Sunday, March 30, 2014

பிரமி



 30-03-14 தேதியிட்ட ”ராணி” இதழில் வெளிவந்த எனது சிறுகதை




 பிரமி


அது பத்தாம் வகுப்பு முடித்து பதினொன்றில் அடியெடுத்து வைத்த காலம்.பத்தாம் வகுப்பில் நான்,கல்யாணி,பிரமிளா,கீதா நால்வரும் ஒரே வகுப்புப்பிரிவு என்பதால் பதினொன்றில் ஒரே பெஞ்சைத் தேர்வு செய்து கொண்டோம்.முதலில் கீதாவும் பின்னர் நானும் எனக்குப் பக்கத்தில் பிரமிளாவும் அவளுக்கு அடுத்து கல்யாணியும் என்று அமர்ந்திருப்போம்.பேச்சுக்கும் கேலிக்கும் கிண்டலுக்கும் அளவே இருக்காது.

கீதா எப்போதும் பாட்டு மட்டுமே உலகம் என்றிருப்பவள்.ஸ்கூலில் நடக்கும் பாட்டு சம்பந்தமான நிகழ்ச்சிகளில் பங்கேற்பதும் அது பற்றி பேசுவதுமே அவளுக்கு போதுமானது என்பதால் தேர்ச்சி அடையும்  அளவில் படித்தால் போதும் என்று எண்ணுபவள்.

நான்,கல்யாணி,பிரமிளா மூவரும் முதலிடத்தைப் பிடிப்பதில் நாட்டம் கொண்டவர்கள்.எனக்கும் கல்யாணிக்கும் பிரமிளா ஒரு சவாலாகவே இருந்தாள் என்று சொல்லலாம்.அதிக பட்சம் நானோ கல்யாணியோ ஓரிரு முறைதான் அவளை தாண்டியிருப்போம்.

ஒரு நாள் வகுப்பில் பிரமிளா வழக்கத்துக்கு மாறாக பாடத்தைக் கூட கவனிக்காமல் மிகுந்த உற்சாகத்தில் இருந்தாள்
“என்னடி!ரொம்ப உற்சாகமா இருக்கறாப்புல தெரியுது? “ என்று கல்யாணி ஆர்வம் தாங்காமல் கேட்டாள்
“மத்தியானம் சாப்பாட்டு நேரத்துல சொல்றேன்” என்றாள் சற்றே பீடிகையுடன்.கொஞ்சம் வெட்கம் கலந்திருக்கிறதோ என்று எனக்கு சற்று சந்தேகம்

“சாப்பாடு இன்னிக்கு க்ளாசில் வேண்டாம்.லைப்ரரி பின்னாடி போயிடலாம்” என்றாள்
கீதா எப்போதும் போல் மோர் சாதம் மாவடு எடுத்து வந்திருந்தாள்.இதற்காக எங்கள் மூவரைத்  தவிர வகுப்பு மொத்தம் அவளை தயிர் சாதம் என்ற நாமகரணம் சூட்டி அழைத்தது.கீதா இதற்கெல்லாம் கவலைப் படவோ அவமானப் படவோ மாட்டாள்.சொல்லப் போனால் எனக்கும் தயிர் சாதம் மாவடு நல்ல மதிய உணவு என்றே தோன்றும்.

எலுமிச்சை சாதத்தை ஒரு வாய் போட்டுக் கொண்டே “என்ன இன்னிக்கு வித்தியாசமா இருக்க?என்னவோ சொல்றேன்னயே “ என்று கல்யாணி ஆர்வம் தாங்காமல் ஆரம்பித்தாள்

என் டப்பாவில் இருந்த தக்காளி சாதம் பிரமிளா சொல்லப் போகும் விஷயத்தின் ஆர்வத்திற்கு சமமாக வாய்க்குள் இறங்கியது.
கீதாவோ எப்படியும் சொல்லத்தான போகிறாள் என்ற அலட்சியத்துடன் மோருஞ்சாத்தை மாவடுவுடன் ஒரு கை பார்த்துக் கொண்டிருந்தாள்.
பிரமிளா டப்பாவைத் திறக்காமல் அதன் மேல் என்னவோ கிறுக்கிக் கொண்டு குனிந்து அமர்ந்திருந்தது அவள் இயல்புக்கு பொருந்தாமல் எங்களை ஒருவரையொருவர் பார்க்க வைத்தது.

