Sunday, July 8, 2012

நானும் கொத்தனாரும்




  



நன்றாய்த்தான் கட்டியிருந்தான்
கொத்தனார் என் வீட்டை

எலும்பென்ற தூண்கள் வைத்து 
சதையென்ற கலவை பூசி
நன்றாகவே  கட்டியிருந்தான்

ஒளி வர இரண்டும்
ஒலி வர இரண்டும்
காற்றுக்கு இரண்டுமாய் 
சன்னல்கள் வைத்து,

முகப்பில் வாசலென 
முறுவல் செய்யும் துவாரமுமாய்
பார்த்து பார்த்துத்தான் கட்டியுள்ளான்

புதுவீடு நன்றாகவே இருந்தது
பத்து வருடங்கள் வரையிலும்

அடுத்த பத்து வருடங்கள் 
கொஞ்சம் பழசாயிற்று என்றாலும் 
நன்றாகத்தான் இருந்தது

பின் 
கொஞ்சம் கொஞ்சமாய்
குப்பைகளும் அழுக்குகளுமாய் 
குவிய ஆரம்பிக்க

கோவிலாய் இருந்த வீடு
களை இழக்க ஆரம்பித்தது

நாளடைவில் 
எலும்புத்தூண் உறுதி இழக்க
சதைக் கலவை  தளர 
ஒளி ஒலி சன்னல்கள் மங்க
காற்றும் சண்டித்தனமாயிற்று

முகப்பு வாசல்
கண்ட வார்த்தைகளால் 
கஷ்டம் தேடிக் கொண்டதோடு, 

கொத்தனாரையும் திட்ட ஆரம்பித்தது



27 comments:

எல் கே said...

:)) Good attempt

தி. ரா. ச.(T.R.C.) said...

கொத்தனாருக்கு இந்த வேலை போரே அடிக்காதா?

வை.கோபாலகிருஷ்ணன் said...

//எலும்பென்ற தூண்கள் வைத்து
சதையென்ற கலவை பூசி//

மிகவும் அருமையான வரிகள். ;)))))

வை.கோபாலகிருஷ்ணன் said...

//கொஞ்சம் கொஞ்சமாய்
குப்பைகளும் அழுக்குகளுமாய்
குவிய ஆரம்பிக்க

கோவிலாய் இருந்த வீடு
களை இழக்க ஆரம்பித்தது//

வீடு மட்டுமல்ல, எதுவுமே, முறைப்படி அவ்வப்போது, பராமரித்து புதுப்பித்துக் கொண்டு வராவிட்டால் இது போலவே ஆகிறது.

மனித மனங்களும் கூட ......

வை.கோபாலகிருஷ்ணன் said...

//முகப்பு வாசல்
கண்ட வார்த்தைகளால்
கஷ்டம் தேடிக் கொண்டதோடு,

கொத்தனாரையும் திட்ட ஆரம்பித்தது//

வீட்டின் முகப்பு வாசலில், கஷ்டம் சுகம் எல்லாமே, அக்கம்பக்கத்தாராலும், சுற்றுப்புறச்சூழலாலும், நம் தலையெழுத்துப்படியும் அவ்வப்போது அழையா விருந்தாளியாக வந்து சேர்ந்து விடுகின்றன.

கொத்தனார் பாவம் .... அவர் என்ன செய்வார்?

வை.கோபாலகிருஷ்ணன் said...

காட்டியுள்ள படங்கள் அருமை.

சொல்லாடல் அழகு, புத்தம் புதியதாகக் கட்டிய வீடு போன்றே.

நாளுக்கு நாள் மெருகேறி வருகிறது தங்களின் எழுத்துக்கள்.

என் எழுத்துலக மானஸீக குருநாதர் அன்றே ஒருநாள் சொன்னார். அவர் சொன்னால் அது எப்போதும் மிகச் சரியாகவே இருக்கும் என்பது எனக்கு ஏற்கனவே தெரியும். இப்போது அதை கண்கூடாக நான் காண்பதில் என் மகிழ்ச்சி இரட்டிப்பாக ஆகிறது.

அன்பான வா ழ் த் து க ள்.

மனமார்ந்த பா ரா ட் டு க் க ள்.

பகிர்வுக்கு ந ன் றி க ள்.

பிரியமுள்ள,
vgk

குறையொன்றுமில்லை. said...

நன்றாய்த்தான் கட்டியிருந்தான்
கொத்தனார் என் வீட்டை

ஆரம்பத்தில் வாழ்த்திய கொத்தனாரை கடைசியில் திட்டியது என்ன நியாயம்?

