Tuesday, July 3, 2012

குருத்தோலை


Stock Image - tropical background 
of coconut palm 
leaves. fotosearch 
- search stock 
photos, pictures, 
wall murals, images, 
and photo clipart



ஹலோ! மிஸ்டர் வைத்தியநாதன் ப்ளீஸ்?

.....................


சார்! என் பேர் ரகு.உங்க கூட வேலை பார்த்தாரே  ராகவன், அவரோட  சன்.


..........................


எனக்கு உங்களை நேர்ல பாத்துப் பேசணும்.கொஞ்சம் நேரம் ஒதுக்க முடியுமா?


...................


ஓக்கே சார்.தாங்க் யூ.ஈவ்னிங் உங்களை வந்து பாக்கறேன்,கொஞ்சம் அட்ரஸ்
சொல்றீங்களா?

அட்ரஸை குறித்துக் கொண்டு ஃபோனை வைத்த ரகு யோசனையில் ஆழ்ந்தான்.


சாயங்காலம் கூடுவாஞ்சேரிக்கு வைத்தியநாதனை தேடிச் சென்ற போது வீட்டைக் கண்டு பிடிப்பதுமுதலில் சற்று சிரமமாக இருந்தது.ஒருவழியாக வந்து சேர்ந்தபோது வாசலில் ஈசி சேரில் ஒரு முதியவர் புத்தகம் படித்துக்கொண்டிருந்தார்.

"எக்ஸ்க்யூஸ் மீ"


நிமிர்ந்து பார்த்தவரிடம். "மிஸ்டர்வைத்தியநாதன்...." என்று இழுத்த போது,

"நான்தான்.நீங்க மிஸ்டர் ரகு?"  என்றார்

"ஆமா சார்"

அமர வைத்து உள்ளே திரும்பி,  " சாந்தா! குடிக்க தண்ணி கொண்டா" என்றார்.


"சொல்லுங்க"

ஹாலை பார்வையால் சுற்றிப்பார்த்த ரகு தொண்டையை செருமிக் கொண்டு
பேச ஆரம்பித்தான்

"சார்! உங்க கூட வேலை பாத்தப்ப உங்களுக்கும் அப்பாக்கும் நல்ல உறவு இருந்ததுன்னு அப்பா சொல்லிக் கேட்டிருக்கேன்.இன்னும் மிஸ்டர் சண்முகம்னு ஒருத்தர் கூட அப்பாக்கு  நெருக்கம்னு சொல்லி இருக்கார்,ஆனா
வேலை மாற்றல், பதவி உயர்வுன்னு ஒரு கட்டத்துல எல்லாரும் ஆளுக்கு
ஒரு பக்கம் போயிட்டதா கேள்விப்பட்டேன்.இப்ப ரிடையர்மென்டுக்கு அப்பறம் யாரைப் பற்றியும் எந்த தகவலும் தெரியலைன்னும்  வருத்தப் படுவார்"

பழைய நினைவகளால் தூண்டப்பட்ட வைத்தியநாதனும் முகம் விகசிக்க
"ஆமாம்பா! நாங்கள்லாம் ஒருத்தருக்கொருத்தர் நல்ல நட்போட பழகிட்டிருந்தோம்.காலத்தோட கட்டாயம் இப்ப யார் எங்க இருக்காங்கன்னு கூட தெரியாம மூலைக்கொருத்தரா போயாச்சு.ஆமா!நீ எப்படி என்னைக் கண்டு பிடிச்ச? ராகவன் எப்படி இருக்கான்?எங்க இருக்கான்?"

