Saturday, March 31, 2012

ராமம் பஜே ஷ்யாமம் மனஸா....

ஸ்ரீ ராம நவமி பதிவாக தயானந்த சரஸ்வதி ஸ்வாமிகள் எழுதிய

துர்கா ராகத்தில் அமைந்த பாடலும் அதன் தமிழாக்கமும் (மூலம் - சம்ஸ்க்ருதம்)  :

பாடலைக் கேட்க Ramam Bhaje இதைச் சொடுக்கவும்.

பல்லவி:

ராமம் பஜே ஷ்யாமம் மனஸா
ராமம் பஜே ஷ்யாமம் வசஸா
சர்வ வேத சார பூதம்
சர்வ பூத ஹேது நாதம்








அனுபல்லவி:

விபீஷண ஆஞ்சநேய பூஜித சரணம்
வசிஷ்டாதி முனி கண வேதித ஹ்ருதயம்
வசீக்ருத மாயா காரித வேஷம்
ஏதம் புருஷம் சர்வேஷம்






சரணம்:
நீலமேக ஷ்யாமளம் , நித்ய தர்ம சாரிணம்
தண்டினம் கோதண்டம்
பூரா கார்ய கண்டனம்
ஜன்ம ம்ருத்யு ஜரா வ்யாதி துக்க ரோக பவஹரம்.




தமிழாக்கம்:

பல்லவி:

மனதால்,கருமை நிறம் கொண்ட ராமனை பூஜி!
வாக்கால், கருமை நிறம் கொண்ட ராமனை பூஜி!
அனைத்து வேதங்களின் சாரமான நாமம்
அனைத்து உயிர்களிலும் ஒலிக்கும் நாதம்

அனுபல்லவி:

விபீஷணர், ஆஞ்சநேயர் பூஜித்த திருவடி,
வசிஷ்டர் போன்ற முனிவர்களின் ஹ்ருதயத்தின் வேதம்,
வசீகரிக்கக் கூடிய, நமக்குள் மாயம் ஏற்படுத்தக் கூடிய உருவம்,
இப்படிப் பட்ட வர்ணனைகளுடைய எல்லாவற்றிற்கும் இறைவனாகிய புருஷன்.

சரணம்:

நீலமேகம் போன்ற கருமை நிறமானவன், தினமும் தர்மமாக பின்பற்றக் கூடியவன்,
கோதண்டம் என்ற வில்லுடையவன்,
தவறான நடத்தைகளை அழிக்கக் கூடியவன்,
பிறப்பு , இறப்பு, வயோதிகம், வியாதி, துக்கம், ரோகம் போன்றவற்றிலிருந்து
விடுவிக்க கூடியவன்.

#அப்படிப் பட்ட ராம நாமத்தை மனதாலும் வாக்காலும் பூஜிக்க வேண்டும் என்பதே பாடலின் பொருள்

அவ்வாறே தினமும் ராம நாமம் உச்சரித்து அவனருள் அடைவோம்

ஸ்ரீ ராம ஜெயம்!!!!!!!!!



தமிழாக்கம் செய்யப் பட்ட மற்றொரு ராம் பஜன் (மூலம் - ஹிந்தி )
காதே பீ ராம் கஹோ !
பீதே பீ ராம் கஹோ!
ஸோதே பீ ராம் கஹோ!
ராம்! ராம்! ராம்!
மேரா ராம்!ராம்!ராம்!

பட்தே பீ ராம் கஹோ!
லிக்தே பீ ராம் கஹோ!
ஸுன்தே பீ ராம் கஹோ!
ராம்! ராம்! ராம்!
மேரா ராம்!ராம்! ராம்!

ஹங்ஸ்தே பீ ராம் கஹோ!
ரோதே பீ ராம் கஹோ!
போல்தே பீ ராம் கஹோ!
ராம்! ராம்! ராம்!
மேரா ராம்! ராம்! ராம்!
சீதா ராம்! ராம்! ராம்!
ஜெய் ஜெய் ராம்! ராம்! ராம்!




