Showing posts with label சுயபுராணம். Show all posts
Showing posts with label சுயபுராணம். Show all posts

Thursday, March 24, 2011

ஒருதலை ராகம்

டைட்டிலைப் பாத்ததுமே அவங்கவங்களுக்கும் கற்பனை ஓடுமே.
ஆஹா! ராஜி ஏதோ ஒன் சைட் லவ் பத்தி எழுதி இருக்காங்க போல
அப்டின்னு நினைச்சு வரவங்க எல்லாம் ஏமாற வேண்டியதுதான்.

இது ஒருதலை ராகம்னு ஒரு படம் வந்ததே அப்ப நடந்த ஒரு
விஷயம்.அடச்சே! அவ்வளவுதானான்னு சொல்லறீங்களா? ஹா! ஹா!ஹா!

"ஒருதலை ராகம்" படம் வந்த புதுசுல அந்த சினிமாக்கு போக ஆசைப்பட்டு அப்பாகிட்ட எப்பிடி பர்மிஷன் வாங்கறதுன்னு தெரியாம கடைசி
அண்ணாக்கள் ரெண்டு பேரும் யோசிச்சுக்கிட்டு இருந்தாங்க.

சட்டுன்னு யோசனை தோணி ஐயோ பாவமா இருக்கற என்னை(!!)
கூப்பிட்டு "நீ  கணக்குல நல்ல மார்க் வாங்கிருக்க,அதனால நீ
போய் அனுமதி கேளு.நீ கேட்டா அப்பா சரின்னுடுவார்"னு என்னை
உசுப்பேத்த நானும் பேக்கு மாதிரி (மாதிரி என்ன அப்படியேதான்னா
சொல்லறீங்க?) அப்பா கிட்ட கேக்க அவர் இருந்த அறைக்கு போனேன்.

அதுவரைக்கும் இருந்த தைரியம் எல்லாம் அவர் அறை வாசல் கிட்ட
போனதும் ஓட்டை விழுந்த தண்ணிப் பானை கணக்கா வடிஞ்சு போச்சு.
சட்டை நுனியைத் திருகிக்கிட்டே நானும் திரு திருன்னு முழிச்சிக்கிட்டு
வாசல்லையே தயங்கி தயங்கி நின்னேன்.

ஏதோ ஃபைல் பாத்துக்கிட்டுருந்தவர் வாசல்ல என்னைப் பாத்ததும் "என்ன வேணும்?"னு கேட்டுட்டு மறுபடி ஃபைல்  பாக்க  ஆரம்பிச்சுட்டார்.
மெதுவா உள்ள போயி நின்னேன். அவர் நிமிந்து பாத்து "என்ன வேணும்?"னு கேட்டார்.

"வந்து.. வந்து... அண்ணா எல்லாரும் "ஒருதலை ராகம்"ங்கற சினிமாக்கு
போக பர்மிஷன் வாங்கிண்டு வரச்சொல்லி அனுப்பிச்சா".
(அடிப்பாவி! கவுத்துட்டாளே! - இது அண்ணாக்களோட மைன்ட் வாய்ஸ்)

"என்ன படம் பேரு சொன்ன?"

"ஒருதலை ராகம்"

"ஓ.....! சரி,  நீ ஒண்ணு பண்ணு.முதல்ல ஒருதலை ராகம்னா என்னனு
தெரிஞ்சா சொல்லு.நான் பர்மிஷன் தரேன்"

".................................................."

"என்ன? அர்த்தம் சொல்றயா?"

"என்ன கேட்டுண்டிருக்கேள் அவளை" என்று காபியுடன் அங்கு வந்த
என் ஆபத்பாந்தவி, அனாதரட்சகி, பெற்ற தாயினும் உற்ற துணையேது
என்பது போல் வந்தாள்

ஓடிச்  சென்று அம்மாவின் புடவைத் தலைப்பை பிடித்துக் கொண்டு நின்றேன் நான்

"உன் புத்திர சிகாமணிகளுக்கெல்லாம்  ஒருதலை ராகம்  சினிமா  போகணுமாம்.அதுக்கு இந்த பெரிய மனுஷி தூது.அதான் ஒருதலை ராகம்னா 
என்ன அர்த்தம்னு தெரியுமான்னு கேட்டுண்டிருக்கேன்"

"சின்னக் குழந்தை கிட்ட போய் (அம்மா அம்மாதான்) என்ன கேக்கறேள்?
நீ போடி" என்று என்னை வெளியே அனுப்பி என்னை ரட்சித்தாள்  

அதன் பின் அப்பாவே தியேட்டருக்கு ஃபோன் செய்து டிக்கெட் புக் பண்ணி,
சென்று வர ஜீப்பும், துணைக்கு எங்கள் வீட்டில் இருந்த வாட்ச்மேனையும்
அனுப்ப ஜாலியாய் சினிமா பார்த்து விட்டு வந்தோம்.

வந்த பின் தூக்கக் கலக்கத்தில் சாப்பிட்டுக் கொண்டிருந்த என்னைப் பார்த்து, " என்ன? படம் பாத்தயே! இப்பவாவது ஒருதலை ராகம்னா என்ன
அர்த்தம்னு தெரிஞ்சதா?" என்று கேட்டார்.

