Sunday, December 12, 2010

கல்யாணமே.....! கச்சேரியே......!

                                                 ஒரு அழகான மாலை நேரம்.அது ஒரு கல்யாணக் கூடம்.
மலர்களின் வாசனையும், அங்கு கூடியிருந்தவர்கள் தெளித்துக் கொண்டிருந்த திரவியங்களின் வாசனையும் போட்டி போட,பட்டுப் புடவைகள் சரசரக்க வரவேற்புக்கு அனைவரும் தயாராகிக் கொண்டிருந்த நேரம்.

                                                 ஒரு பக்கம் மேடையில் மணமக்கள் தயாராக வந்து நின்று விதவிதமாக புகைப்படங்களுக்கு போஸ் கொடுக்க மற்றுமொரு மேடையில் ஒரு இசைக்கச்சேரிக்கு புல்லாங்குழல் வித்வான் தன் குழுவுடன் தயாராகிக் கொண்டிருந்தார்.

                                                 அவர் தன் வேய்ங்குழலால் அருமையான கீர்த்தனைகள் வாசிக்க அதை கவனிக்கவோ அங்கு எவருமே இல்லை.மாப்பிள்ளை மற்றும் பெண் வீட்டுக்காரர்களால் எப்படியும் அதை கேட்க முடியப் போவதில்லை.திருமணத்திற்கு வருபவர்களோ தாம் நீண்ட நாள் பார்க்காத,இன்ன பிற சொந்தங்களுடனும் நட்புகளுடனும் பேசிக் கலப்பதில்தான் ஆர்வம் காட்டுவார்கள். அவ்வாறிருக்க இது போன்ற கச்சேரிகளை ஏற்பாடு செய்வதன் நோக்கம்தான் என்ன?
                              
                                                             அந்த கலைக்கோ கலைஞருக்கோ அது மதிப்பு
தரக்கூடிய விஷயமாக இருக்கிறதா? அதை ஏற்பாடு செய்ய அந்த பெண்ணின் தகப்பனார் எவ்வளவு செலவு செய்திருப்பார்?யாருக்கும் பணம் கஷ்டப்படாமல் சும்மா
கிடைப்பதில்லை.அவ்வாறு கஷ்டப்பட்டு சம்பாதிக்கும் பணத்தின் மதிப்பு யாருக்கும் பயனற்ற முறையில் போவதேன்?

                                                                  ஒன்றிரண்டு பேர் மிகவும் இசையில் நாட்டமுள்ளவர்கள் ரசிப்பார்கள் அவ்வளவுதான் என்பதைத் தவிர இதனால் யாருக்கு என்ன நன்மை?யாருக்கு என்ன லாபம்? கர்நாடக சங்கீதமாவது தேவலை, சத்தமாவது படுத்தலாக இருப்பதில்லை. 'ஆர்க்கெஸ்ட்ரா' என்ற பெயரில் ஏற்பாடு செய்திருந்தால் அவ்வளவுதான்.சத்தம் காதைப் பிளந்து அருகிலிருப்பவர் நம்மை ஏதேனும் கேட்டாலும் நமக்கு காதில் விழவே விழாது.இதில் குத்துப் பாட்டுக்கள் வேறு அந்த திருமணத்தின் இனிமையான தாம்பத்தியத்தையே கொச்சைப்படுத்தும் வார்த்தைகளோடு.இதனால் யாருக்கு என்ன மகிழ்ச்சி?எங்கே போய்க் கொண்டிருக்கின்றோம் நாம்?எந்த கலாசாரத்தை நோக்கி?

                                                               இவ்வாறெல்லாம் அந்த பணத்தை செலவு செய்வதற்கு பதிலாக அதைக் கொண்டு நாலு பேருக்கு நன்மை செய்யும் விதமாக செலவு செய்தால் அந்த உள்ளங்கள் அந்த மணமக்களை வாழ்த்தாதா?அவ்வாறு செய்ய மனமில்லாவிடினும் அந்த மணமக்கள் தங்கள் புது வாழ்க்கையை நன்கு வளமாக தொடர உபயோகிக்கலாமே?அந்த கலைஞருக்கு வருவாய் என்பதைத் தவிர இதில் வேறொன்றுமில்லை.அவர்களும் இந்த  மாதிரி நிகழ்ச்சிகளுக்கு தங்கள் மனசாட்சியை கழட்டி வைத்து விட்டுத்தான்  வருகிறார்கள் என்பதே உண்மை.

                                                 தமிழ்ப்படம் ஒன்றில் ஒரு பாடல் ஒன்று உண்டு.படத்தின் பெயர் "இந்திரா".

                                     "நிலா காய்கிறது நேரம் தேய்கிறது
                                      யாரும் ரசிக்கவில்லையே
                                      தென்றல் போகின்றது சோலை சிரிக்கின்றது
                                      யாரும் சுகிக்கவில்லையே"

 மிகவும் சரியான, அர்த்தம் பொதிந்த வார்த்தைகளுடனான பாடல்.இம்மாதிரி விஷயங்களுக்கு மிகவும் பொருந்தும்.இனியாவது இதைப் பற்றி சிந்திப்போம்.

15 comments:

சென்னை பித்தன் said...

உண்மைதான்.வரவேற்புக் கச்சேரிகள் யாருக்கும் பயனில்லாத (பாடுபவர்களுக்கு வருமானம் தவிர) நிகழ்ச்சிகள்தான்.மிகச் சரியான பாட்டை மேற்கோள் காட்டியிருக்கிறீர்கள்.
தேவையான பதிவு.

shanmugavel said...

