Monday, November 14, 2011

பச்சை மண்




குழந்தைகள் மென்மையானவர்கள். அவர்களைக் கையாளும் விதமும் அவ்விதமே இருத்தல் நலம். அவ்விதம் கையாளப்படும் குழந்தைகளே பின்னாளில் உயர் குணங்களோடும் வாழ்க்கையில் வெற்றி பெறுபவர்களாகவும் உருப் பெறுகிறார்கள். இதனை நாம் குழந்தைகளுக்கான சிறுகதைகள் பலவற்றின் மூலம் காண இயலும். அவ்வகைக் கதைகள் இரண்டை இங்கே காணலாம்.


1.ஒரு காட்டில் விலங்குகளுக்கான பள்ளி ஒன்று அமைந்திருந்தது. அதில் ஒரு முயல், ஒரு மீன்,ஒரு பூனை மற்றும் ஒரு சீகல் இவை மாணவர்களாக இருந்தன. பள்ளியின் பாடத்திட்டத்தில் மரமேறுதல், நீந்துதல், குழி தோண்டுதல் ஆகியவை இருந்தன. இதில் முயலானது குழி தோண்டுவதில் எப்போதும் முதல் மாணவனாகவும்,மீன் நீந்துதலில் முதல் மாணவனாகவும், பூனை மரமேறுதலில் முதல் மாணவனாகவும் திகழ்ந்தன.ஆனால் இவை எல்லாமே மற்ற இரண்டு பாடங்களில் தோல்வியையே சந்தித்தன.சீகலோ கொஞ்சம் மரமேறுதல்,கொஞ்சம் நீந்துதல்,கொஞ்சம் குழி தோண்டுதல் என எல்லாவற்றையும் கொஞ்சம் கொஞ்சம் செய்து தேர்ச்சி பெற்றிருந்தது.


இதில் நாம் அறிவது என்னவென்றால், ஒன்றில் பிரமாதப் படுத்தும் குழந்தைக்கு மற்றொன்று வராமல் போகலாம். ஒரு சில குழந்தைகள் எல்லாவற்றிலும் ஓரளவு செய்து முடிக்கும் நிலையில் இருப்பார்கள்.ஆங்கிலத்தையோ கணக்கையோ வெறுக்கும் குழந்தைக்கு வேறொன்றில் நாட்டம் இருக்கலாம்.ஆங்கிலம் பிடிக்காத குழந்தையை தமிழ்ப் பண்டிதனாகவோ அல்லது சிறந்த ஃப்ரெஞ்சு மொழி பெயர்ப்பாளனாகவோ வளர அனுமதியுங்கள். கணக்கை விரும்பாத குழந்தையின் வாழ்வில், தயவு கூர்ந்து கணக்கைத் திணித்து அக்குழந்தையை மழுங்கச் செய்யாதீர்கள். அந்த குழந்தையின் விருப்பமறிந்து அதனைச் சிறந்த ஓவியனாகாவோ, பாடகனாகவோ புகைப்பட கலைஞனாகவோ வளர அனுமதியுங்கள்.



இனி அடுத்த கதைக்குச் செல்வோம்.







2.ஒரு குயவனிடம் இரண்டு மண்பானைகள் இருந்தன. அவன் தினமும் ஆற்றுக்குச் சென்று அவற்றில் தண்ணீர் நிரப்பி எடுத்து வருவான். திடீரென ஒரு நாள் ஒரு பானையில் சிறிய ஓட்டை விழுந்து விட்டது. அப்படியும் அவன் அதே இரண்டு பானைகளிலேயே தண்ணீர் எடுத்து வந்தான். நன்றாக இருந்த பானையோ ஓட்டைப் பானையைப் பார்த்து சிரித்து, “உன்னால் தண்ணீரை தக்க வைத்துக் கொள்ள முடியவில்லை. இன்னும் நீ எதற்கு?” என்று ஏளனம் செய்தது. இதைத் தாங்க இயலாத ஓட்டைப் பானை குயவனிடம், “நான்தான் ஓட்டையாகி விட்டேனே. இன்னும் என்னைத் தூக்கி எறியாமல் என்னுள் நீர் எடுத்து வந்து ஏன் என்னைப் பிறர் பார்த்துச் சிரிக்கும் நிலைக்கு ஆளாக்குகிறாய்?” என்று கேட்டது.


