Wednesday, November 23, 2011

தெ(அ)ன்னை மரம்





ட்யூபில் மெதுவாக திரவ உணவு சென்று கொண்டிருந்தது.இன்றோடு ஒரு வாரம் ஆகிவிட்டது.

அசைவற்று படுத்திருக்கும் தந்தையை அசையும் மன அலைகளுடன் பெருமூச்சொன்றை விடுத்து பார்த்துக் கொண்டிருந்தான் கணேஷ்.

வாழ்வின் நிகழ்வுகளில் சில விஷயங்கள் உணர்வு சம்பந்தப் பட்டதாகி விடுகிறது.சிலவற்றை ஜீரணிக்க முடிகிறது.சில அப்பாற் பட்டதாகி விடுகிறது.அதுவும் ஜீரணிப்பது எல்லாருக்கும் சாத்தியப் படுவதில்லை.சிலருக்கு ஒதுக்கித் தள்ளும் மன நிலை வாய்த்து விடுகிறது.சிலர் ஆழ்மனதில் புதைத்துக் கொண்டு அல்லலை சுமக்கின்றனர்.தந்தை இரண்டாம் ரகம்.

நன்றாகத்தான் இருந்தார் சென்ற மாதம் வரையிலும்.தினமும் காலையில் எழுந்து தன் துணிகளை தானே துவைத்து சுப்ரபாதம் கூறி வருணை ஸ்கூல்
கொண்டு விட்டு புத்தகங்கள், பேப்பர் படித்துக் கொண்டு சந்திராவுக்கு
அனுசரணையாக சிறு வேலைகள் செய்து கொண்டு சரியாகத்தான் இருந்தது எல்லாம்.

"என்னங்க! பக்கத்துல கன்ஸ்ட்ரக்ட் பண்ற பில்டிங் இஞ்சினியர் இன்னிக்கு வந்திருந்தார்.நம்ம வீட்டு தென்னை மரம் மூணாவது ஃப்ளோர்ல இடிக்கறாப்ல இருக்கறதால அதை வெட்டும்படியா இருக்கும்கறாப்பல சொல்றார்.அதைக் கேட்டதுலேருந்து மாமா மூட் அவுட்ல இருக்கார்"

இப்படித்தான் ஆரம்பித்தது.அதன் பின் அப்பாவிடம் தெரிந்த மாற்றங்கள் மனக்கவலையை தந்தது.

ஒரு நாள் ஆஃபிசிலிருந்து திரும்பியதும், " என்னங்க!இப்படியே போனா அவருக்கு உடம்புக்கு வந்துடப் போறது.சரியா சாப்பிடறதில்லை.வருணோட விளையாடறதில்லை.புத்தகமும் கிடையாது.எதாவது பேசுங்க அவர்கிட்ட"

கணேஷ் தந்தையிடம் சென்று அமர்ந்தான்

"அப்பா! இந்த வீட்டை இடிச்சிட்டு ஃப்ளாட் கட்டாம இருக்கறதுக்கு காரணம் நீங்க வருத்தப் படக் கூடாதேன்னுதான்.ஆனா பக்கத்துல கட்டற ஃப்ளாட்டுக்கு நம்ம மரம் இடைஞ்சல்னா என்ன செய்ய முடியும்பா? ஏன் இப்டி ஃபீல் பண்றீங்க?அதுக்காக உடம்பை ஏன் வருத்திக்கறீங்க?"

பால்கனி சேரில் அமர்ந்திருந்தவர் நிமிர்ந்து அமைதியாய் பார்த்தார்.பின் திரும்பி தென்னையைப் பார்த்தவர், "இது எங்கம்மாடா.அம்மாவோட அன்பு எப்படி எதிர்பார்ப்பில்லாம எல்லையற்றதா குழந்தைக்கு கிடைக்குதோ அப்படித்தான் இதுவும் எனக்கு.நீ பிறந்த வருஷம் வச்சது.இப்பவும் பலன் எதிர்பார்க்காத எல்லாத்தையும் கொடுத்துண்டிருக்கு.ஒரு மனுஷனோட உயிர் பிரியறது எப்படி வருத்தமோ, எப்படி மனசை பாதிக்குமோ அப்படி மரத்தோட
அழிவு பாதிக்காதா? அது உயிர் இல்லையா?அது என் அம்மாவா,பிள்ளையா இத்தனை நாள் இங்க இல்லையா? அது போறது எப்டி பாதிப்பில்லாம போகும்டா?"

