பதிவர் மனோ மேடம் அவர்கள் "பெண் எழுத்து" தொடர் பதிவிட என்னையும் அழைத்திருந்தார்.முதலில், அழைப்பிற்கு அவர்களுக்கு நன்றி கூறிக்கொள்கிறேன்.
"பெண் எழுத்து" தொடர் பதிவில் பல பதிவர்கள் தங்கள் கருத்துக்களை
பதிந்துள்ளனர்.பல வித கருத்துக்களை பலர் கூறியிருப்பினும் நான்
இது தொடர்பாக அறிந்தவற்றை பகிர விரும்புகிறேன்.
பொதுவாக பெண் எழுத்து, ஆண் எழுத்து என்று பேதங்கள் கிடையாது என்று நாம் கூறிக் கொண்டாலும் எப்பொழுது பெண் எழுத்து என தலைப்பிடப்பட்டு எழுதப் பட ஆரம்பித்து விட்டதோ அப்பொழுதே
"பெண் எழுத்து" பற்றி தனிப்பட்ட கருத்துக்களும் அபிப்ராய பேதங்களும் பெண்கள் எழுதுவதில் சிக்கல்களும் உண்டு என்பது தெளிவாகின்றது.
கட்டாயமாக, நிச்சயமாக சில விஷயங்களை ஒரு ஆண் எழுத்தாளர் எழுதக்கூடிய அதே முறையில்,அது கதைக்கு கட்டுரைக்கு மிகவும் அவசியமானதாகவே இருந்தாலும் கூட பெண் எழுத்தாளர்கள் எழுதுவதில் சங்கடங்கள் பிறக்கத்தான் செய்கின்றன.அதை மீறி எழுதும் பெண் எழுத்தாளர்கள் நிறைய தர்ம சங்கடமான சூழல்களை சந்திக்கத்தான் வேண்டியுள்ளது.
சமீபத்தில் ஒரு பதிவில் கதைக்கு பொருந்தக் கூடிய ஒரு வரி கதையில் சேர்க்கப் பட்டிருந்தது.ஒரு பெண் கதாபாத்திரம் தன் மன வலியை உணர்த்துவதற்காக தன் கறை படிந்த உள்ளாடையைப் பற்றி பேசும் விதமாக அமைக்கப் பட்டிருந்தது.அந்த இடத்தில் அது அவசியமே.
ஆனால் அதை எழுதியது ஒரு ஆண் எழுத்தாளர்.ஒரு பெண் எழுத்தாளர் அப்படிப்பட்ட வரிகளால் உணர்த்த, யோசிக்கும் நிலைமை இன்னும் இருக்கத்தான் செய்கிறது.
சில நாட்களுக்கு முன் நான் படித்த செய்தி ஒன்றை அடித்தளமாகக் கொண்டு ஒரு பதிவிட எண்ணியிருந்தேன்.ஆனால் என் உறவினர் பெண்
ஒருவர் "இதைப் பற்றியா எழுதப் போகிறாய்?இதனால் உனக்கு தர்ம
சங்கடங்கள் ஏற்படலாம்" என கூறினார்.நான் படித்த செய்தி இதுதான்:
"மும்பை டாக்டர் இந்துஜா அவர்கள் தனது ஆய்வுக் கட்டுரை ஒன்றில்
பெண்களின் மாதவிடாய் சமயத்தில் வெளியேறும் ரத்தப் போக்கை
கிருமிகளற்று சேமித்தால் அதிலிருந்து பல நோய் தீர்க்கும் மருந்துகள்
கிடைக்கும் என எழுதியுள்ளார்"
இதை எழுதுவதில் கூட பிரச்சனைகள் உள்ளது.
எழுத்தாளர் பாலகுமாரன் அவர்கள் எழுதும் அதே காம வெளிப்பாட்டை ஒரு பெண் எழுத்தாளர் எழுதினால் அது கடும் விமர்சனத்திற்கு
ஆளாகி விடுகின்றது.எழுத்தாளர் ஜெயகாந்தன் அவர்களால் எழுதப் படும் ஒரு புரட்சிகரமான எழுத்து ஒரு பெண் எழுத்தாளருடையதாக இருப்பின்
அது கலாசார சீர்கேடு என்று முத்திரை குத்தப் பட்டு விடும்.
