Monday, January 31, 2011

அம்பேத்காரும், நானும்

      தலைப்பை பார்த்ததும இது ஏதோ பெரிய விஷயம் போலிருக்கிறது என்ற எதிர்பார்ப்புடன் படிக்க ஆரம்பித்தால் நிச்சயம் ஏமாற்றமே மிஞ்சும்.இது வெறும் சுய புராணம் பற்றிய பதிவே.
                 
 எழுபத்தைந்து  எழுபத்தாறு வருடங்களின்  காலமது. ப்ரீகே ஜி, எல் கே ஜி மற்றும் யூ கே ஜி  எல்லாம் எட்டிப் பார்த்திராத பொற்காலம் என்று கூட கூறலாம்.
ஆறு வயது நிரம்பி வலது கையால் இடது காதையோ அல்லது இடது கையால்
வலது காதையோ தலைக்கு மேல் வழியாக தொட முடிந்தால்தான் ஒன்றாம்
வகுப்பிற்கு சேர்த்துக் கொள்வார்கள்.(தமிழ் மீடியமாக இருந்தால் யாராவது என்ன படிக்கற என்று கேட்டால்,ஒண்ணாப்பு என்று ஸ்டைலாக பதில் வரும் நாகரிகமான
காலம்)
              
 அப்படிப்பட்ட எழுபத்தாறில்,அண்ணா பள்ளிக்கூடம் போகிறானே என்ற
காரணத்தால் ஆறு வயது நிரம்பாமலே அழுது அடம் செய்து நானும் அவனுடன்
போவேன் என்று பிடிவாதம் பண்ணி பள்ளிக்கூட படியை மிதித்த அனுபவம்
அன்று வீட்டிலுள்ளவர்களுக்கும் பள்ளியில் இருந்தவர்களுக்கும் எப்படி இருந்ததோ
தெரியாது.எனக்கு ஒரு அற்புதமான அனுபவம்தான்.
                
இரட்டைப் பின்னல் ஆட, அக்கா வித விதமாய்  தைக்கும் கவுன் போட்டுக் கொண்டு கையில் சிலேட்டு பலகையுடன் துள்ளிக் குதித்துக் கொண்டும்,  கூட்டி செல்லும் அண்ணாவுடன் சின்ன சின்னதாய் சண்டைகளுடனும் கிளம்பும் போது உற்சாகமாய் இருக்கும்.
               
முதலில் ஆறு வயது நிரம்பாத காரணத்தால் என்னை சேர்த்துக் கொள்ள மறுத்தார்கள்.முறைப்படி சேர்த்துக் கொள்ள வேண்டியதில்லை என்றும் சும்மா
ஒப்புக்கு சப்பாணியாக சேர்த்துக் கொள்ளுமாறு அப்பா  கூறியதாலும்  அவர் கமிஷனராக அங்கு இருந்த காரணத்தாலும் அண்ணாவின் வகுப்பிலேயே என்னையும் சும்மா உட்கார வைத்தார்கள்.
            
முதல் நாள் என்னை வகுப்பறைக்கு கூட்டி செல்லும்போது எழுந்த உற்சாக
ஊற்று என்னை உள்ளே உட்கார வைத்த விதத்தில் புஸ்சென்று அடங்கிப்
போனது.அத்தனை மாணவ, மாணவிகளும் பெஞ்சுகளில் அமர்ந்து கொள்ள
என்னை மட்டும் கீழே தனியே குட்டிப் பாயில்(கிழிஞ்ச நார்னு சொல்லலாம்)
அமர வைக்க நான் தொங்கிப் போன முகத்துடன் அமர்ந்தேன்
          
 இதில் பெஞ்சுகளில் அமர்ந்திருந்த மாணவிகள் இந்திர பதவியில்
அமர்ந்திருந்த லுக் ஒன்றை என் மேல் விடுவார்கள்.
         
 இதையெல்லாம் பொறுக்க முடியாமல் வீட்டிற்கு சென்றதுமே அப்பாவிடம்  சென்று முறையிட்டால் அவர் கண்டு கொள்வதாக இல்லை.
(அவருக்குத்தான் ஏற்கனவே தெரியுமே)
"இன்னிக்கு ஸ்கூல் போனியே,எப்பிடி இருந்தது?"  என்று கேட்ட அக்காவை பிடித்துக்
கொண்டு அவளுக்கு நான் சொன்ன பதிலில் அனைவருக்கும் அதிர்ச்சி.

"என்னை அம்பேத்கார் மாதிரி உக்கார வச்சுட்டாங்க"
"என்னது?" என்று கேட்ட அக்காவுக்கு பெரியண்ணாவின் வரலாறு புத்தகத்தை
கொண்டு வந்து தந்து அதைப் பிரித்து அதில் போட்டிருந்த அம்பேத்காரின் படத்தை
காண்பித்து இவரை மாதிரி என்று காண்பித்ததும் "உனக்கு இவரை பத்தி தெரியுமா?
எப்பிடித் தெரியும்?" என்றாள் அவள்.

அக்காவின் பக்கத்தில் உட்கார்ந்து அம்மா, ஆடு, இலை படிக்கும் போது
பெரியண்ணா வந்து பாடம் ஒப்பிப்பான்.
அம்பேத்கார் தாழ்த்தப்பட்ட வகுப்பை சேர்ந்தவர் என்ற காரணத்தால்
அவர் பள்ளியில் படிக்கும்போது மற்ற மாணவர்களுடன் அமர வைக்காது அவரை கீழே ஒரு கோணியில்(அதையும் அவரே கொண்டு வந்து கொண்டு செல்ல வேண்டும்) அமர வைப்பார்கள் என்று அண்ணா ஒப்பிப்பான்.
இதைக் கூறியதும் அவள் விழுந்து விழுந்து சிரித்ததின் அர்த்தம் எனக்குப் புரியவில்லை அப்பொழுது.

அர்த்தம் புரியாமலே அடுத்த நாள் பள்ளியில் தலைமை ஆசிரியரின் அறைக்கு
சென்று "என்னை மட்டும் ஏன் அம்பேத்கார் மாதிரி உக்கார வச்சுருக்கீங்க?"
என்று கேட்க அவர் என்னைப் பார்த்து அம்பேத்காரை நான் அறிந்த விதம் பற்றி கேட்க நான் சொன்னதும், இனிமையான புன்முறுவலுடன் "நீயும் அவர் மாதிரி
பெரிய ஆளா வரணுமில்லையா அதுக்காகத்தான்" என்றார்.
"அப்போ மத்தவங்கல்லாம் வர வேணாமா?என்ற எனது அடுத்த கேள்விக்கு
அவர் என்னருகே மண்டியிட்டு அமர்ந்து,எல்லாரும்தான் வரணும்.உன்னைப் பார்த்து மத்தவங்கல்லாம் வருவாங்க" என்றார்.

