Showing posts with label ஞாபகங்கள். Show all posts
Showing posts with label ஞாபகங்கள். Show all posts

Monday, February 7, 2011

ஸ்ரீவில்லிபுத்தூரும் சிவகாமி பாடசாலையும்


என்னுடைய ஒரு பதிவில் ஆறு வயதுக்கு முன் பள்ளியில் சென்று அமர்ந்த
அனுபவத்தை பகிர்ந்து கொண்டேன்.அப்பொழுது  நான் சென்றது திருவாரூரில் உள்ள
நகராட்சி பள்ளிக்கு.ஒரு வருடம்  கழித்து வயது ஆறானதும் முறைப்படி என்னை
பள்ளியில் சேர்த்தார்கள்.அந்த வருடம் நாங்கள் திருவாரூரிலிருந்து ஸ்ரீவில்லிபுத்தூருக்கு மாறிவிட்டோம்.அப்பாவின் வேலை பணிமாற்றத்திற்கு  உட்பட்டதாக இருந்ததால் நான் வருடம் ஒரு பள்ளியில் படித்தேன்.அவர் ஒரு நேர்மையான அதிகாரியாக இருந்த காரணத்தாலேயே
எங்கள் குடும்பம் ஒரு வருடத்திற்கு மேல் எந்த ஊரிலும் இருந்ததில்லை.
எனக்கு ஆறு வயதாகும் பொழுது நாங்கள் ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்ததால்
என்னை அங்கிருந்த சிவகாமி ஆரம்ப பாடசாலையில் சேர்த்தனர்.

'ர'கரம்  படுத்திய பாடு:  ஆறு வயதாகியும்  கூட என் வாய்க்கும் 'ர'கரத்திற்கும்
ஏனோ ஒத்தே வரவில்லை.எத்தனை முயன்றாலும் 'ர'கரத்தை 'ல'கரமாக உச்சரிப்பதே என் வழக்கமாக இருந்து வந்தது.யாராவது உன் பெயர் என்ன என்று கேட்டால் பளிச்சென்று 'லாஜி' என்றுதான் கூலுவேன் (ஐயோ!பழைய  நினைப்புல
தப்பா டைப்பிட்டேன்.சாரி!) கூறுவேன்.தினமும் என் அக்கா இதற்காக என்னோடு போலாடாத..சீ சீ போராடாத நாளே இல்லை எனலாம்.

லாஜிக்கு போட்ட லைட்டு:   

பள்ளியில் சேரும் போது எனக்கு ஒரு சிலேட்டும் பலப்பமும்  வாங்கி தந்து அனுப்பினர்.அப்பொழுதெல்லாம் சிலேட்,பலப்பம்தான். முதல் மூன்று மாதங்களுக்கு
சும்மா பள்ளியில் 'அ'  'ஆ'  'இ' 'ஈ'  எழுதுவதோடு  சரி.மற்ற படி வாயால் ஒப்பித்தலும் பதில்  கூறுதலும்தான்.மூன்று மாதங்களுக்கு பிறகு சிலேட்டில் எழுதக் கூடிய
சின்ன சின்ன வீட்டுப் பாடங்கள் தருவார்கள்.சிலேட்டில் எழுதிய வீட்டுப்
பாடத்தை அழியாமல் ஸ்கூலுக்கு எடுத்து  சென்று காமிக்கும் டெக்னிக் இருக்கிறதே.. அப்பப்பா.. .,  அப்படி எழுதியதை அழியாமல் கொண்டு சென்று அதில் வாத்தியாரிடம்
'டிக்' வாங்கும்போது ஏதோ இமாலய சாதனை செய்தது போல ஒரு பீற்றல் இருக்கும்.
அழியாமல் கொண்டு சென்றவர்கள், அழிந்து போய் எடுத்து வருபவர்களின் பொறாமைக்கு ஆளாவோம்.