தமிழாக்கம்:

உண்ணும்பொழுதும் ராம் என்று கூறு!
பருகும்பொழுதும் ராம் என்று கூறு!
உறங்கும் பொழுதும் ராம் என்று கூறு!
ராம்! ராம்! ராம்!
என்னுடைய ராம்! ராம்! ராம்!

படிக்கும் பொழுதும் ராம் என்று கூறு!
எழுதும் பொழுதும் ராம் என்று கூறு!
கேட்கும் பொழுதும் ராம் என்று கூறு!
ராம்! ராம்! ராம்!
என்னுடைய ராம்! ராம்! ராம்!

சிரிக்கும்பொழுதும் ராம் என்று கூறு!
அழும்பொழுதும் ராம் என்று கூறு!
பேசும் பொழுதும் ராம் என்று கூறு!
ராம்! ராம்! ராம்!
என்னுடைய ராம்! ராம்! ராம்!


சீதா ராம்! ராம்!ராம்!
ஜெய் ஜெய் ராம்!ராம்!ராம்!








Tuesday, March 27, 2012

உயிர்ச்சங்கிலி





கோமதி தோட்டக் கதவைத் திறந்து துளசிச் செடிக்கு தண்ணீர் விடச்
சென்ற போது பக்கத்து காலி மனையில் ஐந்தாறு பேர் நீள அகலத்தை அளந்து
கொண்டிருந்தனர்.

துண்டை உலர்த்த வந்த கணவரிடம்,  “ கட்டட வேலை ஆரம்பிக்க போறாங்களா?” என்றாள்

“ஆமாம்.ஆறு ஃப்ளாட் வருதாம். நானும்தான் சொல்றேன், நமக்கெதுக்கு இத்தனை பெரிய வீடு? வித்துட்டு ஃப்ளாட் ஆக்கிடலாம்னு. நீ கேட்டாதான?”
என்றார் சாரதி.

“ஆரம்பிச்சுட்டீங்களா? உஙகிட்ட வந்து கேட்டேனே, என்னைச் சொல்லணும்”
என்ற படி உள்ளே சென்றாள்.

மறு நாள் மிளகாய் காயவைக்க மொட்டை மாடிக்குச் சென்ற போது பக்கத்து மனையில் கட்டட வேலைக்கு வந்திறங்கி இருந்த ஆட்கள் அவர்கள் தேவைக்கு குடிசை தயார் செய்து கொண்டிருந்தார்கள்.கீழே இறங்கி வருகையில் ஒரு பெண்ணின் இடுப்பில் இருந்த குழந்தை வாயில் விரல் போட்டுக் கொண்டு இவளையே பார்த்துக் கொண்டிருந்தது.
குண்டுக் கன்னமும் கரு விழிகளும் சுருள் கேசமுமாய் துறுதுறு பார்வையுடன்
இருந்த குழந்தையை தூக்கிக் கொஞ்ச வேண்டும் போல் இருந்தது.மிகவும்
பரிச்சயமான முகம் போல வெகு நாள் பழகியது போல் இருந்தது.

லேசாக சிரித்ததும் அவசரமாய் முகம் திருப்பிக் கொண்டது.கோமதிக்கு
மனசு காற்று இறங்கிய பலூன் போல் ஆனது.உள்ளே சென்றதும், “என்ன?
மூஞ்சி டல்லடிக்குது? மாடிக்குதான போயிட்டு வந்த?அதுக்குள்ள என்ன? “
என்றபடி சாரதி எதிர்ப்பட்டார்.

“என்னமோ மனசு சரியில்லை” என்றபடி செல்பவளை கவலையாய்
பார்த்தார்.

இப்படித்தான் அடிக்கடி ஆகி விடுகிறாள் இந்த இரண்டு வருடமாய்.
என்ன செய்ய என்று நினைத்த படி பெருமூச்சு விட்டார்.

அவர்களது ஒரே சந்ததியான தாமு விபத்தில் மறைந்ததிலிருந்து கோமதி
அடிக்கடி இப்படி ஆகி விடுவது உண்டு.அவளை இன்னும் மோசமாக்கி விடுமோ என்று தாமுவின் நினைவாக இருந்த எல்லாவற்றையுமே அகற்றி விட்டார் அவனது ஃபோட்டோ உட்பட.

