Friday, August 26, 2011

புரிதல்கள்

Couple : Loving couple holding hands with rings against wedding dress


"ப்ரியா...! ப்ரியா..............!"

"ப்ஸு....!முகச்சுளிப்புடன் மிக்சியை நிறுத்தினாள்  ப்ரியா

"ப்ரியா! நான் கூப்பிட்டுக்கிட்டுருக்கேன் என்னனு கூட
கேக்காம என்னதான் கிழிக்கறயோ?"

"என்ன வசந்த் வேணும்.காலை வேளைல சமையலறைல
வேலை இருக்காதா?எதுக்கு இப்பிடி கத்தறீங்க?"

"என்னது கத்தறேனா?உனக்கு நான் கத்தறதுதான் தெரியுது.நீ பண்றது தெரியுதா?அப்போலேருந்து என் ப்ளூ சாக்ஸ் தேடறேன் காணோம்.ஒரு இடமா வைக்க துப்பு இருக்கா?கூப்பிட்டா வந்து என்ன ஏதுன்னு கேட்டு எடுத்து தராம கத்தறேன்னு என்னை சொல்ற அளவுக்கு இருக்கு."

"இங்கதான இருக்கு.சரியா பாக்கறதே கிடையாது.என் மேலதான் எரிஞ்சு
விழத் தெரியும்"

"சரி சரி டிபன் ரெடி பண்ணிட்டியா?எனக்கு இன்னிக்கு சீக்கரம் போகணும்னு நேத்தே சொன்னேனே.ஞாபகமில்லையா?"

"எல்லாமே ரெடி"

"என் பென் ட்ரைவ் எங்க? எடுத்தியா? எடுத்தா எடுத்த இடத்துல வச்சுத் தொலையறதில்லையா"?

"நா எதுக்கு எடுக்கப் போறேன்? உங்க லேப்டாப் பேக்லையே இருக்கு.
ஒழுங்கா பாக்காம எல்லாத்துக்கும் ஏன்தான் இப்படி எரிஞ்சு எரிஞ்சு விழறீங்களோ?

"உன் பொலம்பலை ஆரம்பிச்சுடாத.நான் சாப்ட்டு கிளம்பறேன்"

திருமணமான நாளிலிருந்தே வசந்த் இப்படித்தான்.எதையும் தானாக
எடுத்துக் கொள்ள மாட்டான்.கண்ணெதிரில் இருக்கும் பொருளைக்
கூட தானாக எடுத்துக் கொள்வதில்லை.எதெற்கெடுத்தாலும் ப்ரியாவை
கூப்பிட்டு கத்தலோடு பேசுவான்.ப்ரியாவிற்கு சலிப்பாக இருந்தது.
இது என்ன வழக்கம் என்று வசந்தை பற்றி யோசித்துக் கொண்டிருந்தவள்
தரையில் தண்ணீர் இருப்பதைப் பார்க்காமல் காலை வைத்தாள்.

"த்தனை நாள் ரெஸ்டில் இருக்க வேண்டும் டாக்டர்?

"மைல்ட் பிராக்சர்தான் இருந்தாலும் நாலு வாரம் கட்டு போடணும்.
அதுவரை கொஞ்சம் ஸ்ட்ரெயின் ஆகாம பாத்துக்கங்க".

ப்ரியாவிற்கு வலியையும் தாண்டி மலைப்பாக இருந்தது.

மையலையிலிருந்து குக்கர் விசில் வந்தது.கையில் ட்ரேயுடன் வசந்த் வந்தான்."இந்தா ஹார்லிக்ஸ் குடி.தெம்பாயிருக்கும்.என்ன
பாக்கற? சமயம் பாத்து அம்மாவும் டூர்  போய்ட்டாங்களே,அடி பட்டிருச்சே எப்படி சமாளிக்கறதுன்னா? எல்லாம் நான் பாத்துப்பேன்.இதைக் குடிச்சுட்டு, மாத்திரை தரேன் அதைப் போட்டுக்கோ.இட்லி வச்சு சட்னி அரைச்சுட்டேன். மத்யானத்துக்கு சமையல் ஆகிட்டிருக்கு.ஒரு வாரம் லீவ் போட்ருக்கேன்.அதுக்கப்பறமும் எல்லாம் பண்ணி பக்கத்துல வச்சுட்டு போறேன்.நீ எதுக்கும் கவலைப் படாத"

மறு வாரம் வாக்கருடன் மெதுவாக தேவைக்கு மட்டும் நடந்தாள்.
சுற்றி ஒரு பார்வை பார்த்தாள். ரூம் சுத்தமாக இருந்தது.எல்லா ட்ரெஸ்ஸும் அயர்ன் செய்து கரெக்டாக
அடுக்கப் பட்டிருந்தது.படித்த பேப்பர் மடிப்பாக வைக்கப் பட்டிருந்தது.
சமையலறை கச்சிதமாக இருந்ததைப் பார்த்து ப்ரியாவுக்கு வியப்பாக இருந்தது.வசந்துக்கு இப்படி இருக்கத் தெரியுமா என்று ஆச்சர்யித்தாள்.

"லோ!"

"ப்ரியாவா?எப்படி இருக்க? நான்தாண்டி உமா பேசறேன். கால் எப்படி இருக்கு?"

