Saturday, February 7, 2015

தொப்பை


டீ கோப்பையை எடுத்துக் கொண்டு பால்கனிக்கு வந்த யமுனா அங்கு சுந்தரம் என்னவோ அளவெடுத்துக் கொண்டிருக்கும் தினுசில் இருப்பதைப் பார்த்தாள்

என்ன செய்யறீங்க?”

சுந்தரம் நிமிர்ந்து பார்த்து விட்டு மீண்டும் சுற்றியும் முற்றியும் பார்த்துக் கொண்டிருந்தான்.

என்ன பாக்கறீங்க?”

இல்லநாளைலேருந்து எக்சர்ஸைஸ், யோகாலாம் பண்ணலாம்னு இருக்கேன்.அதான் பால்கனி சௌகர்யப்படுமான்னு பாக்கறேன். நீ வேற வாஷிங் மிஷினையெல்லாம் இங்க வச்சுருக்க.ஹால்ல பண்ண வசதியாருக்காது.காத்தால அம்மா எழுந்து உக்காண்டு பக்தி சானல் என்னமானும் பாக்க ஆரம்பிச்சுடுவா. பெட்ரூம்ல உன் புத்திர ரத்தினங்கள் வாய்ல விழ முடியாது.அதான்…”

எக்சர்ஸைஸா? என்ன திடீர்னு?”

ஆமாம். நான் ஒரு முடிவெடுத்துருக்கேன்

என்னன்னு?”

இன்னும் ரெண்டே மாசத்துல என் தொப்பையைக் குறைக்கறதுன்னு
சுந்தரம் முடிக்கக்கூட இல்லை.யமுனாவுக்கு சிரிப்பு பொத்துக் கொண்டு வந்து விட்டது

என்ன நீ? நா சீரியஸா பேசிட்டிருக்கேன்.சிரிக்கற?”

எதுக்கு உங்களுக்கு இந்த வம்பு?அதெல்லாம் உங்களுக்கு வணங்காது

..! பாக்கலாமா? இன்னும் ரெண்டே மாசத்துல நான்…”

ஹ்ரித்திக் ரோஷன் மாதிரி ஆகப் போறயாப்பா? “ நமுட்டுச் சிரிப்போடு யூனிஃபார்ம் கூட மாற்றாமல் வந்து நின்ற நித்யா கேட்டாள்

அப்பாதானே? அர்னால்ட் ஆகப் போறாராம்இது சீமந்த புத்திரன் விஜய்

உங்களுக்கெல்லாம் அவ்வளவு கிண்டலாப் போச்சுல்ல? பாத்துட்டே இருங்க. நான் குறைச்சுக் காமிக்கறேனா இல்லையான்னுஎன்று சபதமிடாத குறையாக சுந்தரம் ரோஷத்தோடு நகர்ந்தான்

மறுநாள் காலை ஐந்து மணிக்கு விர்ரென்று அலாரம் காதில் கிணுகிணுத்தது. அலறி சுருட்டிக் கொண்டு எழுந்த யமுனாவிற்கு சற்று நேரம் ஒன்றும் புரியவில்லை.தான் அலாரமே வைக்கவேயில்லையே. ஞாயிற்றுக்கிழமைதானே. கூட கொஞ்சம் தூங்கலாம் என்ற சந்தோஷத்தோடுதானே படுத்துக் கொண்டாள்.சரி ஏதோ தவறுதலாக அடித்திருக்கும் என்று நினைத்துக் கொண்டு தலைகாணியை சரியாக வைத்துக் கொண்டு கலைந்த தூக்கத்தை தொடர்ந்தாள்

மறுபடியும் ஐந்தரைக்கு அலாரம் தன் வேலையைச் செய்ய கடுப்பாகி அதை அணைத்து எழுந்து பல் தேய்க்கப் போனாள்.டிகாக்ஷன் இறக்கி பாலைக் காய்ச்சிக் கொண்டிருக்கும்போது ஆறு மணியளவில் அவசர அவசரமாக சுந்தரம் ஒரு ட்ராக் சூட் அணிந்து ரூமிலிருந்து வந்தான்
நீங்களா அலாரம் வச்சீங்க?ஞாயித்துக்கிழமையும் அதுமா எதுக்கு என் தூக்கத்தை கெடுக்கறீங்க?எங்கயாவது வெளில போறீங்களா?”
ஆமா! ஜாகிங்பெருமையாய் சொல்லி சிரித்தான்

காஃபி?”