ஆனால் அவன் இருந்த போது அவனது விருப்பத்துகெதிராக கொடி பிடித்தவளும் இவள்தான்.ஆந்திராவிற்கு வேலையின் காரணமாக மாற்றலாகி சென்றவனை பிரிய முடியாமல் அழுதவள், அங்கு அவன் ஒரு பெண்ணை
விரும்புகிறான் என்றும் அவள் வசதியற்றவள் என்றும் தெரிந்ததும் ருத்ர
தாண்டவம் ஆடாத குறைதான்.அவன் ஒவ்வொரு முறை வரும்போதும்
எப்படியும் அம்மாவை சமாதானம் செய்து விடலாம் என்ற எண்ணத்துடன் வந்து ஏமாற்றத்துடன்தான் திரும்புவான்.

இப்படியே ஆறுமாத காலம் ஓடியது.ஒரு முறை அவன் வருவதற்கு பதிலாக
சடலமாக கொண்டு வரப் பட்டான்.வேலைக்குச் செல்லும் வழியில் ஒரு விபத்தில் சிக்கிக் கொண்டு உயிரிழந்தவனை உடன் வேலை செய்தவர்கள்
உதவியுடன் சாரதியும் மனதைக் கல்லாக்கிக் கொண்டு வீட்டிற்கு கொண்டு வந்தார்.அந்த இழப்பிற்குப் பின் அவ்வப்பொழுது கோமதி இப்பிடித்தான்.

“குடிக்க கொஞ்சம் தண்ணி தரீங்களா?குழந்தைக்கு வேணும்” என்ற குரல் கேட்டு வாசல் பக்கம் பார்த்தார்.

இருபது வயதொத்த ஒல்லியான பெண் ஒருத்தி பாட்டிலோடு நின்றிருந்தாள். தோற்றத்தில் வறுமை குடி கொண்டிருந்தது.பக்கத்து கட்டட வேலையாட்களில் பார்த்த நினைவு. தண்ணீர் கொடுத்து அனுப்பினார்.

நாலு நாட்களுக்குப் பிறகு வெளியில் சென்று விட்டு வந்த போது, வாசலில் ஒரு குழந்தை சிறு சிறு கற்களைப் பரப்பி விளையாடியபடி இன்னொரு கையில் லாலி பாப் சுவையில் மூழ்கியிருந்தது.மனம் நெகிழ்ந்து அப்படியே தூக்கிக் கொண்டு உள்ளே வந்தார்.குழந்தை மிரள மிரள விழித்து அழத் தயாராக உதட்டைப் பிதுக்கியிருந்தது.குழந்தையைப் பார்த்ததும் கோமதி, “பக்கத்து கட்டட வேலைக்காரங்க குழந்தையாச்சே இது. நீங்க கொண்டு வந்திருக்கீங்க?”
என்றாள்

“வாசல்ல உக்காந்திருந்தது.சும்மாதான் தூக்கிட்டு வந்தேன்” என்று முடிப்பதற்குள் குழந்தை அழ ஆரம்பிக்கவும் அதன் அம்மா தேடிக் கொண்டு வரவும் சரியாக இருந்தது.

“குழந்தையைப் பாத்துக்க யாரும் இல்லையாம்மா?இதை வச்சுக்கிட்டு எப்பிடி வேலை பாப்ப?”

“இல்லங்க.அப்பாரு மட்டும்தான் எனக்குன்னு சொல்லிக்க இருந்தாரு.அவரும்
மார்வலி வந்து போன வருசம் தவறிட்டாரு.அவர் பாத்துட்டிருந்த கட்டட
வேலை மேஸ்திரிதான் மெட்ராஸ் கூட்டிட்டு வந்து இங்க சேத்து விட்டாரு”

“புருஷன் இல்லையாம்மா?”

சட்டென்று கண்கள் குளமாக அந்தப் பெண் தன் குழந்தையைப் பார்த்தாள்.