அப்படி வாத்தியாரிடம் 'டிக்' வாங்கிய பெருமையை வீட்டில் வந்து சொல்லும் போது
நான் சொல்வதைக்  கேட்டு எல்லாரும் சிரிப்பார்கள். ஏனென்றால் நான் சொல்லும் லட்சணம் அப்படி. "எங்க வாத்தியால் எனக்கு லைட் போட்டாலே"
(எங்க வாத்தியார் எனக்கு ரைட் போட்டாரே)

அப்பொழுது எங்கள் வீட்டில் அப்பாவின் பணி நிமித்தமாக ஒரு வாட்ச்மேன்
ஒருவர் உண்டு.அவர் பெயர் வைத்தி.அவர் நான்  பள்ளியில் இருந்து வந்ததுமே
என்னைப் பார்த்து கேட்பார்."என்ன லாஜிம்மா இன்னிக்கு உங்க வாத்தியால்
உனக்கு லைட்டு போட்டாலா? (உங்க வாத்தியார் உனக்கு ரைட் போட்டாரா")
என்ன லைட்டு? ட்யூப் லைட்டா பெட்ரமாக்ஸ் லைட்டா?" என்பார்.
இப்பொழுது மேலே எழுதி இருக்கும் லாஜிக்கு போட்ட லைட்டு என்ற தலைப்பின்
அர்த்தம் உங்களுக்கு நன்றாகப் புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன்.

'ல' கரத்தை 'ர'கரமாக்கிய புண்ணியவான்:

என் 'ல'கரத்தை 'ர'கரமாக மாற்றும்  முயற்சியில்,  சிவகாமி ஆரம்ப பாடசாலையின் தலைமை ஆசிரியராக இருந்த நாராயணன் அவர்களுக்கு நான் ஒரு பெரிய சவாலாகவே மாறி விட்டேன் .சமஸ்க்ருதத்தில் புலமை பெற்ற ஸ்ரீனிவாச அய்யங்காரின் கடைசி திருமகளுக்கு 'ர'கரம் கூட வரவில்லையே என்று வெறுத்துப் போனார்.

தினமும் பள்ளி முடிந்ததும் நான் போய் அவர் அறை வாசலில் நின்று எட்டிப் பார்ப்பேன்.கருணையே உருவான அவர் எந்த குழந்தை வந்து எதை கேட்டாலும் அதை தயங்காமல் கொடுத்து விடுவார்.நான் அவர் அறைவாசலில் நின்று எட்டிப் பார்த்ததும் எழுந்து வருவார்.அந்த பள்ளியில்  ஒரு பாதாம் மரம் இருக்கும்.நான் அதிலுள்ள பாதாம்பருப்பை  கேட்பேன்.அவர் ப்யூனை அழைத்து தட்டி தர
சொல்வார். அதை என்னிடம் தரும் முன்பு ஒரு ஸ்லோகம் கூறினால் தருகிறேன் என்பார்.நானும் எனது லகர ரகரத்தை கலந்து கட்டி ஏதாவது ஒரு ஸ்லோகம் கூறி வாங்கிக் கொள்வேன்.இப்படியாக எனது நாவில் அதுவரை எட்டிப் பார்த்தே இராத 'ர'கரத்தை வெற்றிகரமாக குடி கொள்ள  செய்தார்.(இப்பொழுது இப்படி,  இது போல் தலைமை
ஆசிரியர்களோ,ஆசிரியர்களோ இருக்கிறார்களா என தெரியவில்லை)

ஒரு வழியாக ராஜியும் ரைட் வாங்க ஆரம்பித்தாள்.அந்த சிவகாமி ஆரம்ப 
பாடசாலை இப்பொழுது இன்னும் ஸ்ரீவில்லிபுத்தூரில் இருக்கிறதா என்று தெரியவில்லை.இருந்தால் சென்று பார்க்க ஆசை.திருமணமான புதிதில்
கொடைக்கானல் செல்லும் பொழுது மதுரை கள்ளழகரையும், ஸ்ரீவில்லிபுத்தூர்
ஆண்டாளையும் தரிசிக்க சென்றோம்.அப்பொழுது இந்த சிவகாமி பாடசாலை
பற்றி விசாரிக்க இயலவில்லை.கொடைக்கானலுக்கு வந்தயா?பாடசாலை
பாக்க வந்தயா? என்று ரங்கமணி  கோபித்தால் என்ன செய்வது என்ற பயத்தில்
(அப்போது மட்டும்தான்.ஹி...ஹி... என்ன இருந்தாலும் கல்யாணமான புதுசு இல்லையா!!!)பேசாமல் இருந்து விட்டேன்.வாய்ப்பு நழுவி விட்டது.

