Wednesday, April 27, 2011

எந்தையும் தாயும்

திண்னென்ற   தலையணையாய்

தந்தை மடி


மெத்தென்ற பஞ்சணையாய்

தாயின் மடி


சூரியக் கற்றைகளாய்

தந்தைக் கரம்

சந்திரக் கிரணங்களாய்

தாயின் கரம்

ஆகாய விரிவுகளாய்

தந்தை மனம்

பூமியின் தயவினதாய்

தாயின் மனம்

கடலலை ஆரவாரமாய்

தந்தை சிரிப்பு

மழை நீரின் இதமானாதாய்

தாயின் சிரிப்பு

ஆலமர விழுதுகளாய்

தந்தை நட்பு

அழகான மலர் மணமாய்

தாயின் நட்பு

வேரின் உறுதியாய்

தந்தை சொற்கள்

கனியின் சுவையாய்

தாயின் சொற்கள்

எந்தையும் தாயும்

மகிழ்ந்து குலவி

வளர்த்ததும் இவ்வுயிரே 

Saturday, April 16, 2011

பாசியாய்...

Crying Eye



மனக்குளத்தில் மலர வேண்டிய
மணமிகு  தாமரை எண்ணங்கள்

பாசி பாசியாய் படர்ந்து
பேசி பேசி வெறுப்போடி

வாசத்தை இழந்து  நாசி மூட வைக்க,
வாழ்க்கைப் படியில் வழுக்கியது.

ஊசிப் போன உறவுகளும்
உதறிப் போன நட்புகளுமாய்

உலகம் மாறிய பின்
உணர்ந்து திரும்புகையில்,

கூசிப் போன தருணங்களும்
குறுகிப் போன நிமிடங்களுமாய்

உருகி நின்று தவித்தாலும்
உபயோகம்தான் என்ன மனமே?

Thursday, April 14, 2011

பெண் எழுத்து

lady writing

பதிவர் மனோ மேடம் அவர்கள் "பெண் எழுத்து" தொடர் பதிவிட என்னையும் அழைத்திருந்தார்.முதலில், அழைப்பிற்கு அவர்களுக்கு நன்றி கூறிக்கொள்கிறேன்.

"பெண் எழுத்து" தொடர் பதிவில் பல பதிவர்கள் தங்கள் கருத்துக்களை
பதிந்துள்ளனர்.பல வித கருத்துக்களை பலர் கூறியிருப்பினும் நான்
இது தொடர்பாக அறிந்தவற்றை பகிர விரும்புகிறேன்.

பொதுவாக பெண் எழுத்து, ஆண் எழுத்து என்று பேதங்கள் கிடையாது என்று நாம் கூறிக் கொண்டாலும் எப்பொழுது பெண் எழுத்து என தலைப்பிடப்பட்டு எழுதப் பட ஆரம்பித்து விட்டதோ அப்பொழுதே
"பெண் எழுத்து" பற்றி தனிப்பட்ட கருத்துக்களும் அபிப்ராய பேதங்களும் பெண்கள் எழுதுவதில் சிக்கல்களும் உண்டு என்பது தெளிவாகின்றது.

கட்டாயமாக, நிச்சயமாக  சில விஷயங்களை  ஒரு ஆண் எழுத்தாளர் எழுதக்கூடிய அதே முறையில்,அது கதைக்கு கட்டுரைக்கு மிகவும் அவசியமானதாகவே இருந்தாலும் கூட பெண் எழுத்தாளர்கள் எழுதுவதில் சங்கடங்கள் பிறக்கத்தான் செய்கின்றன.அதை மீறி எழுதும் பெண் எழுத்தாளர்கள் நிறைய தர்ம சங்கடமான சூழல்களை சந்திக்கத்தான் வேண்டியுள்ளது.

சமீபத்தில் ஒரு பதிவில் கதைக்கு பொருந்தக் கூடிய ஒரு வரி கதையில் சேர்க்கப் பட்டிருந்தது.ஒரு பெண் கதாபாத்திரம் தன் மன வலியை உணர்த்துவதற்காக தன் கறை படிந்த உள்ளாடையைப் பற்றி பேசும் விதமாக அமைக்கப் பட்டிருந்தது.அந்த இடத்தில் அது அவசியமே.
ஆனால் அதை எழுதியது ஒரு ஆண் எழுத்தாளர்.ஒரு பெண் எழுத்தாளர் அப்படிப்பட்ட வரிகளால்  உணர்த்த, யோசிக்கும் நிலைமை இன்னும் இருக்கத்தான் செய்கிறது.

