Thursday, March 24, 2011

ஒருதலை ராகம்

டைட்டிலைப் பாத்ததுமே அவங்கவங்களுக்கும் கற்பனை ஓடுமே.
ஆஹா! ராஜி ஏதோ ஒன் சைட் லவ் பத்தி எழுதி இருக்காங்க போல
அப்டின்னு நினைச்சு வரவங்க எல்லாம் ஏமாற வேண்டியதுதான்.

இது ஒருதலை ராகம்னு ஒரு படம் வந்ததே அப்ப நடந்த ஒரு
விஷயம்.அடச்சே! அவ்வளவுதானான்னு சொல்லறீங்களா? ஹா! ஹா!ஹா!

"ஒருதலை ராகம்" படம் வந்த புதுசுல அந்த சினிமாக்கு போக ஆசைப்பட்டு அப்பாகிட்ட எப்பிடி பர்மிஷன் வாங்கறதுன்னு தெரியாம கடைசி
அண்ணாக்கள் ரெண்டு பேரும் யோசிச்சுக்கிட்டு இருந்தாங்க.

சட்டுன்னு யோசனை தோணி ஐயோ பாவமா இருக்கற என்னை(!!)
கூப்பிட்டு "நீ  கணக்குல நல்ல மார்க் வாங்கிருக்க,அதனால நீ
போய் அனுமதி கேளு.நீ கேட்டா அப்பா சரின்னுடுவார்"னு என்னை
உசுப்பேத்த நானும் பேக்கு மாதிரி (மாதிரி என்ன அப்படியேதான்னா
சொல்லறீங்க?) அப்பா கிட்ட கேக்க அவர் இருந்த அறைக்கு போனேன்.

அதுவரைக்கும் இருந்த தைரியம் எல்லாம் அவர் அறை வாசல் கிட்ட
போனதும் ஓட்டை விழுந்த தண்ணிப் பானை கணக்கா வடிஞ்சு போச்சு.
சட்டை நுனியைத் திருகிக்கிட்டே நானும் திரு திருன்னு முழிச்சிக்கிட்டு
வாசல்லையே தயங்கி தயங்கி நின்னேன்.

ஏதோ ஃபைல் பாத்துக்கிட்டுருந்தவர் வாசல்ல என்னைப் பாத்ததும் "என்ன வேணும்?"னு கேட்டுட்டு மறுபடி ஃபைல்  பாக்க  ஆரம்பிச்சுட்டார்.
மெதுவா உள்ள போயி நின்னேன். அவர் நிமிந்து பாத்து "என்ன வேணும்?"னு கேட்டார்.

"வந்து.. வந்து... அண்ணா எல்லாரும் "ஒருதலை ராகம்"ங்கற சினிமாக்கு
போக பர்மிஷன் வாங்கிண்டு வரச்சொல்லி அனுப்பிச்சா".
(அடிப்பாவி! கவுத்துட்டாளே! - இது அண்ணாக்களோட மைன்ட் வாய்ஸ்)

"என்ன படம் பேரு சொன்ன?"

"ஒருதலை ராகம்"

"ஓ.....! சரி,  நீ ஒண்ணு பண்ணு.முதல்ல ஒருதலை ராகம்னா என்னனு
தெரிஞ்சா சொல்லு.நான் பர்மிஷன் தரேன்"

".................................................."

"என்ன? அர்த்தம் சொல்றயா?"

"என்ன கேட்டுண்டிருக்கேள் அவளை" என்று காபியுடன் அங்கு வந்த
என் ஆபத்பாந்தவி, அனாதரட்சகி, பெற்ற தாயினும் உற்ற துணையேது
என்பது போல் வந்தாள்

ஓடிச்  சென்று அம்மாவின் புடவைத் தலைப்பை பிடித்துக் கொண்டு நின்றேன் நான்

"உன் புத்திர சிகாமணிகளுக்கெல்லாம்  ஒருதலை ராகம்  சினிமா  போகணுமாம்.அதுக்கு இந்த பெரிய மனுஷி தூது.அதான் ஒருதலை ராகம்னா 
என்ன அர்த்தம்னு தெரியுமான்னு கேட்டுண்டிருக்கேன்"

"சின்னக் குழந்தை கிட்ட போய் (அம்மா அம்மாதான்) என்ன கேக்கறேள்?
நீ போடி" என்று என்னை வெளியே அனுப்பி என்னை ரட்சித்தாள்  

அதன் பின் அப்பாவே தியேட்டருக்கு ஃபோன் செய்து டிக்கெட் புக் பண்ணி,
சென்று வர ஜீப்பும், துணைக்கு எங்கள் வீட்டில் இருந்த வாட்ச்மேனையும்
அனுப்ப ஜாலியாய் சினிமா பார்த்து விட்டு வந்தோம்.