ஸ்ரீவில்லிபுத்தூரைப் பற்றிய பதிவாக இருப்பதால், நினைவுக்கு வரும் ஆண்டாளையும் இதில் இணைத்துள்ளேன்.ஆண்டாள் மடியில் ரங்கமன்னார்
தலை வைத்து படுத்திருக்கும் இந்த அற்புதக் கோலம் மிகவும் பிரசித்தம்.
(இதை பார்த்து விட்டு எல்லா ரங்கமணிகளும் முயற்சி செய்ய நினைத்து
தங்கமணிகளின் கோபத்துக்கு ஆளாக வேண்டாம் என்று எச்சரிக்கிறேன்)






Posted by Picasa
இதை இன்னும் ரசனையுடன் காண விரும்புபவர்கள்  கீழே இருக்கும்
லிங்கிற்கு செல்லவும்.

http://www.youtube.com/watch?v=DY4eujFkHYw

Monday, January 31, 2011

அம்பேத்காரும், நானும்

      தலைப்பை பார்த்ததும இது ஏதோ பெரிய விஷயம் போலிருக்கிறது என்ற எதிர்பார்ப்புடன் படிக்க ஆரம்பித்தால் நிச்சயம் ஏமாற்றமே மிஞ்சும்.இது வெறும் சுய புராணம் பற்றிய பதிவே.
                 
 எழுபத்தைந்து  எழுபத்தாறு வருடங்களின்  காலமது. ப்ரீகே ஜி, எல் கே ஜி மற்றும் யூ கே ஜி  எல்லாம் எட்டிப் பார்த்திராத பொற்காலம் என்று கூட கூறலாம்.
ஆறு வயது நிரம்பி வலது கையால் இடது காதையோ அல்லது இடது கையால்
வலது காதையோ தலைக்கு மேல் வழியாக தொட முடிந்தால்தான் ஒன்றாம்
வகுப்பிற்கு சேர்த்துக் கொள்வார்கள்.(தமிழ் மீடியமாக இருந்தால் யாராவது என்ன படிக்கற என்று கேட்டால்,ஒண்ணாப்பு என்று ஸ்டைலாக பதில் வரும் நாகரிகமான
காலம்)
              
 அப்படிப்பட்ட எழுபத்தாறில்,அண்ணா பள்ளிக்கூடம் போகிறானே என்ற
காரணத்தால் ஆறு வயது நிரம்பாமலே அழுது அடம் செய்து நானும் அவனுடன்
போவேன் என்று பிடிவாதம் பண்ணி பள்ளிக்கூட படியை மிதித்த அனுபவம்
அன்று வீட்டிலுள்ளவர்களுக்கும் பள்ளியில் இருந்தவர்களுக்கும் எப்படி இருந்ததோ
தெரியாது.எனக்கு ஒரு அற்புதமான அனுபவம்தான்.
                
இரட்டைப் பின்னல் ஆட, அக்கா வித விதமாய்  தைக்கும் கவுன் போட்டுக் கொண்டு கையில் சிலேட்டு பலகையுடன் துள்ளிக் குதித்துக் கொண்டும்,  கூட்டி செல்லும் அண்ணாவுடன் சின்ன சின்னதாய் சண்டைகளுடனும் கிளம்பும் போது உற்சாகமாய் இருக்கும்.
               
