Friday, September 30, 2011

வெள்ளைச் சிரிப்பினிலே.....




கசடுகளை கரைக்கும்,
கபடுகளை கலைக்கும்-உன் 
கள்ளமற்ற சிரிப்பாலே
உள்ளமெல்லாம் பொங்குதே
 
எந்தனையும் தொடரும் 
உந்தனது சிரிப்பு 
உலகத்தையும் தொடர்ந்து 
உவப்பினையும்  ஊட்டிடுமே  
 
கன்னல் இனிமையன்று 
கவிதையும் இனிமையன்று 
களிப்பூட்டும் நின்
குதூகலச் சிரிப்பின் முன்னாலே 
 
இரு கைகளையும்  நீட்டி 
இளந்தளிரை அணைப்பதற்கு 
என்னுடைய தாய்மையையும் 
எழுப்பி விடும் நின் சிரிப்பு!


டிஸ்கி: இந்த சிரிப்பின் கதாநாயகியை (கவிதை நாயகி?!) அறிய முகப்புத்தகம் செல்லவும்.அவ்விதம் அறிய இயலாதவர்களுக்கு ஒரு க்ளூ.இதில் பின்னூட்டமிடும் ஒரு நபருக்கு சொந்தமானவரே  இந்த குட்டி நாயகி.
இவர் யாரென பின்னூட்டத்தை வைத்து அறியவும்

Sunday, September 25, 2011

உறவுகள் தொடர்கதை?!

ஞாயிறு காலையில் வீட்டை சுத்தம் செய்து செய்து கொண்டிருந்தாள் அனுஷா.

'மாம்...! மா.....ம்!!!!! வேர் ஆர் யூ....?'

' என்னடா ரிஷிதா?அம்மா இங்க இருக்கேன் தங்கம்'

'மா!க்ளீன் பண்ணும் போது இந்த ஃபோட்டோ கிடைச்சது.இதுல இருக்கற
இந்த ஓல்ட் பீபபிள்ஸ்லாம் யாரு மம்மி? இதுல க்ராண்ட்பா க்ராண்ட்மா இருக்காங்க இல்ல? மத்தவங்கலாம் யாரு மாம்?'

பெண் கொடுத்த ஃபோட்டோவை கையில் வாங்கிப் பார்த்த அனுஷா முகம் விகசிக்க அப்படியே சோஃபாவில் அம்ர்ந்தாள்.ஃபோட்டோவையே உற்றுப்
பார்த்துக் கொண்டிருந்த அம்மாவை ரிஷிதா வினோதமாகப் பாத்தாள்.

'வாட் மாம்? நான் கேட்டுகிட்டிருக்கேன்.நீங்க என்னடான்னா ஃபோட்டோவை வாங்கிக்கிட்டு அப்படியே உக்காந்துட்டீங்க?'

பத்து வயது ரிஷிதாவின் கேள்விக்கு நிமிர்ந்த அனுஷா ஃபோட்டோவை துடைத்து விட்டு மீண்டும் புன்னகையுடன் பார்த்தாள்.

'இதுல இருக்கறவங்க எல்லாம் நம்ம ரிலேடிவ்ஸ்டா.நடுல இருக்கறது உன்
தாத்தா பாட்டி.அவங்க இப்ப உயிரோட இல்லை.தாத்தாக்கு பக்கத்துல இருக்கறது என் சித்தப்பா.அந்தப் பக்கம் என் பெரியப்பா.மேலே நின்னுக்கிட்டிருக்காங்க இல்லை இவங்க என் அத்தை.அந்தப் பக்கம் மாமா.
அம்மாக்கு பக்கத்துல இருக்கறது சித்தியும் அவங்க பக்கத்துல என் பெரியம்மாவும் நிக்கறாங்க'

உற்சாகமாக கூறி விட்டு பெண்ணை  நிமிர்ந்து பார்த்தவள்  குழப்பமாக இருந்த அவள் முகம் பார்த்து,  'என்னடா?' என்றாள்

'ரிலேடிவ்ஸ்னா?'

சட்டென்று அடி வாங்கினாற் போலிருந்தது அனுஷாவிற்கு.

'ரிலேடிவ்ஸ்னா யாரு? அவங்களுக்கும் நமக்கும் என்ன? ரிலேஷன்ஷிப்னா
அம்மா அப்பா மட்டும்தான?மத்தபடி ஃப்ரென்ட்ஸ் தான இருப்பாங்க?அவங்க பேரண்ட்ஸ்  நமக்கு ஆன்ட்டி அங்கிள்ஸ் தான?'

அவள் குழப்பத்தின் காரணம் புரிந்து தெளிய வைக்க அனுஷா உறவுமுறைகளை விளக்க ஆரம்பித்தாள். 'பெரியப்பா, சித்தப்பா, அத்தை இவங்கள்லாம் அப்பா கூட பிறந்தவங்கடா.சித்தி, பெரியம்மா, மாமா இவங்கள்லாம் அம்மா கூட பிறந்தவங்க'

'கூடப் பிறந்தவங்கன்னா?'

'கூடப் பிறந்தவங்கன்னா, ஒரு பேரன்ட்ஸ்சுக்கே இரண்டு  மூணு சில்ட்ரன் இருப்பாங்க.ஸோ ஒருத்தருக்கு இன்னொருத்தர் கூடப் பிறந்தவங்க.இந்த ஃபோட்டோல இருக்கறவங்க எல்லாம் தாத்தாக்கும் பாட்டிக்கும் கூடப் பிறந்தவங்க.அதனால சித்தப்பா, பெரியப்பா, அத்தை, சித்தி, மாமான்னு உறவுமுறை சொல்லிக் கூப்பிடறோம்'

அப்ப எனக்கு ஏன் இல்லை?.எனக்கு சித்தப்பா மாமான்னு கூப்பிட யாரும் இல்லையா?கூடப் பிறந்தவங்கன்னா எனக்கு அப்பிடி யாரும் கூடப் பிறக்கலையே.உனக்கும் அப்பிடி யாரும் கூடப் பிறக்கலையா?

