Tuesday, October 25, 2011

தனக்கென்று வந்துவிட்டால்..... (சவால் சிறுகதைப் போட்டி -2011)

ஆர்ப்பரித்த கடலின் முன் நின்று கால் நனைத்து யோசனையில் நின்றிருந்தார்  டி ஐ ஜி சூர்ய நாராயணன் என்னும் சூர்யா.நெற்றிப் பொட்டில் முடிச்சு விழுந்திருக்க பேன்ட் பாக்கெட்டிலிருந்து கோல்ட் ஃப்லேக் ஒன்றை உருவி வாயில் பொருத்தி பற்ற வைத்து ஒரு இழுப்பு இழுத்தார்.அங்கங்கே வெள்ளியோடியிருந்த முன் தலையைக் கோதினார்.

ஓவென்று இரைந்த கடலுடன் போட்டியிடுவது போல் நான்கைந்து சிறுவர்கள் கூச்சலெழுப்பி கும்மாளமிட்டுக் கொண்டிருந்ததை சற்று நேரம் பார்த்தார்.
'திவ்யாவும் இப்படித்தான்.கடலைக் கண்டால் குழந்தையாகி விடுவாள்'  மகளை  நினைத்துப் பார்த்தார்.கைபேசி கிணுகிணுக்க காதில் ஒற்றி, "சொல்லு கோகுல்!ஏதாவது தெரிஞ்சதா?" என்றார்.

"சார்!அடையாறிலேருந்து ராதாகிருஷ்ணன்னு ஒருத்தர் கார்த்தால வந்து கம்ப்ளெயின்ட் கொடுத்திருக்கார்.நேத்துலேருந்து அவர் பொண்ணைக் காணோமாம்"

"என்னய்யா?ஏற்கனவே இருக்கற குழப்பத்துக்கு நூல் ஏதாச்சும் கிடைச்சுதான்னு கேட்டா  நீ புதுசா எதையோ கொண்டு வந்து இல்ல நிறுத்தற?"

"இல்ல சார்!இது புதுசுன்னு நான் நினைக்கல.அதுக்கும் இதுக்கும்   தொடர்பிருக்கும்னுதான் எனக்குத் தோணுது"

"என்ன  சொல்றீங்க?"

ஆமா சார்! நீங்க நேர்ல வாங்க.பேசிக்கலாம்"

மௌனித்த கைபேசியை பீட்டர் இங்லேன்டின் சதுர அறையில் போட்டார்.

தூரத்தில் புள்ளியாய்த் தெரிந்த கப்பலை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்த போது பக்கத்தில் அசைவை உணர்ந்து திரும்பினார்.

விஷ்ணு நின்றிருந்தான். "வா! போன விஷயம் என்னாச்சு?"

"பேசியாச்சு சார்!அவங்க ஏற்கனவே சொன்னதுல உறுதியா இருக்காங்க.
மாற்றம் எதுவும் இல்லை.ஸோ அதுக்கான அரேஞ்ச்மென்ட் பண்ணியாச்சு.
நீங்க கவலைப் பட வேண்டாம்"

"என்னமோ நீ ஈசியா சொல்லிட்ட.நடக்கறதைப் பாத்தா அப்படியா இருக்கு.நாம போற ரூட் சரிதானான்னு குழப்பமாவும் இருக்கு.பட் வேற வழி இல்லை.நீ எதுக்கும் எப்பவும் அலர்ட்டா இருந்துக்கோ.எதானாலும் எனக்கு கன்வே பண்ணு இம்மீடியட்டா.மெசேஜ் அனுப்பித் தொலைக்காத புரிஞ்சுதா?"

"ஓக்கே சார்! நீங்க கிளம்புங்க.நான் பாத்துக்கறேன்"

விஷ்ணுவின் தோளில் தட்டி, "பீ கேர் ஃபுல் "  என்று நகர்ந்தார்.

செப்டம்பர் மாதத்தின் நான்காம் நாள் மாலை நேரம் , வெயிட்டர் இரண்டு டீ கோப்பைகளை கொண்டு வைத்து விட்டு நகரும் வரை அமைதி காத்து எதிரெதிரே அமர்ந்திருந்தனர்  சூர்யாவும் கோகுலும்.

"எப்பிடி பழைய கடத்தல் கேசுக்கும் இந்த ராதாகிருஷ்ணன் பொண்ணு கேசுக்கும் சம்பந்தம் இருக்குன்னு நீ நினைக்கற?"

