Tuesday, October 18, 2011

தாய் உயிர்

Golder Retriever Puppies With Mother


ஒரு வாரமாயிற்று சாந்தியை அட்மிட் செய்து. இது எட்டு முடிந்து ஒன்பதாம் மாதம் ஆரம்பம். லேசாக வலி வந்து கொண்டே இருக்க டாக்டரிடம் வந்ததில்,  'கர்ப்பப்பை கொஞ்சம் 'வீக்கா' இருக்கு.அவங்க பெட் ரெஸ்ட்ல இருக்கணும்.இங்கயே அட்மிட் பண்ணிடுங்க.எப்படியும் இன்னும் பத்து பதினஞ்சு நாள்ல டெலிவரி ஆயிடும்.கூடுமானவரை நார்மல் டெலிவரி ட்ரை பண்லாம்' என்றார்.

ஏழாம் மாதம் முதலே அவளுக்கு ஏதோ ஒன்று மாற்றி ஒன்று தொந்தரவு.
அப்போதிலிருந்தே கர்ப்பப்பை உறுதியாக இல்லை என்று ஏதேதோ ஊசிகள், மாத்திரைகள் சமயத்தில் ட்ரிப்ஸ் என்று போய்க் கொண்டிருக்கிறது.அவளுக்கு இது இரண்டாம் பிரசவம்.எப்படியோ நல்லபடி பெற்று எழுந்தால் போதும்.

"அப்பா! அப்பா! இங்க வாயேன்.இங்க வந்து பாரேன் சீக்கிரம்" என்ற ப்ரணவின் குரலில் கலைந்த சுதாகர், "என்னடா கண்ணா?இது ஹாஸ்பிடல்.இங்கல்லாம் இப்படி சத்தமா பேசக் கூடாதுடா" என்றான்.

"நீ இங்க வந்து பாரு முதல்ல"  கை பிடித்து இழுக்காத குறையாய் சுதாகரை ஆஸ்பித்திரி வாசலுக்கு அழைத்துச்  சென்றான்.

அங்கே நாய் ஒன்று ஐந்து குட்டிகளை ஈன்றிருந்தது.பிஞ்சு பிஞ்சாய் சின்ன சின்ன மூட்டைகளாய் கலர் கலராய் தாயை ஒட்டி குவிந்திருந்த அவற்றை காமிக்கத்தான் இந்த பரபரப்பு ப்ரணவிற்கு.

கறுப்பும் வெள்ளையுமாய் ஒன்று.சிவப்பும் வெளுப்புமாய் ஒன்று.கறுப்பாகவே ஒன்று,வெள்ளையாகவே ஒன்று.செம்மண் கலரில் ஒன்று என உய்ங் உய்ங் என்று சப்தம் செய்து கொண்டு அம்மாவிடன் கதகதப்பில் சுருண்டு கொண்டிருந்தது.

மழை லேசாக தூற ஆரம்பிக்கவும் எதிரில் கடை வைத்திருந்த ஆள் வந்து ஒரு பலகையை அவற்றிற்கு மறைப்பாய் வைத்து பால் வைத்து விட்டுப் போனான்.

"அப்பா!நம்ம வீட்டுக்கு ஒண்ணு எடுத்துக்கலாமா? ப்ளீஸ்"



"இல்லை கண்ணா நம்ம வீட்டுக்கே குட்டிப் பாப்பா வரப் போறதே,நீ அதோட விளையாடலாம்"

"அப்பா! ப்ளீஸ்ப்பா....!ப்ளீஸ் ஒண்ணே ஒண்ணு எடுத்துக்கலாமே ப்ளீஸ்"


அப்போதைக்கு ப்ரணவை சமாதானம் செய்ய, "சரி.பட், கொஞ்சம் நல்லா
கண் முழிக்கட்டும்.ரெண்டு நாள் கழிச்சு எடுத்துக்கலாம் ஓக்கேவா?"

"ஹை!சரிப்பா" சந்தோஷ துள்ளலுடன் அம்மாவிடம் கூற உள்ளே ஓடினான்.

இரவு சாந்தியின் அம்மா வருவார் துணைக்கு. சுதாகர் வீட்டிற்கு கிளம்பினான்.லீவு இன்னும் நாலு நாள்தான்  எடுக்க முடியும்.நாளையிலிருந்து ஆஃபீஸ் செல்ல வேண்டியதுதான்.அப்பொழுதுதான் டெலிவரி சமயத்தில் வசதியாக இருக்கும்.

