Sunday, September 25, 2011

உறவுகள் தொடர்கதை?!

ஞாயிறு காலையில் வீட்டை சுத்தம் செய்து செய்து கொண்டிருந்தாள் அனுஷா.

'மாம்...! மா.....ம்!!!!! வேர் ஆர் யூ....?'

' என்னடா ரிஷிதா?அம்மா இங்க இருக்கேன் தங்கம்'

'மா!க்ளீன் பண்ணும் போது இந்த ஃபோட்டோ கிடைச்சது.இதுல இருக்கற
இந்த ஓல்ட் பீபபிள்ஸ்லாம் யாரு மம்மி? இதுல க்ராண்ட்பா க்ராண்ட்மா இருக்காங்க இல்ல? மத்தவங்கலாம் யாரு மாம்?'

பெண் கொடுத்த ஃபோட்டோவை கையில் வாங்கிப் பார்த்த அனுஷா முகம் விகசிக்க அப்படியே சோஃபாவில் அம்ர்ந்தாள்.ஃபோட்டோவையே உற்றுப்
பார்த்துக் கொண்டிருந்த அம்மாவை ரிஷிதா வினோதமாகப் பாத்தாள்.

'வாட் மாம்? நான் கேட்டுகிட்டிருக்கேன்.நீங்க என்னடான்னா ஃபோட்டோவை வாங்கிக்கிட்டு அப்படியே உக்காந்துட்டீங்க?'

பத்து வயது ரிஷிதாவின் கேள்விக்கு நிமிர்ந்த அனுஷா ஃபோட்டோவை துடைத்து விட்டு மீண்டும் புன்னகையுடன் பார்த்தாள்.

'இதுல இருக்கறவங்க எல்லாம் நம்ம ரிலேடிவ்ஸ்டா.நடுல இருக்கறது உன்
தாத்தா பாட்டி.அவங்க இப்ப உயிரோட இல்லை.தாத்தாக்கு பக்கத்துல இருக்கறது என் சித்தப்பா.அந்தப் பக்கம் என் பெரியப்பா.மேலே நின்னுக்கிட்டிருக்காங்க இல்லை இவங்க என் அத்தை.அந்தப் பக்கம் மாமா.
அம்மாக்கு பக்கத்துல இருக்கறது சித்தியும் அவங்க பக்கத்துல என் பெரியம்மாவும் நிக்கறாங்க'

உற்சாகமாக கூறி விட்டு பெண்ணை  நிமிர்ந்து பார்த்தவள்  குழப்பமாக இருந்த அவள் முகம் பார்த்து,  'என்னடா?' என்றாள்

'ரிலேடிவ்ஸ்னா?'

சட்டென்று அடி வாங்கினாற் போலிருந்தது அனுஷாவிற்கு.

'ரிலேடிவ்ஸ்னா யாரு? அவங்களுக்கும் நமக்கும் என்ன? ரிலேஷன்ஷிப்னா
அம்மா அப்பா மட்டும்தான?மத்தபடி ஃப்ரென்ட்ஸ் தான இருப்பாங்க?அவங்க பேரண்ட்ஸ்  நமக்கு ஆன்ட்டி அங்கிள்ஸ் தான?'

அவள் குழப்பத்தின் காரணம் புரிந்து தெளிய வைக்க அனுஷா உறவுமுறைகளை விளக்க ஆரம்பித்தாள். 'பெரியப்பா, சித்தப்பா, அத்தை இவங்கள்லாம் அப்பா கூட பிறந்தவங்கடா.சித்தி, பெரியம்மா, மாமா இவங்கள்லாம் அம்மா கூட பிறந்தவங்க'

'கூடப் பிறந்தவங்கன்னா?'

'கூடப் பிறந்தவங்கன்னா, ஒரு பேரன்ட்ஸ்சுக்கே இரண்டு  மூணு சில்ட்ரன் இருப்பாங்க.ஸோ ஒருத்தருக்கு இன்னொருத்தர் கூடப் பிறந்தவங்க.இந்த ஃபோட்டோல இருக்கறவங்க எல்லாம் தாத்தாக்கும் பாட்டிக்கும் கூடப் பிறந்தவங்க.அதனால சித்தப்பா, பெரியப்பா, அத்தை, சித்தி, மாமான்னு உறவுமுறை சொல்லிக் கூப்பிடறோம்'

அப்ப எனக்கு ஏன் இல்லை?.எனக்கு சித்தப்பா மாமான்னு கூப்பிட யாரும் இல்லையா?கூடப் பிறந்தவங்கன்னா எனக்கு அப்பிடி யாரும் கூடப் பிறக்கலையே.உனக்கும் அப்பிடி யாரும் கூடப் பிறக்கலையா?