நோ.. நோ..! அதெல்லாம் வெறும் வயத்துலதான் போணும்.வந்துதான் எல்லாம்என்றபடிக்கு கிளம்பினான்

வெளில போறயா?இரு இரு..! இந்தா போற வழில அம்மன் கோயில்ல இந்த பாலைக் குடுத்துடு.இன்னிக்கு அபிஷேகம் இருக்காம்என்ற அம்மாவை எரிச்சலாகப் பார்த்தான்

அதெல்லாம் ஜாகிங் போறச்சே எடுத்துண்டு போக முடியாதும்மாஎன்று அவசர அவசரமாக நழுவினான்

மதியம் சாப்பாடின்போது சேப்பங்கிழங்கு ரோஸ்ட் பாத்திரத்தை தன் பக்கம் இழுத்த போது, “தொப்பை குறையணும்னா ரோஸ்ட்லாம் சாப்டக் கூடாதுஎன்றபடி விஜய் தன் பக்கம் இழுத்துக் கொள்ள போதாததற்கு யமுனாவின் நக்கல் சிரிப்பு எரிகிற தீயில் எண்ணெய் ஊற்றியது

ஸ்கூட்டியின் சாவியை எடுத்தவனிடம் , ”தொப்பை குறைக்கனும்னா எல்லா இடத்துக்கும் வண்டியை எடுக்கக் கூடாது. எனக்கு வண்டி வேணும். நீ நடந்து போஎன்று வெறுப்பேற்றினாள் நித்யா 

மறுநாள் யமுனா எழுந்து வந்த போது ஜன்னலில் ஏதோ கயிறு டைப்பில் கட்டப்பட்டு வித்தியாசமாக இருந்தது

என்னதுடி இது?"
படித்துக் கொண்டிருந்த நித்யா நிமிர்ந்து பார்த்து, “அப்பாதான் தொப்பையைக் குறைக்கற முயற்சியா என்னத்தையோ வாங்கி கட்டி வச்சுருக்கார்என்றாள்

காபி கலந்து எடுத்து வந்து குடிக்க அமர்ந்தவள் பேயறைந்தார்போல் நின்றாள்

சுந்தரம் அந்தக் கயிற்றின் ஒவ்வொரு முனைகளிலும் கையையும் காலையும் விட்டுக் கொண்டு மல்லாக்க விழுந்த கரப்பான் பூச்சி கணக்காக திணறிக் கொண்டிருந்தான்

இதென்ன கண்றாவி?”

ஒருவழியாய் அதிலிருந்து விடுவித்துக் கொண்டு வெளிவந்த சுந்தரம், “அது கொஞ்சம் பனிக்காலமா இருக்கா! அதான் டெய்லி ஜாகிங் போக கஷ்டமாருக்கேன்னு இது ட்ரை பண்றேன்.வொர்க்கிங் டேஸ்ல இது பண்ணிக்கலாம்.லீவு நாள்ல ஜாகிங் போய்க்கலாம்னு ப்ளான்என்றான்

என்ன கஷ்டகாலமோடி! நடு ஹால்ல உன் ஆம்படையான் அரைட்ராயரை போட்டுண்டு கையையும் காலையும் ஆட்டிண்டு…! கலிகாலம்என்றபடி மாமியார் தலையலடித்துக் கொண்டு போனார்

அதற்கும் மறுநாள் வேலைக்காரி, “யக்கா! நான் நாலு வீடு வேலைக்குப் போவணும்.பால்கனில பாத்திரம் தேய்க்க வர சொல்ல, ஐயா கையைக் காலை நீட்டி மடக்கிட்டு நின்னாருன்னா எப்டிக்கா?” என்று முறையிட சுந்தரம் தன் களப்பணியை மொட்டை மாடிக்கு மாற்றிக் கொண்டான்

அம்மா! ப்ளம்பர் வந்துருக்கார்.இஞ்ச் டேப் கொண்டு வரலையாம்.

நம்மோடது எங்க வச்சிருக்க?”