சில நாட்களுக்கு முன் நான் படித்த செய்தி ஒன்றை அடித்தளமாகக் கொண்டு ஒரு பதிவிட எண்ணியிருந்தேன்.ஆனால் என் உறவினர் பெண்
ஒருவர் "இதைப் பற்றியா எழுதப் போகிறாய்?இதனால் உனக்கு தர்ம
சங்கடங்கள் ஏற்படலாம்"  என கூறினார்.நான் படித்த செய்தி இதுதான்:

"மும்பை  டாக்டர் இந்துஜா அவர்கள் தனது ஆய்வுக் கட்டுரை ஒன்றில்
பெண்களின் மாதவிடாய் சமயத்தில் வெளியேறும் ரத்தப் போக்கை
கிருமிகளற்று சேமித்தால் அதிலிருந்து பல நோய் தீர்க்கும் மருந்துகள்
கிடைக்கும் என எழுதியுள்ளார்"

இதை எழுதுவதில் கூட பிரச்சனைகள் உள்ளது.

எழுத்தாளர் பாலகுமாரன் அவர்கள் எழுதும் அதே காம வெளிப்பாட்டை ஒரு பெண் எழுத்தாளர் எழுதினால் அது கடும் விமர்சனத்திற்கு
ஆளாகி விடுகின்றது.எழுத்தாளர் ஜெயகாந்தன் அவர்களால் எழுதப் படும் ஒரு புரட்சிகரமான எழுத்து ஒரு பெண் எழுத்தாளருடையதாக இருப்பின்
அது கலாசார சீர்கேடு என்று முத்திரை குத்தப் பட்டு விடும்.

சமீபத்தில் நான் எழுதிய "துணை" தொடர் fertility , impotency
போன்ற வார்த்தைகளால் திரிக்கப்பட்டு விமர்சனத்திற்கு  உள்ளானது.
ஆனால் ஆலமரம் போன்ற சிவசங்கரி,இந்துமதி மற்றும் வித்யா
சுப்ரமணியம் போன்ற எழுத்தாளர்களே புயலை சந்திக்க நேரும் பொழுது
என் போன்ற தளிர்கள்  எம்மாத்திரம்?

எழுத்தாளர் வித்யா சுப்ரமணியம் அவர்களை படிக்க ஆரம்பித்த நாட்களில்
இவர் யார் என்ற தேடுதல் ஆர்வத்தில் நான் அவரைப் பற்றி அறிய
சில குறிப்புகளை படிக்க நேர்ந்தது.அவரது எழுத்துக்களைப் பற்றியும் அவரது விருதுகள் பற்றியும் அதில் குறிப்பிட்டிருந்தது.ஆனால் கூடவே
feminist  என்ற வார்த்தை ஒட்டிக் கொண்டிருந்தது.இப்படி ஒரு முத்திரைக்கு என்ன அவசியம்?

"இரண்டு பேர்" என்ற தலைப்பில் சிவசங்கரி அவர்களும் இந்துமதி அவர்களும் இணைந்து ஒரு படைப்பை உருவாக்கி இருந்தனர்.
ஒருவர் எழுதும்போதே அதில் தடுமாற்றங்கள், பாத்திர தன்மையில்
சிக்கல்கள் ஏற்பட வாய்ப்புகள் இருக்கும்போது ஒருவரது நடையை மற்றவர் தொடர்வது  அதுவும் பாத்திரத்தன்மை,கதை நடை கெடாமல் கொண்டு செல்வதற்கு தனித் திறமைதான்  வேண்டும்.அப்படி ஒரு
அனாயாசமாய் எழுதப்பட்ட கதை.ஆனால் அது கடும் விமர்சனத்திற்கு உள்ளானது.கதையின் நாயகி திருமணமானவள்.அவளுக்கு இருக்கும் கலை
ஈடுபாட்டால் அப்படிப்பட்ட ஒருவருடன் பழக நேரிடும் பொழுது எல்லை மீறும்  சந்தர்ப்பம் ஏற்படுகிறது.ஆனால் அது நடவாமல் அவள் மீண்டு விடுகிறாள்.கதையை அருமையாக கொண்டு சென்றிருப்பார்கள் கத்தி மேல்  நடக்கும் வித்தை மாதிரி.