ராமலக்ஷ்மி said...

மிக அருமை, ராஜி.

வெங்கட் நாகராஜ் said...

மிக அருமை ராஜி....

பாராட்டுகள்....

ரிஷபன் said...

நாளடைவில்
எலும்புத்தூண் உறுதி இழக்க
சதைக் கலவை தளர
ஒளி ஒலி சன்னல்கள் மங்க
காற்றும் சண்டித்தனமாயிற்று

The untold is the essence..
உங்கள் எழுத்தின் மேல் வைத்த நம்பிக்கை வீண்போகவில்லை.. இன்னும் உயரே உயரே போகப் போகிறீர்கள். பார்த்து ஆனந்திக்க நாங்களும்.

raji said...

@எல் கே

நன்றி

@தி.ரா.ச


ஒரே மாதிரியான படைப்பு என்றால்தானே போரடிக்க?அவர் தான் தன் படைப்பில் குட்டை உயரம் குண்டு ஒல்லி கறுப்பு வெள்ளை, படைப்பின் தன்மைகளில் மாறுபாடுகள் என்று வெரைட்டி ஏற்படுத்தி விடுகிறாரே

@வை கோபாலகிருஷ்ணன்

நன்றி


//வீட்டின் முகப்பு வாசலில், கஷ்டம் சுகம் எல்லாமே, அக்கம்பக்கத்தாராலும், சுற்றுப்புறச்சூழலாலும், நம் தலையெழுத்துப்படியும் அவ்வப்போது அழையா விருந்தாளியாக வந்து சேர்ந்து விடுகின்றன.

கொத்தனார் பாவம் .... அவர் என்ன செய்வார்?//

பராமரிப்புஅற்ற மனித மனங்கள் பராமரிப்பு அற்ற உடலின் கஷ்டங்களுக்கு படைத்தவனைச் சாடுதலை வழக்கமாக்கி கொண்டு விடுகின்றன

//என் எழுத்துலக மானஸீக குருநாதர் அன்றே ஒருநாள் சொன்னார்//

தங்களின் ஆசிர்வாதமும், எழுத்துலக குருநாதரின் ஆசிர்வாதமும் என் எழுத்தை மேலும் மேம்படச் செய்ய வேண்டுகிறேன்

@லக்ஷ்மிம்மா

//ஆரம்பத்தில் வாழ்த்திய கொத்தனாரை கடைசியில் திட்டியது என்ன நியாயம்?//

மனித மனங்கள், கஷ்டங்களின் காரணங்களை அடுத்தவர் மீது சுமத்தி தப்பித்துக் கொள்வதில் தேர்ந்தது

@ராமலக்ஷ்மி

நன்றி

விச்சு said...

எலும்பு, சதை நல்ல கற்பனைகள்.

raji said...

@வெங்கட் நாகராஜ்

பாராட்டிற்கு நன்றி சார்

@ரிஷபன்

உங்கள் நம்பிக்கையை மேலும் காப்பாற்றும் பொறுப்பை
எழுத்து எனக்கு வழங்கட்டும்

பாராட்டிற்கும் ஊக்கத்திற்கும் நன்றி சார்

@விச்சு

நன்றி

middleclassmadhavi said...

Vaazhkkaippaadam!
Very nice!

முத்தரசு said...

படமும் கவிதையும் தலைப்பும் செம பொருத்தம் -

MANO நாஞ்சில் மனோ said...

ஆஹா வீடு பற்றியும் கொத்தனார் பற்றியும் கவிதை அருமை....!

வித்யா சுப்ரமணியம் (Vidya Subramaniam) said...

அற்புதம் ராஜி. ஏதோ ஒரு பொழுதாவது கொத்தனாரைத் திட்டாதவர் எவருமில்லை. உள்ளம கோயிலானோர் உடல் அழுக்கைப் பற்றியோ பழுதைப் பற்றியோ கவலை கொள்வதில்லை. தையல்காரனிடம் புது சட்டை வேண்டாம் என்று வேண்டுவர். மிக உண்மையாய் சொல்லப்பட்ட கவிதை. இன்னும் நிறைய இது போல் எழுதுங்கள்.

RVS said...

படைப்புக் கொத்தனார்... சூப்பர்ப்.

நடுவில் கொத்தனாரைப் பாராட்டியதாகவும் எழுதியிருக்கலாம். :-))

என்னங்க இப்படி திடீர்னு ஒரு கவிதையில இமாலயப் பாய்ச்சல் பாஞ்சுட்டீங்க.. ரொம்ப நல்லாயிருக்கு. :-)

Yaathoramani.blogspot.com said...

