Wednesday, January 28, 2015

வைரத் தோடு


கதவைத் திறந்ததும் மார்கழி மாதக் குளிர்  முகத்தில் மோதிற்று.இன்னும் சிறிது நேரத்தில் விஸ்வரூபக் குடம் எழுந்தருளப் பண்ணி விடுவார்கள்.திரும்புகாலுக்குள்ளாவது கோலத்தைப் போட்டு முடித்து விட வேண்டும்.
தென்னண்டையாத்து அலமு அப்போதுதான் வாசல் தெளித்துக் கொண்டிருந்தாள்.அவசர அவசரமாக சாணத்தை எடுத்துக் கொண்டு விரைந்தாள் கமலீ.சன்னதி தெருவில் தெருவடைத்து கோலம் போடுவது இந்த மாத வழக்கம் மட்டுமல்ல.பெருமாள் புறப்பாடு என்றாலே தாமரை விரிந்து, கிளிகள் கொஞ்ச ஆரம்பிக்க மயில்கள் நடனமிடுவது என்றாகிவிடும்.

 ”கதிரவன் குணதிசைச் சிகரம்வந் தணைந்தான்
     கனவிரு ளகன்றது காலையம் பொழுதாய்”

 உள்ளிருந்து வந்த மாமனாரின் குரலில்  திருப்பள்ளியெழுச்சியை அனுபவித்துக் கொண்டே இழைகளை நேர்த்தியாக பின்னினாள்
 எதிரே இருந்த தெப்பக் குளத்திலிருந்து குளிர்ந்த காற்று வீசிக் கொண்டிருக்க திருச்சின்ன ஓசையுடன் விஸ்வரூபக் குடம் புறப்பாடு தொடங்கிற்று.
 அவசர அவசரமாக வாசல் பிறையில் விளக்கேற்ற, உள்ளிருந்து மதுரத்தின் குரல் அவள் பெயருக்கு சம்பந்தமற்று ஒலித்தது
 ”கமலீ! அடியேய் கம..லீ! “
 “வந்துட்டேன்மா...”
 “என்ன வந்துட்டேன்.தேவியாருக்கு இப்பத்தான் காது கேட்டதாக்கும்.அரை மணியா தொண்டை கிழியக் கத்திண்டிருக்கேன்.கோலம் போடப் போயாச்சுன்னா ஆத்து கார்யமெல்லாம் மறந்தாய்டுமோ? உலகத்துலயே இவ ஒருத்திதான் கோலம் போடறாப்லதான் நாலு நாழி என்னதான் கிழிக்கறயோம்மா! உன்னைக் கொண்டு வந்து இந்தாத்துல சேத்துட்டுப் போனாரே என் மாமனார்,அவரைச் சொல்லணும் “
 பெயர்தான் மதுரமே தவிர செய்கையில் அந்த தன்மை சற்றும் இல்லாதிருந்தாள். மதுரம் புக்காம் வருகையில் அவள் மாமியார்  அதற்கெல்லாம் பல வருடம் முன்பே போய்ச் சேர்ந்திருந்தாள். மதுரத்தின் மாமனார் வரதாச்சார் சௌஜன்யமானவர்தான் என்றாலும் கண்டிப்பானவர் என்பதால் மதுரத்தின் ஆட்டமெல்லாம் செல்லுபடியாகவில்லை. சொத்தும் வரதாச்சாரின் வசத்திலிருந்ததால் அவர் பேச்சுக்கு மறு பேச்சு கிடையாது. ஊரிலும் அவரது வித்வத்திற்கு மதிப்பிருந்தது.
 வரதாச்சார் தன் பேரன் மதுரகவிக்கு கமலியை பார்க்க விருப்பப்பட்டார். கமலியின் தாத்தாவும் வரதாச்சாரும் அத்யந்த நண்பர்கள். அந்த குடும்பத்தில்தான் சம்பந்தம் செய்து கொள்ள வேணும் என்பதில் வரதாச்சார் உறுதியாயிருந்தார். மதுரத்திற்கு தன் மாமனாரின் இந்த முடிவில் துளியும் விருப்பமில்லை. தன் பிள்ளை மதுரகவிக்கு இன்னும் செழிப்பான இடம் பார்க்கவே விரும்பினாள்.என்னதான் கமலியின் குடும்பத்திற்கு நிலமும் நீச்சும் நிறைய இருந்தாலும், பெரிய குடும்பம் மேலும் சம அந்தஸ்து இல்லாததாலும் தன் ஆம்படையான் திருமலையிடம் முரண்டிப் பார்த்தாள். அப்பா பேச்சைத் தட்டாத திருமலை மதுரத்தின் சொல்லுக்கு செவி சாய்க்கவில்லை.
 வரதாச்சார் விருப்பப்படி பேரன் மதுரகவியின் திருமணம் கமலியுடனே நடந்து அவர்களுக்கு பிள்ளை பிறந்த ஆறாம் மாசத்தில் ஒரு நாள் பாசியில் வழுக்கி பிராணனை விட்டார் .
 அன்றிலிருந்து மதுரத்தின் கொடி ஓங்கிப் பறந்தது. கமலியைக் கண்ட  போதெல்லாம் குத்திப் பிடுங்குவாள். பிறந்தகத்திலிருந்து நகை நட்டு என்று கேட்கும்போதெல்லாம் செய்தாக வேண்டும் என்று இந்த இரண்டு வருடமாய்  கமலியை அலைக் கழித்துக் கொண்டிருந்தாள். கமலியின் கணவன் என்று அடையாளத்திற்கு மட்டுமாய் இருந்த மதுரகவியோ தனக்கும் இதற்கும் சம்பந்தமில்லை என்பது போல் டவுனுக்கு வேலைக்குச் செல்வதும் வருவதுமாயிருந்தான். திருமலையோ மனைவி மதுரத்தை அடக்கத் திராணியின்றி திண்ணையில் பிரபந்த பொஸ்தகத்துடன் ஒன்றுவார். அல்லது வருவோர் போவோருடன் வம்புகளில் ஊர்க்கோடி தாசி வீட்டிற்கு எவரேனும் சென்று வந்த கதையில் திண்ணை நமுட்டுச் சிரிப்போடிருக்கும்.
 ஆறு மாதம் முன்பு ஒருமுறை பிறந்தகத்திலிருந்து வைரத்தோடு வாங்கி வரவில்லை என்று படுத்திய பாடு கமலிக்கு மறக்கவே முடியாத சமாச்சாரம்.எப்போதும் போல் மச்சில் அறைக்கு ஏறிப் போகப் போனவளை மதுரம் நிறுத்தினாள்.
"எங்க மச்சிலுக்குப் போயாறது? வைரத்தோடு கொண்டு வர வக்கில்லாட்டியும் ஆம்படையானைப் பாக்கப் போறதுல மட்டும் தப்பறதே கிடையாது"
இந்த சாட்டையடிக்குப் பின் தானே மச்சிலை மறந்து போனாள் கமலி.அத்தோடு விடவில்லை மதுரமும்.
பாலுக்கு அழும் பிள்ளையை கமலியிடம் தராமல் வேலைக்கு வரும் நாகுவிடம் கொடுத்து பின் கட்டிற்கு அனுப்பினாள்.கன்றில்லாமல் அலறும் பசுவின் நிலையில், அருந்த பிள்ளையற்ற பாலின் பாரத்தோடு மனமும் சேர்ந்து பாரம் தாங்காது போயிற்று கமலிக்கு.பாலின் நிறத்தை காதில் கொள்ளும் கட்டாயமானது.