அந்த ட்ராவுலதான் இருக்கு பாரு

அங்க இல்ல

என்ன தேடறேள்?இஞ்ச் டேப்பா?அது சுந்தரம்னா டெய்லி எடுத்து தொப்பையை அளந்து அளந்து பாத்துண்டிருக்கான்.அவனண்ட கேளு.எடுத்துத் தருவான்என்றார் மாமியார் கூலாக

யமுனா தலையிலடித்துக் கொள்ளாத குறையாய் டேப்பைத் தேடி கொண்டு வந்தாள்

மறுநாள் எதிர் வீட்டு சந்தியா, “என்ன யமுனா? உங்காத்துக்காரர் புதுசா மொட்டை மாடில ஏதோ நமாஸ்லாம் பண்றார் போலருக்கேஎன்று கிண்டலடித்ததைக் கேட்ட சுந்தரம் அவமானம் தாங்காது தன் எக்சர்ஸைஸ் ஜாகைக்கு மொட்டை மாடியைக் கை விட்டு மீண்டும் ஜாகிங்கையே தொடர்ந்தான்

இரண்டு நாள் தொடர்ந்து போனவன் மூன்றாம் நாள் காலையில் கை கால் முகமெல்லாம் ரத்த விளாறும் சிராய்ப்புமாக வந்து நின்றான்

ஐயோ! என்னங்க இது? என்ன ஆச்சு?”

அது….ஒண்ணுமில்லம்மா…! ஜாகிங் போகும்போது எவனோ ஒருத்தன் ஒரு நாய் மேல கல்லை விட்டெறிய அது ஓடிண்டிருக்கற என்னைக் குறி வச்சு துரத்த ஆரம்பிச்சுடுத்து.மூச்சிரைக்க பின்னாடி திரும்பி பாத்துண்டே ஓடி வந்ததுல ஒரு பெரிய கல் இருக்கறத பாக்காம தடுக்கி விழுந்துட்டேன்.ஹூம்…. நாய்கிட்டேருந்து தப்பிச்சும் பிரயோஜனமில்லாம போச்சு

முதல்ல அவனை டாக்டர்கிட்ட கூட்டிண்டு போ. இவன் ஜாகிங் போகல்லைன்னு யார் அழுதா இப்ப?” பாசமும் அலுப்பும் புலம்பலாய் வந்தது

காயம் சரியாகி தேறும் வரை ஜாகிங் தடைப்பட்டு விட மறுபடியும் கரப்பான் பூச்சி பயிற்சியைத் தொடர்ந்தான்

இதற்கு நடுவில் அடிபட்டதால் சுந்தரத்தைப் பார்க்க வந்த அலுவலக நண்பர்களிடம் அம்மா புலம்ப அவர்கள் , “அதையேன் கேக்கறீங்க.ஆஃபிஸ்ல ஒருநாள் என்னடா எத்தனை மாசம்? சட்டை பட்டன் தெறிச்சுடும் போலருக்கேன்னு ஒருத்தன் சொல்லிட்டான். இவன் அதை இவ்ளோ சீரியசா எடுத்துண்டுட்டானாஎன்று விளக்கம் வேறு தந்து விட்டுப் போனார்கள்
  
உடம்பு சரியாகி மீண்டும் விட்ட ஜாகிங்கை தொடர முடியாமல் நாய் பயம் தடுத்தாட் கொண்டதால், ரூம் ரூமாக கை காலை வீசி எக்சர்ஸைஸை தொடர ஒரு நாள் சுளுக்குப் பிடித்து அதுவும் தற்காலிகமாக நின்றது

அடுத்து வந்த ஞாயிற்றுக் கிழமை சாப்பாட்டிற்கு தனக்கு மட்டும் தனி மெனு இருக்க திகைத்து கேட்டான்

என்ன இதெல்லாம்?”

