Friday, July 27, 2012

என் வாழ்வில் ஸ்ரீ ராகம்

பதினெட்டு வருஷத்துக்கு முன்னாடி................

நீங்க நினைக்கறது ரொம்ப சரி.இதுஒரு கொசுவத்தி பதிவுதான்

சரி!மேட்டருக்கு வரலாமா? சுயபுராணமான்னு ஓடிடாதீங்க.இதுல கொஞ்சம் ரொமான்ஸும் கலந்துருக்கறதா வச்சுக்கலாம்.

பொண்ணு கல்யாண வயசை நெருங்கிட்டாளே.நல்ல மாப்பிள்ளை அமையணுமேன்னு அப்பாவும் அம்மாவும் கவலையோட வரன் பாக்க ஆரம்பிச்சாங்க.ஊர் உறவு அக்கம் பக்கம் எல்லார் கிட்டயும் நல்ல வரனா வந்தா சொல்லுங்கோன்னு இதே ஸ்மரணைதான்

டெல்லி பெங்களூருன்னு வரன் வந்தாலும் அம்புட்டு தூரத்துல  (?!) பொண்ணை எப்பிடி குடுக்கறதுன்னு ஒரே தயக்கம்.

இந்த சமயம் பாத்துதான் ஒரு வரன் வந்தது.  நாலு தெரு தள்ளி. விட்ருவாங்களா? பையன் எப்பிடி, குடும்பம் எப்பிடி எல்லாம்விசாரிச்சு திருப்தியானப்பறம் சம்பந்தம் பேசி  ஏற்பாடும் ஆயாச்சு.

அந்த வருஷம் ஏ ஆர் ரகுமான் "அந்தி மாலை" அப்படிங்கற ஆல்பம் ஒண்ணு போட்டிருந்தார்.அதுல எஸ் ஜானகி அம்மா 'அந்தி மாலை கோவில் வந்தேன்  அந்த வேளை உன்னைக் கண்டேன்' அப்பிடின்னு பாடின பாட்டுஒண்ணு உண்டு.எனக்கு அந்தப் பாடல் மிகவும் பிடிக்கும்.அதை பாடவும் செய்வேன்.
அந்த பாடலின் ராகம் ஸ்ரீ ராகம்

இந்த நேரத்துல வழக்கம் போல ஒரு நாள் சாயங்காலம் கோவிலுக்கு போயிருந்தேன்.எப்பவும் கொண்டு போற மாதிரி பூவும் கொண்டு போயிருந்தேன்,என்னுடன் என் மன்னியும் வந்திருந்தார்கள்

உள்ளே போனதும் மன்னி ஆச்சர்யமான குரலில் என்னைக் கூப்பிட்டு
என்னை திரும்பி பார்க்க சொன்னார்கள்.திரும்பினா நம்மாளு நிக்கறார்,
அந்த சமயம் பாத்து ஒரு பொடிப் பயல் ஓடி வந்தவன் என் மேல மோதி பூவெல்லாம் கொட்டிப் போச்சு.சார்தான் எடுத்துக் கொடுத்தார்.கோவில்ல இருக்கற முக்கால்வாசிப் பேரும் ரெண்டு குடும்பத்துக்கும் தெரிஞ்சவங்கதான்.அத்தனை பேரும் பண்ணின கிண்டலுக்கு அளவே இல்ல.
பெருமாள்தான் பாவம் நம்பளை யாரும் கண்டுக்கலையோன்னு கொஞ்சம் வருத்தப் பட்டிருப்பாரோ என்னவோ ( அவர் நம்பளை கண்டுக்கிட்டா போறாதோ?)

வீட்டுக்கு நான் வரதுக்குள்ள விஷயம் எப்பிடித்தான் முன்னாடி போச்சோ தெரியலை.உள்ள நுழையும் போதே என் அண்ணாக்கள் எல்லாரும் சேர்ந்து கோரஸா "அந்தி மாலை கோவில் வந்தேன் அந்த வேளை உன்னைக் கண்டேன் நாளையும் வருவேன் உன்னைக் காண பொன் பூக்கள் கொண்டு"
அப்பிடின்னு பாட ஆரம்பிச்சுட்டாங்க.