சமீபத்தில் நான் எழுதிய "துணை" தொடர் fertility , impotency
போன்ற வார்த்தைகளால் திரிக்கப்பட்டு விமர்சனத்திற்கு உள்ளானது.
ஆனால் ஆலமரம் போன்ற சிவசங்கரி,இந்துமதி மற்றும் வித்யா
சுப்ரமணியம் போன்ற எழுத்தாளர்களே புயலை சந்திக்க நேரும் பொழுது
என் போன்ற தளிர்கள் எம்மாத்திரம்?
எழுத்தாளர் வித்யா சுப்ரமணியம் அவர்களை படிக்க ஆரம்பித்த நாட்களில்
இவர் யார் என்ற தேடுதல் ஆர்வத்தில் நான் அவரைப் பற்றி அறிய
சில குறிப்புகளை படிக்க நேர்ந்தது.அவரது எழுத்துக்களைப் பற்றியும் அவரது விருதுகள் பற்றியும் அதில் குறிப்பிட்டிருந்தது.ஆனால் கூடவே
feminist என்ற வார்த்தை ஒட்டிக் கொண்டிருந்தது.இப்படி ஒரு முத்திரைக்கு என்ன அவசியம்?
"இரண்டு பேர்" என்ற தலைப்பில் சிவசங்கரி அவர்களும் இந்துமதி அவர்களும் இணைந்து ஒரு படைப்பை உருவாக்கி இருந்தனர்.
ஒருவர் எழுதும்போதே அதில் தடுமாற்றங்கள், பாத்திர தன்மையில்
சிக்கல்கள் ஏற்பட வாய்ப்புகள் இருக்கும்போது ஒருவரது நடையை மற்றவர் தொடர்வது அதுவும் பாத்திரத்தன்மை,கதை நடை கெடாமல் கொண்டு செல்வதற்கு தனித் திறமைதான் வேண்டும்.அப்படி ஒரு
அனாயாசமாய் எழுதப்பட்ட கதை.ஆனால் அது கடும் விமர்சனத்திற்கு உள்ளானது.கதையின் நாயகி திருமணமானவள்.அவளுக்கு இருக்கும் கலை
ஈடுபாட்டால் அப்படிப்பட்ட ஒருவருடன் பழக நேரிடும் பொழுது எல்லை மீறும் சந்தர்ப்பம் ஏற்படுகிறது.ஆனால் அது நடவாமல் அவள் மீண்டு விடுகிறாள்.கதையை அருமையாக கொண்டு சென்றிருப்பார்கள் கத்தி மேல் நடக்கும் வித்தை மாதிரி.
அதற்கு வந்த கண்டனங்களையும் ஆசிரியர்களின் பதிலையும் இங்கு தந்துள்ளேன்:
1 . "பெண் இனமே தலை குனிய வேண்டிய நாவல்.எப்படித்தான் இரு பெண்கள் மனம் வந்து எழுதினார்களோ?"
2 . "இரண்டு பேரைப் படித்து அதிர்ச்சிக்கு உள்ளானேன்.ஆண் எழுத்தாளர்கள்
எழுதி இருந்தாலும் பரவாயில்லை.ஆனால் பண்பட்ட பெண் எழுத்தாளர்களா இப்படி எழுதுவது?"
ஆசிரியரின் பதில்:
"கதையின் கருத்தை விட அதை பெண்கள் எழுதி உள்ளதுதான் மனதில் படுகிறது.அப்படி என்றால் இதையே ஆண் எழுத்தாளர் எழுதினால் இவர்கள் ஒப்புக் கொண்டிருப்பார்கள் போல இருக்கிறதே?"
ஆசிரியர் தன் உறவினர் ஒருவர் கேட்ட கேள்விக்கு தான் அளித்த
பதிலையும் வெளியிட்டிருந்தார்கள்:
"ஏம்மா நல்ல குடும்பத்துப் பெண்ணான நீ இப்படி எல்லாம் எழுதலாமா?"
"வேறு குடும்பப் பெண் எழுதி இருந்தால் ரசித்திருப்பீர்கள் அல்லவா?"