“ஐயோ!அழாதம்மா!தெரியாம கேட்டோம்.மன்னிச்சுடு”

“இல்லைங்க. நீங்க கேக்காட்டியும் இந்தக் குழந்தை எனக்கு அவரை ஞாபகப் படுத்திக்கிட்டுதான் இருக்கும். என்னை அவர் உயிருக்கு உயிரா விரும்பினாரு..அவங்க நல்ல வசதியானவங்க.பெரிய வேலைல இருந்தாரு.பெத்தவங்க சம்மதத்தோட கட்டிக்கணும்னு பாத்தாரு.ஆனா அதுக்குள்ள விபத்துல போயிட்டாரு.ஆனா அதுக்கு முன்னாடி சந்தர்ப்ப வசமா நான் கர்ப்பமாயிட்டேன்.என்னைப் பத்தின கவலைல எங்கப்பாரும் போய் சேந்துட்டாரு.அந்த ஊர்லயே இந்த நெனப்போட இருக்க முடில.அதான் இங்க
வந்து சேர்ந்தேன்” என்று விசும்பியவளை அதிர்ச்சியாக பார்த்தனர் இருவரும்.

“எந்த ஊரும்மா உனக்கு?” சுதாரித்த சாரதி கேட்டார்.

“ நெல்லூருங்க” விசும்பலடங்காமல் சொல்ல திகைத்துப் போனார்.

“ குழந்தையோட அப்பா பேரு? ”

நடுங்கும் குரலின் வித்தியாசம் உணர்ந்தும் அர்த்தம் புரியாதவளாய்
“தாமோதரன்” என்று சொல்ல, நிற்க இயலாது தடுமாறிய கோமதியைத்
தாங்கிப் பிடித்தவாறு சாரதி குழந்தையைப் பார்த்தார். அது, தான் வந்து சேர்ந்த இடம் புரியாமல் அங்கிருந்த தாம்புக் கயிற்றை இடுப்பில் சுற்றி விளையாடிக் கொண்டு தாமோதரனாகவே இருந்தது



Friday, March 23, 2012

சாகரம்

 



வாழ்க்கை வீணையின்
தந்திகளை இறுக்குவதிலும்
தளர்த்துவதிலுமே
பொழுதுகள் கரைய,                                                                   

அனுபவ சுருதிகளும்
அர்த்தமறியா சுருதிகளும்
அவிழ்ந்து நாட்கள் நகர்கின்றன.

இணக்கமான இறுக்கத்தில்
இதமான சுருதிகள்
இனிமையாய் ஒலிக்கிறது.

தகுந்ததொரு தளர்விலும்
தாளம் தப்பாது ஒலிக்கிறது

அதீத இறுக்கமோ தளர்வோ சமயத்தில்
அவலமாக்கி விடுகிறது.

வாழ்க்கை இசையின்
வாசிப்புகளைக் கற்கும்
மாணவர்களாய் மனிதர்கள்....

மொத்தத்தில்
வித்தைக்காரன் கம்பிநடை
வித்தையாய்,
குழந்தைகளின் சீசா
விளையாட்டாய்,
ஆரோகணத்திற்கும்
அவரோகணத்திற்கும்
சமன்பாட்டைத் தேடும் சாகரமாய்....

வாழ்க்கை !!!!


Thursday, March 22, 2012

பொம்மலாட்டம்




எனது சிறு வயதில் என்னை மிகவும் வியப்பிலாழ்த்திய விஷயங்களுள் ஒன்று பொம்மலாட்டம். தாமிரபரணி ஆற்றங்கரையில் சிலுசிலுவென காற்றடிக்க மணல் பரப்பில் அமர்ந்து விழி விரிய பொம்மைகளின் அசைவுகளையும்,அவற்றின் உடை அமைப்புகளையும் அதற்குரிய வசனங்களையும் கண்டும் கேட்டும் மகிழ்ந்திருக்கிறேன். தொலைக்காட்சி என்ற தொல்லையற்ற பொழுதுகளில் அப்பொழுது பொம்மலாட்டம் சிறுவர்களுக்கு ஒரு பொழுது போக்காகவே இருந்தது.கோவில் திருவிழாக் காலங்களில் சங்கீத கச்சேரிகளுக்கு இணையாக பொம்மாலட்டமும் ஒரு சிறப்பிடம் பெற்றிருந்தது.