” என்னடி!அவ கேக்கறா? நீ என்னவோ பேசாம உக்காந்திருக்க?” என்றேன் நான்

“இல்ல ராஜி ! எப்பிடி சொல்றதுன்னு தெரியலை.வந்து....”

“ பெல்லடிக்கறதுக்கு முன்னாடி சொல்லிடுவதானே ?” என்றாள் கீதா

“ நான் லவ் பண்றேன்” பளிச்சென்று உடைத்தாள்

கீதா வாயருகே கொண்டு போன தயிர் சாதத்தை அப்படியே வைத்துக் கொண்டு ஆ வென்று பார்த்தாள். நானும் கல்யாணியும் பீதியாய் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டோம்

“என்னடி உளறல்? ஏதோ எவனோ எவளையோ சைட்டடிக்கறத பத்தி வம்பு சொல்லுவயா இருக்கும்னு பாத்தா..”

”இல்லடி நெஜமாதான்.”

”சரி யாரைன்னு சொல்லித் தொலை” என்றாள் கல்யாணி கடுப்பாய்.

எங்க ஒண்ணு விட்ட அத்தை பையந்தான் .இந்த தடவ லீவுக்கு ஊருக்கு வந்திருந்தான்.ஏற்கனவே ஊர்ல திருவிழாக்கு போயிருந்தப்பலாம் பாத்திருக்கம்.ஆனா இப்பதான் ஒருத்தரை ஒருத்தர் பிடிச்சு லவ் பண்றம்”

“ப்ரமி! இதெல்லாம் படிக்கற வயசுல சரியா வராதுடி.வேணாம்.விட்டுடு” என்றேன்

“இதெல்லாம் ஒரு கவர்ச்சிதாண்டி. வாழ்க்கைல இதெல்லாம் தாண்டி எவ்வளவோ இருக்கு” என்று தன் பங்குக்கு கல்யாணி அரற்றினாள்

கீதாவோ பயத்தின் உச்சத்திலிருந்தாள்

அதனுடன் பெல்லடிக்க என்னவென்று சொல்ல முடியாத உணர்வுடன் எல்லோரும் வகுப்பறை சென்றோம்.அதன் பின் அன்று பிரமிளா மட்டுமல்ல நாங்கள் நால்வருமே வகுப்பை கவனிக்கவில்லை

அடுத்து வந்த மாதாந்திர தேர்வில் பிரமிளாவை நானும் கல்யாணியும் தாண்டியிருந்தோம். மதிப்பெண் அட்டையை  வாங்கும்போது நானும் கல்யாணியும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டோம். இருவர் மனதிலும் பிரமிளாவின் எண்ணமே ஓடியது.

நாட்கள் ஓடிக் கொண்டிருந்தது.ஓரிரு முறை பிரமிளாவை நாங்கள் கண்டித்ததை அவள் விரும்பவில்லை.
இந்த நேரத்தில் பன்னிரண்டாம் வகுப்பு ஆரம்பித்து, காலத்துடன் அந்த வருடம் போட்டியிட ஆரம்பிக்க அவரவருக்கும் பேச கூட நேரமில்லாது மதிய உணவு நேரம்  கூட சுருங்கி, வகுப்பை விட்டு வெளியில் சாப்பிட தடை வந்து இந்த விஷயம் கிட்டத்தட்ட கவனத்திற்கு அப்பாற்பட்ட விஷயமாக எங்கள் மூவருக்கும் ஆனது.

ஆனால் நாங்கள் எதிர்பாரா வண்ணம் இது ஒரு நாள் பூதாகாரம் எடுத்தது.பன்னிரண்டாம் வகுப்பு அரையாண்டில் முதல் முறையாக பிரமிளா கணக்கில் தோல்வி அடைந்தாள்.
என்ன ஏது என்று அவளை நாங்கள் விசாரிக்கையில் அவள் எங்களை விட்டு ஒதுங்க விரும்பினாள்.
அத்துடன் முடிந்திருந்தால் கூட பரவாயில்லை.பொதுத் தேர்விற்கு முதல் நாள் ஒரு கலந்தாய்வு போல இருந்த வகுப்பின் முடிவில் பிரமிளா எங்களை சந்தித்து பேச விரும்பினாள்

“என்னடி! எப்பிடி படிச்சிருக்க?”