சூர்யாவை உற்று நோக்கிய கோகுல், " சார்! இதுவரை ஏற்கனவே அஞ்சு பொண்ணுங்க காணாம போயிருக்காங்க.இந்த பொண்ணு ஆறாவது.ஆறுத்துக்கும் சில ஒத்துமைகள் இருக்கு.எல்லாருமே காலேஜ் பொண்ணுங்க.சம வயசு உள்ளவங்க.இவங்க எல்லாருக்குமே, டி வி கேம்பயரிங் பண்ற இன்ட்ரெஸ்ட் இருந்துருக்கு.எல்லாருமே அப்டி கேம்பயரிங் போகும்போதுதான் காணாம போயிருக்காங்க."
"அதுவும் இல்லாம இதுவரை யாரும் சாகலை அல்லது கொலை செய்யப்படலைன்னு உறுதியா சொல்ல முடியும்.ஏன்னா இந்த ஆறு பேரும் கடந்த மூணு மாசத்துல ஒவ்வொருத்தரா காணாம  போயிருக்காங்க. ஒருவேளை செத்துப்போயிருந்தாலோ அல்லது சாகடிக்கப் பட்டிருந்தாலோ இதுக்குள்ள ஒருத்தர் பாடியாவது கிடைச்சிருக்கும்.இதுவரை செக் பண்ணின கடைசி மூணு மாச டெட் பாடி பட்டியல்ல எதுவுமே இவங்களோடது இல்லை.
அடுத்ததா எல்லா ரெட் லைட் ஏரியாலயும் ரெய்ட் நடத்தி செக் பண்ணியாச்சு.
ஒருத்தர் கூட சென்னை,பாம்பே,கல்கத்தா,கோவான்னு எங்கயுமே கிடைக்கல. எல்லாருமே வசதியான குடும்பத்தைச் சேர்ந்தவங்கதான்.மேலிடத்துல பிரஷர் அதிகமா இருக்கறதால இதுல முழு முனைப்பும் காட்டியிருக்கு"

"ஒருவேளை ஆறு பேருக்கும் அல்லது ஆறு பேர் ஃபாமிலிக்கும் பொதுவான எதிரி யாராச்சும் இருப்பாங்கன்னு நினைக்கறீங்களா?"

"இல்ல சார்!அந்த ஊகத்தின் அடிப்படையிலயும் பாத்தாச்சு.எல்லாரோட ஃபாமிலியும், நட்பும்  ஒண்ணுக்கொண்ணு எந்த தொடர்பும் இல்லாம இருக்கு.
மொழி ,இனம்னு இப்பிடி எல்லா அடிப்படையிலயும் பாத்தாச்சு.தனிப்பட்ட குடும்ப பகையும் நோண்டிப் பாத்தாச்சு"

"சரி!மேலே என்ன பண்றதா உத்தேசம்?"

"விஷ்ணு கிட்டேருந்து ஏதும் தகவல் வருதான்னு வெயிட் பண்றேன் சார்!
அதுக்கப்பறம்தான் என்ன பண்றதுன்னு முடிவு பண்ண முடியும்.பட் சின்னதா
ஒரு க்ளூ கிடைச்சிருக்கு.அது சரிதானான்னு கன்ஃபர்ம் பண்ணிக்கிட்டு உங்க கிட்ட சொல்றேன்"



செப்டம்பரின் எட்டாம்  நாள் அந்திப் பொழுது, சூர்யா மேசையில் முழஙகை ஊன்றி தலையைக் கையில் தாங்கி அமர்ந்திருந்தார்.மேசை மீது முதல் நாள் கோகுலின் பர்ஸ்லிருந்து கீழே விழுந்து தான் எடுத்த துண்டுச் சீட்டு இருந்தது.
அதனருகில் விஷ்ணு தனக்கு அனுப்பிய துண்டு சீட்டும் இருந்தது.மேசை மீதிருந்த ஸ்கேலைக் கையால் நகர்த்தி விட்டு இரண்டு சீட்டையும் எடுத்துப் பார்த்தார்.
கோகுலிடமிருந்து எடுத்த சீட்டில் இருந்த, mr. கோகுல் என்ற வாசகத்தை  தொடர்ந்த குறியீடு S W H2 6F என்று  அவரைக் குழப்பியது.ஆனால் விஷ்ணு தனக்கு அனுப்பிய Sir,  எஸ்  பி கோகுலிடம் .............  என்ற சீட்டு தெளிவாகவே இருந்து , விஷ்ணு ஏன்  கோகுலைக் குழப்பி இருக்கிறான் என்பதை தெளிவூட்டியது.இது என்ன குறியீடு என்று யோசிக்கும் போதே கையில் இருந்த
கைபேசி கவனத்தை ஈர்த்து ஓசையெழுப்பி, Vishnu Informer என்று காட்டியது.