"என்ன சபேசா!என்னமோ அம்மா பிள்ளைனு பேச்சு நடக்கறது?என்னடா? உங்கப்பன் என்ன சொல்றான்?"  என்றவாறு வந்தார் அப்பாவின் ஆத்ம நண்பர்
சங்கரன்.

"வாங்க மாமா!பக்கத்துல கன்ஸ்ட்ரக்ஷன்.நம்ம தென்னை மரத்தை
வெட்டும்படியா இருக்கு.அதப் பத்திதான் பேசிண்டிருக்கோம்.அப்பா ரொம்ப
பெரிசா எடுத்துண்டு வருத்தமாருக்கார்.நீங்க கொஞ்சம் சொல்லுங்க"

"என்ன சபேசா!குழந்த மாதிரி?இந்த வயசில இந்த மாதிரி விஷயங்களை எல்லாம் மனசுக்குள்ள கொண்டு போயிண்டு இருக்க கூடாதுடா.நீ இப்டி பண்ணினா சின்னவங்க ரெண்டு பேரும் என்ன பண்ணுவாங்க?
'
மாமாவிற்கு பதில் சொல்லாமல் அப்போதைக்கு பேசாதிருந்தாலும் அப்பா
அதிலிருந்து வெளியே வரவே இல்லை.மரம் வெட்டும் அன்று ரூமை விட்டு வெளியே வரவில்லை.குளிக்கவில்லை.சாப்பிடவில்லை.சஹ்ஸ்ரநாமம்  மட்டும் டேப்பில் ஓடிக் கொண்டிருந்தது.மாலை நாலு மணியளவில் தென்னை
சப்தத்துடன் சரிந்தது.

"மாமா!காலைலேருந்து எதுவுமே சாப்பிடலை.இந்த காபியாவது குடிங்க.
எழுந்துக்கோங்க"

................

பதில் வராமல் இருக்க தொட்டுப் பார்த்து அசைவுமில்லாமல் இருக்க கலவரமானாள் சந்திரா .அன்றிலிருந்து ஒரு வாரமாக இப்படித்தான்.

கையில் சாப்பாட்டுக் கேரியருடன் வந்தாள் சந்திரா.

"நீங்க கிளம்புங்க.போய் குளிச்சுட்டு வருணை ஸ்கூல்ல ட்ராப் பண்ணிட்டு ஆஃபிஸ் போங்க.இன்னிக்கு அவனுக்கு வேன் வராதாம்.டேபிள்ல எல்லாம் எடுத்து வச்சுருக்கேன்.சாப்பிட்டுடுங்க.லன்ச் எடுத்துக்க மறக்காதீங்க.அதையும் டேபிள்லதான் வச்சுருக்கேன்.வருண் பக்கத்து வீட்ல இருக்கான்.கூப்பிட்டுக்கோங்க"

"உனக்கு மத்யானத்துக்கு சாப்பாடு கொண்டு வந்துட்டயா?"

"அதெல்லாம் இருக்கு.இன்னும் ஒன் வீக் லீவ் எக்ஸ்டென்ட் பண்ண முடியுமான்னு பாருங்களேன்"

"இந்த மூணு நாளைக்கு அந்த பேச்சே கிடையாது.ஆடிட் வருது.எல்லாம் ரெடி பண்ணனும்.நாலைஞ்சு நாளைக்கு மேனேஜ் பண்ணிக்கோ.அதுக்கப்பறம் லீவ்
எடுக்கறேன்.அதுக்குள்ள ஏதாவது இம்ப்ரூவ்மென்ட் தெரியுதான்னு பாப்போம்.கெளம்பறேன்"

நாலு நாட்களுக்குப் பின் ஒரு நாள் மாலை ஆஃபிசிலிருந்து திரும்புகையில்
வருண் தோட்டக்காரன் முனியனுடன் தோட்டத்தில் நின்று அவன் குழி வெட்டுவதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான்

"இங்க என்னடா பண்ற?"

"இன்னிக்கு எங்க ஸ்கூல்ல 'வன மஹோத்சவம்' கொண்டாடினங்க.எனக்கு
இந்த தென்னம்பிள்ளை தந்தாங்க.அதான் தோட்டத்துல வைக்கறோம்"

"என்னைத் தேடி தம்பி அரை மணி நேரமா காத்திருந்து விடாம கூட்டிட்டு வந்து
வைக்கச் சொல்லி ஒரே சந்தோஷமாயிடுச்சுப்பா.ஆமா!அப்பாரு இப்ப எப்பிடி இருக்காரு?"