அதற்கு வந்த கண்டனங்களையும் ஆசிரியர்களின் பதிலையும் இங்கு தந்துள்ளேன்:


1 .  "பெண் இனமே தலை குனிய வேண்டிய நாவல்.எப்படித்தான் இரு பெண்கள் மனம் வந்து எழுதினார்களோ?"

2 . "இரண்டு பேரைப் படித்து அதிர்ச்சிக்கு உள்ளானேன்.ஆண் எழுத்தாளர்கள்
எழுதி இருந்தாலும் பரவாயில்லை.ஆனால் பண்பட்ட பெண் எழுத்தாளர்களா இப்படி எழுதுவது?"


ஆசிரியரின் பதில்:

"கதையின் கருத்தை விட அதை பெண்கள் எழுதி உள்ளதுதான் மனதில் படுகிறது.அப்படி என்றால் இதையே ஆண் எழுத்தாளர் எழுதினால் இவர்கள் ஒப்புக் கொண்டிருப்பார்கள் போல இருக்கிறதே?"

ஆசிரியர் தன் உறவினர் ஒருவர் கேட்ட கேள்விக்கு தான் அளித்த
பதிலையும் வெளியிட்டிருந்தார்கள்:

"ஏம்மா நல்ல குடும்பத்துப் பெண்ணான நீ இப்படி எல்லாம் எழுதலாமா?"

"வேறு குடும்பப் பெண் எழுதி இருந்தால் ரசித்திருப்பீர்கள்  அல்லவா?"

இன்னொரு கண்டனக் கடிதம்:  "இரண்டு விலை******கள் சேர்ந்து எழுதினால் இப்படித்தான் இருக்கும்"

ஆசிரியரின் பதில்:

"எழுத்தை கவனியுங்கள்.அதை தூற்றுங்கள், பாராட்டுங்கள்.அதை அக்கு வேறு ஆணி வேறாய் பிரித்து அலசுங்கள்.you are most welcome .அதை
விட்டு விட்டு எழுதும் கை,முகம்,உடம்பு,கணவன்,குடும்பம் என்று நீளமாய்
எல்லை மீறுவது வேண்டாமே?.அதிர்ஷடவசமாய் சின்ன சிரிப்புடன் இவற்றை ஒதுக்கும் கணவர் மற்றும் in -laws எங்களுக்கு இருக்கிறார்கள்.
சந்தேக மனசு கொண்டவர்களாக இருந்தால் அந்த பெண் எழுத்தாளர் பேனாவை மூடி வைக்க வேண்டியதுதான்"   

எழுத்தை மட்டும் பார்க்காமல் அதை எழுதியது ஆணா பெண்ணா என்று
ஆராயும் பொழுது "பெண் எழுத்து" என்ற பிரிவு இருப்பதை ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும்.

பதிவர் மதி சுதா அவர்கள் ஆணுறை பற்றி எழுதி இருப்பதை, கட்டாயமாக
ஒரு பெண் எழுதும் சூழல் இன்னும் உருவாகவில்லை.பதிவர் கோபி   
அவர்கள் "சரவண கார்த்திகேயனின்  'பரத்தை கூற்று' புத்தக விமர்சனத்தின்
போது விபச்சாரத்தை சட்ட மயமாக்குவது பற்றி குறிப்பிட்டிருந்தார்.
நிச்சயமாக இந்த விஷயத்தை ஒரு பெண் பதிவர் எழுத தயங்கும் நிலை
இருக்கத்தான் செய்கிறது.பரத்தை கூற்றையே ஒரு பெண் எழுதி இருந்தால் சமூகத்தில் சங்கடங்களை சந்திக்கும் சந்தர்ப்பம் அமைந்திருக்கும்.சொல்லப் போனால் இவற்றுக்கெல்லாம் பெண்கள் விமர்சனம் எழுதும் நிலை கூட வரவில்லை எனலாம்.

கல்கியின் சம காலத்தவரான வை மு கோதை நாயகி அம்மாள் பற்றி
அறிந்தவர்களை, கல்கியை அறிந்த சதவிகிதத்தினரோடு ஒப்பிட்டால்
மிகப் பெரிய வித்தியாசம்தான் விடையாகக் கிடைக்கும்.

