Showing posts with label குறுந்தொடர். Show all posts
Showing posts with label குறுந்தொடர். Show all posts

Tuesday, March 15, 2011

துணை

முன் கதைக்கு பகுதி 1 ,  பகுதி 2 , மற்றும் பகுதி 3  படிக்கவும்


பகுதி 4

பார்க்கில் சென்று அமர்ந்ததும் விசு பேச ஆரம்பிக்கும் வரை பக்கத்தில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தைகளை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள்.

"என்ன சுமி!ஒண்ணுமே பேச மாட்டேங்கற?"

அவன் குரலில் கலைந்தவள், " நான் என்ன பேசணும்? நீங்கதான் ஏதோ
பேசணும்னு கூப்ட்டிருக்கீங்க. என்ன சொல்லணுமோ அதை சீக்கரமா
சொல்லி முடிச்சீங்கன்னா எனக்கு கிளம்ப சௌகர்யமா இருக்கும்"

"ஆல்ரைட். இப்ப புவனா என் கூட இல்லை.அவ என்னை விட்டு
போயிட்டா  தெரியுமா?"

"எனக்கு அடுத்தவங்க வீட்டு விஷயங்களை தெரிஞ்சுக்கறதில ஆர்வமும் இல்லை நேரமும் இல்லை.உங்களுக்கு என்ன சொல்லணுமோ அதை பளிச்சுன்னு  சொல்லிட்டீங்கன்னா தேவலை"

" ஏன் இப்பிடி பிடி கொடுக்காமலே பேசற சுமி?"

" இங்க பாருங்க மிஸ்டர்! உங்களுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இப்ப இல்லை. முதல்ல என்னை சுமின்னு கூப்பிடறதை நிறுத்துங்க.ஏதோ
பேசணும்னு சொன்னீங்களேன்னு  வந்தா சொல்ல வேண்டியதை விட்டு எதுக்கு தேவை இல்லாத பேச்செல்லாம்?"

"புவனா என்னை விட்டு போனதுக்கான காரணத்தை நீ கட்டாயம் தெரிஞ்சுக்கணும்.அப்பத்தான் நான் என்ன சொல்ல வரேன்னு உனக்கு புரியும். கல்யாணமாகி ரெண்டு பெரும் ரொம்ப சந்தோஷமாத்தான் இருந்தோம்.ஆனா அம்மாக்கு சுத்தமா புவனாவை பிடிக்கவே இல்லை.
அவ எந்த வேலையும் பாக்காம சுகவாசியா இருக்கறதா தினமும் ஒரே சண்டை.நாளடைவுல இது பெருசாகி எங்களுக்கு குழந்தை  பிறக்கலைங்கறதுல வந்து நின்னது.சரின்னு டாக்டரை பாத்து செக் அப்
பண்ணினதுல எனக்குத்தான் அந்த தகுதி இல்லன்னு தெரிய வந்தது.
அந்த விஷயம் தெரிஞ்சதும்  என்னோட  இருக்க விருப்பமில்லைனு அவ போயிட்டா.அதுக்கப்பறம் வந்த நாட்கள்ல
உனக்கு நான் பண்ணின கொடுமையை நினைச்சு வருந்தினேன்.இப்ப மனம் திருந்தி உன் கிட்ட வந்துருக்கேன்"

...........................


"என்ன சுமி!ஒண்ணுமே பேச மாட்டேங்கற?  இதை கேட்டதும் நீ சந்தோஷப்படுவேன்னு நான் நினைச்சேன்.அம்மாவும் அப்பிடித்தான்
என் கிட்ட சொன்னாங்க.ஆனா நீ மௌனமா இருக்க?"

"எதை எதிர்பார்த்து என் கிட்ட வந்தீங்க?நான் இதுக்கு என்ன சொல்லணும்னு  நீங்க நினைக்கறீங்க?"

"என்னோட வாழ உனக்கு சம்மதமில்லையா சுமி?"

