Monday, September 16, 2013

அதீதம் செப்டம்பர் மாத இதழில் வெளியான எனது கதை! அதீதம் குழுவினருக்கு எனது நன்றிகள்!

                                                
                                                    அப்பாவின் சட்டை


வண்டியை நிறுத்தும் இடத்தில் அவன் உட்கார்ந்திருந்தான்.கீற்றுக்களை வேய்ந்து சின்ன குடிசை அமைப்பில் கழிகளை முட்டுக் கொடுத்து நான்கடிக்கு ஐந்தடி கணக்கில் இடம் அமைத்து ஒரு கோணிப்பையை  சிம்மாசனமாக கொண்டு அமர்ந்திருந்த அவனைப் பார்த்தாலே யாரென்று அடையாளம் கண்டு கொள்ளும்படி அருகில் செருப்புகளும் தைக்கும் ஊசிகள் நூல்களுமாய்.இடுப்பில் மட்டும் யாரோ எப்போதோ தந்திருக்கும் வாய்ப்புடைய பர்முடாஸ் அங்கங்கே கிழிய ஆரம்பித்திருந்தது.

ஆஸ்பித்திரி வாசலில் இதையெல்லாம் எப்படி அனுமதிக்கிறார்கள்  என்று எண்ணிக் கொண்டே  நுழைந்தேன்.இடது புறம் திரும்பி வலப்பக்கம் திரும்பச்  சொல்லி போட்டிருந்த ஐசியூவுக்கான அடையாள அம்புக்குறிகளை  அபாயக் குறிகளாக உருவகித்தவாறே திரும்பினேன்.கண்ணாடிக்கதவுகளை தள்ளிக் கொண்டு சென்று கட்டிலின் அருகே மௌனமாய் நின்றேன்.
“அப்பா!”
………………………….
”அப்….பா…..!”   ம்ஹூம்! அசைவில்லை.சலனமற்றுப் படுத்திருந்தவரின் வாயில் ட்யூபும் மூக்கில் மாஸ்க்கும் இன்று நான்காவது நாளாகத் தொடர்கிறது.கைகளில் ட்ரிப்ஸுக்காக குத்தியிருந்த ஊசிகள்  அவருக்கு வலித்துக் கொண்டிருக்குமா? தெரியாது! நரம்புகள் புடைத்துக் கொண்டு தெரிந்த கைகள் மெலிந்திருந்தன.
“அப்பா! உன் கை மட்டும் எப்பிடி இரும்பு மாதிரி இருக்கு?ஏன் எனக்கு அப்பிடி இல்ல?”
” நீ குட்டிப்பையன் இல்லையா? அப்பா மாதிரி வளர்ந்து பெரியவனானப்பறம் உனக்கும் கை அப்படித்தான் இருக்கும்”  உயரத் தூக்கி சொல்லி சிரித்த அப்பா மனதில் ஃப்ளாஷ்  அடித்தார்.
“சார்!ப்ளீஸ் யுவர் டைம் ஓவர்.வெளிய இருக்கீங்களா? “  நர்ஸ் கருமமே கண்ணாயினள்.
