Tuesday, July 24, 2012

உதயம் தியேட்டரும், தேவர் மகனும்

வருடம் 1992.  இடம் உதயம் தியேட்டர்.  நிகழ்ச்சி "தேவர் மகன் சினிமா"

பங்கேற்ற நபர்கள் ராஜியும் அவளது சகோதரர்களும் அவளது அண்ணிகளும்





தேவர் மகன் படம் வந்த இரண்டாம் நாளே பெரிய சகோதரன் பெரிய மன்னி,இரண்டாவது மன்னியுடன் படம் பார்த்தாகி விட்டது.அதுவும் எப்படி?

படத்திற்கு கிளம்பி பஸ்ஸுக்கு காத்துக் கொண்டிருந்த சமயம் ஏதோ தெரிந்தவர்கள் வந்து விட அவர்களுடன் இரு வார்த்தை பேசுவதற்குள் பஸ் வந்து விடவே நான், முதல் மன்னி மற்றும் இரண்டாவது மன்னி ஏறி விட அண்ணா ஏறவில்லை என்பதை கவனிக்கவில்லை.பஸ்ஸும் கிளம்பி விட கொஞ்ச தூரம் சென்ற பின் தான் அண்ணா ஏறாதது தெரிந்தது.எப்படியும் வந்து விடுவான் என்ற நினைப்பில் அடுத்த ஸ்டாப்களிலும் நாங்கள் இறங்காது மன்னியிடம் இருந்த காசில் டிக்கெட் எடுத்து அம்ர்ந்தாகி விட்டது.

பாவம் அண்ணாவோ,  எங்களிடம் காசு இருக்கிறதோ இல்லையோ என்று பதறி உடனே ஒரு ஆட்டோ பிடித்து எங்கள் பஸ்ஸை ஃபாலோ செய்து வந்து கொண்டிருந்திருக்கிறான். நாலு ஸ்டாப் தாண்டிய பின் தான் அவனால் எங்கள் பஸ்ஸையே பிடிக்க முடிந்தது.அதற்குள் ஆட்டோ சார்ஜ் எகிறியது.
பஸ்ஸில் ஏறி, நாங்கள் இருப்பதை பார்த்து டிக்கெட் எடுத்து சொகுசாக அமர்ந்து வந்து கொண்டிருக்கிறோம் என்று தெரிந்ததும் அவன் கடுப்புக்கு அளவே இல்லை.மீதி தூரம் முழுக்க எங்களுக்கு பாட்டுதான்.ஒரு வழியாக தியேட்டர் வந்து படமும் ஆரம்பித்த பின் தான் நிறுத்தினான்.

தேவர் மகன் என்னை அதோடு விடவில்லை.ஒரு வாரம் கழித்து மீதி மூன்று சகோதரர்களும் தாங்கள் பார்க்கவில்லை என்பதால் எல்லாருக்குமாக  மொத்தமாக ரிசர்வ் செய்து விட்டார்கள்.எனக்கு அன்று காலையிலிருந்து லேசாக உடல் நலம் சரியில்லாமல் இருந்ததால் போக வேண்டாம் என்று முடிவாகியது.என் ஒருத்திக்காக எதற்கு நிறுத்துவது, ஏற்கனவே பார்த்தாயிற்றே என்றாலும் கேட்கவில்லை.சரி என்று ஒரு பேராசிட்டமால் போட்டுக் கொண்டு எல்லாருடனும் கிளம்பியாகி விட்டது.


படம் பார்த்துக் கொண்டு இருக்கையில் எனக்கு தூக்கம் கண்ணை சுழற்ற ஆரம்பித்து விட்டது.க்ளைமாக்ஸ் கொஞ்சம் வன்முறையானது என்பதாலும் ஏற்கனவே பார்த்ததுதானே என்பதாலும் சற்று கண்ணை மூடி சாய்ந்து அமர்ந்தவள் தூங்கி விட்டேன் போல.

