மதிப்பிற்குரிய
மனோ மேடம் அவர்கள் சாப்பாட்டிற்கான தொடர்
பதிவிற்கு என்னை அழைத்திருந்தார்.அதன் தொடர்ச்சியே இப்பதிவு.
"அன்னபூர்ணே சதாபூர்ணே
சங்கர பிராண வல்லபே
ஞான வைராக்ய சித்யார்த்தம்
(அன்னபூரணியே! எங்கும் எதிலும் எப்பொழுதும் நிறைந்திருப்பவளே!
சங்கரனின் அன்புக்குரிய சக்தி ரூபமே! பார்வதி தேவியே!ஞானமும் வைராக்யமும் நிலைக்கும்படியான உணவு பிச்சையை எனக்கு நீ இடுவாயாக!)
சாப்பாடு, உலக உயிர்களின் அடிப்படை ஆதாரம்.அந்த ஆதாரம்
ஒவ்வொரு உயிரினங்களுக்கும் வேறுபடுகிறது.மனித உயிரினத்தில்
கூட உணவு என்பது அவர்களின் பழக்க வழக்கங்களுக்கேற்ப
மாறுபடுகின்றது.ஆனால் பொதுவாக அனைவருக்கும் நன்மை பயக்கக்
கூடிய சில உணவு முறைகள் என்பது உண்டு.
நன்மை பயப்பவை எல்லாம் நாவிற்கு ருசியானதாக இருக்க
வாய்ப்பு குறைவே.இருந்தாலும் உயிருடன் இருக்கும் வரையிலும்
உடல் நல குறைவின்றி வாழ சிலவற்றை நாம் கடைப்பிடிக்க வேண்டிய
கட்டாயத்தில் உள்ளோம்.அதில் சிலவற்றை இங்கே காண்போம்.
சிற்றுண்டியைப் பொறுத்தவரையில் வயிற்றுக்கு எளிதில்
ஜீரணமாகக் கூடிய இட்லி தொந்தரவில்லாதது.
கோதுமையில் நாம் நார்ச்சத்து பெற இயலும் என்பதால்
சப்பாத்தி போன்றவற்றை எண்ணை இடாமல் தயாரித்து உண்ணலாம்.
தொட்டுக் கொள்ள காய்கறிகள் நிறைந்த சப்ஜி சேர்த்துக் கொள்ளலாம்.
ஓட்ஸ் நம் உடலில் உள்ள கொலஸ்ட்ராலைக் குறைக்க உதவுவதால்
அதனைக் கஞ்சியாகவோ உப்புமா செய்தோ சாப்பிடலாம்.அல்லது வேக வைத்த ஓட்சில் பழக் கலவைகள் போட்டு கொஞ்சம் பால் விட்டு சாப்பிடலாம்.(எவன் சாப்பிடறதுனுலாம் முணுமுணுக்கக் கூடாது.உடம்புக்கு
நல்லதாக்கும்)
சோயாவிற்கு இதயத்தை சீராக இயக்க வைக்க கூடிய சக்தி
இருப்பதால் சோயா பால், சோயா பவுடர் போன்றவற்றை
சாப்பாட்டில் சேர்த்துக் கொள்ளலாம்.
ஒரு கிண்ணம் அளவான ஸ்ட்ராபெர்ரி பழத்துண்டுகளில்
ஒரு தம்ளர் ஆரஞ்சு சாற்றின் அளவு விட்டமின் சி கிடைக்கின்றது.

எனவே ஆரஞ்சு ஜூஸ் தயாரிக்க இயலாத சமயங்களில் ஸ்ட்ராபெர்ரியைஉட்கொள்ளலாம்.
கேரட்டில் உள்ள பீட்டா கரோடின் ஆண்டி ஆக்சிடன்ட் தன்மை
உடையது.புற்று நோயைத் தடுக்க உதவுகிறது.அதே சமயத்தில்
உடலில் உள்ள ஆரோக்கியமான செல்களை காப்பாற்றுகிறது.