"அப்பா இப்ப கொஞ்சம் உடம்புக்கு முடியாம இருக்கார்.அவரோட வேலை பார்த்த பழைய நட்புக்கள் ஞாபகம் அவருக்கு அடிக்கடி வருது.ஒருத்தரையும் பாக்க முடியலையேன்னு வருத்தமா இருக்கு அவருக்கு.அதே சமயம் தன்னைத் தேடி தன் பழைய நட்புக்கள் நிச்சயம் வருவாங்கன்னு அவர் நம்பறார்.ஆனா அது சாத்தியமான்னு எனக்குத் தோணினதால நான் உங்களைத் தேட முயற்சி எடுத்தேன்.சேலத்துல நீங்க வேலை செஞ்ச இடம்,நீங்க இருந்த இடம்னு எல்லார் கிட்டயும் விசாரிச்சு ஒரு வழியா நீங்க
இப்ப சென்னைல இருக்கீங்கன்னு தெரிஞ்சுண்டேன்.ஆனா எங்கன்னு தெரியாம தவிச்சப்ப ஆறு மாசம் முன்னாடி நீங்க சேலம் வந்ததாவும் அப்ப உங்க ஃபோன் நம்பர் குடுத்ததாவும் அங்க உங்க ஆஃபீஸ்ல கேஷியரா இருக்கற சுந்தரம் சொன்னார்.அதுக்கப்பறம் அந்த நம்பருக்கு ஃபோன் பண்ணி காலைல உங்க கிட்ட பேசினேன்"

"அட! ரொம்ப மெனக்கெட்டுருக்கயேப்பா? எங்களுக்கெல்லாம் இப்படித் தேடணும்னு தோணாம போச்சே"

"நாங்களும் இங்க பக்கத்துல தாம்பரத்துலதான் இருக்கோம்.எனக்கு நீங்க ஒரு உதவி செய்ய முடியுமா"

"சொல்லுப்பா"

"முடிஞ்சா மிஸ்டர் சண்முகம் எங்க இருக்கார்னு கண்டு பிடிச்சு அவரோட எங்கப்பாவை வந்து பாக்க முடியுமா? நானும் அவரைப்பத்தி விசாரிச்சுக்கிட்டு இருக்கேன்"

"முன்ன ஒரு தடவை ஒண்ணரை வருஷம் முன்னாடி நார்த்  இண்டியா டூர்
 போனப்ப  அங்க அவனை பாத்தேன்.ரெண்டு பேருமே அவசரத்துல இருந்ததால ரொம்ப பேச முடியலை.வடபழனில இருக்கறதா சொல்லி நம்பரும் கொடுத்தான்.ஆனா அதுக்கப்பறம் அவனை பாக்கவும் இல்ல.அந்த நம்பரும் இப்ப எங்கிட்ட இருக்கான்னு தெரியலை.தேடித்தான் பாக்கணும்.அப்படி அவனை கான்டாக்ட் பண்ண முடியாட்டி நான் வந்து பாக்கறேன்பா"

"இன்னொரு உதவி சார்!"

"சொல்லு தம்பி!"

" அப்படி நீங்க பாக்க வந்தா நீங்களா தேடிண்டு வந்த மாதிரி இருக்கட்டுமே.நான் உங்களை சந்திச்ச மாதிரி காமிச்சுக்க வேண்டாம்"

"ஏன்ப்பா அப்படி சொல்ற?அதுல என்ன பிரச்சனை?"

"பிரச்சனைலாம் ஒண்ணுமில்ல சார்! நீங்களா வந்தது போல இருந்தா அது அவருக்கு சந்தோஷத்தையும் திருப்தியையும் தரும்.அதான்....."

வைத்தியநாதன் வியப்பாய் பார்த்தார்.சரி தம்பி!அப்படியே செய்யறேன்"

அவர் மனைவி  உபசரிப்பாய் தந்த மிக்ஸரையும் காபியையும் பாராட்டிவிட்டு ரகு கிளம்பினான்.

ஒரு மாதம் கழித்து ஒரு ஞாயிற்றுக்கிழமை காலை டிபன் முடித்து வண்டி துடைத்துக் கொண்டிருக்கையில் வாசலில் வந்து நின்ற காரில் இருந்து வைத்தியநாதன் இறங்க அவருடன் இன்னொருவரும் இருந்தார்.