இந்த பதில் என்னை அப்பொழுது கொஞ்சம் சமாதானப் படுத்தியது.
அடுத்த நாள் இந்திர பதவிகளின் லுக்குக்கு, "நான் அம்பேத்கார் மாதிரி வருவேனாக்கும்" என்று பதில் கூறுமளவுக்கு எனக்கும் அம்பேத்காருக்கும் ஒரு
சம்பந்தம் இருந்தது.

பின்னாளில் அம்பேத்கார் பற்றி படிக்கவோ கேட்கவோ நேரும் போதெல்லாம்
நான் சிரிக்காமல் இருந்ததே இல்லை.இந்த பதிவை படிக்கும் பொழுது கூட நான் சிரித்தேன்.அக்காவின் சிரிப்புக்கு அர்த்தம் புரிந்த வயதை விட புரியாத வயது இனிமையானதாக இருந்தது.

Saturday, January 29, 2011

துக்கடா

துக்கடா 1  :  இறைவனின் செயல்

                              ஒரு குருநாதரும் சில சீடர்களும் இருந்தனர்.அதில் ஒரு சீடனுக்கு ஒருநாள் பயங்கரமான தலைவலி.தலையில் பத்து போட்டுக் கொண்டு அமர்ந்திருந்தான்.இதை பார்த்த மற்றொரு சீடன் "என்னாயிற்று?" என்று கேட்க,
அந்த சீடன்" எனக்கு மிகுந்த தலைவலியாக உள்ளது.இன்று இறைவனுக்கு என் மேல் கருணையே இல்லை" என்றான்.

இதை செவியுற்ற குருநாதர் அந்த சீடனை  நோக்கி, "இத்தனை நாள் ஆரோக்கியமாக
இருந்தாயே,என்றாவது ஒரு நாளாவது இறைவனுக்கு நம்மீது எத்தனை கருணை என்று கூறியிருப்பாயா? அல்லது மனதளவிலாவது நினைத்திருப்பாயா?இன்று மட்டும் உனது தலைவலிக்கு எவ்வாறு இறைவன் மீது குற்றம் சுமத்துகிறாய்?

இறைவனின் அனைத்து செயல்களுமே காரண காரியங்கள் நிறைந்தவை.நம்மால்தான் அவற்றை புரிந்து கொள்ள முடிவதில்லை.
அப்படி இருக்க இறைவனை எவ்விதம் குற்றம் கூற இயலும்?" என்றார்

சீடன் வெட்கித்  தலை குனிந்தான்.

நம்மில் பலரும் அந்த சீடனின் நிலையில்தான் உள்ளோம்.

துக்கடா  2 :  மூழ்காத ஷிப்பே....

முதல் உலகப் போரில் நடந்த ஒரு விஷயம் இது.இரு உயிர் நண்பர்களில் ஒருவன்
போர் முனையில் குண்டடி பட்டு விழுந்தான்.இரண்டாமவன் அவனை சென்று பார்க்க படைத்தலைவரிடம் அனுமதி கேட்க அவரோ, "அனுமதி தருகிறேன்.ஆனால் நீ செல்வதில் பலன் இல்லை.அவன் இறந்திருப்பான். மேலும் நீயும் குண்டடி பட்டு சாவாய்" என்றார்.

இரண்டாமவன் சென்று நண்பனைத் தூக்கி வந்தான்.வைத்தியர் அவனை பரிசோதித்து விட்டு அவன் இறந்து விட்டதாகக் கூற,படைத்தலைவர், "நான்தான் பலனிருக்காது என்றேனே" என கூறினார்.
இரண்டாமவன், "இல்லை ஐயா! நான் சென்றது விலை மதிப்பில்லாத பலனைத் தந்தது" என்றான்.
படைத்தலைவர்,"என்ன உளறுகிறாய்?" என்றார்.

இரண்டாமவன், "நான் அருகில் சென்ற போது என் நண்பன் உயிருடன் இருந்தான்.அவன் பேசுவதைக் கேட்டது எனக்கு மிகுந்த திருப்தியாக இருந்தது"
என்றான்.
"உன் நண்பன் என்ன கூறினான்?" என்று கேட்டார் தலைவர்
"நண்பா! நீ வருவாய் என்று எனக்குத் தெரியும் என்று கூறிய பின்னர்தான்
உயிர் துறந்தான் எனது நண்பன்" என்று கூறினான் இரண்டாமவன்

நண்பேன்டா..........!!!!!!!!!!!!!

துக்கடா   3  : ஆராய்ந்து அறிக!

பேருந்தின் நடத்துனர் ஒருவர் ஒல்லியாகவும் உடல் பலமற்றவராகவும் இருந்தார்.
அவரது பேருந்தில் பயில்வான் போன்ற தோற்றமளிக்க கூடிய ஒருவர் தினமும் டிக்கெட் வாங்க மாட்டேன் என்று கூறி கொண்டு சென்று வந்து கொண்டிருந்தார்.
நடத்துனருக்கு அவரை தட்டிக் கேட்கவும் பயம்,அதே சமயம் உள்ளுக்குள் கோபம் பொங்கிக் கொண்டிருந்தது.

இந்த பிரச்சனையைத் தீர்க்க எண்ணி அவர் உடல் பயிற்சி செய்து உடலின் வலுவை எவ்வாறெல்லாம் கூட்ட முடியுமோ அவ்வாறெல்லாம் செய்து,  கராத்தே ஜூடோ எல்லாம் கற்றார்.

ஒரு நாள் அந்த பயில்வான் பேருந்தில் ஏறியதும் வழக்கம் போல டிக்கெட் வாங்க
மாட்டேன் என கூறினார்.உடனே அந்த நடத்துனர் பயில்வானின் சட்டையைப் பிடித்து "ஏன் வாங்க மாட்டாய்?" என்று ஆத்திரத்துடன் கேட்க,அவனோ
"என்னிடம் சீசன் டிக்கெட் இருக்கிறது" என்று காமிக்க நடத்துனர் திகைத்தார்.