மென்மையான காதல்,பாசம்,அன்பு,குடும்பப் பின்னணி, சமூகப் பார்வை
மருத்துவம்,மன வளம்  இவை போன்ற அடித்தளங்களை வைத்து எழுத முடிகிற பெண் எழுத்தாளர்களால், என்றைக்கு  ஆணுக்கு இணையாக மற்ற தளங்களையும் வைத்து எழுத முடிகிறதோ(கடும் கண்டனங்கள் இன்றி)
அன்று இந்த "பெண் எழுத்து" என்ற தலைப்பு அவசியமற்று போய் விடும்.
அந்த அவசியமற்று போக வேண்டும் என்பது ஒரு பெண் என்ற முறையில் எனது விருப்பமாகிறது.

இந்த "பெண் எழுத்து" தொடர் பதிவை தொடர சக பதிவர் "சாகம்பரி",
பதிவர் " எல் கே" , பதிவர்  "ஆர் வி எஸ்" மற்றும் பதிவர் "அப்பாவி தங்கமணி" அவர்களை வேண்டுகோளுடன் அழைக்கிறேன்.

Friday, April 8, 2011

ரசம்


 
"ஏய்!  மெதுவாப்பா, பாத்து பாத்து.மெல்ல தூக்கிகிட்டு போங்க.ஏதாச்சும்
டேமேஜ் ஆகிடப் போகுது. ரொம்ப காஸ்ட்லி சிலை.முத தடவை லண்டன் போனப்ப வாங்கினது" 
 
சாய்வு நாற்காலியில் அமர்ந்து பழைய நினைவுகளில் மூழ்கியிருந்த கோதண்டம் ரவியின் குரலில் கலைந்து நிமிர்ந்தார்.
 
நீல நிற சட்டைக்கு  கருநீல பேன்ட் அணிந்து சட்டையில் பாக்கெட்
ஓரத்தில் ஃபாஸ்ட் பேக்கர்ஸ் அன்ட் மூவர்ஸ் என்ற எழுத்துக்களோடு குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டிருந்தனர் ஆட்கள்.ரவி ஏகத்துக்கும் விரட்டிக் கொண்டிருந்தான்.
 
"அதை இரண்டு பேரா தூக்கறீங்க?.போதாது.நாலு ஆட்களா தூக்குங்க.
வெயிட் தாங்காம விட்டுட்டா என்னாறது? அது ஜெர்மன்ல வாங்கினது.
நல்ல கலை நயத்தோட செஞ்ச டைனிங்  டேபிள்.ஜாக்கிரதை"
 
கோதண்டம் பெருமூச்சோடு தன் அறைக்கு சென்று அந்த கண்ணாடியை
மீண்டும் எடுத்துப் பார்த்தார்.கனகத்தின் நினைவுகள் அலை மோதின.
கனகத்தின் தாத்தா தன் பெண்ணுக்கு அளித்த கல்யாண சீர்தான் இந்தக்
கண்ணாடி.அதன் பின் கனகத்தின் தாய் அவளுக்கு இதை சீதனமாக
தந்து விட என்பது ஆண்டுகளைத் தாண்டி ரசமிழக்காது புதுப் பொலிவுடன் விளங்குகிற கண்ணாடி.இதில்தான்... இதில்தான் கனகம் முகம் பார்த்து
வட்ட வடிவமாய் அளந்தெடுத்தாற் போல பளிச்சென சிவந்த குங்குமம் இட்டுக் கொள்வாள்.அவள் உதடு சிவப்பா குங்குமம் சிவப்பா என கண்ணாடிக்கு குழப்பமே ஏற்பட்டிருக்கும்.
 
கனகத்தின் ஞாபகார்த்தமாய் அவள் காலத்திற்குப் பின்னும் கோதண்டம்
இதை வைத்திருக்கிறார்.இன்னமும் இதில்தான் முகம் பார்ப்பார்.இத்தனை வருடங்களில் இந்தக் கண்ணாடி எத்தனை முகங்களைப் பார்த்து விட்டது.ஆனாலும் ரசமிழக்காது பொலிவாய் உள்ளது.ஆச்சரியத்துடனும்
வருத்தத்துடனும் கண்ணாடியைக் கையில் எடுத்தார்.அது கலங்கிய கண்களுடன் நின்ற கோதண்டத்தை பிரதிபலித்தது.
 