"அதெல்லாம் தெரியலை.ஆனா அதுல இது குழந்தை பாடும் தாலாட்டுன்னு
ஒரு பாட்டு நல்லாருந்தது"  

"குழந்தை  பாடும் தாலாட்டா?குழந்தை எப்படி தாலாட்டு பாடும்? என்ற அவரது 
அடுத்த கேள்விக்கு நான் எனது வழக்கம் போல் திரு திரு முழியை
பதிலாக்கி விட்டு தட்டையும் கையும் அலம்ப எடுத்தேன் ஓட்டம்.

Thursday, March 3, 2011

ராஜபாளையம் ராஜி

பதிவர் ஆர் வி எஸ் சார்,  பெயர்க் காரணம் எழுத ரிலே ரேசுக்கு என் பெயரை
குறிப்பிட்டிருந்தார். சரி, நம்மளும் நம்ம பெயர் பெற்ற  கதையை எழுதி 
ஏதாவது பெயர்  வாங்க முடியுமா  பாக்கலாம்னு துறு துறுத்த கையை கட்டுப் 
படுத்த முடியாம எழுத ஆரம்பிச்சுட்டேன்

ஆதௌ கீர்த்தனாம்பரத்திலே பல வருஷங்களுக்கு முன்னாடி ஒரு சுப யோக சுப தினத்திலே  ராஜபாளையம்  என்கிற ஊரிலே ஒரு பௌர்ணமி 
தினத்திலே ஒரு அழகான(!!!!!) பெண் குழந்தை பிறந்தது.அந்த குழந்தை
பிறந்த அன்னிக்கு குழந்தையோட அப்பா கோயம்பத்தூரில் இருந்தார்.
அவருக்கு அன்று கோயம்புத்தூரை சேர்ந்த "ராஜலக்ஷ்மி மில்ஸ்" உரிமையாளருடன் சந்திப்பு இருந்தது.

சந்திப்பு முடிஞ்சதும் அந்த "ராஜலக்ஷ்மி மில்ஸ்" உரிமையாளர் அந்த சந்திப்பின் அடையாளமா ஒரு சாவிக் கொத்தை அந்த குழந்தையின் அப்பாவிற்கு பரிசளிக்க, குழந்தை பிறந்த தந்தியும் தந்தையை சென்றடைந்தது.ஒரே 
சமயத்தில் தந்தியும் சாவியும் ஒன்றாக கிடைக்கப் பெற்ற குழந்தையின் 
தந்தை தந்தியை படித்து மகிழ்ந்ததும் கையிலிருந்த சாவிக் கொத்தை 
பார்க்க அதில் "ராஜலக்ஷ்மி மில்ஸ்" என்று பொறிக்கப் பட்ட எழுத்துக்கள் கண்ணில் பட்டது.

ஊர் திரும்பிய தந்தை , ஒரு காலத்தில் தன் மகள் இந்த ராஜ்யத்தையே 
ஆளக் கூடும் என்று கனவு கண்டிருப்பார் போல.எனவே தந்தி கிடைத்த பொழுது கையிலிருந்த சாவிக் கொத்தில் பார்த்த "ராஜலக்ஷ்மி" என்ற 
திரு நாமத்தையே தன் திருக் குமாரத்திக்கு சூட்டி மகிழ்ந்தார்.

குழந்தையின் தாத்தா, பாட்டி, பௌர்ணமி தினத்தன்று பிறந்த பெண் குழந்தை 
என்பதால் பூர்ண லக்ஷ்மி என்று பெயர் வைக்கலாம் என கூற தந்தையோ
பின்னாளில் தன் மகளை எல்லோரும் பூர்ணம் என்று அழைப்பார்கள் 
என்று சொல்லி அந்த பெயரை தவிர்த்ததால் (நல்ல   வேளைடா சாமி!!) பெரியவர்கள்  வேறு பெயரும் ஏதாவது வைக்கலாம் என்று அபிப்ராயப் பட்டதில் குழந்தை பிறந்த தினத்தன்று 
இருந்த நட்சத்திரமான 'ரேவதி' என்ற பெயரும் ஏக மனதாக தேர்ந்தெடுக்கப் பட்டு அந்த பெயர் சூட்டப்பட்டது.

பின்னாளில் பள்ளியில் சேர்க்கும் பொழுது ரெஜிஸ்தரில் "ராஜலக்ஷ்மி" 
என்பதையே தந்தை கொடுக்க அந்த குழந்தைக்கு ஆதார பூர்வ பெயராக 
அதுவே நிலைத்தது

இப்ப உங்களுக்கு என்ன சந்தேஹம்?  அந்த  குழந்தை யாருன்னுதான?
சாட்சாத் அடியேன்தான்!!(இதுக்கா இத்தனை பில்ட் அப் குடுத்தனு தோணுதோ?)