"பிரச்சினையைத் தீர்க்க முயற்சி செய்யும் முன், பிரச்சினை என்ன  என்பதை ஆராய்ந்து  அறிதல் நலம்"

Tuesday, January 25, 2011

நினைவாஞ்சலி- பத்தாம் ஆண்டு

26 ஜனவரி  2001     இந்தியாவின் துயர நாள்.
7. 9   ரிக்டர் ஸ்கேல் அளவில் குஜராத் மக்களின் உயிர்களையும்,உறவுகளையும்,உடைமைகளையும் சூறையாடிய துக்க நாள்.
புத்தாண்டு,பொங்கல்,தீபாவளி ,ரம்ஜான்,கிறிஸ்துமஸ் எல்லாம்தான் கொண்டாடுகிறோம்

எத்தனை பேர் நினைவாஞ்சலி செலுத்துகிறோம்?
நினைவாஞ்சலிக்காகத்தான் இந்த பதிவு
இதை கவிதையாக நினைக்க வேண்டாம்.அஞ்சலி செலுத்தவே இப்பதிவு.

                                                 நினைவாஞ்சலி

                            தாயே பூமித்தாயே - உன்
                            தயை  எங்கே சென்றது?

                            ஏன் உயிர்களைக் கொன்றது?
                            எந்த அநியாயம் அதனால் நின்றது?
                    
                            உயிரிழந்ததும்,உறவிழந்ததும்
                            உன் மடியினாலா?
                            புன்சிரிப்பிழந்ததும்,பொருளிழந்ததும்
                            புவி மாதாவாலா?
                            வீடிழந்ததும்,வாசலிழந்ததும்
                            வளர்த்த மண்ணினாலா?

                            நதியிலே நீராட்டி - உன்
                            நில விளைச்சலை  உணவூட்டி
                            வளர்த்தது எல்லாமே இப்படி நீயே
                            வாரிக்கொள்ளத்தானா?

                            அநியாயத்தின் பாரம் தாங்காது
                            ஆத்திரமுற்றா வெடித்தாய்?-எனில்
                            பிஞ்சையும் பூவையும்  ஏன்
                            பிய்த்து எறிந்தாய் நீ?

இப்பதிவுக்கு பின்னூட்டம் போடும் யாருமே மேலிருக்கும் கவிதையைப்(புலம்பல்) பற்றிய
பாராட்டுக்கள் போன்ற கருத்துக்கள்  போட வேண்டாமென வேண்டிக்கொள்கிறேன்.
அனைவரும் மௌன அஞ்சலியாக பின்னூட்டம் போடுமாறு வேண்டி 
கேட்கிறேன்.
More smileys for free download  பின்னூட்டம் போடுபவர்கள் இது போல் ஏதாவது  போட்டும்  இந்த நினைவாஞ்சலியில் கலந்து கொள்ளலாம்.

Monday, January 24, 2011

பெத்து பேர் வச்சு....

                  நான் பாட்டுக்கு சும்மா இருந்தேன். ஒரு பதிவுல ஆரண்யநிவாஸ் ராமமூர்த்தி சார் ஒரு சந்தேஹம் கேட்டு என் ஆர்வத்த கிளப்பி விட்டுட்டார்.
அவர் அந்த பதிவுல துரியனின் சகோதரர்கள் பெயர்கள்  தெரிந்தால் கூறுமாறு  குறிப்பிட்டிருந்தார்.அதுக்கப்பறம் எப்பிடி சும்மா இருக்கறது.
அதான் இந்த போஸ்ட்.
கௌரவ சகோதரர்களின் பெயர்கள்:

1 துரியோதனன்
2 துச்சாதனன்
3 துஸ்ஸகன்
4  துஸ்ஸலன்
5  ஜலகந்தன்
6  சமன்
7  சகன்
8  விந்தன்
9  அனுவிந்தன்
10  துர்தர்ஷன் (அட!நம்ம தூர்தர்ஷன் மாதிரி இருக்கே)
11  சுபாகு
12  துஷ்ப்ரதர்ஷன்
13  துர்மர்ஷன்
14  துர்முகன்
15  துஷ்கர்ணன்
16  விகர்ணன்
17  சலன்
18  சத்வன்
19  சுலோசன்
20  சித்ரன்
21  உபசித்ரன்
22  சித்ராக்ஷன்
23  சாருசித்திரன் ( ''சித்ர'' ங்கறத வச்சே நாலு பேருக்கு பேர் தேத்திட்டாங்க போல)
24 சராசனன்
25  துர்மதன்
26  துர்விகாஷன்
27  விவில்சு
28  விகடிநந்தன்
29  ஊர்ணநாபன்
30  சுநாபன்
31  நந்தன்
32  உபநந்தன்
33  சித்ரபாணன்
34  சித்ரவர்மன்
35  சுவர்மன்
36  துர்விமோசன்
37  அயோபாகு
38  மகாபாகு
39 சித்ராங்கன் ( சின்னதாத்தா சித்ராங்கதன் பேரை கொஞ்சம் மாத்தி                                               வச்சுட்டாங்க போல)
40  சித்ரகுண்டலன்
41   பீமவேகன்
42   பீமபேலன்
43   வாலகி
44   பேலவர்தன்
45    உக்ராயுதன்
46    சுஷேணன்
47    குந்தாதரன்
48    மகோதரன்
49    சித்ராயுதன்
50    நிஷாங்கீ
51    பாசி (வழுக்கி விட்டுடுவாரோ மத்தவங்கள)
52   வ்ருந்தாரகன்
53    த்ரிதவர்மன்
54   த்ருதக்ஷத்ரன்
55    சோமகீர்த்தி
56    அந்துதரன்
57    த்ருதசந்தா
58    ஜராசந்தன்      (இவர் வேற ஜராசந்தன்)
59    சத்யசந்தன்
60     சதாசுவக்
61     உக்ரஸ்ரவஸ்
62    உக்ரசேனன் (கம்சன் அப்பா இல்ல இவர்)
63  சினானி  (இவர வச்சுதான் சினானிம்ஸ் வந்துச்சோ)
64    துஷ்பராஜா
65    அபராஜிதன்
66    குந்தசாயி
67    விசாலாக்ஷன்
68    துராதரன்
69    த்ருதஹஸ்தன்     
70  ஸுஹஸ்தா
71    வாதவேகன்
72    சுவர்ச்சன்
73    ஆதித்யகேது
74    பஹ்வாசி
75    நாகதத்தன்
76    உக்ரசாயி
77   கவசி
78   க்ரதாணன்
79   குந்தை
80   பீமவிக்ரன்
81   தனுர்தரன்
82   வீரபாகு
83  அலோலுமன்
84   அபயா
85   த்ருதகர்மாவு
86   த்ருதரதாஸ்ரயன்
87   அநாத்ருஷ்யன்
88   குந்தபேடி
89   விராவை
90   சித்ரகுண்டலன்
91   ப்ரதமன் ( ஐயோ!எனக்கு அடப்ரதமன்,சக்கப்ரதமன்லாம் ஞாபகத்துக்கு வருதே)
92   அமப்ரமாதி
93   தீர்க்கரோமன்
94   சுவீர்யவான்
95   தீர்க்கபாகு
96   சுஜாதன் (பேரு பஞ்சம் வந்து லேடீஸ் பேர மாத்தி வச்சுட்டாங்க போல)
97   காஞ்சனத்வாஜன்
98   குந்தாசி
99   விராஜஸ்
100  யுயுத்ஸூ (த்ருதிராஷ்டிரனுக்கும் ஒரு வேலைக்காரிக்கும் பிறந்தவன்)
     