ராஜி! நான்... நான்...”

”என்ன சொல்லு ப்ரமி! “ என்றாள் கல்யாணி

அவள் சொன்னது எங்களுக்குள் பெரிய இடியையே இறக்கியது

பிரமிளா என்ன சொல்லப் போகிறாள் என்று அவளையே பார்த்துக் கொண்டு நாங்கள் மூவரும் பொறுமை காத்தோம்

“எனக்கு ..எனக்கு ..இந்த மாசம்...பீரியட்ஸ் வர்ல” என்றாள் நடுக்கமான குரலில்

“அதனாலென்ன?உனக்கு எப்பயுமே அப்டியும் இப்டியுமாத்தானே இருக்கும்? இதுக்கு எதுக்கு இவ்ளோ டென்ஷன்?பரீட்சை சமயத்துல இது வேற ஒரு தொந்தரவுன்னு யோசிக்கறயா? “ என்று கீது அப்பாவித்தனமான ஒரு கேள்வி கேட்டாள்

நானும் கல்யாணியும் லேசான கலக்கத்துடனும் அப்படி எல்லாம் இருக்காது, இருக்கக் கூடாதே என்ற கவலையுடனும் அவளைப் பார்த்தோம்.
ஆனால் எது இருக்கக் கூடாது என நினைத்தோமோ அதை அவள் சொல்லியே விட்டாள்

”போன மாசம் ஒரு நாள்...” என்று அவள் கூறியதை நான் என் வாழ் நாளிலிருந்தே எடுக்க முடிந்தால் நன்றாகத்தான் இருக்கும்

கீதா என்ன செய்கிறோம் என்றே தெரியாமல் கையிலிருந்த தண்ணீர் பாட்டிலின் தண்ணீர் மொத்தத்தையும் ஒரே மூச்சில் குடித்து தன்னை நிலைப்படுத்த முயன்றாள்

சொல்லி முடித்தவளோ அழுது கொண்டிருக்க நானும் கல்யாணியும் என்ன செய்வதென்றே தெரியாமல் ஸ்தம்பித்து நின்று கொண்டிருந்தோம்.

முதலில் சுதாரித்தது கல்யாணிதான்

“சரி.இப்ப அழுது என்ன ப்ரயோஜனம்? அப்ப புத்தி எங்க போச்சு.சொன்னப்பவாவது காது கொடுத்து கேட்டயா? என்று கத்தினாள்

”இப்ப என்ன செய்யறது” என்றாள் கீதா வெகுளியாய்

“இப்ப அவளைக் கத்தி என்னடி ஆகப் போறது?பேசாம அவங்க வீட்டில சொல்ல சொல்லிடலாம்” என்றேன்

“அறிவிருக்கா உனக்கு? மக்கு.மட சாம்பிராணி. நாளைக்கு பரீட்சையை வச்சுக்கிட்டு இன்னிக்கு போயி அவ வீட்டுல சொன்னா அவ வாழ்க்கையே போயிடும்” என்று என்னையும் காய்ச்சினாள் கல்யாணி

”வேற என்ன செய்ய?” என்று நானும் கண்களில் குளம் கட்ட ஆரம்பிக்க, கல்யாணி இன்னும் உச்சஸ்தாயிக்குப் போனாள்

“ஏண்டி ! நீ எதுக்குடி இப்ப ஒப்பாரி ஆரம்பிக்கற? நாளைக்கு பரிட்சையை வச்சுக்கிட்டு எல்லாம் கூத்தடிங்கடி” என்று தன் அதிர்ச்சியை எங்களிடம் கொட்டிக் கொண்டிருந்தாள்

சிறிது நேர அமைதிக்குப் பின் கல்யாணியே ப்ரமியைத் தேற்றி “இப்ப பேசாம மூஞ்சி அலம்பிண்டு வீட்டுக்குப் போ.பரீட்சைக்குப் படி.எல்லா பரீட்சையும் முடிஞ்சப்பறம் பாத்துக்கலாம். எழுந்திரு வா” என்றாள்