"ஹாய்! கிராண்ட்பா! ஹவ் ஆர் யூ?"
 
"ஓ! துளசியா? வா வா! எப்ப வந்த அமெரிக்காலேருந்து?"
 
"ஜஸ்ட் நௌ கிராண்ட்பா! வந்ததுமே உங்களை பாக்காத்தான் ஓடி வந்தேன்.அதுக்குள்ளே வீடு காலி பண்ற வேலையெல்லாம் ஆரம்பிச்சாச்சா? வெரிகுட்.அப்பாடி!இனி நாம எல்லோரும் ஒரே வீட்ல சந்தோஷமா இருக்கப் போறோம்.இத்தனை நாள் நீங்க இங்கயும் நாங்க அமெரிக்காலயும்னு ஒரே போர்.நல்லவேளை,இனி இன்டியாலையே செட்டில் ஆயிடலாம்னு அப்பா முடிவு பண்ணிட்டார்.இல்லேன்னா உங்க கூட இருக்க சான்ஸ் கிடைச்சிருக்காது.ஆமா! அதென்ன கையில?"
 
"இதுவா? இது உங்க பாட்டியோட கண்ணாடிம்மா"
 
"ஓ! அதான் உங்க கண்ணெல்லாம் கலங்கிருக்கா? கிராண்ட்பா! ப்ளீஸ்
ரிலாக்ஸ் பண்ணுங்க.அதை இப்படி கொடுங்க"
 
"அதெல்லாம் ஒன்னுமில்லடா.இந்தா பிடி"
 
"ஹௌ நைஸ்.கிராண்ட்பா! ப்ளீஸ் இதை நான் வச்சுக்கட்டுமா?"
 
"இங்க என்ன பண்ற துளசி? அதென்ன கையில?" கேட்டுக் கொண்டே வந்தான் ரவி.
 
"டாட்! இங்க பாருங்க கிராண்ட்மாவோட கண்ணாடி.சூப்பரா இருக்கு இல்ல?"
 
"இதை  நேத்தே டிஸ்போஸ் பண்ணுங்க,பழசு  எதுவும் கொண்டு
வர வேண்டாம்.புது வீட்டுக்கு தகுந்தாப்பல வேற வச்சுக்கலாம்னு நான்
சொன்னேனே.நீங்க இன்னுமா தூக்கிப் போடாம வச்சுருக்கீங்க?'  என்று
கோபமாகக் கத்தினான் ரவி.
 
கோதண்டத்தின் சுருங்கிப் போன முகம் பார்த்த துளசி நிலைமையைப் புரிந்து கொண்டாள்.
 
"டாட்! இதை கிராண்ட்பா வச்சுக்கறதால உங்களுக்கு என்ன கஷ்டம்?.
இன்ஃபாக்ட் இதை எனக்கு கொடுக்க முடியுமான்னு நானே கிராண்ட்பா கிட்ட கேட்டுக்கிட்டிருந்தேன்.அதுக்குள்ளே நீங்க வந்துட்டீங்க"
 
"என்ன உளர்ற? உனக்கில்லாத புது வகை கண்ணாடியா?இது எதுக்கு
உனக்கு? வீட்டை நல்லா மாடர்னா கட்டிட்டு அதுல இப்பிடி பழசைப்
போட்டு அடைப்பானேன்?"
 
"உங்களுக்குத்தான் டாட் அப்படி தோணுது.எனக்கு அப்படி தோணலை.
இதுல கிரான்ட்பாக்கு ஏதாவது செண்டிமெண்ட்ஸ் இருக்கலாம்.
உங்களுக்கு அம்மா பிரசன்ட் பண்ணின வாட்சைத்தான இன்னமும்   உப்யோகிக்கறிங்க? வேற எத்தனையோ புது மாடல் வந்தாச்சே?"
 
"அது...... "
 
"விடு துளசிம்மா!உங்க பாட்டியே போய் சேர்ந்தாச்சு.இப்ப என்ன?"
விரக்தியாய் குரல் கம்ம சொன்னார் கோதண்டம்.
 