வெளியில் வந்து அமர்ந்த நேரம் ஜன்னல் வழியே அப்போதுதான் பெய்ய ஆரம்பித்த மழையை பார்த்துக்கொண்டு ஆழமாக மூச்சை இழுத்தேன்.திடீரென்று செருப்பு தைப்பவனின் முகம் நினைவில் வர எழுந்து வந்து பார்த்தேன். குறுகிப் போய் உள்ளுக்குள்  அமர்ந்திருந்தான்.
மழை வலுத்தது. அப்பாவின் மூச்சுத் திணறல் அதனுடன் போட்டியிட ஆரம்பித்தது.இரவு முழுக்க நடந்த போட்டியில் அப்பா மழையிடம் தோற்றார்.
“மொட்டை மாடிக்கு இப்ப என்ன போறது? இருட்டிண்டு வரது”  அம்மாவின் தடை உத்திரவு
“அதனால்தாண்டி மொட்டை மாடிக்கே போறேன்.மழையைப் பாத்து என்ன பயம்?அதுல கரையணும்.அது கிட்ட தோக்கணும்.அந்த சுகானுபாவமே தனி”
பிடித்த விதமே தோற்றார்.கண் திறந்து ஒரு முறை பார்த்திருக்கலாம்.ஆதங்கமும் துக்கமும் உள்ளிருக்கும் வேதனையை தொண்டைக் குழிக்கு தள்ள குலுங்கிய உடம்புடன் அப்பாவைத் தொட்டு தடவினேன்.
”சார்! கண்ட்ரோல் யுவர்செல்ஃப்! உங்க கஷ்டம் புரியுது.என்ன செய்ய முடியும்? சரி!கொஞ்சம் வெளிய இருந்தீங்கன்னா …….வந்து… நாங்க பாடியை ஷிஃப்ட் பண்ண அரேஞ்ச் பண்ணனும்.ப்ளீஸ்! கோ ஆப்பரேட் பண்ணுங்க”
விழியின் நீரை துடைத்து எழுந்தவனிடன், “இது அவர்  ஷர்ட்” என்று நீட்டியதை வாங்கி வெளியில் வந்தேன்.ஜன்னலின் வழியே தெரிந்த அந்த கீற்று கொட்டகையில் நின்று போயிருந்த மழையின் ஈரம்சொட்டிக் கொண்டிருந்தது.அவன் கைகளை குறுக்கி சுவற்றில் சாய்ந்து குளிரை சமாளித்துக் கொண்டிருந்தான்.
”ஏம்பா!எப்பயுமே வெள்ளைச் சட்டை போட்டுக்கற? மத்தவா மாதிரி கலர் சட்டைலாம் போட்டுக்க மாட்டயா?”
“அதுவாடா தம்பி! அப்பா இன்னும் சின்னவனா இருந்தப்ப மாத்திப் போட்டுக்க சட்டைலாம் கிடையாது.எப்பயுமே வெள்ளைச் சட்டை ஒண்ணுதான் உண்டு.போக போக அதுவே பழகிடுத்து.தவிர வெள்ளைச் சட்டை போட்டுக்கறச்சயே  மனசுல அழுக்கு சேத்துக்கப் படாதுன்னு தோணும்.அதான்”  கையிலிருந்த அப்பாவின் வெள்ளைச் சட்டை உறுத்தியது.
விறுவிறுவென்று எழுந்து சென்று சட்டையை செருப்பு தைப்பவனின் உடம்பில் போர்த்தினேன்.அவன் விழியில் மழையின் மிச்ச அடையாளம்.
அப்பாவின் சட்டை தகனத்திற்கு தயாராயிற்று, வெற்று மார்பாய் முகம் மட்டும் புன்னகை மாறாமல்.