வாசலுக்கு வந்த போது ப்ரமியை அழைத்துச் செல்ல வந்திருந்த அவளின் அப்பா வெள்ளந்தியாய்ச் சிரித்து “என்னம்மா!எல்லாரும் பரிட்சைக்கு ரெடியாய்ட்டீங்களா ?” என்று கேட்க எனக்கு வயிற்றைப் பிசைந்து கொண்டு கண்ணில் வெளிப்பட, கல்யாணி என் கையை சமிஞ்யையாய் பிடித்தாள்.கீதா எங்களுக்குப் பின்னே புதைந்தாள்

வீட்டிற்குப் போனதும் என் பேயறைந்த முகம் பார்த்த அம்மா கேட்டவுடன் தாங்கமுடியாமல் கொட்டி விட்டேன். ”சரி பரீட்சைக்கப்பறம் அவளை சொல்ல சொல்லிக்கலாம்” என்று அம்மாவும் சமாதானம் செய்து அப்போதைக்கு முடிந்தது.

தேர்வுகள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வகுப்பில் அமர்ந்து எழுத வேண்டியிருந்ததால் முடிந்த பிறகு கலந்தாலோசிக்கும்போதுதான்  பார்க்கும்படி ஆயிற்று.ஆனால் அதற்கு பிரமி வராமலே எங்களுக்கு முன்பே சென்று கொண்டிருந்ததால் அவளை பார்க்கவே முடியாமல் போனது.
விடுமுறையிலும் ஆளுக்கு ஒரு திக்கு செல்ல பரீட்சை முடிவு வெளிவரும் நாளும் வந்தது.லேசாக நாங்கள் பயந்தபடி ப்ரமி அதில் தோல்வியுற்றாள்.வீடு தேடி சென்று பார்க்க அந்த வயதில் பயமாக இருந்தது.

வருடங்கள் உருண்டோடி எனக்குத் திருமணாமாகி பிள்ளை பிறப்புக்கு வந்த போது என்னைப் பார்க்க கீதா வந்திருந்தாள்.திருமணமாகி டெல்லியிலிருப்பதாகவும், கல்யாணி மாமாவின் பையனை மணமுடித்து அதே டெல்லியில் வசிப்பதாகவும் கூறினாள்.தயிர் சாதம் மாவடுவின் அடையாளமற்று டெல்லி வாழ் வாழ்வின் அடையாளங்களைச் சுமந்திருந்தாள்.

“ப்ரமியைப் பாத்தயா? அவளைப் பத்தி ஏதாவது தெரியுமா?” என்றாள்

“ஒருமுறை போனேன் .அவ அம்மாதான் இருந்தாங்க.வேலைக்குப் போயிருக்கான்னு சொன்னங்க.எப்ப வருவா? எப்ப பாக்க முடியும்னு கேட்டேன்.அவங்க சரியா சொல்லல. நாம பாக்கறதை அவங்க விரும்பலையோன்னு தோணுச்சு.அதுக்கப்பறம் போகலை.
நீ இசைக் கல்லூரியில படிச்சயே.இப்ப என்ன பண்ணிண்டிருக்க”

“பாட்டு கூத்தெல்லாம் வேணாம்னு எங்காத்துக்காரரும் மாமியாரும் சொல்லிட்டாங்க.இப்ப அதெல்லாம் எதுவுமில்லை “ என்று சொல்லியபடி கிளம்பிய கீதாவைப் பார்க்க கஷ்டமாக இருந்தது.தயிர் சாதம் மாவடுவே அவளை சந்தோஷமாக வைத்திருந்ததாக எனக்குப் பட்டது.

இன்னும் இரண்டு வருடங்கள் கழித்து ஒரு நாள் அம்மாவிடமிருந்து ஃபோன்.

”உனக்கு ஒரு கல்யாணப் பத்திரிக்கை நம்மாத்து அட்ரஸ்க்கு வந்திருக்கு.யார்கிட்டேருந்து தெரியுமா?” என்றாள்

 “எங்கேருந்தும்மா வந்துருக்கு?”

“யார்கிட்டேருந்து வந்துருக்குன்னு கேளு.பத்திரிக்கை தபால்ல லாம் வரல.
நேர்ல வந்து குடுத்துட்டு போனா”

“சரிம்மா.உன் சஸ்பென்ஸ் போதும்.யார் குடுத்தா? யாருக்கு கல்யாணம்?”

