' என்னம்மா சுந்தரி! பை எடுத்துண்டு எங்க போற ? காய்கறி கடைக்கா?'
சுந்தரியின் முகம் கடுகடுத்தது.' இல்லை மளிகைக் கடைக்கு'
'நேத்துத்தான காலைல மளிகைக்கடை போன.திருப்பி இன்னிக்கு என்ன?'
'மாமா! எனக்கு டைம் ஆயிடுத்து.நான் வந்து சொல்றேனே' அவசரமாக
சொல்லிவிட்டு தப்பித்தோம் பிழைத்தோம் என்று நகர்ந்தாள்
தினமும் இது ஒரு தொல்லை.இந்த குடியிருப்புக்கு வந்து ஒரு வருடமாகிறது.
ஒரு நாளைப் போல இந்த தொந்தரவுதான்.சுந்தரிக்கு மட்டுமில்லை.அவள்
புருஷன் ரகு,பெண் திவ்யா,சுந்தரியின் மாமனார் ரங்கநாதன் எல்லாரும்
வீட்டை விட்டு வெளியில் வரும்பொழுதே இதை எதிர்கொண்டுதான்
தீர வேண்டும்.
எதிர் வீட்டில் குடி இருக்கிறாரே என்று வந்த புதிதில் சுந்தரிதான் சற்று சிநேகமாக சிரித்து வைத்தாள்.பிடித்தது தொல்லை.வெளியில் போகும்பொழுதும் திருப்பி வரும்பொழுதும் சிபிஐ என்கொயரி தோற்காத குறைதான்.
ரகு காலையில் ஆபீஸ் செல்ல வண்டியை உதைககும்போதே எதிர் மாடி பால்கனியில் உதயமாகி விடுவார்.'என்னப்பா!ரகு! ஆபீசுக்கா? இன்னிக்கு
அஞ்சு நிமிஷம்லேட் போலருக்கே?"
'அதான் ஏற்கனவே லேட் ஆயிடுத்துன்னு தெரியறதே.இன்னும் நிறுத்தி வச்சு என்னத்துக்கு கேக்கணுமாம்' சுந்தரி ரகுவிற்கு மட்டும் கேட்கும்படி சிடுசிடுப்பாள்.
'ஆமாம்.மாமா!கொஞ்சம் லேட்தான்' வண்டியை உறும விட்டுக்கொண்டே ரகு
சிரித்து கொண்டே பதில் சொல்வான்.
'அவர் கேக்கறதுக்கு உங்களுக்கு எப்படித்தான் சிரிப்பு வருதோ? வீட்டுக்குள்ள ஒரு எழவு சிரிப்பையும் காணோம்.அங்க என்ன சிரிப்பு வேண்டிக் கிடக்கோ?'
'விடேன் சுந்தரி!பாவம் வயசு காலத்துல தனியா இருக்கார்.ஒரு துணையுமில்லை.. என்னமோ கேட்டுட்டுப் போறார்.சரி நான் கிளம்பறேன் மணி ஆயிடுத்து'
'அவருக்கு பதில் சொல்றச்சே ஆகாத மணி என் கிட்டத்தான் ஆயிடுத்தாக்கும்.
நாளைலேருந்து டிபன் பாக்ஸ் கட்டறச்சே டைம் ஆயிடுத்துன்னு சொல்லிப் பாருங்கோ சொல்றேன்'
மறுநாள் ரகு ஆபீஸ் கிளம்பும்பொழுது தன்னையறியாமல் எதிர் பால்கனியை
இப்பொழுதெல்லாம் வெளியில் போகும் பொழுதும் வரும்பொழுதும் எதிர்
'என்ன ரகு!என்ன சொல்றா சுந்தரி?'
ம்க்கும்....இதையும் ஒப்பிக்கனுமாக்கும் நீங்க கிளம்புங்கோ'
இப்படித்தான் ரகு ஆபீஸ் கிளம்புவான்.திவ்யாவின் கதையோ கேக்கவே வேண்டாம்.சும்மாவே அவளுக்கு சற்று கோப சுபாவம்தான்.எதிர் வீட்டு பால்கனி என்றால் கேட்கவே வேண்டாம்.
'என்ன திவ்யா! அரைப் பரீட்சை நடக்கறதா?இன்னிக்கு என்ன இங்கிலீஷா?
அந்தக் காலத்து இங்கிலீஷ் மாதிரி எல்லாம் வராது' என்று அவள் சைக்கிளை
வெளியில் எடுக்கும்போதே ஆரம்பிப்பார்.
'மாமா! எனக்கு பரிட்சைக்கு டைம் ஆயிடுத்து.உங்க குறுக்கு விசாரணை எல்லாம் அம்மாவோட வச்சுக்கோங்கோ' சொல்லிவிட்டு சைக்கிளில் சிட்டாய்
பறந்து விடுவாள்.