குயவன் அந்தப் பானையிடம் “நாளை தண்ணீர் எடுத்து வரும் பொழுது உன்னில் ஓட்டை இருக்கும் பக்கமாக தெருவைத் திரும்பிப் பார்” என்று கூறினான். மறுநாள் அவ்வண்ணமே அந்த பானையும் செய்தது. ஓட்டை வழியே தண்ணீர் வழிந்த பக்கமெல்லாம் பூச்செடியும் காய் கனி செடிகளும் செழிப்பாக வளர்ந்து நிமிர்ந்து நின்றன. நல்ல பானையின் பக்கம் வறட்சியாக இருந்தது.


இதில் நாம் அறிவது என்னவென்றால் எந்த ஓட்டையையும் அதாவது குறைகளையும், நிறைகளாக்குவது பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் கையில் உள்ளது.


பெற்றோரும் ஆசிரியரும் வெறும் மண்பானை செய்யத் தெரிந்த குயவர்களாக மட்டும் அமைவது போதாது. ஓட்டைப் பானையாக இருந்தாலும் உபயோகமான பானையாக மாற்றத் தெரிந்து கொள்ள வேண்டும். அப்படிச் செய்தால் குழந்தைகள் இந்த பூமியை பூத்துக் குலுங்கச் செய்திட மாட்டார்களா என்ன?


குழந்தைகள் தினத்தன்று அவர்களை நல்ல முறையில் கையாள நாம் உறுதி கொள்வோம்.சரிதானே?!


இந்த கட்டுரை இன்றைய 'வல்லமை-குழந்தைகள் தின சிறப்பிதழில்' வெளிவந்துள்ளது.


25 comments:

Raja K said...

அருமையான உதாரணங்கள். சிறு வயதில் தினதந்தி, தினமலரில் வெள்ளியன்று வரும் சிறப்பு மலரில் இப்படிப்பட்ட உதாரணங்களைப் பார்த்திருக்கிறேன். அந்த உணர்வை தருகிறது உங்களின் எழுத்துக்கள்

வை.கோபாலகிருஷ்ணன் said...

தமிழ்மணம் 2, இண்ட்லி 3, உடான்ஸ் 3.

குழந்தைகளுக்கான அழகிய சிறுகதைகள், குழந்தைகள் போலவே.

கோமதி அரசு said...

//பெற்றோரும் ஆசிரியரும் வெறும் மண்பானை செய்யத் தெரிந்த குயவர்களாக மட்டும் அமைவது போதாது. ஓட்டைப் பானையாக இருந்தாலும் உபயோகமான பானையாக மாற்றத் தெரிந்து கொள்ள வேண்டும். அப்படிச் செய்தால் குழந்தைகள் இந்த பூமியை பூத்துக் குலுங்கச் செய்திட மாட்டார்களா என்ன?//

நிச்சியம் குழந்தைகள் இந்த பூமியை பூத்துக் குலுங்க செய்துவிடுவார்கள். பெற்றோரும், ஆசிரியரும் மனது வைத்தால் நல்ல குழந்தைகளை உருவாக்கலாம்.

எந்த குழந்தையும் நல்ல குழந்தைதான் மண்ணில் பிறக்கையிலே!

குழந்தைகளுக்கு வாழ்த்துக்கள்.

Yaathoramani.blogspot.com said...

அருமை அருமை
இரண்டு கதைகள் சொல்லிப் போகும் கருத்தும்
அழகானவை அருமையானவை
பதிவாக்கித் தந்தமைக்கு நனறி
தொடர வாழ்த்துக்கள்
த.ம 3

சாந்தி மாரியப்பன் said...

குழந்தைகள் தின வாழ்த்துகள் :-)

நல்ல கதைகள்.. அருமையா சொல்லியிருக்கீங்க.

குறையொன்றுமில்லை. said...

ரொம்ப அழகா சொல்லிட்டீங்க. பதிவுக்கு நன்றி

middleclassmadhavi said...

நல்ல கதைகள்.. அருமை! வாழ்த்துகள்

வெங்கட் நாகராஜ் said...

நல்ல கதைகள்... வல்லமையில் வெளிவந்தமைக்கு வாழ்த்துகள்.....

மனோ சாமிநாதன் said...

குழந்தைகள் தினத்திற்கு ஒரு அருமையான பதிவு ராஜி! அந்தக் குயவன் கதை பிரமாதம்!

Unknown said...

குழந்தைகள் தின வாழ்த்துக்கள்

நல்ல கதைகள்.. அருமை

விச்சு said...

2 கதைகளுமே சூப்பர். ஓட்டைப்பானையையும் பயன்பெற வைக்கலாம்.சிந்தனை அருமை.