வறட்டு கவுரவமும் திருமணமும் என்று ஆய்வே செய்யலாம்.ஒரு திருமணத்திற்குப்பிறகு பல ஆண்டு காலம் கடனை சுமக்கும் குடும்பங்கள் இங்கு நிறைய உண்டு.

மனோ சாமிநாதன் said...

நீங்கள் சொன்னது அத்தனையும் நிதர்சனமான உண்மை ராஜி! ஆனால் இதற்கு மறுபக்கமும் இருக்கிறது! மிகுந்த இசை ரசனை உள்ள‌வர்கள் தங்கள் வீட்டுத் திருமணத்தில் நல்லதொரு நிகழ்ச்சியை நடத்தி அதில் மனநிறவு பெறுகிறார்கள். நிறைய இல்லங்களில் மணமகளோ, மணமகனோ இதில் மிகுந்த விருப்பதுடன் ஈடுபட்டு நல்ல இசைக்கலைஞர்களைத் தேர்வு செய்து பெற்றோரிடம் நடத்தச் சொல்கிறார்கள். இப்படி பல விஷயங்கள் இதில் இருக்கின்றன. சில வருடங்களுக்கு முன், ஒரு திருமணத்திற்குச் சென்றிருந்தேன். வாத்தியங்கள் பலவற்றுடன் ஒரு அருமையான கச்சேரி! கிராமத்தில் ந‌டந்த‌‌ திரும‌ண‌ம்! முகூர்த்த‌த்துக்கு முன் இந்த‌‌ க‌ச்சேரி! ஒருத்த‌ர் கூட‌ அசையாம‌ல் யாரும் கலைந்து செல்லாம‌ல் அந்த‌‌ இசையில் மெய்ம‌றந்திருந்தார்க‌ள். சாதார‌ண‌மாக‌ எல்லோரும் ஒரு க‌ச்சேரிக்குப் போய் ர‌சிக்க‌ சந்த‌‌ர்ப்ப‌ம் கிடைப்ப‌தில்லை. அவ‌ர்க‌ளுக்கெல்லாம் இது ஒரு வ‌ர‌ப்பிர‌சாத‌ம் மாதிரி! ர‌‌சிக்க‌த் தெரியாத‌ சில‌ விதிவில‌க்குகளைப்பற்றி நாம் கவலைப்பட வேண்டியதில்லை. ‌

raji said...

கருத்துக்களுக்கு நன்றி மிஸ்டர் சென்னைப்பித்தன்,சண்முகவேல்

raji said...

தங்களின் கருத்துக்கு நன்றி மனோ மேடம்.

தாங்கள் சொல்வது போல் மிகுந்த இசை ரசனை உள்ளவர்களும் இருக்கிறார்கள்.
எனினும் திருமணத்திற்கு வருகை தரும் பலரின் மனப்போக்கு இவ்வாறு உள்ளது.
தாங்கள் கூறிய கிராமத்தில் உள்ளவர்களுக்கு என் தலை வணங்குகிறது.தகவலுக்கு நன்றி

வெங்கட் நாகராஜ் said...

பெரும்பாலான கல்யாண கச்சேரிகளில், கச்சேரி செய்யும் நபரின் நிலை பரிதாபமானது. சில சமயம், அவர் மண்டபம் முழுவதும் நிரம்பியிருந்தாலும், காலியான அரங்கில் கச்சேரி செய்வது போன்ற எண்ணம் எனக்குத் தோன்றும்.

நல்ல பகிர்வு சகோ.

sathishsangkavi.blogspot.com said...

//இவ்வாறெல்லாம் அந்த பணத்தை செலவு செய்வதற்கு பதிலாக அதைக் கொண்டு நாலு பேருக்கு நன்மை செய்யும் விதமாக செலவு செய்தால் அந்த உள்ளங்கள் அந்த மணமக்களை வாழ்த்தாதா?//

நிச்சயமாக வாழ்த்துவார்கள்...
சரியாத்தான் சொல்லி இருக்கறீங்க...

நம்ம ஆளுகளுக்கு பெருமைதானே முக்கியம்...

raji said...

கருத்துக்களுக்கு நன்றி மிஸ்டர் வெங்கட் நாகராஜ்,மிஸ்டர் சங்கவி

'பரிவை' சே.குமார் said...

தேவையான பதிவு.

ADHI VENKAT said...

இங்கு தில்லியில் கூட வட இந்தியர்களின் கல்யாணங்களில் “DJ” என்கிற பேரில் பாட்டை அலறவிட்டுக் கொண்டு ஆடுவதும் சகிக்க வில்லை. இதை பார்த்து தென்னிந்தியர்களும் இப்படி செய்கிறார்கள்.

raji said...

கருத்துக்களுக்கு நன்றி ஸாதிகா,சே.குமார்,கோவை 2 தில்லி

R. Gopi said...

ராஜி மேடம்:)

போன சனிக்கிழமை ஒரு வரவேற்பிற்காகக் கும்பகோணம் போயிருந்தேன்.

மொத்தம் மூன்று மணி நேர லைட் மியூசிக். பிடித்த பாடல்கள் பாடியபோது மட்டும்தான் கேட்டேன். மீதி நேரம் நண்பர்களுடன் பேச வேண்டி இருந்தது.

மொத்தத்தில் எல்லோரும் எல்லா நேரமும் பாட்டுக் கேட்கவில்லை என்பது உண்மை.

raji said...

நன்றி கோபி சார்

வித்யா சுப்ரமணியம் (Vidya Subramaniam) said...

Nalla pathivu raji. neengal solvathu unmaithaan.

raji said...

நன்றி வித்யா மேடம்

Post a Comment