பள்ளியில் நான் சேர்ந்ததும் ராஜலக்ஷ்மி என்று  கூப்பிட்டு நீட்டி முழக்க 
கஷ்டப்பட்டு என்னை பலர் 'ராஜி' ஆக்கி விட்டனர்.அந்த 'ராஜி'யையும் 
ஒழுங்கா சொல்லத் தெரியாமல் நான் 'லாஜி' ஆன கதை நீங்கள் அறிந்ததே.

மூன்று அக்காக்கள், நான்கு அண்ணாக்களுடன்  கடைக்குட்டியாக 
பிறந்த நான் எல்லோருக்கும் செல்லம் என்று ஆனதில் அப்பாவால்
சில சமயம் குட்டிம்மா என குழந்தையாக இருந்த பொழுது அழைக்கப் 
பட்டிருக்கிறேன்.

அதன் பின் விவரம் அறிந்த வயதாகும் பொழுது மற்றவர்கள் முன்னிலையில்
அப்படி அழைப்பதை நான்  விரும்பவில்லை  என்றறிந்ததும் நிறுத்தி 
விட்டார்(வருத்தப் பட்டிருப்பாரோ??)

திருமணத்திற்குப் பின் ஏதாவது சமயங்களில் கணவரின் முழுப் பெயரையும் 
என் பெயரின் பின் சேர்த்து எழுத வேண்டி வந்தால் அந்த பேப்பர் நுனி வரை
எழுத வேண்டி இருக்கும். "ராஜலக்ஷ்மி  வெங்கடக்ருஷ்ணன்" என்று 
எழுதி முடிக்கும் பொழுது அந்த வரி முடியும் இடத்தில்  பேப்பர் முடிந்திருக்கும். 


தந்தை சூட்டிய ராஜலக்ஷ்மி என்ற பெயருக்கேற்றால் போல் நான் எந்த 
ராஜ்யத்தையும் ஆளும் லக்ஷ்மியாக இல்லை.பிறர்  மீது எனது ஆளுமையை செலுத்தியதும் இல்லை.செலுத்த எண்ணியதும் இல்லை.எழுத்தை கையாளும் பெண்ணாக இருப்பதில் எனது தந்தைக்கு மகிழ்ச்சியே.

கஷ்டப்பட்டு வாழ்வில் முன்னுக்கு வந்து கஷ்டம் என்பதை  நான் 
அறியாத வண்ணம் வளர்த்தவர் என் தந்தை.என் மூத்த அக்காக்களும் அண்ணாக்களும் பட்ட கஷ்டங்கள் எதுவும் நான் படவில்லை.அதற்குள் அவர் உயர் பதவிகள்  பெற்று நல்ல நிலைக்கு வந்து விட்டதால் நான் ஒரு குறையுமின்றி வளர்ந்தேன்.

ராஜலக்ஷ்மி என்ற பெயர் சூட்டி கஷ்டம்,குறை என்பதையே 
அறிந்திராத பெண்ணாக என்னை வளர்த்த எண்பத்து ஐந்து வயதாகும் என் தந்தைக்கு இப்பதிவை நான் சமர்ப்பிக்கின்றேன் 


இந்த தொடர் எழுத்தான பெயர்க் காரணத்தை தொடர  சக பதிவர்கள் சிலருக்கு நான் அழைப்பு விடுக்கிறேன்.என் வேண்டுகோளை  கீழிருக்கும் பதிவர்கள் முன் வைக்கிறேன்.



நான் எழுதும்  பதிவுகளில் என்னத்த எழுதறாங்கன்னு 
நினைக்காம எண்ணத்தை என்னமா எழுதறாங்கன்னு ஊக்கம் தருபவர்.



என் பதிவுல முதல் பின் தொடர்பவரா வந்து மாட்டிக்கிட்டவர்.
மாட்டின பாவத்துக்கு எனக்கு இன்றும் நிறைய உதவிகள் செய்து வருபவர்.


புதுசா ஒரு பெண் பதிவர் வந்துருக்காங்களே என்ன ஏதுன்னு பார்ப்போம்னு 
வந்து பாத்துட்டு  நொந்து போனாலும் என் பதிவை தொடரும் ஒரு அப்பாவி.


பதிவுலகுக்கு வந்த புதுசுல இவங்க எனக்கு பின்னூட்டம் போட,
நான் இவங்க ப்ரோபைலையே பாக்காம இவங்களை மிஸ்டர்னு கூப்ட,
இவங்க பதறி போயி நான் மிஸ்டர் இல்லைங்க மிசஸ்  அப்டின்னு 
பரிதாபமா அனுப்பினாங்க.அதுக்கப்பறம்  நான்  வழிஞ்சது தனி கதை.