படம் முடிந்ததும் ஏற்பட்ட சலசலப்பில் கண்ணை விழித்தவள் அரைகுறை தூக்கத்தில் நம்மைச் சேர்ந்தவர்களோடுதான் போகிறோமா என்றெல்லாம் கவனிக்காது கும்பலில் நகர்ந்தேன்.என் இரண்டாவது மன்னியோ அதே மஞ்சள் நிற சுடிதார் அணிந்த ஒரு பெண் அருகில் வந்து கொண்டிருந்ததால் நான்தான் பக்கத்தில் வந்து கொண்டிருக்கிறேன் என்று நினைத்து  மேற்கொண்டு நகர்ந்து சென்று விட்டார்கள்.சற்று நேரம் கழித்து என்னுடன் அவர்கள் இல்லை என்பதை நானும் அவர்களுடன் நான் இல்லை என்பதை அவர்களும் உணர ஒருவருக்கொருவர் தேட ஆரம்பித்தோம்.கும்பலில் தேடுவது சற்று சிரமமானதாகவே இருந்தது.உடனே என் இரண்டாவது அண்ணா மற்ற அனைவரையும் தியேட்டர் வாசலில் நிற்கச் சொல்லி, நான் அங்கு வருகிறேனா என்று பார்க்கச் சொல்லி விட்டு தியேட்டர் உள்ளே இருக்கிறேனா என்று பார்க்க வந்திருக்கிறான்.ஆனால் என் துரதிர்ஷ்டம் அவன் ஒரு பக்க படியின் வழியே மேலே ஏறிச்செல்லும் பொழுது நான் இன்னொரு பக்க படியின் வ்ழியேகீழிறங்கிக் கொண்டும் அவன் கீழிறங்கும் போது நான் மேலே ஏறிக் கொண்டும் இருந்திருக்கிறேன்.

என் கையில் பணமும் இல்லை.மணியோ இரவு ஒன்பதைத் தாண்ட ஆரம்பித்திருந்தது. ஒருவேளை யாரையும் பார்க்க முடியாவிட்டால் எப்படி வீட்டுக்குச் செல்வது என்று பயம் பிடிக்க ஆரம்பித்தது.கூட்டம் கலைந்ததும் தியேட்டர் வாசலுக்கு வர மீதி பேர்களை பார்த்ததும் தான்  மூச்சே வந்தது.உள்ளிருந்து வெளியே வந்த இரண்டாவது அண்ணாவோ அங்கு என்னைப் பார்த்ததும், "எங்கடி போய்த் தொலஞ்ச? மனுஷனுக்கு உசிர் போய் வந்துடுத்து" என்று தன் சஹஸ்ரநாமத்தை ஆரம்பித்து வீடு வரும் வரை அர்ச்சித்தான்.

வீட்டுக்குள் வந்ததும் அத்தனை பேரும் ஒன்று சேர்ந்து கப்சிப்.இன்னும் காணோமே என்று காத்திருந்த அம்மாவின் கண்களில் சந்தேகம் ஒரு பக்கம்.என்ன சினிமாக்கு போயிட்டு வந்த சந்தோஷத்தையே உன் புத்திர சிகாமணிகள் மூஞ்சில காணோமே? என்ன விஷயம் என்ற அப்பாவின் கேள்வி ஒரு பக்கம்.நாங்க ஏன் வாயைத் திறக்கறோம்.அத்தனை பேரும் ஆடு திருடின கள்ளன் முழியோட போட்ட சோத்தை தின்னுட்டு போர்வையை இழுத்து மூடி படுத்தாச்சு.

அப்பறம் பல நாட்கள் கழிச்சு இனி இதை சொன்னா பிரச்சனை இல்லை.அடுத்த தடவையும் வெளில அனுப்புவாங்க என்னைங்கற நம்பிக்கை வந்தப்பறம் மெதுவா சொல்லிட்டோம்.ஆறின கஞ்சி பழங்கஞ்சிதான.ஆனாலும் எனக்கு மட்டும் சின்னதா ஒரு திட்டு விழாம இல்ல.அது கூட இல்லன்னா அப்பறம் எப்படி இல்லையா?

என்ன? நீங்க என்ன சொல்றீங்க?அப்பவே காணாம போயிருந்தா இப்படி எல்லாம் எழுதி எங்க கழுத்தை அறுக்காம எங்களுக்கெல்லாம் ஒரு விடுதலை கிடைச்சிருக்குமேன்னா சொல்றீங்க? அப்படி எல்லாம் நினைக்காதீங்க.ஹாரி பாட்டர், பார்ட் பார்ட்டா வராப்புல நான்  "ராஜியின் ரகளைகள்"ன்னு வால்யூம் வால்யூமா எழுதி எல்லாரையும் நோகடிச்சிருப்பேனாக்கும்        :-))))))))))))))))))))



16 comments:

வை.கோபாலகிருஷ்ணன் said...

தங்களுக்கு ஏற்பட்ட அனுபவத்தை மிகவும் சுவையாகவே எழுதியிருக்கிறீர்கள். பாராட்டுக்கள்.

தொடரும்...

வை.கோபாலகிருஷ்ணன் said...

சென்னையில் எனக்கு மிகவும் பழக்கமான ஒரே ஒரு தியேட்டர் இந்த “உதயம் தியேட்டர்” மட்டுமே. அதுவும் அதன் உள்ளே போய் நான் இதுவரை எந்தப்படமும் பார்த்தது இல்லை.