இன்னொரு கண்டனக் கடிதம்: "இரண்டு விலை******கள் சேர்ந்து எழுதினால் இப்படித்தான் இருக்கும்"
ஆசிரியரின் பதில்:
"எழுத்தை கவனியுங்கள்.அதை தூற்றுங்கள், பாராட்டுங்கள்.அதை அக்கு வேறு ஆணி வேறாய் பிரித்து அலசுங்கள்.you are most welcome .அதை
விட்டு விட்டு எழுதும் கை,முகம்,உடம்பு,கணவன்,குடும்பம் என்று நீளமாய்
எல்லை மீறுவது வேண்டாமே?.அதிர்ஷடவசமாய் சின்ன சிரிப்புடன் இவற்றை ஒதுக்கும் கணவர் மற்றும் in -laws எங்களுக்கு இருக்கிறார்கள்.
சந்தேக மனசு கொண்டவர்களாக இருந்தால் அந்த பெண் எழுத்தாளர் பேனாவை மூடி வைக்க வேண்டியதுதான்"
எழுத்தை மட்டும் பார்க்காமல் அதை எழுதியது ஆணா பெண்ணா என்று
ஆராயும் பொழுது "பெண் எழுத்து" என்ற பிரிவு இருப்பதை ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும்.
பதிவர் மதி சுதா அவர்கள் ஆணுறை பற்றி எழுதி இருப்பதை, கட்டாயமாக
ஒரு பெண் எழுதும் சூழல் இன்னும் உருவாகவில்லை.பதிவர் கோபி
அவர்கள் "சரவண கார்த்திகேயனின் 'பரத்தை கூற்று' புத்தக விமர்சனத்தின்
போது விபச்சாரத்தை சட்ட மயமாக்குவது பற்றி குறிப்பிட்டிருந்தார்.
நிச்சயமாக இந்த விஷயத்தை ஒரு பெண் பதிவர் எழுத தயங்கும் நிலை
இருக்கத்தான் செய்கிறது.பரத்தை கூற்றையே ஒரு பெண் எழுதி இருந்தால் சமூகத்தில் சங்கடங்களை சந்திக்கும் சந்தர்ப்பம் அமைந்திருக்கும்.சொல்லப் போனால் இவற்றுக்கெல்லாம் பெண்கள் விமர்சனம் எழுதும் நிலை கூட வரவில்லை எனலாம்.
கல்கியின் சம காலத்தவரான வை மு கோதை நாயகி அம்மாள் பற்றி
அறிந்தவர்களை, கல்கியை அறிந்த சதவிகிதத்தினரோடு ஒப்பிட்டால்
மிகப் பெரிய வித்தியாசம்தான் விடையாகக் கிடைக்கும்.
மென்மையான காதல்,பாசம்,அன்பு,குடும்பப் பின்னணி, சமூகப் பார்வை
மருத்துவம்,மன வளம் இவை போன்ற அடித்தளங்களை வைத்து எழுத முடிகிற பெண் எழுத்தாளர்களால், என்றைக்கு ஆணுக்கு இணையாக மற்ற தளங்களையும் வைத்து எழுத முடிகிறதோ(கடும் கண்டனங்கள் இன்றி)
அன்று இந்த "பெண் எழுத்து" என்ற தலைப்பு அவசியமற்று போய் விடும்.
அந்த அவசியமற்று போக வேண்டும் என்பது ஒரு பெண் என்ற முறையில் எனது விருப்பமாகிறது.
இந்த "பெண் எழுத்து" தொடர் பதிவை தொடர சக பதிவர் "சாகம்பரி",
பதிவர் " எல் கே" , பதிவர் "ஆர் வி எஸ்" மற்றும் பதிவர் "அப்பாவி தங்கமணி" அவர்களை வேண்டுகோளுடன் அழைக்கிறேன்.


44 comments:
//சிவசங்கரி,இந்துமதி மற்றும் வித்யா சுப்ரமணியம் போன்ற எழுத்தாளர்களே புயலை சந்திக்க நேரும் பொழுது
என் போன்ற தளிர்கள் எம்மாத்திரம் //
நூற்றில் ஒரு வார்த்தை... ஹாட்ஸ் ஆப்...:))
//ஏம்மா நல்ல குடும்பத்துப் பெண்ணான நீ இப்படி எல்லாம் எழுதலாமா//
இப்படி நேரடியா கேக்கறவங்க கூட பெட்டர் அக்கா... நம்மகிட்ட ரெம்ப நல்லவிதமா பேசிட்டு பின்னாடி விமர்சனம் பண்றவங்க அதிகம்... எனக்கும் அந்த அனுபவம் உண்டு... ஆரம்பத்துல கொஞ்சம் வருத்தமா இருந்தது... அப்புறம் பழகிடுச்சு...