அதுக்கப்பறம் அந்த பாட்டை சுதந்திரமா போட்டு கேக்க முடியல .பாட முடியல.போக வர நண்டு நசுக்கு எல்லாம் நம்பளை கலாய்க்க ஆரம்பிச்சுடுத்து.

அந்த பாட்டுல "பூக்கள் நான் தவற விட்டேன் எடுத்துக் கொடுத்தாய் தொடவும் இல்லை" அப்படின்னு ஒரு லைன் வரும். என் இன்னொரு மன்னி " நிஜமாவே  தொடலையாடி"ன்னு கேட்டு என்னை ஓட்டினது இருக்கே, தாங்கலடா சாமி!

இப்படி ஒரு பாட்டு இருக்கு.அது எனக்கு பிடிக்கும்.அதை வச்சு என்னை ஓட்டறாங்கன்னு இது எதுவுமே தெரியாத, அந்த பக்கத்துல ஒரு மனுஷர் ரொம்ப சாதாரணமா வீட்டுக்கு வந்துட்டார்.வேற யாரு?பூவை எடுத்துக் கொடுத்தவரேதான்.

மாப்பிள்ளை இருங்கோ பூ வாங்கிண்டு வரணும்.என்ன பூ வேணும்? மல்லி ஓக்கேயா? இல்ல ஜாதியா? அப்படின்னு கேட்டு அவர் எதுவும் புரியாம திருதிருன்னு முழிச்சார்.

கல்யாண நாள் வரை இந்த  பாட்டை வச்சு ஓட்டாத ஆளே இல்லங்கலாம்.இந்த பாட்டு ஸ்ரீ ராகம் அப்படிங்கறதால ஸ்ரீ ராகத்துல எந்த பாட்டு கேட்டாலும் (முக்கியமா எந்தரோ மஹானுபாவுலு) எல்லாரும் அர்த்தபுஷ்டியா ஒரு சிரிப்போட ஒரு பார்வை பார்ப்பாங்க..இப்பவும் இந்த பாட்டு என் கிட்ட இருக்கு.இப்ப சுதந்திரமா கேக்கறேன் பாடறேன்.ஆனாலும் பக்கத்துல யாருமிருந்தா இன்னும் கேலிதான் கிண்டல்தான்.இப்படியாக என் வாழ்வில் ஸ்ரீ ராகம் ஒரு முக்கியமான இடத்தைப் பிடித்தது.

நீங்களும் அந்த பாட்டை கேட்டு ரசிக்க வேண்டாமா? அதான் இங்க அந்த பாட்டையும் இணச்சுருக்கேன்  :-))))))))))))


அந்தி மாலை கோவில் வந்தேன்







Tuesday, July 24, 2012

உதயம் தியேட்டரும், தேவர் மகனும்

வருடம் 1992.  இடம் உதயம் தியேட்டர்.  நிகழ்ச்சி "தேவர் மகன் சினிமா"

பங்கேற்ற நபர்கள் ராஜியும் அவளது சகோதரர்களும் அவளது அண்ணிகளும்





தேவர் மகன் படம் வந்த இரண்டாம் நாளே பெரிய சகோதரன் பெரிய மன்னி,இரண்டாவது மன்னியுடன் படம் பார்த்தாகி விட்டது.அதுவும் எப்படி?

படத்திற்கு கிளம்பி பஸ்ஸுக்கு காத்துக் கொண்டிருந்த சமயம் ஏதோ தெரிந்தவர்கள் வந்து விட அவர்களுடன் இரு வார்த்தை பேசுவதற்குள் பஸ் வந்து விடவே நான், முதல் மன்னி மற்றும் இரண்டாவது மன்னி ஏறி விட அண்ணா ஏறவில்லை என்பதை கவனிக்கவில்லை.பஸ்ஸும் கிளம்பி விட கொஞ்ச தூரம் சென்ற பின் தான் அண்ணா ஏறாதது தெரிந்தது.எப்படியும் வந்து விடுவான் என்ற நினைப்பில் அடுத்த ஸ்டாப்களிலும் நாங்கள் இறங்காது மன்னியிடம் இருந்த காசில் டிக்கெட் எடுத்து அம்ர்ந்தாகி விட்டது.

