Tuesday, June 28, 2011

"மன வெளியில் முன்னுரைகள்"

சிறந்த கதைகளின் முன்னுரை முகவுரை  பற்றி எழுதும் அளவிற்கு
எனக்கு ஞானம் இருக்கிறதா  என்று தெரியவில்லை.இருந்தாலும் என்
மீது மிகுந்த நம்பிக்கையுடன் வித்யா மேடம் அவர்கள் எனது முந்தைய பதிவில், பின்னூட்டத்தின் மூலம்  என்னை எழுத ஊக்குவித்ததன் விளைவாக நான் இதுவரை ரசித்த, என் மனதில் பதிந்து போன,
என்னை சிந்திக்க வைத்த சில முன்னுரைகளைப் பற்றி இங்கே பகிர்ந்து கொள்கிறேன்.

எழுத்தாளர் வித்யா மேடமும் எழுதி, நானும் எழுதவா? என்ற தயக்கம் முதலில் மேலோங்கி நின்றது.அதன் பின், பதிவர் ஆர் வி எஸ் மற்றும் ரிஷபன் சார் எழுதியதைப் படித்ததும் இதை விட என்ன எழுதி விட போகிறோம் என்றே தோன்றியது.ஆனாலும் வித்யா மேடத்தின் தொடர்ந்த  ஊக்கத்தினால் நம்பிக்கையுடன் எழுதியிருக்கிறேன்.

முதலில் எனது ஆதர்ச எழுத்தாளர் தி ஜானகிராமன் அவர்களின்
"அம்மா வந்தாள்"

இதில் தி ஜா அவர்கள் தனது  முன்னுரையில் இவ்வாறு குறிப்பிட்டிருப்பார்
"நல்ல இலக்கியமென்பது உண்மையை  ஒரு படைப்பாளன் தேடும் தவம்.அவனவன் கண்டு கொண்ட  விதத்தில் வெளிப்படும்பொழுது மனித முகங்களையும் குரல்களையும் போல், எழுத்திலும் சாயல்களும் தனித்தன்மையும் வளமாகக் கொழிக்கின்றன.மனித முகங்கள் போன்றே  நல்ல இலக்கிய முயற்சிகளும் வேறுபடவேண்டும்."

"மனத்துக்குள் ஏற்படும் விசித்திரமான அனுபவங்கள், பலவற்றைப் பார்த்து  
வெகு நாளாக ஊறி அனுபவித்த சில உணர்வுகள் கடைசியில் எப்படியோ உருவம் பெற்று வெளி வருகின்றன.நாம் உருவம்  கொடுப்பதாக எனக்கு தோன்றவில்லை"

அவரது இந்த உரை  எத்தனை நிதர்சனமான உண்மை! 

அடுத்தது எழுத்தாளர்" அனுத்தமா".இவரது கதைகள்  அனைத்துமே சுவையானவை."வேப்பமரத்து 
பங்களா" "நைந்த உள்ளம்"  போன்ற பல கதைகள் எனக்கு பிடித்தமானவை.
"நைந்த உள்ளத்தில்" இவர் தனது முன்னுரை தந்திருப்பார்.

"இறைவனின் படைப்பில் மிக அற்புதமான சிருஷ்டி மனிதன் என்றால் அவனுள்ளே இருக்கும் மிக அற்புதமான விஷயம் அவனது உள்ளம்.இன்று ஒரு பொருளை கைப்பு  என்று காட்டும்.நாளையே அதை தீஞ்சுவை மிக்க பொருள் என நீட்டும்."

"வாழ்க்கையின் விநோதத்தில் மனிதன் தன வயது மற்றும் சூழ்நிலைகளுக்கேற்ப விஷயங்களை நன்மை தீமை என பாகுபடுத்திக் கொள்கிறான்"

மனித  உள்ளத்தைப் பற்றி இதை விட தெளிவான விளக்கம் வேறென்ன வேண்டும்?

எழுத்துலகில் புரட்சி கண்ட எழுத்தாளர் ஜெயகாந்தனை அறியாதவர்களே
இருக்க வாய்ப்பில்லை.அவர் தனது "காற்று வெளியினிலே" வில்,

"வெறும் மனிதர்கள் காதல் செய்வதினாலோ அல்லது காதல் செய்யாமல் இருப்பதாலோ கதாநாயகர்களாகி  விட முடியாது.அவர்களது சமூகத் தொடர்பு,சமூகத்துடனான அவர்களது  பிரச்சனைகள், வாழ்க்கையில் உழன்று 
அவர்கள் சமாளிக்கும் விதங்கள்  அவர்களை கதாநாயக அந்தஸ்துக்கு உயர்த்துகின்றன" என்று குறிப்பிட்டிருப்பார்.