"ஹேய்!உமா! நீ எப்படி இருக்க? கால் நல்லா குணமாய்டுச்சு"

"ப்ரியா! ப்ரியா..........!

 வசந்தின் குரல் கேட்டு,  "உமா! நான் அப்பறம் பேசறேண்டி" என்று போனை வைத்தாள்.

"ப்ரியா.......!என்ன பண்ற? கூப்டறது கேக்கலையா?என் பிங்க் கலர்
ஷர்ட் எங்க வச்சுத் தொலைச்ச?"

வழக்கமாக வரும் முகச்சுளிப்பிற்கு பதில் ப்ரியாவிற்கு உதடு புன்னகையுடன் விரிந்தது.

Monday, August 8, 2011

நெய்வேலி சந்தனம்


சில்லென்று காற்று வீசும் ஒரு அருமையான மாலைப் பொழுது.
ஆறரை மணி அளவில் எப்பொழுது வேண்டுமானாலும் நான் வருவேனாக்கும் என்று மழை எட்டிப் பார்க்கத் துடித்துக் கொண்டிருக்கும் சமயம்.

அது ஒரு திறந்தவெளி அரங்கம்.மேடை மட்டும் கட்டிடத்தால் ஆனது.
எதிரே பார்வையாளர்கள் அமர திறந்தவெளியில் வரிசையாக நாற்காலிகள்
போடப்பட்டிருக்க மேடை ஒரு சங்கீத கச்சேரிக்கு தயாராகிக் கொண்டிருந்தது.
இடம் குரோம்பேட்டையில் உள்ள ஸ்ரீமதி ராம்குவார் தேவி  ஃபோம்ரா விவேகானந்தா வித்யாலயா பள்ளியின் அரங்கம்.ஆகஸ்ட் ஏழாம் தேதி மாலை 
நேரம் ஞாயிற்றுக்கிழமை.

கொஞ்சம் கொஞ்சமாக பார்வையாளர்கள் வர, பிரபல பாடகர் திரு. நெய்வேலி 
சந்தான கோபாலன் அவர்களின் பாட்டுக் கச்சேரி களை கட்ட ஆரம்பித்தது.
திரு டில்லி சுந்தரராஜன் அவர்களின் வயலினுடனும் திரு சூரிய நாராயணன் அவர்களின் மிருதங்கத்துடனும் வர்ணம் ஆரம்பித்து வாதாபி கணபதிம் 
பாடி முடித்ததும் உமாபரண ராகத்தில் பாடல் எடுத்தார்.பாதி பாடலின் போதே
சிறு தூற்றலுடன் ஆரம்பித்த மழை சற்று பெரிதாக பார்வையாளர்கள் 
எழவும் மனமற்று ரசித்துக் கொண்டிருக்க சிலர் காரிடாரில் இடம் பிடிக்க 
பாடல் முடிவில் சந்தான கோபாலன் அவர்கள் அனைவரையும் மேடையிலேயே வந்தமர்ந்து கேட்குமாறு கூறினார்.

அனைவரும் மேடையேறி அடுத்த கீர்த்தனையை ரசிக்க தயாரானார்கள்.
சுற்றி ரசிகர்கள் கூட்டம் அமர்ந்திருக்க அட்டகாசமாக "ராமனுக்கு மன்னன் முடி தரித்தாலே" என்ற ஹிந்தோள ராக கீர்த்தனையை ஆலாபனையுடன் 
தொடங்கினார்

.உண்மையிலேயே ராமனுக்கு முடி தரிக்கும் பொழுது நான் அருகில் இருந்திருந்தால் இப்படி ஒரு சந்தோஷம் கிட்டி இருக்குமா என தெரியவில்லை.எத்தனையோ மேடைக் கச்சேரிகள் கேட்டிருந்தாலும் 
மேடையிலேயே ஒரு பிரபல பாடகரின் அருகிலேயே அமர்ந்து கச்சேரி கேட்ட அந்த அனுபவம் பரவசமாக இருந்தது."பழம் நழுவி பாலில் விழுந்தாற்போல் ஆச்சே" என்று அவர் பாடிய பொழுது எனக்கு அப்படித்தான் தோன்றியது.

"கா வா வா, கந்தா வா வா" என்ற பாடலுக்கு அவரின் ஆலாபனைக்கு எதிரே இருந்த மரத்தில் ஒரு குயில் எதிர் குரல் கொடுக்க மழை தாளம் போட
அது ஒரு அற்புத நிமிடங்களாக அமைந்தது.

வித்தை கற்றவன் கர்வமற்றிருப்பது அவசியம்.இந்த வாக்கியத்திற்கு 
மிகப் பொருத்தமானவராக இந்த பாடகரைக் குறிப்பிடலாம்.

ரசிகர்கள் அமர்வதற்காக பக்க வாத்தியக்காரர்கள் பாடகருக்கு மிக நெருக்கமாக அமர்ந்து வாசித்தது இன்னும் சிறப்பு. 
மழைக்கு தவித்த ரசிகர்களை தன்னருகே அமர வைத்துக் கொண்டு மிக 
உற்சாகமாக அங்கு நெய்வேலியின் சந்தனம் மணம் வீசியது.