   அப்பாடி! ஆம்பளைங்க கும்பல் முடிஞ்சது.அடுத்து

101 துர்ச்சலை (பெண்)

(இந்த திருதிராஷ்டிரனை யார் இவ்வளவு பெத்துக்க சொன்னது.லிஸ்ட் குடுக்கறதுக்குள்ள மூச்சே வாங்குதுடா சாமி)

ஆரண்யநிவாஸ் சார் கேள்வி கேட்டுட்டீங்க,பதில் சொல்றதுக்குள்ள அப்பாடான்னு
ஆகற அளவு இருக்கு லிஸ்ட்.
எப்பிடித்தான் காந்தாரி பெத்தாங்களோ,பேரு வச்சாங்களோ
பெத்து பேரு வச்சு...(அப்பாடி! டைட்டில் வந்துருச்சு) ,அந்த பேருள்ளவங்களை
கரெக்டா கண்டுபிடிச்சு,கரெக்டா கூப்ட்டு...(ஐயோ! எனக்கு தலை சுத்துதுப்பா)

ஒகே! தலை சுத்தாதவங்களுக்கெல்லாம் ஒரு சின்ன போட்டி வசசுரலாம்.
இந்த கௌரவப் படையை வச்சு ஒரு காமெடி பதிவு எழுதணும்,அதாவது இப்ப உதாரணத்துக்கு காந்தாரி கண்ணை மூடிக்கிட்டு இருக்கறதாலயும் கும்பல் ஜாஸ்தியா இருக்கறதாலயும் ஒருத்தர் கிட்ட சொல்ல வேண்டியது இன்னொருத்தர் கிட்ட சொல்றது, அண்ணன்  தம்பிக்குள்ள நம்மாளுதானான்னு சந்தேஹம் வரது இது மாதிரி.இத மீறி அவங்கவங்க கற்பனைக்கேத்தாப்ல எழுதலாம்

எழுத தயார்ங்கறவங்க பின்னூட்டம் போடும் போதே அதுல ப்ரசன்ட்னு சேர்த்துப் போடலாம்
என்னது?  பரிசா?
ஒ! அது ஒண்ணு இருக்கோ! சரி சிறந்த ""கற்பனை காமெடி எழுத்தாளர்" அப்டின்னு டைட்டில் குடுத்துடலாம். ரெடியா?  ஸ்டார்ட்....


குறிப்பு:
ஆதாரம்: மகாபாரதம் ஆதிபர்வம்

பின் குறிப்பு: யாரோட காமெடி கற்பனைக்கு அதிகமான பாராட்டுக்கள் பின்னூட்டம் மூலமா சேருதோ அவங்க பட்டத்தை தட்டி செல்வாங்க.ஒரு பதிவரே பாராட்டாக பல பின்னூட்டம் போட்டாலும் அது ஒன்றாகவே கருதப்படும்.இதுவரை இந்த ப்ளாக்கிற்கு விசிட் செய்யாத பதிவர்களுக்கும்
மற்ற பதிவர்கள் தெரியப்படுத்தலாம்
இந்த மாத கடைசி நாள் வரை டைம் வச்சுக்கலாம்.
பிப்ரவரி ஒன்றாம் தேதி பட்டம் கொடுக்கப்படும். ALL THE BEST

Saturday, January 22, 2011

தவிப்பு

திடீர்னுதான் தோணுச்சு, "அடடா!நம்ம கவிதை போட்டு இருபது நாள் கிட்ட ஆகுதேன்னு.பதிவர்கள் யாராச்சும்   ஞாபகப்படுத்த  கூடாதா?(என்ன?  என்ன முணு முணுக்கறீங்க? ஓஹோ! இருபது  நாளா கவிதைங்கற பேர்ல தொல்லை இல்லாம இருந்துச்சு, இப்ப வந்துட்டாளானுதான?)

அட!அதுக்காக எல்லாம் கவிதைப் பதிவை நிறுத்திட முடியுமா என்ன?
அப்பறம் "ப்ளாக்"  உலகத்துக்கே பெரிய இழப்பா ஆகிடாதா?
வேற வழி இல்லை, இதையும் படிங்க

                                                               தவிப்பு

ஆகாயம் சென்று
ஆனந்த சுற்றலை
அணு அணுவாய் ரசித்தோம்

அன்றைய பொழுதுக்கு
அளவாக ஆகாரம் அடைந்த பின்
அடைந்திட்டோம் கூட்டை

அந்தோ!

மரமுமில்லை கூடுமில்லை
மயக்கமுறும் அதிர்ச்சி,
மலங்க மலங்க விழித்த பின்
மதியினிலே எட்டியது

மலையத்தனை முயற்சியால்
மகிழ்வாக புனைந்ததை
மனிதன் அழித்திட்டான்
மகா பாவம் செய்திட்டான்

ஏ மானுடா!

உங்களுக்கோ வீட்டில் பல மரங்கள்
எங்களுக்கோ மரத்தில் ஒரு கூடு

எங்கே என் வீடு?
எங்கே என் குஞ்சுகள்?

Wednesday, January 19, 2011

கோவிலின் சில தாத்பர்யங்கள்

                                                      இந்து தர்மத்தின் படி அமைந்த கோவில்களின் சில விவரங்களையாவது நாம் அனைவரும் அறிவது அவசியமாகும்.

கோவில்களில் உருவ வழிபாடு செய்வதற்கும், கொடி மரம் எனப்படும் த்வஜஸ்தம்பம் அமைப்பதற்கும் உண்டான காரணம் நம்  நலம் கருதி உண்டானதுதான்.