"சொல்லுப்பா!இது என்ன கோகுலுக்கு ஏதோ குறியீடு அனுப்பித் தொலச்சுருக்க?"

"சார்!அதான் தெளிவா உங்களுக்கு ஒரு சீட்டும் அனுப்பிருக்கேனே.அது தவறான குறியீடுன்னு.அப்படிச் செய்யலைன்னா கேஸ் இன்னும் டீடெய்லா போகும் சார்! "

"தேங்க்ஸ் விஷ்ணு! கோகுலை நல்லாத்தான் குழப்பிருக்க"

"குழம்பினது நான் இல்லை சார்!நீங்கதான்"  சத்தம் வந்த திசையில் திரும்பினார்.பின்னால் கோகுல் நான்கு கான்ஸ்டபிள்களுடன் நின்றிருந்தான்.

"கோகுல்!என்ன இது?"

"நீங்கதான் சார் சொல்லணும்.விஷ்ணுவை வச்சு நீங்க பண்ணின ப்ளானை"

..........................

"ஓ!சொல்ல மாட்டீங்களா?ஓக்கே அப்ப விஷ்ணுவே சொல்வான்.வாப்பா உள்ள"

உள்ளே நுழைந்த விஷ்ணுவைப் பார்த்து திகைத்தார்.

"என்ன சார் பாக்கறீங்க? நான் மாட்டி விட்டேனேன்னா?இல்லை சார்!நான் உங்களை தப்பு செய்யறதுலேருந்து காப்பாத்திருக்கேன் கோகுல் சார் உதவியோட.உங்களை மட்டும் இல்லை உங்க பொண்ணையும் அப்பறம் அந்த கடத்தப் பட்ட ஆறு  பொண்ணுங்களையும்"

"என்ன சார் அப்படி திகைச்சுப் போயி நின்னுட்டீங்க?விஷ்ணு சொல்றது புரியலையா? நான் முதலேருந்து சொல்றேன்.ஏற்கனவே மூணு  மாசமா
காணாம போன அஞ்சு பொண்ணுங்க, ராதாகிருஷ்ணன் பொண்ணு இப்பிடி
எந்த கேஸ்லையும் என்னைக் கண்டு பிடிக்க விடாம குழப்பினாதான் உங்க பொண் திவ்யாவை விடுவோம்னு உங்க பொண்ணையும் பிடிச்சு வச்சுக்கிட்டு மிரட்டினாங்களே அந்த கும்பலை பிடிச்சாச்சு"

"என்ன பிரமிச்சு போயிட்டீங்க?கோகுல் சார் சொல்றதை நம்ப முடியலையா?
உங்க கூட ஒத்துழைக்காம நான் இருந்திருந்தா எனக்கு பதிலா வேற இன்ஃபார்மர் வச்சுருப்பீங்க.எதையும் கண்டு பிடிக்க முடியாம போயிடும்னு நான் உங்களுக்கு ஒத்துழைக்கறாப்ல நடிச்சேன்.அப்டி செஞ்சதாலதான்  அந்த கும்பல்ல ஒருத்தன் கிட்டேருந்து குறியீடு கிடைச்சது.அதன் படி S -september
W - Wales Ship H2 - H (8th letter)  2  o clock 6F - 6 Female அப்படிங்கறதை கோகுல் சார் மண்டையை உடைச்சுக்கிட்டு கண்டு பிடிச்சார்.செப்டம்பர் மாசம் Wales ship ல
8ம் தேதி 2 மணிக்கு ஆறு பெண்களை கடத்தறாங்கன்னு  கண்டு பிடிச்சு அவங்களை வளைச்சுப் பிடிச்சாச்சு"

"அவங்களுக்கு உங்க சுயநலத்துக்காக ஒத்துழைப்பு கொடுத்ததை உங்க வாயால நீங்க ஒத்துக்கணும்கறதுக்காகதான் இப்ப விஷ்ணு உங்க கிட்ட ஃபோன்ல பேசி நடிச்சார்"

சூர்யா  கலங்கின கண்களுடன்,  "நான் மாட்டிண்டதுக்காக  கண் கலங்கலை.என் பெண்ணோட மற்ற பெண்களையும்  காப்பாத்திட்ட நீ.அதனால  நிம்மதில வர ஆனந்தக் கண்ணீர் இது " என்றபடி கைகளை விலங்கிற்கு நீட்டினார்.