முதலில் ஆறு வயது நிரம்பாத காரணத்தால் என்னை சேர்த்துக் கொள்ள மறுத்தார்கள்.முறைப்படி சேர்த்துக் கொள்ள வேண்டியதில்லை என்றும் சும்மா
ஒப்புக்கு சப்பாணியாக சேர்த்துக் கொள்ளுமாறு அப்பா  கூறியதாலும்  அவர் கமிஷனராக அங்கு இருந்த காரணத்தாலும் அண்ணாவின் வகுப்பிலேயே என்னையும் சும்மா உட்கார வைத்தார்கள்.
            
முதல் நாள் என்னை வகுப்பறைக்கு கூட்டி செல்லும்போது எழுந்த உற்சாக
ஊற்று என்னை உள்ளே உட்கார வைத்த விதத்தில் புஸ்சென்று அடங்கிப்
போனது.அத்தனை மாணவ, மாணவிகளும் பெஞ்சுகளில் அமர்ந்து கொள்ள
என்னை மட்டும் கீழே தனியே குட்டிப் பாயில்(கிழிஞ்ச நார்னு சொல்லலாம்)
அமர வைக்க நான் தொங்கிப் போன முகத்துடன் அமர்ந்தேன்
          
 இதில் பெஞ்சுகளில் அமர்ந்திருந்த மாணவிகள் இந்திர பதவியில்
அமர்ந்திருந்த லுக் ஒன்றை என் மேல் விடுவார்கள்.
         
 இதையெல்லாம் பொறுக்க முடியாமல் வீட்டிற்கு சென்றதுமே அப்பாவிடம்  சென்று முறையிட்டால் அவர் கண்டு கொள்வதாக இல்லை.
(அவருக்குத்தான் ஏற்கனவே தெரியுமே)
"இன்னிக்கு ஸ்கூல் போனியே,எப்பிடி இருந்தது?"  என்று கேட்ட அக்காவை பிடித்துக்
கொண்டு அவளுக்கு நான் சொன்ன பதிலில் அனைவருக்கும் அதிர்ச்சி.

"என்னை அம்பேத்கார் மாதிரி உக்கார வச்சுட்டாங்க"
"என்னது?" என்று கேட்ட அக்காவுக்கு பெரியண்ணாவின் வரலாறு புத்தகத்தை
கொண்டு வந்து தந்து அதைப் பிரித்து அதில் போட்டிருந்த அம்பேத்காரின் படத்தை
காண்பித்து இவரை மாதிரி என்று காண்பித்ததும் "உனக்கு இவரை பத்தி தெரியுமா?
எப்பிடித் தெரியும்?" என்றாள் அவள்.

அக்காவின் பக்கத்தில் உட்கார்ந்து அம்மா, ஆடு, இலை படிக்கும் போது
பெரியண்ணா வந்து பாடம் ஒப்பிப்பான்.
அம்பேத்கார் தாழ்த்தப்பட்ட வகுப்பை சேர்ந்தவர் என்ற காரணத்தால்
அவர் பள்ளியில் படிக்கும்போது மற்ற மாணவர்களுடன் அமர வைக்காது அவரை கீழே ஒரு கோணியில்(அதையும் அவரே கொண்டு வந்து கொண்டு செல்ல வேண்டும்) அமர வைப்பார்கள் என்று அண்ணா ஒப்பிப்பான்.
இதைக் கூறியதும் அவள் விழுந்து விழுந்து சிரித்ததின் அர்த்தம் எனக்குப் புரியவில்லை அப்பொழுது.

அர்த்தம் புரியாமலே அடுத்த நாள் பள்ளியில் தலைமை ஆசிரியரின் அறைக்கு
சென்று "என்னை மட்டும் ஏன் அம்பேத்கார் மாதிரி உக்கார வச்சுருக்கீங்க?"
என்று கேட்க அவர் என்னைப் பார்த்து அம்பேத்காரை நான் அறிந்த விதம் பற்றி கேட்க நான் சொன்னதும், இனிமையான புன்முறுவலுடன் "நீயும் அவர் மாதிரி
பெரிய ஆளா வரணுமில்லையா அதுக்காகத்தான்" என்றார்.
"அப்போ மத்தவங்கல்லாம் வர வேணாமா?என்ற எனது அடுத்த கேள்விக்கு
அவர் என்னருகே மண்டியிட்டு அமர்ந்து,எல்லாரும்தான் வரணும்.உன்னைப் பார்த்து மத்தவங்கல்லாம் வருவாங்க" என்றார்.