//அந்த அவசியமற்று போக வேண்டும் என்பது ஒரு பெண் என்ற முறையில் எனது விருப்பமாகிறது//
நம் எல்லோரின் விருப்பவும் இதுதான்... நன்றி என்னையும் இதில் சேர்த்து கொண்டதற்கு... கண்டிப்பா எழுதறேன்... வாய்ப்புக்கு நன்றி ராஜி'க்கா...:))
இதைப்படித்து முடித்ததும், இடி, மின்னல், வெள்ளம், புயல், பூகம்பம், எரிமலை, சுனாமி போன்ற பஞ்சபூதங்களின் ஒன்று சேர்ந்த தாக்குதல்களிலிருந்து தப்பி வந்தது போன்ற ஒரு உணர்வு ஏற்பட்டது. இருப்பினும் கோபங்கள் நியாயமானதாகவே உள்ளன.
சமூதாயம் பெண்ணுக்கு எப்பொழுதும் ஒரு வேலி போட்டு கைதியாக வைத்திருப்பது, வேதனையான விஷயமே. அடங்கி இருக்கும் வரைதான் ஆறு என்று அடக்கி வைத்து விட்டார்களோ என்று கூட தோன்றும். ஆனால், இன்னும் அதிக வருடங்களுக்கு அப்படி அடக்கி வைக்க முடியாது என்றும் தோன்றாமல் இல்லை. வெள்ளமாய், பெண்ணின் கருத்து சுதந்திரம் பொங்கி வந்தால் .......?????
கரெக்டா சொன்னீங்க!
நீங்கள் எழுதிய பதிவுகளிலேயே மிகச்சிறந்த பதிவும், ஆழ்ந்து சிந்தித்து ,மெனக்கெட்டு எழுதிய சிறந்த பதிவும் இது தான்.. வாழ்த்துக்கள்
சில பாஸிட்டிவ் பாயிண்ட்ஸ் பார்ப்போம்.. 1.கவிஞர் தாமரை பல போராட்டங்களுக்குப்பிறகு சினிமா உலகில் சாதிக்கவில்லையா?மின்னலே படத்தில் வசீகரா என் நெஞ்சினிலே பாட்டு இதுவரை வந்த காதல் பாடல்களில் பெண்ணின் உணர்வுகளை மென்மையாக சொன்னதில் ஆக சிறந்த கவிதை என பெயர் பெற்றதே...?
2.நம் பதிவுலகில் ஜாக்கி சேகர், கேபிள் சங்கர் போன்ற முன்னணி பதிவர்கள் 4 வருடங்களாக ஃபீல்டில் இருந்து 1000 ஃபாலோயர்ஸ் பெற்றார்கள்.. ஆனால் சித்தர்கள் ராஜ்ஜியம் என்ற வலைப்பூ தோழி எனும் பெண்ணால் நடத்தப்பட்ட ஒரே வருடத்தில் 900க்கும் அதிகமான ஃபாலோயர்ஸையும்,சராசரி ஒரு நாள் ஹிட்ஸ் 1000 மும் பெற்றுள்ளதே.. அது ஒரு அங்கீகாரம் தானே?
3. வெட்டிப்பேச்சு சித்ரா எந்த இடுகை இட்டாலும் பதிவு ரிலீஸ் ஆன 5 மணி நேரத்தில் தமிழ் மண மகுடம் அந்தஸ்து பெற்று 2 நாட்கள் ஹிட் லிஸ்ட்டிலேயே இருந்து தொடர்ந்து சாதனை செய்கிறதே.. இது வரை எந்த சர்ச்சையிலும் சிக்க்காமல் எல்லாத்தரப்பு மக்களிடம் அவர் பேராதரவு பெறவில்லையா?
4. தேனம்மை லட்சுமணன் குமுதம் வார இதழில் ஒரே இதழில் 10 கவிதைகள் பிரசுரம் கண்டு சாதிக்கவில்லையா?இதுவரை எந்த ஒரு வாசகரும் கடந்த 25 வருட கால நேரத்தில் செய்யாத ரெக்கார்டு ஆயிற்றே..?
