Tuesday, February 15, 2011

அம்மாளைத் தந்த அம்மாள்

                                                               கானசரஸ்வதி டி கே பட்டம்மாள்   

            இலக்கிய சிற்பி
வை மு கோதைநாயகி அம்மாள்                                                                         


தமிழகத்தின் இலக்கியம் இசை போன்ற கலைகளின் மாலையில்
பல நவமணிகள் உள்ளனர்.அவற்றுள் முத்தும் பவழமுமாகத் திகழ்ந்த
நாரீமணிகள் இருவரைப் பற்றிய பதிவே இது.

இந்த மணிகளைப் பற்றி பலரும் நன்கு அறிந்திருந்தாலும் நான் இவர்களைப்
பற்றி அறிந்த விஷயங்கள் குறித்தே இப்பதிவு.இவர்களைப் பற்றி எழுதும் அளவு
எனக்கு ஞானமில்லை  எனினும் இவர்களைப் பற்றி எழுதுவதில் பெருமையடைகிறேன்.

சங்கீத உலகில் கான சரஸ்வதி என்றழைக்கப் படும் இசை மேதை
டி கே பட்டம்மாளை அறியாதவர்களே இல்லை எனலாம்.அந்த இசை
அரசியை நமக்கு தந்தவர், தமிழ் இலக்கிய சிற்பி வை மு கோ என்றழைக்கப்பட்ட
வை மு கோதைநாயகி அம்மாள் ஆவார்.

வை மு கோதை நாயகி அம்மாள் இலக்கியம்,இசை,நாடகம்,தேசிய சேவை மற்றும் பக்தி என்று பல துறைகளில் ஈடுபட்டு பல பரிணாமங்களை உடையவர்.
இவரது காலம் 1901 - 1960 .
தமிழ் பத்திரிகை துறையின் முதல் பெண் இதழாசியர் இவரே ஆவார்.

இவர் திருவல்லிக்கேணியில் பிறந்தவர்.பிறந்து ஒரு வயதிலேயே தாயை இழந்தவர்.ஐந்தரை வயதில் வை மு பார்த்தசாரதி என்பவருக்கு திருமணம் செய்து கொடுக்கப்பட்டார்.வைத்தமாநிதி முடும்பை குடும்பம் என்ற பெயர் பெற்ற
குடும்பத்தை சேர்ந்த  இவருக்கு முறையாக கல்வி பயிலும் வாய்ப்பு கிடைக்கவில்லை.கணவர்,மாமனார்,நாத்தனார் என்று அனைவரும் புலமை மிக்கவர்கள்.இவர் தன் மாமியாரிடம் தெலுங்கு எழுதவும் படிக்கவும் கற்றுக் கொண்டார்.கதை கூறுவதில் ஆர்வம் கொண்ட வை மு கோ அம்மாளை
ஊக்குவிக்கும் பொருட்டு அவரது கணவர் பல நாடகங்களுக்கு அழைத்து சென்றார்

நாடகங்களைப் பார்வையுற்ற  அம்மாளுக்கு தானே நாடகம் எழுத அவா
எழுந்தது.ஆனால் எழுத படிக்கத் தெரியாத தனக்கு அது இயலாத காரியம்
என் வருந்தினார்.இதை அறிந்த அவரது வீட்டில் குடி இருந்த டி சி பட்டம்மாள் என்பவர் தான் எழுதி தருவதாக கூறி அவரை ஊக்கினார்.வை மு கோ அம்மாள்
கூற டி சி பட்டம்மாள் எழுத அம்மையாரின் முதல் படைப்பான "இந்திர மோகனா" நாடக வடிவம் பெற்றது.பின் நோபிள் அச்சக உரிமையாளரின் நட்பு
கிடைத்த பின் தன் எழுத்துக்களை அச்சேற்றினார்.
அந்நாளின் பிரபல பத்திரிகைகளான ஹிந்து,சுதேசமித்திரன்.நியூ இந்தியா போன்றவை இவர் படைப்பை பாராட்டியது.115 நாவல்கள் எழுதியுள்ள இவர் "ஜகன்
மோகினி" என்ற இதழை ஆரம்பித்து ஆசிரியராக வெற்றிகரமாக நடத்தினார்.

இவரது படைப்புகளான "ராஜ் மோகன்" ,அனாதைப் பெண்" , "தயாநிதி"
போன்றவை திரைப்படமாக எடுக்கப்பட்டன.

திருவல்லிக்கேணியில் மகாகவி பாரதியின் எதிர் வீட்டில் இருந்த இவர் பாரதியாரின் பாடல்களை பாட சொல்லி கேட்டதாக கூறப்படுகிறது,ஆனால் எழுத்து பூர்வமான ஆதாரம் இல்லை.இவர் ஒருமுறை காந்தியடிகளை சந்திக்க நேர்ந்த போது
அவர்"பாரத  மாதா அடிமை விலங்கிலிருக்கும்  போது பட்டு,நகை எதற்கம்மா"
என கேட்க அன்றிலிருந்து ஒன்பது கஜம் புடவையை கதரில் தறி நெய்து அணியலானார்.காந்தீய இயக்கத்தில் இணைந்து பிரிட்டிஷ்காரர்களுக்கு எதிராக
கோஷம் எழுப்பி 1932 ல் சிறை சென்றார்.