டிஸ்கி: இந்த சிறுகதை "சவால் சிறுகதைப் போட்டி - 2011" க்காக எழுதப்பட்டது.

Wednesday, October 19, 2011

தலைமுறைக் கல்வி

விர்ரென்று பறந்து வந்த கல் ராகவனின் தோளை உரசிச் சென்றது.திடுக்கிட்டு திரும்பிப் பார்த்தார்.இவ்வளவு பெரிய கடை வீதியில் அது எங்கிருந்து வந்ததென பார்க்கும்போதே சில இளைஞர்கள் திபு திபுவென ஓடினர்.அவர்கள் கையில்  கட்டை, கம்பு என்று ஆளுக்கு ஒரு ஆயுதம் இருந்தது.எதிரே பார்த்தவற்றை எல்லாம் அடித்து நொறுக்க ஆரம்பித்தார்கள்.

கடைவீதியில் கூச்சல் குழப்பம் என ஒரே களேபரம்.கடைகள் படீர் படீரென அறைந்து சாத்தப் பட்டன.தள்ளுவண்டிக்காரர்கள் அவசர அவசரமாக வண்டியுடன் ஓட்டம் பிடிக்க ஆரம்பித்தனர்.வேகவேகமாக ஆண்களும் பெண்களும் குழந்தைகளை அள்ளிக் கொண்டு அங்குமிங்கும் ஓடி மறைந்து கொண்டிருந்தனர்.ராகவனும் சட்டென்று அருகிலிருந்த பிள்ளையார்
கோவிலுக்குள் சட்டென நுழைந்தார்.அவரைப் போலவே  இருவர் கோவிலுக்குள் ஓடி வந்து ஒளிந்து கொண்டனர்.

அதற்குள், அங்கு வந்த பஸ் கல்லடியால் நொறுங்க ஆரம்பிக்க பயணிகள் தப்பித்து ஓட ஆரம்பித்தனர்.அந்த இடமே யுத்த பூமி போல் காட்சியளித்தது.

"ஏதாவது கோஷ்டிப் பூசலா?"  ராகவன் அருகிலிருந்தவரிடம் சன்னமான குரலில் வார்த்தைகளை தடுமாற்றமாக வெளியிட்டார்

"இல்ல சார்!ஏதோ ஸ்டூடன்ட் ப்ரச்சனையாம்"  என்றார் ஒருவர்

"வாத்தியார் ஏதோ பையனை அடிச்சுட்டாராம்.மன்னிப்பு கேக்கணுமாம்.அதுக்கு
பப்ளிக் என்ன செய்வாங்கன்னு இல்லாம ஆர்ப்பாட்டம் பண்றாங்க" என்றார் மற்றொருவர்.

தழைந்த குரலில் சம்பாஷிக்கும் போதே சிறிது நேர களேபரத்திற்குப் பின் காவல்துறை  வந்து கலவரம் செய்தவர்களை அள்ளிக் கொண்டு சென்றது


ரகளை அடங்கியதும் மூவரும் மெதுவாக வெளியே வந்தனர்.தெரு வெறிச்சோடிக் கிடந்தது.கால் வைத்து நடக்க முடியாமல் கல்லும் கட்டைகளும் கண்ணாடிச் சிதறல்களுமாய் காட்சியளித்தது.சற்று முன்
காய்கறிகளும், பழங்களும், இதர சாமான்களும் விற்றுக் கொண்டும், வாங்கிக் கொண்டும் வருவோரும் போவோருமாய் இருந்த தெரு தலைகீழாய் மாறியிருந்தது.ரத்தத் துளிகளும் அறுந்த செருப்புகளுமாய் அலங்கோலமாய் இருந்தது.
சிந்தனையுடன் ராகவன் நடக்க ஆரம்பிக்க மற்ற இருவரும் பேசிக் கொண்டே நடந்தனர்."இந்த மாதிரி இளைஞர்களை நம்பி நாடு காத்திட்டிருக்கு.என்ன செய்ய?" என்ற புலம்பலுடன் நடந்தனர்.
ராகவன் எதிரில் வந்த ஆட்டோவை நிறுத்தி ஏறிக் கொண்டார்.ஆட்டோ வளைந்தும்  நெளிந்தும் சிதறிக் கிடந்த பொருள்களுக்கிடையே சென்றது.