வந்த பின் தூக்கக் கலக்கத்தில் சாப்பிட்டுக் கொண்டிருந்த என்னைப் பார்த்து, " என்ன? படம் பாத்தயே! இப்பவாவது ஒருதலை ராகம்னா என்ன
அர்த்தம்னு தெரிஞ்சதா?" என்று கேட்டார்.

"அதெல்லாம் தெரியலை.ஆனா அதுல இது குழந்தை பாடும் தாலாட்டுன்னு
ஒரு பாட்டு நல்லாருந்தது"  

"குழந்தை  பாடும் தாலாட்டா?குழந்தை எப்படி தாலாட்டு பாடும்? என்ற அவரது 
அடுத்த கேள்விக்கு நான் எனது வழக்கம் போல் திரு திரு முழியை
பதிலாக்கி விட்டு தட்டையும் கையும் அலம்ப எடுத்தேன் ஓட்டம்.

32 comments:

வை.கோபாலகிருஷ்ணன் said...

குழந்தையாய் இருக்கும் போது வீட்டில் நடந்த ஒரு நிகழ்ச்சியை, மழலையுடன், குழந்தைத்தனமாக அழகாக எழுதியிருக்கீங்க. பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்.

Chitra said...

ஒரு தலை ராகம்..... அப்படின்னா என்ன அர்த்தம் என்று நீங்களாவது சொல்வீங்கனு வாசிச்சா, ....ம்ம்ம்ஹூம்......
:-))))

நிரூபன் said...

வணக்கம் சகோதரி, சிறு வயது அனுபவங்களை மீட்டியிருக்கிறீர்கள். உங்களைப் போலத் தான் நானும், சின்ன வயசிலை படமெல்லாம் பார்ப்பன். பார்த்த படத்தின்ரை கதை, நடிக, நடிகைகள் பற்றி யாராச்சும் கேட்டல் திரு திரு என்று முழித்திருக்கிறேன்.

Sivakumar said...

//குழந்தை பாடும் தாலாட்டா?குழந்தை எப்படி தாலாட்டு பாடும்?//

டி.ராஜேந்தர் எனும் தாடி வைத்த 'செல்லக்குழந்தை'தானே அந்த பாடலுக்கு சொந்தக்காரர். அப்படி என்றால் அது சத்தியமாக குழந்தை பாடிய தாலாட்டுதான்.

Rathnavel Natarajan said...

நல்ல பதிவு அம்மா.
வாழ்த்துக்கள்.
ஸ்ரீ வில்லிபுத்தூரில் திருமுக்குளம் என ஒரு பதிவு எழுதியிருக்கிறேன். நீங்கள் பார்க்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.
rathnavel-natarajan.blogspot.com
rathnavel.natarajan@gmail.com
rathnavel_n@yahoo.co.in
தங்களது கருத்தை பதிவு செய்து தங்களையும் பதிவு (follower) செய்து கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறேன்.
நன்றி அம்மா.

எல் கே said...

ஒரு தலை ராகம் அர்த்தம் சொல்லுங்க லாஜி

எல் கே said...

டி.ராஜேந்தர் எனும் தாடி வைத்த 'செல்லக்குழந்தை'தானே அந்த பாடலுக்கு சொந்தக்காரர். அப்படி என்றால் அது சத்தியமாக குழந்தை பாடிய தாலாட்டுதான். //

en en inthak kolai veri siva

Arun Ambie said...

அது நல்லதோர் படம்
மனதில் பிடித்தது இடம்
கொண்டாடியது ஊர் சனம்
கதையில் சொக்கியது மனம்.

ஹி ஹி விஜய டிஆர் மாதிரி ஒரு முயற்சி தான்.....


இவ்வளவு எழுதினீங்க...
கடைசி வரைக்கும் ஒரு தலை ராகத்துக்கு அர்த்தம் சொல்லலை. ஆரோகணம் அவரோகணமாவது சொல்லிருப்பீங்கன்னு பாத்தா அதுவும் இல்லை...
அது தான் போகட்டும்னா..... அந்தக் கரடிக்குட்டியப்பத்தியும் ஒரு வார்த்தை கூட சொல்லவே இல்லையே?