?>>>இன்னொரு கண்டனக் கடிதம்: "இரண்டு விலை******கள் சேர்ந்து எழுதினால் இப்படித்தான் இருக்கும்"
இந்த மாதிரி ஒரு சந்தர்ப்பம் வருவதற்குக்காரணம் பொறாமையும், ஆணாதிக்க உணர்வும் தான்.. ஒரு ஆணால் ஒரு பெண் சாதித்து முன்னேறுவதை பொறுக்க முடிவதில்லை..ஆனால் எல்லா ஆண்களும் அப்படி என சொல்லி விட முடியாது..
>>, என்றைக்கு ஆணுக்கு இணையாக மற்ற தளங்களையும் வைத்து எழுத முடிகிறதோ(கடும் கண்டனங்கள் இன்றி)
அன்று இந்த "பெண் எழுத்து" என்ற தலைப்பு அவசியமற்று போய் விடும்.
பதிவில் நான் ரசித்த வரிகள்
>> "சரவண கார்த்திகேயனின் 'பரத்தை கூற்று' புத்தக விமர்சனத்தின்
போது விபச்சாரத்தை சட்ட மயமாக்குவது பற்றி குறிப்பிட்டிருந்தார்.
நிச்சயமாக இந்த விஷயத்தை ஒரு பெண் பதிவர் எழுத தயங்கும் நிலை
இருக்கத்தான் செய்கிறது
இது உண்மைதான்.. ஆனால் லீனா மணீ மேகலை, குட்டி ரேவதி போன்ற கவிதாயினிகள் சர்ச்சகளை மீறி சாதித்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்
தினமலர் வாரமலர் இதழில் அன்புடன் அந்தரங்கம் என்ற கேள்வி பதில் நிகழ்ச்சி அனுராதாரமணன், இந்துமதி போன்ற பெண் எழுத்தாளர்கள் நடத்தும்போது பல சர்ச்சைகளை சந்தித்தும் தொடர்ந்து சாதித்துத்தான் வந்தார்கள்
>>>
சமீபத்தில் நான் எழுதிய "துணை" தொடர் fertility , impotency
போன்ற வார்த்தைகளால் திரிக்கப்பட்டு விமர்சனத்திற்கு உள்ளானது.
அந்த பின்னூட்டங்களை நான் படித்தேன்.. அப்படி ஒன்றும் எதிர்ப்பு வர்லையே..? ஒரு வேளை அதை பப்ளிஷ் பண்னாமல் விட்டுட்டீங்களோ என்னவோ?
டீச்சர் ரொம்பக் கோவமா எழுதி இருக்கீங்க. நீங்க இவ்ளோ கோவமா எழுதி நான் பார்த்தது இல்லை. உங்கள் பதிவுடன் ஒத்துப் போகிறேன் .
என்னை வேறு மாட்டிவிட்டீங்களா ??சரி எழுதறேன்
@ சி பி செந்தில்குமார்
பெண்கள் சாதிக்கவில்லை என்றோ, ஒட்டு மொத்தமாக
எழுதுதல் இயலாது என்றோ நான் கூறி இருக்கவில்லை.சாதிக்கும் பெண்கள்
சங்கடங்களை சந்திக்கத்தான் வேண்டும்.ஆனால் அந்த சங்கடங்களை சந்திக்காமலேயே ஒரு
ஆணால் சாதிக்க இயலும்.இது ஆண் பெண் சண்டை அல்ல.'பெண் எழுத்தின் நிலைமை பற்றிய பதிவு'.
சித்தர்கள் ராஜ்ஜியம் வலைப்பூவிலும்,வெட்டிப் பேச்சு சித்ரா அவர்களும்
தேனம்மை லக்ஷ்மணன் அவர்களின் எழுத்தும் ஹிட் தான்.ஆனால் விஷயம் பெண்கள் ஹிட் ஆகிறார்களா
இல்லையா என்பதல்ல.ஆண் எழுதும் எல்லா விஷயங்களையும் கண்டன விமர்சனமற்று பெண்கள்எழுத முடியுமா
என்பதுதான்.
அன்புடன் அந்தரங்கம் பகுதிக்காக அனுராதா ரமணன் அவர்களும்
இந்துமதி அவர்களும் சர்ச்சைகளுடன்தான் சாதித்தார்கள்.அதற்கு அவர்கள் பெண் எழுத்தாளர்கள்
என்பதுதான் காரணம்.