"உருப்படாத பயலுக.என்ன சாமி!ரொம்ப பயந்துட்டீங்களா?" என்று திரும்பிப் பார்த்து கேட்டான் அந்த டிரைவர்.

ராகவன் ஒரு பெருமூச்சுக்குப் பின் "இதனால இவங்களுக்கென்ன லாபம்?"
எத்தனை சேதம் பாரு" என்றார்

"லாப நஷ்டமெல்லாம் பாத்தா இதெல்லம் நடக்குது?எவனும் எங்களை எதுவும் செய்யக் கூடாது.மீறி செஞ்சா இப்பிடித்தான்னு இவனுகளுக்கெலாம் ஒரு தெனவு"

"நல்லாதான் பேசறப்பா"

"படிக்கற இவனுங்க என்னத்த கத்துக்கிட்டானுக.படிக்காத ஆளுக என்ன சீரழிஞ்சுட்டாங்க? நடத்தை நல்லா இருந்தாதான் சாமி எதுவுமே.இவனுகளைச் சொல்லிக் குத்தமில்லை சாமி,சுத்தி இருக்கற உலகம் அப்டி இருக்கு.பணத்தைக் கொடுத்து காலேஜ்ல சீட் வாங்கிடறாங்க.படிப்பையே விலைக்கு வாங்கிட்டோம்.பாடம் சொல்லித் தரவன் எம்மாத்திரம்னு தோணிப் போகுது.அவனை காசு கொடுத்து வாங்க முடியாட்டி இருக்கவே இருககு அடுத்த ஆயுதம் வன்முறை.எனக்கு வேணுங்கறது வேணும்.மத்ததை பத்தி கவலை இல்லைனு ஆயிட்ட உலகத்துல வேறென்ன கத்துக்க முடியும் இவங்களால?"

"அப்பல்லாம் திண்ணைப் பள்ளிக் கூடத்துலயும் அரசாங்கப் பள்ளிக் கூடத்துலயும் படிப்பை காசு வாங்காம கல்வியை சேவையா சொல்லி குடுத்தாங்க.வாத்தியார்களும் வாங்கற சம்பளத்துக்கு வஞ்சனை இல்லாம உழைச்சாங்க.பசங்களும் வாத்தியாரை தெய்வமா மதிச்சு கத்துக்கிட்டாங்க.இப்ப எல்லா இடத்துலயும் பள்ளிக்கூடம்,எங்க போனாலும் காசு, சிபாரிசு.இப்பிடிக் கிடைக்கற கல்வியால ஒரு விஷயத்தை எந்த வழில வேணா அடையலாம்னு வெறிதான் வளருது".

"அப்டின்னா இவங்க கத்துக்க நல்ல விஷயங்களே இல்லைனு சொல்றியாப்பா?
எல்லா மாணவர்களும் இப்டி இருக்கறதில்லையே.நல்லா படிச்சு முன்னுக்கு வரவங்களும் இருக்கதானே செய்யறாங்க?"

"உண்மைதாங்க.ஆனா நல்லா படிக்கறா எத்தனை பேர் சுய நலமில்லாம இருக்காங்க?கல்வியை நல்லா படிச்சா மட்டும் என்னங்க பிரயோசனம்?வாழ்க்கையை நல்லா படிக்க வேணாவா?.எத்தனை பேர் மனித நேயத்தை உணர்ந்து நடக்கறாங்க?அதுல எத்தனை பேர் அடுத்தவனுக்கு உதவ தயாரா இருக்கான்?காசு பணத்தால இல்லாட்டியும் கூட உடம்பாலயாச்சும் உபகாரம் பண்றவங்க எத்தினி பேரு சாமி?அடிதடி  பண்றது மட்டும் வன்முறை இல்லை சாமி!அடுத்தவன் வலி தெரிஞ்சும் அலட்சியப் பண்றதும்
வன்முறைதான்"

"என்னப்பா சொல்ற?"

"ஆமா சாமி!இப்பல்லாம்  டாக்டருக்குப் படிக்கணும் இஞ்சினியரிங் படிக்கணும்,இதைப் படிச்சா இப்பிடி சம்பாதிக்க முடியும்னு கணக்குப் பண்ணி படிக்கறதுதான் படிப்பாயிருச்சு.ஸ்கூல் எல்லாம் எங்க ஸ்கூல் இவ்வளவு மார்க்னு மார் தட்டிக்குது.வீட்லயும் இத்தனை மார்க் எடுத்தா இதுல சேரலாம்னு பசங்களை கட்டாயப் படுத்தறாங்க.இதுல எங்கேருந்து அடுத்தவன் வலியை புரிஞ்சுக்க சொல்லித் தராங்க?"