பாவம் அண்ணாவோ,  எங்களிடம் காசு இருக்கிறதோ இல்லையோ என்று பதறி உடனே ஒரு ஆட்டோ பிடித்து எங்கள் பஸ்ஸை ஃபாலோ செய்து வந்து கொண்டிருந்திருக்கிறான். நாலு ஸ்டாப் தாண்டிய பின் தான் அவனால் எங்கள் பஸ்ஸையே பிடிக்க முடிந்தது.அதற்குள் ஆட்டோ சார்ஜ் எகிறியது.
பஸ்ஸில் ஏறி, நாங்கள் இருப்பதை பார்த்து டிக்கெட் எடுத்து சொகுசாக அமர்ந்து வந்து கொண்டிருக்கிறோம் என்று தெரிந்ததும் அவன் கடுப்புக்கு அளவே இல்லை.மீதி தூரம் முழுக்க எங்களுக்கு பாட்டுதான்.ஒரு வழியாக தியேட்டர் வந்து படமும் ஆரம்பித்த பின் தான் நிறுத்தினான்.

தேவர் மகன் என்னை அதோடு விடவில்லை.ஒரு வாரம் கழித்து மீதி மூன்று சகோதரர்களும் தாங்கள் பார்க்கவில்லை என்பதால் எல்லாருக்குமாக  மொத்தமாக ரிசர்வ் செய்து விட்டார்கள்.எனக்கு அன்று காலையிலிருந்து லேசாக உடல் நலம் சரியில்லாமல் இருந்ததால் போக வேண்டாம் என்று முடிவாகியது.என் ஒருத்திக்காக எதற்கு நிறுத்துவது, ஏற்கனவே பார்த்தாயிற்றே என்றாலும் கேட்கவில்லை.சரி என்று ஒரு பேராசிட்டமால் போட்டுக் கொண்டு எல்லாருடனும் கிளம்பியாகி விட்டது.


படம் பார்த்துக் கொண்டு இருக்கையில் எனக்கு தூக்கம் கண்ணை சுழற்ற ஆரம்பித்து விட்டது.க்ளைமாக்ஸ் கொஞ்சம் வன்முறையானது என்பதாலும் ஏற்கனவே பார்த்ததுதானே என்பதாலும் சற்று கண்ணை மூடி சாய்ந்து அமர்ந்தவள் தூங்கி விட்டேன் போல.

படம் முடிந்ததும் ஏற்பட்ட சலசலப்பில் கண்ணை விழித்தவள் அரைகுறை தூக்கத்தில் நம்மைச் சேர்ந்தவர்களோடுதான் போகிறோமா என்றெல்லாம் கவனிக்காது கும்பலில் நகர்ந்தேன்.என் இரண்டாவது மன்னியோ அதே மஞ்சள் நிற சுடிதார் அணிந்த ஒரு பெண் அருகில் வந்து கொண்டிருந்ததால் நான்தான் பக்கத்தில் வந்து கொண்டிருக்கிறேன் என்று நினைத்து  மேற்கொண்டு நகர்ந்து சென்று விட்டார்கள்.சற்று நேரம் கழித்து என்னுடன் அவர்கள் இல்லை என்பதை நானும் அவர்களுடன் நான் இல்லை என்பதை அவர்களும் உணர ஒருவருக்கொருவர் தேட ஆரம்பித்தோம்.கும்பலில் தேடுவது சற்று சிரமமானதாகவே இருந்தது.உடனே என் இரண்டாவது அண்ணா மற்ற அனைவரையும் தியேட்டர் வாசலில் நிற்கச் சொல்லி, நான் அங்கு வருகிறேனா என்று பார்க்கச் சொல்லி விட்டு தியேட்டர் உள்ளே இருக்கிறேனா என்று பார்க்க வந்திருக்கிறான்.ஆனால் என் துரதிர்ஷ்டம் அவன் ஒரு பக்க படியின் வழியே மேலே ஏறிச்செல்லும் பொழுது நான் இன்னொரு பக்க படியின் வ்ழியேகீழிறங்கிக் கொண்டும் அவன் கீழிறங்கும் போது நான் மேலே ஏறிக் கொண்டும் இருந்திருக்கிறேன்.