ரிஷிதாவின் கேள்விக்கு என்ன விடை சொல்வதென்று குழம்பிய அனுஷாவிற்கு தனக்கும் கூடப் பிறப்பு இல்லாத ஏக்கம் தலை தூக்கியது.


Tuesday, September 20, 2011

தொலைந்த தொழிலாளி

சிற்றாடை அணிந்த
சிறு வயதில் சில
சின்ன சின்ன தூறல்கள்.


இரட்டை சடை பின்னி
இங்கும் அங்குமே ஆட

துள்ளிக் கொண்டு சென்றேன்
தொடர்ந்து அந்த மனிதரை .



மஞ்சள் என்றும் பச்சை என்றும்
வெள்ளை என்றும் சிவப்பு என்றும்

வண்ண வண்ண மயமாய்
வடிவங்கள் பல விதத்தில்



வளையலும், கைகடியாரமும்,
மோதிரமும், மாலையுமாய்
நொடியிலே வடிவமைத்து

சிறுவர்கள் சந்தோஷிக்க
ஜவ்வு மிட்டாய் தந்த
அந்த தொழிலாளி எங்கே?

என் முதல் மோதிரம்,
என் முதல் கைக்கடியாரம்
என்று தந்த தொழிலாளி
எந்த திருவிழாவில் தொலைந்தார்?


Sunday, September 18, 2011

கருவிழியே......!


Pencil Eye Tutorial




விழியின் நிறமென்னவோ
வெள்ளையும் கருப்பும்தான்.

பார்க்கும் பொருள்களின் நிறங்களோ
பலவித வண்ணங்களில்.

வெண்மையும் கருமையும்
வண்ணங்கள் வழங்கி காட்சியை
விரிப்பது போல்,

உண்மையும் நேர்மையும்
உயரத்தை வழங்கி
உலகத்தை உய்விப்பதெப்போ?

கருவிழியே.....! நீ அறிவாயோ?

Wednesday, September 14, 2011

நீயும் நானும்



Portrait of the old woman  photo


அன்று-

உப்பும் புளியும் குறைத்து
உவகையுடனே உண்டேன்
உள்ளுக்குள் நீ இருந்ததால்.

இன்று-

உப்புமற்று புளியுமற்று
உவகையுமற்று உண்கிறேன்
உனது அலட்சியத்தால்.

அன்று-

தளர் நடையின் போது
தடுக்கி நீ விழுந்தால்
தவிப்புடனே தாவி எடுத்தேன்.

இன்று-

தளர்ந்த நடையில் நானிருக்க
தடுமாற்றம் தானிருக்க
தரவில்லை உன் தோள் பிடிக்க.

அன்று-

பேசக் கற்றாய்
எழுதக் கற்றாய்
படிக்கக் கற்றாய்
பலவும் கற்றாய் நீ என்னிடத்தில்.

இன்று-

மௌனம் கற்றேன்
தனிமை கற்றேன்
துயரம் கற்றேன்
பலவும் கற்றேன் நானும் உன்னிடத்தில்

"நீ வாழக் கற்றாய்
நான் வாழ்க்கை கற்றேன்".

Saturday, September 10, 2011

ஜெய்ப்பூர், உதய்ப்பூர் - பகுதி 2


Silk Painting

இந்த துவாரகாநாத் ஓவியம் மார்பிள்களை இழைத்து அதில் பெயிண்ட் செய்யப் பட்டிருக்கிறது



வர்ணக்கலவைகளால் தீட்டப் பட்ட ராஜபுத்திரப் பெண்ணின் ஓவியம்


வர்ணக்கலவைகளால் தீட்டப் பட்ட ராஜபுத்திர நடன ஓவியம்.இந்த ஓவியத்தில் சிறு சிறு மணிகளின் வேலைப்பாடும் செய்யப் பட்டுள்ளது.


Click for large view

ஜெய்ப்பூர் மினியேச்சர் பெயின்ட் என்று சொல்லப்படும் ஓவியம்







இவை இரண்டும் சுவற்றில் வரையப் பட்ட ஓவியம்






இது ஜெய்ப்பூரின் ஷீஷ் மஹால்.இதை சுற்றிலும் கோட்டைகள் அரண்கள்
அமைந்துள்ளன.இதற்கு ஜீப்பில் மலையேறி சென்று மீண்டும் படிக்கட்டு போன்ற அமைப்பில் மலையேறி செல்ல வேண்டும்.மஹாலின் முன்புறம் முழுதும் வர்ணங்களாலும்,வண்ணக் கற்களாலும் அமைந்த கலை வேலைப்பாடுகள்தான்.



உதய்ப்பூர் சிட்டி பேலஸ்.சுவற்றில் சிறு சிறு ஓவிய வேலைப்பாடுகள்





ஜெய்ப்பூர் ஹவா மஹால்.இங்கு எங்கு நின்றாலும் காற்று பிய்த்துக் கொண்டு செல்லும்.(ஹவா-காற்று).இது ஃபவுன்டேஷன் எனப்படும் கடைகால் இன்றி
கட்டப்பட்டிருக்கிறது.இதன் உள்ளே தற்பொழுது சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப் படுவதில்லை.


