம் சொல்றேன்.செல் ஃபோனை காதுல வச்சுக்கோ.பொண்ணுக்கு சொல்லும் போது அப்படியே நீயும் கேளேன்.

@கீதமஞ்சரி

கருத்திற்கும் ஊக்கத்திற்கும் நன்றி

@அப்பாதுரை

பாராட்டிற்கு நன்றி சார்.

அப்பாடா! ஒருத்தர் கூட அது என்ன கதைன்னு கேக்கலையேனு நினைச்சேன்.சரி!எல்லாருக்குமே தெரிஞ்சதுதான் போலன்னு விட்டேன்.வசமா மாட்டினீங்களா?அந்தக் கதையையும் பதிவு போட்டுடுவோம் :-))

@R.Punitha

thank u.surely i will visit your blog

Anonymous said...

தமிழில் உங்களை போல இவ்வாறான பதிவுகளை எழுதக்கூடியவர்களாய் விரல் விட்டு எண்ணலாம். தொடருங்கள்..

வை.கோபாலகிருஷ்ணன் said...

அன்புடையீர்,

வணக்கம்.

என்னுடைய கீழ்க்கண்ட பதிவுக்கு
தயவுசெய்து வருகை தாருங்கள்.

http://gopu1949.blogspot.in/2012/07/blog-post.html

தங்களுக்கான விருது ஒன்று காத்துள்ள்து.

அன்புடன்
vgk

ஜீவி said...

தங்கள் கருத்து சரியே. ஆக, நீங்கள் என் பதிவுக்கு கதை கேட்க வருகிறீர்கள், சரியா?

Ranjani Narayanan said...

அன்புள்ள ஆசி,
உங்களது இந்தப் பதிவை இன்றைய வலைச்சரத்தில் பகிர்ந்து கொண்டுள்ளேன்.

http://blogintamil.blogspot.in/2012/10/blog-post_13.html

நன்றி!

Post a Comment