"ஒருவேளை உங்களுக்கு குழந்தை பிறந்திருந்தாலோ இல்லை புவனா போகாம இருந்திருந்தாலோ நீங்க வந்திருக்க போறதில்லை.இப்ப மட்டும் எப்பிடி ஒரு எதிர்பார்ப்போட வர முடியுது? எனக்கு உங்க கூட வாழ
இஷ்டமில்லை"

"புரியுது சுமி! நீ ஏன்  தயங்கறனு புரியுது.அந்த குழந்தையை நான்
ஏத்துப்பேனோ  மாட்டேனோன்னுதான? அந்த குழந்தையோட சேர்த்து நான் உன்னை ஏத்துக்கறேன் சுமி"

"என்னது?ஏத்துக்கறீங்களா? என் சம்மதம் தேடித்தான் நீங்க வந்துருக்கீங்க.உங்களைத் தேடி  நான் வரலை.உண்மைல இப்ப   ஏத்துக்கறதையும் நிராகரிக்கறதையும் சொல்ல வேண்டியது நான்.
இவ்ளோ நடந்தும் இன்னும் உங்க ஈகோ உங்களை விட்டுப் போகலை".

"ஐயோ! அப்படி எல்லாம் இல்லை சுமி!"

"எனக்கு உங்க துணை வேண்டாம்.என் துணை எனக்கு மகள் ரூபத்துல கிடைச்சாச்சு.உங்க துணை நான் இல்லை.உங்களுக்கு வாழ்க்கைல ஒரு நல்ல துணை வேணும்னு நிஜம்மாவே நினைச்சீங்கன்னா அதுக்கு முதல்ல உங்க மனசு சுத்தமா இருக்கணும்.மனசு சுத்தமில்லாதவங்களுக்கு
எப்பேர்ப்பட்ட நல்ல துணை கிடைச்சாலும் பிரயோசனமில்லை,அதன் அருமையை அவங்க உணரப் போறதில்லை.அதனால ஒருவேளை வேற நல்ல துணையைத் தேடினாலும் அதுக்கு முன்னாடி மனசை சுத்தப்
படுத்திக்க பாருங்க.என் கிட்ட பேச வந்ததால இதை சொன்னேன்.
முடிஞ்சா முயற்சி பண்ணுங்க.நல்ல துணை கிடைக்க வாழ்த்துக்கள்.நான் வரேன்"

விசு அயர்ந்து நின்றான்.


முற்றும்.

Monday, March 14, 2011

துணை

முன்கதைக்கு பகுதி 1   மற்றும் பகுதி 2  படிக்கவும்


பகுதி 3


"என்னடி! இது? கையில குழந்தை? யாரோடது?இவ்வளவு காலங்கார்த்தால
யார் வந்துருக்கா?"

"யாரும் வரலைமா.இது யார் குழந்தைனே தெரியாது"

"என்னது? என்னடி குண்டைத் தூக்கிப் போடற?யார் குழந்தைனே தெரியாதா? அப்போ ஏது இது?"

"வாசல் தெளிக்கும்போது நம்ம திண்ணையில இருந்தது.மார்கழிக்
குளிர் வேற. பாவம், எப்படித்தான் தாங்கித்தோ,எவ்வளவு நேரமா இருக்கோ!"

"அச்சச்சோ! எவ என்ன பாவம் பண்ணி இதைப் பெத்து இங்க கொண்டு போட்டாளோ? அதை நீ    ஏன் உள்ள தூக்கிண்டு வந்த?"

"என்ன அத்தை  சொல்றிங்க? பாவம் பச்சைக் குழந்தை.குளிர்ல கிடந்துருக்கு"

"சரி, போகட்டும், இப்ப இதை என்ன பண்றது? ஒண்ணு போலீஸ்ல
ஒப்படைக்கணும் இல்லைனா ஏதாவது ஆசிரமத்துல விடணும்.
இதெல்லாம் நமக்குத்தானா வந்து சேரணும்? ஒண்ணும் சரியாயில்லை"


"இல்லை அத்தை,இதை நாமே வச்சுக்கலாமே ப்ளீஸ்"

"உனக்கென்ன பைத்தியமா பிடிச்சிருக்கு.எவ பெத்த குழந்தையவோ
நாம எப்பிடி வச்சுக்க முடியும்?என்ன குலமோ என்ன கோத்திரமோ?
நாளைக்கே பெத்தவ வந்து வம்பு பண்ணினா என்ன செய்வ?நமக்கெதுக்கு இந்த வேண்டாத தொல்லையெல்லாம்?"