தெளிவான விரிவான பதிவு
உதாரணங்களுடன் விளக்கி உள்ளது
கூடுதல் சிறப்பு
புத்தாண்டில் இன்னும் சிறப்பான பதிவுகள்
கொடுத்து பதிவுலகில் சிறந்து விளங்க
மனமார்ந்த வாழ்த்துக்கள்
அழைத்தமைக்கு நன்றி. தொடருகிறேன். நிறைய விஷயங்களை மிகத் தைரியமாக முன் வைத்திருக்கிறீர்கள். மிக அற்புதமான படைப்பு. ;-))
அனைவருக்கும் இனிய தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள்
ராஜி மிகத்தெளிவாக அலசி ஆராய்ந்து தார்மீகக் கோபத்தோடு பதிவு செய்திருக்கிறீர்கள். விமர்சனத்தையும் கண்டனங்களையும் எதிர்கொள்ளும் துணிச்சலும் உறுதியும் இருந்தால் மட்டுமே பெண்கள் சில விஷயங்களை மனம் திறந்து வெளிப்படையாக எழுத முடியும். சிற்றின்பம் என்பதில் பெண்ணுக்கும் சம பங்கு இருந்தாலும், அது குறித்து அவள் ஒரு ஆணைப போல் எழுதி விட முடியாது. இதற்கு காரணம் பயமோ, தயக்கமோ இல்லை. அவளிடம் இயற்கையாகவே இருக்கும் வெட்கம்தான். அந்த வெட்கத்தை எல்லோராலும் எளிதில் உதறி விட இயலாது. புத்தாண்டு வாழ்த்துக்கள்.
FEMINIST என்று என்னைப் பற்றிய குறிப்பில் சொல்லப் பட்டிருப்பதை நானும் படித்தேன். வருத்தமாக இருந்தது. பெண்ணைத் துன்புறுத்தும் ஒரு ஆணைப பற்றி, பெண் சார்ந்து நின்று ஒரு கதை எழுதினால் உடனே பெண்ணீயவாதி என்று முத்திரை குத்தி விடுகிறார்கள். நான் ஆணின மன உணர்வுகள் குறித்தும், அவர்களது நியாயங்கள் குறித்தும் எத்தனையோ சிறுகதைகளும், நாவல்களும் எழுதியிருக்கிறேன். (ஆகாச கங்கை, பரசுராமன், கோபுரக் கலசங்கள், ஆகாசத் தூது, இன்னும் பல)
அப்போதெல்லாம் என்னை யாரும், MENNIST என்று குறிப்பிடவில்லை. ஒரு கதையில் ஆணின மமதையைச் சாடினால், மற்றொன்றில் பெண்ணின் மமதையையும் சாடியிருக்கிறேன். நான் பெண்ணீயவாதியும் இல்லை, ஆணியவாதியும் இல்லை. இல்லை. என்னைச் சுற்றி நடப்பவைகளையும் என்னை பாதித்த விஷயங்களையும் சொல்லும் ஒரு சாதாரண கதை சொல்லி மட்டுமே.
நல்லதொரு அலசல். செறிவான கருத்துக்கள்.
ஆண் - பெண் பேதம் சமூக சூழலில் மட்டுமல்லாமல் எழுத்திலும் இருப்பது வருத்தப்படக்கூடிய விஷயமே :(
ஆண்கள், தங்கள் எழுத்துகளில் வலுக்கட்டாயமாக புகுத்தும் சிலவற்றை - பெண்கள், தங்கள் எழுத்துகளில் நியாயமான காரணங்கள் இருந்தாலும் எழுத முடிவதில்லை. ஆனால் தற்சமயம் நிலைமை மாறி வருகிறது என்றே நினைக்கிறேன். நன்றாக எழுதி இருந்தீர்கள்.
நல்ல பகிர்வு. தைரியமாய் ஒரு பெண் எழுத்தாளருக்கு வர்ம் இன்னல்கள் பற்றி சொல்லி இருக்கீங்க சகோ.
தெளிவான முறையில் எடுத்துசொல்லியிருக்கீங்க.
நல்ல தெளிவா சொல்லி இருக்கீங்க வாழ்த்துகள்.....
நல்ல பதிவு.
நன்கு எழுதியிருக்கிறீர்கள்.
வாழ்த்துக்கள்.
மிக நல்ல விளக்கமான பகிர்வு.