பதிவுலகத்துல என்னையும் ஒரு பெரிய பதிவர்னு நினைச்சு
என் பதிவுல நல்ல எழுத்துகளை எதிர்பாக்கறவங்க

என்னை ஊக்குவிக்கறவங்கள்ள  இவரும் ஒருத்தர்


என் வேண்டுகோளுக்கிணங்கி இவர்களை இதை தொடர அழைக்கிறேன்

Friday, February 11, 2011

எழுத வந்த கதை



எழுதுகோல் தெய்வம் அந்த எழுத்தும் தெய்வம்

உண்மையில் நான் இன்று பதிவிடுவதாகவே இல்லை.அதிலும் நிச்சயமாக
சுயபுராணம் பாடுவதாகவே இல்லை.அடுத்த பதிவாக அலமேலுவைத்தான்
அழைக்க எண்ணியிருந்தேன்.அதற்குள் இன்று இப்படி ஒரு பதிவு போடும் நிலை
ஏற்பட்டதால் போடுகின்றேன்.முதலில் இதை போடலாமா வேண்டாமா என்றெல்லாம் தயக்கம் இருந்தது.ஒருவழியாக போடலாம் என தீர்மானித்துவிட்டேன்.கட்டாயம் இந்த சுயபுராணத்தில் நகைச்சுவைக்கு இடமே இல்லை.எதிர்பார்க்க வேண்டாம்.

எனது முந்தைய பதிவில் கனவுகளைப் பற்றிய கவிதை(அதை நீதான் கவிதைன்னு சொல்லிக்கணும்னு யாரோ முணு முணுக்கறாங்களே) ஒன்று போட்டிருந்தேன்.
அதில் சக பதிவர் திரு ரமணி அவர்கள் போட்டிருந்த பின்னூட்டம்தான் என்னை இந்த பதிவு எழுத தூண்டியது.அவருடைய பின்னூட்டத்தை இங்கே கீழே
தந்திருக்கிறேன்.

//Ramani said...


நல்ல தலைப்பு.உறங்கிப்போன கனவுகள்தானே

ஓய்ந்து போனவைகள் இல்லையே

உறுதியாய் ஒரு நாள் விழிக்கும் என்ற

எண்ணத்தில்தான் அந்த தலைப்பிட்டிருப்பீர்கள்

என நினைக்கிறேன்நல்ல பதிவு.தொடர வாழ்த்துக்கள் //

இந்த பின்னூட்டம் என் அடி மனதில் இருந்த எண்ணங்களை மேலே கொண்டு வந்து
விட்டது.நான் எவ்வாறு எழுத வந்தேன் என்பதும் இதில் அடங்கும்.
பதினேழு வருடத்திற்கு முன்பு சில காரணங்களால் நான் எழுதுவதை
நிறுத்திவிட்டேன்.இந்த பதினேழு வருட கால இடைவெளியில் மளிகை சாமான் லிஸ்ட் போடவும், பேங்க் செக் மற்றும் டாகுமெண்ட்சில் கையெழுத்து போடவும்,
மகளின் பாடங்களில் உதவவும் மற்றும் சில வேலைகளுக்காகவும் மட்டுமே
பயன் பட்டுக் கொண்டிருந்த எனது பேனாவை மீண்டும் எழுதுவதற்காக
பிடிக்க வைத்தவள் எனது தோழிதான்.

ஒவ்வொருவருக்கும் வாழ்க்கையில் ஒவ்வொரு கனவுகள் இருக்கும்.எல்லோருக்கும் எல்லா கனவுகளும் நிறைவேறுவதில்லை.சிலருக்கு கனவுகளை ஒதுக்க வேண்டியிருக்கும்.சிலருக்கு பதுக்க வேண்டியிருக்கும்.ஒரு சிலருக்கோ இறுதி வரை
நிறைவேறாமல் கனவுகள் இறந்தே போக வேண்டியிருக்கும்.

 பதிவர் திரு ரமணி குறிப்பிட்டது போல், என் எழுத்துக் கனவு உறங்கி போன
கனவு.அது ஓய்ந்து விடவில்லை.உறுதியாய் ஒரு நாள் விழித்த கனவு.
(யாரது அங்கே? ஏன்தான் விழிச்சதோனு புலம்பறது? எனக்கு காது கேட்டிருச்சு)

நான் எழுதுவதை நிறுத்தியதில் என்னை  சேர்ந்த பலருக்கும் வருத்தம் ஏற்பட்டிருந்தது (நிஜமாதாங்க). உடன்பிறந்தவர்கள்,பெற்றோர்,கணவர் மற்றும்
தோழி என அனைவருக்கும் நான் எழுதுவதில்தான்  விருப்பம்  என்றாலும்
ஒரு  குறிப்பிட்ட காரணத்திற்காக நான் நிறுத்திவிட்டேன்(காரணத்தை இங்கு நான் வெளியிட விரும்பவில்லை).

நான் ஒதுக்கியிருந்த என் எழுதுகோலை மீண்டும் ஜனிக்க வைத்து இன்று
உங்கள் முன் என் எழுத்து இருக்க காரணம் என் தோழி.
நான் மீண்டும் எழுதுவதை அறிந்து என்னை சேர்ந்தவர்கள் மிகுந்த சந்தோஷம்  அடைந்தாலும்  எண்பது வயது அடைந்த எனது தாயாரின் மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை.அதிலும்  "உணர்ந்தேன்" என்ற தலைப்பில் தாயாரைப் பற்றிய
எனது கவிதையைப் படித்து விட்டு அவர்கள் முகத்தில் ஏற்பட்ட உணர்ச்சியை எத்தனை கோடி கவிதைகள் படைத்தாலும் என்னால் வடிக்க இயலாது.