"வருத்தமில்லாம இதை உங்களால சொல்ல முடியுமா கிராண்ட்பா?
டாட்!ப்ளீஸ்! கிராண்ட்பாவோட ஃபீலிங்சை புரிஞ்சுக்க ட்ரை பண்ணுங்க.
உங்க பொருட்கள்ல வெளிநாட்டுல வாங்கின பெருமை இருக்கலாம்.பட்
அதுல ஒரு சந்தோஷ உணர்விருக்காது.இது அப்படி இல்லை.நம்ம பரம்பரை மூலத்தை நமக்கு உணர்த்தற  சந்தோஷம் இதுல உண்டு.
இதுல என்னிக்குமே கிராண்ட்மாவோட ஒரு டச் இருந்துகிட்டே இருக்கும்.அது உங்க பொருட்கள்ல கிடைக்காது டாட்"
 
ஆணித்தரமாய் உணர்த்தும் பதினாறு வயதுப் பெண்ணை ரவி
ஆச்சரியமாய் பார்த்துக் கொண்டிருந்தான்.
 
கோதண்டமோ,  ரசமிழக்காத  மனித  முகங்களும்  மனிதம்  இழக்காத  மனங்களும்  இன்னும் இருக்கிற ஆச்சரியத்தில் பேத்தியைப் பார்த்துக் கொண்டிருந்தார்.
 
"என்ன டாட்!ஒன்னும் சொல்ல மாட்டேங்கறீங்க?"
 
"ஓகே டா! உன் விருப்பப்படியும்  அப்பா விருப்பப்படியும் இதை கொண்டு போகலாம்.இப்ப சந்தோஷம்தான உங்க ரெண்டு பேருக்கும்?"
 
"என்ன கிராண்ட்பா!இப்ப உங்களுக்கு சந்தோஷம்தான?"
 
"ரொம்ப சந்தோஷம்டா,ஆனா இப்படி கிரான்ட்பான்னு கூப்பிடாம தாத்தான்னு 
அழகா தமிழ்ல கூப்பிட்டா இன்னும் சந்தோஷமா இருக்கும் எனக்கு" 
 
சரி  தாத்தா! இனிமே உங்களை தாத்தான்னே கூப்பிடறேன்,ஓக்கேவா
தாத்தா? இப்ப உங்களுக்கு ரொம்ப சந்தோஷம்தான தாத்தா?"
 
"டபுள் சந்தோஷமாக்கும்"
 
அடிக்கொரு தாத்தா போடும் பேத்தியை உரத்த சிரிப்புடன் கோதண்டம்
பார்க்க, பேத்தியையும் சிரிப்பு தொற்றிக் கொள்ள அவர்களின் சிரிப்பை
கோதண்டத்தின் மடியிலிருந்த கண்ணாடி பிரதிபலித்துக் கொண்டிருந்தது.

Tuesday, April 5, 2011

திருக்குளந்தை


திருநெல்வேலியின் தாமிரபரணிக் கரையை சுற்றி ஒன்பது வைணவ
திவ்ய தேசங்களான நவ திருப்பதிகள் அமைந்துள்ளன.அவற்றில்
திருக்குளந்தை எனப்படும் பெருங்குளம் ஒரு திவ்ய தேசம் ஆகும்.
ஆழ்வார்களால் பாடப்பட்ட நூற்றியெட்டு திவ்ய தேசங்களுள் இந்த நவ
திருப்பதி மிகவும் முக்கியத்துவம் பெற்றவை

ஸ்தல புராணம்:    வேதசாரன் மற்றும் குமுதவல்லி என்ற தம்பதியினருக்கு
நீண்ட நாட்களாக குழந்தை பேறு இல்லாமல் இங்குள்ள குளத்தில்
நீராடி இறைவனை நோக்கி தவம் செய்ய மகாவிஷ்ணு இவர்களுக்கு
பெண் குழந்தைப் பேற்றை வரமாக அருளினார்.

கமலாவதி என்ற பெயர் பெற்ற அந்த பெண் குழந்தை இறைவனையே
மணக்க விரும்பி தவமிருக்க அதில் மகிழ்ந்த எம்பெருமான் அவளை
மணந்து தனது மார்பில் இடமளித்தார்.

இத்தலத்தில் பெருமாள் கருட வாகனத்தில் எழுந்தருளி அஸ்மசாரன்
என்னும் அசுரனை வதம் செய்து அந்த வெற்றியில் நாட்டியமாடியதால்
இப்பெருமாளுக்கு சோரநாட்டியன் (மாயக்கூத்தன்) என்ற திருநாமம்
ஏற்பட்டது.