இந்த உலகில் நம்மை  சுற்றி ஆகாயம், காற்று, நீர், நெருப்பு மற்றும் நிலம் ஆகிய பஞ்ச பூதங்கள்  அமைந்திருக்கின்றன.இவற்றின் சக்தியால்தான் நாம் காக்கப்படுகிறோம் என்பதை எவரும் மறுக்க முடியாது.இவைகளிடமிருந்தே நாம் சக்தி பெறுகிறோம்.எனவே கோவில்கள் இந்த அடிப்படையிலேயே அமைக்கப்பட்டவைகளாக உள்ளன.

த்வஜஸ்தம்பம்:   முதலில் த்வஜஸ்தம்பத்தைப்(கொடி மரம்) பற்றிப் பார்ப்போம்.
வான் வெளியை நோக்கி உயர்ந்து நீண்டிருக்கும் இந்த கொடி மரமானது வெட்ட வெளியிலிருந்து காற்றலைகளை தனக்குள் ஈர்த்துக் கொள்கிறது.(நம்ம டி வி க்கு ஆண்டனா,டிஷ் ஆண்டனா எல்லாம் வச்சா எப்பிடி நமக்கு ஒப்பன் ஸ்பேஸ்லேருந்து
காற்றலை மூலமா சிக்னல் கிடைக்குது.அப்டித்தான்.நான் மொபைல் போன் பத்தியோ அந்த காற்றலை பத்தியோ சத்தியமா பேசவே  இல்லைங்க) சரி விஷயத்திற்கு வருவோம்.கொடி மரமானது உலோகத்தகட்டால் இருப்பதன் மூலம், அந்த உலோகம் தான் ஈர்த்த காற்றலைகளை கோபுர வாயிலின் குறுகலான பாதை வழியாக கர்ப்பக்ரஹத்துக்கு அனுப்புகின்றது

இங்கு ஒரு சந்தேகம் ஏற்படலாம்.அது எவ்வாறு காற்றலைகள் மிக சரியாக கர்ப்பக்ரஹத்தை நோக்கி செலுத்தப்படுகிறது என்று.காற்றலைகள் பரந்து விரிந்திருக்கும் இடங்களை  விட குறுகலான இடம் நோக்கியே வேகமாக செல்கின்றன.(இந்த முதல் படியில் ஆகாயம் மற்றும் காற்று இடம் பெற்று விடுகின்றன)

                     
கர்ப்பக்ரஹம்:   அடுத்ததாக கர்ப்பக்ரஹத்தில் மூலவராக ஏற்படுத்தப்பட்டிருக்கும் சிலை கல்லால் செய்யப்பட்டதாகும்.இந்த கல் காற்றலையை உள் வாங்கி தன் தன்மையை சேர்த்து அங்கு கூடும் நம்மிடம் சேர்ப்பிக்கின்றது(இந்த நிகழ்வுக்கு கற்பூர ஆரத்தி தன் பங்காக உதவுகின்றது)


கற்பூர ஆரத்தியை நாம்  கண்களில் ஒற்றிக் கொள்வதன் மூலம் அதிலுள்ள பாஸ்பரஸ் சக்தியும் நம்மை வந்தடைகின்றது.
Fire Crown (Rajendran Rajesh) Tags: fire flames crown camphor abigfave(இந்த நிலையில் நெருப்பு இடம் பெற்று விடுகின்றது)


தீர்த்தம்:  கோவில்களில் நமக்கு வழங்கப்படும் தீர்த்தமே அடுத்து இடம் பெறுகிறது.
காற்றலைகள் கர்ப்பக்ரஹத்தில்  வைக்கப்பட்ட தீர்த்தத்தை குளிர்ச்சியுள்ளதாக்குகின்றன.அது நம் உடல் சூட்டை குறைத்து நமக்கு சக்தி கிடைக்க ஏதுவாகின்றது.மேலும் தீர்த்தத்தில் துளசி, ஏலம், லவங்கம் இடுவதன் மூலம் நம் உடலின் கிருமிகள் அழிக்கப் படுகின்றன.
(இந்த நிலையில் நீர் இடம் பெற்று விடுகின்றது)

Brass & Copper Vattle For Lord Perumal, Vishnu And Hanuman Temple

நமஸ்காரம்:  நன்றாகக் கீழே  விழுந்து உடல் நிலத்தில் படுமாறு நமஸ்காரம்  செய்வதன் மூலம் புவியின் காந்த சக்தியும் நம்மை வந்தடைகின்றது.
(இந்த நிலையில் நிலம் இடம் பெற்று விடுகின்றது)

                                                  
                                                         

இவ்வாறு கோவிலுக்கு செல்வதன் மூலம் நாம் பஞ்ச பூதங்களிடமிருந்து உடலுக்கு உண்டான சக்தியை பெறுகின்றோம்.கோவிலுக்குள் இருக்கும் அனைவரின் எண்ண அலைகளும் பிரார்த்தனையை நோக்கியே இருப்பதால் ஆன்ம பலமும் கூடுகின்றது.

                                           

கோவிலின் தர்மத்தை கடைபிடித்து நன்மை பெறுவோமாக

  குறிப்பு:   கேட்டவற்றிலிருந்து           

Saturday, January 15, 2011

சோளிங்கரும் கணுப்பிடியும்

                                             அரக்கோணம்,திருத்தணிக்கு அருகே அமைந்துள்ள சோளிங்கர் ஓர் அற்புதமான ஊர். அமைதியான சூழ்நிலை,சுத்தமான காற்று, அக்காரக்கனி என்ற திருநாமம் கொண்ட நரசிம்ம மூர்த்தி, அமிர்தத்தையே பலனாக தரக்கூடிய அமிர்தபலாவல்லித் தாயார் மற்றும் சிறிய திருவடியாகிய நம்ம ஆஞ்சூஸ்(அட! நம்ம ஆஞ்சநேயரேதாங்க) என்று இத்தனையும் அடங்கிய இந்த ஊரில் மூன்று வருடங்களுக்கு முன்பு வரை பன்னிரண்டு வருடமாக கொண்டாடிய கணுப்பிடியை
மறக்கவே முடியாது.

கணுப்பிடி கொண்டாட்டத்தில் நம்ம ஆஞ்சூஸ் தான் கதாநாயகன்.ஆஞ்சநேயருடைய பிரதிநிதியாக குரங்கு கூட்டத்தையே பார்க்கலாம் இங்கே.

கணுப்பிடி அன்று வீட்டின் மொட்டை மாடியில் பிடி வைப்பதற்காக சுத்தமாக பெருக்கி தண்ணீர் தெளித்து கோலம் போட்டு விளக்ககேற்றிய பின்னர், பிடி சாதம் இலைகள் எல்லாம் கொண்டு வருவதற்கு முன்னால்  சில காபந்து வேலைகள் அவசியம் செய்ய வேண்டியிருக்கும்.