"இல்லை அத்தை!எந்த பிரச்சனையும் வராது.வேண்டாம்னுதான போட்டு போயிட்டாங்க.அப்பறம் எதுக்கு வரப் போறாங்க?அப்பிடியே வந்தாலும் வர வரை நாம வச்சுக்கலாம்"

"என்ன உளர்ற?"

"அடடா! காலங்காத்தால இதென்ன கூச்சல்? வீட்ல மனுஷனை நிம்மதியா தூங்க விடாம"  தூக்கம் கலைந்த எரிச்சலுடன் வந்த விசு கத்தினான்.

"அடேய்! விசு! இங்க பாருடா!உன் பொண்டாட்டி அடிக்கற கூத்தை!
எவளோ தப்பு பண்ணி குழந்தை பெத்து இங்க போட்டு போயித் தொலைச்சுருக்கா.இவ அதை வளப்பாளாம்,என்னடா அநியாயமா இருக்கு?"

"என்னது? என் பொண்டாட்டியா? அது யாரு? எனக்கு அப்பிடி யாருமே கிடையாது. இந்த பஞ்சாயத்தெல்லாம் எங்கிட்ட கொண்டு வராத.
நீ ஒரு தலையெழுத்தை இழுத்துண்டு வந்த.அந்த தலையெழுத்து
இன்னொரு தலையெழுத்தை கொண்டு வந்திருக்கு.நீயாச்சு அதுவாச்சு.
இதுல என்னை இழுக்காத" என்று பிரஷ் எடுத்துக் கொண்டு போய்
விட்டான்.

"இங்க பாருடி! நான் சொல்றதை நல்லா கேட்டுக்கோ. பழையபடி
நீ மட்டும் இங்க இருந்துண்டு வேலை கீலை செஞ்சிண்டு அவனை
சரி பண்ண பாக்கறதானா இங்க இரு.இல்லை குழந்தை குட்டின்னு ஏதாவது பேத்தறதாருந்தா உங்கப்பன் வீட்டுக்கு நடையைக் கட்டு
சொல்லிட்டேன்"

சுமதி மௌனமாய் நின்றாள்.

"என்னடி! நான் பாட்டுக்கு சொல்லிண்டிருக்கேன். பேசாம நின்னா என்ன அர்த்தம்?"

"வெள்ளிக்கிழமை பெண் குழந்தை வீடு தேடி வந்திருக்கு.இதை கையில
எடுத்து அணைக்கும்போது நான் தாய்மைனா என்னனு உணர்றேன்.
இனி உங்க பிள்ளை என்னை மனைவியா ஏத்துக்கறது நடக்காத விஷயம்.
பேருக்கு பொண்டாட்டியா இருக்கறதா விட புதுசா பேர் வைக்கப் போற
இந்த குழந்தைக்கு அம்மாவா இருக்கறதுன்னு நான் முடிவு பண்ணிட்டேன்.
நான் வரேன்"

சுந்தரா அதிர்ச்சியில் உறைந்தாள்

"என்னம்மா! இப்படி பண்ணிட்ட? " அப்பா ஆற்றாமையாய் கலங்கினார்.

"என்ன செய்ய சொல்றீங்கப்பா? பொண்டாட்டியா நினைக்காத ஒருத்தன்
காலடில கிடந்து  வேலை செய்றத விட இந்த குழந்தைக்கு தாயா
இருந்தா என்னப்பா தப்பு? உங்களுக்கு பாரம்னா சொல்லுங்க நான்
போயிடறேன்"

"என்னடி!இப்படி பேசற? நீங்க கொஞ்சம் சும்மா இருங்களேன்.அவளே நொந்து போயிருக்கா"  என்ற அம்மா குழந்தையை அவளிடமிருந்து
வாங்கிக் கொண்டாள்"

"சரி! இனி என்னம்மா செய்யப் போற?"

"நான் பழையபடி வேலைக்கு போகலாம்னு இருக்கேன்பா.எப்படியும் குழந்தைய வளக்க என்னைக் காப்பாத்திக்க பொருளாதாரம் அவசியம்"

"சரிம்மா!உன்னிஷ்டம்" என்றார் வருத்தம் தோய்ந்த குரலில்.

