Friday, February 17, 2012

தோனி நாட் அவுட்

நான் இதுவரையில் சினிமா விமர்சனம் என்று எழுதியதில்லை.சிறிது நாட்களுக்கு முன் "மெரினா" என்ற படத்தைப் பார்த்து நொந்து போயிருந்த வேளையில் இந்த படத்தை (தோனி) பார்க்க நேரிட்டது.அதுதான் என்னை எழுத தூண்டியது.உண்மையில் "மெரினா" படம் பார்க்க செல்லும் முன் சக பதிவர் திரு கோபி அவர்கள் எழுதிய விமர்சனம் படிக்க நேரவில்லை.படித்திருந்தால் சென்றிருக்க மாட்டேன்.அவர் எழுதிய விமர்சனம் படிக்க இங்கே செல்லவும்.

அந்த வகையில் தோனி பார்க்க நேரிட்டதில் "மெரினா"வின் கடுப்பு குறைந்தது.
சற்று தாமதமான விமர்சனமாக இருப்பினும் பகிர நினைத்த விமர்சனம்

பிரகாஷ்ராஜ் - கே பி' ஸ் டச்

தோனி திரைப்படம் - பிரகாஷ்ராஜ்"ஸ் டச்

"ஷிக்ஷானாச்யா எய்ச்சா கோ" என்ற மராட்டிய மூலத்தை தழுவி எடுக்கப் பட்ட 
படமாக இருப்பினும் பிரகாஷ்ராஜ் தனது இயக்கத்தாலும் நடிப்பாலும் திரைப்படத்தை தூக்கி நிறுத்தியுள்ளார் என்றே கூறலாம்

குழந்தைகளுக்கு, அவர்களின் விருப்பத்திற்கு மாறாக எந்த விஷயத்தையும் திணிப்பது நல்ல பலனளிக்காது என்ற ஒன்லைன் ஸ்டோரியை திரைப்படமாக தந்திருக்கிறார்கள்.படிக்கும் பிள்ளைகள் இருப்பவர்கள் கட்டாயம் படத்தை ஒருமுறை பார்க்கவும். ஹிந்தியின் 'தாரே ஜமீன் பர்'  சற்று ஞாபகம் வருவது போல் இருந்தாலும் அதிலிருந்து வித்தியாசப் பட்ட படமே.


கணக்கும் இயற்பியலும் வராத, ஆனால் கிரிக்கெட்டில் ஆர்வமுடைய ஒன்பதாம் வகுப்பு படிக்கும் தாயற்ற பிள்ளையை பிரகாஷ்ராஜ் தந்தையாக கையாளும் விதமும் அதே பிள்ளை பள்ளியின் கெடுபிடிக்கு ஆளாகும் விதமும் நன்றாகவே படமாக்கப் பட்டிருக்கின்றது.ரிஜிஸ்டிரார் ஆஃபீசில் வேலை செய்யும் சுப்பு என்ற மிடில் க்ளாஸ் பாத்திரமாக பிரகாஷ்ராஜ் நன்றாகவே சோபித்திருக்கிறார்.பிள்ளையிடம் முதலில் கனிவாக இருப்பதும் படிக்கவில்லை என்றானதும் கோபமடைவதும் 'நீயா நானா' ஷோவில் குமுறுவதும், பிள்ளை நன்றாக ஆகிவிட மாட்டானா என்று தவிப்பதுமாக பாத்திரத்தை சிறப்பாக செய்திருக்கிறார்.ஆனால் பள்ளியில் கத்துவது போன்ற இடங்களில் சற்று ஓவர் ஆக்டிங்காக இருக்கிறதோ என்ற எண்ணம் வராமல் இல்லை.

அண்டை வீட்டுக்காரராக வரும் ராதிகா ஆப்தே, மராட்டிய அழகு.கண்களே உணர்வுகளை அழகாக வெளிப்படுத்தி விடுகிறது. நம் தமிழ் சினிமா இவருக்கு மீண்டும் வாய்ப்புத் தருகிறேன் பேர்வழி என்று டூ பீஸ் ட்ரஸ் போட்டு டங்கு டக்கா என்று ஆட விட்டு ஒரு நடிகையை கொலை செய்யாதிருத்தல் நலம்.

ஒரு சில காட்சிகளே வந்தாலம் நாசர் வழக்கம் போல் தன் இடத்தை இருத்திக் கொள்கிறார்.கனி பாயாக வரும் முரளி ஷர்மா வாய்ப்பை நன்றாக உபயோகித்திருக்கிறார்.சக ஊழியராக மொபைல் கடன் வாங்கிப் பேசும் பாத்திரம் நகைச்சுவைக்காக என்றால் சத்தியமாக ரசிக்க இயலவில்லை. 

முதல்வராக வரும் மீசை மழிக்கப் பட்ட சரத்பாபுவிற்கு இப்பொழுதுதான் வயோதிகத் தோற்றம் ஒரு வழியாக வந்து விட்டது

பிரகாஷ்ராஜின் மகனாக நடிக்கும் ஆகாஷ் கோமா ஸ்டேஜில் அசத்தி இருக்கிறான் என்றே சொல்லலாம்.தந்தை சொல்வதற்காக கிரிக்கெட்டை விட்டு ட்யூஷன் செல்ல நேரும்போதும்,  தங்கையிடம் டேட்டாக்கள் சொல்லும்போதும் நல்ல வெளிப்பாடு.

