Saturday, November 26, 2011

வங்கம் தந்த தங்கம் - 150

இந்த கட்டுரை மே மாதம் நான் எழுத நினைத்தது.ஆனால் சம்மர் ஹாலிடே
என்ற பெயரில் ஊர் சுற்றலும்,விருந்தினர்கள் வருகையும் என்று ஆகி விட்டதாலும் பின் ஏற்பட்ட கணிணி பழுதினாலும் அப்பொழுது விடுபட்டு அதன் பின் இதைப் பற்றிய நினைப்பில்லாமல் போனது.இருப்பினும் பதியாமலே விடுவதை விட தாமதமான பதிவு மேல் என்று இப்பொழுது பதிந்திருக்கிறேன்.


                              
                                                                                                                     


2011 - கவிஞர் தாகூரின் 150 ஆவது பிறந்த ஆண்டு.உலகில் எவர் எவருக்கோ
நூறும் நூற்றைம்பதும் கொண்டாடப் படுகிறது. நம் நாட்டில் இலக்கிய மறு மலர்ச்சி ஏற்படுத்திய இந்த தங்கக் கவிஞரை நாம் கொண்டாட வேண்டாமா?
அவரையும் அவரது படைப்புகளையும் பற்றி நாம் சிறிதாவது அறிய வேண்டாமா?

1861 ஆம் ஆண்டு மே மாதம் 7ம் தேதி வங்கத்தில் உதித்த இந்த தங்கம் தன் எட்டு வயதில் கவிதை எழுத ஆரம்பித்தார்.1878 ஆம் ஆண்டு அஹமதாபாதில் உள்ள
ஷாஜஹான் கட்டிய மோத்தி சாஹி மஹாலில் தனது தமையன் சத்யேந்திரனாத் தாகூருடன் ( ஐ சி எஸ் பரிட்சையில் தேறிய முதல் இந்தியர் இவர்தான்) தங்கி இருந்த போது "பசிக்கும் கற்கள்' என்ற சிறுகதை எழுதினார்.

1911 ஆம் ஆண்டு பாரத தேசிய கீதமாக விளங்கும் "ஜன் கண மண" எழுதி
இந்திய தேசிய காங்கிரஸ்ஸின் 26 ஆவது மாநாட்டில் பாடினார்.அடுத்த ஆண்டில் "கீதாஞ்சலி" என்ற பாடல் திரட்டை வெளியிட்டார்.1913 ஆம் ஆண்டு அதற்கு நோபல் பரிசு கிட்டியது.1915 ஆம் ஆண்டில் ஆங்கில அரசு அவருக்கு 'சர்' பட்டம் வழங்கியது

இவர் தனது கோட்பாடுகளின் படி தனது பாடல்களில் இறைவனுக்கு பெயர் கொடுக்கவில்லை.அதற்கு காரணமாக இவர் கூறிய கருத்து, "நாம் காணும் உணரும் உலகின் வழியாக இறையை வழிபடுவதே சிறந்ததாகும்.பிரபஞ்சத்தின் வெளித் தோற்றங்களில் காணும் இன்பமே இறை வழிபாடு. "ஈசாவாஸ்யம் இதம் சர்வம்" (கேனோபனிஷத்) இவையனைத்தும் இறைவன்"  என்பதாகும்.

"மனிதனே உயர்ந்த சத்தியம்" என்பதையே தனது மதமாகக் கொண்டார்.
"கோயிலின் இருண்ட மூலையில் கதவுகளைச் சாத்திக் கொண்டு யாரை வழிபடுகிறீர்கள்?கண் மூடி ஜப மாலை உருட்டுவதை விடுத்து கண்களைத் திறந்து பாருங்கள்.கடவுள் அங்கே பாதை போடுபவனிடத்திலும்,வயலில் உழுபவனிடமும் இருக்கிறான்.மழையிலும் வெயிலிலும் அவர்களோடு இருக்கிறான்.அவர்களது உழைப்பிலும் வியர்வையிலும் கடவுளைக் காணுங்கள்" என்றார்.