அடுத்து வந்த நாட்களில் குழந்தை எல்லாருடைய கண்ணையும் கருத்தையும் கவர்ந்து எல்லாருடைய உலகமுமாகி மனதிற்கு பிரியமாகி விட "ப்ரியா" என்று பெயர் சூட்டி அவளது குறும்புகளில் மகிழ்ந்தனர்.
சுமதி குழந்தையினாலும் தன் வேலைச் சுமையினாலும் கிட்டத்தட்ட
பழைய வாழ்வை மறந்தே போனாள்.விவாகரத்தான பின் ஒரு தடவை மட்டும் அவள் தோழி, விசு அந்த புவனாவையே மணந்ததாகாக் கூறிய பின் அதுவும் முற்றிலும்
மனதை விட்டு அகன்றது.

ஆயிற்று!குழந்தைக்கும் இரண்டு வயது பூர்த்தியாகி விட்டது.
போன வாரம்தான் தன் மழலையில், கேக் கத் பண்ணனும்,பலூன் கத்தனும்
என்றெல்லாம் ப்ரியா கொஞ்சிக் கூறியவற்றை நிறைவேற்றி இரண்டாவது
பிறந்த நாளும் கொண்டாடியாகி விட்டது.இப்பொழுது செல்ல தாத்தா
பாட்டியுடன் ஊருக்கு சென்றதில்  ஒரே வெறிச்சென்றிருக்கிறது.

இந்த சமயம் பார்த்து இவன் மீண்டும் எங்கிருந்து வந்து குதித்தான்?
குழப்பத்துடன் இருந்தவளிடம்  ப்யூன் வந்து, "காலைல
வந்தாரே, அவரு வந்திருக்காரும்மா.பாக்கணும்னு சொல்றாரு"
என்றான்

கைப்பையை எடுத்துக் கொண்டு இழுப்பு மேசையைப் பூட்டி விட்டு
எழுந்து சென்றாள்

அவளைக் கண்ட விசு புன்னகைத்து, " பக்கத்துல பார்க்ல போய்
பேசலாமா?" என்றதும் முறைப்புடன் தலையாட்டி  உடன் சென்றாள்

தொடரும்.......

Sunday, March 13, 2011

துணை

முன் கதைக்கு பகுதி 1  படிக்கவும்


பகுதி 2


"போகப் போக எல்லாம் சரியாயிடும்னு பாத்தா நீ இப்பிடி இன்னும் பிடிவாதம் பிடிக்கறது  நல்லதுக்கில்லைடா"

'ணங்" கென்று காபி தம்ளரை வைத்து விட்டு திரும்பிய சுந்தரா அங்கு
சுமதியைப் பார்த்ததும் ஏற்பட்ட திகைப்பை மறைத்து, "என்ன சுமதி!
காய் வாங்கிண்டு வந்துட்டயா? வா! வந்து நறுக்கி வை" என்றாள் எதுவுமே
நடக்காதது போல.

விசுவோ இவளைக் கண்டதும் விருக்கென்று உள்ளே சென்றான்.

அதிர்ச்சி நீங்காதவளாக மெதுவாக சென்று காய்கறிக் கூடையை
உள்ளே வைத்தவள் சுந்தராவை பார்த்து,  "என்ன அத்தை!இதெல்லாம்?"
என்றாள் கலங்கிய கண்களுடன்.

"எதெல்லாம்?" அசராமல் கேட்டாள் சுந்தரா

இப்போ நீங்க ரெண்டு பேரும் பேசிண்டு இருந்தீங்களே நான் வரும்போது?"

"அதுக்கென்ன இப்ப?"

"அவருக்கு இஷ்டமில்லாமலா என்னை பண்ணி வச்சீங்க?"

"என்ன பெருசா இஷ்டம்?கல்யாணம்  பண்ணிவச்சா புருஷனை  மயக்கி  கைக்குள்ள    போட்டுக்க  உனக்கு துப்பில்லைன்னு சொல்லு.இப்பிடி  எல்லாம்  நடக்கும்னு  நான் கண்டேனா? சாமர்த்தியம்
இல்லாதவ   எல்லாம் கேள்வி கேக்க  என்ன  யோக்யதை  இருக்கு?"

"நான் என்ன செய்ய முடியும் அத்தை?அவர் என் கிட்ட முகம் கொடுத்து கூட பேச விரும்பல" பொங்கிய அழுகையை அடக்கியபடி கூறினாள் சுமதி.