என்னை எழுத வைத்ததன் மூலம் தானும் சந்தோஷப்பட்டு என் சந்தோஷத்தையும்
கொண்டு வந்த்ததோடன்றி என் தாயரையும் மகிழ வைத்த பெருமை அந்த தோழியைத்தான் சேரும்.

அப்படிப்பட்ட நட்புக்கும் என் வாழ்வில் சோதனை வந்தது. அந்த சோதனையைக் கடந்து இன்று வரை அந்த நட்பு உறுதியாய் இருக்க என் கணவர் முக்கிய காரணமாவார்.
என் கணவர் மற்றும் தோழியின் கணவரின் ஒத்துழைப்பில் எங்கள் நட்பு
இன்று விருட்சமாக வளர்கின்றது.

இப்பொழுதும் என் எழுத்து எப்பொழுது வேண்டுமானாலும் நிற்கலாம்.
ஆனாலும் நான் மீண்டும்  எழுதிய சந்தோஷ தருணங்களை எனக்கு அளித்த என்
தோழிக்கு,  அவள் விரும்புகிற என் எழுத்தையும், அவள் விரும்பும் என் குரலில் எழும் கீர்த்தனைகளையும் நான் சமர்ப்பிக்கிறேன். நன்றி என்று கூறி நட்பை அன்னியப் படுத்த நான் விரும்பவில்லை.

பெருமை பேசும் விஷயங்களை அவள் விரும்ப மாட்டாள் என்ற காரணத்தால் இங்கு அவள் பெயரை நான் குறிப்பிடவில்லை.

இந்த பதிவை போடுவதில் முதலில் எனக்கு  தயக்கம் இருந்தது.பின்னர்தான்
நான் என் கனவை முடக்கியது  போல கனவுகளை முடக்கி வைத்துள்ள  யாருக்காவது, அவர்கள் கனவை
எழுப்ப இது காரணமாக மாறலாம் என்ற எண்ணம் தோன்றியது.அதனால் போட்டிருக்கின்றேன்.

இந்த பதிவை டைப் செய்யும் பொழுது நிறைய இடங்களில் தடுமாற்றம் ஏற்பட்டு
விட்டது.அதனால் நான் நினைத்த வடிவத்தை இது பெறவில்லை.இருப்பினும்
எப்படியோ போட்டு விட்டேன்.

எழுத்தாளர் வித்யா சுப்ரமணியம் அவர்களுடன் ஒரு முறை அலைபேசியில்
அவரது "உப்புக் கணக்கு"  புதினத்தைப் பற்றி உரையாடிக் கொண்டிருக்கும் பொழுது
அவர் தன் வலைப்பூவையும் பார்க்குமாறு கூறினார். அப்பொழுதுதான் நான்
வலைப்பூவிற்கு முதல் முறையாக வந்தேன்.

பின் எனது தோழியின் ஊக்கத்தால் இப்பொழுது வரை எழுதுகிறேன்.
கணவர்,பெற்றோர் மற்றும் உடன்பிறந்தோருக்கு இதனால் மட்டற்ற மகிழ்ச்சி.

"முகநக நட்பது நட்பன்று நெஞ்சத்து
அகநக நட்பது நட்பு"

இந்த குறளை நான் வாழ்க்கையில் உணர்ந்திருக்கிறேன்.இன்றும் உணர்கிறேன்.என்றும் உணர்வேன்.

பிறரின் கனவுகள் நிறைவேற நாமுமொரு கருவியாய் இருப்போம்.



Monday, February 7, 2011

ஸ்ரீவில்லிபுத்தூரும் சிவகாமி பாடசாலையும்


என்னுடைய ஒரு பதிவில் ஆறு வயதுக்கு முன் பள்ளியில் சென்று அமர்ந்த
அனுபவத்தை பகிர்ந்து கொண்டேன்.அப்பொழுது  நான் சென்றது திருவாரூரில் உள்ள
நகராட்சி பள்ளிக்கு.ஒரு வருடம்  கழித்து வயது ஆறானதும் முறைப்படி என்னை
பள்ளியில் சேர்த்தார்கள்.அந்த வருடம் நாங்கள் திருவாரூரிலிருந்து ஸ்ரீவில்லிபுத்தூருக்கு மாறிவிட்டோம்.அப்பாவின் வேலை பணிமாற்றத்திற்கு  உட்பட்டதாக இருந்ததால் நான் வருடம் ஒரு பள்ளியில் படித்தேன்.அவர் ஒரு நேர்மையான அதிகாரியாக இருந்த காரணத்தாலேயே
எங்கள் குடும்பம் ஒரு வருடத்திற்கு மேல் எந்த ஊரிலும் இருந்ததில்லை.
எனக்கு ஆறு வயதாகும் பொழுது நாங்கள் ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்ததால்
என்னை அங்கிருந்த சிவகாமி ஆரம்ப பாடசாலையில் சேர்த்தனர்.