காலை பால் வாங்க செல்லும் பொழுதும், மாலை கோயில் செல்லும் பொழுதும்
ரங்கநாதனின் முறை வந்து விடும்.'என்ன சார்!பாலுக்கா? அதுவும் சரிதான்.அப்படியே ஒரு வாக்கிங் ஆச்சு. ஆமா!நேத்து சாயங்காலம் கோயில்
போகலை போலருக்கே?உடம்பு சரி இல்லையா?'
ரங்கநாதன் வழிசலாய் ஒரு சிரிப்பை உதிர்த்து விட்டு போய் விடுவார்.அவருக்கு எதற்கு வம்பு.ஒரு முறை பதில் சொல்லப் போய் மாட்டிக் கொண்டார்.அவர் சொன்ன பதிலை வைத்து, மறுநாள் எதிர்வீட்டு பால்கனி
சுந்தரியிடம் கேள்வி கேட்க அவள் அதற்கு வேறு பதில் சொல்ல, குடும்பத்தில் குழப்பமாகாத குறைதான்.அன்றிலிருந்து ஒரே நழுவல்தான்.
இப்படியாக யார் வெளியில் சென்றாலும் சரி திருப்பி வந்தாலும் சரி எங்கு போகிறார்கள் என்ன வாங்கினார்கள்? பைக்குள் என்ன?ஊருக்கு என்றால் திரும்பி வர எத்தனை நாளாகும்? வீட்டில் யாருக்கு உடம்பு சரியில்லை?என்ன
சமையல்? ஆத்துல இன்னிக்கு என்ன சப்தம்?சண்டையா? என்றெல்லாம் ஒரே
கேள்விக்கணைகள்தான்.போகும்பொழுதும் வரும்பொழுதும் நிறுத்தி வைத்து
கேள்விகள் கேட்பதால் வீட்டில், எதிர் பால்கனிக்கு "டோல்கேட்" என்ற நாமகரணம் சூட்டப்பட்டது.
'பாவம்.இவரைப் பிடிக்கலைன்னு பொண்டாட்டி வேற ஒருத்தனோட போயிட்டாளாம்.பிள்ளை அமெரிக்கால வேலை பாக்கறான்.இவர் பாட்டுக்கு இங்க தனியா 'பரணி பவன்' ல சாப்டுண்டு காலத்தைக் கழிச்சுண்டிருக்கார்.
நாலு வருஷம் முன்னாடி வரை இந்த மொத்தக் குடியிருப்பும் இவரோடதாத்தான் இருந்தது.அத்தனையும் வித்துட்டார்.இப்ப இந்த ஒன்பது குடித்தனம் இருக்கற பிளாட் மட்டும் வச்சுண்டு தான் ஒண்ணுத்துல இருக்கார்.
என்ன பணம் காசு இருந்து என்ன சொல்லிக்க ஒரு நாதியுமில்லை பாவம்'
இதெல்லாம் நாலு வீடு தள்ளி இருக்கற புவனாவின் தகவல்கள்.
ஆறு மாதம் கழித்து ஒரு சம்மர் லீவிற்காக சுந்தரியின் குடும்பம் டெல்லி மதுரா
என்று வடக்குப் பக்கம் டூர் அடித்து விட்டு வர, எதிர் பால்கனி உதயமற்று இருந்தது.முதல்நாள் எங்காவது போயிருப்பார் என்று நினைத்தாள் சுந்தரி.
மூன்று நாளாகியும் காணாமல் புவனாவை விசாரிக்க, " ஓ! உனக்கு விஷயம் தெரியாதில்லையா?ஒருநாள் கார்த்தால வழக்கம் போல வேலைக்காரி வந்து கதவைத் தட்டி இருக்கா,.ரொம்ப நேரமா தட்டியும் திறக்கலைன்னதும் கீழ் வீட்டுல சொல்லி அவங்களும் தட்டிப் பாத்துருக்காங்க.இரண்டு மணி நேரமா எதுவுமே தெரியலைன்னதும் கதவை உடைச்சு பாத்தா அவர் தாறுமாறா கிடந்துருக்கார்.ஹார்ட் அட்டாக்காம்.ராத்திரி தூக்கத்துலயே போயிட்டாராம்.நல்ல ஆத்மா.கஷ்டப்படாம போயி சேர்ந்துட்டார். என்ன, போறச்சே பக்கத்துல ஒருத்தரும் இல்லாம நாதியத்து போயிட்டார் பாவம்"
மறுநாள் ரகு ஆபீஸ் கிளம்பும்பொழுது தன்னையறியாமல் எதிர் பால்கனியை
பார்த்தாள் சுந்தரி.வெறிச்சென்றிருந்தது.கண்களில் நீர் சுரந்தது.
