இது எனது ஐம்பதாவது பதிவு. எனவே இந்த பதிவு எனது எண்ணங்கள் அடங்கிய பதிவாக இல்லாமல் உலக ஷேமத்திற்காக நமக்கு வரமாக
இறைவன் அருளிய மகானின் உயரிய நெறிகள் கொண்ட பதிவாக
அமைக்க எண்ணி இதனை பகிர்கிறேன்.மகான்களைப் பற்றி எழுதவோ
பேசவோ கூட ஒரு தகுதி வேண்டும்.ஆனால் இந்த பகிர்வை
எனது பாக்கியமாக நான் எண்ணுகிறேன்.இப்பதிவை ஸ்ரீ காஞ்சி மகா பெரியவாளின் அனுக்ரஹத்துடன் துவங்குகிறேன்.

ஸ்ரீ காஞ்சி மகா பெரியவாளின் அற்புத தத்துவம் சகலத்திடமும் சமமான
அன்புதான்.அவரது சாஸ்வத சத்யமான அன்புதான் அவரை
உலக நாடுகளின் பேரவைக்கு "மைத்ரீம் பஜத" என்ற கீதத்தை அருளச்
செய்தது.
சகல நாடுகளுக்கும் அவர் வழங்கிய இந்த கீதம் மக்களுக்கு மற்றுமோர் கீதோபதேசம்.
மறைந்த ஸ்ரீமதி எம் எஸ் சுப்புலக்ஷ்மி அம்மாள் அவர்களின் இசைப்பணிக்கும் ,இசையின் மூலம் இறைப்பணி மற்றும் உலகப்பணிக்கும் உலக நாடுகளின் முன் ஒரு நிகழ்ச்சி ஒரு விஜயதசமி நன்னாளில் 1966 , அக்டோபர் மாதம் 23 -ம் தேதி ஏற்பாடாயிற்று.அவரது சார்பில் விடுக்கப்பட்ட வேண்டுகோளுக்கு
செவி மடுத்து ஸ்ரீ மகா பெரியவாள் உலக சபைக்கு ஒரு ஆசி கீதம்
இயற்றினார்.இன்று பள்ளிகளிலும் மற்றவர்களுக்கும் இது ஒரு
வழி நடத்தும் கீதமாயிற்று.
"மைத்ரீம் பஜத அகில ஹ்ருத் - ஜேத்ரீம்
ஆத்மவதேவ பராநபி பஷ்யத
யுத்தம் த்யஜத, ஸ்பர்தாம் த்யஜத
த்யஜத பரேஷ்வக்ரமம்-ஆக்ரமணம்
ஜநநீ ப்ருத்வி காமதுகாஸ்தே,
ஜநகோ தேவ சகல தயாளு:
தாம்யத, தத்த, தயத்வம் ஜநதா:
ச்ரேயோ பூயாத் சகல ஜநாநாம்.
( அனைத்து இதயங்களையும் வெல்வதான அன்பை பயிலுங்கள்,
அன்னியர்களையும் தன்னிகராகக் காணுங்கள்.
போரினை விடுங்கள், போட்டியை விடுங்கள்.
பிறனதை பறிக்கும் பிழையை விடுங்கள்.
அருள்வாள் புவித்தாய், காமதேனுவாய்.
அப்பன் இறைவனோ அகில தயாபரன்.
அடக்கமும்,ஈகையும், தயையும் பயிலுங்கள்.
அனைத்து மக்களுக்கும் உயர்நலம் விளைவதாக)

மித்திரன் என்றால் நண்பன்.நட்பு என்பது பலனற்ற பிரியமாக மட்டுமே
முடிந்து விடாமல் நட்புக்குரியவனை நல்வழிப்படுத்திக் காக்கும் சக்தியாகவும் இருப்பதே "மைத்ரீ" .அதாவது ஒரு சத்குரு செய்யும் பணியே
மித்திரன் செய்கிறான்.ஆனால், உச்ச ஸ்தானம் ஏறாமல் ஒட்டி உடன்
நின்று செய்கிறான்.
ஆனால் நமது இந்த சத்குருவோ தாமே, உச்ச ஸ்தானம் பாராட்டாது
உடனொட்டி உறவாடி மித்ரனாக வாழ்ந்து காட்டியவர்.
இங்கு ஆண்டவனுடன் நம்மைச் சேர்க்கும் உபாயமான யோகமாக
நட்பை பயில வேண்டும் என்பதால் "பஜத" என்ற பதம் சேர்க்கப்பட்டுள்ளது.
"மைத்ரீம் பஜத" என்பது ஒரு தோழமை யோக மந்திரம்.
மித்திரன் என்பது சூரியனையும் குறிக்கும் ஒரு சொல்.உயிர்கள்
அனைத்திற்கும் ஸ்தூலத்தில் (உடம்பு) ஜீவ சாரம் அளித்து, சூக்ஷ்மத்தில்
அறிவுப் பிரகாசத்தையும் தூண்டி விடும் உற்ற நண்பன் அல்லவா?
பசுமரங்கள் நிழலளித்து உணவளித்து காற்றளித்து நம்மைக் காக்கும்
மித்ரனல்லவா?
ஜீவநதிகள் உயிர்களின் தாகம் தீர்த்து உடலை சுத்தம் செய்யும்
மித்திரனல்லவா?பாலமுது பொழியும் பசுக்கூட்டம் நமது மித்திரனே
இந்த மித்திரர்களான அனைத்தும் தன்னலமற்று பிறர் நலனுக்கென்றே இருப்பவை.
இந்த மித்திரர்களிடத்திலிருந்து எல்லாம் உயரிய நலன்களைப் பெறும்
நாம் நமக்குள்ளும் மித்திரர்களாய் இருந்து அனைவரும் உயரிய நலன் பெற பிரார்த்திப்போம்.
மகான்களின் ஆசிகள் பெறுவோம்.
"எந்தரோ மகானுபாவுலு
அந்தரிகி வந்தனமுலு