Thursday, August 15, 2013

கணினியாயணம் !!

நீ........ண்ட   இடைவெளிக்குப் பின் அனன்யாவின் தட்ட இயலாத அழைப்பின் பேரில் நானும் வலைப்பக்கம் வந்துட்டேன் .என்னையும் கம்ப்யூட்டர் சம்பந்தமான அனுபவங்களை பகிர சொல்லி கூப்பிட்ட ஆல் இன் ஆல்  அனன்யாவுக்கு வந்தனங்கள்,நன்றிகள் !

1986 ம் வருடம்.மகாகவி பாரதியார்  நினைவு நூற்றாண்டு பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த சமயம். "நம்ப ஸ்கூல்க்கு கம்ப்யூட்டர்  வரப் போறதாம்.கம்ப்யூட்டர் சயின்ஸ் க்ருப் பசங்களுக்காக" , ஒரு நாள் லஞ்சில் சிநேகிதி சொன்னதும் எல்லாருக்கும் ஒரே ஆர்வம்.

கம்ப்யூட்டர் வந்த திருநாளும் வந்தது.லைனில் எல்லாரையும் நிற்க வைத்து ஐந்து ஐந்து பேராக ரூமுக்குள் அனுப்பி வைத்தார்கள்(ஏ  சி ரூமுக்குள் கும்பல் சேர்க்கக் கூடாதாம்).வெள்ளையாய் கருப்பு மானிட்டருடன் டேபிள் மேல் கம்பீரமாய் உட்கார்ந்திருந்தது. டேபிள் கீழே இருந்த செவ்வக வெள்ளை டப்பாவை சி பி யு  என்றும் கரிய மாணிக்கப் பெருமாள் போல் இருந்த வஸ்துவை யு பி எஸ் என்றும் அறிமுகம் செய்து வைத்தார்கள்.அத்துடன் கம்ப்யூட்டருடன் ஆனா இண்ட்ரோ முடிந்தது.

அடுத்த நாள் லஞ்சில் கம்ப்யூட்டர் என்னும் நூதன வஸ்துவைப் பற்றிய டிஸ்கஷன் மட்டுமே பிரதான இடம் வகித்தது."நம்மையெல்லாம் தொட்டுப் பாக்க கூட விடலையே" என்ற என் புலம்பலுக்கு, "கம்ப்யூட்டர் சயின்ஸ் ஸ்டுடண்ட்ஸ்லாமே தொட்டுப் பாக்க முடியலையாம்.அவங்களுக்கே டீச்சர்ஸ் தான் ஆபரேட் பண்ணிக் காமிப்பாங்களாம். நாம காமர்ஸ் ஸ்டுடண்ட்ஸ்.நம்மை எப்பிடி தொட விடுவாங்க?" என்று பதிலளித்தாள் தோழி.





அத்துடன் கம்ப்யூட்டருடனான தொடர்பு நான்கு வருடங்களுக்கு துண்டிக்கப் பட்டது.ஒரு நாள் ஊரிலிருந்து வந்திருந்த என் அத்தை பேத்தி " நாம பிரவுசிங் செண்டர் போலாமா" என்றதும் " அங்க என்ன செய்யப் போறோம் ?" என்று பட்டிக்காட்டு கேள்வி ஒன்றை நான் கேட்க "சாட் பண்லாம் வா " என்று இழுத்து சென்றாள். என்னை கம்ப்யூட்டரின் முன் அமர வைத்து  தானும் அமர்ந்து கொண்டாள்.என் அக்கா பெண்ணை சாட்டிற்கு அழைத்து அவளுடன் சாட் செய்ய ஆரம்பித்து, " நீ டைப் பண்ணு" என்றாள்.பிற்காலத்துக்கு உதவும் என்று கற்று வைத்திருந்த டைப்ரைட்டிங்  பயிற்சி கை கொடுத்தது.முதன்முதலாக கம்ப்யூட்டரின் அந்த வெள்ளை கீ போர்டில் கை வைத்தது அன்றுதான்.(இதுக்காக என் அத்தைபேத்தியை எல்லாரும் நொந்துண்டா நான்பொறுப்பில்ல )
அதற்கப்பறம் சாட் செய்ய  வாய்ப்பும் கிடைக்கல.என் அக்காபெண் ஈ மெயில் எப்படி அனுப்பனும்னு சொல்லிக் கொடுத்து எனக்குஒரு ஐ டி யும் ஏற்படுத்திக் குடுத்தா.(இப்ப வரை அதே மெயில் ஐ டி தான்) சிறிது நாள் கழித்து சின்னதா ஒரு கம்ப்யூட்டர் கோர்ஸ் படிக்கும் வாய்ப்பு  கிடைத்தது. MS   DOS என்ன EXCEL  என்ன POWERPOINT, WORD  என்னன்னு ஒரே அமர்க்களப்பட்டது.கோர்ஸ் முடிஞ்சப்பறம் வீட்ல கம்ப்யூட்டர் இல்லாததால தொடர்பு இல்ல.