K.s.s.Rajh said...

அருமையான பகிர்வு வாழ்த்துக்கள்
த.ம-7

ராமலக்ஷ்மி said...

//
பெற்றோரும் ஆசிரியரும் வெறும் மண்பானை செய்யத் தெரிந்த குயவர்களாக மட்டும் அமைவது போதாது. ஓட்டைப் பானையாக இருந்தாலும் உபயோகமான பானையாக மாற்றத் தெரிந்து கொள்ள வேண்டும். அப்படிச் செய்தால் குழந்தைகள் இந்த பூமியை பூத்துக் குலுங்கச் செய்திட மாட்டார்களா என்ன?//

மிக அருமை. வாழ்த்துக்கள்.

rajamelaiyur said...

நல்ல கருத்துகள் .. தங்களுக்கும் தங்கள் மகளுக்கும் இனிய குழந்தைகள் தின வாழ்த்துகள் (sorry one day late)

rajamelaiyur said...

இன்று என் வலையில்

சன் டி.வி அரசுடமையாகிறது- பரபரப்பு செய்தி

RAMA RAVI (RAMVI) said...

மிக்க நன்றி ராஜி,என்னுடைய “மதுரகவி”க்கு வந்து பதிவுகளை படித்து கருத்துக்கள் சொன்னதற்கு.

RAMA RAVI (RAMVI) said...

குழந்தைகளின் விருப்பமறிந்து அதுபடி செயல் பட சொல்லியிருக்கீங்க.ஆம் அப்படி செயல்பட்டால் அது அவர்களுக்கும் விருப்பமான துறையில் ஆர்வம் அதிகமாகி சாதனை படைக்க வழி வகுக்கும்.நல்ல பதிவு.பகிர்வுக்கு நன்றி.

சென்னை பித்தன் said...

த.ம.9
குட்டிக் கதைகளின் மூலம் மிக நல்ல கருத்தைச் சொல்லி விட்டீர்கள்.

ADHI VENKAT said...

இரண்டு சிறுகதைகளுமே நல்ல கருத்துக்களை நமக்கு தருகின்றன.

குழந்தைகளை நாம் நல்ல முறையில் வழிநடத்திச் சென்றால் நல்ல மனிதர்களாக திகழ்வார்கள்.

ரிஷபன் said...

பெற்றோரும் ஆசிரியரும் வெறும் மண்பானை செய்யத் தெரிந்த குயவர்களாக மட்டும் அமைவது போதாது. ஓட்டைப் பானையாக இருந்தாலும் உபயோகமான பானையாக மாற்றத் தெரிந்து கொள்ள வேண்டும். அப்படிச் செய்தால் குழந்தைகள் இந்த பூமியை பூத்துக் குலுங்கச் செய்திட மாட்டார்களா என்ன?

அருமையான வார்த்தைகள். இன்றைய குழந்தைகளை எப்படி வளர்க்கிறோமோ அப்படித்தானே அவர்களும் இருப்பார்கள்..

ரிஷபன் said...

கதைகள் இரண்டுமே வாழ்க்கைப் பாடங்கள்.

ஆச்சி ஸ்ரீதர் said...

இரண்டு கதைகளும் நல்லாயிருக்கு.

சிறு வயதில் என் ஆசிரியர் ஒருவர் படித்ததை/சொல்லிக்கொடுத்ததை மறந்துவிட்டால் "போச்சா ,ஓட்டப்பானையில் எல்லாம் ஒழுவிப்போச்சா?" னு கேப்பார்.இரண்டாவது கதையைப் படித்தவுடன் அந்த ஆசிரியர் நினைவு வந்துவிட்டது.

raji said...

பின்னூட்டமளித்த அனைவருக்கும் எனது நன்றிகள்

கீதமஞ்சரி said...

குழந்தைகளிடம் இருக்கும் திறமைகளை ஊக்குவித்து அவர்களை வாழ்வில் ஏற்றம் பெறச் செய்யவேண்டுமே தவிர இல்லாத திறமைகளைப் பற்றிப் பேசியும் மற்றவரோடு ஒப்பிட்டும் மட்டம் தட்டக் கூடாதென்பதையும் குறைகளையும் நிறைகளாய் மாற்ற பெற்றோரும் மற்றோரும் மனது வைத்தால் முடியும் என்பதையும் அழகான கதைகளின் மூலம் அறியச் செய்தமைக்கு நன்றி.

வித்யா சுப்ரமணியம் (Vidya Subramaniam) said...

Very nice. vaazhthukkal.

Post a Comment