ரிஷிதாவின் கேள்விக்கு என்ன விடை சொல்வதென்று குழம்பிய அனுஷாவிற்கு தனக்கும் கூடப் பிறப்பு இல்லாத ஏக்கம் தலை தூக்கியது.


21 comments:

வை.கோபாலகிருஷ்ணன் said...

இரண்டு அல்லது மூன்று குழந்தைகள் போதுமே; அதிகம் பெறாதீர்கள்! அல்லல் படாதீர்கள்!! என்றொருகாலம் 1950 முதல் 1980 வரை, இருந்தது.

அதன்பிறகு நாம் இருவர் நமக்கு இருவர்; ஆசைக்கொரு பெண் ஆஸ்திக்கு ஒரு ஆண் குழந்தை போதுமே! என்று ஒரு பத்து ஆண்டுகள், 1990 வரை விளம்பரப்படுத்தப்பட்டு வந்தது.

அதன் பிறகு நாம் இருவர் நமக்கு ஒருவர் என்று ஒரு பத்து ஆண்டுகளுக்கு மேலாகத் தொடர்ந்து வருகிறது.

நாமே நமக்கு குழந்தைகள்! தனியாக ஒரு குழந்தை எதற்கு? என்றும் சிலர் சொல்லுகிறார்கள்.

பெண்களுக்கு இன்று சுலபமாகக் கிடைத்து வரும் கல்வியறிவு, வேலைவாய்ப்புக்கள், மருத்துவ விஞ்ஞான முன்னேற்றங்கள், மிகவும் மலிந்துவிட்ட தொழில்நுட்பங்கள், இதர பொழுதுபோக்கு அம்சங்கள் முதலியனவற்றின் பங்கும் இந்தக்குடும்பக் கட்டுப்பாட்டுக்கு பேருதவி செய்துள்ளன என்பதையும் குறிப்பிட்டுச் சொல்லித்தான் ஆகவேண்டும்.

சித்தப்பா, பெரியப்பா, அத்தை, சித்தி, மாமான்னு உறவுமுறைகள் எல்லாம் காணாமல் போய்விட்டன என்பதும் மறுக்க முடியாத உண்மை தான்.

நல்ல பதிவு. பாராட்டுக்கள். வாழ்த்துக்கள். vgk

குறையொன்றுமில்லை. said...

இந்தக்காலத்தில் உறவு முறை தெரியாமல் வளரும் குழந்தைகளுக்கு இந்தக்கதை ஒரு படிப்பினை. நல்லா எழ்தி இருக்கீங்க.

RVS said...

ஒரு வரியை ஓராயிரம் வரி சிந்தனையாய் எழுதிட்டீங்க... நல்லாயிருக்கு!

ராமலக்ஷ்மி said...

இந்தக் கேள்விகளைச் சந்தித்துக் கொண்டிருக்கிறது காலம். நல்ல கதை.

மனோ சாமிநாதன் said...

நன்றாக எழுதியிருக்கிறீர்கள் ராஜி! உறவு முறைகள் பற்றி மட்டுமல்ல, வாழ்வதற்கு முக்கிய பண்புகள், பழக்க வழக்கங்கள், அன்பு, பெரியவர்களிடத்தில் ம‌ரியாதை போன்ற நல்ல விஷயங்கள் கூட இந்தக் கால‌த்தில் குழந்தைகளுக்கு சொல்லித்தரப்படுவதில்லை என்பது தான் என் ஆதங்கமும்கூட!

சாகம்பரி said...

உறவுகள் அதன் அருமை பெருமைகள் தெரியாத காலமாகிவிட்டது. தனித்தே வளர்வதால் குழந்தைகளுக்கு சகிப்புத்தன்மையும் விட்டு கொடுக்கும் பழக்கமும் இல்லாமல் போய்விட்டது. கதை நன்றாக உள்ளது.

MANO நாஞ்சில் மனோ said...

மனிதனிடத்தில் அன்பு தனிஞ்சி போச்சு ராஜி, சுயநலம் இருக்கும் இடத்தில் அன்பும் இருக்காது, உறவுகளையும் விரும்பாது, உறவுகளும் விரும்பார்கள் தட்ஸ் ஆல்...!!!!

ரிஷபன் said...

எதிர் வீட்டு தாத்தா பாட்டிக்கு ஒரே பையன். தாத்தா இப்போது இல்லை. பாட்டி மட்டும் தனியே. பையனுக்கு இரண்டு குழந்தைகள். அவன் குடும்பம் பல வருடங்களாக ஸ்டேட்ஸில். எப்போது ஃபோன் பண்ணுவான் என்று எதிர்பார்த்திருப்பார். அடுத்த தலை முறைக்கு இருக்கும் கேள்விகளைப் போலவே முந்தைய தலைமுறைக்கும் கேள்விகள். ஒற்றை வாரிசு டேஞ்சர் என்றுதான் தோன்றுகிறது..
இப்போதைய ஆறுதல் நட்பு வட்டத்தில் ஏற்படும் உறவுகள்..
அருமையான யதார்த்தம் நிரம்பிய கதை.