உச்சம் தொட்ட உன்னதக் கவிதை
மீண்டும் மீண்டும் படித்து லயித்தேன்
மனம் கவர்ந்த பதிவு
தொடர வாழ்த்துக்கள்

இராஜராஜேஸ்வரி said...

முகப்பு வாசல்
கண்ட வார்த்தைகளால்
கஷ்டம் தேடிக் கொண்டதோடு,

கொத்தனாரையும் திட்ட ஆரம்பித்தது

தேடிக்கொண்ட கஷ்ட்ட்டம் திட்டுகிறது படைத்தவனை..

சிறப்பாய் மனம் கவர்ந்த ஆக்கம்!! பாராட்டுக்கள் ...

ஜீவி said...

பார்த்துப் பார்த்துக் கட்டுவதில்
பேர் பெற்றவர் இவர்
உலகம் பூரா இந்த
ஒற்றைக் கொத்தனார்
கட்டிய வீடுகளே.
அத்தனையும் இவருக்கே
சொந்தமானவை
வாடகைக்குத் தான்
விட்டிருக்கிறார்
வீட்டை அலங்கோலமாய்
வைத்திருந்தால்
வெக்கேட் தான்;
வேறு வழியேயில்லை..

சுந்தர்ஜி ப்ரகாஷ் said...

கொத்தனாரை முன் வைத்து உங்களுக்குள் இருந்த சித்தனார் வெளியேறி வந்திருக்கிறார்.

//எலும்புத்தூண் உறுதி இழக்க
சதைக் கலவை தளர
ஒளி ஒலி சன்னல்கள் மங்க//

முதலிலேயே எதெது என்னவென்று சொல்லிவிட்டதால் மறுபடியும் அதை நினைவுபடுத்தியிருக்கவேண்டியதில்லை.

நல்ல முயற்சி. இன்னொரு தடவை இந்த கான்செப்டை எழுதிப்பாருங்கள் ராஜி.கொஞ்சம் அவசரம் தெரிகிறது.

கீதமஞ்சரி said...

வீட்டைக் கட்டுவதோடு கொத்தனாரின் வேலை முடிந்துவிடுகிறதே... அடுத்து பராமரிக்கும் வேலை வீட்டின் பொறுப்பிலேயே விடப்படுகிறது. வீடுகள் தத்தமது பராமரிப்பில் கவனம் செலுத்தாமல் இருந்துவிட்டு கொத்தனாரைக் குறை சொல்கின்றன எப்போதும். என்ன செய்வது?

அழகான குறியீட்டுக் கவிதைக்குப் பாராட்டுகள் ராஜி.

...αηαη∂.... said...

Nice Post.., Keep it up:)

vasan said...

கொத்த‌னார் க‌ட்டிய‌ வீடு விழுந்தாலும்,
அது 'வீடு பேறு" தானே!!
அவ‌ன் க‌ட்டிய‌ வீட்டிலிருந்து,
காட்டிய‌ வீட்டிற்கு மாற்ற‌ம்,
அடுத்த‌ வீடு க‌ட்டித் த‌ரும் வ‌ரை...

உறுப்புக்க‌ளை, உருவ‌கித்த‌ க‌ற்ப‌னை
மிக‌ இய‌ல்பாய், அருமையாய் வீட்டிற்கு பொருத்த‌மாய்.

raji said...

@மாதவி

நன்றி

@மனசாட்சி

நன்றி

@MANO நாஞ்சில் மனோ

நன்றி

@வித்யா சுப்ரமணியம் மேடம்

கட்டாயமாக தங்கள் ஊக்கத்தில் வளரும்

@RVS

ஆரம்ப வரியே பாராட்டில்தான் தொடங்குகிறது.

//நன்றாய்த்தான் கட்டியிருந்தான்
கொத்தனார் என் வீட்டை//

நன்றி

@ரமணி

மீண்டும் மீண்டும் படித்தமைக்கும் பாராட்டிற்கும் நன்றி

@இராஜராஜேஸ்வரி மேடம்

ஆழ்ந்து படித்தமைக்கும் பாராட்டிற்கும் நன்றி

@ஜீவி

கருத்திற்கு நன்றி

@சுந்தர்ஜி

கருத்திற்கு நன்றி.முயற்சிக்கிறேன் ஜி!

@கீதமஞ்சரி

நன்றி

@anand

thank you

@vasan

கருத்திற்கு நன்றி

Anonymous said...

அருமையாய் உள்ளது! பகிர்விற்கு நன்றி!
http://vallimalaigurunadha.blogspot.com
http://atchayahealth.blogspot.com

Post a Comment