இது மஹாராணா உதய்சிங்கின் அரசு தர்பார் சபை



தர்பார் சபையின் எதிரில் இருக்கும் மார்பிள்களால் ஆன மயில்கள்

ஜெய்ப்பூரின் அருகில் ஏக்லிங்க் ஜி என்ற ஒரு சிவலிங்கம் அமைந்துள்ளது.
சிவன் ஒருவனே தலைவன்.அவன் ஒருவனே வழிபாட்டுக்கு உரியவன் என்ற
பொருளில் ஏக்லிங்க் ஜி என்ற பெயர் அமையப் பெற்றது.
ஜெய்ப்பூரை ஆண்டவர்கள் தங்களை அரசர்கள் என்று கூறிக் கொள்வதில்லை.
மஹாராணா என்றே பெயர் கொண்டவர்கள்.(மஹாராணா- சீஃப் மினிஸ்டர்)
ஏனென்றால் இவர்கள் சிவனையே அரசனாக கருதி வந்தனர்.

ஏக்லிங்க் ஜி யை புகைப்படம் எடுக்க அனுமதி இல்லாததால் பதிவில் சேர்க்கவில்லை.



ஜெய்ப்பூர் மேவாரை ஆண்ட புகழ் பெற்ற மஹாராணா பிரதாப் சிங் சிலை

ஜெய்ப்பூர் உதய்ப்பூரை ரசித்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன்.நன்றி


அழகில்லாத ஓவியமா?

சமீபத்தில் ஜெய்ப்பூர் உதய்ப்பூர் சென்றிருந்த போது அங்குள்ள பேலஸில்
நான் கண்டு ரசித்த சில ஓவியங்களை இங்கே பதிவாக்கி இருக்கிறேன்.
பார்க்கும்போதே பிரமிக்கத் தக்க வகையில் இருக்கும் இவை சுவற்றில்
வரையப்பட்டுள்ளன.கண்ணையும் கருத்தையும் கவரும் வண்ணம் உள்ள 
இந்த ஓவியங்களை நீங்களும் ரசித்து உங்களது கருத்தைக் கூறலாம்.

இவை தவிர மற்ற புகைப்படங்கள் அடுத்த பதிவில்.









Thursday, September 8, 2011

புவி தீர்ப்பு விசை

சிலுசிலுவென்ற காற்று முகத்தில் மோத அதை அனுபவித்தபடி வேப்பமரத்தை 
நிமிர்ந்து பார்த்தான் சத்யா.இரண்டு அணில்கள் ஒன்றை ஒன்று துரத்தி ஒடி விளையாடும் காட்சியை சற்று நேரம் கவலை மறந்து ரசித்தான்.

ஒருவேளை அவைகளும் தன் பங்கு பழத்திற்காக மோதிக் கொள்கின்றனவா தன்னைப் போல?
திரும்பி வீட்டைப் பார்த்தான்.அவனுக்கு ஐந்து வயதிருக்கும்போது அப்பா 
பார்த்து பார்த்து கட்டியது.மழைக்கும் வெயிலுக்கும் இத்தனை வருடங்களில் மெருகு குலையாமல் அதனை பராமரிப்பதிலும் அவருக்கு தனி ஆர்வமிருந்தது.
சுற்றிலும் தோட்டம் அமைக்க இடம் செய்து,வாசலில் ஊஞ்சலுக்கேன்று தனி
வராண்டா அமைத்து எதிரில் சிறு திண்ணையுடன் கம்பி வைத்த ஜன்னல்களுமாய் எல்லாமே அவரின் ரசனைதான்.அந்த ஊஞ்சலில் அவர் லேசாக ஆடிக் கொண்டு வெற்றிலை பாக்கு போடும் காட்சி சத்யாவின் மனதில் தோன்றியது.

"கல்யாணமே பண்ணலாம் போல இருக்கே" என்று ஹாலைப் பார்த்து
மூக்கில் விரல் வைக்காத உறவுகளே இல்லை.இரண்டு படுக்கையறை,பூஜை அறை மற்றும் சமையலறையுமாய் கீழேயும், பெரிய விடுமுறை நாட்களில் அத்தை குழந்தைகள் மாமா குழந்தைகள் என கொட்டமடிக்கும் அளவு மாடியில் அறைகளுமாய் பெரிய வீடு.

வீட்டின் வெளித்தோற்றத்தைப் பார்த்து பெருமூச்செறிந்தான்.
ஆயிற்று நான்கு மாதங்கள்.ஒரு சாயங்கால நடைப்பயிற்சிக்குப் பின் ஊஞ்சலில் வந்து அமர்ந்தவர்தான்.கணப்பொழுதில் எல்லாம் முடிந்தது.

ஆனால் இருக்கும் வரை அவரின் வாழ்க்கையின் நிழல் பக்கம் தெரியாமல் போனது.அம்மா போகும்போது அவனுக்கு வயது பதிமூன்று.மூன்று நாள் விஷக்காய்ச்சலில் படுத்தவள் சிகிச்சை பலனின்றி போய் சேர்ந்தாள்.அன்றிலிருந்து அப்பாவும் அவனும் தனியாகிப் போனார்கள்.வீட்டையும் சத்யாவையும் கவனிக்க அவனது ஒன்று விட்ட அத்தை ஒருத்தி இருந்தாள்.அப்பாவுக்கென்று தான் மட்டும்தான் என்று நினைத்திருந்தான்.அப்படி அல்ல என்பது போல் அப்பாவின் சாவிற்கு வந்த அவள்....
அவளும் அவளுடைய பதினைந்து வயது மகனும்.அவளுக்கு மட்டுமா மகன்?!

காரியங்கள் முடிந்ததும் அவள் சத்யாவை சந்திக்க மீண்டும் வந்திருந்தாள்.

எளிமையான தோற்றம்.முதல் நாளன்று பார்த்த குங்குமம் இப்பொழுது வகிட்டில் இல்லை.களையான முகத்தில் சோகம் அப்பிக் கிடந்தது.கண்கள் ஈரத்தில் பளபளத்தன.