தொப்பை குறைய ஜாகிங் எக்சர்ஸைஸ் மட்டும் போறாதாம்.டயட்டும் அதுக்குத் தகுந்தாப்ல இருக்கணுமாம்.அதான் உங்களுக்கு கொள்ளு ரசம்,தொட்டுக்க முளை கட்டின பயறு சுண்டல்

அப்பா!உனக்கு நைட்டுக்கு கூட….... அதென்னம்மா சொன்ன? கம்பு அடைதான?ஆங்..அதான்ப்பா

ஆமாண்டா! இந்த கொள்ளு ரசம் உடம்புக்கு ரொம்ப நல்லது.அந்தக் காலத்துல எங்கம்மா ஒரு கொள்ளு ரசம் வைப்பா பாரு.இன்னிக்கும் அந்த மணம் நெஞ்சுலயே நிக்கறதுஎன்ற அம்மாவை கடுப்பாகப் பார்த்தான்

சுந்தரம் அதற்குப்பின் வந்த நாட்களில் கிடைத்த சாப்பாட்டில் வெறுத்துப் போனான்

குடும்ப விசேஷமாக ஒரு கல்யாணம் வர பக்கத்தில் உட்கார்ந்து கொண்டு அவர் டயட்ல இருக்கார் இதெல்லாம் சாப்பிட மாட்டார் என்ற யமுனாவிடம், “ நான் எப்ப டயட்ல இருக்கேன்னு சொன்னேன்என்றவனிடம், “அதான் தொப்பையைக் குறைக்கணும் ரெண்டே மாசத்துலன்னு சொன்னீங்களே? அப்பறம் டயட்ல இல்லாம எப்டி முடியுமாம்?” என்று ஏதோ கம்ப ராமயணத்திற்கு விளக்கவுரை அளித்த ரேஞ்சில் பெருமிதமாக பதில் சொன்னாள்

ஜாகிங்,எக்சர்ஸைஸ் எல்லாவற்றையும் விட நாக்கே பிரதானமாகத் தோன்றியது


சாப்பாடு, தொப்பையைக் குறைக்கும் வைராக்கியத்தைக் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைக்க அடுத்து வந்த ஆஃபீஸ் கெட் டூ கெதரில் சீஸ் பராத்தவையும், மூன்றாம் ரவுண்ட் ஐஸ்க்ரீமையும் வெட்டிக் கொண்டிருந்த சமயத்தில் தொப்பை அவனைப் பார்த்து இளக்காரமாகச் சிரித்தது 

Wednesday, January 28, 2015

வைரத் தோடு


கதவைத் திறந்ததும் மார்கழி மாதக் குளிர்  முகத்தில் மோதிற்று.இன்னும் சிறிது நேரத்தில் விஸ்வரூபக் குடம் எழுந்தருளப் பண்ணி விடுவார்கள்.திரும்புகாலுக்குள்ளாவது கோலத்தைப் போட்டு முடித்து விட வேண்டும்.
தென்னண்டையாத்து அலமு அப்போதுதான் வாசல் தெளித்துக் கொண்டிருந்தாள்.அவசர அவசரமாக சாணத்தை எடுத்துக் கொண்டு விரைந்தாள் கமலீ.சன்னதி தெருவில் தெருவடைத்து கோலம் போடுவது இந்த மாத வழக்கம் மட்டுமல்ல.பெருமாள் புறப்பாடு என்றாலே தாமரை விரிந்து, கிளிகள் கொஞ்ச ஆரம்பிக்க மயில்கள் நடனமிடுவது என்றாகிவிடும்.

 ”கதிரவன் குணதிசைச் சிகரம்வந் தணைந்தான்
     கனவிரு ளகன்றது காலையம் பொழுதாய்”