"அங்கிள்!இனிமே எங்க தாத்தாக்கு சரியாயிடும் பாருங்க.நான் இன்னிக்கு போயி அவர் காதில நான் தென்னம்பிள்ளை வச்சதை சொல்வேனாக்கும்"

தென்னம்பிள்ளை நேர்மறையாய் அசைந்தது.





25 comments:

வை.கோபாலகிருஷ்ணன் said...

தமிழ்மணம்: 2
உடான்ஸ்: 2
இண்ட்லி : 3

மிகவும் அருமையான பதிவு.

வை.கோபாலகிருஷ்ணன் said...

தென்னை மரம் பற்றிய எனக்குத்தெரிந்த ஒருசில விஷயங்களைப் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

1) தென்னை மரக்கன்றுகளை குழிவெட்டி பிறரை விட்டே வைக்கச்சொல்ல வேண்டுமாம். நாமே ஊன்றக்கூடாது.

அவ்வாறு ஊன்றி நடுபவர் அவர் வாழ்நாளில் அதன் பலன்களை அனுபவிக்கவே முடியாதாம்.

வை.கோபாலகிருஷ்ணன் said...

2) பெற்று வளர்த்த நம் பிள்ளைகள் நம்மை கைவிட்டாலும் விடலாம். ஆனால் நாம் உப்பிட்டு வளர்த்த தென்னைகள் ஒரு நாளும் நம்மைக் கைவிடவே விடாது என்பதே உண்மை.

[தென்னைமரத்தின் அடியில் நிறைய உப்பைக் கொட்டுவது வழக்கம்]

சாந்தி மாரியப்பன் said...

ரொம்ப நல்லாருக்குப்பா.. ஏதாவது மனுஷங்க மேலயோ பொருட்கள் மேலயோ அதிகமா பாசம் வெச்சுட்டா இப்டித்தான் :-)

வை.கோபாலகிருஷ்ணன் said...

3) மும்மூர்த்தி ஸ்தலமாகிய உத்தமர்கோயில் அருகே உள்ள பிக்ஷாண்டார்கோயில் என்ற கிராமமே என் மனைவியின் பிறந்த ஊர். என் மாமியார் எனக்கு சொந்த அத்தைபெண். அவர்களின் சிறிய சொந்த வீட்டில் 4-5 தென்னைமரங்கள் இருந்தன. என் மாமியாரின் மாமனார் வைத்தது. ஆயிரம் காய்ச்சி மரங்கள் என்று சொல்லுவார்கள். அதாவது ஒவ்வொரு மரமும் வருடத்திற்கு ஆயிரம் காய்கள் வரை காய்க்கும். அதில் கிடைத்த [செவ்விளநீ - மட்டை சிவப்பாக இருக்கும்) இளநீரும், வழுக்கைத்தேங்காயும், முற்றிய தேங்காயும், அந்தத் முற்றிய தேங்காயை உடைத்துக் கிடைக்கும் இளநீரும் மிகவும் ஸ்வீட் ஆக இருக்கும்.

100 வருடங்களுக்கு மேல் பலன் கொடுத்த அந்த மரங்கள் பட்டுப்போனதும், என் மாமியார், இந்தக் கதையில் வரும் பெரியவர் போலவே, துடித்துப் போனார்கள். அவர்கள் பெண்ணை மணந்ததால், சிறிது காலமே அதன் சுவையை அறிந்த, எனக்கே மனதுக்கு மிகவும் கஷ்டமாகவே இருந்தது.

மேலும் அந்த மரங்களிலிருந்து விழும் ஓலைகள், தென்னை மட்டைகள், ஈர்க்கு முதலிய எல்லாவற்றையும் வீணாக்காமல் பயன்படுத்துவார்கள்.
பெரும்பாலும் சமையலுக்குக் கோட்டை அடுப்பு எரிய எரிபொருட்களே அவைகள் தான். வீட்டை சுத்தம் செய்ய துடைப்பம் செய்ய அதுவே பயன்படும்.

வை.கோபாலகிருஷ்ணன் said...

4) அவர்கள் வீட்டுக்கு அருகேயே 4-5 தென்னைமரங்கள் உள்ள ஒரு வீடு விலைக்கு வந்தது. என்னைவிட்டு, அந்த வீட்டை விலைக்கு வாங்க முடியுமா என்று கேட்டார்கள். நானும் எனக்கு தேவையில்லாவிட்டாலும் அவர்கள் திருப்திக்காக அதை என் பெயரில், சற்று சிரமப்பட்டுத்தான் வாங்கினேன்.