என்னதான் க்ளைமாக்ஸ் பன்ச்சாக இருக்க வேண்டும் என்று நினைத்திருந்தாலும், கல்விமுறையை மாற்ற வேண்டும் என்பதற்காக பதினேழாம் வாய்ப்பாட்டை உதாரணமாகக் கொண்டு முதலமைச்சரை நட்ட
நடு வெட்ட வெளியில் கேள்வி கேட்பதும் பேசுவதும் லாஜிக் இல்லாமல் 
தோன்றுகிறது.
மொத்தத்தில் குழந்தைகளை கோலுக்கு ஆடும் குரங்காக பெற்றோரும் பள்ளியும் நடத்தலாகாது என்பது நன்றாக வெளிப்பட்டிருக்கிறது.
இந்த படம் வெளி வந்த தினத்தின் முன் தினம் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவன் ஆசிரியையை கத்தியால் குத்திக் கொன்றான் என்ற செய்தி வந்தது.

அதீத செல்லம் என்றாலும் அதீத கண்டிப்பு என்றாலும் இரண்டுமே குழந்தைகளை மன நிலை பிறழ வைக்கும் வாய்ப்புடையதே என்பதை பெற்றோர்களும் கல்வி நிறுவனங்களும் உணர்ந்தால் சரி.


Sunday, February 12, 2012

விருது வாங்கலாம் வாங்க

மிக நீண்ட இடைவெளிக்குப் பின்னர் எல்லாருடனும் பதிவுலகில் இணைவதில்
மகிழ்கிறேன்.சில காரணங்களால் பதிவுலகிற்கு நேரம் செலவழிக்க இயலாமல் இருந்த சமயத்தில் திரு ரமணி சார் அவர்கள் நான் எழுதி எவ்வளவு நாட்கள் ஆகின்றது என்பதை எனக்கு நினைவூட்டி பின்னூட்டம் அளித்து என்னை மீண்டும் பதிவுலகம் வர ஊக்கமளித்திருந்தார்.அந்த சமயத்தில் திரு வை கோபாலகிருஷ்ணன் சார் எனக்கு விருது வழங்கி அதை தொடருமாறு அன்புடன் அழைத்தார்.

இவை தவிர ராம்வி,ஆச்சி,ஆதி,எல் கே சார் மற்றும் ஆர் வி எஸ் சார் போன்ற பலரின் விசாரிப்பும் எனக்கு ஊக்கமளிப்பதாக இருந்தது.

அனைவருக்கும் எனது நன்றிகள்



எனக்கு VERSATILE BLOGGER AWARD என்ற விருதினை வழங்கி மீண்டும் எழுத தூண்டிய மூத்த பதிவர் திரு வை கோபாலகிருஷ்ணன் சார் அவர்களுக்கு எனது சிறப்பு நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த விருது என்னை மட்டும் சார்ந்ததில்லை.இம்மாதிரி என்னை ஊக்கம் கொள்ள வைக்கும் அனைவருக்குமே இந்த விருதில் பங்கிருக்கிறது.

இந்த விருதைப் பெற்றவர் தனக்கு ஆர்வமுள்ள ஏதாவது ஏழு விஷயங்களைப்பற்றி சுருக்கமாகக் கூறிவிட்டு, தான் மிகவும் விரும்பும் தகுதி வாய்ந்த வேறு ஐந்து பதிவர்களுக்கு இந்த விருதை தன் மூலம் PASS ON செய்ய வேண்டுமாம். அப்போது தான் இந்த விருதை அவர் ஏற்றுக்கொண்டதாக அர்த்தமாம். 

அதனால் எனக்கு மிகவும் பிடித்தமான ஏழு விஷயங்களைப் பகிர்ந்து கொண்டு இன்னும் ஐந்து பேருக்கு இதனை என் மூலம் தொடர்கிறேன்

நான் விரும்பும் ஏழு விஷயங்கள் :

1 இசை (கேட்பது, பாடுவது மற்றும் வீணை வாசித்தல்)
2 படித்தல் (பல வகைப் பட்ட புத்தகங்களை படிப்பது)
3 பயணம் (பேருந்து,இரயில் மற்றும் காரில் பல விதமான இடங்களுக்கு பயணித்து அங்குள்ள 
விஷயங்களை அறிவது,இயற்கையை ரசிப்பது)
4 மழையில் நனைதல் (இது என்னைச் சுற்றி இருப்பவர்களை சற்று கோபமூட்டும் விஷயமாக இருப்பினும்)
5 எழுதுவது (இது கூட ஒருவகையில் மற்றவர்களைப் படுத்தும் விஷயமாக இருப்பினும்)
6 கடல் அலையில் கால் நனைத்தல்
7 குழந்தைகள் 

என் மூலம் இந்த விருதினை கீழ்க்கண்ட பதிவர்களுக்கு அளிக்கிறேன்



மேலே குறிப்பிட பட்டிருக்கும் பதிவர்கள் விருதினை ஏற்றுக்கொண்டதற்கு அடையாளமாக தங்களின் விருப்பங்கள் ஏழு பற்றி தங்கள் பதிவினில் கூறிவிட்டு, இதே முறையில், தங்களுக்கு மிகவும் பிடித்தமான தகுதி வாய்ந்த மற்ற ஐந்து பதிவர்களுக்கு, இந்த விருதினை அளிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.