என் கையில் பணமும் இல்லை.மணியோ இரவு ஒன்பதைத் தாண்ட ஆரம்பித்திருந்தது. ஒருவேளை யாரையும் பார்க்க முடியாவிட்டால் எப்படி வீட்டுக்குச் செல்வது என்று பயம் பிடிக்க ஆரம்பித்தது.கூட்டம் கலைந்ததும் தியேட்டர் வாசலுக்கு வர மீதி பேர்களை பார்த்ததும் தான்  மூச்சே வந்தது.உள்ளிருந்து வெளியே வந்த இரண்டாவது அண்ணாவோ அங்கு என்னைப் பார்த்ததும், "எங்கடி போய்த் தொலஞ்ச? மனுஷனுக்கு உசிர் போய் வந்துடுத்து" என்று தன் சஹஸ்ரநாமத்தை ஆரம்பித்து வீடு வரும் வரை அர்ச்சித்தான்.

வீட்டுக்குள் வந்ததும் அத்தனை பேரும் ஒன்று சேர்ந்து கப்சிப்.இன்னும் காணோமே என்று காத்திருந்த அம்மாவின் கண்களில் சந்தேகம் ஒரு பக்கம்.என்ன சினிமாக்கு போயிட்டு வந்த சந்தோஷத்தையே உன் புத்திர சிகாமணிகள் மூஞ்சில காணோமே? என்ன விஷயம் என்ற அப்பாவின் கேள்வி ஒரு பக்கம்.நாங்க ஏன் வாயைத் திறக்கறோம்.அத்தனை பேரும் ஆடு திருடின கள்ளன் முழியோட போட்ட சோத்தை தின்னுட்டு போர்வையை இழுத்து மூடி படுத்தாச்சு.

அப்பறம் பல நாட்கள் கழிச்சு இனி இதை சொன்னா பிரச்சனை இல்லை.அடுத்த தடவையும் வெளில அனுப்புவாங்க என்னைங்கற நம்பிக்கை வந்தப்பறம் மெதுவா சொல்லிட்டோம்.ஆறின கஞ்சி பழங்கஞ்சிதான.ஆனாலும் எனக்கு மட்டும் சின்னதா ஒரு திட்டு விழாம இல்ல.அது கூட இல்லன்னா அப்பறம் எப்படி இல்லையா?

என்ன? நீங்க என்ன சொல்றீங்க?அப்பவே காணாம போயிருந்தா இப்படி எல்லாம் எழுதி எங்க கழுத்தை அறுக்காம எங்களுக்கெல்லாம் ஒரு விடுதலை கிடைச்சிருக்குமேன்னா சொல்றீங்க? அப்படி எல்லாம் நினைக்காதீங்க.ஹாரி பாட்டர், பார்ட் பார்ட்டா வராப்புல நான்  "ராஜியின் ரகளைகள்"ன்னு வால்யூம் வால்யூமா எழுதி எல்லாரையும் நோகடிச்சிருப்பேனாக்கும்        :-))))))))))))))))))))



Saturday, July 14, 2012

விடுதலே விடுதலை

இங்கே இரண்டு
இளம் சிறுவர்கள்
இணைந்து விளையாடுகிறார்கள்

ஒன்று அந்தஸ்தானது
ஒன்றோ ஏழை

முதல் குழந்தைக்கு தயக்கம்
மண்ணைத் தொடவும்  தயக்கம்
மனமார ஓடியாடவும் தயக்கம்

புழுதி படிந்திடுமோ  எனவும்
புதுக்காலணி அறுந்திடுமோ எனவும்
பலவித அச்சங்கள்.

இவைகளற்ற குழந்தைக்கோ
இன்பமான இன்பம்


அழுக்கு பயமில்லை
ஆடை கசங்குமோ என்ற
அவஸ்தை இல்லை

ஊன்றிப் பார்க்கையில்
ஒன்று புரிபட்டது

விட்டுத்தான் பார்க்கலாமே சிலதையேனும்
விலக்கித்தான் பார்க்கலாமே சிலதை

விளையாட்டின் கொண்டாட்டம்
வாழ்க்கையிலும் அடைய

விடுதல்தான் விடுதலை

அதுவன்றி ஒட்டுதல்
அவஸ்தைதான்




Sunday, July 8, 2012

நானும் கொத்தனாரும்




  