கீதாஞ்சலியின் இறுதிப் பாடலில்,

"ஓடுகின்ற ஓர் கணத்தில்
ஓங்குகின்ற ஊழியில்
ஆடுகின்ற பகலில்
அந்தகாரம் சூழும் இரவில்
வருகிறான் வருகிறான் வருகிறான்"  என்று பாடியுள்ளார்.

"வீடு திரும்பும் ஆர்வத்தோடு இரவு பகலாக தங்கள் மலைக்கூடுகளுக்கு
பறக்கும் நாரைகள் போல் என் முழு வாழ்வும் உனக்கொரு வணக்கமாக என் நித்யமான வீட்டுக்கு பயணமாகட்டும்" என்று குறிப்பிட்டுள்ளார்.

அருமையான கவிதைகள் தந்த இந்த தங்கம் கவிதையோடு நிற்காமல் நாடகங்கள்,சிறுகதைகள், இலக்கிய விமர்சனங்கள் என்று எந்த இலக்கிய வடிவையும் விட்டு வைக்காமல் எழுதியுள்ளார்.

"கதா ஓ கஹினி,கொல்ப குச்சா,கதா சதுஷ்டை,கொல்ப தாஸ்தக் என்ற தொகுப்புகள் வெளியிட்டார்.ஆங்கிலத்தில் "The postmaster,The child's return,The
kabuliwala போன்றவையும் தந்தார்.
வீடும் வெளியும்,இரு சகோதரிகள், நாலு அத்தியாயங்கள் என்ற நவீன சமூக நாவல்களை அளித்தார்.இவரது சமூக நாவலகள் பல திரைப்படங்களாகவும் வந்துள்ளன.தம் இறுதி நாட்களில் ஓவியம் தீட்டக் கற்றுக் கொண்டு பல சித்திரங்கள் வரைந்துள்ளார்.கல்கத்தாவில் ரவீந்திர சதன் நிலத்தடி ரயில் நிலையத்தில் அவரது பல ஓவியங்கள் பார்வைக்கு வைக்கப் பட்டுள்ளது.

இவரது படைப்புகளில் சிறு பகுதிதான் தமிழில் வெளி வந்துள்ளது.தமிழாக்கம் செய்யப் படவேண்டியவை ஏராளமாக உள்ளது.வரகவி பாரதி இவரது கவிதைகள்,கதைகள்,கட்டுரைகளை மொழி பெயர்த்துள்ளார்.ஆனால் அவர் செய்த தமிழாக்கம் வங்க மூலத்திலிருந்து அல்ல.ஆங்கிலத்திலிருந்துதான்.
பத்திரிக்கையில் வெளியான தாகூரது ஆங்கில கட்டுரைகள் ஐந்தை 'பஞ்ச வியாசங்கள்' என்ற தலைப்பில் தனி நூலாக பாரதியார் வெளியிட்டார்.'அடங்கி நட, ஜாதி, கல்வி கற்பிக்கும் பாஷை, சிறிதும் பெரிதும்"  என்பன போன்ற எட்டு
சிறுகதைகளை தமிழ்க் கவி மொழி பெயர்த்தார். பாரதியாரின் நண்பர் ஸ்ரீனிவாசாச்சாரியாரால் இவை ஒரே தொகுப்பு நூலாக வெளியிடப்பட்டது.

வங்க மூலத்திலிருந்து நேரடியாக தமிழாக்கம் செய்தவர்களுள் முதன்மையானவர் த.நா.குமாரஸ்வாமி அவர்கள்.சுமார் 50 ஆண்டுகள் இவரது
மொழிபெயர்ப்பு பணி தொடர்ந்தது.இவர் மொழி பெயர்த்த பல வங்க மூலங்களில் 26 தாகூரின் படைப்பாகும்.இவற்றை வெளியிட்ட பெருமை
அல்லயன்ஸ் கம்பெனிக்கும்,கலைமகள் காரியாலத்திற்கும், சாகித்ய அகாடமிக்கும் சேரும்.
தாகூரின் நூற்றாண்டு விழாவையொட்டி இரண்டு சிறுகதைத் தொகுதிகள்,101 கவிதைத் தொகுதிகள் மற்றும் கட்டுரைத் தொகுதிகள் வெளியிடப் பட்டன.
த நா குமாரஸ்வாமி அவர்களின் சகோதரர் த நா சேனாபதியும் சில தமிழாக்கம் செய்துள்ளார்.