 உள்ளிருந்து வந்த மாமனாரின் குரலில்  திருப்பள்ளியெழுச்சியை அனுபவித்துக் கொண்டே இழைகளை நேர்த்தியாக பின்னினாள்
 எதிரே இருந்த தெப்பக் குளத்திலிருந்து குளிர்ந்த காற்று வீசிக் கொண்டிருக்க திருச்சின்ன ஓசையுடன் விஸ்வரூபக் குடம் புறப்பாடு தொடங்கிற்று.
 அவசர அவசரமாக வாசல் பிறையில் விளக்கேற்ற, உள்ளிருந்து மதுரத்தின் குரல் அவள் பெயருக்கு சம்பந்தமற்று ஒலித்தது
 ”கமலீ! அடியேய் கம..லீ! “
 “வந்துட்டேன்மா...”
 “என்ன வந்துட்டேன்.தேவியாருக்கு இப்பத்தான் காது கேட்டதாக்கும்.அரை மணியா தொண்டை கிழியக் கத்திண்டிருக்கேன்.கோலம் போடப் போயாச்சுன்னா ஆத்து கார்யமெல்லாம் மறந்தாய்டுமோ? உலகத்துலயே இவ ஒருத்திதான் கோலம் போடறாப்லதான் நாலு நாழி என்னதான் கிழிக்கறயோம்மா! உன்னைக் கொண்டு வந்து இந்தாத்துல சேத்துட்டுப் போனாரே என் மாமனார்,அவரைச் சொல்லணும் “
 பெயர்தான் மதுரமே தவிர செய்கையில் அந்த தன்மை சற்றும் இல்லாதிருந்தாள். மதுரம் புக்காம் வருகையில் அவள் மாமியார்  அதற்கெல்லாம் பல வருடம் முன்பே போய்ச் சேர்ந்திருந்தாள். மதுரத்தின் மாமனார் வரதாச்சார் சௌஜன்யமானவர்தான் என்றாலும் கண்டிப்பானவர் என்பதால் மதுரத்தின் ஆட்டமெல்லாம் செல்லுபடியாகவில்லை. சொத்தும் வரதாச்சாரின் வசத்திலிருந்ததால் அவர் பேச்சுக்கு மறு பேச்சு கிடையாது. ஊரிலும் அவரது வித்வத்திற்கு மதிப்பிருந்தது.
 வரதாச்சார் தன் பேரன் மதுரகவிக்கு கமலியை பார்க்க விருப்பப்பட்டார். கமலியின் தாத்தாவும் வரதாச்சாரும் அத்யந்த நண்பர்கள். அந்த குடும்பத்தில்தான் சம்பந்தம் செய்து கொள்ள வேணும் என்பதில் வரதாச்சார் உறுதியாயிருந்தார். மதுரத்திற்கு தன் மாமனாரின் இந்த முடிவில் துளியும் விருப்பமில்லை. தன் பிள்ளை மதுரகவிக்கு இன்னும் செழிப்பான இடம் பார்க்கவே விரும்பினாள்.என்னதான் கமலியின் குடும்பத்திற்கு நிலமும் நீச்சும் நிறைய இருந்தாலும், பெரிய குடும்பம் மேலும் சம அந்தஸ்து இல்லாததாலும் தன் ஆம்படையான் திருமலையிடம் முரண்டிப் பார்த்தாள். அப்பா பேச்சைத் தட்டாத திருமலை மதுரத்தின் சொல்லுக்கு செவி சாய்க்கவில்லை.
 வரதாச்சார் விருப்பப்படி பேரன் மதுரகவியின் திருமணம் கமலியுடனே நடந்து அவர்களுக்கு பிள்ளை பிறந்த ஆறாம் மாசத்தில் ஒரு நாள் பாசியில் வழுக்கி பிராணனை விட்டார் .
 அன்றிலிருந்து மதுரத்தின் கொடி ஓங்கிப் பறந்தது. கமலியைக் கண்ட  போதெல்லாம் குத்திப் பிடுங்குவாள். பிறந்தகத்திலிருந்து நகை நட்டு என்று கேட்கும்போதெல்லாம் செய்தாக வேண்டும் என்று இந்த இரண்டு வருடமாய்  கமலியை அலைக் கழித்துக் கொண்டிருந்தாள். கமலியின் கணவன் என்று அடையாளத்திற்கு மட்டுமாய் இருந்த மதுரகவியோ தனக்கும் இதற்கும் சம்பந்தமில்லை என்பது போல் டவுனுக்கு வேலைக்குச் செல்வதும் வருவதுமாயிருந்தான். திருமலையோ மனைவி மதுரத்தை அடக்கத் திராணியின்றி திண்ணையில் பிரபந்த பொஸ்தகத்துடன் ஒன்றுவார். அல்லது வருவோர் போவோருடன் வம்புகளில் ஊர்க்கோடி தாசி வீட்டிற்கு எவரேனும் சென்று வந்த கதையில் திண்ணை நமுட்டுச் சிரிப்போடிருக்கும்.
 ஆறு மாதம் முன்பு ஒருமுறை பிறந்தகத்திலிருந்து வைரத்தோடு வாங்கி வரவில்லை என்று படுத்திய பாடு கமலிக்கு மறக்கவே முடியாத சமாச்சாரம்.எப்போதும் போல் மச்சில் அறைக்கு ஏறிப் போகப் போனவளை மதுரம் நிறுத்தினாள்.
"எங்க மச்சிலுக்குப் போயாறது? வைரத்தோடு கொண்டு வர வக்கில்லாட்டியும் ஆம்படையானைப் பாக்கப் போறதுல மட்டும் தப்பறதே கிடையாது"
இந்த சாட்டையடிக்குப் பின் தானே மச்சிலை மறந்து போனாள் கமலி.அத்தோடு விடவில்லை மதுரமும்.
பாலுக்கு அழும் பிள்ளையை கமலியிடம் தராமல் வேலைக்கு வரும் நாகுவிடம் கொடுத்து பின் கட்டிற்கு அனுப்பினாள்.கன்றில்லாமல் அலறும் பசுவின் நிலையில், அருந்த பிள்ளையற்ற பாலின் பாரத்தோடு மனமும் சேர்ந்து பாரம் தாங்காது போயிற்று கமலிக்கு.பாலின் நிறத்தை காதில் கொள்ளும் கட்டாயமானது.