வெங்கட் நாகராஜ் said...

எல்லா அப்பாவுமே இப்படித்தான் போல!!!! நானும் சிறுவயதில் அப்பா கேட்கும் கேள்விகளுக்கு பதில் தெரியாமல் ”ஞே” ஆகியிருக்கிறேன். “குழந்தை பாடும் தாலாட்டு!” கேட்க நன்றாக இருக்கும்!

R. Gopi said...

அண்ணா தங்கை பாசம் மாதிரி வராது. எனக்குத்தான் அந்தக் கொடுப்பினை இல்லாம போச்சு.

இராஜராஜேஸ்வரி said...

பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்.

raji said...

எல்லாரும் ஒருதலை ராகத்துக்கு அர்த்தம் கேட்டிருக்கீங்க.
இப்படி எல்லாம் ஒரு சந்தேகம் எல்லாம் வந்துடக் கூடாதுன்னுதான்
பதிவின் ஆரம்பத்திலயே குறிப்பிட்டிருக்கேன் பாருங்க.

//ஆஹா! ராஜி ஏதோ ஒன் சைட் லவ் பத்தி எழுதி இருக்காங்க போல
அப்டின்னு நினைச்சு வரவங்க எல்லாம் ஏமாற வேண்டியதுதான்.//

அந்த படத்துல வர கதாநாயகன் ஒரு தலையா காதலிச்சு
பாட்டா பாடி பாடி தேய்ஞ்சு போயும் அந்த ராகமெல்லாம்
கதாநாயகியின் மனசை அடையாதுங்கறதால அது ஒரு தலை ராகம் ஆகிடுச்சு
(அப்பாடி! இதுக்கு பதில் சொல்லவே இப்படி கண்ணைக் கட்டுதே, இன்னும்
விளக்கவுரை,தெளிவுரை பொழிப்புரை எல்லாம் கேட்டா நான் என்னத்துக்காவேன்!)

இந்த பதில் அப்பா என்னைக் கேக்கும் போது தெரியாம போச்சு.
அதாவது நாயகன் பாடறது, அது நாயகியை சென்றடையுதா இல்லையா இது மாதிரிலாம்
எதுவும் அறியாத புரியாத வயசு.அதனால வயசில்லாத காலத்துல உள்ளதை எதுக்கு பாக்கணும்னு
புரிய வைக்கதான் அப்பா என்னை அந்த கேள்வி கேட்டிருக்கார்.

ADHI VENKAT said...

நல்ல சிறுவயது நினைவலைகள். அந்த பாடல் நன்றாக இருக்கும். சிறுவயதில் பள்ளி விடுமுறையில் அம்மா சினிமாவுக்கு அழைத்துக் கொண்டு போவார். அந்த நினைவு வந்தது.

middleclassmadhavi said...

குழந்தைக்கு புரியாதுங்கற நம்பிக்கைல தான் அப்பா அனுப்பினாரோ?!! :))

ரிஷபன் said...

ராவணன் பாடினா பத்து தலை ராகம்.. நாம பாடினா அது ஒரு தலை ராகம்.. ரொம்ப சிம்பிள்!
என் அத்தை, சித்தப்பா எல்லாம் சினிமாப் பைத்தியம்.. அதனால் சினிமா போவது ரொம்ப ஈஸி எனக்கு.

குறையொன்றுமில்லை. said...

அந்தக்காலத்ல ஒரு சினிமாவுக்குப்போவது எவ்வளவு
மகிழ்ச்சியான விஷயமாக இருந்தது. இன்றோ நிலமையே தலைகீழ். ஒரு நாளுக்கு 5 படம் நடு ஹால்லயே வந்துடுத்து. ஒன்னையாவது குடும்பத்தோட சேந்து உக்காந்து பாக்கமுடியுதா?

Yaathoramani.blogspot.com said...