 ஒரு தடவை ரங்கஸ் 2 மாசத்துக்கு ஜெர்மன் போயிட்டாரு.அவரை தொடர்பு கொள்ள ஈ மெயில் விட்டா அப்பல்லாம் ஒண்ணும்  கிடையாது..அது கூட இருந்திருக்க வேண்டாமேன்னு அவரு அழாகுறையா நினைக்கற அளவு,பிரவுசிங்  செண்டர் போயி "நீ சௌக்கியமா? நான் சௌக்கியம். நீ சாப்பிட்டயா ? அங்க இரவா பகலா.இங்க வெய்யில் அப்பிடிங்கற ரேஞ்சுக்கு ஒரே மெயிலோ மெயில்தான்.பிள்ளை கிட்ட நாம பேச முடியலையே .இவ மட்டும் போயி போயி மெயில் அனுப்பறாளேங்கற மாமியாரின் ஏக்கம் தணிக்க ரங்கஸ் ஜெர்மன்ல எடுத்த போட்டோக்களை பிரிண்ட் அவுட் எடுத்து கொண்டு வந்து காமிக்க , மாட்டுப் பொண்ணுக்கு என்னல்லாம் தெரிஞ்சுருக்கு என்கிற ரீதியில் மாமியார் அதிசயப் பட்டு போனார்(அட! நிஜமாத்தான் சொல்றேனாக்கும்)

ரங்கஸ்  வந்ததும் வீட்டுக்கு ஒரு கம்ப்யூட்டர் வாங்கனும்னு முடிவு பண்ணி எங்க வீட்டுக்குள்ளயும் அந்த   தேவலோக வஸ்து குடியேறியது. வந்த புதுசுல அதுல இருக்கற ராஜா ராணி லாம் என்  தலையைப் பாத்தாலே தலை தெறிக்க ஓடுற அளவு சாலிட்டேர் விளையாடி,சூப்பர் மேரியோ பயல் குதிச்சு குதிச்சு தன் மண்டையெல்லாம் ரணமாகி நொந்து அழும்படியா  பண்ணியாச்சு.அது  தவிர என்னன்னவோ கேம்ஸ்லாம் போட்டுண்டு  குழந்தையோட நானும் குதூஹலிச்சு , winamp ல பாட்டு கேட்டு,பொண்ணுக்கு ப்ராஜக்டுக்கு தேவைப்படும்னு என்சைக்லோ பீடியாலாம் வச்சுண்டு  (அஞ்சாஞ்க்ளா ஸ் ) ஒரே அமர்க்களம்தான்.        
"பிஎஸ் என்எல்  ப்ரான்ட்பேன்ட் வரதாம்.அதைப் போட்டுண்டா ரொம்ப சௌஹர்யமாம் " இதை 
கேட்டப்பறம்  சும்மா விடுவோமா?போடு அதையும்.அப்பறம் ஒரே பாட்டு டவுன்லோட்,மேசெஞ்சர்ல சாட்,, அப்படின்னு போயிண்டிருந்த  காலத்துலதான் நம்ப  எழுத்தாளர் வித்யா சுப்ரமண்யம் மேடம் 
நமக்கு ப்லாக்கை அறிமுகப்படுத்தி வச்சாங்க (உங்களையெல்லாம் இதன்  மூலம் படுத்தி
வச்சாங்களான்னு அவங்க கிட்ட பேசிக்கோங்க )
அப்பறம் எழுதறேன் பேர்வழின்னு பாத்தது பாக்காதது தோணினது தோணாததுன்னு கணக்கே இல்லாம  கிறுக்க ஆரம்பிச்சு அதுக்கு வந்த கமெண்டெல்லாம் மொபைல போன்ல 
போன இடம் வந்த இடம்னு பாக்கற அளவு  தேறியாச்சு.( எங்களையெல்லாம் புண்ணாக்கிட்டு நீ ஏன் தேறமாட்டேன்னு  நீங்க feel பண்ண மாட்டீங்கன்னு  தெரியும்,நீங்கல்லாம் ஜெம்னு எனக்கு நல்லா தெரியும்பா)
என் எழுத்துப் பணிக்கு ( பிணிக்குன்னு உங்க கண்ணுக்கு தெரியுதா? கரெக்டா தான டைப்பினேன்) இடைவெளி  விட்டிருந்த நேரத்துல  அதைப் பொறுத்துக்க முடியாத அன்பு அனன்யா பொங்கி எழுந்து எழுத வைக்காம விட மாட்டேனாக்கும்னு தீர்மானம் பண்ணி இந்த கிறுக்கலை உள்ளே இருந்து வெளியே கொண்டு வந்துட்டாங்க (ஏய் ! அனன்யா! இருக்குடி உனக்குன்னு நீங்க கறுவாதீங்க பாவம்)

