ஆச்சர்யமும் அற்ற
கேள்விக்குறியுமற்ற-
முன்னிலை, படர்க்கையை
நகர்த்தும் தன்மைச் சொல்லாய்
இந்த உலகில் - ”நான்”
*************************
உலகையெல்லாம் நீ
உன் கண்ணால்
பார்க்க அதனுள்
என்னைப் பார்க்கிறேன்
நான்
************************
என்றேனும் நேரக்கூடும்,
என் இழப்பால்
இடிந்து நிற்காதே.
இறந்த காலமல்ல நான்.
உன் எதிரே ஒரு வேளை
உணவுக்காய் கையேந்தும்
உதவியற்ற சிறுமியாகவோ
மழைக்கு ஒதுங்க இடமற்ற
மூதாட்டியாகவோ வரும்
நிகழ்காலம்தான் நான்
************************
நான் என்பது என் உடலல்ல - கலங்காதே
நான்கு பேருக்கு உதவியாக
தந்துவிடும் உறுப்புகளில்
எரிந்த பின் வாழும் பீனிக்ஸ் நான் .
*****************************
காயென நினைத்தேன் கசந்தது
கனியென நினைத்தேன் இனித்தது - இறைவா
நீயென நினைத்தேன் நடந்தது - எல்லாம்
நானென நினைத்தேன் முடிந்தது
****************************************
டிஸ்கி 1 : சென்ற பதிவில் 'நீ'. என்ற தலைப்பில் எழுதியதை படித்து விட்டு பதிவர் ஆர்விஎஸ் அவர்கள் ( இப்பல்லாம் இவரை பதிவர்னு சொல்றதை விட முகநூல்காரர்னு சொல்றது பொருத்தமா இருக்கும்.இதை நான் கோவமா சொல்றேன் .அந்த அளவு அவர் தனி பதிவுகள் போடறதில்லை ) . ' நான் '. என்ற தலைப்பில் எழுதச் சொல்லிக் கேட்டதன் விளைவே இந்தப் பதிவு.(நியாயமா போன பதிவைப் படிச்சப்பறம் தலை தெறிக்க ஓடி இருக்கணும்.அவருக்கு என்னவோ ஒரு விபரீத ஆசை .அதுக்காக பாதிக் கல்லை அவர் பக்கம் யாரும் எறிய வேண்டாம்னு கேட்டுக்கறேன் :-). )
டிஸ்கி 2 : இதில் பதிந்திருக்கும் கடைசி கவிதை (!) எனது பதினைந்தாவது வயதில் நான் எழுதிய எனது முதல் கவிதை என்பதைக் கூறிக் கொள்கிறேன். :-)
அப்பலேருந்தே நீ இப்படித்தானான்னு(!) உங்க மைண்ட் வாய்ஸ் எனக்கு க்ளியரா கேக்குது. :-)