தாங்கள் சொல்வது அசோக் பில்லருக்கு அருகே உள்ள உதயம் தியேட்டர் தான் என நினைக்கிறேன்.

அந்தத் தியேட்டருக்கு நேர் எதிர்புறம் தான் நான் வேலை பார்த்த BHEL கம்பெனியின் சென்னை GUEST HOUSE உள்ளது.

அதில் பலமுறை நான் போய்த் தங்கியது உண்டு.

திருச்சியிலிருந்து ரயிலில் கிளம்பி மாம்பலம் அல்லது எக்மோரில் இறங்கியதும் ஆட்டோ பிடித்து நேராக அசோக் பில்லர் உதயம் தியேட்டர் போ என ஆட்டோக்காரரிடம் சொல்வேன்.

அந்த முறையில் மட்டுமே இந்தத்தியேட்டரை மட்டும் சென்னையில் எனக்கு மிகவும் பரிச்சயம்.

அது போல பில்லர் அருகே உள்ள கங்கா ஹோட்டல் எனக்கு மிகவும் பழக்கமான ஓர் இடம்.

Guest House சாப்பாடு எனக்குப் பிடிக்காததால் இந்த கங்கா ஹோட்டலுக்கு அடிக்கடி போய் ஸ்பெஷல் மஸால் தோசை முதலிய டிபன் ஐட்டங்கள் சாப்பிட்டு வருவேன்.

Guest House லிருந்து, இந்த கங்கா ஹோட்டலுக்குப் போகும் போதும், திரும்ப் வரும்போதும் இந்த உதயம் தியேட்டரை நான் தரிஸிப்பது உண்டு.

தொடரும்...

வை.கோபாலகிருஷ்ணன் said...

தேவர் மகன் சினிமா நானும் இங்கு திருச்சியில் பார்த்துள்ளேன். நீங்கள் தியேட்டரில் தூங்கியது போலவே எனக்கு அனுபவம் உண்டு. 1981 என ஞாபகம். திருச்சி பாலாஜி தியேட்டரில் நிழல்கள் என்ற படம்.

நான் ஏற்கனவே பார்த்த நல்ல பாடல்களுடன் கூடிய படம் தான். அன்று Night Show நண்பர்கள் சிலரின் வற்புருத்தலால் சென்றேன். எனக்கும் உடல்நிலை சரியில்லை தான்.

படம் ஆரம்பித்த முதல் சீனில் தூங்க ஆரம்பித்தவன் தான். இடைவேளை விட்டதே எனக்குத் தெரியாது. சரியான தூக்கம்.படம் முடிந்தபின் என்னை அடித்து எழுப்பி, ஆட்டோவில் ஏற்றிச்சென்றனர்.

இதைப்படித்ததும் எனக்கு அந்த ஞாபகம் வந்தது.

வை.கோபாலகிருஷ்ணன் said...

//ஆனால் என் துரதிர்ஷ்டம் அவன் ஒரு பக்க படியின் வழியே மேலே ஏறிச்செல்லும் பொழுது நான் இன்னொரு பக்க படியின் வ்ழியேகீழிறங்கிக் கொண்டும் அவன் கீழிறங்கும் போது நான் மேலே ஏறிக் கொண்டும் இருந்திருக்கிறேன்.//

சினிமாக்களில் வரும் காட்சி போலவே நல்ல நகைச்சுவையாக உள்ளது.

//என்ன சினிமாக்கு போயிட்டு வந்த சந்தோஷத்தையே உன் புத்திர சிகாமணிகள் மூஞ்சில காணோமே? என்ன விஷயம் என்ற அப்பாவின் கேள்வி //

மிகவும் யதார்த்தம். இதுபோன்ற சமயங்களில் நாம் நன்றாகவே மாட்டிக்கொள்வோம்.

//ஆறின கஞ்சி பழங்கஞ்சிதான.ஆனாலும் எனக்கு மட்டும் சின்னதா ஒரு திட்டு விழாம இல்ல.அது கூட இல்லன்னா அப்பறம் எப்படி இல்லையா?//

அதானே, அதுகூட இல்லாட்டி, ஒரு த்ரில்லே இருக்காதே! ;)

வை.கோபாலகிருஷ்ணன் said...

//என்ன? நீங்க என்ன சொல்றீங்க?அப்பவே காணாம போயிருந்தா இப்படி எல்லாம் எழுதி எங்க கழுத்தை அறுக்காம எங்களுக்கெல்லாம் ஒரு விடுதலை கிடைச்சிருக்குமேன்னா சொல்றீங்க?//

சேச்சே, அப்படியெல்லாம் சத்தியமா நினைக்கவே மாட்டோம். ஏன்னாக்க இப்போவே நீங்க அடிக்கடி காணாமப் போய்க்கிட்டுதான் இருக்கீங்க.