முதலில் வீர பாண்டிய கட்டபொம்மன் கணக்காக கையில் தடியுடன் கணவர் மாடிக்கு ஏறுவார்.பின்னர் ஏற முடியாமல் கஷ்டப்பட்டாவது மாமியார் ஏறுவார். அவருக்கு பின்னால் நானும் என் பெண்ணும் பிடி சாத வகைகளுடன் ஏறியதும் பின்னால் இன்னொரு தடியுடன் வீர பாண்டிய கட்டபொம்மனின் தகப்பனார் ஏறுவார்(மாமனார்).

இவ்வளவு ஜாக்கிரதை உணர்வுடன் ஏறி  இலையை வைத்ததுதான் தாமதம்,நான்கு பக்கங்களிலிருந்தும் பாய்ந்து ஒடி வருவார்  நம்ம ஆஞ்சூஸ் தன் குடும்ப சகிதமாக.
உடனே நம்ம கட்டபொம்மனும், அவர் தந்தையும் தன் சாகசங்களை ஆஞ்சூஸ் குடும்பத்துக்கேதிரே பிரயோகிக்க எதற்கும் அடங்காத சில முரட்டு 'ஆஞ்சூஸ்'கள் பல்லைக்   காட்டி 'குர்'ரென தன் குடும்ப சவுண்டை குடுக்கும்.

இதற்கு நடுவே நாங்கள் மூவரும் அவசர அவசரமாக இலையில் பழம் கரும்பு வைத்து பிடி சாதத்தை நடுங்கிக் கொண்டே வைக்க, அப்பொழுதுதான் பூமிக்கே வந்தாற் போல் இருக்கும் குட்டியூண்டு ஆஞ்சூஸ்கள் ஒடி வந்து பழத்தை எடுக்கும்.

மாடியின் மூலையில் ஊசி பட்டாசு வைத்து கிடைக்கும் 'கேப்' பில் பிடி வைப்பதும் உண்டு.

காக்கைக்கு பிடி வைப்பது குரங்கு பிடியாகி விடும்.நமக்கு, எந்த பறவை எந்த விலங்கு சாப்பிட்டாலும் ஒன்றுதான் என்றாலும் பிடி வைப்பதற்குள் உன்னைப் பிடி என்னைப் பிடி என்றாகி விடும்.

இன்றோ சென்னை வாசத்தில் மாடியில் குரங்கும் இல்லை.காவலுக்கு கட்டபொம்மன் வருவதில்லை.மாடி ஏற முடியாத நிலையில் மாமனாரும்,மாமியாரும் என்றான பின் குடும்பத்துடன் வைத்த கணுப்பிடி காணாமல் போனது.

சோளிங்கர் ஆஞ்சூஸ் பத்தி மட்டும் எழுதிட்டு 'உம்மாச்சி'  பத்தி எழுதலேனா எப்பிடி?

அக்காரக்கனியான அந்த எம்பெருமான் பெரிய மலையில் யோக கோலத்தில் வீற்றிருந்து அருள் பாலிக்கிறார்.இந்த தலத்துக்கு 'திருக்கடிகை' என்ற பெயருண்டு.கடிகை என்றால் நாழிகை என்று பொருள்.ஒரு நாழிகைக்குள் சப்த ரிஷிகளுக்கும் இங்கு பிரத்யட்சமாகி அருள் பாலித்ததால் இந்த பெயர்.
கார்த்திகை ஞாயிற்றுக்கிழமை பெருமாளை சேவிப்பது இங்கு மிக விசேஷம்.
மொத்தம் ஆயிரத்து முன்னூற்று பத்து படிக்கட்டுக்கள் ஏறி  சேவிக்கும்பொழுது பக்தி பரவசத்தில் ஆழ்ந்து விடுவோம்.

சிறிய மலை நானூறு படிக்கட்டுக்கள் கொண்டது.இங்கு ஆஞ்சநேய சுவாமிகள், பெரிய மலையில் உள்ள யோக நரசிம்மரை நோக்கி யோக கோலத்தில் வீற்றிருந்து சங்கு சக்கரத்துடன் அருள் பாலிக்கிறார்.சப்த ரிஷிகளுடைய தவத்துக்கு இடையூறு செய்யும் அசுரர்களிடமிருந்து அவர்களை  காக்க இந்த்ரத்யுமன் என்ற அரசனுக்கு துணையாக சங்கு சக்கர கோலத்தில் ஆஞ்சநேயர் சென்றதால் இங்கு  இக்கோலத்தில் காட்சி அளிக்கின்றார்.
 தாயார் அம்ருத பலாவல்லி, அமிர்தத்துக்கு ஒப்பான பலனை அளிக்கும் காருண்ய கோலத்தில் காட்சியளிக்கின்றார்.
இம்மலைகளைத் தவிர ஊர்க்கோவில் ஒன்று உண்டு.இங்குதான் பக்தோசிதன்(பக்தர்களுக்கு உசிதமானவன்) என்ற திரு நாமத்துடன் உத்சவர் எழுந்தருளி இருக்கிறார்.இங்கு ஐப்பசி  மாத திருக்கல்யாண உத்சவமும்,சித்திரை பிரம்மோத்சவமும் மிக சிறப்பு வாய்ந்தவை,கணுப்பிடி அன்று உத்சவர், கிரி ப்ரதட்சினத்துக்கு இரண்டு மலைகளையும் சுற்றிக் கொண்டு இருபத்தைந்து  கிலோ மீட்டர் எழுந்தருளுவார்.மலையடிவாரத்தில் தக்கான் குளம் என்ற பெரிய குளம் ஒன்றும் அதை ஒட்டிய வரதர் கோவிலும் உண்டு.

அக்காரக்கனி அனைவருக்கும் அருள பொங்கல் நன்னாளில் பிரார்த்திக்கிறேன்.

Thursday, January 13, 2011

குழந்தைகள் உலகம்

குழந்தைகள் மென்மையானவர்கள் மட்டுமின்றி மேன்மையானவர்களாகவும் மிகுந்த அறிவுடன்
கூடியவர்களாகவும் இருக்கிறார்கள் என்பதற்கு  நான் பார்த்தவற்றிலிருந்தும்
கேட்டவற்றிலிருந்தும் சில பகிர்வுகள்:

ஒரு நாள் இரவு ஒன்பது மணிக்கு மின்வெட்டு என்பதால் வாசலில் சென்று அமர்ந்து கொண்டேன்.தெருவில் இரு குழந்தைகளின் உரையாடல் இது:

ஷிவானி: நாம ஒரு கேம் விளையாடலாமா?