இந்த பதில் என்னை அப்பொழுது கொஞ்சம் சமாதானப் படுத்தியது.
அடுத்த நாள் இந்திர பதவிகளின் லுக்குக்கு, "நான் அம்பேத்கார் மாதிரி வருவேனாக்கும்" என்று பதில் கூறுமளவுக்கு எனக்கும் அம்பேத்காருக்கும் ஒரு
சம்பந்தம் இருந்தது.

பின்னாளில் அம்பேத்கார் பற்றி படிக்கவோ கேட்கவோ நேரும் போதெல்லாம்
நான் சிரிக்காமல் இருந்ததே இல்லை.இந்த பதிவை படிக்கும் பொழுது கூட நான் சிரித்தேன்.அக்காவின் சிரிப்புக்கு அர்த்தம் புரிந்த வயதை விட புரியாத வயது இனிமையானதாக இருந்தது.

Saturday, January 15, 2011

சோளிங்கரும் கணுப்பிடியும்

                                             அரக்கோணம்,திருத்தணிக்கு அருகே அமைந்துள்ள சோளிங்கர் ஓர் அற்புதமான ஊர். அமைதியான சூழ்நிலை,சுத்தமான காற்று, அக்காரக்கனி என்ற திருநாமம் கொண்ட நரசிம்ம மூர்த்தி, அமிர்தத்தையே பலனாக தரக்கூடிய அமிர்தபலாவல்லித் தாயார் மற்றும் சிறிய திருவடியாகிய நம்ம ஆஞ்சூஸ்(அட! நம்ம ஆஞ்சநேயரேதாங்க) என்று இத்தனையும் அடங்கிய இந்த ஊரில் மூன்று வருடங்களுக்கு முன்பு வரை பன்னிரண்டு வருடமாக கொண்டாடிய கணுப்பிடியை
மறக்கவே முடியாது.

கணுப்பிடி கொண்டாட்டத்தில் நம்ம ஆஞ்சூஸ் தான் கதாநாயகன்.ஆஞ்சநேயருடைய பிரதிநிதியாக குரங்கு கூட்டத்தையே பார்க்கலாம் இங்கே.

கணுப்பிடி அன்று வீட்டின் மொட்டை மாடியில் பிடி வைப்பதற்காக சுத்தமாக பெருக்கி தண்ணீர் தெளித்து கோலம் போட்டு விளக்ககேற்றிய பின்னர், பிடி சாதம் இலைகள் எல்லாம் கொண்டு வருவதற்கு முன்னால்  சில காபந்து வேலைகள் அவசியம் செய்ய வேண்டியிருக்கும்.

முதலில் வீர பாண்டிய கட்டபொம்மன் கணக்காக கையில் தடியுடன் கணவர் மாடிக்கு ஏறுவார்.பின்னர் ஏற முடியாமல் கஷ்டப்பட்டாவது மாமியார் ஏறுவார். அவருக்கு பின்னால் நானும் என் பெண்ணும் பிடி சாத வகைகளுடன் ஏறியதும் பின்னால் இன்னொரு தடியுடன் வீர பாண்டிய கட்டபொம்மனின் தகப்பனார் ஏறுவார்(மாமனார்).

இவ்வளவு ஜாக்கிரதை உணர்வுடன் ஏறி  இலையை வைத்ததுதான் தாமதம்,நான்கு பக்கங்களிலிருந்தும் பாய்ந்து ஒடி வருவார்  நம்ம ஆஞ்சூஸ் தன் குடும்ப சகிதமாக.
உடனே நம்ம கட்டபொம்மனும், அவர் தந்தையும் தன் சாகசங்களை ஆஞ்சூஸ் குடும்பத்துக்கேதிரே பிரயோகிக்க எதற்கும் அடங்காத சில முரட்டு 'ஆஞ்சூஸ்'கள் பல்லைக்   காட்டி 'குர்'ரென தன் குடும்ப சவுண்டை குடுக்கும்.