இவர் தானே பாடல்கள் எழுதி வாய்ப்பாட்டும் பாட அறிந்தவர்."ஹம்சப்ரமாரி"
"தாரதாரி"  என்ற ராகங்களையும் அமைத்தவர்.பெண்களுக்கான பள்ளி அமைத்து
பாட்டு,தையல்,கை வேலைகள்,ஆங்கிலம் மற்றும் ஹிந்தியை கற்றுக் கொடுத்தவர்.
வரதட்சணை கொடுமையை எதிர்த்து போராடியவர்.இவர் இலவசமாக குழந்தைப்பேறு மருத்துவமும் பார்ப்பதுண்டு.

ஆச்சார அனுஷ்டானங்களை கடைபிடிக்கும்  குடும்பத்தில் இருந்து அவற்றை
கடைப்பிடித்தாலும் கட்டுப்பெட்டியாக இல்லாமல் பல துறைகளிலும்
ஈடுபாடு கொண்டிருந்தார்.

தாசிகளுக்குரியது என்று ஒதுக்கப் பட்ட கலைகளான பாட்டு,நடனம் போன்ற
கலைகளில் பெண்களை ஊக்குவித்தவர்.இசை மேதை டி கே பட்டம்மாள்
அவர்களை பாட அனுப்ப மறுத்த அவரின் தந்தையை சமரசம் செய்து
டி கே பி அவர்களை முதன் முதலில் எழும்பூர் மகிள சபாவில் பாட
வைத்த பெருமை வை மு கோ அம்மாளையே சாரும்.அப்பொழுது டி கே பி அவர்களுக்கு பதினோரு வயது.

ஒரு தொலைக்காட்சி பேட்டியில் டி கே பட்டம்மாள் அவர்கள் ஆனந்த
கண்ணீர் மல்க வை மு கோ அம்மாளைப் பற்றி நினைவு கூர்ந்தார்.
டி கே பட்டம்மாள் என்ற அம்மாளை நமக்குத் தந்த வை மு கோதைநாயகி அம்மாள் பற்றிய தகவல்களையும் பெருமைகளையும்  " கோதைநாயகியின்  இலக்கியப் பாதை" என்ற பெயரில்
நமக்கு நினைவு படுத்திய திருப்பூர் கிருஷ்ணன் அவர்களுக்கு நாம் நன்றி கூற கடமைப்  பட்டவர்கள்.அம்மாளின்  நாவல்களை ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட
முனைவர் திருமதி கண்ணகியின் ஆய்வு நூல் வெளி வரவில்லை.

வை மு கோ அம்மாளின் புதல்வர் திரு ஸ்ரீனிவாசன் அவர்களும்
எழுத்தாற்றல் பெற்றவர்.மருமகள் திருமதி பத்மினி இசையாற்றலும்  எழுத்தாற்றலும் இணைந்து பெற்றவர்.அம்மாளின் 
பேத்தி திருமதி விஜயலட்சுமி ஐம்பது சிறுகதைகள் மற்றும் கட்டுரைகள் எழுதியுள்ளார்.

வை மு கோ அவர்களின் படைப்புகள் சிலவற்றை இங்கு குறிப்பிடுகிறேன்.
சாருலோசனா,உத்தம சீலன், கஸ்தூரி திலகம் போன்ற நாவல்கள் எனக்கு
பிடித்தவை.பெண் தர்மம் என்ற சிறுகதையும் இராமயணக் கிளைக் கதைகள் ஒப்பீடும் தனிச் சிறப்புடையவை.

இவரது வாரிசுகள் தற்போது திருவல்லிக்கேணி ரத வீதியில் இருப்பதாகக்
கேள்வி.
தமிழ் இலக்கிய வரலாற்று நூல்களுள் இவர் சரியாக அடையாளம் காட்டப்படாமல்
விடப்பட்டது வருத்தத்திற்கு உரியது.இவரைப் பற்றி "THE HINDU - An icon in her
life time " என்ற லிங்க்கும் "museumstuff . com " என்ற தளத்திலும் கொஞ்சம் அறியலாம்.
மேலும் அறிய விரும்புபவர்கள் முனைவர் ரா.பிரேமா(எத்திராஜ் கல்லூரியின் தமிழ் பேராசிரியர்) எழுதியுள்ள "இந்திய இலக்கிய சிற்பிகள்"  என்ற புத்தகத்தின் மூலம் அறியலாம்.
இப்பதிவிற்கு பல குறிப்புகள் இதிலிருந்தே எடுக்கப்பட்டது.அம்மாளின்
புகைப்படம் எந்த வலைத்தளத்திலும் கிடைக்கவில்லை.புத்தக அட்டையில்
இருந்தே அதுவும் எடுக்கப் பட்டது.
சென்னை வானொலியின் காலை மலரின் மூலம் அறிந்ததும் இதில் அடங்கும்.