"அப்டின்னா இப்பிடி படிச்சவங்க எல்லாம் நல்ல வாழ்க்கை முறையை கடைப் பிடிக்கறதில்லங்கறயா?"

"ஒட்டு மொத்தமா சொல்லிட முடியுமா சாமி.பயிருக்கு நடுவுல களை இருந்தா பிடுங்கிறலாங்க.களைகளுக்கு நடுல பயிர் இருந்தா அது கெடுதல் இல்லீங்களா?இப்ப இந்த பயலுக இப்டி நடக்க காரணம் அடுத்தவன் வலியை புரிஞ்சுக்க சரியான வயசுல சரியான நேரத்துல சொல்லித் தராததும் கத்துக்காததும்தான?"

"நீ ஸ்கூலுக்கு போயிருக்கயாப்பா?ஏதாச்சும் படிச்சுருக்கயா?"

"ஒன்பதாவது  வரை படிச்சுருக்கேன்.அப்பறம் அப்பா தவறிட்டாரு.உடம்பு சரியில்லாத அம்மா,ரெண்டு தங்கச்சிங்க,ஒரு தம்பின்னு குடும்பத்தை கரையேத்த தொழிலுக்கு வந்துட்டேன்.ஏன் சாமி கேக்கறீங்க?"

:நல்லா பேசறயே.படிச்சுருந்தா நல்லா வந்திருப்ப.அதான் கேட்டேன்"

"இப்ப என்ன குறைஞ்சுட்டேன் சாமி!குடும்பத்தை காப்பாத்தற அளவு வருமானம் வருது.அடுத்தவனுக்கு கெடுதல் பண்ணக் கூடாதுன்னு நினைக்கற அளவு கல்வியறிவு இருக்கு.சின்ன வயசுல ரங்கசாமி வாத்யாருன்னு ஒருத்தர்
சொல்லிக் கொடுத்த கல்வியறிவுலதான் நான் என் வாழ்க்கையை வாழறேன்"

ராகவன் சின்ன திடுக்கிடலுடன், "என்ன பேரு சொன்ன?ரங்கசாமி வாத்தியாரா?தமிழ் வாத்தியாரா?"

"அவரை உங்களுக்கு தெரியுங்களா?"

"தெரியும்பா.அவர் பிள்ளைதான் நான்"

சட்டென்று ப்ரேக் அடித்து விழி விரிய,  "நிசமா சாமி!" என்று கும்பிட்டான்.

அவன் தோளில் தட்டிக் கொடுத்து "ஆமாம்.இந்தாப்பா பணம்.நான்  இங்கதான் இறங்கணும்" என்று வண்டியை விட்டிறங்கி வீட்டிற்குள் நுழைந்தார்.

அவன் சிலையாய் நிற்க, உள்ளே அவரை வரவேற்க செய்தி காத்திருந்தது.அவரது அருமைப் புதல்வன் ரங்கேஷ் கடைவீதியில் காவல்துறையினரால் கைது செய்யப் பட்டான் என்று.


டிஸ்கி : இந்த சிறுகதை "வல்லமை தீபாவளி மலரில்" வெளி வந்துள்ளது.
வல்லமையினருக்கு எனது நன்றிகள்.

Tuesday, October 18, 2011

தாய் உயிர்

Golder Retriever Puppies With Mother


ஒரு வாரமாயிற்று சாந்தியை அட்மிட் செய்து. இது எட்டு முடிந்து ஒன்பதாம் மாதம் ஆரம்பம். லேசாக வலி வந்து கொண்டே இருக்க டாக்டரிடம் வந்ததில்,  'கர்ப்பப்பை கொஞ்சம் 'வீக்கா' இருக்கு.அவங்க பெட் ரெஸ்ட்ல இருக்கணும்.இங்கயே அட்மிட் பண்ணிடுங்க.எப்படியும் இன்னும் பத்து பதினஞ்சு நாள்ல டெலிவரி ஆயிடும்.கூடுமானவரை நார்மல் டெலிவரி ட்ரை பண்லாம்' என்றார்.

ஏழாம் மாதம் முதலே அவளுக்கு ஏதோ ஒன்று மாற்றி ஒன்று தொந்தரவு.
அப்போதிலிருந்தே கர்ப்பப்பை உறுதியாக இல்லை என்று ஏதேதோ ஊசிகள், மாத்திரைகள் சமயத்தில் ட்ரிப்ஸ் என்று போய்க் கொண்டிருக்கிறது.அவளுக்கு இது இரண்டாம் பிரசவம்.எப்படியோ நல்லபடி பெற்று எழுந்தால் போதும்.