இதற்கு நடுவே நாங்கள் மூவரும் அவசர அவசரமாக இலையில் பழம் கரும்பு வைத்து பிடி சாதத்தை நடுங்கிக் கொண்டே வைக்க, அப்பொழுதுதான் பூமிக்கே வந்தாற் போல் இருக்கும் குட்டியூண்டு ஆஞ்சூஸ்கள் ஒடி வந்து பழத்தை எடுக்கும்.

மாடியின் மூலையில் ஊசி பட்டாசு வைத்து கிடைக்கும் 'கேப்' பில் பிடி வைப்பதும் உண்டு.

காக்கைக்கு பிடி வைப்பது குரங்கு பிடியாகி விடும்.நமக்கு, எந்த பறவை எந்த விலங்கு சாப்பிட்டாலும் ஒன்றுதான் என்றாலும் பிடி வைப்பதற்குள் உன்னைப் பிடி என்னைப் பிடி என்றாகி விடும்.

இன்றோ சென்னை வாசத்தில் மாடியில் குரங்கும் இல்லை.காவலுக்கு கட்டபொம்மன் வருவதில்லை.மாடி ஏற முடியாத நிலையில் மாமனாரும்,மாமியாரும் என்றான பின் குடும்பத்துடன் வைத்த கணுப்பிடி காணாமல் போனது.

சோளிங்கர் ஆஞ்சூஸ் பத்தி மட்டும் எழுதிட்டு 'உம்மாச்சி'  பத்தி எழுதலேனா எப்பிடி?

அக்காரக்கனியான அந்த எம்பெருமான் பெரிய மலையில் யோக கோலத்தில் வீற்றிருந்து அருள் பாலிக்கிறார்.இந்த தலத்துக்கு 'திருக்கடிகை' என்ற பெயருண்டு.கடிகை என்றால் நாழிகை என்று பொருள்.ஒரு நாழிகைக்குள் சப்த ரிஷிகளுக்கும் இங்கு பிரத்யட்சமாகி அருள் பாலித்ததால் இந்த பெயர்.
கார்த்திகை ஞாயிற்றுக்கிழமை பெருமாளை சேவிப்பது இங்கு மிக விசேஷம்.
மொத்தம் ஆயிரத்து முன்னூற்று பத்து படிக்கட்டுக்கள் ஏறி  சேவிக்கும்பொழுது பக்தி பரவசத்தில் ஆழ்ந்து விடுவோம்.

சிறிய மலை நானூறு படிக்கட்டுக்கள் கொண்டது.இங்கு ஆஞ்சநேய சுவாமிகள், பெரிய மலையில் உள்ள யோக நரசிம்மரை நோக்கி யோக கோலத்தில் வீற்றிருந்து சங்கு சக்கரத்துடன் அருள் பாலிக்கிறார்.சப்த ரிஷிகளுடைய தவத்துக்கு இடையூறு செய்யும் அசுரர்களிடமிருந்து அவர்களை  காக்க இந்த்ரத்யுமன் என்ற அரசனுக்கு துணையாக சங்கு சக்கர கோலத்தில் ஆஞ்சநேயர் சென்றதால் இங்கு  இக்கோலத்தில் காட்சி அளிக்கின்றார்.
 தாயார் அம்ருத பலாவல்லி, அமிர்தத்துக்கு ஒப்பான பலனை அளிக்கும் காருண்ய கோலத்தில் காட்சியளிக்கின்றார்.
இம்மலைகளைத் தவிர ஊர்க்கோவில் ஒன்று உண்டு.இங்குதான் பக்தோசிதன்(பக்தர்களுக்கு உசிதமானவன்) என்ற திரு நாமத்துடன் உத்சவர் எழுந்தருளி இருக்கிறார்.இங்கு ஐப்பசி  மாத திருக்கல்யாண உத்சவமும்,சித்திரை பிரம்மோத்சவமும் மிக சிறப்பு வாய்ந்தவை,கணுப்பிடி அன்று உத்சவர், கிரி ப்ரதட்சினத்துக்கு இரண்டு மலைகளையும் சுற்றிக் கொண்டு இருபத்தைந்து  கிலோ மீட்டர் எழுந்தருளுவார்.மலையடிவாரத்தில் தக்கான் குளம் என்ற பெரிய குளம் ஒன்றும் அதை ஒட்டிய வரதர் கோவிலும் உண்டு.