சந்தோஷமாக வரவேற்ற ரகுவிற்கு உடனிருந்தவரை "இவர்தான் அந்த சண்முகம்.ஒருவழியா பிடிச்சுட்டேன்" என்று அறிமுகம் செய்தார்.

படுத்துக் கொண்டிருந்த ராகவன் தன் முன்னே வந்து நின்ற தன் பழைய நண்பர்களை பார்த்ததும் சந்தோஷத்தில் திக்குமுக்காடிப் போனார்.

ரகுவை அழைத்து, "பாத்தயா?நான் சொன்னப்ப எல்லாம் உனக்கு நம்பிக்கை
இல்லையே?இப்ப பார்.என்னைத் தேடி என் நண்பர்கள் வந்தாச்சு" என்று குதூகலித்தார்

"அதில்லை ராகவா!" என்று ஆரம்பித்த வைத்தியநாதனை ரகு பார்வையால் நிறுத்தினான்

"சொல்லுடா வைத்தி! எப்படி இருக்க?டேய்! சண்முகம் ஆளே மாறிப் போயிட்டயேடா?சுகர் கிகர் இருக்கா? என்று ஆர்ப்பரித்தார் ராகவன்

இரண்டு மணி நேர உரையாடல் மற்றும் உபசரிப்புக்குப் பின் விடை பெற்ற
வைத்தியும் சண்முகமும் ரகுவிடம் வந்தனர்

"அற்புதமான பிள்ளைப்பா நீ.பெத்தவன் சந்தோஷத்துக்காக உன் முயற்சி பத்தி மூச்சுக் கூட விடக் கூடாதுன்னட்டயே"

"ஆமாம்பா! நாங்களா வந்து பாத்ததா அவன் நினைக்கறது எங்களுக்கு குத்த  
உணர்வா இருக்கு ரகு" என்றார் சண்முகம்


"உண்மைல எனக்காக நீங்க ரெண்டு பேரும்தான் உதவி இருக்கீங்க அங்கிள்.அதனால அப்படி நினைக்க வேண்டாமே ப்ளீஸ்"

"பழுத்தோலையைப் பாத்து சிரிச்சதாம் குருத்தோலைன்னு எங்க ஊர் பக்கம்  பெத்தவங்களை அவமரியாதை செய்யற பிள்ளைகளைப் பத்தி பேசுவாங்க.
ஆனா நீ பழுத்தோலையோட மனசு புரிஞ்ச குருத்தோலை தம்பி! தகப்பனோட தேவை புரிஞ்சு அதை நிறைவேத்தற  பிள்ளைகளா இருந்துட்டா வயசானவங்க நாதியத்துப் போற நிலைமை மாறிடும்.நீ நல்லா இருக்கணும்பா.நாங்க வரோம்.இனி அடிக்கடி எங்க நண்பனைப் பாக்க வருவோம்.அவனோட கடைசி கால சந்தோஷத்துல உன்னோட சேர்த்து இனிமே எங்க பங்கும் இருக்கும்"

அவர்கள் சென்ற பின்பும் இன்று வழக்கத்துக்கு மாறாக பழுத்தோலையின்
ஆர்ப்பரிப்பு கண்டு குருத்தோலை புன்னகைத்துக் கொண்டிருந்தது.

17 comments:

வை.கோபாலகிருஷ்ணன் said...

மிகவும் அழகான கதை. வயதானவர்களின் ந்ட்பையும் உணர்வுகளை நன்கு பிரதிபலிக்கும் கதை.

வை.கோபாலகிருஷ்ணன் said...

குருத்தோலை என்ற தலைப்பும், காட்டியுள்ள படமும் பொருத்தமாகவே உள்ளன.

வயதானவர்களுக்கு தங்களிடம் பேசுவ்தற்கு யாராவது அவசியம் தேவைப்படுகிறது.

யாருமே அவர்களை மதித்துப் பேசாவிட்டால், அதை அவர்களால் தாங்க முடிவதில்லை. தாங்கள் தனிமைப்படுத்தப்பட்டு விட்டதாகவும், செல்லாக்காசாகி விட்டதாகவும், யாரும் நம் சொல்படி கேட்பதில்லை எனவும் ஏதேதோ கற்பனை செய்து கொண்டு இருப்பார்கள்.