பூஜா: ஓ எஸ்! விளையாடலாம்

ஷிவானி: நீ அறிவாளியா இல்லையா?

பூஜா: நான் அறிவாளிதான்

ஷிவானி: ஒகே நான் கேக்கறதுக்கு பதில் சொல்லு  அப்டின்னா.  நீ யாரு?

பூஜா: நான் பூஜா

ஷிவானி: பூஜாங்கறது உன்னோட பேரு, நீ யாரு?

பூஜா: நான் ஹ்யுமன் பீயிங்

ஷிவானி: ஐம் ஆல்சோ ஹ்யுமன் பீயிங்,(பக்கத்திலுள்ள குழந்தையைக்  காட்டி) ஷீ இஸ்  ஆல்சோ ஹ்யுமன் பீயிங்.எல்லாரும் அதேதான? நீ யாரு?

பூஜா: ஐம் ஒன் ஆப் தி ஹ்யுமன் பீயிங்

ஷிவானி:   ஐம் ஆல்சோ ஒன் ஆப் தி ஹ்யுமன் பீயிங், ஷீ இஸ் அல்சோ ஒன் ஆப் தி ஹ்யுமன் பீயிங்.எல்லாருமே தனித்தனியா அப்டித்தான்.நீ சொல்றதெல்லாமே எல்லாருக்கும் காமனா இருக்கற பதில்.நான் கேக்கறது நீ யாருன்னு?

பூஜா: (ஷிவானி தன்னை மடக்குவதை உணர்ந்து) நான் இந்த 'கேம்' க்கு வரல

ஷிவானி: அப்டின்னா நீ அறிவாளி இல்லன்னு ஒத்துக்கோ." நான்" ங்கறதுக்கு என்ன அர்த்தம்,நான் யாருன்னு   தன்னை பத்தியே தெரிஞ்சுக்க முடியாத ஒருத்தர் எப்டி அறிவாளியா இருக்க முடியும்.நாம யாருன்னு நாம தெரிஞ்சுண்டாதான நாம அறிவாளி?

எவ்வளவு பெரிய பெரிய நூல்கள் படித்தும் "நான்" என்பது எது என பலரும் சிந்திக்க மறந்ததை ஒரு பத்து வயது குழந்தை அனாயாசமாக கூறி விட்டது என்னை திகைப்பிலும் ஆச்சரியத்திலும் ஆழ்த்தியது.
                                                 
                                         * *  * *  * *                 * *  * * * *
அடுத்தது ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சி.விஜய் டி வி யின் 'கண்ணாடி' என்ற நிகழ்ச்சியில் இரண்டு குழந்தைகளின் பேச்சு:

முதல் குழந்தை: தனி ஒருவனுக்கு உணவில்லையெனில் ஜகத்தினை அழித்திடுவோம்னு பாரதி பாடினார்.ஆனால் எங்களுக்கோ உணவிருந்தும் சாப்பிட இயலாத  நிலை.கார்த்தால கார்ன் பிளேக்ஸ்ங்கற பேர்ல ஒண்ணுத்தை சாப்ட்டு அவசரமா ஸ்கூல் போக வேண்டியிருக்கு சீக்கரமாவே.லஞ்ச்சோ ஒரு டப்பால.சாயங்காலமும் அவசரமா பாலை  குடிச்சிட்டு ட்யுஷன் போக வேண்டியிருக்கு.அந்த புத்தகப் பையை தூக்கிண்டு இரண்டாவது மாடில இருக்கற க்ளாஸ்க்கு இப்டி சாப்ட்டு போனா எங்க நிலைமை என்ன?

இன்னொரு குழந்தை:  எல்லா பேரண்ட்சும் நம்ம குழந்தை என்ஜினீயர் ஆகணும் டாக்டர் ஆகணும்னுலாம் கனவு கண்டா அப்பறம் யார்தான்    டீச்சராகவும் ப்ரின்சிபாலாவும் ஆறது?அதுக்கு அடுத்த ஜெனரேஷனுக்கு யார்தான் சொல்லித்தரது?

குழந்தைகள் எந்த அளவு சிந்திக்கும் திறனுள்ளவர்களாக இருக்கிறார்கள் என்பதற்கு இவை உதாரணங்கள்.பெற்றவர்களும் சுற்றி உள்ளவர்களும் அதனை உணருதல் நலம்.அவசியமும் கூட.

Monday, January 10, 2011

அறியாத வாசனை

                                                    மூச்சிரைத்து வியர்வை ஆறாகப் பெருகியது வந்தனாவுக்கு.
எப்படியோ  ஒரு வழியாக தடுமாறி திணறி பஸ்ஸில்  ஏறி நுழைந்தும் ஆயிற்று.கூட்டம் நெருக்கித் தள்ளியது.பிடிமானத்தை தேடி முன்னேறினாள்.

இதற்காகவேனும் ஒரு வண்டி வாங்கினால் தேவலை.இப்படித்தான் ஆறுமாதமாக நினைக்கிறாள்.எங்கே முடிகிறது.பணம் எப்படித்தான் செலவாகிறதோ.சரியாக ஒன்பதரைக்கு ரெஜிஸ்தரில் கையெழுத்து போடாவிட்டால் அன்றைய தலை எழுத்து மாறி தொலைக்கும்.மனதில் அன்று செய்ய வேண்டிய வேலைகளை அசை போட்டவாறு ஒரு கம்பியை பிடித்து நின்று கொண்டாள்.

அதற்குள் அடுத்த ஸ்டாப்பிங்கில் இன்னும் கூட்டம் ஏறி நெருக்கியது.பக்கத்தில் ஒரு மீன் கூடைக்காரி வந்து நின்று வெத்தலையை குதப்பிக் கொண்டிருந்தாள்.வந்தனாவுக்கோ அந்த மீன் வாடையும் அவள் வெத்தலையைக் குதப்பும் விதமும் குமட்டிக் கொண்டு வந்தது.