சமீபத்திய மதுரத்தின் படுத்தல் கமலி தங்கை மீராவின் திருமணத்தையொட்டி ஆரம்பித்து விட்டது. குளத்திற்குப் போகும் வேளையிலும், மூன்று நாட்களிலும் மட்டும்  பக்காத்தாத்து அலமுவிடம் புலம்பி வடிகால் தேடுவதுண்டு.
 “என்னமோ இந்தியாக்கு சுதந்திரம் வரப் போறதுங்கறாடி கமலி. அந்த மாதிரி நமக்கெல்லாம் என்னமேனும் விடிவுகாலம் வந்தாத்தான் தேவலை. ஆனா எனக்கானும் மாமியார் சீக்காளியா போயி கொஞ்சம் அடங்கிட்டா. உன் பாடுதான் தீராது போல்ருக்கு.இப்ப என்ன உன் மாமியாருக்கு அடுத்த ஆட்டம் வந்துருக்கு?”
 “அப்பா மீராக்கு வரன் பாத்துருக்கார். இப்பத்தான் வரனே கை கூடியிருக்கு. ஆனா அதுக்குள்ள அவ கல்யாணத்துக்கு பெரிய மாப்பிள்ளைங்கற ஹோதால எங்காத்துக்காரருக்கு நவரத்தின மோதிரமும் எனக்கு கெம்பு அட்டிகையும் சீரா வந்தாகணுங்கறா. ஏற்கனவே பிடுங்கல் தாங்காம இதுக்கு முன்னாடி கேட்ட வைரத்தோட்டை அப்பாவும் போட்டுட்டார். சும்மாச் சும்மா திருப்பியும் கேட்டா அவர் எங்க போவர்? மீராக்கு நாலு நகை போட வேண்டாமா? நேக்கு இதை எப்படியானும் தடுக்கணுங்கறாப்ல வருதுடி அலமு!”
 “அப்டி செய்ய முடிஞ்சுட்டாத்தான் தேவலையே.ஆத்துக்காரர் அனுசரணையாருந்தா ஏதானும் செய்யலாம்.இல்லாட்டா நம்மால என்ன செய்ய முடியும்?”
 “நம்ம ப்ரச்சனைக்கு தீர்வு சொல்ல இன்னொருத்தரை எதுக்கு எதிர்பார்க்கணும்கற? நாமேதான் தீத்துக்கணும்”
 “என்ன செய்யப் போற?”
 “செய்வேன் ஏதானும்” கமலி தீர்க்கமாகச் சொன்னாள்

 ”அருள்பெறுவார் அடியார்தம் அடியனேற்கு ஆழியான்
  அருள்தருவான் அமைகிறான் அதுநமது விதிவகையே”

