Monday, September 16, 2013

அதீதம் செப்டம்பர் மாத இதழில் வெளியான எனது கதை! அதீதம் குழுவினருக்கு எனது நன்றிகள்!

                                                
                                                    அப்பாவின் சட்டை


வண்டியை நிறுத்தும் இடத்தில் அவன் உட்கார்ந்திருந்தான்.கீற்றுக்களை வேய்ந்து சின்ன குடிசை அமைப்பில் கழிகளை முட்டுக் கொடுத்து நான்கடிக்கு ஐந்தடி கணக்கில் இடம் அமைத்து ஒரு கோணிப்பையை  சிம்மாசனமாக கொண்டு அமர்ந்திருந்த அவனைப் பார்த்தாலே யாரென்று அடையாளம் கண்டு கொள்ளும்படி அருகில் செருப்புகளும் தைக்கும் ஊசிகள் நூல்களுமாய்.இடுப்பில் மட்டும் யாரோ எப்போதோ தந்திருக்கும் வாய்ப்புடைய பர்முடாஸ் அங்கங்கே கிழிய ஆரம்பித்திருந்தது.

ஆஸ்பித்திரி வாசலில் இதையெல்லாம் எப்படி அனுமதிக்கிறார்கள்  என்று எண்ணிக் கொண்டே  நுழைந்தேன்.இடது புறம் திரும்பி வலப்பக்கம் திரும்பச்  சொல்லி போட்டிருந்த ஐசியூவுக்கான அடையாள அம்புக்குறிகளை  அபாயக் குறிகளாக உருவகித்தவாறே திரும்பினேன்.கண்ணாடிக்கதவுகளை தள்ளிக் கொண்டு சென்று கட்டிலின் அருகே மௌனமாய் நின்றேன்.
“அப்பா!”
………………………….
”அப்….பா…..!”   ம்ஹூம்! அசைவில்லை.சலனமற்றுப் படுத்திருந்தவரின் வாயில் ட்யூபும் மூக்கில் மாஸ்க்கும் இன்று நான்காவது நாளாகத் தொடர்கிறது.கைகளில் ட்ரிப்ஸுக்காக குத்தியிருந்த ஊசிகள்  அவருக்கு வலித்துக் கொண்டிருக்குமா? தெரியாது! நரம்புகள் புடைத்துக் கொண்டு தெரிந்த கைகள் மெலிந்திருந்தன.
“அப்பா! உன் கை மட்டும் எப்பிடி இரும்பு மாதிரி இருக்கு?ஏன் எனக்கு அப்பிடி இல்ல?”
” நீ குட்டிப்பையன் இல்லையா? அப்பா மாதிரி வளர்ந்து பெரியவனானப்பறம் உனக்கும் கை அப்படித்தான் இருக்கும்”  உயரத் தூக்கி சொல்லி சிரித்த அப்பா மனதில் ஃப்ளாஷ்  அடித்தார்.
“சார்!ப்ளீஸ் யுவர் டைம் ஓவர்.வெளிய இருக்கீங்களா? “  நர்ஸ் கருமமே கண்ணாயினள்.
வெளியில் வந்து அமர்ந்த நேரம் ஜன்னல் வழியே அப்போதுதான் பெய்ய ஆரம்பித்த மழையை பார்த்துக்கொண்டு ஆழமாக மூச்சை இழுத்தேன்.திடீரென்று செருப்பு தைப்பவனின் முகம் நினைவில் வர எழுந்து வந்து பார்த்தேன். குறுகிப் போய் உள்ளுக்குள்  அமர்ந்திருந்தான்.
மழை வலுத்தது. அப்பாவின் மூச்சுத் திணறல் அதனுடன் போட்டியிட ஆரம்பித்தது.இரவு முழுக்க நடந்த போட்டியில் அப்பா மழையிடம் தோற்றார்.
“மொட்டை மாடிக்கு இப்ப என்ன போறது? இருட்டிண்டு வரது”  அம்மாவின் தடை உத்திரவு
“அதனால்தாண்டி மொட்டை மாடிக்கே போறேன்.மழையைப் பாத்து என்ன பயம்?அதுல கரையணும்.அது கிட்ட தோக்கணும்.அந்த சுகானுபாவமே தனி”
பிடித்த விதமே தோற்றார்.கண் திறந்து ஒரு முறை பார்த்திருக்கலாம்.ஆதங்கமும் துக்கமும் உள்ளிருக்கும் வேதனையை தொண்டைக் குழிக்கு தள்ள குலுங்கிய உடம்புடன் அப்பாவைத் தொட்டு தடவினேன்.
”சார்! கண்ட்ரோல் யுவர்செல்ஃப்! உங்க கஷ்டம் புரியுது.என்ன செய்ய முடியும்? சரி!கொஞ்சம் வெளிய இருந்தீங்கன்னா …….வந்து… நாங்க பாடியை ஷிஃப்ட் பண்ண அரேஞ்ச் பண்ணனும்.ப்ளீஸ்! கோ ஆப்பரேட் பண்ணுங்க”
விழியின் நீரை துடைத்து எழுந்தவனிடன், “இது அவர்  ஷர்ட்” என்று நீட்டியதை வாங்கி வெளியில் வந்தேன்.ஜன்னலின் வழியே தெரிந்த அந்த கீற்று கொட்டகையில் நின்று போயிருந்த மழையின் ஈரம்சொட்டிக் கொண்டிருந்தது.அவன் கைகளை குறுக்கி சுவற்றில் சாய்ந்து குளிரை சமாளித்துக் கொண்டிருந்தான்.
”ஏம்பா!எப்பயுமே வெள்ளைச் சட்டை போட்டுக்கற? மத்தவா மாதிரி கலர் சட்டைலாம் போட்டுக்க மாட்டயா?”
“அதுவாடா தம்பி! அப்பா இன்னும் சின்னவனா இருந்தப்ப மாத்திப் போட்டுக்க சட்டைலாம் கிடையாது.எப்பயுமே வெள்ளைச் சட்டை ஒண்ணுதான் உண்டு.போக போக அதுவே பழகிடுத்து.தவிர வெள்ளைச் சட்டை போட்டுக்கறச்சயே  மனசுல அழுக்கு சேத்துக்கப் படாதுன்னு தோணும்.அதான்”  கையிலிருந்த அப்பாவின் வெள்ளைச் சட்டை உறுத்தியது.
விறுவிறுவென்று எழுந்து சென்று சட்டையை செருப்பு தைப்பவனின் உடம்பில் போர்த்தினேன்.அவன் விழியில் மழையின் மிச்ச அடையாளம்.
அப்பாவின் சட்டை தகனத்திற்கு தயாராயிற்று, வெற்று மார்பாய் முகம் மட்டும் புன்னகை மாறாமல்.