இப்பொழுதெல்லாம் வெளியில் போகும் பொழுதும் வரும்பொழுதும் எதிர்
பால்கனி மனதிற்கு பாரத்தையே கொடுத்தது.
22 comments:
அருமை அருமை
இருக்கையில் சுமையாக தொந்திரவாக இருப்பதெல்லாம்
இழந்தபின் தான் அருமையானதாகத் தெரியும்
அருமையான பதிவு
தொடர வாழ்த்துக்கள்
த.ம 1
மிகவும் அருமையாக உள்ளது. இது போல் ஆங்காங்கே சிலர் இருக்கத்தான் இருக்கிறார்கள். பாவம் அவர்களுக்குத் தனிமை வாட்டுகிறது. பொழுது போவதில்லை. யாரிடமாவது பேசமாட்டோமா, யாரிடமாவது உறவு கொண்டாட மாட்டோமோ என ஏங்குபவர்கள் தான் இவர்கள். எனக்கும் இதுபோல சிலருடன் பழக்கம் உண்டு. அவர்களுக்கும் ஒரு ஆறுதலாக இருக்கட்டுமே என்று கொஞ்ச நேரம் பேசுவதும் உண்டு.
நல்ல பதிவு. நேற்றிருந்தார் இன்று இல்லை என்பது எவ்வளவு உண்மையாக உள்ளது, பாருங்கள். தனிமையைப்போன்ற கொடுமை எதுவுமே கிடையாது என்பது என் கருத்து.
உடான்ஸ் 2 ; இண்ட்லி 2; தமிழ்மணம் 3 vgk
சிலபேர் இப்படித்தான், எப்பத்தான் பேச்சை நிறுத்துவாங்களோன்னு ஏங்க வைக்குமளவுக்கு பேசியே தீர்ப்பாங்க.. என்னிக்காவது அது நிற்கும்போதுதான் அந்த வெறுமை இன்னும் ஏங்க வைக்கும்..
அருமை அருமை..ஒருவர் இருக்கும் போது எமக்கு இம்சையாக இருந்தாலும் அவர் இல்லாதபோது அவர் இல்லாததன் வெற்றிடம் பெரிதாகத்தெரியும்....
முதலில் வெறுக்கும் விசயமே பழக ஆரம்பித்துவிட்டால் பிடிக்கக்கூடும். திடீரென்று இல்லையென்று என்று ஆவதும் ஒருவித பதட்டத்துடன் தேட ஆரம்பிக்கும். நல்ல கதை.
யதார்த்தாமான கதை! பேச்சுத்துணை-கதை நன்றாக இருந்தது. :-)))
எவ்வளவு அற்புதமாக எழுதியிருக்கிறீர்கள்! தொந்தரவு என்று நினைப்பது நின்றதும் மனம் அதை நாடும் இயல்பை, நெகிழ வைக்கும் விதத்தில் சொல்லியிருக்கிறீர்கள்.
நல்ல கதை. இருக்கும்போது வெறுத்தாலும் இல்லாதபோது சற்று கஷ்டம் தான்... வெற்றிடம் நிறப்ப முடியாததாகப் போய்விடுகிறது...
அருமையான கதை. சில தொந்தரவுகள் கூட வாழ்வில் சுவாரசியத்தை சேர்க்கும். அது இல்லாத போதுதான் அதன் அருமை புரியும் என்று உணர்த்தியது.
//"டோல்கேட்" என்ற நாமகரணம் சூட்டப்பட்டது.//
சரியான பெயர் தான்!! :-))
எதிர்வீட்டு டோல்கேட் மட்டுமல்ல, நம் வீட்டு முதியவர்களும் இப்படித் தான் கேள்வி கேட்டுக் கொண்டே இருப்பார்கள் - அவர்கள் இல்லாத போது தான் அவர் அருமை தெரியும்!!
நல்ல கதை படைத்ததற்கு வாழ்த்துக்கள்!
இல்லாத பொழுதுதான் அதன் அருமை தெரியும்
இன்று என் வலையில்
விஜய் ரசிகர்கள் – சிரியுங்கள் ஆனால் சீரியஸா எடுத்துகாதீர்கள்
அருமையான கதை.
பகிர்வதற்கு யாருமற்றவர்களின் நிலைமை யாருக்கும் வரக்கூடாது.அந்த டோல்கேட் பெரியவருக்கு எல்லோரோடும் ஒட்டிக்கொள்ள இந்த விடை தெரிந்த கேள்விகள்தான் துணையாய் இருந்திருக்கிறது.