இரண்டு நாள கழித்து வந்த வார விடுமுறையில் பிள்ளையை அழைத்துக் கொண்டு பகலில் ஆஸ்பித்திரிக்கு  கிளம்பினான் சுதாகர்.

"அப்பா!ரெண்டு நாளாயிடுத்து.இன்னிக்கு நாய்க்குட்டி கண் முழிச்சுருக்குமா?"

"பாக்கலாம்"

ஆஸ்பித்திரி உள்ளே நுழையும் போதே வாசலில் நாயும் குட்டியும் இருந்த இடத்தை சுற்றி கூட்டம்.சுதாகர் எட்டிப் பார்த்தான்.மறைப்பு பலகையைக் காணோம். ஐந்து குட்டியில் ஒன்றைக் காணவில்லை.மீதி நான்கில் வெள்ளைக் குட்டி படுத்திருந்த கோணியை வாயால் இழுத்து காலால் தள்ளி பிரட்டி என்று என்னவோ பண்ணிக் கொண்டு கவிழ்ந்து விழுந்தது.

பெரிய நாயோ சுற்றி சுற்றி வந்து அரற்றியது.வாயால் ஒவ்வொரு குட்டியாய் கவ்வி கவ்வி எங்கோ எடுத்துச் சென்று மீண்டும் வந்து இன்னொரு குட்டியை கவ்வி கொண்டு சென்றது

"என்னாச்சுங்க?"  எதிர் கடை ஆளிடம் கேட்டான்.

"அந்த மறைப்பு பலகையை எவனோ   கொண்டு  போய்ட்டான். அதுக்கப்பறத்துலேருந்து  அந்த கறுப்பு குட்டியை காணோம் சார்.குட்டியைக் காணோம்னு இது பரிதவிக்குது.மீதி குட்டியை ஒளிச்சு வச்சுட்டு வருது.
பாக்க பாவமா இருககு.எந்த உயிரா இருந்தா என்ன? தாய் தாய்தான் சார்"

சுதாகர் ப்ரணவை திரும்பிப் பார்த்தான்.அவன் முகம் சுருங்கி இருந்தான்.

மதியம் மூணு மணி இருக்கும்.சாந்திக்கு வலி அதிகமாகி வேறு வழி இல்லாமல் சிசேரியன் செய்து குழந்தையை எடுத்தார்கள்

பிஞ்சுக் குழந்தையை சாந்தியின் அம்மா மடியில் வைத்துக் கொண்டிருக்க
ப்ரணவ் அதையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தான்.

"என்னடா, அப்படிப் பாக்கற?தங்கச்சி பாப்பாடா.இது நமக்குத்தான்"

ப்ரணவ் அமைதியாகவே இருந்தான்

"என்ன கண்ணா? என்னாச்சு? என்றான் சுதாகர்.

"நம்ம பாப்பாவை யாராச்சும் எடுத்துட்டு போனா நமக்கு
எப்பிடி இருக்கும்? அது தெரியாம நான் நாய்க்குட்டிக்கு ஆசைப்பட்டேனே.
பாவம்.அது எப்படி கஷ்டப் பட்டுச்சு? யாருப்பா எடுத்திருப்பா? நாம கண்டு பிடிச்சு குடுக்கலாமாப்பா? " கண்ணீருடன் கேட்கும் குழந்தையை அணைத்துக் கொண்டான் சுதாகர்.

21 comments:

வை.கோபாலகிருஷ்ணன் said...

//"அந்த மறைப்பு பலகையை எவனோ கொண்டு போய்ட்டான். அதுக்கப்பறத்துலேருந்து அந்த கறுப்பு குட்டியை காணோம் சார்.குட்டியைக் காணோம்னு இது பரிதவிக்குது.மீதி குட்டியை ஒளிச்சு வச்சுட்டு வருது.

பாக்க பாவமா இருககு.எந்த உயிரா இருந்தா என்ன? தாய் தாய்தான் சார்"//

மிக அருமையான தாய்ப்பாசக்கதை. பாராட்டுக்கள். வாழ்த்துக்கள். பகிர்வுக்கு நன்றிகள். vgk

SURYAJEEVA said...

குழந்தைகள் மட்டுமே கடவுள் போல் சிந்திப்பவர்கள், வளர்ந்த பிறகு மிருகமும் வளர்ந்து விடுகிறது...

சாந்தி மாரியப்பன் said...