'கவியரசர் கண்ட கவிதை' என்று தாகூரின் 120 வங்கப் பாடல்கள் பேராசியர்
ஆ.ஸ்ரீனிவாச ராகவன் அவர்களால் மொழியாக்கம் செய்யப் பட்டுள்ளது.

இந்திய இலக்கிய மறுமலர்ச்சியின் பங்கிற்கு ஒரு வித்தாக இருந்த தங்கக் கவிஞரை நாம் அடைந்ததற்காக பெருமை கொள்வோம்.




19 comments:

வை.கோபாலகிருஷ்ணன் said...

வங்கத்தின் தங்கமாம் ரபீந்த்ரநாத் தாகூர் பற்றிய பல விஷயங்களை வெகு அழகாகக் கூறியுள்ளீர்கள்.

நம் நாட்டின் தேசீயகீதத்தை எழுதியவரும்,
தன் பாடல் திரட்டு நூலான கீதாஞ்சலி மூலம் இலக்கியத்திற்க்காக நோபல் பரிசே பெற்றவருமான மாமனிதரை அவரின் 150 ஆவது ஆண்டில் நாம் ஒவ்வொருவரும் நினைவு படுத்திக்கொள்ளுமாறு பதிவு கொடுத்தது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது.

தமிழ்மணம்: 2 உடான்ஸ்: 2 இண்ட்லி: 3

Yaathoramani.blogspot.com said...

தாகூர் குறித்த அறியாத பல அரிய தகவல்களை
மிக அழகாக நேர்த்தியாக பதிவாக்கித் தந்தமைக்கு
மனமார்ந்த வாழ்த்துக்கள்.100வ்து பதிவுக்கு
எனது அட்வான்ஸ் வாழ்த்துக்கள்
த,ம 3

கீதமஞ்சரி said...

பெருமைமிகு கீதாஞ்சலி வழங்கிய தாகூர் அவர்களுக்கு இனியதோர் நினைவாஞ்சலி. அவரை நினைவுகூர வைத்தப் பதிவுக்கு நன்றி ராஜி.

விச்சு said...

தாகூரைப் பற்றிய தகவல்கள் பயனுள்ளவை. அவரின் அனைத்து படைப்புகளையும் தமிழில் யாராவது மொழிபெயர்த்தால் நன்றாக இருக்கும்.

வெங்கட் நாகராஜ் said...

நல்ல தகவல்கள்.. அவரது பல படைப்புகள் மொழிபெயர்க்கப்படாமலேயே இருக்கிறது... யாராவது மொழிபெயர்த்தால் பரவாயில்லை... இல்லையெனில் பெரும் நஷ்டம்தான் நமக்கு...

ரிஷபன் said...

தாகூரைப் பற்றிய அழகான தொகுப்பு.

கோயிலின் இருண்ட மூலையில் கதவுகளைச் சாத்திக் கொண்டு யாரை வழிபடுகிறீர்கள்?கண் மூடி ஜப மாலை உருட்டுவதை விடுத்து கண்களைத் திறந்து பாருங்கள்.கடவுள் அங்கே பாதை போடுபவனிடத்திலும்,வயலில் உழுபவனிடமும் இருக்கிறான்.மழையிலும் வெயிலிலும் அவர்களோடு இருக்கிறான்.அவர்களது உழைப்பிலும் வியர்வையிலும் கடவுளைக் காணுங்கள்

மனித நேயம் சொல்கிறவர்கள் காலம் தாண்டி ஜீவிக்கிறார்கள்.

middleclassmadhavi said...