அதுவே அவர்களின் ஆரோக்கியம் கெடுவதற்கு வழி வகுத்துவிடுவதுண்டு.

இதுபோல பேச ஆட்கள் இல்லாமல் இருக்கும்போதும், அவர்களின் உணர்வுகளையும் தேவைகளையும் பகிர்ந்து கொள்ள யாரும் தயாராக இல்லாத போதும், தனிமைப்படுத்தப்படும்போதும், அவர்களின் உடல்நலம் ஓர்ள்வு சரியாக இருந்தாலும் கூட மனநலம் பாதிக்க அதிக வாய்ப்புகள் உண்டு.

வை.கோபாலகிருஷ்ணன் said...

அலுவலகத்தில் நெருங்கிப்பழகிய நண்பர்கள் தங்கள் பணி ஓய்வுக்குப்பிறகு, எங்கெங்கோ பிரிந்து விடுவதால், அந்தப் பழைய நண்பர்களை மீண்டும் சந்திக்க் மாட்டோமா, அவர்களுடன் மனம் விட்டு பேச மாட்டோமா என்ற ஏக்கம் பல வயதானவர்களுக்கு முன்பெல்லாம் உண்டு தான்.

இப்போது ஒருவரை ஒருவர் தொட்ர்புகொள்ள போன் வசதிகள் அதிகமாக இருப்பதால், மறக்காமல் போன் நம்பரைக் மட்டும் கேட்டு வாங்கிக்கொண்டால், சுலபமாகப் பேசிக்கொள்ளலாம். தேவைப்பட்டால் நேரிலும் சந்திக்க் ஏற்பாடு செய்துகொள்ளலாம்.

வை.கோபாலகிருஷ்ணன் said...

கதையில் வரும் ரகுவைப்போல பெற்றோர் மனம் கோணாமல் நடந்துகொள்ளும் பிள்ளைகள் மட்டும் அமைந்து விட்டால் பிரச்சனையே இல்லை தான்.

எவ்வளவு பேருக்கு இது போன்ற பாக்யமெல்லாம் அமைகிறது?

இருப்பது ஒரே பிள்ளை. அதுவும் வெளிநாட்டில் வேலை. அங்கேயே மனைவி. க்ரீன் கார்டும் வாங்கியாச்சு.

வயதான அப்பா அம்மா இங்கே ஏதோ ஒரு கிராமத்திலோ நகரத்திலோ தனியாக வாழ்கிறார்கள்.

பெற்ற தாய் தந்தையின் இறப்புக்குக்கூட லீவு கிடைக்கவில்லை, டிக்கட் கிடைக்கவில்லை, விசா கிடைக்கவில்லை என்று ஏதேதோ சொல்லி வராமலேயே இருந்து விடுகிறார்கள் சிலர்.

இறுதிச்சடங்குகளை யாரையோ விட்டு செய்யச்சொல்லி, அப்படியே வீடியோ எடுத்து அனுப்பச்சொன்னானாம் ஒருவன். பிறகு அதைப்பார்த்து ஒழிந்தபோது ஒப்பாரி வைப்பானோ?

இதுபோலெல்லாம் ஆங்காங்கே சில கொடுமையான விஷயங்களைக் கேள்விப் படுகிறோம். மிகவும் மனதுக்கு வருத்தமாகத்தான் உள்ளது.

வெளிநாடு என்று இல்லை, உள்நாட்டிலேயே, உள்ளூரிலேயே இருந்துகொண்டு, பெற்றோரைக் க்ண்டுகொள்ளாமல், எந்த சரீர ஒத்தாசையோ, மருத்துவ சிகித்சை உதவிகளோ, பண உதவிகளோ செய்யாத பாவிகளும் உண்டு.

எல்லாவற்றிற்கும் எல்லோருக்கும் ஒரு கொடுப்பிணை வேண்டும்.