பொறுப்பாக யாரையோ வாடகைக்கு அமர்த்தினார்கள்.
மரங்களை மட்டும் என் மாமியாரே தன் நேரடி மேற்பார்வையில் வைத்துக்கொண்டு, அதிலிருந்து பறிக்கும் காய்களை எங்கள் வீடு தேடி அவ்வப்போது கொண்டுவந்து வாடகைப்பணத்துடன் தருவார்கள்.
[3200 சதுர அடி வீடு - வாடகை ரூ. 150 மட்டுமே]

அந்தத் தேங்காய்களும் நல்ல ஸ்வீட் ஆக வெள்ளை வெளேரென்று பளிச்சென்று இருக்கும்.

பிறகு என் மாமனார்+மாமியார் இருவரும் காலமானார்கள். நானும் அந்த வீட்டை விற்று விட்டேன்.

இப்போது மட்டும் அந்த கிராமத்து வீட்டை நான் வைத்திருந்தால் சுமார் 100 மடங்கு லாபம் கிடைத்திருக்கும். திருச்சி டவுனிலிருந்து மிக அருகே அரைமணி நேர பஸ் பயணத்தில் உள்ள இடமாகையாலும், பஸ், ரயில், வாய்க்கால், மும்மூர்த்தி ஸ்தலம் எல்லாம் அமைந்துள்ள மிகச் சிறப்பான இடமானதாலும், காவிரி+கொள்ளிடம் அருகே இருப்பதால் கிணற்றுத் தண்ணீர் 10 அடி ஆழத்தில் கிடைக்கக்கூடியதாலும், அந்த அளவுக்கு அந்தக் கிராமம் இப்போது மிகவும் டெவெலப் ஆகியுள்ளது. அங்கு கட்டப்படும் அடுக்கு மாடிக்குடியிருப்புகளே இப்போது சதுர அடி 4500-5000 என விற்கப்படுகிறது.

தென்னையைப்பற்றிய தங்களின் இந்தக்கதையைப் படித்ததும், இதெல்லாம் எனக்கு நினைவுக்கு வந்தன.

எல்லாவற்றிற்குமே அனுபவிக்க ஒரு கொடுப்பிணை வேண்டும்.

என் பழைய நினைவுகளைக் கிளறிவிட்ட தங்களின் அருமையான பதிவுக்கும், பகிர்வுக்கும் என் நன்றிகள்.

அன்புடன் vgk

bandhu said...

கதை அழகாக இருக்கிறது. என் மனைவியும் பத்து வருடங்களுக்கு முன் வைத்த ஜாதி மல்,லி நிறைய பூ கொடுக்கா விட்டாலும், ஒவ்வொரு வீடு மாறும்போதும் கஷ்டப்பட்டு கொண்டு வந்து விடுகிறார். செடிகளின் மீது பிரியம் நன்றாக புரிகிறது.

//1) தென்னை மரக்கன்றுகளை குழிவெட்டி பிறரை விட்டே வைக்கச்சொல்ல வேண்டுமாம். நாமே ஊன்றக்கூடாது.

அவ்வாறு ஊன்றி நடுபவர் அவர் வாழ்நாளில் அதன் பலன்களை அனுபவிக்கவே முடியாதாம்//
ஆச்சர்யமாக இருக்கிறது. என் அப்பா வைத்த தென்னை மரங்களின் பலனை பெரிதாக அனுபவிக்காமலே பரமன் பதம் அடைந்தார்.

ஆச்சி ஸ்ரீதர் said...

நல்ல கதை.வை.கோபாலகிருஷ்ணன் சார் சொல்லியுள்ளதையும் ரசித்து படித்தேன்.

அப்பாதுரை said...

பிள்ளைகள் போடும் முடிச்சு சில சமயம் பிரமிக்க வைக்கும். நல்ல கதை.

பால கணேஷ் said...

மனிதர்களை நேசிப்பவர்களே அருகிவிட்ட இந்நாளில் மரங்களை நேசிப்பவரைச் சொல்லியுள்ளீரகள் சிஸ்டர்... தலைப்பும் மிகப் பொருத்தமாக அமைந்து ரசிக்க வைத்தது. நல்லதொரு படைப்பை படித்த நிறைவு எனக்குள். விஜிகே சார் தென்னை பற்றிச் சொல்லியுள்ள தகவல்கள் போனஸ்!

பாலா said...

மிக இயல்பான கதை.

சுந்தர்ஜி ப்ரகாஷ் said...

பந்தங்கள் எப்படி உயிரை வதைக்கிறது என்று சொல்லுகிற அற்புதமான கதை மனதை அசைத்தது.

மற்றொரு தென்னைமரமும் மற்றொரு தாத்தாவும் உருவாவதை யாரால்தான் தடுக்கமுடியும்?