பொம்மைகள் எவ்விதம் அசைகின்றன என்பது எனக்கு புரியாத புதிராகவே இருக்கும்.என்னதான் அண்ணா அதைப் பற்றிய விளக்கம் அளித்தாலும், அது எவ்வாறு ஒருவர் பொம்மைகளின் அசைவை அப்படி கன கச்சிதமாக செய்யக் கூடும் என்பது எனக்கு பெருத்த ஆச்சர்யமாகத்தான் இருந்தது.வசனங்களுக்கேற்ப அவற்றை அசைக்கவும், பின்னே இசைக்கும் இசைக்கேற்ப அவற்றைக் குதிக்கவும் ஆடவும் செய்வதும் எனக்கு அப்பொழுது வேடிக்கையாகவே இருந்தது.
பொம்மலாட்டம் மூலம் பல புராணக் கதைகள் அறிய குழந்தைகளுக்கு வாய்ப்பிருந்தது.காதால் கேட்கப் படும் அல்லது புத்தகம் மூலம் படிக்கப் படும் கதைகளை விட கண்ணால் பார்த்து மனதில் பதித்துக் கொள்ளக் கூடிய வண்ணம் பொம்மலாட்டங்கள் அமைந்திருந்தன.அவற்றிற்குரிய அலங்காரங்களும் பொருத்தமாகவே இருக்கும்.

கண்ணை பாதிக்கக் கூடிய திரையும் வன்முறைக் காட்சிகளும் அவற்றில் இல்லை.வில்லனுக்கு எதிராக கதாநாயகன் சுழன்று சுழன்றும், ஆகாயத்தில் பறந்து வந்தும், வித்தைகள் செய்தும் துவம்சம் செய்யும் பொய்மைக் காட்சிகள் அதில் இல்லை.

கதாநாயகியாக வரும் பொம்மைக்கு குட்டைப் பாவாடையுடன் கூடிய நடனக் காட்சிகள் இருக்கவில்லை.பெண் ஒரு போதைப் பொருள் என்றதொரு தோற்றம் ஏற்படுத்தும் கட்டிப்பிடி காட்சிகளும், காதால் கேட்க கூசும் குத்துபாட்டுகளும் பொம்மலாட்டத்தில் புனையப் படவில்லை. 

இன்று அந்தக் கலை அழிவின் பாதையில்.

நம்பிக்கையூட்டும் வண்ணம் சில பொருட்காட்சிகளில் அவ்வப்பொழுது காண இயல்கிறது.

மார்ச் 21 உலக பொம்மலாட்ட தினம்.

"இதற்கெல்லாமா ஒரு தினம் கொண்டாடுவது?" சினேகிதி கேட்டாள்.
ஏன் கூடாது?வாலன்டைன்ஸ் டே என்ற பெயரில் அந்த தினத்திற்கான அர்த்தம் கூட புரியாமல் சிலர் கூத்தடிக்கையில் இதற்கு ஏன் கூடாது?
உண்மையில் வாலன்டைன் என்பவர் ஒரு கிறிஸ்தவ பாதிரியார்.தன்னை நாடி வந்த ஒரு காதல் ஜோடியை சேர்த்து வைத்த அவரை அந்த ஊர் மக்கள், தண்டனையாக உயிர் வதை செய்து விட்டனர்.அவர் இறந்த தினமே வாலன்டைன் டே.ஒருவர் இறந்த நாளை காதலர் தினமாக கொண்டாடுகிறோம் என்பது கூட தெரியாமலே பலர் இதைக் கொண்டாடுகின்றனர்.

அதற்கெல்லாம் ஒரு தினம் இருக்கையில் அழிவின் பாதையில் இருக்கும் ஒரு கலையை மீட்டெடுக்க உலக பொம்மலாட்ட தினம் ஏற்படுத்திக் கொண்டதில் தவறென்ன?


Sunday, March 18, 2012

பயணித்துத்தான் பார்க்கலாமே

Boat


படகுகள் காத்திருக்கின்றன
கரையோர கனவுகளை
கலைத்து விட்டு
பயணத்தை துவக்கு முன்
பாதை பற்றிய பயமேன்?

படகுகள் காத்திருக்கின்றன
கரை சேர்க்கும்
கடமையுடன்
அசைந்து அசைந்து உனை
அழைக்கையில் அச்சமேன்?