'யார் நீங்க? என்ன விஷயம்?' என்றான் சத்யா

'நான்....நான்.....' தடுமாறினாள்

'சொல்லுங்க' சலித்த குரலில் கேட்டான்

'நான் உன் அப்பாவின் இரண்டாவது மனைவி.இவன் உன் தம்பி பாலு'

'இது என்ன உளறல்?' சீறினான் 

'உளறலைப்பா.உண்மைதான்.கொஞ்ச நாள் முன்னாடி அவரே எல்லாத்தையும் உன் கிட்ட சொல்லிடப் போறதா சொல்லிண்டிருந்தார்.ஆனா அதுக்குள்ளே...'

'இல்லை.நான் நம்ப மாட்டேன்.என்ன பிதற்றல் இது? வெளிய போங்க, போங்க
இங்கிருந்து" கத்தினான்.

'எங்களுக்கு வேற போக்கிடம் இல்லைப்பா.அவர் இருந்த வரை எல்லாத்தையும் அவரே பாத்திண்டிருந்தார்.இப்ப நாங்க நிர்க்கதியாகிட்டோம்.
அன்றாட சாப்பாட்டுக்கு கஷ்டமில்லைப்பா.இவன் மேலே படிக்க உதவி செஞ்சா மட்டும் போதும்'

'யாரோ படிக்க நான் எதுக்கு செலவு பண்ணனும்?நீங்களா வெளிய போயிட்டா நல்லது'

மறுநாள் டிபன் பரிமாறும்போது அத்தை ஆரம்பித்தாள்
'அப்பா காரியத்துலே எல்லாரும் கிசுகிசுன்னு பேசிண்டிருந்தா.உனக்கு 
பதினஞ்சு வயசு இருக்கச்சே அவளுக்கு தாலியே கட்டி தாரமாக்கிண்டுட்டாராம்.நமக்கு தெரியாம வச்சுருந்துக்கானே!'

'போனவரைப் பத்தி நாம எதுவும் தப்பா பேசிடக் கூடாது அத்தை.இருந்தாலும் இது உண்மைனா நமக்கு தெரியாம அப்பாவால எப்பிடி அத்தை......'  குரல் கம்மியது.

'உன் மதிப்புல கீழிறங்கிடக் கூடாதேன்னு நினைச்சானோ என்னவோ.கேட்டதுலேருந்து எனக்கு மனசே சரி இல்ல போ!'

அடுத்த வாரம் ஆபீசிலிருந்து திரும்பியதும் அத்தை ஒரு கவரைக் கொடுத்தாள்.'இன்னிக்கு போஸ்ட்ல வந்தது'

பிரித்து படித்தவன் சிலையானான்.'என்னடா! ஏன் பேயறைஞ்சாப்பல  நிக்கற என்ன விஷயம்?'

'வீட்டுல பங்கு கேட்டு அந்த பொம்பளை கேஸ் போட்டிருக்கா.வக்கீல் நோட்டிஸ் அனுப்பிருக்கா'

'இதென்னடா  அக்கிரமமா இருக்கு?'

'அதெல்லாம் அவளால ஒன்னும் பண்ண முடியாது அத்தை.அப்பாவுக்கு ஒரே வாரிசு நான்தான்.அவங்க கேஸ் செல்லாது.நான் நம்ம வக்கீலைப் பாத்துட்டு வரேன்'

இரண்டு வாரத்திற்கெல்லாம் அத்தையின் பிள்ளைக்கு உடல்நலக் கோளாறு என்று தகவல் வர அத்தை கிராமத்திற்கு கிளம்பினாள்.அத்தையும் இல்லாது அப்பாவின் நினைவில் தனியே அந்த வீட்டில் இருக்க மனமற்று கம்பெனி கெஸ்ட் ஹவுசுக்கே சென்று விட்டான் சத்யா.
அதன் பின் இன்றுதான் வருகிறான் வீட்டைப் பார்க்கவென்று.அம்மாவின் மடியில் தலை வைத்து உறங்கி, நண்பர்களோடு கொட்டமடித்து என்று
வீடு பல கதை சொல்லிற்று.அப்பாவின் மறைவிற்குப் பின் எல்லாம் வெறிச்சென்றாகி விட்டது.இதில் அந்த அம்மாள் வேறு சொந்தம் கொண்டாடி கேஸ் போட்டு அது வேறு இழுத்துக் கொண்டிருக்கிறது.
'நம்ம பக்கம் கேஸ் ஸ்ட்ராங்கா இருக்கு,நீங்க கவலைப் படாதீங்க' என்கிறார் வக்கீல்.நாளை மறுநாள் தீர்ப்பு இருக்கலாம்.

யோசனையுடன்  வீட்டை ஒரு பார்வை பார்த்து விட்டு கிளம்பினான்  சத்யா.
அணில்கள் மருட்சியாய் இவனை ஒரு பார்வை பார்த்துவிட்டு பழத்திற்காக துரத்திக் கொண்டன.

மறுநாள் அலுவலகம் கிளம்பும்பொழுது 'செல்' லில் வந்த செய்திக்கு அதிர்ந்து போனான்.எவ்வளவு நேரம் நின்றானோ தெரியாது,சுய உணர்வு வந்ததும் அலறி அடித்து வீட்டைப் பார்க்கப் போனான் 

'வாங்க தம்பி! நிலைமையைப் பாருங்க' என்றார் அப்பாவின் நண்பர்.