'ர'கரம்  படுத்திய பாடு:  ஆறு வயதாகியும்  கூட என் வாய்க்கும் 'ர'கரத்திற்கும்
ஏனோ ஒத்தே வரவில்லை.எத்தனை முயன்றாலும் 'ர'கரத்தை 'ல'கரமாக உச்சரிப்பதே என் வழக்கமாக இருந்து வந்தது.யாராவது உன் பெயர் என்ன என்று கேட்டால் பளிச்சென்று 'லாஜி' என்றுதான் கூலுவேன் (ஐயோ!பழைய  நினைப்புல
தப்பா டைப்பிட்டேன்.சாரி!) கூறுவேன்.தினமும் என் அக்கா இதற்காக என்னோடு போலாடாத..சீ சீ போராடாத நாளே இல்லை எனலாம்.

லாஜிக்கு போட்ட லைட்டு:   

பள்ளியில் சேரும் போது எனக்கு ஒரு சிலேட்டும் பலப்பமும்  வாங்கி தந்து அனுப்பினர்.அப்பொழுதெல்லாம் சிலேட்,பலப்பம்தான். முதல் மூன்று மாதங்களுக்கு
சும்மா பள்ளியில் 'அ'  'ஆ'  'இ' 'ஈ'  எழுதுவதோடு  சரி.மற்ற படி வாயால் ஒப்பித்தலும் பதில்  கூறுதலும்தான்.மூன்று மாதங்களுக்கு பிறகு சிலேட்டில் எழுதக் கூடிய
சின்ன சின்ன வீட்டுப் பாடங்கள் தருவார்கள்.சிலேட்டில் எழுதிய வீட்டுப்
பாடத்தை அழியாமல் ஸ்கூலுக்கு எடுத்து  சென்று காமிக்கும் டெக்னிக் இருக்கிறதே.. அப்பப்பா.. .,  அப்படி எழுதியதை அழியாமல் கொண்டு சென்று அதில் வாத்தியாரிடம்
'டிக்' வாங்கும்போது ஏதோ இமாலய சாதனை செய்தது போல ஒரு பீற்றல் இருக்கும்.
அழியாமல் கொண்டு சென்றவர்கள், அழிந்து போய் எடுத்து வருபவர்களின் பொறாமைக்கு ஆளாவோம்.

அப்படி வாத்தியாரிடம் 'டிக்' வாங்கிய பெருமையை வீட்டில் வந்து சொல்லும் போது
நான் சொல்வதைக்  கேட்டு எல்லாரும் சிரிப்பார்கள். ஏனென்றால் நான் சொல்லும் லட்சணம் அப்படி. "எங்க வாத்தியால் எனக்கு லைட் போட்டாலே"
(எங்க வாத்தியார் எனக்கு ரைட் போட்டாரே)

அப்பொழுது எங்கள் வீட்டில் அப்பாவின் பணி நிமித்தமாக ஒரு வாட்ச்மேன்
ஒருவர் உண்டு.அவர் பெயர் வைத்தி.அவர் நான்  பள்ளியில் இருந்து வந்ததுமே
என்னைப் பார்த்து கேட்பார்."என்ன லாஜிம்மா இன்னிக்கு உங்க வாத்தியால்
உனக்கு லைட்டு போட்டாலா? (உங்க வாத்தியார் உனக்கு ரைட் போட்டாரா")
என்ன லைட்டு? ட்யூப் லைட்டா பெட்ரமாக்ஸ் லைட்டா?" என்பார்.
இப்பொழுது மேலே எழுதி இருக்கும் லாஜிக்கு போட்ட லைட்டு என்ற தலைப்பின்
அர்த்தம் உங்களுக்கு நன்றாகப் புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன்.

'ல' கரத்தை 'ர'கரமாக்கிய புண்ணியவான்:

என் 'ல'கரத்தை 'ர'கரமாக மாற்றும்  முயற்சியில்,  சிவகாமி ஆரம்ப பாடசாலையின் தலைமை ஆசிரியராக இருந்த நாராயணன் அவர்களுக்கு நான் ஒரு பெரிய சவாலாகவே மாறி விட்டேன் .சமஸ்க்ருதத்தில் புலமை பெற்ற ஸ்ரீனிவாச அய்யங்காரின் கடைசி திருமகளுக்கு 'ர'கரம் கூட வரவில்லையே என்று வெறுத்துப் போனார்.

தினமும் பள்ளி முடிந்ததும் நான் போய் அவர் அறை வாசலில் நின்று எட்டிப் பார்ப்பேன்.கருணையே உருவான அவர் எந்த குழந்தை வந்து எதை கேட்டாலும் அதை தயங்காமல் கொடுத்து விடுவார்.நான் அவர் அறைவாசலில் நின்று எட்டிப் பார்த்ததும் எழுந்து வருவார்.அந்த பள்ளியில்  ஒரு பாதாம் மரம் இருக்கும்.நான் அதிலுள்ள பாதாம்பருப்பை  கேட்பேன்.அவர் ப்யூனை அழைத்து தட்டி தர
சொல்வார். அதை என்னிடம் தரும் முன்பு ஒரு ஸ்லோகம் கூறினால் தருகிறேன் என்பார்.நானும் எனது லகர ரகரத்தை கலந்து கட்டி ஏதாவது ஒரு ஸ்லோகம் கூறி வாங்கிக் கொள்வேன்.இப்படியாக எனது நாவில் அதுவரை எட்டிப் பார்த்தே இராத 'ர'கரத்தை வெற்றிகரமாக குடி கொள்ள  செய்தார்.(இப்பொழுது இப்படி,  இது போல் தலைமை
ஆசிரியர்களோ,ஆசிரியர்களோ இருக்கிறார்களா என தெரியவில்லை)