தாகூரைப் பற்றிய புதிய தகவல்கள் கொடுத்ததற்கு நன்றி! வாழ்த்துக்கள்.

தாகூரின் 'where the mind is without fear' பள்ளியில் மனப்பாடப் பாடலாக இருந்தது - அதுவே முதலில் என் நினைவுக்கு வரும்! எனக்குப் பிடித்த பாடல்.

Unknown said...

நான் அறிந்திராத தகவல்.
பதிவுக்கு நன்றிகள்

வித்யா சுப்ரமணியம் (Vidya Subramaniam) said...

பொருத்தமான பதிவு. நல்ல தகவல்கள்.

MANO நாஞ்சில் மனோ said...

ஆஹா அருமையா தாக்கூரை பற்றி எழுதி இருக்கீங்க, போற்றப்படவேண்டியவர் தாக்கூர்...!!!

RAMA RAVI (RAMVI) said...

இலக்கியத்திற்காக நோபல் பரிசு பெற்ற தங்கக் கவிஞரைப் பற்றிய அழகான பதிவு.
தகவல்கள அனைத்தும் அருமை. நன்றி,ராஜி பகிர்வுக்கு.

Matangi Mawley said...

ஒரு சில பெங்காலி கள பிடிச்சி கேட்டா சொல்லுவா-- Tagore தொடாத subject ஏ இல்ல-ன்னு. வார்த்தைக்கு வார்த்த அவர quote பன்னரவர்களும் உண்டு அங்க. Tagore அ idolize பண்ணின நிறையா பேர்ல Satyajit Ray ரொம்பவே முக்யமான ஒருத்தர். Tagore பத்தியே ஒரு documentary எடுத்திருக்கார். அவரோட பல படங்கள் Tagore ஓட கதைகள் தான்-- Teen Kanya for instance.
establishment அ எதிர்த்து பேர் வாங்கணும் ங்கற கும்பல்களும் Tagore அ எதிர்த்து. ஆனா- பிற்காலத்துல அவர்களாலும் போற்றப்பட்டார்...
'Sir' பட்டத்த அவர் renounce பண்ணினது - ஜாலியன்வால பாக் சம்பவத்த எதிர்த்து- hats off !

Brilliant write-up!!

அப்பாதுரை said...

தாகூரிடம் எனக்குப் பிடித்தது அவருடைய vision. பாரதியிடம் அந்த அளவுக்கு vision இருந்திருந்தால்... என்று நினைத்திருக்கிறேன் (என்ன செய்ய, பாரதியை எளிதில் புரிந்து கொள்ள முடிகிறதே?)
இது போல எழுதி மகான்களை அவ்வப்போது நினைக்க வைப்பதும் அறம் தான். நீர் வாழ்க!

இராஜராஜேஸ்வரி said...

"வீடு திரும்பும் ஆர்வத்தோடு இரவு பகலாக தங்கள் மலைக்கூடுகளுக்கு
பறக்கும் நாரைகள் போல் என் முழு வாழ்வும் உனக்கொரு வணக்கமாக என் நித்யமான வீட்டுக்கு பயணமாகட்டும்" /

வங்கம் தந்த தங்கம் பற்றி
பங்கமில்லாமல் அருமையான
பகிர்வுக்குப் பாராட்டுக்கள்.. வாழ்த்துகள்..

raji said...

பின்னூட்டமளித்து ஊக்குவித்த அனைவருக்கும் எனது நன்றிகள்

சாந்தி மாரியப்பன் said...

நிறைவா இருக்குப்ப்பா.

ADHI VENKAT said...

தாகூரைப் பற்றிய அழகான பகிர்வு. பாராட்டுகள்.

சாகம்பரி said...

தாகூர் பற்றிய பகிர்வு அருமை. நன்றி ராஜி.

குறையொன்றுமில்லை. said...

நான் அறிந்திராத தகவல்.
பதிவுக்கு நன்றிகள்

Post a Comment