நன்றாய்த்தான் கட்டியிருந்தான்
கொத்தனார் என் வீட்டை

எலும்பென்ற தூண்கள் வைத்து 
சதையென்ற கலவை பூசி
நன்றாகவே  கட்டியிருந்தான்

ஒளி வர இரண்டும்
ஒலி வர இரண்டும்
காற்றுக்கு இரண்டுமாய் 
சன்னல்கள் வைத்து,

முகப்பில் வாசலென 
முறுவல் செய்யும் துவாரமுமாய்
பார்த்து பார்த்துத்தான் கட்டியுள்ளான்

புதுவீடு நன்றாகவே இருந்தது
பத்து வருடங்கள் வரையிலும்

அடுத்த பத்து வருடங்கள் 
கொஞ்சம் பழசாயிற்று என்றாலும் 
நன்றாகத்தான் இருந்தது

பின் 
கொஞ்சம் கொஞ்சமாய்
குப்பைகளும் அழுக்குகளுமாய் 
குவிய ஆரம்பிக்க

கோவிலாய் இருந்த வீடு
களை இழக்க ஆரம்பித்தது

நாளடைவில் 
எலும்புத்தூண் உறுதி இழக்க
சதைக் கலவை  தளர 
ஒளி ஒலி சன்னல்கள் மங்க
காற்றும் சண்டித்தனமாயிற்று

முகப்பு வாசல்
கண்ட வார்த்தைகளால் 
கஷ்டம் தேடிக் கொண்டதோடு, 

கொத்தனாரையும் திட்ட ஆரம்பித்தது



Tuesday, July 3, 2012

குருத்தோலை


Stock Image - tropical background 
of coconut palm 
leaves. fotosearch 
- search stock 
photos, pictures, 
wall murals, images, 
and photo clipart



ஹலோ! மிஸ்டர் வைத்தியநாதன் ப்ளீஸ்?

.....................


சார்! என் பேர் ரகு.உங்க கூட வேலை பார்த்தாரே  ராகவன், அவரோட  சன்.


..........................


எனக்கு உங்களை நேர்ல பாத்துப் பேசணும்.கொஞ்சம் நேரம் ஒதுக்க முடியுமா?


...................


ஓக்கே சார்.தாங்க் யூ.ஈவ்னிங் உங்களை வந்து பாக்கறேன்,கொஞ்சம் அட்ரஸ்
சொல்றீங்களா?

அட்ரஸை குறித்துக் கொண்டு ஃபோனை வைத்த ரகு யோசனையில் ஆழ்ந்தான்.


சாயங்காலம் கூடுவாஞ்சேரிக்கு வைத்தியநாதனை தேடிச் சென்ற போது வீட்டைக் கண்டு பிடிப்பதுமுதலில் சற்று சிரமமாக இருந்தது.ஒருவழியாக வந்து சேர்ந்தபோது வாசலில் ஈசி சேரில் ஒரு முதியவர் புத்தகம் படித்துக்கொண்டிருந்தார்.

"எக்ஸ்க்யூஸ் மீ"


நிமிர்ந்து பார்த்தவரிடம். "மிஸ்டர்வைத்தியநாதன்...." என்று இழுத்த போது,

"நான்தான்.நீங்க மிஸ்டர் ரகு?"  என்றார்

"ஆமா சார்"

அமர வைத்து உள்ளே திரும்பி,  " சாந்தா! குடிக்க தண்ணி கொண்டா" என்றார்.


"சொல்லுங்க"

ஹாலை பார்வையால் சுற்றிப்பார்த்த ரகு தொண்டையை செருமிக் கொண்டு
பேச ஆரம்பித்தான்

"சார்! உங்க கூட வேலை பாத்தப்ப உங்களுக்கும் அப்பாக்கும் நல்ல உறவு இருந்ததுன்னு அப்பா சொல்லிக் கேட்டிருக்கேன்.இன்னும் மிஸ்டர் சண்முகம்னு ஒருத்தர் கூட அப்பாக்கு  நெருக்கம்னு சொல்லி இருக்கார்,ஆனா
வேலை மாற்றல், பதவி உயர்வுன்னு ஒரு கட்டத்துல எல்லாரும் ஆளுக்கு
ஒரு பக்கம் போயிட்டதா கேள்விப்பட்டேன்.இப்ப ரிடையர்மென்டுக்கு அப்பறம் யாரைப் பற்றியும் எந்த தகவலும் தெரியலைன்னும்  வருத்தப் படுவார்"