ஒரு வழியாக ராஜியும் ரைட் வாங்க ஆரம்பித்தாள்.அந்த சிவகாமி ஆரம்ப 
பாடசாலை இப்பொழுது இன்னும் ஸ்ரீவில்லிபுத்தூரில் இருக்கிறதா என்று தெரியவில்லை.இருந்தால் சென்று பார்க்க ஆசை.திருமணமான புதிதில்
கொடைக்கானல் செல்லும் பொழுது மதுரை கள்ளழகரையும், ஸ்ரீவில்லிபுத்தூர்
ஆண்டாளையும் தரிசிக்க சென்றோம்.அப்பொழுது இந்த சிவகாமி பாடசாலை
பற்றி விசாரிக்க இயலவில்லை.கொடைக்கானலுக்கு வந்தயா?பாடசாலை
பாக்க வந்தயா? என்று ரங்கமணி  கோபித்தால் என்ன செய்வது என்ற பயத்தில்
(அப்போது மட்டும்தான்.ஹி...ஹி... என்ன இருந்தாலும் கல்யாணமான புதுசு இல்லையா!!!)பேசாமல் இருந்து விட்டேன்.வாய்ப்பு நழுவி விட்டது.

ஸ்ரீவில்லிபுத்தூரைப் பற்றிய பதிவாக இருப்பதால், நினைவுக்கு வரும் ஆண்டாளையும் இதில் இணைத்துள்ளேன்.ஆண்டாள் மடியில் ரங்கமன்னார்
தலை வைத்து படுத்திருக்கும் இந்த அற்புதக் கோலம் மிகவும் பிரசித்தம்.
(இதை பார்த்து விட்டு எல்லா ரங்கமணிகளும் முயற்சி செய்ய நினைத்து
தங்கமணிகளின் கோபத்துக்கு ஆளாக வேண்டாம் என்று எச்சரிக்கிறேன்)






Posted by Picasa
இதை இன்னும் ரசனையுடன் காண விரும்புபவர்கள்  கீழே இருக்கும்
லிங்கிற்கு செல்லவும்.

http://www.youtube.com/watch?v=DY4eujFkHYw

Monday, January 31, 2011

அம்பேத்காரும், நானும்

      தலைப்பை பார்த்ததும இது ஏதோ பெரிய விஷயம் போலிருக்கிறது என்ற எதிர்பார்ப்புடன் படிக்க ஆரம்பித்தால் நிச்சயம் ஏமாற்றமே மிஞ்சும்.இது வெறும் சுய புராணம் பற்றிய பதிவே.
                 
 எழுபத்தைந்து  எழுபத்தாறு வருடங்களின்  காலமது. ப்ரீகே ஜி, எல் கே ஜி மற்றும் யூ கே ஜி  எல்லாம் எட்டிப் பார்த்திராத பொற்காலம் என்று கூட கூறலாம்.
ஆறு வயது நிரம்பி வலது கையால் இடது காதையோ அல்லது இடது கையால்
வலது காதையோ தலைக்கு மேல் வழியாக தொட முடிந்தால்தான் ஒன்றாம்
வகுப்பிற்கு சேர்த்துக் கொள்வார்கள்.(தமிழ் மீடியமாக இருந்தால் யாராவது என்ன படிக்கற என்று கேட்டால்,ஒண்ணாப்பு என்று ஸ்டைலாக பதில் வரும் நாகரிகமான
காலம்)
              
 அப்படிப்பட்ட எழுபத்தாறில்,அண்ணா பள்ளிக்கூடம் போகிறானே என்ற
காரணத்தால் ஆறு வயது நிரம்பாமலே அழுது அடம் செய்து நானும் அவனுடன்
போவேன் என்று பிடிவாதம் பண்ணி பள்ளிக்கூட படியை மிதித்த அனுபவம்
அன்று வீட்டிலுள்ளவர்களுக்கும் பள்ளியில் இருந்தவர்களுக்கும் எப்படி இருந்ததோ
தெரியாது.எனக்கு ஒரு அற்புதமான அனுபவம்தான்.
                
இரட்டைப் பின்னல் ஆட, அக்கா வித விதமாய்  தைக்கும் கவுன் போட்டுக் கொண்டு கையில் சிலேட்டு பலகையுடன் துள்ளிக் குதித்துக் கொண்டும்,  கூட்டி செல்லும் அண்ணாவுடன் சின்ன சின்னதாய் சண்டைகளுடனும் கிளம்பும் போது உற்சாகமாய் இருக்கும்.
               