"எல்லாம் என் தலையெழுத்து.ஒண்ணுத்துக்கும் உபயோகப் படாதவளை
கட்டிண்டு மாரடிக்கணும்னு. இத பாரு, இப்பிடி கண்ணைக் கசக்கிண்டு நிக்கறதுக்கு பதிலா அவன் மனசை எப்பிடி மாத்தலாம்னு உருப்படியா
யோசனை பண்ணி நடந்துக்கோ சொல்லிட்டேன்"

அன்றிலிருந்து வாழ்க்கை நரகமாக  பட்டது.காலையில் எழுப்பும்போதே
சனியனே! என்று எரிந்து விழுவான்.அவள் கையால்  உண்ண மறுத்தான்.
மொத்தத்தில் இந்த இரண்டு வருட கால வாழ்வில் சம்பளமில்லாத  
வேலைக்காரி போல் நடமாடிக்  கொண்டிருந்தாள்.

"கிர்ரென்று தலைமாட்டில் கதறிய அலாரத்தை தலையில் தட்டி
சமாதானம் செய்து எங்கே அந்த சத்தத்தில் விசு எழுந்து                                   கத்துவானோ என்ற பயத்தில் கட்டிலை திரும்பிப் பார்த்தாள்.
நல்லவேளை,எழுந்து கொள்ளவில்லை என்று எண்ணியவாறு மணியைப் பார்த்தாள்.
ஐந்தைக் காமித்தது கடிகாரம்.

சத்தம் செய்யாமல் மெதுவாக வாசல் தெளிக்க வந்து கதவைத் திறந்தாள்.
சில்லென்று மார்கழி காற்று முகத்தில் பட இந்த இதமாவது வாழ்க்கையில்
அனுபவிக்க முடிகிறதே என்று நினைத்தவாறே தண்ணீரைத் தெளித்து கோலமிடும் சமயம் சிறு முனகல் சப்தம் கேட்க திரும்பிப் பார்த்தாள்.
திண்ணையில் ஏதோ அசைவு தெரிந்தது.அருகில்  சென்று உற்றுப்
பார்த்தவள் ஒருகணம் அதிர்ந்தாள்.மறுகணமே அள்ளி கையில் எடுத்துக்
கொண்டு உள்ளே ஓடோடி வந்தவளை சுந்தரா முறைத்துக்
கொண்டு நிற்க,"அத்தை! இங்கே பாத்தீங்களா? "என்றாள் உற்சாகமாய்.

"என்ன பாத்தீங்களா? கையில என்ன?" என்று சுந்தரா கேட்க சுமதியின் கையில், தன்னைச் சுற்றியிருந்த வெள்ளைத் துணியை உதைத்து
'ங்கா' என்ற குரலோடு நெளிந்தது பச்சிளம் குழந்தை ஒன்று.

தொடரும்......


Saturday, March 12, 2011

துணை

 பகுதி 1


அப்போதுதான் முடித்திருந்த அந்த ப்ராஜக்டை சரி  பார்த்துக்
கொண்டிருந்த சுமதியை யாரோ பார்க்க வந்திருப்பதாக ப்யூன்
வந்து கூற ஆச்சரியத்தில் ஆழ்ந்தாள்.அலுவலகம் தேடி தன்னை
பார்க்க வரும் அளவிற்கு யாராக இருக்கும் என யோசித்தாள்.
அம்மாவும் அப்பாவும் சொந்த ஊரில் ஒரு கல்யாணத்துக்கு
போயிருக்கிறார்கள்.பின் யாராக இருக்க முடியும் என்ற யோசனையுடனே
வரவேற்பு அறைக்கு வந்தவள் அங்கு அமர்ந்திருந்த அவனைக் கண்டதும்
திகைத்தாள்.இவனா? இவன் எப்படி இங்கு? எதற்கு?

இவளைக் கண்டதும் ஒருவித ஆர்வமாய் எழுந்த அவன்,  "எப்படி
இருக்க சுமி?" என்றான்.