 பட்டராத்துத் திண்ணையில் குழந்தைகள் திருவாய்மொழி திருகு சொல்லிக் கொண்டிருந்தன
ஒருவாரத்தில் ஊரில் வைகுண்ட ஏகாதசி அமர்க்களப்பட்டது. காலையிலே மதுரம் கமலியிடம் போட்டுக் கொள்வதற்கு வைரத் தோட்டை கொடுத்து விட்டாள். மற்ற நாட்களில் எந்த நகையையும் பார்த்துவிட முடியாது. எல்லாம் அவள் கைவசம்தான். வரதாச்சார் இருந்த காலத்தில் போட்டுக் கொண்டதுதான். கமலிக்கும் நகை போட்டுக் கொள்வதில் அத்தனை பிடித்தம் இல்லாததால் இது ஒரு விஷயமாகப் படவில்லை. ஆனால் உத்சவங்களுக்கும்  வைகுண்ட ஏகாதசிக்கும் ஊருக்கு வரும் உறவுகள் சும்மா இல்லாமல் மதுரத்திடம் எதையேனும் கேட்டு வைப்பதில் அம்மாதிரி சமயத்தில் மதுரம் வம்பு வைத்துக் கொள்ளாமல் எடுத்துக் கொடுத்து விடுவதுண்டு.
 இன்றும் அப்படிக் கொடுத்த வைரத்தோட்டை அணிந்து கோவிலுக்குச் சென்றாள் கமலி.
 பெருமாள் திருமஞ்சன கோலம் முடிந்து சாற்றுப்படி ஆகியிருக்க கையில் வேணுவை வைத்துக் கொண்டு கொஞ்சிக் கொண்டிருந்தான்
 வீதி புறப்பாட்டிற்கு தெருவில் அத்தனை பேரும் கூடியிருக்க கோவிலிலிருந்து திரும்பிய கமலியைப் பார்த்துக் கூப்பாடு போட ஆரம்பித்தாள் மதுரம்
 “சனியனே! காது ஓலை எங்கடி? எங்க தொலைச்சுட்டு வந்து இப்டி மூலியா நிக்கற? காசு பெருத்த சாமான்ன்னு துளி பயம் அக்கறை உண்டா? இதுக்குத்தான் எதையுமே குடுத்துத் தொலையறதில்ல. இதெல்லாம் இங்க யாருக்குத் தெரியறது? நான் பொல்லாதவளான்னா தெரியறேன். கேட்டுண்டேயிருக்கேன். பதில் சொல்றதா பாரு பழி! “
 பட்டரின் பிள்ளை கமலியின் பின்னோடே வந்தவன் மூச்சிரைக்க “மாமி! அக்காவை ஒண்ணும் சொல்லாதீங்கோ.அவா தோட்டைத் தொலைக்கல.வைரத்தோட்டை பெருமாளுக்குன்னு கழட்டி சமர்ப்பிச்சுட்டா.அப்பா ப்ரோக்‌ஷணம் பண்ணி வேணுகோபாலனுக்கு சாத்திட்டா” என்றான் விழி விரிய
 மதுரம் ஆடிப் போனாள்.வாயிலடித்துக் கொண்டாள்.பிள்ளையை உரக்க அழைத்து, “கேளுடா! இவ பண்ணின கார்யத்தை.என்ன தைர்யம் பாத்தயோ!” என்று ஆர்ப்பரித்தாள்
 “இனிமே சீதனமா என்னமேனும் கேட்டேளோ, வர்றதையும் இப்டித்தான் பண்ணுவேன் “
 என்று தீர்க்கமாகச் சொன்ன கமலியை மதுரத்துடன் சேர்ந்து அதிர்ச்சியாய் பார்த்தான் மதுரகவி.
 வேணுகோபாலன் புறப்பாடு நெருங்கி வந்து கொண்டிருக்க கோஷ்டி புறப்பாடு முன்னே வந்து கொண்டிருந்தது.

 “சாதிமா ணிக்கம் என்கோ!
   சவிகொள்பொன் முத்தம் என்கோ,
 சாதிநல் வயிரம் என்கோ !
  தவிவில்சீர் விளக்கம் என்கோ “

என்று உரத்து சொல்லிய கோஷ்டி தாண்டி புது அலங்காரமான வைரத்தோடு ஜொலிக்க புன்னகை ஜொலிப்புடன் வேணுகோபாலன் ஆத்து வாசலில் எழுந்தருளினான்.அவன் புன்னகை கமலியையும் அலமுவையும் தொற்றிக் கொண்டது.