குறையொன்றுமில்லை. said...

மனதைத்தொடும் எழுத்துள்ள நல்ல கதை வாழ்த்துக்கள்.

MANO நாஞ்சில் மனோ said...

எங்க அம்மாவுக்கும் தென்னை மரம்னா உயிரா நேசிப்பாங்க நேசிக்குறாங்க, ஆச்சர்யமா இருக்கும்...!!!

MANO நாஞ்சில் மனோ said...

அருமையான பகிர்வு வாழ்த்துக்கள்...!!!

K.s.s.Rajh said...

சிறப்பாம இயல்பான பகிர்வு அருமை

Anonymous said...

இயல்பான கதை...அழகா எழுதியிருக்கீங்க...வாழ்த்துக்கள்

ரிஷபன் said...

ஒரு மனுஷனோட உயிர் பிரியறது எப்படி வருத்தமோ, எப்படி மனசை பாதிக்குமோ அப்படி மரத்தோட
அழிவு பாதிக்காதா? அது உயிர் இல்லையா?

சுரீலென்று கேள்விகள். அவர் வருத்தம் வாசிக்கிறவரையும் தொற்றிக் கொள்ளும் வண்ணம் அழுத்தமான எழுத்துப் பதிவு.

Anonymous said...

தென்னம்பிள்ளை நேர்மறையாய் அசைந்தது.

இயல்பான ஆச்சர்யமான பகிர்வு அருமை

rajamelaiyur said...

அருமையான கதை
அன்புடன் :
ராஜா

அடுத்தவர் மொபைல் நம்பரில் நீங்கள் SMS அனுப்பலாம்

Angel said...

நெஞ்சில் ஆழபதிந்த கதை .
வை. கோபாலகிருஷ்ணன் அவர்களின் பின்னூட்டம் பல புதிய தகவல்களை தந்தது .

வெங்கட் நாகராஜ் said...

மனதைத் தொட்ட கதை ராஜி.. நல்ல கதை பகிர்வுக்கு மிக்க நன்றி.

raji said...

@வை கோபாலகிருஷ்ணன் சார்

தென்னை மரம் பற்றி பல தகவல்கள் தந்து தங்கள் அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி.நீண்ட நாட்களுக்குப் பிறகு எனது பதிவில் தங்களது விளக்கமான கருத்துரை காண்பது மகிழ்ச்சியாக உள்ளது.

@அமைதிச்சாரல்

ஆமாம் சாந்தி!கருத்திற்கு நன்றி

@bandhu

முதல் முறை வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.தங்கள் மனைவி செடிகளை நேசிப்பவர் போல.

@thirumathi bs sridhar

தங்கள் கருத்திற்கு நன்றி

@அப்பாதுரை

நன்றி

@கணேஷ்

கருத்திற்கு நன்றி.பின்னூட்டங்களையும் படிப்பதற்கு மிக்க நன்றி

@பாலா

நன்றி

@சுந்தர்ஜி

நன்றி
ஆமாம்.இயற்கையை நேசிப்பவர்களை எவராலும் தடுத்து விட இயலாது ஜி


@லக்ஷ்மிம்மா

நன்றிம்மா

@MANO நான்ஜில் மனோ

தங்கள் தாயும் இயற்கையை நேசிப்பவர் போல.
கருத்துக்கு நன்றி


@K.s.s.Rajh

நன்றி

@ரெவெரி

நன்றி

@ரிஷபன்

தங்கள் பாராட்டு என் எழுத்து ஆர்வத்தை தூண்டுகிறது.நன்றி

@jaghamani

என் பதிவில் நீண்ட இடைவெளிக்குப் பின் தங்கள் பின்னூட்டம்.கருத்திற்கு நன்றி

@'என் ராஜபாட்டை'- ராஜா

நன்றி

@angelin

நன்றி.பின்னூட்டத்தின் பாராட்டு வை கோபாலகிருஷ்ணன் சாருக்கு சொந்தம்.


@வெங்கட் நாகராஜ்

கருத்திற்கு நன்றி சார்

ADHI VENKAT said...

உணர்வுப்பூர்வமான கதையாக இருந்தது. பிரியம் வைத்து அதை பிரிவதென்றால் வருத்தம் தானே...

ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதம்.

நல்லதொரு கதை ராஜி. பாராட்டுகள்.

middleclassmadhavi said...

//தென்னம்பிள்ளை நேர்மறையாய் அசைந்தது.//
தென்னையடி தென்னையாய் வாழ்க!

Post a Comment