சமீபத்திய மதுரத்தின் படுத்தல் கமலி தங்கை மீராவின் திருமணத்தையொட்டி ஆரம்பித்து விட்டது. குளத்திற்குப் போகும் வேளையிலும், மூன்று நாட்களிலும் மட்டும்  பக்காத்தாத்து அலமுவிடம் புலம்பி வடிகால் தேடுவதுண்டு.
 “என்னமோ இந்தியாக்கு சுதந்திரம் வரப் போறதுங்கறாடி கமலி. அந்த மாதிரி நமக்கெல்லாம் என்னமேனும் விடிவுகாலம் வந்தாத்தான் தேவலை. ஆனா எனக்கானும் மாமியார் சீக்காளியா போயி கொஞ்சம் அடங்கிட்டா. உன் பாடுதான் தீராது போல்ருக்கு.இப்ப என்ன உன் மாமியாருக்கு அடுத்த ஆட்டம் வந்துருக்கு?”
 “அப்பா மீராக்கு வரன் பாத்துருக்கார். இப்பத்தான் வரனே கை கூடியிருக்கு. ஆனா அதுக்குள்ள அவ கல்யாணத்துக்கு பெரிய மாப்பிள்ளைங்கற ஹோதால எங்காத்துக்காரருக்கு நவரத்தின மோதிரமும் எனக்கு கெம்பு அட்டிகையும் சீரா வந்தாகணுங்கறா. ஏற்கனவே பிடுங்கல் தாங்காம இதுக்கு முன்னாடி கேட்ட வைரத்தோட்டை அப்பாவும் போட்டுட்டார். சும்மாச் சும்மா திருப்பியும் கேட்டா அவர் எங்க போவர்? மீராக்கு நாலு நகை போட வேண்டாமா? நேக்கு இதை எப்படியானும் தடுக்கணுங்கறாப்ல வருதுடி அலமு!”
 “அப்டி செய்ய முடிஞ்சுட்டாத்தான் தேவலையே.ஆத்துக்காரர் அனுசரணையாருந்தா ஏதானும் செய்யலாம்.இல்லாட்டா நம்மால என்ன செய்ய முடியும்?”
 “நம்ம ப்ரச்சனைக்கு தீர்வு சொல்ல இன்னொருத்தரை எதுக்கு எதிர்பார்க்கணும்கற? நாமேதான் தீத்துக்கணும்”
 “என்ன செய்யப் போற?”
 “செய்வேன் ஏதானும்” கமலி தீர்க்கமாகச் சொன்னாள்