கதை ரொம்ப நல்லாருக்கு ராஜி.. ஆறறிவில்லாத விலங்கா இருந்தாலும் அதுவும் தாய்தானே..

ADHI VENKAT said...

அருமையான கதை ராஜி. என்ன இருந்தாலும் தாய்- தாய் தான்.

rajamelaiyur said...

//
"நம்ம பாப்பாவை யாராச்சும் எடுத்துட்டு போனா நமக்கு
எப்பிடி இருக்கும்? அது தெரியாம நான் நாய்க்குட்டிக்கு ஆசைப்பட்டேனே.
பாவம்.அது எப்படி கஷ்டப் பட்டுச்சு? யாருப்பா எடுத்திருப்பா? நாம கண்டு பிடிச்சு குடுக்கலாமாப்பா? " கண்ணீருடன் கேட்கும் குழந்தையை அணைத்துக் கொண்டான் சுதாகர்.
//

இதுதான் குழந்தை மனம்

rajamelaiyur said...

இன்று என் வலையில்


தமிழ்மணம் எங்களுக்கு SOLANUM TORVUM

ஆச்சி ஸ்ரீதர் said...

பாருங்கப்பா ராஜி வலைச்சரத்திலும் கலக்கிக் கொண்டே,இங்கும் அசத்றாங்க.
நாய் குட்டிகள் போட்டிருப்பதை பார்த்து மனுசனுக்கு ஒரு பிள்ளை பெற்றெடுப்பதற்குள் எவ்ளோ சிரமம்,விலங்குகள் எந்த ட்ரீட்மெண்ட்டும் இல்லாம இத்தன குட்டிகள் போடுதுனு சொல்ல வறீங்களோனு நினைச்சேன்.ஆனால் கடைசியில் ரொம்ப சிந்திக்க வச்சுடீங்க.

ரசிகன் said...

சட்டென கண்ணில் ஒரு துளி எட்டிப் பார்த்தது. குழந்தையிலிருந்து முதுமை வரையிலான இந்த பயணம் நம்மை கடவுளிலிருந்து மிருகமாக்க முயல்கிறது. நாம் குறைந்தபட்சம் மனிதனாகவாவது இருக்க வேண்டும்.

Yaathoramani.blogspot.com said...

குழந்தையின் மன நிலையை மிக அழகாகச் சொல்லிபோகும்
கதை மிக மிக அருமை.அருமையான படைப்பு
தொடர வாழ்த்துக்கள்

Yaathoramani.blogspot.com said...

த.ம 2

குறையொன்றுமில்லை. said...

மனிதர்களோ மிருகங்களோ தாய்ப்பாசம் எல்லாருக்குமே ஒன்னுதானே. அதை அழகா சொல்லி இருக்கீங்க.

Unknown said...

கறுப்பு குட்டியை காணோம் சார்.குட்டியைக் காணோம்னு இது பரிதவிக்குது.மீதி குட்டியை ஒளிச்சு வச்சுட்டு வருது.
பாக்க பாவமா இருககு.எந்த உயிரா இருந்தா என்ன? தாய் தாய்தான் சார்///

ஹ்ம் சூப்பர்:)

சாகம்பரி said...

ஒவ்வொரு உயிரையும் நம்முடைய கருணைப் பார்வையில் பார்க்கும் போது அவ்வளவு அழகான விளக்கங்கள் கிட்டுகின்றன. அழகு நடை ராஜி.

வெங்கட் நாகராஜ் said...

சூப்பர் கதை சகோ... வலைச்சரம், உங்களது தளம் என்று இரு தளங்களிலும் கலக்கல் பதிவுகள்... கடின உழைப்பு தெரிகிறது. வாழ்த்துகள் சகோ....

'பரிவை' சே.குமார் said...

மிக அருமையான தாய்ப்பாசக்கதை.

raji said...

பின்னூட்டமளித்து ஊக்கமளிக்கும் அனைவருக்கும் எனது நன்றிகள்

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

Super story Raji'kka..

நம்பிக்கைபாண்டியன் said...

தாய்மை உணர்வை போற்றும் நல்ல சிறுகதை!

ரிஷபன் said...

தாயின் மனம் மட்டுமே பரிதவிக்கும்..
உங்கள் எழுத்துத் திறமைக்கு ஒரு சல்யூட்

kaialavuman said...

அருமையான கதை.

சுசி said...

nice story ! vazhthukkal!

Post a Comment