“பிரமிளாக்கு கல்யாணம்டி.அவளே நேரில வந்து குடுத்துட்டுப் போனா”

“யாரு?ப்ரமிளாவா? “ பரபரத்தேன் .” அவளே வந்தாளாமா? அவளை நீ பாத்தியா? பத்திரிக்கை குடுக்கும் போது அவ முகத்தை பாத்தியா? சந்தோஷமா இருந்தாளாம்மா? “

“ நீ உன் கல்யாணத்தின் போது புது மனுஷாள் கூட எப்பிடி இருக்கப் போறோம்னு விளக்கெண்ணெய் குடிச்சாப்புல முகத்தை வச்சிருந்தயே,அதை விட சந்தோஷமாவே இருந்தா எல்லாம்” அந்தப் பக்கத்தில் அம்மாவின் கடுப்பு நன்றாகவே புரிந்தது.

போஸ்ட்டில் அம்மா அனுப்பி வைத்த பத்திரிக்கையைப் பார்த்தேன்.என் இருபத்தைந்தாவது வயதில் நான் அப்படி ஒரு விலையுயர்ந்த பத்திரிக்கையை நாலைந்து தரம் பார்த்திருந்தால் அதிகம்.  ஆர்வமாக மணமகனின் பெயரைப் பார்த்தேன்.சதீஷ் குமார் என்று போட்டிருந்தது.அவனா? எனக்கு அவன் பெயர் தெரியாது.பெயரின் பக்கத்தில் பிரமாதமான படிப்பும் அதைச் சார்ந்த உத்தியோகமும் போட்டிருப்பதைப் பார்த்தால் அவனில்லையோ என்று சந்தேகம் வந்தது.

சில சந்தர்ப்பங்களின் பொருட்டு தஞ்சாவூரில் நடந்த அந்த கல்யாணத்திற்கு நான் போக இயலாமல் போனது.ஆனால் நான் போகாமல் இருந்ததைத்தான் பிரமிளா விரும்பினாள் என்றும் அவள்  தன்  நல் வாழ்க்கைப் பாதையின் அடையாளத்தை எனக்கு தெரிவிக்கவே பத்திரிக்கை அனுப்பி இருப்பதையும் தெரிந்து கொள்ள எனக்கு ஒரு சந்தர்ப்பம் வாய்த்தது.

சரியாக ஒரு வருடத்திற்குப் பின் உடல் நலம் சரியில்லாத உறவினர் ஒருவரை பார்க்க நான் அந்த ஹாஸ்பிடலுக்கு சென்றேன்.பார்த்து விட்டு வெளியில் நடந்து வரும்போது பிரமியின் அம்மாவைச் சந்தித்தேன்.என்னைப் பார்த்ததும் அவர் முகம் வெளுப்பதைப் புரிந்து கொண்டாலும் ப்ரமியைப் பற்றி அறியும் உந்துதல் அதிகமாயிருந்தது.

“என்னம்மா !எப்பிடி இருக்கீங்க? என்னைத் தெரியுதா? நாந்தான் ராஜி!ப்ரமி எப்பிடி இருக்கா ? எங்க இருக்கா?”

பக்கத்து அறையின் உள்ளிருந்து வந்த பெண் இதைக் கேட்டு “ நீங்க அவ சினேகிதியா? நான் அவ நாத்தனார்.அவளுக்கு நேத்துதான் இங்க பொண்ணு பொறந்திருக்கு” என்றார்

“வாங்க” என்றபடி உள்ளே கூட்டிப் போனார். நீ...ண்ட இடைவெளிக்குப் பின் ப்ரமியின் சந்திப்பு.என்னைப் பார்த்ததும் ஆச்சர்யத்தில் பூரித்து முகம் மலர்வாள் என்ற எதிர்பார்ப்பில் நெருங்கினேன்.அவள் முகம் திகைத்து கடுகடுவென மாறியது. நான் அதிர்ந்து போனேன்.ஆனாலும் காரணமும் உடனே புரிந்து போனது.

“இவங்க ப்ரமி ஃப்ரண்டாம்” என்று ப்ரமியின் கணவனுக்கு அந்தப் பெண் அறிமுகம் செய்தாள்.கையில் வைத்திருந்த குழந்தையை என்னிடம் காட்டியபடி அவன் சிரித்தான்.குழந்தையும் கூட சிரித்தாற் போலிருந்தது.ஆனால் என் ப்ரமி என்னைப் பார்த்து ......