'கண்மூடி திறக்கறதுக்குள்ளே இப்டி ஆயிடிச்சி.ராத்திரி ரெண்டு மணிக்கு வீட்டுக்குள்ளே லேசா அதிர்வு ஏற்படறாப்ல இருந்துச்சு.நாங்கல்லாம் பயந்து வெளில வந்துட்டோம்.பத்து நிமிஷத்துக்கெல்லாம் ஒரு பக்கமா இருக்கற  வீடுகள் எல்லாம் இடிஞ்சு தரை மட்டமாயிடுச்சு.அதிலயும் ஒரு சில வீடுகள்ல உயிர்ச்சேதம் இல்லை.ஆனா அந்தப் பக்கம்லாம் பாருப்பா என்ன நிலைமைன்னு .கண் கொண்டு பாக்க முடில அந்த கொடுமையை' என்றார்
கண்களில் நீருடன்.

முற்றிலும் இடிந்து தரை மட்டமாகி இருந்த தன் வீடு இருந்த இடத்தைப் 
பார்த்தான்.பிரமை பிடித்தது போல் நின்றான்.'ஓ' வன்ற ஓலம் கேட்டு திரும்பினான்.அப்பொழுதுதான் அந்த இடத்தின் கொடூரத்தை உணர்ந்தான்.சுற்றிலும் கல்லும் கட்டையும் இடிபாடுகளும் அவற்றுக்கு நடுவே 
ரத்தக் களறியாய்  பல உடல்கள்.முகத்தைப் பொத்திக் கொண்டான்

.'இவ்வளவுதானா?இவ்வளவுதானா வாழ்க்கை?கண நேரத்தில் தவிடு பொடியாகி உருக்குலைந்த உயிரினங்கள்!அம்மா அம்மம்மா! சிசுவை இழந்த தாயின் கதறல்.மனைவியை இழந்து உடல் உறுப்பு இழந்த கணவன்.இருவரையும் சேர்த்து இழந்து நாதியற்ற குழந்தைகள்!கடவுளே!ஏன்?
ஏன் இப்படி?உயிர்களை இழந்த உறவுகளுக்கு முன் இழந்த வீட்டிற்காகவா தான்
அழுவது?என்ன மனிதன் நான்?'

கீச் கீச் என்ற சத்தம் கேட்டு நிமிர்ந்தான்.பழத்திற்கு அடித்துக் கொண்ட அணில்கள் இரண்டும் பலத்த காயங்களுடன் ஒன்றை ஒன்று அரவணைத்து ஒரு பொந்துக்குள் சுருண்டிருந்தது.முகத்தை துடைத்துக் கொண்டு அவற்றை அரவணைப்புடன் எடுத்துக் கொண்டவன் ஒரு புது முடிவுக்கு வந்தவனாய் தந்தை தனக்கு விட்டு  சென்ற சொந்தங்களைப் பார்க்க கிளம்பினான்.

கோர்ட்டின் தீர்ப்பிற்கு முன், புவியின் விசை கொடுத்த தீர்ப்பில் புது விசையுடன் கிளம்பினான் சத்யா.

Tuesday, September 6, 2011

இரண்டு காலும் நாலு காலும்

சுய தம்பட்டம் அடிச்சு ரொம்ப நாள்  ஆயிட்டாப்புல ஒரு பீலிங்.அதான் சரி 
நம்ம புராணத்துல ஏதாவது ஒண்ணை எடுத்து விடுவோம்னு இந்த பதிவு.

சின்ன வயசுல எல்லாம் ரொம்ப நாள் வரை எனக்கு தன்னம்பிக்கை அப்டிங்கற
ஒரு சமாசாரமே வாழ்க்கைல கிடையாது (இப்ப மட்டும் ரொம்ப இருந்து  கிழிக்கறாப்லாதான் அப்டின்னு எதுக்கு முணுமுணுக்கறீங்க.நல்லா சத்தமாவே 
சொல்லலாம் :)  )

ப்ளஸ் டூ ல நல்ல மார்க் எடுத்து காலேஜ்ல ப்ரீ சீட் கிடைச்சதால (இந்த
மூஞ்சிக்கெல்லாம் காலேஜ்ல ப்ரீ சீட்டான்னு கேக்கறீங்களா) அப்பா எனக்கு
ஆசையா ஒரு சைக்கிள் வாங்கித் தந்தார்.முதல்ல எனக்கு சைக்கிள் ஓட்ட 
பயமாத்தான் இருந்தது.அப்பறம் அப்படி இப்படின்னு எப்படியோ கத்துக்கிட்டு 
சைக்கிள்ல போக ஆரம்பிச்சேன்.அப்படி போகும்போது ஒரு துரதிர்ஷ்டமான 
வேளையிலே ஒரு வயசான அம்மா சடக்குன்னு குறுக்க வர அவங்க மேலே 
இடிச்சுடப் போறதேன்னு நான் சைக்கிளைத் திருப்ப இதை எதிர்பார்க்காத பக்கத்துல வந்த ஒரு பஜாஜ் சடக் வண்டி,  சடக்குன்னு என் மேல இடிக்க அவ்வளவுதான் .........

வேகமா இடிச்சுட்டதால நான் தள்ளிப் போயி விழுந்துட்டேன்.இடது கை 
பிராக்சர் வித் டிஸ்லோகேஷன் ஆயிடுத்து.வண்டி என்னை இடிச்சதை விட பலமா அப்பா இடிஞ்சு போயிட்டார்.

நேரே என்னை ஹாஸ்பிடல்ல அட்மிட் பண்ணி பார்மாலிட்டிஸ்லாம் முடிஞ்சதும் என்னை டெஸ்ட் பண்ணின டாக்டர் இனி எனக்கு கை 
வர வாய்ப்பே இல்லைன்னு தீர்மானமா சொல்லிட்டார்.சிலோன் ரேடியோல 
சொல்ற லிஸ்ட் மாதிரி அப்பா அம்மா அண்ணன் அண்ணி அக்கா அப்படின்னு 
அத்தனை பெரும் (அப்பாடி!இத்தனை அகாரம் போட்டு சொன்னது மூச்சு வாங்குது!!) ஆடிப் போயிட்டாங்க.