மெதுவாக சற்று நகர்ந்து இரண்டடி தள்ளி நின்று கொண்டாள்.பிடிமானமற்றுப் போகவே பக்கத்து  சீட்டில் அமர்ந்திருந்த நாகரிமாகத் தெரிந்த ஒரு பெண்ணிடம், "இந்த பையைக் கொஞ்சம் வச்சுக்கறிங்களா?"என்றாள்

"ஏற்கனவே நான் நெறைய வச்சுக்கிட்டிருக்கேன்,நீங்க வேற"

"பத்து நிமிடம் கழித்து முதுகில் ஏதோ  ஊர்வது போல் தோன்ற சடக்கென்று திரும்பினாள்.பின்னால் நிற்பவனின் விஷமத்தனம் புரிய விதிர்விதிர்த்து போனாள்.பஸ்ஸின் திருப்பங்களுக்கும் சடன் ப்ரேக்குகளுக்கும் அவன் வேண்டுமென்றே மேலே விழ செய்வதறியாது திகைத்தாள்.

அமர்ந்திருந்த அந்த பெண் பக்கத்து சீட்டில் இருப்பவளிடம் "அவன் இடிக்கிறான்னு தெரிஞ்சும் நகராம அங்கேயே நிக்கறா பாரேன்" என்றாள்.

மேலே நெருப்பள்ளி கொட்டியது போல் இருந்தது வந்தனாவுக்கு.    

அடுத்த ப்ரேக்கிற்கு அவன் விழ, அந்த மீன் கூடைக்காரி பாய்ந்து வந்து அவன் சட்டையைப் பிடித்துக் கொண்டு பளாரென்று  அவன் கன்னத்தில்  மாற்றி மாற்றி அறைந்தாள்.

"ஏண்டா! பொம்பளைன்னா அவ்வளவு இளக்காரமா போச்சா? அவ அவ ஆயிரம் கஷ்டங்களை சகிச்சுக்கிட்டு அவதி அவதியா படிக்கறதுக்கும் வேலைக்கும் போயிக்கிட்டிருக்கறது உன் மாதிரி பொறுக்கிக்கு இளப்பமா இருக்கோ?பேமானி!"

அவள் விட்ட அறையில் பொறி கலங்கி நின்றவனை பஸ் நின்றதும் வெளியே சட்டையைப் பிடித்து தள்ளினாள். 

நாற்றத்திற்கும்  வாசனைக்கும் வித்தியாசம் புரிந்த தினுசில் வந்தனா அவளை கண்கலங்க ஏறிட்டாள்.

Saturday, January 1, 2011

புத்தாண்டு பரிசு

                                               " ஹாய் டாட்! இன்னும் ஃபைவ் டேஸ்ல  நியூ இயர்.வாட்ஸ் தி ப்ளான் பா?" கேட்டுக்கொண்டே வந்தான் மகேஷ்

"என்ன செய்யலாம்?புதுசா ரிலீஸ் ஆயிருக்கற படம் எதுக்காவது புக் பண்ணிடலாமா?அப்படியே எங்கயாவது ஹோட்டல் போயி சாப்ட்டு ஜாலியா போயிட்டு வரலாமா?"  என்றார் ரங்கநாதன்

"ம்மா வாட் அபௌட் யு மா?"

"எனக்கும் ஓகே" என்றாள் சாந்தா

"சரி அப்டின்னா நான் கிளம்பி போயி புக் பண்ணிட்டு வரேன்"

                                           சாயங்காலம் கையில் ஒரு நீளமான பார்சலுடன் சோர்வாக  உள்ளே நுழைந்த மகேஷ் சோபாவில் தொப்பென அமர்ந்தான்.

"என்னடா ஏன் இவ்வளவு டல்லார்க்க?உடம்பு ஏதாவது முடியலையா? இல்ல டிக்கெட் எதுவும் கிடைக்கலையா?என்னாச்சு?" என்றாள் சாந்தா

"கிடைக்கலன்னா  என்னடா விடு.அதுக்கா இப்பிடி இருக்க?ஆமா அதென்ன கைல ஏதோ பார்சல்?"

"நான் டிக்கெட் புக் பண்ண போகவே இல்லப்பா"

"பின்ன இவ்ளோ நேரம் எங்கதான் போன?"

"கிளம்பி தெருமுனைக்கு போனதும் அங்க ஒரு சின்ன ஆக்சிடென்ட் பா"

"ஐயோ என்னாச்சு?உனக்கொண்ணும்  ஆகலையே?"

"இல்லம்மா எனக்கொண்ணும் ஆகலை.ஆனால் முனைல பெட்டி கடை வச்சுருக்கானே
மன்னார், அவன்தான் ஒரு வண்டி இடிச்சு கீழ விழுந்துட்டான்.அவனுக்கு ஏற்கனவே ஒரு கால் சரி  இல்ல.அவன் கிட்ட ஊன்றுகோலும் இல்ல.சும்மா ஒரு கம்பை வைச்சுதான்
ஊனி நடந்துண்டிருந்தான்.நல்லவேளை  பெரிசா அடி படல,இருந்தாலும் அவன் கிட்ட அந்த ஊன்றுகோல் இருந்திருந்தா அவன் கொஞ்சம் கவனமா நடந்துருப்பான்னு எனக்கு தோணித்து.அதனால....."

"அதனால?"

"நான்.. நான் ..வந்து நான், நீங்க சினிமா புக் பண்ண குடுத்த பணம், எனக்கு ஏற்கனவே செலவுக்குன்னு குடுத்திருந்த பணம் எல்லாமா சேர்த்து அவனுக்கு ஒரு ஊன்றுகோல்
வாங்கிட்டேன்பா.நாம சினிமா பாத்து, ஹோட்டல்ல சாப்ட்டுனுலாம் நியூ இயரை என்ஜாய் பண்ணறத விட இதுதான் சரியான, மகிழ்ச்சியான, திருப்தியான கொண்டாட்டமா எனக்கு படுதுப்பா.உங்களை கேக்காம உங்க பணத்தை நான் நினைக்கறாப்ல செலவு பண்ணினதுக்காக என்னை மன்னிச்சுடுங்கப்பா"

"மகேஷ்!என்னடா பேசற?உன்னை நினைச்சா எனக்கு எவ்ளோ பெருமையாருக்கு  தெரியுமாடா?நீ சொல்றதுதாண்டா சரி.இதுதாண்டா உண்மையான கொண்டாட்டம்.நம்மால  ஒருத்தருக்கு உதவ முடியறதும், அப்படி உதவும்போது
அடுத்தவங்க முகத்துல மகிழ்ச்சி ஏற்படறத பாக்க முடியறதும்தான் உண்மையான
கொண்டாட்டம். நாம எல்லாருமா  போயி அவனுக்கு இதை குடுத்துட்டு வரலாம்" என்று மகனை அணைத்துக் கொண்டார் ரங்கநாதன்.