காதல் ரசம் சொட்ட சொட்ட எழுதப்படும் கதைகளை விட பல வித பிரச்சனைகளையும் தீர்வுகளையும் நிலைக்களனாகக் கொண்ட கதைகளே சிறந்து விளங்குகின்றன என்பதில் எனக்கும்  உடன்பாடு உண்டு.

மற்றுமொரு சிறந்த எழுத்தாளர் மராட்டிய மொழியில் கொடி கட்டிப் பறந்த
வி எஸ் காண்டேகர் அவர்கள்.இவர் எழுதிய பல நூல்களை தமிழில் நமக்கு மொழி பெயர்த்து தந்தவர்  கா ஸ்ரீ ஸ்ரீநிவாசாச்சரியார்.இவர் மொழி பெயர்த்து தமிழர்களால்  போற்றப்பட்ட பின்னரே கண்டேகர் அவர்களுக்கு
டாக்டர் பட்டம்,ஞான பீட விருது,பத்மபூஷன்  போன்றவை வந்தடைந்தன.கவிஞர் வாலி அவர்கள், "ஆயிரம் ஆண்டுகளுக்கு ஒருமுறை அவதரிக்க கூடிய அபூர்வ எழுத்தாளர்" என்று காண்டேகரை குறிப்பிட்டுள்ளார்.திரு  காண்டேகரின் "கருகிய மொட்டு" நாவலில் அல்லயன்ஸ் ஸ்ரீனிவாசன் முன்னுரை தந்திருப்பார்.

"பணம்" என்ற பொருளைப் பற்றி பணக்காரன்  சிந்தனை என்ன? ஏழையின்  சிந்தனை என்ன?.'பெண்' என்பவள் பற்றி இளைஞனின் சிந்தனை என்ன? முதியவர் சிந்தனை என்ன? ஆண்டவன் பற்றி ஞானியின் சிந்தனை என்ன? நாஸ்திகன் சிந்தனை என்ன?
இப்படி  ஒரே விஷயத்தை மனித மனங்கள் எப்படியெல்லாம் ஆராய்ச்சி 
செய்கின்றன என்பதை தன் கதாபாத்திரங்கள் மூலம் விளக்கியிருப்பதுதான் காண்டேகரின் மகாத்மியம்.இந்த நாவலை படித்த பிறகு இதை படித்தவர்கள் வாழ்க்கை என்றால் என்ன என்று உணர்ந்து செயல்படுவர்"

நாவலின் பின்னணியை நன்றாக எடுத்துக் கூறியிருப்பார் அல்லயன்ஸ் 

எழுத்தாளர் ராஜம் கிருஷ்ணன் "பாதையில் பதிந்த அடிகள் " என்ற புத்தகம் ஒன்று எழுதியுள்ளார்.அதற்கு அவர் முன்னுரையும் எழுதியுள்ளார்.
"ஒரு சமுதாயத்தின் இயக்கத்தை  அச்சாணியாக  நின்று இயக்குபவர்கள் பெண்கள் என்றால் அது மிகையில்லை.ஆனால்  ஒரு தேசிய வரலாற்றையோ சமுதாய வரலாற்றையோ பதிவு செய்பவர்கள் பெண்ணை அத்துணை உயர்வாகக் கருதுவதில்லை.ஜான்சியின் வீரத்தை
எதிராளியே குறித்து வைத்துள்ளான்.வள்ளியம்மையின் மன உறுதியை
காந்தியடிகள் எழுதி வைத்தார்.ஆனால் அத்தகைய பெருந்தகையாளர்கள்  மிக குறைவு.கீழ் தஞ்சை பகுதியில் உழவர் 
வாழ்க்கை ஆராயப் போன பொழுதுதான் மணலூர் மணியம்மாள் பற்றி தெரிய வந்தது.
ஒவ்வொரு உழவர் குடிலிலும்  இந்த அம்மையை தெய்வமாக கொண்டாடியதையும் அவரது வீர சாஹசங்களையும் போராட்டங்களையும்
கதை கதையாகக் கூறினர்"

வரலாற்றுப் பின்னணியுடன் எழுதுவது சிரமமான செயல்.சான்றுகளை
தேடுவது மட்டுமின்றி அந்த சான்றுகளுடன் தொடர்புபடுத்தி தெளிவாக
எழுதுவது கடினம்.இந்த வார்த்தைகள் எழுத்தாளர் வித்யா சுப்ரமணியம் எழுதிய "உப்புக்கணக்கு" என்ற புதினத்திற்கும்  மிகப் பொருந்தும்.