பழைய நினைவகளால் தூண்டப்பட்ட வைத்தியநாதனும் முகம் விகசிக்க
"ஆமாம்பா! நாங்கள்லாம் ஒருத்தருக்கொருத்தர் நல்ல நட்போட பழகிட்டிருந்தோம்.காலத்தோட கட்டாயம் இப்ப யார் எங்க இருக்காங்கன்னு கூட தெரியாம மூலைக்கொருத்தரா போயாச்சு.ஆமா!நீ எப்படி என்னைக் கண்டு பிடிச்ச? ராகவன் எப்படி இருக்கான்?எங்க இருக்கான்?"

"அப்பா இப்ப கொஞ்சம் உடம்புக்கு முடியாம இருக்கார்.அவரோட வேலை பார்த்த பழைய நட்புக்கள் ஞாபகம் அவருக்கு அடிக்கடி வருது.ஒருத்தரையும் பாக்க முடியலையேன்னு வருத்தமா இருக்கு அவருக்கு.அதே சமயம் தன்னைத் தேடி தன் பழைய நட்புக்கள் நிச்சயம் வருவாங்கன்னு அவர் நம்பறார்.ஆனா அது சாத்தியமான்னு எனக்குத் தோணினதால நான் உங்களைத் தேட முயற்சி எடுத்தேன்.சேலத்துல நீங்க வேலை செஞ்ச இடம்,நீங்க இருந்த இடம்னு எல்லார் கிட்டயும் விசாரிச்சு ஒரு வழியா நீங்க
இப்ப சென்னைல இருக்கீங்கன்னு தெரிஞ்சுண்டேன்.ஆனா எங்கன்னு தெரியாம தவிச்சப்ப ஆறு மாசம் முன்னாடி நீங்க சேலம் வந்ததாவும் அப்ப உங்க ஃபோன் நம்பர் குடுத்ததாவும் அங்க உங்க ஆஃபீஸ்ல கேஷியரா இருக்கற சுந்தரம் சொன்னார்.அதுக்கப்பறம் அந்த நம்பருக்கு ஃபோன் பண்ணி காலைல உங்க கிட்ட பேசினேன்"

"அட! ரொம்ப மெனக்கெட்டுருக்கயேப்பா? எங்களுக்கெல்லாம் இப்படித் தேடணும்னு தோணாம போச்சே"

"நாங்களும் இங்க பக்கத்துல தாம்பரத்துலதான் இருக்கோம்.எனக்கு நீங்க ஒரு உதவி செய்ய முடியுமா"

"சொல்லுப்பா"

"முடிஞ்சா மிஸ்டர் சண்முகம் எங்க இருக்கார்னு கண்டு பிடிச்சு அவரோட எங்கப்பாவை வந்து பாக்க முடியுமா? நானும் அவரைப்பத்தி விசாரிச்சுக்கிட்டு இருக்கேன்"

"முன்ன ஒரு தடவை ஒண்ணரை வருஷம் முன்னாடி நார்த்  இண்டியா டூர்
 போனப்ப  அங்க அவனை பாத்தேன்.ரெண்டு பேருமே அவசரத்துல இருந்ததால ரொம்ப பேச முடியலை.வடபழனில இருக்கறதா சொல்லி நம்பரும் கொடுத்தான்.ஆனா அதுக்கப்பறம் அவனை பாக்கவும் இல்ல.அந்த நம்பரும் இப்ப எங்கிட்ட இருக்கான்னு தெரியலை.தேடித்தான் பாக்கணும்.அப்படி அவனை கான்டாக்ட் பண்ண முடியாட்டி நான் வந்து பாக்கறேன்பா"

"இன்னொரு உதவி சார்!"

"சொல்லு தம்பி!"

" அப்படி நீங்க பாக்க வந்தா நீங்களா தேடிண்டு வந்த மாதிரி இருக்கட்டுமே.நான் உங்களை சந்திச்ச மாதிரி காமிச்சுக்க வேண்டாம்"

"ஏன்ப்பா அப்படி சொல்ற?அதுல என்ன பிரச்சனை?"