 ”அருள்பெறுவார் அடியார்தம் அடியனேற்கு ஆழியான்
  அருள்தருவான் அமைகிறான் அதுநமது விதிவகையே”

 பட்டராத்துத் திண்ணையில் குழந்தைகள் திருவாய்மொழி திருகு சொல்லிக் கொண்டிருந்தன
ஒருவாரத்தில் ஊரில் வைகுண்ட ஏகாதசி அமர்க்களப்பட்டது. காலையிலே மதுரம் கமலியிடம் போட்டுக் கொள்வதற்கு வைரத் தோட்டை கொடுத்து விட்டாள். மற்ற நாட்களில் எந்த நகையையும் பார்த்துவிட முடியாது. எல்லாம் அவள் கைவசம்தான். வரதாச்சார் இருந்த காலத்தில் போட்டுக் கொண்டதுதான். கமலிக்கும் நகை போட்டுக் கொள்வதில் அத்தனை பிடித்தம் இல்லாததால் இது ஒரு விஷயமாகப் படவில்லை. ஆனால் உத்சவங்களுக்கும்  வைகுண்ட ஏகாதசிக்கும் ஊருக்கு வரும் உறவுகள் சும்மா இல்லாமல் மதுரத்திடம் எதையேனும் கேட்டு வைப்பதில் அம்மாதிரி சமயத்தில் மதுரம் வம்பு வைத்துக் கொள்ளாமல் எடுத்துக் கொடுத்து விடுவதுண்டு.
 இன்றும் அப்படிக் கொடுத்த வைரத்தோட்டை அணிந்து கோவிலுக்குச் சென்றாள் கமலி.
 பெருமாள் திருமஞ்சன கோலம் முடிந்து சாற்றுப்படி ஆகியிருக்க கையில் வேணுவை வைத்துக் கொண்டு கொஞ்சிக் கொண்டிருந்தான்
 வீதி புறப்பாட்டிற்கு தெருவில் அத்தனை பேரும் கூடியிருக்க கோவிலிலிருந்து திரும்பிய கமலியைப் பார்த்துக் கூப்பாடு போட ஆரம்பித்தாள் மதுரம்
 “சனியனே! காது ஓலை எங்கடி? எங்க தொலைச்சுட்டு வந்து இப்டி மூலியா நிக்கற? காசு பெருத்த சாமான்ன்னு துளி பயம் அக்கறை உண்டா? இதுக்குத்தான் எதையுமே குடுத்துத் தொலையறதில்ல. இதெல்லாம் இங்க யாருக்குத் தெரியறது? நான் பொல்லாதவளான்னா தெரியறேன். கேட்டுண்டேயிருக்கேன். பதில் சொல்றதா பாரு பழி! “
 பட்டரின் பிள்ளை கமலியின் பின்னோடே வந்தவன் மூச்சிரைக்க “மாமி! அக்காவை ஒண்ணும் சொல்லாதீங்கோ.அவா தோட்டைத் தொலைக்கல.வைரத்தோட்டை பெருமாளுக்குன்னு கழட்டி சமர்ப்பிச்சுட்டா.அப்பா ப்ரோக்‌ஷணம் பண்ணி வேணுகோபாலனுக்கு சாத்திட்டா” என்றான் விழி விரிய
 மதுரம் ஆடிப் போனாள்.வாயிலடித்துக் கொண்டாள்.பிள்ளையை உரக்க அழைத்து, “கேளுடா! இவ பண்ணின கார்யத்தை.என்ன தைர்யம் பாத்தயோ!” என்று ஆர்ப்பரித்தாள்
 “இனிமே சீதனமா என்னமேனும் கேட்டேளோ, வர்றதையும் இப்டித்தான் பண்ணுவேன் “
 என்று தீர்க்கமாகச் சொன்ன கமலியை மதுரத்துடன் சேர்ந்து அதிர்ச்சியாய் பார்த்தான் மதுரகவி.
 வேணுகோபாலன் புறப்பாடு நெருங்கி வந்து கொண்டிருக்க கோஷ்டி புறப்பாடு முன்னே வந்து கொண்டிருந்தது.

 “சாதிமா ணிக்கம் என்கோ!
   சவிகொள்பொன் முத்தம் என்கோ,
 சாதிநல் வயிரம் என்கோ !
  தவிவில்சீர் விளக்கம் என்கோ “

என்று உரத்து சொல்லிய கோஷ்டி தாண்டி புது அலங்காரமான வைரத்தோடு ஜொலிக்க புன்னகை ஜொலிப்புடன் வேணுகோபாலன் ஆத்து வாசலில் எழுந்தருளினான்.அவன் புன்னகை கமலியையும் அலமுவையும் தொற்றிக் கொண்டது.