சற்று நேரம் பேசிக் கொண்டிருந்த போது அவளின் கண்களில் தெரிந்த தவிப்பின் அர்த்தம் எனக்கு நன்றாகவே  புரிந்தது..இறுதியாக ஒருமுறை ப்ரமியை நோக்கினேன். ஆமாம். நான்  இனி அவளை பார்ப்பதில்லை என தீர்மானித்தேன்.அவள் கடந்த கால வாழ்வின் கசப்பை நினைவூட்டும்படி நான் அவளைச் சந்தித்தோ பேசியோ அவளது இனிமையான வாழ்வின் நல்ல பக்கங்களுக்குள் போக முயற்சித்து அவளை நோகடிக்க மாட்டேன்.
வெளியில் வந்தேன்.


என் ஜாதகத்தில், இனி ப்ரமியை நேருக்கு நேர் முட்டிக் கொள்வது போல் பார்த்தாலும் எனக்கு அவளைத் தெரியாது என்று எழுதினேன்.

Sunday, February 16, 2014

தொடர்நாற்காலிகளும் சில வலிகளும்

கையில் எடுத்துச் சென்ற புத்தகத்தைப் படிக்க ஆரம்பித்தேன்.இதில் ரெண்டு விஷயம் இருக்கிறது.ஒன்று பிருந்தாவின் புலம்பலில் இருந்து சற்று தப்பலாம்.அடுத்து இந்த புத்தகத்தின் சுவை அப்படி. சொல்லப் போனால் இதுதான் பிரதானமாக இருக்க வேண்டும்.என்ன செய்வது பிருந்தாவின் குணம் அந்த மாதிரி..சமீபத்தில் ஒரு ஃபார்வேர்ட் மெஸேஜ் ஒன்றை சினேகிதன் அனுப்பியிருந்தான். ஹவ் டூ ஹாண்டில எ வொய்ஃப்?  என்ற கூகுள் தேடலுக்கு கூகுள் ”வீ ஆர் அல்ஸோ சர்ச்சிங் ஸ்டில்” என்று ரிசல்ட் தருவது போல்.மெலிதான சிரிப்பிழையோடே பாதியில் விட்டிருந்ததை தொடர்ந்தேன்.

“மனிதனும் அவன் மனமும் விசித்திரமானவை. எப்போதும் போல் ஒரே மாதிரியான நடப்பு இருப்பதில்லை.அவன் மனம் பல முகங்களைக் கொண்டது.எந்த நேரத்தில் எந்த முகம் வெளிப்படும் என்பது அவனுக்கே முன் கூட்டி தெரிவதில்லை. வெளியில் தெரிவது அவனது முகமூடி மட்டுமே.சமயத்தில் வெளிவரும் முகம் பல்லிளித்து சாயம் தோய்த்த முகமூடியையும் மீறி குபுக்கென்று கொப்பளிப்பதும் உண்டு”

”டோக்கன் நம்பர் த்ரீ” என்ற குரலுக்கு கலைந்து நிமிர்ந்த போது எதிர் வரிசை நாற்காலியில் இருந்து ஒரு பெண் எழுந்து சென்றாள். நிறைமாத கர்ப்பிணி. நடக்க சிரமப்பட்டு சென்றாள்.

“இப்பத்தான் த்ரீ யே போறது.எப்ப பத்தாம் நம்பர் வர்றது?” சீக்கிரம் கிளம்புங்கன்னா கேட்டாத்தானே” பிருந்தா ஆரம்பித்து விட்டாள்.அவளுக்கு எப்போதும் எல்லாவற்றுக்கும் என்னைச் சொல்லியே ஆகவேண்டும்.இல்லையென்றால் சாதம் இறங்காது.பாவம் அவளைச் சொல்லி என்ன செய்ய? மெனோபாஸ் டைம்.உடம்பு படுத்துகிறது.மீண்டும் புத்தகத்திற்குள் போனேன்.