"பிரச்சனைலாம் ஒண்ணுமில்ல சார்! நீங்களா வந்தது போல இருந்தா அது அவருக்கு சந்தோஷத்தையும் திருப்தியையும் தரும்.அதான்....."

வைத்தியநாதன் வியப்பாய் பார்த்தார்.சரி தம்பி!அப்படியே செய்யறேன்"

அவர் மனைவி  உபசரிப்பாய் தந்த மிக்ஸரையும் காபியையும் பாராட்டிவிட்டு ரகு கிளம்பினான்.

ஒரு மாதம் கழித்து ஒரு ஞாயிற்றுக்கிழமை காலை டிபன் முடித்து வண்டி துடைத்துக் கொண்டிருக்கையில் வாசலில் வந்து நின்ற காரில் இருந்து வைத்தியநாதன் இறங்க அவருடன் இன்னொருவரும் இருந்தார்.

சந்தோஷமாக வரவேற்ற ரகுவிற்கு உடனிருந்தவரை "இவர்தான் அந்த சண்முகம்.ஒருவழியா பிடிச்சுட்டேன்" என்று அறிமுகம் செய்தார்.

படுத்துக் கொண்டிருந்த ராகவன் தன் முன்னே வந்து நின்ற தன் பழைய நண்பர்களை பார்த்ததும் சந்தோஷத்தில் திக்குமுக்காடிப் போனார்.

ரகுவை அழைத்து, "பாத்தயா?நான் சொன்னப்ப எல்லாம் உனக்கு நம்பிக்கை
இல்லையே?இப்ப பார்.என்னைத் தேடி என் நண்பர்கள் வந்தாச்சு" என்று குதூகலித்தார்

"அதில்லை ராகவா!" என்று ஆரம்பித்த வைத்தியநாதனை ரகு பார்வையால் நிறுத்தினான்

"சொல்லுடா வைத்தி! எப்படி இருக்க?டேய்! சண்முகம் ஆளே மாறிப் போயிட்டயேடா?சுகர் கிகர் இருக்கா? என்று ஆர்ப்பரித்தார் ராகவன்

இரண்டு மணி நேர உரையாடல் மற்றும் உபசரிப்புக்குப் பின் விடை பெற்ற
வைத்தியும் சண்முகமும் ரகுவிடம் வந்தனர்

"அற்புதமான பிள்ளைப்பா நீ.பெத்தவன் சந்தோஷத்துக்காக உன் முயற்சி பத்தி மூச்சுக் கூட விடக் கூடாதுன்னட்டயே"

"ஆமாம்பா! நாங்களா வந்து பாத்ததா அவன் நினைக்கறது எங்களுக்கு குத்த  
உணர்வா இருக்கு ரகு" என்றார் சண்முகம்


"உண்மைல எனக்காக நீங்க ரெண்டு பேரும்தான் உதவி இருக்கீங்க அங்கிள்.அதனால அப்படி நினைக்க வேண்டாமே ப்ளீஸ்"

"பழுத்தோலையைப் பாத்து சிரிச்சதாம் குருத்தோலைன்னு எங்க ஊர் பக்கம்  பெத்தவங்களை அவமரியாதை செய்யற பிள்ளைகளைப் பத்தி பேசுவாங்க.
ஆனா நீ பழுத்தோலையோட மனசு புரிஞ்ச குருத்தோலை தம்பி! தகப்பனோட தேவை புரிஞ்சு அதை நிறைவேத்தற  பிள்ளைகளா இருந்துட்டா வயசானவங்க நாதியத்துப் போற நிலைமை மாறிடும்.நீ நல்லா இருக்கணும்பா.நாங்க வரோம்.இனி அடிக்கடி எங்க நண்பனைப் பாக்க வருவோம்.அவனோட கடைசி கால சந்தோஷத்துல உன்னோட சேர்த்து இனிமே எங்க பங்கும் இருக்கும்"

அவர்கள் சென்ற பின்பும் இன்று வழக்கத்துக்கு மாறாக பழுத்தோலையின்
ஆர்ப்பரிப்பு கண்டு குருத்தோலை புன்னகைத்துக் கொண்டிருந்தது.