மிகவும் துணிச்சலான பதிவு..
இந்த பதிவையும்,வந்திருக்கும் பின்னூட்டங்களையும்
ரோல் மாடலாகா எடுத்துக் கொள்ள விரும்புகிறேன்.
தற்போழுது பாலுணர்வு பற்றி எழுதவோ,பேசவோ,விமர்சிக்கவோ பெண் மருத்துவர்களைத் தவிர மற்ற பெண்களுக்கு சங்கடங்கள் அதிகமே என்று நினைக்கிறேன்
அருமையாக எழுதி இருக்கீங்க ராஜி , மிகத்தெளிவு ,
//பெண் எழுத்தாளர்கள் எழுதுவதில் சங்கடங்கள் பிறக்கத்தான் செய்கின்றன.அதை மீறி எழுதும் பெண் எழுத்தாளர்கள் நிறைய தர்ம சங்கடமான சூழல்களை சந்திக்கத்தான் வேண்டியுள்ளது.//
மிகச்சரியாக சொல்லி இருக்கீங்க ராஜி
என்ன ஒரு தெளிவான அலசல்..
நியாயமான கோபமும் அதையும் விட தீர்க்கமான உங்கள் கருத்துகளும்..
பதிவுக்கு ஒரு சபாஷ்..
நிதானமான நல்ல அலசல்.
எழுத்துத்தான் முக்கியம்.எழுதியவனல்ல என்பதை நல்ல எழுத்துக்கு அடையாளமாகச் சொல்வதுண்டு.
நல்ல எழுத்து அல்லாத எழுத்து என்ற இரு கட்டங்களுக்கு மட்டும் முன்னேறும்போது அதை முதிர்வின் அடையாளமாகக் கருதலாம்.
அருமையான பதிவு ராஜி.
சந்தேக மனசு கொண்டவர்களாக இருந்தால் அந்த பெண் எழுத்தாளர் பேனாவை மூடி வைக்க வேண்டியதுதான்"
சரியான அனுபவ வரிகள்.
இனிய தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள்.
புத்தாண்டு வாழ்த்துக்கள் ராஜி. நேரம் கழித்து என்றாலும் சில விசயங்கள் எப்போதுமே புத்தம் புதிதாகவே இருக்கும். தர்ம வேள்வியைப் போல எழுதப்பட்ட இந்த பதிவை இன்னும் பத்து வருடம் கழித்து படித்தாலும் அன்றைய நிலைமைக்கு பொருத்தமாகவே இருக்கும் புத்தம் புதிதாய். ஏன் என்று பெண் எழுத்தில் தொடர்கிறேன். நன்றி. ராஜி
நல்ல பகிர்வு!
ராஜி மனதில் பட்டதை துணிசாலுடன் சொல்லி இருக்கீங்க. இதுவே பெண் எழுத்துக்கு வெற்றிதானே.
இந்த தைரியமும் துணிச்சலும் எப்படி வந்தது, எழுத்துக்குக் கிடைத்த அங்கீகாரத்தால் தானே.
பின்னூட்டமளித்த அனைவருக்கும் எனது நன்றிகள்
மிகச் சிறப்பாகத் தங்கள் கருத்துக்களை முன் வைத்துள்ளீர்கள். பாராட்டுக்கள்.
துணிச்சலோடு உங்களுக்கு பகிர வேண்டும் என்று தோன்றுவதை தைரியமாக பதிவு செய்ய முன்வர வேண்டும்...
இந்த உலகில் எந்த முயற்சிக்கு தான் எதிர்ப்பில்லை.. அவற்றையெல்லாம் புறந்தள்ளி உங்களின் முயற்சியை தொடருங்கள்...
வாழ்த்துகள் ராஜி...
திடீரென்று மறுபடியும் தமிழ்நாடு வந்ததால் தாமதமாகத்தான் உங்களின் 'பெண் எழுத்தை' படிக்க முடிந்தது ராஜி! நான் சுருக்கமாக எழுதியிருந்த கருத்தை நீங்கள் விரிவாக, தார்மீகக் கோபத்துடன் அலசியிருக்கிறீர்கள். என் மனமார்ந்த பாராட்டுக்கள்!!
நீங்கள் சொல்லியுள்ள கருத்துகள் அனைத்தும் சரியானவை. அற்புதமான பதிவு ராஜி.
Post a Comment