“மன நிலையை சமன்படுத்த தெரிந்தவன் நிறைய கற்றுக் கொள்கிறான்.அவன் மனம் எல்லாவற்றையும் உள்வாங்குகிறது.கிரஹித்ததை பிரித்துப் பார்க்கவும் ஆராயவும் கற்றுக் கொள்கிறது.அவனால் ஒருமுகப் படவும் இயல்கிறது.இது ஒரு கலை அல்ல கற்றுக் கொள்வதற்கு.இது ஒரு செயல்பாடு. இயல்பு. இந்த இயல்பு உண்மையில் எல்லா மனிதர்களுக்குமே உள்ளில் அடங்கியிருக்கிறது.ஆனால் அதை மனிதன் உணர்வதோ வெளிப்படுத்துவதோதான் வித்தியாசப்பட்டுவிடுகின்றது”

“சார்! ப்ளீஸ் கால் ஆட்டாதீங்க. நீங்க ஆட்டறது மத்த பேஷண்ட்க்குலாம் டிஸ்டர்பென்ஸா இருக்கு.இது தனி தனி நாற்காலி இல்ல” எதிர் வரிசையில் ஒரு இளைஞன் பக்கத்திலிருப்பவரிடம் மென்மையாகச் சொல்லிக் கொண்டிருந்தான்.

திரும்பி ஒரு பார்வை பார்த்த அவர் மீண்டும் காலாட்டிக் கொண்டு  அலட்சியமாக முகம் திருப்பிக் கொண்டார்.

“சார்!உங்களைத்தான் சொன்னேன். மத்தவங்களுக்கு யாருக்காவது உடல் உபாதை இருக்கலாம். நீங்க இப்பிடி பண்ணின்னீங்கன்னா அவங்களோட உபாதைஅதிகமாகும்.”

ஒரு முறைப்புடன் காலாட்டுவதை ஒரு நிமிடம் நிறுத்தி பின் தொடர்ந்தார்.

“டோக்கன் நம்பர் சிக்ஸ்” என்றதும் அந்த இளைஞன் எழுந்து செல்ல அந்த காலாட்டியோ மீண்டும் சௌகர்யாமாக அமர்ந்து காலாட்ட ஆரம்பித்தார்

பிருந்தா எழுந்து சென்றாள்.” உங்களுக்கு குழந்தை இருக்கா?” அந்த காலாட்டியிடம் கேட்டாள்.வம்பை இழுத்துக் கொண்டு வந்து விடப் போகிறாளே என்று கவலையாயிற்று.

“ஏன் கேக்கறீங்க” காலாட்டி முகத்தை சுருக்கிக் கொண்டு கேட்டார்

“இல்லை.உங்க மனைவி உங்க பக்கத்துல பிரசவ வலியால துடிச்சிட்டிருக்காங்கன்னு நினைச்சுகோங்க அப்பறம் இந்த தொடர்ச்சியான நாற்காலில இருக்கற மத்தவங்களுக்கு இப்பிடி காலாட்டினா என்ன கஷ்டம்னு உங்களுக்கு புரிஞ்சிரும்னு நினைக்கறேன்”

பளிச்சென்று நிறுத்திக் கொண்டார். நல்லவேளை! சச்சரவில்லை.பிருந்தா வந்து அமர புத்தகம் அழைத்தது.

“மனிதன் மட்டுமின்றி எல்லா ஜீவிதங்களும் மற்றொரு ஜீவிதத்தை சார்ந்தே இருக்கின்றன.இந்த சார்ந்திருத்தல் என்னும் தொடரால் ஒரு ஜீவனின் செயல்பாடு இன்னொரு ஜீவனுக்கு வலி உண்டாக்கி விடுகின்றது.புலியின் ஆகாரம் மான் என்பதால் மானுக்கு வலிதான்.ஆனால் பிரித்து உணரவும் மனதை சமனிலைப் படுத்தவும் மனிதனால் இயலும்.அது தெரிந்த மனிதனுக்கு இந்த தொடரிலும் வலி தவிர்க்க இயலும்.ஒரு மனிதனின் செயல்பாடு மற்றொரு மனிதனை சென்று அடையும் வாய்ப்புண்டு.இந்த தொடரையும் அதன் வலியையும் ஆராயத் தெரிந்தவனும் தவிர்க்கத் தெரிந்தவனும் மனிதன் ஆகிறான்”

திரும்பி பிருந்தாவை பார்த்தேன்.

                                       *********************************


அதீதம் ” ஃபிப்ரவரி முதல் இதழில்  வெளியான எனது கதை.அதீதம் குழுவினருக்கு எனது நன்றிகள்