கேரட்டில் இருக்கும் விட்டமின் ஏ கண்களின் ரெட்டினாவைப் பாதுகாக்கவும், அதன் கரோடினாய்ட்ஸ் குருட்டுத் தன்மையை தடுக்கவும்
ஏதுவாகின்றது.கேரட் ஒரு குறைந்த கலோரி உணவு.எனவே உடல்
பருமனை குறைக்க பச்சை கேரட்டையோ அல்லது எண்ணை
அதிகம் சேர்க்காமல் சமைத்த கேரட்டையோ எடுத்துக் கொள்ளலாம்.
வாணலியில் சிறிது ஆலிவ் ஆயில் சேர்த்து அது சுட்டதும்
கேரட்,சீரகம் (உடலின் உள்ளுறுப்புகளை சீர் செய்வதால் இது சீரகம்), கொஞ்சம் மிளகு சேர்த்து உப்பு, மஞ்சள் பொடியும் போட்டு
வதங்கியதும் கொத்தமல்லி தழை சேர்த்து சாப்பிடலாம்.
கேரட்டை வேக வைத்துக் கொண்டு அதில் ஆப்பிள் ஜூஸை பரப்பி
கொஞ்சம் உப்பு கொஞ்சம் சர்க்கரை சேர்த்தும் சாப்பிடலாம்.
பச்சைக் காய்கறிகளான பீன்ஸ் அவரை போன்றவை நார்ச்சத்து மிகுந்தவை.இவை நமது உடலிலிருந்து தேவையற்ற கழிவுகளை நீக்க உதவுபவை.
பாகற்காய் கசப்பு உள்ள காய்தான் என்றாலும் இது பல விதத்தில் நமக்கு நன்மை செய்ய வல்லது. முக்கியமாக இதில் இன்சுலின் இயல்பாகவே உள்ளதால் நீரிழிவு நோயாளிகளுக்கு மிக நல்லது.இரத்தத்திலும்,
சிறுநீரிலும் உள்ள சர்க்கரை அளவை இது கட்டுப்படுத்துகிறது.
பெண்களுக்கு ஒழுங்கற்ற மாதவிடாயை சீர்படுத்தவும்,தாய்ப்பால் நன்கு சுரக்கவும் வல்லது.நம் உடலில் உள்ள கிருமிகளை அழிக்கும் சக்தியுள்ளது.
(இனி யாராச்சும் கசப்புன்னு முகம் சுளிப்பீங்க?)
வாழைத்தண்டு,வாழைப்பூ முதலியவை வாரம் ஒருமுறையேனும் உணவில் இருப்பது அவசியம்.வாழைத்தண்டு சிறுநீரக கல் சேராமல் தடுக்கும்.
ஓக்கே!இப்ப டீ டைம். ஆனா நாம இப்ப குடிக்கப் போறது கிரீன் டீ.
இதிலிருக்கும் கேட்டசின்ஸ் எனப்படும் ஆண்டி ஆக்சிடன்ட்கள்
உடலில் புற்று நோய் செல் தோன்றிய பின்னும் அதை அழிக்க வல்லது.
(தலை முடி கூட நரைக்காதாக்கும்)
அடுத்தது நம்ம உணவுகளின் நடுநாயகமாக வீற்றிருக்கும் தக்காளியேதான். இதிலிலுள்ள லைசோபின்ஸ் இதயத்தை நன்கு
பராமரிக்கும் குணமுள்ளது.தக்காளியை சூப் வைத்தும் பச்சைத்
தக்காளியை ஜூஸ் அடித்தும் சாப்பிடலாம்.இல்லேனா ஹார்லிக்ஸ்
விளம்பரத்துல முன்னாடிலாம் வருமே, அதுபோல அப்படியே
சாப்பிடுவேங்கற ரேஞ்சுக்கும் போகலாம்.(இது ஆக்கப் பொறுத்தும் ஆறப்
பொறுக்காதவங்களுக்கு)
அப்பறமா என்ன பாக்கலாம்? வால் நட்? இது மூளையின் ந்யூரான்
ட்ரான்ஸ்மிட்டர்களை (தமிழ்ல?) பராமரித்து மூளையின் செயல்பாட்டுத்
திறனை அதிகரிக்க வைக்கிறது.(ஓ! இப்பத்தான் புரியுது எனக்கு, நான் ஏன் இம்மாம் புத்திசாலியா இருக்கேன்னுட்டு.நான் இதை நிறைய சாப்பிடறேனே.அதான்)
முளை கட்டிய தானிய வகைகள் உடலுக்கு சக்தி அளிக்கக் கூடியது.