எனக்கோ ஒரு பக்கம் வலி உயிர் போகுது.ஒரு வழியா அலோபதி வேண்டாம்னு முடிவு பண்ணி எங்க ஊர் பக்கத்துல இதுக்கெல்லாம் வைத்தியம் பாக்கற எங்களோட ஆஸ்தான வைத்தியரை பார்க்க முடிவு
செஞ்சு ஊருக்குப் போனோம்.அவர் என்னை உக்கார வச்சு கையை இப்பிடி ஒரு
திருப்பு, அப்படி ஒரு திருப்பு. (அப்ப நான் போட்ட சத்தத்துல என்னைப் பிடிச்சுண்டிருந்த இரண்டு அத்திம்பேரும் எந்திரிச்சு ஓடாத குறைதான்)
உடனே கை கொஞ்சம் ஷேப்பா இருக்கற ஒரு பொசிஷனுக்கு வந்தது.அப்பறம் கட்டு போட்டு சரியாக இரண்டு மாசம் ஆச்சு.

இந்த காரணத்தினால எனக்கு ரொம்ப நாள் வரை தெனாலி கமலஹாசன் 
மாதிரி எல்லாத்துக்கும் பயம்தான்.இந்த மாதிரி பயத்துக்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கறாப்புல எனக்கு ஒரு நட்பு அமைஞ்சது.

அடி பட்டத்துக்கு அப்பறம் வாசல்ல நின்ன சைக்கிளை நான் தொடவே இல்லை.அப்படிப்பட்ட என்னை வண்டி ஓட்ட கத்துக்கோன்னு என் சிநேகிதி 
கையைப் பிடிச்சு கூட்டிண்டு போயிட்டா.முதல்ல எது ஆக்சிலேட்டர் எது
ப்ரேக்னுலாம் கிளாஸ் எடுத்துட்டு எப்பிடி ஓட்டனும்னுலாம் சொல்லி குடுத்துட்டு,  ம்..எங்க ஒட்டு பாக்கலாம்னு சொல்லிட்டா.

நான் திருதிருன்னு முழிச்சுண்டே ஒரே நடுக்கத்தோட வண்டில உக்காந்து 
ஓட்ட ட்ரை பண்ணினேன்.முதல்ல காலெடுத்து வண்டில வச்சுக்க வரவே இல்லை.வளைஞ்சு நெளிஞ்சு காலால தரையைத் தடவிண்டே ஓட்டினதா 
பேர் பண்ணினேன்.உடனே அவ 'ம்...இன்னிக்கு இது போதும்னு சொன்னா.அப்பாடின்னு இருந்தது

அடுத்த நாளும் வண்டி ஓட்ட கூட்டிண்டு போயிட்டா.இரண்டாவது நாள் 
காலை வண்டில வச்சுக்க வந்துடுத்து.மெதுவா வளைஞ்சு நெளிஞ்சு ஒரு பத்தடி ஓட்டினேன்.பக்கத்துல வந்த பஸ்ஸோட ட்ரைவர் தன் பொன்னான மொழிகளால் வசவு பாடி, 'வந்துட்சு பாரு! வண்டி எட்துக்கினு' என்று அருமையான காம்ப்ளிமென்ட் கொடுத்தார்.

மூன்றாவது நாள் சற்று தைரியம் வந்துவிட பின்னாடி தோழி நடந்து வரும் 
யோசனையற்று கொஞ்சம் வேகமாக ஒட்டிக் கொண்டு சென்று விட்டேன்.
அவள் ரொம்ப தூரம் என்னை காணாமல் பயந்து வழியில் போவோர் வருவோரை எல்லாம் கேட்டுக் கொண்டு வந்திருக்கிறாள்.நானோ நன்றாக ஓட்ட வந்து விட்ட உற்சாகத்தில் வேகமாக ஒட்டிக் கொண்டு போனேன்.

வழியில் ட்ராபிக் கான்ஸ்டபிள் செக்கிங் செய்து கொண்டிருப்பதை பார்த்ததும்தான் நான் ரொம்ப தூரம் வந்து விட்டதை உணர்ந்தேன்.அவ்வளவுதான்.அப்படியே வண்டியை ஓரமாக நிறுத்தி அதன் மேல் சாய்ந்து நின்று கொண்டேன்.நம்ம கிட்டதான் லைசென்ஸ் இல்லையே 
அப்ப.என் சிநேகிதி வந்த பின் நன்றாய் நாலு டோஸ் விட்டாள்.

இப்படியாக டூ வீலர் கற்றுக் கொண்டு அப்பறம் நாலு சக்கர வாகனத்தை மட்டும் சும்மா விடுவானேன்னு அதையும் கத்துக்கிட்டு இன்னிக்கு செருப்பு போடறதுக்கு முன்னாடியே வண்டி சாவியை கை தேடற அளவு ஆகிப் போச்சு.
இப்ப வண்டி இல்லாம முடியாதுங்கற அளவு அது அவசியமான ஒண்ணா ஆயாச்சு.எனக்குள்ள இருந்த பயந்தாங்குளி போயும் ரொம்ப நாள் ஆயிடுத்து.
வாழ்க ஆக்சிலேட்டர்!வளர்க வேகம் (அவ்வப்போது ப்ரேக்குடன்)

Saturday, September 3, 2011

பிச்சை பாத்திரம் (பகுதி 2)

பகுதி 1 இங்கே பார்க்கவும்   


                   "அங்கம் ஹரே புளக பூஷணம் ஆச்ரயந்தீ
                    ப்ருங்காங்கனேவ முகுளாபரணம் தமாலம்"

ஊதுபத்தி மணமும் மலர்களின் வாசனையும் அறையை நிறைக்க, கன கம்பீரமான குரலில் உபன்யாசகர் ஆதிசங்கரர் அருளிய 'கனகதாரா ஸ்தோத்திரத்தின்' பின்னணியை செவி குளிரும்படி வழங்கிக் கொண்டிருந்தார்.