அந்த கால கட்டத்தில் ஒரு
வித்தியாசமான கதையமைப்போடு
இசையோடு வந்த படம்
இசையில் பட்டம் பெற்று முதலில்
இசை அமைக்க வந்த
ஏ.எம் ராஜா வித்தியாசமான
இன்றும் கேட்டு ரசிக்கத்தக்க
திரையிசைப்
பாடல்களைத் தந்ததைபோல
பாடலாசிரியராகவும் இசையமைப்பாளராகவும்
இருந்ததால் வார்த்தைகள் சிதைவுராமல்
என்றும் ரசிக்கத்தக்க பாடல்களை(படங்களை அல்ல)
நிறையத் தந்துபோன டி.ராஜேந்தர்
அறிமுகமான ஒரு நல்ல தமிழ்ப் படம்
அதனை மீண்டும் பதிவின்மூலம்
நினைவூட்டிச் சென்றமைக்கு நன்றி
ஆனாலும் இன்றைய நிலையில்
ஏதேனும் தொடர்பிருக்கும்படியாக
பதிவினைத் துவங்கியிருந்தாலோ
அல்லது முடித்திருந்தாலோ
இன்னும் சிறப்பாக இருந்திருக்குமோ?
இன்று அஜித் நடித்து அதே கதையமைப்புடன்
படம் வெளிவந்தால் "ஒரு தல ராகம்"
என இருக்குமோ என்பது மாதிரிக் கூட முடித்திருக்கலாமோ?

ஆச்சி ஸ்ரீதர் said...

எங்க ஊரு தியேட்டரில் இந்த படம் வந்த நாலு நாட்களில்,வேற படம் போட்டுடாங்களாம்,அதற்கு பின் ரேடியோவில் பாடல்களை கேட்டு ரசித்த மக்கள் பலரின் வேண்டுகோளின்படி மீண்டும் திரையிடப்பட்டு பல மாதங்கள் ஓடியதாம்.

இந்த படம் பார்த்த பல காதலர்களின் காதல் மெருகேறியதாம்,காதல் செய்யாதவன் கூட காதல் மேல் காதல் கொண்டானாம்,இப்படிலாம் கேள்விப்பட்டிருக்கேன்.உங்க பிளாஷ்பேக்கும் நல்லாயிருக்கு.

சி.பி.செந்தில்குமார் said...

சமீபகாலமாக உங்க பதிவு தமிழ்மணத்துல ஹிட் ஆகி முகப்பில் உலா வருவது சந்தோஷமான விஷயம்.. வாழ்த்துக்கள்.. இருங்க ,படிச்சுட்டு வர்றேன்

சி.பி.செந்தில்குமார் said...

>>>டைட்டிலைப் பாத்ததுமே அவங்கவங்களுக்கும் கற்பனை ஓடுமே.

அப்படி எல்லாம் ஓடாது.. நீங்க ஒரு ஆன்மீக ஸ்பெஷலிஸ்ட்னு தெரியதா? என்ன/?

சி.பி.செந்தில்குமார் said...

>>>அதன் பின் அப்பாவே தியேட்டருக்கு ஃபோன் செய்து டிக்கெட் புக் பண்ணி,
சென்று வர ஜீப்பும், துணைக்கு எங்கள் வீட்டில் இருந்த வாட்ச்மேனையும்

எல்லாரும் கேட்டுக்குங்க.. ராஜி வீட்ல ஜீப் இருக்கு.. வாட்ச்மேன் இருக்காரு,..ஹா ஹா

சி.பி.செந்தில்குமார் said...

>>>அவர் அறை வாசல் கிட்ட
போனதும் ஓட்டை விழுந்த தண்ணிப் பானை கணக்கா வடிஞ்சு போச்சு.
சட்டை நுனியைத் திருகிக்கிட்டே

ஆ.. கண்டு பிடித்தேன் ஒரு லாஜிக் ஓட்டையை.. நீங்க ஜாக்கெட் தானே போட்டிருப்பீங்க..அதெப்பிடி சட்டையை திருகுவீங்க.. டே சி பி சபாஷ்டா... ஹி ஹி

சி.பி.செந்தில்குமார் said...

வழக்கமான உங்க பதிவிலிருந்து வித்தியாசமான ஒரு ஃபிளாஸ்பேக் காமெடி அனுபவ பதிவு.. வாழ்த்துக்கள்./.. இதே போல் அப்பப்ப எழுதுங்க.. கும்ம வசதியா இருக்கும்.. ஆன்மீகப்பதிவுல கும்முனா உம்மாச்சி கண்ணை குத்திடும்.. ஹா ஹா

RVS said...

ரமணி சார் கமெண்ட்டை ரசித்தேன்.
அந்தப் பாடல் பூராவும் அப்படித்தான் எழுதியிருப்பார் ராஜேந்தர்.
நதியில்லாத ஓடம் அப்படின்னு வரிசையா இல்லாத காரியங்கள் எழுதியிருப்பார்... ;-)

RVS said...