இப்படியாக இந்த எழுத்தை இப்போ ஐபேட்  லேருந்து டைப்பற  அளவு முன்னேறிட்டேனாக்கும்( I Bad ?!)


:))))))))))))))))


இந்த தொடர்பதிவுக்கு நிறைய பேரை அனன்யாவும் இன்னும் மற்றவர்களும் அழைச்சுட்டதால விருப்பம் இருக்கற யார் வேணா தொடர  கேட்டுக்கறேன் :-)











Wednesday, February 13, 2013

ராஜியின் ரகளைகள் ...




பட்டாம்பூச்சி
பின்னால் அலைந்த 
பத்து வயதில் தொடங்கியது 

பதின்ம பருவத்தில் 
பாட்டி மீது விட்ட 
புது சைக்கிளில் தொடர்ந்தது 

கொய்யா மரமேறி 
கொறித்த பழத்தின் 
கணக்கில் அம்மாவின் கை 
கணக்கும் புரிந்தது 

விபத்தில் பட்ட 
வலியில், அப்பாவின் 
வலிமை தொலைந்து 
வலி உதிர்த்த கண்ணீர், வலித்தது 

தொலைந்த என்னைத் 
தேடிய சகோதரன் 
தொடர்ந்து அர்ச்சித்தாலும் 
தொட்ட அன்பு வளர்ந்தது 

இன்னும் சிலருக்கு 
இவள் ஒரு வாய்மூடா எம் பி 3
இருப்பினும்  இவளது 
இயல்பு இசையே 

கையேந்தும்  வீணையில் 
கான சரஸ்வதியின் 
கோபம் புரிந்தாலும் 
கைகளைக் கட்டுவதில்லை இவள் 

இவளது ரகளைகளின் 
இடையே எமனும் 
இடர் தர அஞ்சி 
இடைவெளி விட்டே 
இருக்க மாட்டானோ 


டிஸ்கி : எனதுபோன பதிவிற்கு முந்தைய பதிவில்  மேடம் வித்யா சுப்பிரமணியம் அவர்கள் எழுதும்படி கூறியிருந்த "ராஜியின் ரகளைகள்"


 

Monday, January 21, 2013

அவன்...அவள்...அது... !!


அவன் ...

அவன் வருகையின்
அடையாளமாய் அந்த
அரங்கம் மிகவும்
அழகாய் ......

அவள்...

அவள் விழிகள்
அலைபாயத் துடித்தும்
அடக்கும் நாணத்தால்
அமர்வாய்.......

அது...

அரங்கின் நடுவே
அது கம்பீரத்துடன்
அலங்காரமாய்......


அவன் மிடுக்காய்
அவளை நோக்க,
அவளும் நோக்கி
அளித்த முறுவலில்
அவன் அதை எடுத்தான்

அனைவரும் ஆர்ப்பரிக்க
அதனை முறித்தான்

அவதாரத் திருமணத்தின்
அடையாளச்  சின்னமாய்
அங்கீகரிக்கப்பட்ட
அது முறிந்தாலும் நிமிர்வாய்....







எனது போன பதிவில் திரு வை கோபாலகிருஷ்ணன் அவர்கள் எழுதும்படி சொல்லி 
இருந்த " அவன்...அவள்...அது... " ஒரு சிறிய இடைவளிக்குப் பின்.







Wednesday, January 9, 2013

நான்....!!