வெங்கட் நாகராஜ் said...

முன்போல இப்போதெல்லாம் உறவுகளே இல்லாமல் போய் விட்டது கொடுமைதான். நிறைய வீடுகளில் ஒரு குழந்தைதான் என்பதால் அவர்களுக்கு இந்த உறவு முறைகளே தெரியாமல் போய்விடுகிறது.

யதார்த்தமான கதை.

middleclassmadhavi said...

நாம் பெரியப்பா, சித்தப்பா, பெரியம்மா, சித்தி பையன்களை அண்ணா, தம்பி, அக்கா, தங்கை என்று சொல்லியே வளர்ந்திருக்கிறோம். இன்றைய நவநாகரீக தலைமுறைக்கு எல்லாமே 'கஸின்ஸ்'!! என்ன சொல்ல?!!
நல்லாயிருக்கு பதிவு!

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

வீட்டின் ஒற்றை பிள்ளைகள் பலரின் ஏக்கத்தை அழகாய் பதிவு செய்து இருக்கிறீர்கள் அக்கா... நைஸ்...

சாந்தி மாரியப்பன் said...

இப்பவே நிறைய உறவுமுறைகள் மறைஞ்சுக்கிட்டு வருது.. இனிமே எப்படியோ :-(

பாலா said...

ரிலேடிவ்ஸ்ணா? இந்த ஒற்றை கேள்வியே கதையை சொல்லி விடுகிறது. அருமை.

ADHI VENKAT said...

யதார்த்தமான கதை. இன்று எல்லோர் வீடுகளிலும் நடப்பதைத் தான் கதையாக சொல்லியுள்ளீர்கள்.

'பரிவை' சே.குமார் said...

நல்ல படிப்பினைக் கதை.
உண்மைதான் உறவுகளை இழந்து உறவு என்றால் என்ன என்று கெட்கும் நாள் தூரத்தில் இல்லை.

ஆச்சி ஸ்ரீதர் said...

குறைந்தது ரெண்டு குழந்தைகளாவது இருத்தல் நலம்.ஒரு குழந்தையா வளர்த்தா போதும்னு இப்போ நினைக்கிறோம்.இது மாதிரி சமயங்களில் யாரை நொந்துகொள்வது?

//ரிலேடிவ்ஸ்னா?//

அட போங்கங்க
இன்னும் பல வருடங்களுக்கு பின்
”ஃபேமிலினா” என்னானு கேட்டாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை.

ஆச்சி ஸ்ரீதர் said...

குறைந்தது ரெண்டு குழந்தைகளாவது இருத்தல் நலம்.ஒரு குழந்தையா வளர்த்தா போதும்னு இப்போ நினைக்கிறோம்.இது மாதிரி சமயங்களில் யாரை நொந்துகொள்வது?

//ரிலேடிவ்ஸ்னா?//

அட போங்கங்க
இன்னும் பல வருடங்களுக்கு பின்
”ஃபேமிலினா” என்னானு கேட்டாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை.

எம்.ஞானசேகரன் said...

நல்ல கதை ராஜி அவர்களே! இன்றுதான் இந்த வலைத்தளத்தைப் பார்க்க நேர்ந்தது. இனி நானும் உங்கள் வாசகன்.

Yaathoramani.blogspot.com said...

இதை கதை எனச் சொல்லுவதை விட
ஒரு நீண்ட கவிதை எனச் சொல்லலாம்
படித்து முடித்ததும் மனதில்
விளக்கிச் சொல்ல முடியாத ஒரு பெரும்
சோகத்தை பாரத்தை ஏற்றி வைத்துப் போகிறது
தரமான படைப்பு
தொடர வாழ்த்துக்கள்
த.ம 5

வித்யா சுப்ரமணியம் (Vidya Subramaniam) said...

இன்றைய குழந்தைகள் அறியாத விஷயம் உறவுகள். எல்லோரும் தனித்தனி தீவுகளாக விலகிச் செல்லும் காலத்தில் இது போன்ற கேள்விகளும் ஆதங்கங்களும் ஏற்படத்தான் செய்யும். நல்ல சிறுகதை ராஜி.

Anonymous said...

நல்ல சிறுகதை...
தங்களுக்கு ஒரு குழந்தை போதும்னு சொல்றவுங்க...
தங்களோட குழந்தை பாசம்.., பற்று ...,
இதெல்லாம் இல்லாம வாழபோகிறார்கள் என்பது புரிவதில்லை...
பெருமைக்கு ஒரு குழந்தைதான் அப்படின்னு நெனைக்காம இரண்டு பேர வளர்ப்பதில் தவறில்லையே...

Post a Comment