இதே போல தனியாக இருந்த பெரியவர் இரவு சாப்பாடு நேரத்தில் மாரடைப்பில் காலமாகி விட்டார். வேலைக்கு வரும் பெண்மணி காலையில் வந்து பார்த்தபோது சாப்பாடு அப்படியே இருக்க டைனிங் டேபிளில் சரிந்து கிடந்தவரைக் கண்டு அலறி இருக்கிறார். என்ன ஒரு மரணம்..
உங்கள் எழுத்துத் திறன் பிரமிக்க வைக்கிறது. இயலபாய் கதை வளர்க்கும் திறன் சூப்பர். இவற்றை ஏன் நீங்கள் வார/மாத இதழ்களுக்கு அனுப்பக்கூடாது?
Wonderful story... we realise we miss people only when they're not around... super write up Raji'kkaa...:)
மனம் கனத்து இருக்கிறது, அவர்கள் கேள்வி கேட்பது இவர்கள் ஏதாவது பேச தொடங்குவார்கள் என்பதற்கு தான்... காது கொடுத்து கேட்க்க இயந்திர உலகத்தில் ஆட்கள் தான் யாரும் இல்லை... இப்படி இருப்பவர்கள் யார் என்று பார்த்தால் எந்த தீய பழக்கத்துக்கும் ஆளாகதவர்கலாக இருப்பார்கள், அல்லது ஏதாவது தீய பழக்கத்தை விட்டொழிக்க நினைப்பவர்களாக இருப்பார்கள்
@ரமணி சார்
முதல் வரவிற்கும் கருத்துக்கும் தமிழ்மண ஓட்டிற்கும் நன்றி சார்!
@வை கோபாலகிருஷ்ணன்
//தனிமையைப்போன்ற கொடுமை எதுவுமே கிடையாது என்பது என் கருத்து//
எனது கருத்தும் அதுவே.இது போல் தனிமையில் வாடும் அவர்கள் உணர்வுகளைப் புரிந்து கொள்ளாத இடத்தில் வாழ்வது மிகவும் கடினம் சார்.கருத்திற்கும் ஓட்டுக்களுக்கும் நன்றி சார்
@அமைதிச்சாரல்
இல்லாததற்கு ஏங்குவதுதானே மனித மனதின் வினோதமே.கருத்திற்கு நன்றி சாரல்
@K.s.s.Rajh
உண்மைதான்.கருத்திற்கு நன்றி
@சாகம்பரி
மனதின் போக்குகளை துல்லியமாக நாடி பிடிக்கத் தெரிந்த தங்களின் கருத்திற்கு நன்றி மேடம்
@RVS
நன்றி சார்
@அப்பாதுரை
நன்றி சார்.
@வெங்கட் நாகராஜ்
உண்மைதான் சார்.கருத்திற்கு நன்றி
@பாலா
நன்றி
@மாதவி
கேள்வி கேட்க பேச ஆளற்ற வாழ்க்கை கொடுமையானதுதான்.கருத்திற்கு நன்றி மாதவி
@'என் ராஜபாட்டை' - ராஜா
வருகைக்கு நன்றி
@சே குமார்
நன்றி
@சுந்தர் ஜி
ஆமாம் ஜி.அவருக்கு துணை இந்த கேள்விகளே என பிறர் புரிந்து கொள்வது இல்லை.
@ரிஷபன்
பாராட்டிற்கு நன்றி சார்.இனி அவற்றுக்கும் அனுப்ப
முயற்சி எடுக்கிறேன் சார்.தங்கள் ஊக்கத்திற்கும் நன்றி
@அப்பாவி தங்கமணி
நன்றி புவன்ஸ்
முதல்முறையாக இங்கு விசிட் அடிக்கிறேன். தனிமை கொடுமை என்பதும், ஒன்றின் அருமை அது இல்லாத போதுதான் தெரியும் என்பதும் ஆணி அடித்த மாதிரி அருமையாக சொல்லப்பட்டிருக்கிறது. நல்ல ஒரு சிறுகதை வாசித்த நிறைவு. நன்றி.
@suryajeeva
தாங்கள் கூறுவதும் சரிதான்
@கணேஷ்
தங்களின் முதல்முறை வருகைக்கும் கருத்திற்கும் பாராட்டிற்கும் நன்றி
அருமை அருமை..ஒருவர் இருக்கும் போது எமக்கு இம்சையாக இருந்தாலும் அவர் இல்லாதபோது அவர் இல்லாததன் வெற்றிடம் பெரிதாகத்தெரியும்...
என் டாஷ்போர்டில் உங்க பதிவெல்லாம் கரெக்டா வருது. நான் உங்களுக்கு மெயிலில் தகவல் சொல்ரேன்.
யதார்த்த மனிதர். நல்ல கதை.
Post a Comment