நல்ல கதையாகவும், நல்ல முடிவாகவும் தந்துள்ளது படிக்க சந்தோஷமாக உள்ளது.

பாராட்டுக்கள். வாழ்த்துகள். நன்றிகள்.

Yaathoramani.blogspot.com said...

முதியவர்களின் மன நிலையை
மிகத் தெளிவாகச் சொன்னதும் இளைஞர்களின் கடமையை
நாசூக்காகச் சொல்லிப்போனதும் அருமை
மனம் கவர்ந்த பதிவு
தொடர வாழ்த்துக்கள்

இராஜராஜேஸ்வரி said...

பழுத்தோலையோட மனசு புரிஞ்ச குருத்தோலை
மன நிறைவைத் தந்தது... பாராட்டுக்கள் !

ஜீவி said...

சின்ன கதை தான்; அதைப் பின்னலாய்ப் பின்னியதில் அழகு தெரிந்தது. உள்ளார்ந்த அர்த்தப் பூவையும் துருத்திக் கொண்டுத் தெரியாதவாறு நறுவிசாய்ச் சூட்டியிருந்த விதம் அழகுக்கு அழகு சேர்த்தது.

middleclassmadhavi said...

Very nice story!

குறையொன்றுமில்லை. said...

மிகவும் நல்லா இருக்கு. வாழ்த்துகள்.

பாலா said...

மனதை நெகிழ வைக்கும் கதைதான் என்றாலும், மிக இலகுவாக ஒரு படிப்பினையையும் சொல்லி செல்கிறது. அருமை

ரிஷபன் said...

வயதானவர்கள் மட்டும் இல்லை. எந்த வயதிலும் நம்மோடு பழகியவர்கள் தேடி வந்தால் அதன் சுகமே அலாதி. அதிலும் குறிப்பாய் முதியவர்களுக்கு.. வீட்டோடு கிடக்கும் போது முன்பு நெருக்கமாய் பழகியவர்கள் வீடு தேடி வந்தால் ஆயுசு இன்னும் நீட்டிக்கும் உற்சாகத்தில். உணர்வு பூர்வமான கதை.

Anonymous said...

மிகவும் அருமை..

வெங்கட் நாகராஜ் said...

ரொம்ப நல்ல கதை... ரசித்துப் படித்தேன். நம்மோடு பழகின நட்புகளைப் நீண்ட நாள் கழித்து பார்த்து பேசுவதில் இருக்கும் ஆனந்தமே அலாதிதான்.

சென்னை பித்தன் said...

இப்படிப்பட்ட பிள்ளை கிடைப்பது பூர்வ ஜன்ம புண்ணியம்தான்.மனத்தைத் தொட்ட கதை

விச்சு said...

நான் ரசித்துப்படித்தேன். பெற்றோர்களைப்புரிந்து கொண்ட குழந்தைகள் வாழ்க்கையில் நிச்சயம் மேன்மையடைவார்கள்.

R. Jagannathan said...

உங்கள் தளத்திற்கு என் முதல் வருகை. கதையும், நடையும் நன்று. இன்று இருக்கும் இன்டெர்னெட்டினால், தொடர்புகள் தக்கவைத்துக் கொள்ள முடிகிறது. இருந்தும் பழைய, பள்ளி / கல்லூரி காலத்திய நட்புகள் மீண்டும் கிட்டாதா என்று ஏக்கமாகவும் இருக்கிறது. ஆர்குட் மூலம் குஜராத்தில் இருக்கும் என் கல்லூரி நண்பனை (’65-’70)தொடர்பு கொண்டு இங்கு சென்னை வந்தபோது பார்த்ததும், இருவரும் அடைந்த மகிழ்சிக்கு ஈடு இல்லை. இந்த கதையில், மகன் உதவியது ரொம்ப நெகிழ்ச்சியாக இருக்கிறது. - ஜெகன்னாதன்

raji said...

பின்னூட்டமளித்து ஊக்குவித்த அனைவருக்கும் எனது நன்றிகள்

Post a Comment