ரிஷபன் சார் கமென்ட் ஆஹோ ஓஹோ.. ;-)

முத்துலெட்சுமி/muthuletchumi said...

:)

raji said...

@வை கோபாலலிருஷ்ணன் சார்

பாராட்டிற்கும் வாழ்த்திற்கும் நன்றி சார்

@சித்ரா

பின்னூட்டத்தில அர்த்தம் சொல்லிருக்கேன் உங்களுக்கு

@நிரூபன்

நம்மில் நிறைய பேருக்கு இந்த அனுபவம் இருந்திருக்கும்

@சிவகுமார்

கொஞ்சம் ஓவரா டோஸ் மாதிரி தெரியுதே

@ரத்னவேல் ஐயா

நன்றி

தங்கள் பதிவு படித்து பின்னூட்டமும் அளித்துள்ளேன்

@எல் கே

பதில் பின்னூட்டத்தில்

@அருண்

அர்த்தம் பின்னூட்டத்தில் கொடுத்துள்ளேன்
நீங்க கேட்டிருந்தவர் பத்தி
மிஸ்டர் சிவகுமாருக்கு அளித்த பதிலில் கூறி இருக்கிறேன்

@வெங்கட் நாகராஜ்

அந்த பாடல் எனக்கு மிகவும் பிடித்த பாடல்

@கோபி ராமமூர்த்தி

கொடுப்பினை இருக்கு.
இத்தனை சக பெண் பதிவர்கள் இருக்கோமே

@இராஜராஜேஸ்வரி

நன்றி

@கோவை2தில்லி

நன்றி

ஆமாம் அருமையான பாடல் அது

@மாதவி

ஆமாம் மாதவி

@ரிஷபன்

நல்ல நகைச்சுவையான பின்னூட்டம்.உங்கள் பின்னூட்டம் அடிக்கடி
பார்க்க முடிவதில்லையே

@லக்ஷ்மிமா

முற்றிலும் உண்மை லக்ஷ்மிமா

@ரமணி

தெளிவான வழிகாட்டுதலோடு கூடிய
பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி

@திருமதி பி எஸ் ஸ்ரீதர்

ஆமாம் ஆச்சி.இது பாடலுக்காகவே ஓடிய படம்
கருத்துக்கு நன்றி

@சி பி செந்தில்குமார்

தமிழ்மண ஹிட் வாழ்த்துக்களுக்கு நன்றி.ஆனால் அதை நான் எப்படி பார்ப்பது என்று
எனக்கு தெரியவில்லை.

ஆன்மீக ஸ்பெஷலிஸ்ட்? நன்றி

ஜாக்கெட் எனபது ஆங்கிலஸ் சொல் சார்
தமிழில் மேல்சட்டை என கூறலாம்,அப்படி கூறுவதை சட்டை
என்றும் சொல்லலாம்
(லாஜியோட லாஜிக் சரிதான்)


@ஆர் வி எஸ்

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

@முத்துலெட்சுமி

என்னாச்சு? டெம்ப்லேட் கமென்ட்!!!! பிசியா?

தீபிகா said...

சின்ன வயசு.. சின்ன வயசு.. சூப்பருங்கோ

சி.பி.செந்தில்குமார் said...

>>தமிழ்மண ஹிட் வாழ்த்துக்களுக்கு நன்றி.ஆனால் அதை நான் எப்படி பார்ப்பது என்று
எனக்கு தெரியவில்லை.

www.tamilmanam.net இந்த அட்ரஸில் போனால் லெஃப்ட் சைடில் 7 ஓட்டுக்கள் வாங்கிய இடுகைகள் ஹிட் லிஸ்ட்டில் காட்டும் . 2 மணி நேரம் இருக்கும் .. பாருங்க.. அப்புறம் 250 பேர் பார்த்தால் அது சூடான இடுகையில் மேலே காட்டும்..

raji said...

@ சி பி செந்தில்குமார்

தகவலுக்கு மிக்க நன்றி

r.v.saravanan said...

நல்ல சுவாரஸ்ய அனுபவ பகிர்வு

நம்பிக்கைபாண்டியன் said...

சினிமாவுக்கு செல்ல அப்பாவிடம் அனுமதி கேட்க நினைத்த அண்ணன்களும், மறுப்பு சொல்லாமல் அனுமதித்த அப்பாவும், இங்கு ரசிக்கத்தக்கவ்ர்கள்!

Post a Comment