ஆச்சர்யமும் அற்ற
கேள்விக்குறியுமற்ற-
முன்னிலை, படர்க்கையை
நகர்த்தும் தன்மைச் சொல்லாய்
இந்த உலகில் - ”நான்”

         *************************

உலகையெல்லாம் நீ
உன் கண்ணால்
பார்க்க அதனுள்
என்னைப்  பார்க்கிறேன்
நான்

         ************************

என்றேனும் நேரக்கூடும்,
என்  இழப்பால்
இடிந்து நிற்காதே.
இறந்த காலமல்ல நான்.

உன் எதிரே ஒரு  வேளை
உணவுக்காய் கையேந்தும்
உதவியற்ற சிறுமியாகவோ

மழைக்கு ஒதுங்க இடமற்ற
மூதாட்டியாகவோ வரும்
நிகழ்காலம்தான் நான்

               ************************

Phoenix_bird : light and fire silhouette of a bird against dark background Stock Photo

நான் என்பது என் உடலல்ல - கலங்காதே
நான்கு பேருக்கு  உதவியாக
தந்துவிடும் உறுப்புகளில்
எரிந்த  பின் வாழும் பீனிக்ஸ்  நான் .

           *****************************

காயென நினைத்தேன் கசந்தது
கனியென நினைத்தேன் இனித்தது - இறைவா
நீயென நினைத்தேன் நடந்தது - எல்லாம்
நானென நினைத்தேன் முடிந்தது

God_hands : Hand of Hindu God Ganesh Stock Photo

     ****************************************

டிஸ்கி 1 :   சென்ற பதிவில் 'நீ'. என்ற  தலைப்பில் எழுதியதை  படித்து  விட்டு  பதிவர்  ஆர்விஎஸ்  அவர்கள் ( இப்பல்லாம் இவரை பதிவர்னு சொல்றதை விட முகநூல்காரர்னு  சொல்றது  பொருத்தமா இருக்கும்.இதை நான் கோவமா சொல்றேன் .அந்த அளவு அவர் தனி பதிவுகள் போடறதில்லை ) . ' நான் '. என்ற தலைப்பில் எழுதச் சொல்லிக் கேட்டதன்  விளைவே இந்தப் பதிவு.(நியாயமா  போன பதிவைப் படிச்சப்பறம்  தலை தெறிக்க ஓடி இருக்கணும்.அவருக்கு என்னவோ ஒரு விபரீத ஆசை .அதுக்காக பாதிக் கல்லை அவர் பக்கம் யாரும் எறிய வேண்டாம்னு கேட்டுக்கறேன் :-). )

டிஸ்கி 2 :  இதில் பதிந்திருக்கும் கடைசி கவிதை (!) எனது பதினைந்தாவது  வயதில் நான் எழுதிய எனது முதல் கவிதை  என்பதைக் கூறிக் கொள்கிறேன். :-)
அப்பலேருந்தே நீ இப்படித்தானான்னு(!)   உங்க மைண்ட்  வாய்ஸ் எனக்கு க்ளியரா கேக்குது.  :-)

         


Friday, January 4, 2013

நீ.....!!





என் வாழ்க்கைக் கோலத்தை
எத்தனை அழகு படுத்த நான் முனைந்தாலும்
பூசணிப்பூவாய்  நீ நடுவில்
இருக்கையில்தான் பளிச்சிடுகிறது

 
             *******************************

கவிதைக்கு என் மேல் கோபம்
நீண்ட  நாட்களாய் நான் எழுதவில்லையென.
அதற்கென்ன தெரியும் ,
நீ மட்டும்தான் எனக்கு கவிதையென .

      ******************************************

மழைத்துளியின் தூய்மை
மட்டுப்பட்டதாகிறது
உனதன்பிற்கு  முன்னால்


      *****************************************

உன் தோள் வளைவில்  நான்
உறங்கும் நேரத்தில்தான் என்
உலகமே எழுகின்றது


      ******************************************




நீ ஊட்டும் ஒரு
உருண்டை சோற்றுக்கு முன்
உலக உருண்டையை  கடுகாய்த்தான்
உணர்கிறேன்