இவரைப் பற்றி அறியாதவர்களுக்காகவும்,அறிந்தவர்கள் பெருமையுடன் நினைவு
கூவுமே இப்பதிவு.

பதிவின் நீளம் கருதி தகவல்களை முடித்துக் கொள்கிறேன்.

நன்றி

16 comments:

சுதர்ஷன் said...

அம்மாளை பற்றி இந்த விடயங்கள் கேள்விப்படவில்லை... நன்றி :-)

சக்தி கல்வி மையம் said...

நன்றி இதுவரை நான் அறிந்திராது ஒரு பயனுள்ள தகவல் தந்திருக்கிறீர்கள் . பகிர்வுக்கு நன்றி

ஆச்சி ஸ்ரீதர் said...

நானும் இதுவரைவை.மு.கோதை நாயகி அம்மா பற்றி கேள்விப்பட்டதில்லை.பகிர்விற்கு நன்றி .

R. Gopi said...

தகவல்களுக்கு நன்றி ராஜி மேடம்.

வை மு கோதைநாயகி அம்மாளின் கதைகள் அனைத்தையும் அல்லையான்ஸ் பதிப்பகம் கிட்டத்தட்ட பதினைந்து தொகுதிகளில் பதிப்பித்திருக்கிறது.

வெங்கட் நாகராஜ் said...

நல்ல பகிர்வு. முந்தைய தலைமுறையின் பல மேதைகளை, இந்த தலைமுறைக்கு அடையாளம் காட்ட முயற்சிகள் மேற்கொண்டால் நல்லது! பகிர்வுக்கு நன்றி.

Chitra said...

rare photos and rare info. Thank you for sharing them.

எல் கே said...

படங்களும் புதியத் தகவல்களும் அருமை

RVS said...

வை.மு.கோ அம்மையாரின் முதல் நாடகம் எழுதிய விதத்தை படித்தவுடன்.. வீட்டில் பாட்டிகள் கதை சொல்லும் பாங்கை ஒப்பிட்டு பார்த்தால்.. பாட்டிகள் எல்லாம் பெரும் எழுத்தாளர்களே! சரியா? ;-)

ADHI VENKAT said...

வை.மு.கோதைநாயகி அம்மாளை பற்றிய தகவல்களை படிக்கும் போது பிரமிப்பாக இருக்கிறது. பகிர்வுக்கு நன்றி.

திருப்பூர் கிருஷ்ணனின் பத்திரிக்கையில் வெளிவந்த சில தொடர்களை வாசித்திருக்கிறேன்.

R.Gopi said...

கானசரஸ்வதி டி கே பட்டம்மாள் அவர்களை பற்றிய தெரியாத பல தகவல்களை தந்தமைக்கு / பகிர்ந்தமைக்கு மனமார்ந்த நன்றி....

raji said...

@சுதர்சன்

நன்றி

@சக்தி ஸ்டடி கருண்
நன்றி

@திருமதி பி எஸ் ஸ்ரீதர்
நன்றி ஆச்சி

@கோபி ராமமூர்த்தி
தங்களுடைய தகவலுக்கும் மிக்க நன்றி

@வெங்கட் நாகராஜ்

கருத்துக்கு நன்றி


@சித்ரா
நன்றி

@எல் கே
நன்றி

@ஆர் வி எஸ்

நிறைய பாட்டிகளுக்கு கட்டுப்பாடுகள்
காரணமாக வாய்ப்பு என்பதே இல்லாது
போயிருக்கும் என்றே தோன்றுகின்றது

@கோவை2தில்லி
கருத்துக்கு நன்றி ஆதி

@ஆர் கோபி
நன்றி

வை.கோபாலகிருஷ்ணன் said...

சாதனைப் பெண்மணிகள் பற்றிய அருமையான செய்திகளை அனைவரும் அறியும் வண்ணம், பதிவு செய்து புதிய சாதனை புரிந்துள்ள, தங்களுக்கு என் பாராட்டுகள்.

சி.பி.செந்தில்குமார் said...

நல்லதொரு பதிவு.. சமீப காலமாக இண்ட்லியில் உங்கள் பதிவுகள் ஹிட் ஆகி நிறைய பேரை ரீச் ஆவது சந்தோசமான விஷயம்.

சி.பி.செந்தில்குமார் said...

ஃபோட்டோவில் முதல் படம் தெளீவா இல்ல.

Arun Ambie said...

தெரிந்த பெண்மணிகள் பற்றிப் புதிய தகவல். நன்கு தொடருங்கள்....

KABEER ANBAN said...

வை.மு கோதைநாயகி அவர்களைப் பற்றிய தகவல்கள் புதிது. மிக்க நன்றி

"இந்திய இலக்கிய சிற்பிகள்" புத்தக வெளியீட்டாளர் யார்?

Post a Comment