படகுகள் காத்திருக்கின்றன
ஒருவேளை உன் துயர் தீரலாம்
ஒருக்கால் உன் பாரம் குறையலாம்
ஏறிச் சென்றால் ஏற்றம் கிடைக்கலாம்
ஏனில்லை நம்பிக்கை, எதற்கிந்த தயக்கம்?

படகுகள் காத்திருக்கின்றன
உபயோகிக்க கற்றுக் கொள்
உதறி விட்டால்
உன் பயணம்தான் ரத்து.
மற்றபடி படகுகள்
மற்றொருவருக்காய் பயணிக்கும்

அதனால்
பயணித்துத்தான் பார்க்கலாமே!


Thursday, March 1, 2012

களஞ்சியம்

வங்கிகளும் ஓய்வூதியமும் :

இன்டெர்நெட் கனெக்ஷன் ப்ராப்ளம் இருந்ததால் சென்ற முறை டெலிஃபோன் பில்லை பேங்கில் சென்று கட்டிவிடலாம் என்று இந்தியன் வங்கிக்கு சென்றிருந்தேன்.அன்று மூத்த குடிமக்களுக்கு பென்ஷன் வழங்கும் தினம் என்பதால் வங்கியில் கூட்டம் அதிகமாக இருந்தது.டோக்கன் பெற்று கொண்டு என் முறைக்காக காத்திருந்தேன்.அருகில் ஒரு வயதான தம்பதிகள் அமர்ந்திருந்தனர்.அவர்களும் டோக்கனுடன் அவர்கள் முறைக்கு காத்திருந்தார்கள்.
கால் மணி நேர அவகாசத்திற்குப் பின் அந்த தம்பதிகளுள் அந்த வயதான பெண்மணி ஒரு கவுண்டரில் சென்று தன் கணவர் இயற்கை உபாதையால் அவஸ்தப் படுவதால் கழிப்பறையை உபயோக்கிக்க அனுமதி வேண்டினார்.
அங்கு இருந்தவரோ வேறு ஒரு நபரை கை காண்பித்து அவரிடம் கேட்கச் சொன்னார்.அவரிடம் சென்று கேட்ட போது "அதெல்லாம் இங்க முடியாதுங்க.இங்க தண்ணிப் பிரச்சனை.நீங்க வேணா வெளியில எங்கயாச்சும் கூட்டிக்கிட்டு போயிட்டு வந்துடுங்களேன்" என்று யோசனை கூறினார்.அந்த பெண்மணி அந்த வங்கி ஊழியர்களை ஒவ்வொருவராக கெஞ்ச
ஆரம்பித்தார்.பார்க்க மனதுக்கு வேதனையாக இருந்தது.
நான் எழுந்து, முதலில் யோசனை கூறிய ஊழியரிடம், "அவங்களுக்கு நீங்களே உதவறீங்களா? அல்லது மேனேஜரிடம் சென்று அவர் கழிப்பறையை உபயோகிக்க அவர் அனுமதிக்கறாரான்னு நான் வேணா கேக்கட்டுமா?" என்று கேட்டதும் அவர் முகம் மாறியது.உடனே கடுப்பாகி "ஓஹோ!கேப்பீங்களோ?
முடிஞ்சா செஞ்சுக்கோங்க" என்று சொல்ல நான் மேனேஜர் அறையை பார்த்து நான்கடி நடந்ததும் அலறாத குறையாய் அந்த அம்மாளிடம் " என்னம்மா! இது தொல்லையா போச்சு. சரி சரி அந்த மூலைல பாத்ரூம் இருக்கு பாருங்க அங்க கூட்டிக்கிட்டு போங்க என்று அலுப்பாய் கூறினார்.
நான் பில் கட்டி வெளியில் வந்து கொண்டிருந்த போது அந்த பெண்மணி வேகவேகமாய் வந்து, "ரொம்ப நன்றிம்மா!அவர் சுகர் பேஷன்ட்.தவிச்சுப் போயிட்டார்.சமயத்துல வந்து பேசினீங்க" என்றார்.இதைச் சொல்வதற்காக நான் போய்விடப் போகிறேனே என்று ஓடி வந்தார்.நன்றியை தெரிவிக்க மூத்தோரிடம் இருக்கும் பதைப்பு, உதவுவதற்காக இளையோரிடம் இல்லாமல் போகிறதா?
வங்கிகள் முதியோர்களுக்காக பென்ஷன் வழங்கும் தினத்தன்று பிற சேவைகளை அன்று ஒரு நாள் நிறுத்தி வைக்கலாம்.அவர்களைக் காக்க வைப்பது தவிர்க்கப் படலாம்.