இத்தலம் சனி ப்ரீதிக்கு பெயர் பெற்றது.
திருக்குளந்தை எனப்படும் பெருங்குளத்தில் பங்குனி உத்சவம் மிகவும்
விமரிசையாகக் கொண்டாடப் படுகிறது.அந்த பங்குனி உத்சவத்தின் ஒரு
துளியும் ஊரின் அழகும்  இங்கே புகைப்படங்களாகத் தரப்பட்டுள்ளது.


திருக்குளந்தை கோபுரம்:



தாமிரபரணி ஆறு:   தாமிர தாதுக்கள் அடங்கியிருப்பதால் தாமிரபரணி என்ற பெயர் பெற்றதாகக் கூறப் படுகிறது. தாமிரபரணி என்ற பெயருக்கு மற்றுமொரு காரணமும் உண்டு. தான் மறந்த பர நீர் ,  அதாவது தன்னை
மறந்து பிறருக்காகவே ஓடும் நீர் என்று பொருள். இதற்கு பொருணை
என்ற பெயரும் உண்டு.தாமிரபரணியின் அழகை கீழே புகைப்படத்தில் கண்டு களிக்கலாம்.

திருக்குளந்தை  என்ற இந்த ஊரில் அமையப் பெற்ற பெரிய குளத்தின் காரணமாக இந்த ஊர் பெருங்குளம் என்றும் பெயர் பெற்றது.
ஊரில் எழுந்தருளி இருக்கும் பெருமாள் அழகிய கோலத்தில் காட்சி தருகிறார்.மூலவர் திருநாமம் வேங்கடவாணன்.உத்சவர் திருநாமம்
மாயக்கூத்தன். சோரநாட்டியன் என்ற பெயரும் உண்டு.தாயார் குளந்தைவல்லித் தாயார், அலர்மேல் மங்கைத் தாயார்.



இத்தலம் நம்மாழ்வாரால் பாடல் பெற்ற ஸ்தலம்.

ஆழ்வார் பாசுரம்:

"கூடச் சென்றேன் இனியென் கொடுக்கேன்

கோல்வளை நெஞ்சத் தொடக்க மெல்லாம்

பாடற் றொழிய இழந்து வைகல்

பல்வளையார் முன் பரிசழிந்தேன்

மாடக்கொடி மதில் தென் குளந்தை

வன்குட பால் நின்ற மாயகூத்தன்

ஆடர் பறவை யுயர்த்த வல்போர்

ஆழி வளவனை யாதரித்தே"

 
உத்சவரின் அழகிய திருகோலம்:




 பெரிய திருவடி எனப்படும்  கருடன்:     பெருமாள்  இத்தலத்திற்கு எழுந்தருள கருடன் ஒரு
கருவியாக   செயல்பட்ட காரணத்தால் இத்தலத்தில் கருடனை உத்சவ
மூர்த்தியின் அருகில் காணலாம்.                                                                     


சயனக் கோலத்தில் மாயக்கூத்தர்:




தோளுக்கினியானில் மாயக்கூத்தர் திருவீதி உலா:

திருமஞ்சனத்திற்கு எழுந்தருளி இருக்கும் மாயக்கூத்தர்:

அற்புத திருமஞ்சனம்:


சேஷ வாகனத்தில் திருவீதி உலா:

கருட சேவை:

ஊரில் சன்னதி வீதியில் அமைந்த புஷ்கரிணி:
தெப்பக்குளம் தாமரை இலைகள் நிறைந்து  காட்சியளிக்கின்ற  அழகு

இதை தவிரவும் இவ்வூரில் ஒரு பெரிய குளம் ஒன்று உண்டு.அதன் காரணத்தால்தான் பெருங்குளம் எனவும் இவ்வூர் பெயர் பெற்றது.

வயல்வெளி:
                      

சலசலக்கும் தாமிரபரணியின் ஓசையுடனும் வயல்வெளியும் குளங்களும்
தென்னை மற்றும் பனை மரங்கள் சூழவும்  வீற்றிருக்கும் எம்பெருமானின்
திவ்ய அழகு மனதையும் கருத்தையும் ஈர்ப்பதில் ஆச்சரியமில்லைதான்.