'உப்புக்கணக்கு" முன்னுரையில் எது என் மனதில் ஆழமாகப் பதிந்ததோ அதை எழுத்தாளர் தன் வலையில் குறிப்பிட்டு விட்டதால் நான் அவர் எழுதிய "தென்னங்காற்று" நாவலுக்கு திரு இரா பழனிவேல் அவர்கள் எழுதிய முன்னுரையை பகர்கிறேன்.

"நதிகள்தான் பூமித்தாயின் ரத்தக் குழாய்கள்.குழாயில் ரத்தம் இல்லை என்றால் 
எப்படி என்ற சிந்தனை  புதுமையானது. 
மனித மனங்களை கிரகங்களோடு ஒப்பிட்டிருப்பதும் அப்படித்தான்.கூட்டமாக  வாழ்ந்தாலும் ஒவ்வொரு மனித மனசும் புதிரான
கிரகம்தான்."
இந்த நாவலுக்கு முன்னுரையே இருந்திருக்காவிடினும் இந்த வரிகள் மனதில் பதிந்திருக்கும்.

இறுதியாக எழுத்தாளர் நா பார்த்தசாரதி அவர்களின் "குறிஞ்சி மலர்"
நாவலுக்கு டாக்டர் மு வ அவர்களின் முன்னுரை.

"நாவல் என்பது  பொழுதுபோக்கான வெறும் நூலாகவும்  அமையலாம்.
வாழ்க்கையின் உண்மைகளை உணர்த்தி கற்பவரின் உள்ளங்களை 
உயர்த்த வல்ல நல்ல  இலக்கியமாகவும் அமையலாம்.அவ்வாறு 
அமையும் பொழுது அது பழங்கால காவியத்துக்கு நிகர் ஆகின்றது,
காவியம் என்பது உரைநடை  வளராத காலத்தில்  செய்யுள் வடிவில்
அமைந்த கலைச்செல்வம்.நாவல் என்பது உரைநடை வளர்ச்சியால் இவ்வடிவில் அமையும்  கலைச்செல்வம்.இதுதான் வேறுபாடு"

இவரது கூற்றுப்படி சிறந்த நாவல்களை பழங்கால காவியத்திற்கு இணையாகவே ஒப்பிடலாம் அல்லவா?

இன்னும் மனம் கவர்ந்த முன்னுரைகள் பட்டியல் நீண்டு கிடக்கிறது.
இருப்பினும் கடல் நீரை கையில் பிடிக்கும் முயற்சியாகவே அது அமையும் என்பதாலும் பதிவின் நீளம் கருதி முடித்து கொள்கிறேன். (உனக்கு 
இதே அதிகம் இன்னும் வேற எங்களை படுத்திப் பாக்கணுமா அப்பிடின்னு காதுல விழுதே).வாய்ப்பளித்த வித்யா மேடத்திற்கு  நன்றி  

19 comments:

வை.கோபாலகிருஷ்ணன் said...

நீங்கள் குறிப்பிட்டுள்ள எந்தப்புத்தகங்களையும் இதுவரை படிக்கக்கூடிய வாய்ப்பு எனக்குக் கிட்டவில்லை. இருப்பினும் நீங்கள் குறிப்பிட்டுச் சொல்லியுள்ள முன்னுரைகள் யாவும் மிக நன்றாகவே உள்ளன.

//மனித முகங்கள் போன்றே நல்ல இலக்கிய முயற்சிகளும் வேறுபடவேண்டும்." "மனத்துக்குள் ஏற்படும் விசித்திரமான அனுபவங்கள், பலவற்றைப் பார்த்து வெகு நாளாக ஊறி அனுபவித்த சில உணர்வுகள் கடைசியில் எப்படியோ உருவம் பெற்று வெளி வருகின்றன.நாம் உருவம் கொடுப்பதாக எனக்கு தோன்றவில்லை"//

தி.ஜா.அவர்கள் கூறியுள்ள இந்தக்கருத்து எனக்கு மிகவும் பிடித்துள்ளது,அது தான் உண்மை என்று என் மனதுக்கும் தோன்றுவதால்.

நல்ல பல புத்தகங்களின் முன்னுரைகளைப் படித்து, அவற்றை எங்களுக்கும் பதிவாக்கித் தந்துள்ள உங்கள் முயற்சிக்கு என் நன்றி கலந்த பாராட்டுக்கள்.

Rathnavel Natarajan said...

நிறைய படிக்கிறீர்கள். நன்கு உள்வாங்கி நன்கு எழுதுகிறீர்கள். உங்கள் எழுத்து நடை நன்றாக இருக்கிறது.
மனப்பூர்வ வாழ்த்துக்கள்.