"என்னை சுமின்னு கூப்பிடற அளவுக்கு நமக்குள்ள இப்ப எந்த
உறவுமில்லை.இங்க எதுக்கு வந்தீங்க?வந்த விஷயத்தை மட்டும் சொல்லிட்டு கிளம்பலாம்" 

"இல்லை அப்படி ஒரு வரில ஒரு வார்த்தைல எல்லாம் சொல்லிட்டு
போற  விஷயமில்லைமா,கொஞ்சம் பேசணும் ப்ளீஸ்"

நமக்குள்ள பேசற அளவு எந்த விஷயமும் இருக்கறதா எனக்கு படலை.
அனாவசியமா நேரத்த வீணாக்காம  என்ன சொல்லணுமோ அதை சொல்லிட்டு போங்க.எனக்கு நிறைய வேலை இருக்கு" என்றாள்
கடுப்புடன்.

"ப்ளீஸ் புரிஞ்சுக்கோ.இங்க வச்சு எதையும் பேச முடியாது.கொஞ்சம் வெளில வந்தியானா விவரமா பேசலாம்"

"நினச்ச நேரத்துக்கு உங்களோட வர இதென்ன நீங்க நடத்தற
ஆபீசா? இப்பல்லாம் வர முடியாது.வேணும்னா சாயங்காலம் ஆபீஸ்
முடிஞ்சதும் வந்து பாருங்க.அப்ப என்ன சொல்லணுமோ சொல்லிட்டு போங்க என்று கூறி விட்டு மடமடவென உள்ளே சென்றாள்.

உள்ளே வந்து அமர்ந்து வேலை பார்க்க ஆரம்பித்தாளே   தவிர மனம் அதில் செல்லவில்லை.மீண்டும் மீண்டும் பழைய விஷயங்களையே சுற்றி
சுற்றி ஓடியது.

எதற்காக வந்திருப்பான்?இனி என்ன இருக்கிறது இருவருக்கும்?
எல்லாம் முடிந்தே இரண்டு வருடங்களான பிறகு?

எவ்வளவு முயன்றும் தடுக்க இயலாது மனம் பின்னோக்கியே ஓடியது.
ஐந்து  வருடங்களுக்கு முன் சுமதிக்கும் விசுவிற்கும் திருமணம்
நடந்த போது அவளும் மற்ற பெண்களைப் போலவே  பல கனவுகளுடனும் எதிர்பார்ப்புகளோடும்தான் அந்த பந்தத்தில் காலடி எடுத்து வைத்தாள்.

ஆனால் இந்த திருமணத்தில் விசுவிற்கு எந்த உடன்பாடும் இல்லையோ என்ற சந்தேகம் முதல் நாளே தோன்றும் அளவிற்கு விசுவின் நடவடிக்கைகள் இருந்தன.அவளிடம் அவன் சுமுகமாகவே நடந்து கொள்ளவில்லை.ஒரு புதுமண தம்பதிக்குள் இருக்கக் கூடிய குதூஹலம்
அவர்கள் வாழ்வில் இடம் பெறவே இல்லை.

விசுவைப் பொறுத்த வரையில் அவன் பாட்டுக்கு வருவான் போவான்.
சாப்பிடுவான்.தூங்குவான்.இவளிடம் முகம் கொடுத்து பேசுவது குறைவுதான்.அதுவும் ஏதாவது வேலை வாங்குவதற்குத்தான் அந்த
குறைவான பேச்சும் நடக்கும்.மாமியாரோ இதையெல்லாம் கண்டும் காணாமலும் இருந்து விடுவாள்.

காரணம் புரியாமல் தவித்த சுமதிக்கு காரணத்தை தெரிந்து கொள்ளும் சந்தர்ப்பமும் வாய்த்தது.ஒருநாள் காய் வாங்கிக் கொண்டு வீட்டுக்குள் நுழைந்தவளுக்கு தாய்க்கும் மகனுக்கும் இடையே நடந்த பேச்சு வார்த்தை காதில் விழுந்தது.

"எத்தனை நாள்தான்டா இப்பிடி பிடிவாதம் பிடிப்ப? "

"நானா உன்னை கல்யாணம் பண்ணி வைன்னு கெஞ்சினேன்.
நான்தான் முன்னாடியே தெளிவாத்தான  சொன்னேன்.பண்ணிக்கிட்டா
அத்தை  பொண்ணு புவனாவைத்தான் பண்ணிப்பேன்னு.நீதான் பணத்துக்கு ஆசைப்பட்டு இவளை என் தலையில கட்டின"

சுமதி  தன் காலடியில் பூமி நழுவி தன்னை உள்ளிழுக்கும்
உணர்வில் உறைந்தாள்


                                                                                                                           தொடரும்....