"மாலவன் மீது வைத்த மாயப் பொன்விழி இரண்டை,மாது நீ என்னிடத்தில் 
வைத்தால் நானும் உந்தன் கருணையால் செல்வம் பெற்று கண்ணிறை
வாழ்வு கொள்வேன் கமலத்தாயே"

அழகான மொழிபெயர்ப்புடனும் தகுந்த விளக்கங்களுடனும் அனைவரின்
கவனமும் ஒன்றும்படி கணீரென்று சொல்லிக் கொண்டிருந்தார்.

தன்னிடம் இருந்த ஒரு நெல்லிக்கனியையும் பிக்ஷை என அழைத்த சங்கரருக்கு அளித்த அம்மாதுவின் வறுமை தீர்க்க சங்கரர் அருளிய கனகதார ஸ்தோத்திரம் அறையையும் அங்கிருந்தோர் மனதையும் நிறைத்துக் கொண்டிருந்தது.

உபன்யாசம் முடிந்ததும் மூர்த்தியிடமும் ஜானுவிடமும் விடை பெற வந்த 
சுந்தரம் ,  'ரொம்ப பேஷா இருந்ததுடா. அப்படியே மனசு நிறைஞ்சு இருக்கு.
சரி நாங்க கிளம்பறோம்.பதினஞ்சாம் தேதி நாங்க ஆசிரமத்துக்கு போறச்சே 
நீங்களும் வந்துடுங்கோ சரியா?' என்று கூறி கிளம்பி சென்றார் 

திருமண நாளான பதினைந்தாம் தேதி காலை, முகம் நிறைய பெருமையுடனும் சுறுசுறுப்புடனும் "வைதேகி! அர்ச்சனைக்கு எல்லாம் எடுத்துண்டயா?" என்றார் 

"எடுத்துண்டாச்சு.முதல்ல கோவிலுக்கு போய்ட்டு அப்பிடியே ஆசிரமத்துக்கு போய்டலாம்,சரிதானே?"

"ஆமாம் ஆமாம்! சாப்பாடு துணிகள் எல்லாம் நேரே அங்கேயே வந்துரும்.வா வா கிளம்பு"

கோவிலில் அர்ச்சனை முடிந்து பிரசாதத்துடன் வெளி வருகையில் , "சாமி!
சாமி!தர்மம் பண்ணுங்க துரை!" என்ற குரலுக்கு திரும்பினார்.

பக்கத்தில் ஒரு நடுத்தர வயதுக்காரரிடம் கையேந்திக் கொண்டிருந்த சிறுமியை உற்று நோக்கினார்.சிக்னலில் அன்று பார்த்த அதே சிறுமி,அதே கந்தல் உடை ,கலைந்த தலை ,கண்களில் மட்டும் ஒரு புது ஒளி.ஒரு கையில் அலுமினியத் தட்டு மற்றொரு கையில்......

'ச்சீ போ! இதே தொந்தரவா போச்சு' அந்த மனிதர் அலுத்துக் கொண்டே நகர முயல,சிறுமியோ 'ஐயா!தயவு செஞ்சு எதாச்சும் போடுங்கையா' என்று விடாது கெஞ்சினாள்.
'அடச்சே! சொன்னா புரியாது?.இது என்ன கைல பச்ச குழந்தைய வச்சுருக்க?இத
காமிச்சு பிச்சை எடுக்க அனுப்பிட்டாங்களாக்கும் வழிய விடும்மா' என்று எரிந்து விழுந்துவிட்டு அந்த மனிதர் செல்ல சிறுமியோ முகம் வாட நின்றாள்.

உடனே சுந்தரத்தை நெருங்கி, சார்!எதுனாச்சும் தர்மம் பண்ணுங்க சாரு! என்று
தட்டை ஏந்தினாள்
"ஏம்மா!போன வாரம் சிக்னல்ல பாத்தப்ப நீ மட்டும் இருந்த.இப்ப இது என்ன பிஞ்சுக் குழந்தை வச்சுருக்க?இதக் குடுத்து பிச்சைக்கு அனுப்பிட்டாங்களா?"

"இல்லீங்கய்யா.என்னை யாரும் அனுப்பலீங்க.எனக்கு யாருமில்லிங்க"

"பின்ன இது யார் குழந்தை?"

'தெரியாதுங்கய்யா'

' என்னம்மா சொல்ற?'

'நாலு நாள் முன்னாடி இங்க பக்கத்துல இருக்கற குப்பைத் தொட்டில,சாப்பிட்ட எச்ச இலையை போட போனப்ப அதுக்குள்ளே இந்த பாப்பா இருந்துச்சுங்கய்யா.
பக்கத்துல நாயெல்லாம் கத்திக்கிட்டு இருந்துச்சு.பாவமா இருந்துச்சு.அதான் 
நான் தூக்கிட்டு வந்துட்டேனுங்க.தட்டில விழற காசுலதான் பாலு வாங்கி பாப்பாக்கு குடுக்கறேன் சாமி!தர்மம் பண்ணுங்க சாமி!' என்று தட்டை ஏந்தினாள். 

இருந்து தானம் கொடுத்த இடங்களில் அருளாத ஒன்றை தன்னிடமிருந்த ஒரு நெல்லிக்கனியையும் தானமளித்த இடத்தில் அருளிய சங்கரர் மனக்கண்ணில் சிரித்தார்.ஒரே ஒரு நாள் கூத்தாய் தானமளிக்க நினைத்ததை பெருமையாய் 
நினைத்த அவர் மனம் சிறுத்தது.