R. Gopi said...

நல்லா எழுதி இருக்கீங்க மேடம். என்னோட ட்ராப்டில் இருந்து ஒண்ணு ரெண்டு மேட்டரை சுட்டுட்டீங்க போல இருக்கே:-)

சி.பி.செந்தில்குமார் said...

>>"நல்ல இலக்கியமென்பது உண்மையை ஒரு படைப்பாளன் தேடும் தவம்.அவனவன் கண்ட விதத்தில் வெளிப்படும்பொழுது


அவனவன் கண்டு கொண்ட விதத்தில் வெளிப்படும்பொழுது

என இருந்தால் இன்னும் நல்லா இருக்கும்

raji said...

@சி பி செந்தில்குமார்

புரிந்தது.நன்றி.மாற்றி விட்டேன்

சி.பி.செந்தில்குமார் said...

>>அடுத்தது எழுத்தாளர்" அனுத்தமா"

ஐ திங்க் அநுத்தமா

raji said...

@சி பி செந்தில்குமார்

எப்படி டைப் பண்ணினாலும் அனுத்தமா என்றுதான் எனக்கு வருகிறது

MANO நாஞ்சில் மனோ said...

நிறைய பெயர் தெரியா நல்ல நல்ல புத்தகங்கள் படிக்கிறீர்கள் போல, வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் ராஜி....

சாகம்பரி said...

திரு.ஜெயகாந்தனின் "காற்றுவெளியினிலே" , நா.பார்த்தசாரதியின் "குறிஞ்சி மலர்" இரண்டுமே என்னுடைய சிந்தித்து படிக்கும் ஆர்வத்தை ஆரம்பித்துவைத்தன. அவற்றிற்கான முன்னுரைகளும் அருமை.

குறையொன்றுமில்லை. said...

நானும் இவர்களைப்படித்து பிரமித்திருக்கென். நீங்க
அழகா சொல்லிட்டீங்க.

RVS said...

வி.ஸ. காண்டேகரின் "யயாதி" பிரசித்தி பெற்ற ஒன்று. அவர் எழுதிய "ஆஸ்திகன்" என்ற சிறுகதைத் தொகுப்பு தத்துவங்களை விசிறியடிக்கும். ;-)))
"பிளேடு" போடாத அருமையான கட்டுரை.. ;-))

ADHI VENKAT said...

நல்ல பகிர்வு.

வெங்கட் நாகராஜ் said...

நல்ல பகிர்வு.... புத்தகம் படிப்பது என்பது எனக்குப் பிடித்த விஷயம். இப்போதெல்லாம் அவ்வளவாக படிக்க முடியவில்லை என்ற வருத்தத்தை அதிகமாக்கி விட்டது உங்கள் பதிவு....

வித்யா சுப்ரமணியம் (Vidya Subramaniam) said...

சில பேரிடம் எல்லா ஞானமும் இருக்கும். எதுவுமே தெரியாதென்று அவையடக்கத்தோடு சொல்லிக் கொள்வார்கள். ஆனால் நாங்கள் விட்டு விடுவோமா என்ன? இந்தத் தொடர் எவ்வளவு பயனுள்ளதாக செல்கிறது!. தோண்டத் தோண்ட புதையல்கள் கிடைக்கும் போலிருக்கிறதே. அழைப்புக்காகக் காத்திராமல் ஆர்வமுள்ளவர்கள் அனைவருமே இதைத் தொடர வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன். பதிவு அருமையாய் வந்திருக்கிறது ராஜி. நன்றி.

சிவகுமாரன் said...

இந்தப் பதிவின் மூலம் , நீங்கள் பட்டியலிட்ட புத்தகங்களை எல்லாம் படிக்கும் ஆவலை தூண்டி விட்டீர்கள். அருமையான இலக்கிய சேவை.

எல் கே said...

ஹ்ம்ம் முன்னுரையைப் பற்றி நன்றாக சொல்லி உள்ளீர்கள். எனக்கும் இதுக்கும் நோ சம்பந்தம். புதுவா முன்னுரை படிக்க மாட்டேன். புத்தகத்தினுள் சென்று விடுவேன்.

raji said...

பின்னூட்டமளித்து ஊக்கமளித்த அனைவருக்கும் எனது நன்றி.
இதை விருப்பமுள்ள அனைவருமே தொடருமாறு வேண்டுகோள் விடுக்கிறேன்

ரிஷபன் said...

அருமையாய் தொகுத்து தந்திருக்கிறீர்கள்.

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

என்ன ஒரு DEEP READING?

Post a Comment