உணராத நிமிடங்கள்-
காதோரம் கடித்த எறும்பு
கசக்கப் பட்டு விடுகிறது
ஒரு நிமிட வலிக்கு
ஒரு உயிர் பலியாகிறது
தண்டனை இல்லை
தவிப்பு இல்லை
குற்றம் புரிந்ததொரு
குறுகுறுப்பும் இல்லை
சிறிய உயிர் பற்றிய
சிந்தனை இல்லை
மனித உயிர் எனில் பயமுண்டு
மற்ற உயிர் எனினும்
மிருக வதை தடுப்புண்டு
தாவர அழிவிற்கும்
தடை உண்டு
எறும்பே நீ மட்டும்
என்ன பாவம் செய்தாயோ?
வக்காலத்திற்கும் வழக்கிற்கும்
விதியற்றுப் போனாயே?
உயிரின் அருமை
உணராத நிமிடங்கள்-
மற்றுமொரு எறும்பு
மற்றுமொரு அழிவு
மாறவில்லை இன்னும்