"அப்பா! அப்பா! இங்க வாயேன்.இங்க வந்து பாரேன் சீக்கிரம்" என்ற ப்ரணவின் குரலில் கலைந்த சுதாகர், "என்னடா கண்ணா?இது ஹாஸ்பிடல்.இங்கல்லாம் இப்படி சத்தமா பேசக் கூடாதுடா" என்றான்.

"நீ இங்க வந்து பாரு முதல்ல"  கை பிடித்து இழுக்காத குறையாய் சுதாகரை ஆஸ்பித்திரி வாசலுக்கு அழைத்துச்  சென்றான்.

அங்கே நாய் ஒன்று ஐந்து குட்டிகளை ஈன்றிருந்தது.பிஞ்சு பிஞ்சாய் சின்ன சின்ன மூட்டைகளாய் கலர் கலராய் தாயை ஒட்டி குவிந்திருந்த அவற்றை காமிக்கத்தான் இந்த பரபரப்பு ப்ரணவிற்கு.

கறுப்பும் வெள்ளையுமாய் ஒன்று.சிவப்பும் வெளுப்புமாய் ஒன்று.கறுப்பாகவே ஒன்று,வெள்ளையாகவே ஒன்று.செம்மண் கலரில் ஒன்று என உய்ங் உய்ங் என்று சப்தம் செய்து கொண்டு அம்மாவிடன் கதகதப்பில் சுருண்டு கொண்டிருந்தது.

மழை லேசாக தூற ஆரம்பிக்கவும் எதிரில் கடை வைத்திருந்த ஆள் வந்து ஒரு பலகையை அவற்றிற்கு மறைப்பாய் வைத்து பால் வைத்து விட்டுப் போனான்.

"அப்பா!நம்ம வீட்டுக்கு ஒண்ணு எடுத்துக்கலாமா? ப்ளீஸ்"



"இல்லை கண்ணா நம்ம வீட்டுக்கே குட்டிப் பாப்பா வரப் போறதே,நீ அதோட விளையாடலாம்"

"அப்பா! ப்ளீஸ்ப்பா....!ப்ளீஸ் ஒண்ணே ஒண்ணு எடுத்துக்கலாமே ப்ளீஸ்"


அப்போதைக்கு ப்ரணவை சமாதானம் செய்ய, "சரி.பட், கொஞ்சம் நல்லா
கண் முழிக்கட்டும்.ரெண்டு நாள் கழிச்சு எடுத்துக்கலாம் ஓக்கேவா?"

"ஹை!சரிப்பா" சந்தோஷ துள்ளலுடன் அம்மாவிடம் கூற உள்ளே ஓடினான்.

இரவு சாந்தியின் அம்மா வருவார் துணைக்கு. சுதாகர் வீட்டிற்கு கிளம்பினான்.லீவு இன்னும் நாலு நாள்தான்  எடுக்க முடியும்.நாளையிலிருந்து ஆஃபீஸ் செல்ல வேண்டியதுதான்.அப்பொழுதுதான் டெலிவரி சமயத்தில் வசதியாக இருக்கும்.

இரண்டு நாள கழித்து வந்த வார விடுமுறையில் பிள்ளையை அழைத்துக் கொண்டு பகலில் ஆஸ்பித்திரிக்கு  கிளம்பினான் சுதாகர்.

"அப்பா!ரெண்டு நாளாயிடுத்து.இன்னிக்கு நாய்க்குட்டி கண் முழிச்சுருக்குமா?"

"பாக்கலாம்"

ஆஸ்பித்திரி உள்ளே நுழையும் போதே வாசலில் நாயும் குட்டியும் இருந்த இடத்தை சுற்றி கூட்டம்.சுதாகர் எட்டிப் பார்த்தான்.மறைப்பு பலகையைக் காணோம். ஐந்து குட்டியில் ஒன்றைக் காணவில்லை.மீதி நான்கில் வெள்ளைக் குட்டி படுத்திருந்த கோணியை வாயால் இழுத்து காலால் தள்ளி பிரட்டி என்று என்னவோ பண்ணிக் கொண்டு கவிழ்ந்து விழுந்தது.