அக்காரக்கனி அனைவருக்கும் அருள பொங்கல் நன்னாளில் பிரார்த்திக்கிறேன்.

Tuesday, November 30, 2010

திரும்பாதோ அந்த தீபாவளி

தீபாவளி!ஒளி மயமான பண்டிகைதான்.ஆனால் ஒரு இருபது வருடங்களுக்கு முன்பு அதில் இருந்த அந்த ஒளி மயமான மகிழ்ச்சி இப்போழுதும் உள்ளதா என்பதில் எனக்கு  ஐயம் ஏற்படுகிறது.

அப்பொழுதெல்லாம் தீபாவளி வரப்போகின்றது என்றாலே எங்கள் வீட்டில் நானும் அண்ணாக்களும் பல விதமான 'ப்ளான்' கள் போட  ஆரம்பித்து விடுவோம்
அப்பாவும் அம்மாவுமாக சென்று எங்களுக்கெல்லாம் என்ன துணிமணிகள் எடுக்கிறார்களோ அதுதான் என்றாலும் கூட அதை ஆவலாக எதிர்பார்த்து காத்திருப்போம்.எனக்காவது தேவலை கொஞ்சம் கலர்புல்லாக இருக்கும்.அண்ணாக்கள் எல்லாருக்கும் சேர்த்து ஒரே கலரில் சட்டை துணியும்  டிராயர் துணியும் கிழித்து வாங்கி வந்து விடுவார்கள்.ஆனாலும் வருடத்திற்கு ஒரு முறைதான் புது துணி கிடைக்கும் என்பதாலோ என்னவோ அதை மிக மகிழ்ச்சியாக ஏற்றுக்கொள்வோம்.

ஆனால் இப்பொழுது வருடம் முழுவதும் துணிமணிகள்தான்.அன்று ஒரு உடை வாங்கும்பொழுது இருந்த சந்தோஷம்  இப்போது எங்கே?

தீபாவளிக்கு முதல் நாளோ தூக்கமே வந்து தொலையாது.யார் என்ன வெடி வெடிப்பது யார் முதலில் குளிப்பது என்பதிலிருந்து எல்லாமே ஒரே உற்சாகமான விஷயங்கள்தான்.காலையிலும் கோவிலுக்கு சென்று வந்த பின் தாத்தா பாட்டி மாமா அத்தை பெரியப்பா சித்தி என உறவுகளுடன் கலந்து மகிழ்ந்த காலம் அது.
இப்பொழுது அந்த நேரங்களை எல்லாம் பொல்லாத தொலைக்காட்சி அல்லவோ ஆக்கிரமித்துக்கொள்கிறது.
என்ன சாப்பிடுகிறோம் என்பதன் ருசியை கூட உணராமல்,வீட்டில் ஒருவருக்கொருவர் பேசி கலக்க இயலாமல் 'இந்திய தொலைக்காட்சியில் முதல் முறையாக' என்பதாக அல்லவோ அந்த நாள் கழிகிறது

பண்டிகைகள் மனித உறவுகளை பலப்படுத்த வருகின்றன.ஒளி, தொலைக்கட்சியில் வேண்டாமே.அதை நம் மனங்களின்  வழியே உறவுகளுக்கு கொண்டு வருவோம் இனி.