காருண்யத்தின் பிம்பமாய் நின்ற அந்த சிறுமி உயர்ந்து தெரிந்தாள்.மனம்
நெகிழ கண்கள் ஈரமாக அவள் கையிலிருந்த தட்டை நோக்கினார் சுந்தரம்.

அவர் கண்களுக்கு அந்த பிச்சை பாத்திரம் அட்சய பாத்திரமாய் தெரிந்தது.

Friday, September 2, 2011

பிச்சை பாத்திரம்

'வைதேகி! கிளம்பலாமா?' கேட்டுக்கொண்டே வந்தார் சுந்தரம்.

"இதோ வந்துட்டேன்,நான் கதவெல்லாம் பூட்டிண்டு வரேன்.நீங்க வண்டியை எடுங்கோ" என்று புடவைக் கொசுவத்தை நீவி சரி செய்து கொண்டே மாடிப்படியின் அழகிய வளைவுகளில் இறங்கி வந்தாள் வைதேகி

"மூணு மணிக்கெல்லாம் கிளம்பனும்னு ப்ளான் பண்ணியும் மணி 
நாலாயிடுத்து.இனி ட்ராபிக் தொல்லை ஆயிடும்" என்று அலுத்துக் கொண்டே
வண்டிஎடுக்க சென்றார்.

அடுத்த வாரம் வரும் இருபத்தைந்தாவது திருமண நாளுக்கு ஆசிரமக்
குழந்தைகளுக்கு உணவும் உடைகளும் தந்து கொண்டாட எண்ணி அதற்கு ஆர்டர் கொடுக்க கிளம்பிக் கொண்டிருந்தார்கள்.

எழிலாகத் தோற்றமளித்த பங்களாவின் கலைநயமிக்க போர்ட்டிகோவில் இருந்து கார் மெதுவாய்க் கிளம்பியது.

'அம்பது சாப்பாடும் 30 செட் ட்ரெஸ்ஸும் ஆர்டர் பண்ணினா சரியார்க்குமா?'

'அதுக்கென்ன ஆர்டர் செஞ்சுட்டா போச்சு.என்ன பெரிய பிரமாதம்?' என்றார் சுந்தரம் 

தார் ரோட்டில் வழுக்கிச் சென்ற பியஸ்டா சிக்னலின் சிவப்பு விளக்குக்கு சிறிய குலுக்கலுடன் நின்றது.சுற்றிலும் கார், பைக் என்று சகல வண்டிகளும் நிற்க
குறுக்கே சென்ற ரோட்டில் விதவிதமான வாகனங்கள் அணிவகுத்து சென்று 
கொண்டிருந்தது 

'இதுக்குத்தான் சீக்கிரம் கிளம்பி இருக்கணும்.இனி இந்த தொல்லைதான்' என்ற படியே ஏ சி யை நிறுத்தி கண்ணாடியை இறக்கினார்.

'அம்மா!அய்யா! எதாச்சும் தர்மம் பண்ணுங்கய்யா!' என்ற குரலுக்கு நிமிர்ந்தார்.

எண்ணெய் காணாத பரட்டைத் தலையும் அங்கங்கே நைந்து கிழிந்திருந்த 
உடையுமாய் குச்சி குச்சியாய் கை கால்களுடன் பத்து பன்னிரண்டு வயதிருக்கும் ஒரு  சிறுமி அலுமினியத் தட்டை சில்லரைகளுடன் குலுக்கிக் 
கொண்டிருந்தாள்
ஒருவிதமான பார்வையுடன் அவளை பார்த்துவிட்டு பச்சை விளக்கிற்கு 
வண்டியைக் கிளப்பினார்.

தேவையானவற்றை ஆர்டர் செய்துவிட்டு வீடு திரும்பும் பொழுது மணி 
ஒன்பதரையை  தொட்டிருந்தது.சாப்பிட்டு முடிக்கும் சமயம் காலிங் பெல்லடிக்க சுந்தரம் கதவை திறந்தார்.

'அட!வாடா மூர்த்தி! ஆச்சர்யமா இருக்கே லேசுல வரமாட்டாயே.வா வா
உள்ள வா வைதேகி சாப்பிட ஏதானும் கொண்டா

'இல்லடா சுந்தரம்.ஏற்கனவே லேட்டா வந்துர்க்கேன்.நான் உடனே கிளம்பனும்.
அப்பவே வந்தேன்.கதவு பூட்டியிருந்தது'

'அப்படியா?நாங்க கடைக்கு போயிருந்தோம்.அடுத்த வாரம் வெட்டிங்  டே க்கு
ஆசிரமக் குழந்தைகளுக்கு சாப்பாட்டு ட்ரெஸ் லாம் ஆர்டர் குடுக்க போயிருந்தோம்'

'ஓஹோ!அப்டியா? சந்தோஷம். நான் எதுக்கு வந்தேன்னா நாளைக்கு சாயங்காலம் நம்மாத்துல "ஆதி சங்கர அனுபவம்" காலட்சேபம் இருக்கு.கூப்பிட வந்தேன்.கட்டாயம் வந்துருங்கோ.பூஜையும் இருக்கு.ஜானு காலம்பற போன் பண்ணி கூப்பிடுவா'

'அப்படியா!ரொம்ப சந்தோஷம்.கட்டாயம் வந்துடறோம்.இதெல்லாம் கேட்க 
கொடுத்து வச்சுருக்கனுமே'  என்றாள் வைதேகி.

மூர்த்தி விடை பெற்றார் 

மறுநாள் மாலை.....



--தொடரும்....