பெரிய நாயோ சுற்றி சுற்றி வந்து அரற்றியது.வாயால் ஒவ்வொரு குட்டியாய் கவ்வி கவ்வி எங்கோ எடுத்துச் சென்று மீண்டும் வந்து இன்னொரு குட்டியை கவ்வி கொண்டு சென்றது

"என்னாச்சுங்க?"  எதிர் கடை ஆளிடம் கேட்டான்.

"அந்த மறைப்பு பலகையை எவனோ   கொண்டு  போய்ட்டான். அதுக்கப்பறத்துலேருந்து  அந்த கறுப்பு குட்டியை காணோம் சார்.குட்டியைக் காணோம்னு இது பரிதவிக்குது.மீதி குட்டியை ஒளிச்சு வச்சுட்டு வருது.
பாக்க பாவமா இருககு.எந்த உயிரா இருந்தா என்ன? தாய் தாய்தான் சார்"

சுதாகர் ப்ரணவை திரும்பிப் பார்த்தான்.அவன் முகம் சுருங்கி இருந்தான்.

மதியம் மூணு மணி இருக்கும்.சாந்திக்கு வலி அதிகமாகி வேறு வழி இல்லாமல் சிசேரியன் செய்து குழந்தையை எடுத்தார்கள்

பிஞ்சுக் குழந்தையை சாந்தியின் அம்மா மடியில் வைத்துக் கொண்டிருக்க
ப்ரணவ் அதையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தான்.

"என்னடா, அப்படிப் பாக்கற?தங்கச்சி பாப்பாடா.இது நமக்குத்தான்"

ப்ரணவ் அமைதியாகவே இருந்தான்

"என்ன கண்ணா? என்னாச்சு? என்றான் சுதாகர்.

"நம்ம பாப்பாவை யாராச்சும் எடுத்துட்டு போனா நமக்கு
எப்பிடி இருக்கும்? அது தெரியாம நான் நாய்க்குட்டிக்கு ஆசைப்பட்டேனே.
பாவம்.அது எப்படி கஷ்டப் பட்டுச்சு? யாருப்பா எடுத்திருப்பா? நாம கண்டு பிடிச்சு குடுக்கலாமாப்பா? " கண்ணீருடன் கேட்கும் குழந்தையை அணைத்துக் கொண்டான் சுதாகர்.

Monday, October 17, 2011

சரம் சரமாம் வலைச்சரம்

இன்னிக்குலேருந்து ஒரு வாரத்துக்கு வலைச்சரத்துல என் கச்சேரி இருக்கு.எல்லாரும் வந்து கேட்கும்படி (படிக்கும்படி) அழைக்கிறேன்.
விமர்சனங்களும் அவசியம்.

http://blogintamil.blogspot.com/2011/10/blog-post_17.html  - திங்கள் அறிமுகம்

http://blogintamil.blogspot.com/2011/10/blog-post_18.html - செவ்வாய் ஸ்வரம் 'ஸ'

http://blogintamil.blogspot.com/2011/10/blog-post_19.html - புதன் ஸ்வரம் 'ரி'

http://blogintamil.blogspot.com/2011/10/blog-post_20.html - வியாழன் ஸ்வரம் 'க'

http://blogintamil.blogspot.com/2011/10/blog-post_21.html - வெள்ளி ஸ்வரம் 'ம'

http://blogintamil.blogspot.com/2011/10/blog-post_22.html - சனி ஸ்வரம் 'ப'

http://blogintamil.blogspot.com/2011/10/blog-post_23.html - ஞாயிறு ஸ்வரம் 'த'  'நி'

எல்லா லிங்க்குக்கும் சென்று படித்து விட்டு கருத்துக்களைக் கூறவும்

Friday, October 7, 2011

மௌனத்தின் விடியல்

கும்மிருட்டில் முள் நகர்த்தி
குரல் தரும் கடிகாரம்,

மேலே ஓடும் மின்விசிறியின்
மெல்லிய ஓசை,

எங்கோ எதற்கோ குரல்
எழுப்பி அழும் குழந்தை,

எந்த சத்தமானால் என்ன?
எதுதான் உன்னுடைய
மௌனத்தை மொழி பெயர்க்கும்?

நீண்ட இரவுக்குப் பின்
நீளும் சூரியக்கதிருக்காய்
நிதமும் காத்திருப்பது போல்,

நீயும் உன் வார்த்தைக்கதிர்
நீட்டி ஒளி தருவாய் என
நானும் காத்திருப்பேன்.


இந்த கவிதை 'வல்லமையில்' செப்.26 அன்று வெளியாகி உள்ளது