கூகுள் சேவை நாட்டுக்குத் தேவை :

தூத்துக்குடி எக்ஸ்ப்ரஸ் தன் குரலெழுப்பி ஓடிக் கொண்டிருந்தது.ஒரு பெர்த்தில், படிக்கும் மாணவி தன் நோட்டுப் புத்தகத்தைக் கையில் வைத்துக் கொண்டு படித்துக் கொண்டு வர அருகில் அவளது தாயார் அமர்ந்திருந்தார்.எதிரே நாற்பத்தைந்து வயதுக்கார ஆண் உட்கார்ந்திருந்தார்.அவர்களுக்குள் ஏற்பட்ட சம்பாஷணையில் அந்தப் பெண் ஈரோட்டில் நடக்க இருக்கும் ஒரு செஸ் பந்தயத்தில் கலந்து கொள்ள வந்திருப்பதாகவும் அவர்கள் கர்நாடகாவில் இருக்கிறார்கள் என்பதும் தெரிய வந்தது.இரவு அனைவரும் தூங்கி விட அந்தப் பெண்ணும் தாயாரும் மூன்றேகால் மணிக்கு ஈரோட்டில் இறங்கி விட்டனர்.
காலை ஆறு மணிக்கு திண்டுக்கல்லில் அதே பெர்த்தில் ஏறிய பெண்மணி அங்கு ஒரு நோட்டுப் புத்தகம் இருப்பதை கண்டு அந்த எதிரில் இருந்த ஆணிடம் கேட்டதும் அவர் அதை வாங்கிப் பார்த்தார்.அது ஒரு அறிவியல் நோட்டுப் புத்தகம்.அதில் "நிஷா ஷர்மா"  9 'C'  என்பதைத் தவிர வேறு எந்த தகவலும் இருக்கவில்லை.அதை தன்னுடன் கொண்டு வந்த அந்த மனிதர்
அதன் ப்ரவுன் கவரைப் பிரித்துப் பார்த்ததில் அதன் அட்டையில் பள்ளியின் அச்சு பதிக்கப் பட்ட படம் பள்ளியின் பெயருடன் இருப்பதைக் கண்டார்.உடனே நம் கூகிளாண்டவர் உதவி நாடி பள்ளியின் பெயரை டைப் செய்ததில் தொடர்பு எண் கிடைத்தது.அது கர்நாடகாவில் உள்ள ஒரு பள்ளி.அங்கு தொடர்பு கொண்டு விஷயத்தைக் கூறி அந்த மாணவியின் தொடர்பு எண் அல்லது விலாசம் கேட்டதில் அவர்கள் மிரண்டு போய் "அப்படி எல்லாம் கொடுக்க இயலாது.வேண்டுமெனில் உங்களது தொடர்பு எண் தாருங்கள் .உண்மையெனில் அவர்கள் தொடர்பு கொள்ளட்டும்" என உஷாராகக் கூறினார்கள்.அதன் பின் அந்த மனிதர் தந்த எண்ணுக்கு அந்த மாணவியின் தாய் தொடர்பு கொண்டு தன் முகவரி தந்து இன்னும் நான்கு நாட்களில் அறிவியல் பரீட்சை இருப்பதால் உடனடியாகக் கொரியரில் அனுப்புமாறு கோரி நன்றியும் கூறினார்.வாழ்க கூகுளின் சேவை!

டிஸ்கி : இதில் குறிப்பிட்டிருக்கும் அந்த நாற்பத்தைந்து வயது மனிதர் என் உடன் பிறந்த சகோதரன் என்பதில் மிகவும் பெருமை கொள்கிறேன்.