முதலில் ஆறு வயது நிரம்பாத காரணத்தால் என்னை சேர்த்துக் கொள்ள மறுத்தார்கள்.முறைப்படி சேர்த்துக் கொள்ள வேண்டியதில்லை என்றும் சும்மா
ஒப்புக்கு சப்பாணியாக சேர்த்துக் கொள்ளுமாறு அப்பா  கூறியதாலும்  அவர் கமிஷனராக அங்கு இருந்த காரணத்தாலும் அண்ணாவின் வகுப்பிலேயே என்னையும் சும்மா உட்கார வைத்தார்கள்.
            
முதல் நாள் என்னை வகுப்பறைக்கு கூட்டி செல்லும்போது எழுந்த உற்சாக
ஊற்று என்னை உள்ளே உட்கார வைத்த விதத்தில் புஸ்சென்று அடங்கிப்
போனது.அத்தனை மாணவ, மாணவிகளும் பெஞ்சுகளில் அமர்ந்து கொள்ள
என்னை மட்டும் கீழே தனியே குட்டிப் பாயில்(கிழிஞ்ச நார்னு சொல்லலாம்)
அமர வைக்க நான் தொங்கிப் போன முகத்துடன் அமர்ந்தேன்
          
 இதில் பெஞ்சுகளில் அமர்ந்திருந்த மாணவிகள் இந்திர பதவியில்
அமர்ந்திருந்த லுக் ஒன்றை என் மேல் விடுவார்கள்.
         
 இதையெல்லாம் பொறுக்க முடியாமல் வீட்டிற்கு சென்றதுமே அப்பாவிடம்  சென்று முறையிட்டால் அவர் கண்டு கொள்வதாக இல்லை.
(அவருக்குத்தான் ஏற்கனவே தெரியுமே)
"இன்னிக்கு ஸ்கூல் போனியே,எப்பிடி இருந்தது?"  என்று கேட்ட அக்காவை பிடித்துக்
கொண்டு அவளுக்கு நான் சொன்ன பதிலில் அனைவருக்கும் அதிர்ச்சி.

"என்னை அம்பேத்கார் மாதிரி உக்கார வச்சுட்டாங்க"
"என்னது?" என்று கேட்ட அக்காவுக்கு பெரியண்ணாவின் வரலாறு புத்தகத்தை
கொண்டு வந்து தந்து அதைப் பிரித்து அதில் போட்டிருந்த அம்பேத்காரின் படத்தை
காண்பித்து இவரை மாதிரி என்று காண்பித்ததும் "உனக்கு இவரை பத்தி தெரியுமா?
எப்பிடித் தெரியும்?" என்றாள் அவள்.

அக்காவின் பக்கத்தில் உட்கார்ந்து அம்மா, ஆடு, இலை படிக்கும் போது
பெரியண்ணா வந்து பாடம் ஒப்பிப்பான்.
அம்பேத்கார் தாழ்த்தப்பட்ட வகுப்பை சேர்ந்தவர் என்ற காரணத்தால்
அவர் பள்ளியில் படிக்கும்போது மற்ற மாணவர்களுடன் அமர வைக்காது அவரை கீழே ஒரு கோணியில்(அதையும் அவரே கொண்டு வந்து கொண்டு செல்ல வேண்டும்) அமர வைப்பார்கள் என்று அண்ணா ஒப்பிப்பான்.
இதைக் கூறியதும் அவள் விழுந்து விழுந்து சிரித்ததின் அர்த்தம் எனக்குப் புரியவில்லை அப்பொழுது.

அர்த்தம் புரியாமலே அடுத்த நாள் பள்ளியில் தலைமை ஆசிரியரின் அறைக்கு
சென்று "என்னை மட்டும் ஏன் அம்பேத்கார் மாதிரி உக்கார வச்சுருக்கீங்க?"
என்று கேட்க அவர் என்னைப் பார்த்து அம்பேத்காரை நான் அறிந்த விதம் பற்றி கேட்க நான் சொன்னதும், இனிமையான புன்முறுவலுடன் "நீயும் அவர் மாதிரி
பெரிய ஆளா வரணுமில்லையா அதுக்காகத்தான்" என்றார்.
"அப்போ மத்தவங்கல்லாம் வர வேணாமா?என்ற எனது அடுத்த கேள்விக்கு
அவர் என்னருகே மண்டியிட்டு அமர்ந்து,எல்லாரும்தான் வரணும்.உன்னைப் பார்த்து மத்தவங்கல்லாம் வருவாங்க" என்றார்.

இந்த பதில் என்னை அப்பொழுது கொஞ்சம் சமாதானப் படுத்தியது.
அடுத்த நாள் இந்திர பதவிகளின் லுக்குக்கு, "நான் அம்பேத்கார் மாதிரி வருவேனாக்கும்" என்று பதில் கூறுமளவுக்கு எனக்கும் அம்பேத்காருக்கும் ஒரு
சம்பந்தம் இருந்தது.

பின்னாளில் அம்பேத்கார் பற்றி படிக்கவோ கேட்கவோ நேரும் போதெல்லாம்
நான் சிரிக்காமல் இருந்ததே இல்லை.இந்த பதிவை படிக்கும் பொழுது கூட நான் சிரித்தேன்.அக்காவின் சிரிப்புக்கு அர்த்தம் புரிந்த வயதை விட புரியாத வயது இனிமையானதாக இருந்தது.