தினமும் ஒரு கிண்ணம் முளை கட்டிய ஒரு தானிய வகை உண்டால்
உடல் அதிக சக்தி பெறுகிறது.
நம்ம கதாநாயகன் (நாட்டில பாதி பேருக்கு இது இல்லாம சமைக்கவே தெரியறதில்லை,அதான் இது கதாநாயகன் ஆயிடுச்சு) வெங்காயத்தைப்
பத்தி பாக்கலாமே.வெங்காயம் மட்டுமில்லாம இதோட தம்பி பூண்டும்
சேர்ந்து நம் உடலுக்கு ஆபத்து விளைவிக்க கூடிய தேவையற்ற
கழிவுகளை உடலில் தாங்காமல் நீக்குகிறது.
ஆலிவ் பழங்கள் பெண்களின் கரு முட்டையை பலப்படுத்துகிறது.
கருவேப்பிலை - (கரு+வெப்பு+இலை).வெப்பு என்றால் நோய்.
பெண்களின் கருப்பப்பை சார்ந்த நோய்களைத் தடுப்பதால் இது கருவேப்பிலையாகிறது(இதுக்கும் நரை தடுக்கும் சக்தி உண்டு.)
கடைசியாக என்ன ஐட்டம் தெரியுமா? ஹா...ஹா... நம்ம பழைய
சாதமேதாங்க.முதல் நாள் சாதத்துல நீரூற்றி வைத்து மறுநாள்
அதில் கொஞ்சம் மோர் விட்டு நல்லா பிசைஞ்சு சின்ன வெங்காயம்
சேர்த்து சாப்பிட்டா ஆஹா! என்ன ருசி என்ன ருசி!
முதல் நாளே சாதத்துல தண்ணி விட்டு வைக்கறதால இதுல நமக்கு
நன்மை செய்யற பாக்டிரியாஸ் ட்ரில்லியன் (தமிழ்ல கர்ப்பம்) கணக்குல
உருவாகுது,இது நமது உணவுப் பாதையை ஆரோக்கியமா வைக்கிறது.
பழைய சாதத்துல பி 6 , பி 12 நிறைய இருக்கு.சின்ன வெங்காயத்தோட சாப்பிடறதால நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது.எந்த நோயும்
வராததோட இளமையா கூட வைக்குது.நாள் முழுக்க நமக்கு புத்துணர்ச்சியைக் கொடுக்கின்றது.(நானெல்லாம் பழைய சாதம் விரும்பி
சாப்பிடுபவள்) ரத்த அழுத்தம் கட்டுபாட்டுக்குள் இருக்கும்.உடல் எடை குறையும்.(தச்சு மம்மு, தச்சு மம்முதான்)
அதனால நாம இனி உணவே மருந்தாய் கொண்டு ஆரோக்கியமா
வாழ எல்லாம் வல்ல அந்த அன்னபூரணி அருளட்டும்.
அன்னபூரணியோட அருள் மட்டும் இருந்தா போதாது,இன்னும் ஒருத்தரும் அருளணும்.அது நம்ம உழவர்கள்தான்.
"உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்"
தொடருமாறு கேட்டுக் கொள்கிறேன்.