எப்போவாவது ஆடிக்கொருநாள் அமாவாசைக்கு ஒருநாள் மட்டுமே பதிவுப்பக்கமே வருகிறீர்கள். ;(

இப்போ ஆடியும் பிறந்தாச்சு, அமாவாசையும் வந்துட்டுப்போயாச்சு. அதனால் மட்டுமே வந்திருக்கீங்க!

அடிக்கடி வந்து ஏதாவது இதுபோல எழுதிக் கலக்குங்க .... பாராட்டுக்கள். வாழ்த்துகள்.

அனுபவப்பகிர்வுக்கு நன்றிகள். அன்புள்ள vgk

ஸ்ரீராம். said...

தியேட்டரில் தொலைந்து போன உங்கள் அனுபவம் எனக்கும் என்னுடைய சிறுவயதில் நான் தொலைந்து போன சம்பவத்தை நினைவுபடுத்தியது.

//சேச்சே, அப்படியெல்லாம் சத்தியமா நினைக்கவே மாட்டோம். ஏன்னாக்க இப்போவே நீங்க அடிக்கடி காணாமப் போய்க்கிட்டுதான் இருக்கீங்க.

எப்போவாவது ஆடிக்கொருநாள் அமாவாசைக்கு ஒருநாள் மட்டுமே பதிவுப்பக்கமே வருகிறீர்கள். //

:))))))))))))))) வை கோ ஜி....!

இராஜராஜேஸ்வரி said...

"ராஜியின் ரகளைகள்" -ரசனையானவை !

வெங்கட் நாகராஜ் said...

ராஜியின் ரகளைகள் - ஆகா... சூப்பரா இருக்கே.

என் தியேட்டர் அனுபவத்தினைப் பற்றி பதிவுகள் எழுத ஆரம்பித்த புதிதில் எழுதியிருக்கேன் - http://www.venkatnagaraj.blogspot.in/2010/01/blog-post.html இந்தப் பக்கத்தில்... :)

குறையொன்றுமில்லை. said...

ஆஹா தேவர் மகன் மறக்க முடியாத அனுபவங்களைத்தந்திருக்கே

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

ha ha ha...super experience... I guess all of us have some or other "kaanamal pona kadhaigal"...:)

ரிஷபன் said...

Interesting :)

திண்டுக்கல் தனபாலன் said...

ஹா.. ஹா... ரசித்துப் படித்தேன் சகோதரி...

ஒருமுறை என் பொண்ணு, எங்க ஊர் மாரியம்மன் திருவிழாவில் காணாமல் போய்,
நாங்கள் பட்ட அவஸ்தை இருக்கே... அப்பப்பா...
சில நினைவுகள் காலத்தால் மறக்க முடியாதவை...
நன்றி சகோ !

என் தளத்தில் : மனிதனின் மிகப்பெரிய எதிரி யார் ?

வித்யா சுப்ரமணியம் (Vidya Subramaniam) said...

சுவாரசியமாக இருந்தது லாஜி.:-))

raji said...

பின்னூட்டமளித்த அனைவருக்கும் எனது நன்றிகள்

இனி அடிக்கடி பதிவுகள் வரும் என்பதை ஆதங்கம் நிறைந்த வை கோபாலகிருஷ்ணன் சாருக்கு சொல்லிக் கொள்கிறேன்

வை.கோபாலகிருஷ்ணன் said...

ஸ்ரீராம். said...

*****சேச்சே, அப்படியெல்லாம் சத்தியமா நினைக்கவே மாட்டோம். ஏன்னாக்க இப்போவே நீங்க அடிக்கடி காணாமப் போய்க்கிட்டுதான் இருக்கீங்க.

எப்போவாவது ஆடிக்கொருநாள் அமாவாசைக்கு ஒருநாள் மட்டுமே பதிவுப்பக்கமே வருகிறீர்கள்.*****

-vgk

//:))))))))))))))) வை கோ ஜி....!//

தங்களின் ரசனைக்கு மிக்க நன்றி,
ஸ்ரீராம் ஜயராம் ஜய ஜய ராம்! ;))))))

அன்புடன்
vgk

வை.கோபாலகிருஷ்ணன் said...

raji said...

//இனி அடிக்கடி பதிவுகள் வரும் என்பதை ஆதங்கம் நிறைந்த வை கோபாலகிருஷ்ணன் சாருக்கு சொல்லிக் கொள்கிறேன்.//

ரொம்ப ரொம்ப சந்தோஷம். இனிப்பான இந்தத் தங்களின் செய்திக்கு என் மனமார்ந்த அன்பான இனிய நன்றிகள். vgk

Post a Comment